வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 23, 2025

யார் இந்த சிக்கந்தர் வலீ (ரஹ்)?

 தமிழகத்தில் பல தர்காக்கள் உண்டு. அங்கு அடக்கமாகியிருக்கிற இறைநேசர்களை மதவேறுபாடின்றி தமிழக மக்கள் நேசிக்கின்றனர். அவர்களால் ஆத்மார்த்தமான பலனை அடைந்து வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் இதற்காகவே தமிழகத்திற்கு வருகின்றனர்.

நல்லவர்களை தரிசித்தல் (ஜியாரத்) அவர்கள் மூலம் நிவாரணம் பெறுதல் (வஸீலா) அவர்களின் பெயரால் தீர்மாணிக்கப்பட்ட நேர்ச்சைகளை நிறைவேற்றுதல் (நத்ர்) ஆகிய மூனறு பிரதான காரணங்களுக்காக மக்கள் தர்க்காக்களுக்கு செல்கின்றனர்.

ஜியாரா

ஜியாரத் இஸ்லாம் சுன்னத்தாக்கிய ஒரு அமலாகும்.

ஹிஜ்ரீ 3 ம் ஆண்டில் நடை பெற்ற உஹது யுத்தத்தில் ஷஹீதான ஹம்ஸா (ரலி) முஸ்அப் (ரலி) அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் ரலி ஆகியோர் உள்ளடங்கிய பல ஷஹீத்களின் கப்ருகள் உஹது மைதானத்தில் இருக்கின்றன. அந்த மண்ணறைகளை நபி (ஸல்) அவர்களும் கலீபாக்களும் சஹாபாக்களும் தொடர்ந்து ஜியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். (ஆண்டின் தொடக்கத்தில்) பாத்திமா ஆயிஷா ரலி போன்ற பெண்களும் அவ்வாறு ஜியாரத் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.

அந்த ஷஹீதுகள் விவகாரத்தில் அல்லாஹ் சொன்னான்.

وَلا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْواتاً

وروى ابن شبة عن عباد بن أبي صالح أن رسول الله صلى الله عليه وسلم كان يأتي قبور الشهداء بأحد على رأس كل حول فيقول: سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار، قال: وجاءها أبو بكر، ثم عمر، ثم عثمان، رضي الله تعالى عنهم، فلما قدم معاوية بن أبي سفيان حاجا جاءهم، قال: وكان النبي صلى الله عليه وسلم إذا واجه الشعب قال: سلام عليكم بما صبرتم فنعم أجر العاملين.

عن أبي جعفر أن فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم كانت تزور قبر حمزة رضي الله تعالى عنه ترمّه وتصلحه، وقد تعلمته بحجر

வஸீலா

 நல்லடியார்களை முன் வைத்து அல்லாஹ்விடம் கோரிக்கைகளை முன் வைப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது.

 நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் யூதர்கள் இறுதி நபியின் பெயரை சொல்லி அல்லாஹ்விடம் உதவி தேடுபவர்களாக இருந்தனர் என்று குர் ஆன் கூறுகிறது.

 وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ ۚ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ (89

 عن ابن عباس: أن يهود كانوا يستفتحون على الأوس والخزرج برسول الله صلى الله عليه وسلم قبل مبعثه. فلما بعثه الله من العرب, كفروا به, وجحدوا ما كانوا يقولون فيه. فقال لهم معاذ بن جبل وبشر بن البراء بن معرور أخو بني سلمة: يا معشر يهود, اتقوا الله وأسلموا، فقد كنتم تستفتحون علينا بمحمد صلى الله عليه وسلم ونحن أهل شرك, وتخبروننا أنه مبعوث, وتصفونه لنا بصفته! فقال سَلام بن مِشْكَم أخو بني النضير: ما جاءنا بشيء نعرفه, وما هو بالذي كنا نذكر لكم! فأنـزل الله جل ثناؤه في ذلك من قوله: (ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين

 

நேர்ச்சை

தர்காக்களுக்கு செல்வோர் நேர்ச்சைகள் செய்ய வேண்டும் என்பது அவசியமானதே அல்ல. அங்குள்ள உண்டியலில் காசு போட வேண்டும் என்பது கூட கட்டாயமல்ல.

தொழுவதற்கு பள்ளிவாசலுக்கு செல்பவர்கள் ஏதும் காசு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று இருக்கும் போது தர்கா உண்டியலில் காசு போட வேண்டும் என்பது அங்கிருப்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதோ எந்த வகையிலும் கட்டாயமல்ல. அதற்காக நேர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியமல்ல.

நேர்ச்சைகள் தேவையற்றவை என்பது தான் இஸ்லாமின் கருத்து. இது இஸ்லாமின் ஒரு புரட்சிகர சிந்தனையாகும்.

 

மக்கள் கடும் நெருக்கடிகளுக்குள்ளாகிற போது தங்களது மன அமைதிக்காக நேர்ச்சை செய்வது தவறானது அல்ல என்பது மட்டுமே இஸ்லாமின் நிலைப்பாடு. . அது போன்ற நேரங்களில் எது அமல்களின் வகை சார்ந்ததோ அதை நேர்ச்சை செய்ய வேண்டும்.

உமர் ரலி அவர்கள் தான் உம்ரா செய்ய நேர்ச்சை செய்திருப்பதாக கூறிய போது அதை நிறைவேற்றிக் கொள்ள பெருமானார் (ஸல்) அனுமதியளித்தார்கள். அத்தோடு தனக்காகவும் துஆ செய்ய கோரினார்கள்

தர்காக்களில் தங்கியுள்ள ஏழைகளுக்கு உணவளித்தல் என்ற நோக்கிலேயே மக்களில் பலரும் தர்காக்களில் குர்பானி கொடுக்கிறார்கள். உணவு சமைத்து விநியோகிக்கிறார்கள். கோழி தர்மம் செய்யப்படுகிறது. உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கிறாரகள்.

தர்காக்களின் இந்த நடவடிக்கைகளில் முஸ்லிம்களுக்கு நிகராக மாற்று மத சகோதரர்களும் பங்கேற்கிறார்கள். அது தான் தர்காக்களின் சிறப்பு. 

கேரளாவில் தர்காக்களில் கிடைக்கிற நிதியை கொண்டு அநாதை நிலையங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவ மனைகள் என இன்னும் சிறப்பான பல நற்சேவைகள் நடை பெறுகின்றன.

இத்தகைய பல நல்ல நோக்கங்களுக்காக மக்கள்  தர்காக்களுக்கு செல்கின்றனர்

இதற்கு அப்பால்  தமிழகத்தில் முஸ்லிம்களின் வரலாற்றை நிலை நிறுத்துவதில் தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

திருச்சி தப்லே ஆலம் தர்கா என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான ஒரு தர்கா- அது திருச்சியின் ஆயிரமாண்டு வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.

சிரியாவின் ஒரு பகுதியின் அரசராக இருந்த நத்ஹர் வலி அவர்கள் தனது 22 வயதில் அரச பதவியை துறந்து இஸ்லாமிய ஆன்மீக பிரச்சாரத்திற்காக இந்தியாவில் மதுரைக்கு வந்து அங்கிருந்து திருச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களால் திருச்சி தஞ்சை பகுதி மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்தன. நத்ஹர் வலி யுடன் சுமார் 900 பேர் வந்ததாக வரலாறு கூறுகிறது. திருச்சி பகுதியில் பலர் இஸ்லாமை தழுவினர்.

ஹிஜ்ரீ 419 – 1039 ம் ஆண்டு நத்ஹர் ஷா வலியுல்லாஹ் அவர்கள் மரணமடைந்தார்கள் என்கிறது வரலாறு. அப்படியானால் அது ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய திருச்சியின் முஸ்லிம்களின் செழிப்பான வரலாற்றுக் சான்றாக இருக்கிறது.

அதற்கடுத்த ஏர்வாடி தர்கா 800 ஆண்டு காலத்திற்கு முந்தை முஸ்லிம்களின் செழிப்பான வரலாற்றை நினைவு படுத்துகிறது. ஏர்வாடி இபுறாஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் மதீனாவிலிருந்து இந்தியாவிற்கு இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு வந்தார்கள்.

வந்த இடத்தில் பாண்டிய மன்னர்களுக்கிடையே நடை பெற்ற சகோதர சண்டையில் குலசேகர பாண்டியன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  வேண்டியதாயிற்று. அதன் பிறகு மதுரை பவுத்திர மாணிக்க பட்டினத்தை தலைமையாக கொண்டு 12 ஆண்டு மதுரை நெல்லை பகுதியை அரசாண்டார். அதன் பிறகு ஆட்சியின் பெரும் பகுதியை குலசேகர பாண்டியனுக்கு கொடுத்து விட்டு ஏர்வாடியில் மையம் கொண்டு தங்கி பணி செய்தார். 1198 ம் வருடம் அவரை திரு பாண்டியன் உடனான போரில் 1198 – ஹிஜ்ரீ 594 துல்கஃதா பிறை 23 அன்று ஷஹீதானார்.

இந்த வரலாறு இந்தியாவில் முதல் முஸ்லிமின் ஆட்சியும் அதிகாரமும் 800 வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நிலை கொண்டிருந்த்து என்பதை காட்டுகிறது. 

நாகூரில் அடங்கியிருக்கிற அப்துல் காதிர் என்ற இயர் பெயர் கொண்ட  ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் உத்தர பிர்தேசத்தின் அயோத்தி நகருக்கு அருகிலுள்ள மாணிக்கபூர் என்ற ஊரை சேர்ந்தவர். இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தனது சீடர்களுடன் புறப்பட்டவர்.. நாகூரில் குடியேறினார். அவரிடம் தஞ்சையை ஆண்ட மன்னர்களில் இருந்து சாமாண்யன் வரை ஏராளமானோர் பயன் பெற்றனர்.

அப்போது தஞ்சை பகுதி கர்நாடாகாவின் விஜய நகர மன்னரான அச்சுத தேவ ராயன் என்ற மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஷாஹுல் ஹமீது வலி அவர்களுக்கு தானமாக வழங்கிய ஊர் தான் நாகூர்.  ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் மூலமாகத் தான் தஞ்சையின் பல பகுதிகள் இஸ்லாமிய மயமாகின. ஷாஹுல் ஹமீது வலி 1570 ம் ஆண்டு இறப்பெய்தினார்கள்.

இந்த வரலாறு 500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் முஸ்லிம்களின் வரலாற்றை நிலை நாட்டுகிறது.

இது போல தமிழகத்தில் உள்ள சிறப்பான தர்காக்கள் ஒவ்வொன்றும் தமிழக மூஸ்லிம்களின் வரலாற்றை நிலை நிறுத்தும் சின்னங்களாக உள்ளன. அவற்றில் பலவும் முஸ்லிம்களின் அரசியல் செழிப்பான அரசியல் அதிகாரத்தின் முத்திரைகளாகவும் திகழ்கின்றன என்பது கவனிக்கத்தக்க செய்தியாகும்.

இப்போது மதுரையில் உள்ள சிக்கந்தர் பாஷா தர்காவை தமிழ அரசுக்கு கேள்விக்குள்ளாக்குகிறது.

நாம் ஏன் தமிழக அரசு கேள்விக்குள்ளாக்குகிறது என்று சொல்கிறோம் என்றால் இந்த தர்காவின் வரலாறு தமிழகத்திற்கு பொதுவாகவும் மதுரை மக்களுக்கு மிக பிரபலமாகவும் தெரிந்த ஒன்றாகும்.

திருப்பரங்குன்றத்தில் இந்துக்களின் புகழ் பெற்ற கோயில் இருக்கிறது என்றாலும் அந்த மலை சிக்கந்தர் மலை என்றே அழைக்கப் பட்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாகும். (அதை முஸ்லிம்கள் சிக்கந்தர் மலை என்று அழைத்தனர் என்று ஒரு சாரார் இப்போது மடை மாற்ற முயல்கிறார்கள். உண்மையில் அது அனைத்து மக்களாலுமே சிக்கந்தர் மலை என்று அழைக்கப்பட்டது என்பதே உண்மையாகும்)

தர்காவில் முஸ்லிம்களும் மாற்று மதத்தினரும் பல நூறு ஆண்டுகளாக சடங்குகளை நிறைவேற்றி வருகின்றனர்  என்பதும் தெள்ளத் தெளிவாக அறியப்பட்ட வரலாறு ஆகும்.

அப்படி இருக்க சமீபத்தில் ஓரு சில இந்துக்கள் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்று காரணம் காட்டி பிரச்சினையை உருவாக்கியது தமிழக காவல் துறையில் பணி ஆற்றும் ஒரு அதிகாரி தான்.

இது கவனிக்க வேண்டிய செய்தியாகும். அந்தப் பகுதி காவல் நிலையத்தில் எஸ் ஐ ஆக பணியாற்றுகிற ஒருவரின் தனிப்பட்ட வெறுப்புனர்வு இதில் முக்கியம் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். 

அவர் தர்காவுக்கு செல்வோர் ஆடு கோழிகளை கொண்டு செல்லக் கூடாது என்று தடை செய்தார். மலைக்கு செல்வோரிடம் குற்றவாளிகளிடம் விசாரிப்பது போல விசாரித்து விட்டு ஆதார் உள்ளிட்ட முழு முகவிரியை பெற்ற பிறகு தான் ஜியாரத் செய்ய வருகிறவர்களை உள்ளே அனுப்புகிறார்.

கோயில்கள் இருக்கிற எந்த மலைக்காவது இப்படி விசாரிக்கப்படுவது வழக்கில் இருக்கிறதா ? இதற்காக ஒரு நோட் புக் பதிவு செய்யப்படுகிறது.

தமிழக காவல்துறையின் உத்தரவு இல்லாமல்  இது எப்படி நடக்கும்.

இது பற்றி நியாயம் கேட்கச் சென்ற முஸ்லிம்களிடம் உங்களிலேயே ஒரு சாரார் தர்கா வெல்லாம் வேண்டாம் என்கிறார்களே என்று அதிகப்பிரசங்கித்தனமாக பேசி யிருக்கிறார்.

இவர் மட்டுமல்ல இவரை போன்ற பல காவல்துறை அதிகாரிகளும் பல இடங்களிலும் முஸ்லிம்களிடம் ஒரு சிஸ்டம் இல்லை என்பதை அறிந்து கொண்டு ஆங்காங்கே வம்பு வளக்கிற வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்து அமைப்பை சாந்த்தவர்கள் என்றால் ஒரு பக்கா குடிகாரனுக்கு கூட பந்தாவாக மரியாதை கொடுக்கிறார்கள்.

சிக்கர் பாவ தர்கா விவகாரத்தில் காவல் துறை அதிகாரி மட்டுமல்ல அங்குள்ள ஒரு தாசில் தார் ஆதாரங்கள் உங்களுக்கு சார்பாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டின் பெரும்பான்மை இந்துக்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

முழுக்க முழுக்க தமிழக அரசின் அதிகரிகளின் வெளிப்படையான இந்துத்துவா சார்பு நிலை தான் இந்த பிரச்சினையை பெரிய பிரச்சினையாக ஆக்கியிருக்கிறது. அதனால் தான் தமிழக அரசு முஸ்லிம்களின் உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறுகிறோம்.

ஆடு கோழி அறுப்பது அங்கு நடை முறையில் இருக்கிறதா என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று இப்போது அதிகாரிகள் சொல்கிறார்கள். காலம் காலமாக கந்தூரி நடக்கிற இடத்தில் ஆய்வு செய்ய வேண்டிய தேவை எனன் இருக்கிறது. அப்படியே ஆய்வு செய்ய காலம் கடத்த வேண்டிய அவசியம் என்ன ? இது முஸ்லிம்கள் தொடர்ந்து கடை பிடித்து வருகிற வழக்கம் அதை தடுக்க முடியாது என்று காவல் துறையோ அரசோ சொல்லியிருக்கும் எனில் பிரச்சனை முளையிலேயே முடிந்து போயிருக்கும்.

இப்போதும் ஜியாரத்திற்கு செல்வோர் கொண்டு செல்கிற பை உட்பட அனைத்தையும் சோதித்து விட்டுத்தான் அனுப்புகிறார்கள்.

இந்து எந்த வகையில் நியாயம் ?  

இது விவகாரத்தில் உண்மைக்கு மாற்றமாகவும் நியாயத்திற்கு எதிராகவும் இந்துதுதுவ மனோ நிலையை மாநில அரசு எடுத்துக் கொண்டு விட்டது.

இந்துத்துவாக்கள் கேட்கிற அதே வார்த்தையை தான் திமுக அரசும்  முஸ்லிம்களை பார்த்து நீங்கள் சிறுபான்மையினர் என்பதை  மறந்து விடாதீர்கள் என்று கேட்கிறது!

இப்போது இந்த பிரச்சினை முஸ்லிம்களுக்கு மிக கவனத்திற்குரிய இரண்டு கடமைகளை உணர்த்துகிறது. .

ஒன்று மஸ்ஜிதுகள் தர்காக்கள் மற்றும் இஸ்லாமிய கலாச்சார சின்ன்ங்களின் வரலாறுகளை அதன் பாரம்பரியங்களையும் முறைப்படி பாதுகாத்தாக வேண்டும்

பாஜாக கட்சியின் வானதி சீனிவாசன்  திருப்பரங்குன்றம் மலையில் தர்கா ஒன்று இடையில் வந்துள்ளது. இதையே காரணம் காட்டி இந்த மலையை தங்களுக்கு சொந்தம் கொண்டாட இஸ்லாமிய அமைப்புக்கள் முயல்கின்றன என்று பேசியிருக்கிறார்.

வரலாறு தெரியாதை அறியாமையின் பிதற்றல் இது.

சிக்கந்தர் பாவா தர்காவின் பாரம்பரியம் 8 நூறு ஆண்டுகால பழமையானதாகும்.

திருப்பரங்குற்றத்திலிருக்கிற ஒரு மலையில் காசி விசுவநாதர் ஆலயமும் இன்னொரு மலையில் சிக்கந்தர் பாவா தர்காவும் இருக்கிறது.

காசி விசுவநாதர் ஆலயத்தின் வரலாறு என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை.

ஆனால் சிக்கந்தர் பாவா மலையின் வரலாறு தெளிவானது.

சிக்கந்தர் பாவா, ஜித்தாவின் ஆளுநராக இருந்தவர்.  ஏர்வாடி செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் மதீனாவிலிருர்ந்து இந்தியாவிற்கு வந்த போது அவருடன் இவரும் வந்தார்.

அவர் மிகச் சிறந்த ஆன்மீக வாதியாகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் என்னேரமும் இறை தியானத்தில் இருப்பவராகவும் இருந்தார்.

ஏர்வாடி செய்யது இபுறாஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் மதுரைக்கு வந்த சந்தர்ப்பத்தில் பாண்டிய மன்னர்களுக்கிடையேயான தகறாற்றை தீர்த்து வைக்கும் படி கோரப்பட்டது. இது தங்களுடைய வேலை அல்ல என்றாலும் நன்மைக்காக இதில் தலையிடுவதாக இபுறாஹீம் ஷஹீது வலி கூறினார்.  

அதில் ஒரு பகுதியாக  தனது  பிரதிநிதியாக பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியனிடம் இஸ்லாமை எடுத்துச் சொல்ல சிக்கந்தர் பாவாவை அனுப்பி வைத்தார்.  விக்ரம பாண்டியன் அவரிடம்  கடுமையாக  மறுத்து சண்டைக்கு அழைத்தார். சண்டை நடந்தது. விக்ரம பாண்டியன் கொல்லப் பட்டான். அப்போது இபுறாஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் பவுத்திர மாணிக்கம் (ஏர்வாடி) என்ற இடத்திலிருந்து மதுரை நெல்லை ஆகிய பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் சிக்கந்தர் பாவா அவர்களை மதுரையின் ஆளுநராக நியமித்தார்.  இது நடந்த காலம் 1195 முதல் 1207 வரை உண்டான கால கட்டமாகும்.

சிக்கந்தர் பாவா திருப்பரங்குன்றம் மலை மீது ஒரு பள்ளிவாசலை கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய இறைய தியான ஈடுபாடு அங்கு ஒரு பள்ளிவாசலை கட்ட அவரை தூண்டியிருக்கிறது.  அது முடிவுறும் சமயத்தில் இருந்த போது திடீரென தாக்கிய திரு பாண்டியனின் படையினரால் அவர்  கொலை செய்யப் பட்டார். அங்கேயே அவர் நல்லடக்கம் செய்யப் பட்டார். அவர் நல்லடக்கம் செய்யப் பட்ட காலத்திலிருந்து அவரை ஜியாரத் செய்கிற பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படியானால் கிட்டத் தட்ட 800 ஆண்டுகளாக இந்த நடை முறை இருக்கிறது.

பிற்காலத்தில் மதுரையை ஆண்ட கான் சாஹிப் என்ற மாவீரன் பள்ளிவாசல் பணியை முழுமைப்படுத்தியதோடு சிக்கந்தர் பாவாவின் அடக்க விடத்தின் மீது ஒரு கட்டிடடத்தையும் எழுப்பினார்.  

கான் சாஹிபுக்கு மீனாட்சி அம்மன் ஆலயத்தையும் சிக்கந்தர் பாவா மலையையும் ஒரு சேர பராமரித்தவர் என்ற சிறப்பு இருக்கிறது.

இத்தகைய பன்னூறு ஆண்டு கால வரலாற்றையும் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும் கொண்ட தர்கா வளாகத்தை தான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

மதுரை மக்களின் வழக்கத்தில் ஒரு மரபுக் கதைகள் என்ன சொல்கிறது தெரியுமா

சிக்கந்தர் பாவாவை கொலை செய்த பாண்டிய மன்னனுக்கு பிற்காலத்தில் கண் பார்வை பறி போனது. அவன் சிக்கந்தர் பாவாவின் கல்லறைக்கு அருகே வந்து அழுதான் . அதன் பிறகு அவனுக்கு பார்வை திரும்பியது

இந்த அளவு மரபு ஊறிப்போன ஒரு வரலாற்றை தெரியாமல் இதை இடையில் வந்த தர்கா என்று பேசுகிறார்கள்.

நாம் நமது வரலாற்றை ஆய்வு செய்வோம். பாதுகாப்போம். பரப்புவோம்.

இது இன்றைய நிலையில் பழமை வாய்ந்த ஒவ்வொரு இஸ்லாமிய நிறுவனமும் செய்ய வேண்டிய அவசியம் கடமையாகும்.

இரண்டாவதாக, தற்போதிருக்கிற மாநில  அரசானாலும் வேறு எந்த அரசானாலும் நமக்கு அது சார்பு என்பது ஓர் அளவில் தான் என்பதை மிக உறுதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவ சக்திகள் பிரச்சினை செய்யுமானாலும் எது விவகாரத்திலும் இந்த அரசுகள் உண்மைக்கு சார்பாக இருகக் மாட்டார்கள். பாசிச சக்திகளின் பக்கமே சாய்வார்கள்.

நாம் நம்மவர்கள் என்று ஏமாந்து நின்று விடக் கூடாது.

இந்த சூழலில் நாம் நமது நிறுவனங்களின் உரிமைகளுக்கான பத்திரங்களை முறையாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நீண்ட பாரம்பரிய நிறுவனங்களிடத்தில் போதிய ஆதாரங்கள் இருக்காது. எந்த கோயிலுக்கும் இருக்காது தான். அப்படியிருக்குமானால் நமத் நிருவனங்கள் மீதுள்ள நமது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்ள அங்கு நடந்த வந்த நிகழ்வுகளைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை ஆடியோ வீடியோ பதிரிகை செய்திகள் உள்ளிட்ட வடிவத்தில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சிக்கந்தர் பாவா மலை விவகாரத்தில் முஸ்லிம்களின் ஓரளவுக்கு போதிய ஆதாரங்கள் கை வசம் உள்ள காரணத்தால் தான் மலை மீது ஏறிச் செல்வதை தடுக்க முடியாது என்ற அளவில் நிற்கின்றனர்.

அங்கே இத்தனை ஆண்டுகளாக கந்தூரி விழாக்கள் நடந்து வந்திருப்பதால் ஆடு அறுக்க, உறிக்க, சமைக்க பயன்படுத்தப் பட்ட இடங்களை ஆய்வு செய்வதாக கூறுகின்றனர்.

இன்றைய காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பராமரிப்பில்லாமல் இருக்கிற வக்பு நிலங்கள், கைவிடப்பட்டிருக்கிற தர்காக்கள், சுற்றுச் சுவர் இல்லாமல் இருக்கிற கப்ருஸ்தான்கள் போன்ற அனைத்தையும் ஊர் வாரியாக கணக் கெடுத்து அவற்றை முறையாக வசப்படுத்திக் கொள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜமாஅத்துல் உலமா சபைகள், ஐக்கிய ஜமாத்துகள் போன்ற பொது அமைப்புக்கள் நம் பகுதியில் உள்ள நமது நிறுவனங்களை பாதுகாத்துக் கொள்ள நிர்வாக ரீதியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஒரு அவசர கடமையாக செய்ய வெண்டும்.

வக்பு வாரியத்திற்கு சொந்தமான ஒரு நிலத்தை இது வக்பு அல்ல என்று மாவட்ட ஆட்சித்தலைவரை வைத்து அறிக்கை வெளியிட வைத்த நிகழ்வு நமது தமிழகத்தில் திருச்சி செந்துறை கிராம விவகாரத்தில் நடந்து விட்டது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. (மத்திய அரசு கொண்டு வர இருக்கும் சட்ட திருத்தம் இன்னும் ஆய்வில் தான் இருக்கிறது.)   

நமது நிறுவனங்களில் நடை பெற்று வருகிற கந்தூரிகள், ஆண்டு விழாக்கள் போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வர வேண்டும்.  அதில் அலட்சியம் காட்டுவது கூட பின்னாள் பிரச்சினை ஆகிவிடும்.

நாம் பாபரீ மஸ்ஜித் விவகாரத்திலிருந்து இன்று வரை அனைத்து அரசுகளையும் கேட்டு வருகிற செய்தி ஒன்று தான்.

எங்களுக்கு ஆக்ரமிப்பு சிந்தனை கிடையாது. ஆக்ரமித்துச் செய்யப்படும் எந்த வணக்கமும் செல்லாது என்பது தான் இஸ்லாம்.

எனவே எங்களுக்கு உரிய நிலங்கள் மற்ற எந்த சமூகத்தையும் விட சத்தியத் தன்மை வாய்ந்தவை.

எங்களது நிலங்களில் பிரச்சனை எழுகிற போது தயவு கூர்ந்து நீதியின் அடிப்படையில் நடந்து கொள்ளுங்கள்.

பிரச்சினைகளை நேர்மையின் பக்கம் நின்று விரைவாக தீர்த்து வையுங்கள்!

காலம் கடத்துகிற போது பிரச்சனைகள் வலுவடைகிறதே தவிர – நீர்த்துப் போவதில்லை. இறுதியில் முஸ்லிம்கள் பரிதாபகராம உரிமைகளை இழந்து நிற்க வேண்டியதாகிறது.

ஒரு ஆட்சியாளரிடமிருந்து எதிர்பார்க்கிற கடைசி தீர்வு இது. நீதியும் கருணையு,

தமிழ அரசு சிக்கந்தர் பாவா மலை விவகாரத்தில் இந்த அடிப்படையில் நடந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக!


மிஃராஜ்

மிஃராஜ் முந்தைய பதிவுகள் 

மிஃராஜ் மார்க்கத்தின் அடிவாரம்.

குடியரசு தினம்

குடியரசு தினம் முந்தைய தொகுப்புகள்


1 comment:

  1. Anonymous9:25 AM

    ஜஸாகல்லாஹ் ஹஜ்ரத். ஹதீஸீன் கிதாபும் நம்பரும் போட்டால் இன்னும் பலனாக இருக்கும்.

    ReplyDelete