வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 24, 2018

அதிகார வெறிப்பிடித்தவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்


நாம் ரமலானின் இரண்டாவது பகுதியில் இருக்கிறோம். இதை மன்னிப்பிற்குரிய பகுதி என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ், நமது அமல்களை ஏற்றுக் கொண்டு நமது சிறு பாவங்களை மன்னிதருள்வானாக! பெரும்பாவங்களுக்கு தவ்பாவை பெற்றுக் கொள்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக!
அல்லாஹ் ஷிர்க்கை தவிர அனைத்து குற்றங்களையும் மன்னிக்க கூடியவன்,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ 

ஆனால் அவனும் கூட சில குற்றவாளிகளை மன்னிப்பதில்லை. மன்னிப்பிற்கேற்ற சூழ்நிலைகளை தவ்பீக் செய்வதில்லை. அவர்களை கேவலாமாக அழித்தே விடுகிறான்.
அதிகார வெறி பிடித்தலைகிறவர்கள் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
அபூஜஹ்லைப் போல .
பத்று யுத்தத்தில் அதிகார வெறி பிடித்த அந்த தலைவனால் மக்காவின் பெரும்பாலான தலைவர்கள் அழிந்து போனார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அனைவரையும் மன்னித்தார்கள். ஆனல் அதிகார வெறிக்கு துணையாக இருந்த மிகச் சிலருக்கு மன்னிப்பு கிடையாது என்றார்கள்.
قال «اقتلوهم ولو وجدتموهم متعلقين بأستار الكعبة»:
சில குற்றவாளிகளை மன்னிப்பது சமூகத்திற்கு தீராத வேதனையை தந்து விடும். அதனால் அத்தகையோரை அல்லாஹ் விட்டு வைக்க வில்லை.

நேற்றை தராவீஹில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் மூஸா அலை அவர்களது வரலாறு தொடர்பான வசனங்கள் ஓதப்பட்டன.
உலகின் மிகப் பழைய பெரிய சர்வாதிகாரியான பிர் அவ்ன் இரண்டாம் ராம்சேஸ் கொன்றொழிக்கப் பட்ட நிகழ்வை மூஸா அலை அவர்களது வரலாறு மிக முக்கியச் செய்தியாக கொண்டிருக்கிறது.
அதிகார வெறி பிடித்தவர்களுக்கு எச்சரிக்கையாகவும் , ஒடுக்கப் படுகிற மக்களுக்கு ஆறுதலாலவும் இருப்பதற்கு இதை விடவும் சிறந்த செய்தி வேறொன்று இல்லை.
அதிகார வெறி பிடித்தவர்களுக்கு துணை போகிற காவல் தூறை நிர்வாகத்துறை நீதித்துறை போன்றவற்றீல் பணி புரிவோர் எகிப்தின் மந்திரவாதிகளைப் போல தங்களது மனங்களை சத்தியத்திற்கு சார்பாளரர்களாக மாற்றிக் கொண்டால் நிம்மதியடைவார்கள். இல்லை எனில் காலமெல்லாம் அவர்கள் துக்கக் கடலில் உழன்று கொண்டே இருப்பார்கள்.
எச்சரிக்கை அநீதிக்கு துணை போகிறவர்களும் அழிந்தே படுவார்கள்.
அல்லாஹ் பிர் அவ்னை சொல்லாமல் அவனுடைய குடும்பம் அழிந்தது என்பதையே பிரதானமாக சொல்கிறான்.
وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ

ஏனெனில் பிர் அவ்னுடைய அக்கிரமங்களுக்கு அவனுடைய ஆட்களே முதன்மையானா ஆதரவாளர்களாக இருந்தார்கள்,

நம்மால் நீதி செலுத்த முடியாமல் கூட போகலாம். ஆனால் எப்போதும் எந்த இடத்திலும் அநீதிக்கு துணையாகி விடக் கூடாது.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

சாதாரண மனித இயல்பு . நான் உபகாரியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் செய்பவனாக இருக்க மாட்டேன் என்பது.

ஆனால் இந்த சாதாரண மனித இயல்பு கூட இல்லாதவர்களாக இன்றைய நமது நாட்டின் ஆட்சியாளர்களும் மாநிலத்தின் ஆட்சியாளர்களும் இல்லாமல் போய்விட்டது நமக்கு ஏற்பட்ட துர்திஷ்டமே!

இத்தகைய அரசுகளை கண்டு நாம் அனைவருமே பயப்பட வேண்டும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மிகத்தீர்க்கமான வழிகாட்டுதல்களில் ஒன்று உண்டு.

عن عوف بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «أخاف عليكم ستًّا: إمارة السفهاء، وسفك الدم، وبيع الحكم، وقطيعة الرحم، ونشواً يتخذون القرآن مزامير، وكثرة الشرط  - أخرجه الطبراني» (

மடையர்கள் அரசாண்டால் என்னவெல்லாம் நடக்கும் ?

பிர் அவ்னின் அரசு பறி போக ஒரு குழந்தை காரணமாக இருக்கும் என ஜோசியர்கள் சொன்னார்கள். அவன் யூதக் குடும்பத்தில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றான். ஆரம்பத்தில் தொடர்ச்சியாக கொன்றவன், பிறகு தனக்கு பணியாளர்கள் தேவை என்பதற்காக ஓரண்டில் பிறக்கிற குழந்தைகளை கொன்று மற்றொரு ஆண்டில் பிறக்கிற குழந்தைகளை விட்டு வைத்ததன்.

(அல்லாஹ் எப்படிப்பட்ட தந்திரி. அவன் குழந்தைகள் கொல்லப்படுகிற ஆண்டிலேயே மூஸா அலைஅவர்களைப் பிறக்க வைத்து பிர் அவ்னின் சபையிலேயே வைத்து காப்பாற்றினான்.அவரலேயே பிர் அவ்னுக்கு அழிவை கொடுத்தான். )

கீபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமச் சக்ரவர்த்தி Caligula காலிகுலா உலக முட்டாள்களில் முதல் முதல் முட்டாள்.

கிபி 37 லிருந்து 41 வரை ரோமை ஆண்டவன்.
தனணை உலகின் சக்ரவர்த்தி என்றும் கடவுள் என்றும் கருதிக் கொண்டவன் சந்திரனை பிடிக்க முடியவில்லையே எனற கவலையிலேயே உயிரை விட்டான்.

அவன் தனது குடிமக்களில் பணக்காரர்களுக்கு யாருமே வாரிசாக முடியாது. பணக்காரர்கள் இறந்தால் அரசே சொத்துக்களை எடுத்துக் கொள்ளும் என்று சொன்னா,. மட்டுமல்ல அதற்காக சில பணக்காரர்களை சீக்கிரமாக கொல்லவும் ஏற்பாடு செய்தான்.

நாட்டில் பஞ்சம் பசி வந்தால் தான் வரலாற்றில் தன்னைப் பற்றி பேசப்படும் என்று கருதிய அவன் நாட்டின் கஜானாக்களை மூடி வைத்து மக்கள் பசி பட்டினியால் மாண்டுவதை கண்டு இரசித்தானாம்.

கடைசியில் அவனுடைய பாதுகாவலர்களே அவனைக் கொன்றார்கள் .

மக்களை கொல்வதில் சுகம் காண்போர் அரசாண்டால் என்னவெல்லாம் நடக்கும் ?

பஹ்ரைனின் ஒரு பகுதியில் கலகம் செய்து ஆட்சியாளனாக தலை எடுத்த அபூதாஹிர் அல்கரம்தீ
أبو طاهر سليمان بن حسن القرمطي الجنابي، زعيم قرامطة البحرين
கி.பி 930 ல் மக்காவை தாக்கினான். பைத்தியம் பிடிததவனாக கஃபாவை தாக்கினான். ஹாஜிகளை கொன்று குவித்தான். தெருக்களில் ஹாஜிகளின் சடலங்களை தொங்க விட்டான். ஜம் ஜம் கிணற்றில் ஹாஜிகளின் சடலங்களை வீசினான். அவனால் கொல்லப் பட்ட ஹாஜிகளின் எண்ணிக்கை 30 ஆயிரம்.
يزعم أن عدد ضحاياه بلغ حوالي ثلاثين ألف حاج

ரோமச் சக்ரவர்த்தீ Nero  தனக்கு ஒரு பொன்மாளிகை கட்டுவதற்காக ரோம் நகருக்கு தீவைத்தான். ரோமின் பணிரெண்டு மாவட்டங்களில் மூன்று மாவட்டங்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து சாம்பலாயின ஏழு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டன . .( கீ.பீ 68 ம் ஆண்டு ஜூன் 18., 19 தேதிகளில் தொடங்கிய தீ ஒரு வாரத்திற்கு எரிந்து கொண்டிருந்தது மக்கள் தீயுக்கு பழியாக நாடு பற்றி எரிந்து கொண்டிருந்த போது நீரோ மனன்னம் ஒரு உயர்ந்த கோபுரத்தின் மீது உட்கார்ந்து கொண்டு பிடில் (ஒரு வகை கிடார்) வாசித்துக் கொண்டே அதை இரசித்துக் கொண்டிருந்தான்).  

கடைசியில் தன்னை கொல்லுமாறு கொஞ்சி வேண்டியவன் தற்கொலை செய்து இறந்து போனான்.

அதற்குள்ளாக மக்கள் அடைந்த வேதனை சொல்லி மாளாது.

நீதியை விற்பவர்கள் அரசாண்டால் என்னவாகும் ? உறவுகளை மதிக்காதவர்கள். புனிதங்களை கேலிப் பொருளாக்குகிறவர்கள். அதிக காவல் படையை வைத்திருக்கிற அதிகார திமிரி கொண்டவர்க்ள் அரசாண்டால் என்ன நடக்கும் .

உலக் அவரலாற்றில் ஏராளமான சாட்சிகள் உண்டு.
இத்தகைய சூழ்லில் நாடு காடாக மாறும். ஆட்சியாளர்கள் மிருகங்களாக மாறீ மக்களை வேட்டையாடுவார்கள்.

எந்த நீதியும் அங்கு எடுபடாது . எந்த ச் சட்டமும் அங்கு வேலை செய்யாது,.
எனவே தான் பெருமானார் (ஸல்) அவர்க்ள் இத்தகைய ஆட்சியாளர்களை பயந்து கொள்ளுமாறு கூறினார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்த அனைத்து தீய் குணங்களையும் கொண்ட ஆட்சியாளர்கள் தற்போது இந்திய நாட்டையும் தமிழகத்தையும் ஆண்டு வருகிறார்கள்.
                                                                                  
நாடு காடாக மாறிவருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமாக எந்த வித சட்ட விதியையும் பின்பற்றாமல் சுட்டு பலரை கொன்றிருக்கிறது. பன்னூற்றுக்கணக்கானோரை கைது செய்திருக்கிறது.
அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு தூத்துக்குடி திருநெல்வேலி குமரி மாவடங்களுக்கான இணையத் தொடர்பை துண்டித்திருக்கிறது.
இன்றைய சூழலி இணையத் தொடர்பு என்பது ரேசன் பொருள் வாங்குவதற்கு கூட தேவைப் படக் கூடியது..
பயணம் செய்ய, வங்கிகள் இயக்க , ஏ டி எம் கள் இயங்க, மின்னஞ்சல் தகவல் பரிமாறிக் கொள்ள ,சமூக உடகங்களை உபயோகிக்க என தண்ணிரைப் போல மக்களுக்கு பயன்படக் கூடிய சேவையை வன்மமாக முடக்கி வைத்திருக்கிறது.
எத்தனை கோடி மக்களின் வாழ்வாதாரம் முடக்கப் பட்டிருக்கிறது.
அனைத்தும் எதற்காக?
இந்தக் கேள்விக்கு விடை சொல்ல அரசிடம் எந்த நியாயமான காரணமும் இல்லை.
ஸ்டெலைட் ஆலையால் தூத்துக்குடி ஒரு பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்து கேன்ஸருக்கு ஆளாகி வருகிறார்க:.
பொதுவாக தூத்துக்குடி முந்தைய அரசுகளி ன் தொழிற் கொள்கையால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிற மாவட்டம் . ஏராளமான பெரும் தொழிற்சாலைகள் அங்கு உண்டு.
இரண்டு அனல் மின் நிலையங்கள். ஸ்பிக் உரத் தொழிற்சாலை, அணு குண்டு சோதனைக்குப் பயன்படும் ஹெவி வாட்டர் எனப் படும் கனநீர் தொழிற்சாலை, தாது மணல் அள்ளும் தொழிற்சாலைகள், ஸ்டெர்லைட் எனும் தாமிர உருக்கு தொழிற்சாலை இந்த தொழிற்சாலைகள் அனைத்துமே தமிழகத்தின் பாரம்பரிய இயற்கை துறைமுகமான தூத்துக்குடியை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளன். தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் ஒரு தடவை பயணம் செய்து பார்த்தால் கரும்புகைகளால் மாசுபட்டுக் கொண்டிருக்கும் ஆகாய வெளியை அப்பட்டமாக பார்க்கலாம்.
சில மேம்போக்கான வசதிகளை செய்து கொடுத்து மக்களின் வாழ்க்கையை உரிஞ்சும் வேலைய முன்னர் இருந்த அரசுகள் ஒவ்வொன்றும் செய்து கொண்டே இருந்தன.
மிகப் பெரிய அளவில் அரசியல் வாதிகள் சுரண்டிக் கொழுத்த பூமி அது .
பெரும் கம்பணிகளுக்கு கைகூலிகளாக செயல்பட்ட திமுக அதிமுக கட்சிகள் பெரும் பண முதலைகள் மக்களின் வாழ்க்கையை சுரண்ட வழி வகுத்தன.
வைகுண்ட ராஜன் என்பவருக்கு சொந்தமான வி வி மினரல்ஸ் என்ற நிறுவனம் தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் ஏராளமான போலி வேலியிட்டு பெரிய அளவில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட செய்தியும் பிறகு ககன் சிங் பேடி போன்ற நேர்மையான அதிகாரிகளால் அது உலகிற்கு வெளிச்சமானது. அங்கு ரெய்டு நடத்தப் பட்டு கம்பணி சீல் வைக்கப் பட்டதும் பத்ரிகைகளில் வெளி வந்த செய்திகள்.
அதில் வெளிவராத செய்தி என்ன வெனில் இந்த வைகுண்ட ராஜன் தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்க் மிகப்பெரிய கொடையாளி என்பது தான்.
இது போலவே தூத்துக்குடியின் ஒவ்வொரு பெரிய திட்டத்தின் பின்னணியிலும் அரசியல் கட்சிகளின் மிகப் பெரிய ஊழல் இருக்க்கிறது.
இப்போது சர்ச்சையில் சிக்கி யுள்ள ஸ்டெர்லைட் ஆலையை இங்கிலாந்திலிருந்து நடத்து கிற வேதாந்தா குழுமம் தான் பிஜேபி கட்சிக்கு பெரிய அளவில் நன்கொடை கொடுக்கிறது என்பது இப்போது வெளிவந்துள்ளது.  
தங்களது முதலாளிக்கு விசுவாசத்தை காட்டும் நடவடிக்கையாகவே 20 க்கும் மேற்ப்பட்டோர் படுகொலை செய்யப் பட்ட இந்நிகழ்வு குறித்து பிரதமரும் ஜனாதிபதியும் மத்திய் அரசும் இதுவரை எதுவும் சொல்லாமல் இருக்கின்றனர்.
ஸ்டெர்லைன் ஆலையின் .உரிமையாளர் - அனில் அகர்வால் இலண்டனில் வசிக்கிறார் . அவரது நிறுவனத்தின் பெயர் வேதாந்தா ரிசோர்ஸ் இது ஒரு இந்தியக் கம்பனி அல்ல. இந்தக் கம்பெனி ஒரு பெயரில் கம்பணியை பதிவு செய்து விட்டு  அரசியல் வாதிகளின் தயவோடு சட்டத்திற்கு புறம்பான பல பொருட்களையும் ஏற்றுமதி செய்து கொள்ளையடித்து வருகிறது.   
 தூத்துக்குடியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தாமிரத்தை உருக்குவதாக கூறிக் கொண்டு இரகசியமாக தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்  போன்ற இரசாயனங்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.  
இந்த ஆலை அமைப்பதற்காக  இந்நிறுவனம் முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத், அம்மாநிலம் மறுத்து விடவே மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அனுமதி கேட்டது. அங்கும் அனுமதி மறுக்கப் பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தின்  ரத்னகிரி பகுதியில் அனுமதியளிக்கப் பட்ட பிறகு மக்கள் போராடியதால் அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார் அனுமதி மறுத்தார்.
இந்த நிலையில் தான்  தமிழ்நாடு இந்த நச்சு ஆலைக்கு அனுமதி வழங்கியது.  1994 ல் முதல்வர் ஜெ.ஜெயலலிதா
அடிக்கல் நாட்டினார்.  
1996 ம் ஆண்டு ஆலை இயங்கு வதற்கு அப்போதைய முதல்வர் மு.கருனாநிதி அனுமதியளித்தார்.  
இந்த ஆலைக்காக தாமிர பரணி ஆற்றிலிருந்து கனிசமான அளவில் தண்ணீர் எடுக்கப் படுகிறது.

1996 ல் இருந்தே மக்கள் இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். முதல் உண்ணாவிரத போராட்டம் -1996 ல் நடை பெற்றது.
1997 நவம்பரில் ஆலைக்கு எதிரான முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடங்கப்பட ஓராண்டுக்குள்ளாக இந்த ஆலை முதல் விபத்தை சந்தித்தது. 1997 ஆண்டில் ஆலையிலிருந்த ஏழு சிலிண்டர்கள்  வெடித்தன.
அடுத்த இரண்டாம் விபத்து ஆலையிலிருந்த - கந்தக குழாய் வெடித்து ஒருவர் பலியானார்.
மூன்றாவது விபத்த்தில் -செப்புக்கலவை வெடித்து -3 வர் பலியாயினர்.
.நான்காம் விபத்த்தில் -சல்ப்யூரிக் அமில குழாய் வெடித்து 5 பொறியாளர்களும் ஒரு கூலித் தொழிலாளியும் பலியானார்.
ஐந்தாம் விபத்த்தில் ஆலையில் உள்ள  ஆயில் டேங்க் வெடித்தது.
ஆறாம் விபத்த்தாக ஆலையிலிருந்து  நச்சுப்புகை வெளியேறியது.
இதற்கிடையே இந்த ஆலையின் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தன .
இந்த ஆலைக்கு அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
ஆலை .உற்பத்தி செய்ததோ - 2லட்சம் டன் (2005 ஆண்டு கணக்கில்)
ஆலையை ஆபத்தை கருத்தில் கொண்டு ஆலையை மூடுமாறு  2010 செப்டம்பர் 28 ம் தேதி முதல்வர் -ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஆனால் உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து
அதற்கடுத்தாக.தமிழ்நாடு பசுமை வாரிம்  ஆலையத்திற்கு - தடை விதித்தது.
தன்னுடைய பணச் செல்வாக்கால் .தேசிய பசுமை வாரியத்திடம் முறையிட்டு ஆலை நிர்வாகம் அனுமதி வாங்கியது ,
இத்தனை அரசியலுக்கும் நடுவே தான் இந்த ஆலையினால் கேன்சர் நோயின் பாதிப்புக்குள்ளான அப்பகுதி மக்கள் ஆலைக்கு எதிராக தொடர்ந்து  போராடி வந்தனர்.
ஆலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கிற ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கேன்சர் நோயாளி இருக்கிறார் . வந்து பாருங்கள் என அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஏற்படும் போது அரசியல் வாதிகளும் மாவட்ட நிர்வாகப் பொறுப்புக்களில் இருப்பவர்களும். ஆலை நிர்வாகத்தின் கவனிப்பினால் மக்களை ஏமாற்றுகிறவர்களாகவே நடந்து கொண்டுள்ளனர்.
இதுவரை இருந்த மாவட்ட ஆட்சியர் கூட ஆலை நிர்வாகத்திற்கு விசுவாசியாகவே நடந்துள்ளார்.
அவர் என்ன செய்வார் பாவம். மத்திய அரசு அது இயக்குகிற கையாளாக மாநில அரசும் ஆலையின் பக்கம் நிற்கிற போது அவர் எப்படி எதிர் தரப்பில் நிற்க முடியும்.
மக்கள் தொடர்ந்து நூறு நாட்களாக போராடி வந்தனர். 100 வது நாள் பெரும் போராட்டம் வெடிக்கும் என்பது தூத்துக்குடிக்கு சென்று வருகிற ஒவ்வொரு வருக்கும் தெரிந்தே இருந்தது.
தூத்துக்குடி வாழ் மக்கள் ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தாங்கள் பணி செய்து கொண்டிருந்த இடத்தில் விடுமுறை பெற்று ஊருக்கு வந்தனர்.
போராட்டம் பெரியதாக இருக்கும் என்பது அரசுக்கு முன்பே தெரிந்திருந்தது.
அதே போல பேராட்டம் அமைதியாகத்தான் நடக்கும் என்பது அரசுக்கு தெரிந்தே இருந்தது.
ஆனால் அரசு அதை விரும்பவில்லை.
மத்திய மாநில அரசுகள். குறிப்பாக மத்தியை ஆளும் பாஜக ரசு தனது ராட்சச திட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் பெருமளவில் திரளுவதை விரும்ப வில்லை.
அதனால் திட்டமிட்டு மவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தாக்க முயற்சி என்று குற்றம் சுமத்தி போராடிய சாமாணிய மக்கள் மீது சட்டத்திற்கு புறம்பான ஆயுதப் பிரயோகம் செய்துள்ளனன். துப்பாக்கி சூட்டிற்கு முன் முறையாக கடை பிடிக்க வேண்டிய எச்சரிக்கை எதையும் செய்யாமல் போராட்டக் காரர்களின் நெஞ்சில் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் 17 வயது மாணவி உட்பட பலர் பலியாகி உள்ளனர். எத்தனை போரை இது வரை காவல் துறை சுட்டுக் கொன்றுள்ளது என்ற தகவல் கூட இதுவரை உறுதியாக தெரியவில்லை. முதல்வர் 9 பேர் என்கிறார். ஆளுனர் 11 பேர் என்கிறார்.
மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிற அடிமை அரசு தற்காப்பிற்காக சுட நேர்ந்தது என்கிறது.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகார வெறி பிடித்து காவல் துறையைப் பயன்படுத்தி மக்களை குதறிக் கொன்ற அரசு மக்களை வேண்டு மென்றே சுட்டுக் கொன்று விட்டு 10 இலட்சம் தருகிறோம் என்கிறது. உன்னை கொன்று விட்டு உன் மனைவி மக்களுக்கு பத்து இலட்சம் தருகிறோம் சம்மதமா என மக்கள் போஸ்டர் அடித்துக் கேட்கிறார்கள்.
அதிகார வெறி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டிருக்கிற அரசுக்கு எந்த மானமும் இல்லை.
துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்ட வன்முறை இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்ற உச்சபட்ச கோபத்திற்குரிய நிகழ்வாகும்.
நேற்று முன் தினம தூத்துக்குடியில் ஏற்பட்ட நிகழ்வை சாதாரணமாக கடந்து விடுவோம் என்றால் இனி ஒரு போதும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. இத்தைய கொடூரமான அரச பயங்கரவாதம் எங்கும் நடக்கும், எந்த அரசும் செய்யத்துணியும்.
இப்போது இருக்கிற அரசு என்றால் . அடுத்து எதிர்க்கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் அந்த அரசுகள் இத்தககய கோடூரத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட காவல் துறையை பயன்படுத்தவே செய்யும் .
ஏனெனில் இப்பொது செயல்படுகிற அரசுகள் அனைத்துமே காவல்துறையை ஆட்சியதிகாரமாக வைத்துக்கொண்டிருக்கிர அரசுகள் தான்.
சென்னை மெரீனா கடற்கரையை மூடி போடாத குறையாக மூடி வைக்கிறார்கள்.
கோவை வ. ஊ சி மைதானத்தில் சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்களை காவல்துறை நேற்று கைது செய்திருக்கிறது .
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இந்திய மக்கள் அனுபவித்ததாக சொல்லப்படுகிற துக்கங்களை துயரங்களை விட இப்போததய அரசுகளின் ஆதிக்க வெறியில் அனுபவித்து வருகிற தொல்லைகள் அதிகமாக்விட்டது,
நீதிமன்றங்களை முழுமையாக நமப முடியவில்லை. அரசியல் கலப்பில்லாத நீதி அரிதாகி விட்டது. கர்நாடக சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிலை நாட்டுவதற்கு அதிக நாள்கள் தராமல் ஜனநாயகத்தை ஒரு தீர்ப்பு காப்பாற்றியது. நீதிமன்றங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருந்தும் கூட இந்துத்துவ திணிப்பு காரணமாக நாடு முழுவதிலும் நீதிமன்றங்கள் அதிககம் கறை படிந்தே காணப்படுகின்றன.
மக்கள் இதற்கு ஒரு தீர்வு குறித்து யோசித்தாக வேண்டும்.
மாநிலத்தின் ஆட்சிப் பொருப்பில் இருப்பவர்கள் வெளியேற்றப் படும் வரை மக்களின் போராட்டம் தொடர வேண்டும்.
அல்லாஹ் மக்களுக்கு துணை நிற்பானாக!
மத்தியில் ஆட்சிப் பொருப்பில் இருப்பவர்களுக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் இனி ஒரு கார்ப்பரேசன் வார்டு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற்று விடக் கூடாது என்ற விழுப்போடு இருக்க வேண்டும்.
இவர்களை தமிழக மக்கள் அனுமதிப்பார்கள் எனில் தமிழ் நாடு சுடுகாடாவதை தவிர்க்க முடியாது .
எனினும் அத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுவான். அரசியல் அதிகாரத்திற்காக குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அல்லாஹ் மன்னிப்பதில்லை. அவர்களை அழிக்காமல் விடுவதில்லை.
பிர் அவ்னை அழித்தது போல
அல்லாஹ் புனித மிக்க இந்த ரமலானில் நமக்கு சகல பாக்கியங்களையும் வழங்குவானாக!  தமிழகத்திற்கும் நமது நாட்டிற்கு நல்ல மாற்றத்தை தந்தருள்வானாக!
தூத்துக்குடியில் காவல் துறை சுட்டுக் கொன்றதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்அகு தகுந்த ஆறுதலையும் காயம் பட்டவர்களுக்கும் கைதானவர்களுக்கும் தகுந்த நிவாரணத்தையும் விரைவாக தந்தருள்வானாக!No comments:

Post a Comment