வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 23, 2014

புலி ஒழிந்தது! இலஞ்ச எலிகளை என்ன செய்வது?


இந்தியாவின் தேசிய விலங்கு புலி

அதனால் இந்தியக் காடுகளில் புலி மிக பக்குவமாக பராமரிக்கப்படுகிறது.

புலிகள் வாழும் காடு தான் இந்தியக் காடுகளில் மதிப்பு மிக்க காடு என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா அதிக எண்ணிக்கையிலான வனப்புலிகளைக் கொண்டுள்ள நாடாகும். புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்று அறியப்படும் முக்கிய பாதுகாப்புத் திட்டம் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது. அடர்ந்த காடுகளை கண்டறிந்து சுமார் 25 புலிகள் சரணாலயங்களை உருவாக்கியதே இதன் அடிப்படை நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1,200 என்று இருந்த வன வங்கப்புலிகளின் எண்ணிக்கை 1990களில் 3,500க்கும் அதிகமாக மாறி மூன்று மடங்காகியது.
புலி அதி வேகமாக சென்று இரையை தாக்கி கொல்லக்கூடியது, புலி அடித்தால் அது ஒண்ணறை டன் கொண்ட அளவுக்கான தாக்குதலாக இருக்கும். புலி அடித்தாலே போதும் ஆள் காலி.ஆனால் விலங்குகளில் மனிதர்களுக்கு அதிகம் பிடித்த விலங்கு புலி தான் என்று அனிமல் பிளானட் எடுத்த சர்வே கூறுகிறது 73 நாடுகளில் 50 ஆயிரத்திற்குமேற்பட்டோரிடம் நடந்த்திய கருத்தாய்வில் நாய் பூனைகளை விட மக்கள் அதிகம் புலிகளை விரும்புவது தெரியவந்துள்ளது. புலிகளுக்கு 21 வாக்குகளும் குதிரைக்கு 10 சதவீத வாக்குகளும் சிங்கத்திற்கு ஒன்பது சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. (விக்கிபீடியா)

அனிமல் ப்ளானெட்டில் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டி'சா என்பவர் "வெளித்தோற்றத்திற்கு மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட புலிகள் நம்மைப் போன்றதே என்று கூறினார்.

இவ்வளவு மதிப்புமிக்க புலிகளில் ஒன்றை நேற்றைய முன் தினம் ஊட்டி அருகே உள்ள கப்பச்சி கிராமத்தில் ஊர் கூடி கொன்றுள்ளது. காரணம் அது ஆட்கொல்லி புலியாகிவிட்டது.



புலி யை ஆங்கிலத்தில் Tiger டைகர் என்று சொல்வார்கள், அதே புலி மனித இரத்ததை சுவைத்து விட்டால் அதன் பெயர் மாறிவிடும். அதை Maneater மேன் ஈட்டர் ஆட்கொல்லி என்று சொல்வார்கள்.

காரணம் புலி மனித இரத்தைதை சுவைத்துவிட்டால் பிறகு அது மனிதர்களை வேட்டையாடுவதை நிறுத்தாது.

(சுமார் 30 வருடங்களுக்கு முன் மறுமலர்ச்சி ஆசிரியர் மர்ஹூம் திருச்சி யூசுப் சாஹிப் அவர்கள் இந்த செய்தியை எனக்கு சொன்ன போது அப்போது அது ஆச்சரியமாக இருந்தது. இப்போது அப்படி ஒரு நிகழ்வை நிஜத்தில் அறியும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

1900 களில் வங்காளத்தில் ஒரு புலி மனித வேட்டைப் புலியாக மாறி 200 பேரை கொன்றது. அதே புலி இமய மலை பகுதிக்கு சென்று நேபாளப் பகுதியில் 436 பேரை கொன்றது. இந்தப் புலியை 1911 ம் ஆண்டு  ஜிம்கார்பட் என்ற வேட்டைக்காரர் சுட்டுக் கொன்றார்.

இதற்கு முன் நீலகிரி மாவட்டம் சீகூரில் 1954 ம் ஆண்டு ஒரு புலி 15 பேரை கொன்றுள்ளது. இப்புலியை கென்னத் ஆண்டீசன் என்ற வேட்டைக்காரர் சுட்டுக் கொன்றார். (ஹிந்து தமிழ் ஜனவரி 22 2014)

நீலகிரி மாவட்டத்தை சூழ்ந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள மதிப்பு மிக்க காடுகளாகும். அங்குள்ள ஒரு புலிதான் ஜனவரி மாதத்தின் முதல்வாரத்தில்  மூன்று ஆட்களை கொன்றது

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகேயுள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா கடந்த 4-ம் தேதி மாலை மளிகைப் பொருட்களை வாங்கச் சென்ற போது அவரை அடித்து கொன்று தின்றது புலி.

 

அதன் சோகச்சுவடு மறைவதற்குள் தொட்டபெட்டா ஊராட்சி, அட்டபெட்டுவைச் சேர்ந்த சின்னப்பன். 6-ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே சென்றவர் புலியால் தாக்கப்பட்டு இறந்தார்.

 

அதனைத் தொடர்ந்து ஊட்டி அருகேயுள்ள தூனேரி கிராமத்துக்குள் புகுந்த புலி ராமுகுட்டி என்பவரின் வீட்டின் பின்பக்கம் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கிவிட்டு ஓடிவிட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், கடந்த 8-ம் தேதி  ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி கச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி  காலிபிளவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவரது கணவர் கண் எதிரிலேயே கொடூரமாகத் தாக்கி கொன்றது புலி

 

5 நாட்களுக்குள் 3 பேரின் உயிரை புலி காவு வாங்கிய சம்பவம் சோலடா, அட்டபெட்டு, குந்தசப்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்தப் புலி பற்றிய கிலி தமிழகம் எந்ங்கும் எதிரொலித்தது.

 

பொதுமக்களின் உயிருக்கு உலைவைத்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினர் புலியின் உடலில் மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனல், புலி அகப்படவில்லை.

 

இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் புலி குறித்தான அச்சமும்-பீதியும் ஏற்பட்து.வனத் துறையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக நின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அசாதரண சூழ்நிலை நிலவியதால் அப்பகுதியில் உள்ள 45 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்து. தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

 

புலியை வெளியே கொண்டு வருவதற்காக தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிகளில் கூட்டுப்படையினர் பட்டாசுகளை வெடித்தனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் புலிகள் சிக்கவில்லை.

புலியை ஈர்ப்பதற்காக தேயிலை தோட்ட பகுதியில், இறந்த மாட்டின் உடல் போடப்பட்டது. இதை உண்பதற்காக புலிகள் வந்தால் அவற்றை பிடிப்பதற்காக, புலிகளின் நடமாட்டம் உள்ள தேயிலை தோட்ட பகுதியில் பரண் அமைத்து அதில் ஒரு கூண்டு வைத்து, அதில் ஒரு வனத்துறையினர் மற்றும் ஒரு அதிரடிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

அத்தோடு தேயிலை தோட்ட பகுதியில் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டி அதை வலையால் மூடி வைப்பதோடு, வலையின் மீது மனித உருவ பொம்மை வைக்கவும், அதன் மேல் மனித ரத்தம் தெளிக்கவும் முடிவு செய்யப்பட்து. மனித ரத்த வாடை பட்டு புலிகள் வெளியே வந்தால் வலையில் சிக்கிக்கொள்ளும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள்; பரண்கள்; கூண்டுகள் உட்பட வியூகங்களை வைத்து புலியை தேடி வந்தனர்.மேலும் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியும் நடைபெற்றது. இந்நிலையில் கப்பச்சி கிராமத்தில் பசு மாட்டையும் புலி அடித்து கொன்றது.இதனால் தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் கடந்த 18 நாட்களாக ஊட்டியில் நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

இதற்கு முன்னர் நடந்தது போல அதிக அளவில் மனிதச் சேதாரங்கள் நடப்பதற்குள் ஆட்கொல்லிப் புலியை கொன்றது  நிம்மதியளிக்கிற ஒரு விசயம் தான் .

 

இவ்வளவு பாடுபட்டு பெரும் முயற்சி எடுத்து காட்டுப் பகுதிகளை ஒட்டி வாழும் தனிமனிதர்களை தாக்கும் ஒரு புலியை கொன்று விட்டோம் ஆணால் அன்றாடம் மனிதர்களை இரத்தம் குடிக்காமல் கொல்லுகிற மனித ஆட்கொல்லிகள் – ஊழல் பெருச்சாலிகளை முறியடிப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

 

புலிக்கும் ஊழலுக்கு என்ன சம்பந்தம் என்றால்? எப்படி புலி மனித இரத்ததை சுவைத்த பிறகு அதிலுள்ள உப்புச் சத்து காரணமாக  எப்படி அதையே தேடுகிறதோ அதைப் போலவே ஊழல் பழக்கத்தில் ஈடுபடுகிற மனிதர்களும் ஊழல் இல்லாமல் இருக்க முடியாது.

 

ஒரு காலத்தில் சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்து தருவதற்கு காசு கேட்டார்கள். இப்போது சட்டப்படியான வேலையை செய்வதற்கே காசு கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

(வக்பு வாரியத்தில் ஊழல் செய்கிற அதிகாரிகளைப் பற்றிப் பேசுகிற போது தான் மர்ஹும் யூசுப் சாஹிப் அவர்கள் எனக்கு மேன் ஈட்டரைப் பற்றிச் சொன்னார்.  ஊழல் செய்து பழகியவர்கள் அல்லாஹ்வின் சொத்து என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிடவே செய்வார்கள் என்றார் அவர்.)

 

அரசு ஆஸ்பத்ரிகளில் தொடங்கி ஊராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து பாராளுமன்றத்தை கடந்து நீதிமன்றங்கள் வரை அங்கிங்கெனாதபடி இலஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

 

இன்றைய இந்தியாவில் மிகப்பெரும் ஆபத்து இலஞ்சப் பெருச்சாளிகளால் ஏற்பட்டுள்ளது. இதுவரை சில சலுகைகளை செய்து கொடுப்பதற்கு காசு வாங்கிய அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இப்போது நாட்டின் இயற்கை வளங்களையே காவு கொடுக்க தொடங்கி விட்டார்கள்.

 

இந்தியா தற்போது உலகின் மெகா ஊழல்களுக்கு பெயர் பெற்ற நாடாக திகழ்கிறது

 

2012 ல் நடை பெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது .இதில் 1,85,591 கோடி ஊழல் பணம் கைமாறி உள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகம், தனியார் நிறுவனங்களும் இதில் கைகோர்த்து செயல் பட்டுள்ளன,

 

இதை விட பிரமிப்பூட்டுகிற வகையில் கர்நாடகாவில் வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வகையிலும் விற்கப்பட்டுள்ள வகையிலும் கர்னாடகம், 2,00,000 கோடி அளவுக்கு 2012 ஆம் ஆண்டில் ஊழல் நடந்துள்ளதாக. சிறுபான்மை நல வாரியத் தலைவரான மனிப்பாடியால் 7500 பக்க ஆவணம் கூறுகிறது.

 

உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் 2012, ல்  10,000 கோடி ஊழல் செய்தார் என அப்போதைய முதல்வர் மாயாவதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழலைப்பற்றி விசாரணை நடக்கும் போது 6 மருத்துவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்

 

அலைக்கற்றை உரிமத்தை சட்டத்திற்குப்ப் புறம்பாக குறைந்த கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பான ஊழலில் 1,76,000 கோடி பணம் 2010 ம் ஆண்டு பரிமாறப்பட்டுள்ளது  வெளிச்சத்திற்கு வந்தது,

 

ஊழல் காரணமாக ஒரு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படுகிறது என்று சி. கே. ப்ரகுஅலாத் (C. K. Prahalad ) மதிப்பிடுகிறார்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் அளவு இந்தியாவில் ஊழல் கட்டுப்படுத்தப் படுமானால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் 4-5 சதவீதம் முதல் 12-13 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஊழல் காரணமாக இந்தியச் சமூகத்தில் நிகழ்ந்து வருகிற சீர்கேடுகளும் குற்றச் செயல்களும் ஏராளமாகும்.

லாரி உரிமையாளர்கள் ஆண்டுதோறும் 22,200 கோடி (4.5 பில்லியன்) லஞ்சம் செலுத்துகிறார்கள் என்று Transparency International திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் எனும் அமைப்பு மதிப்பீட்டுள்ளது.

சோதனை சாவடிகள் மற்றும் நுழைவு புள்ளிகளில் ஒரு வாகனம் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வரை நிறுத்திவைக்கப்படுகிறது. அத்தகைய நிறுத்தங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் சமையங்களில், அரசு அதிகாரிகளால் பணம் பிடுங்கப்படுகிறது

அரசாங்க அதிகாரிகள் 43% மற்றும் போலீஸ் 45% லஞ்சம் பெறுவதாக அவ்வமைப்பு கூறுகிறது.

அதே போல ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணப்போரில் 60% பேர் அதற்கான சோதனை ஓட்டத்தில் கலந்து கொள்வதில்லை. என்றும் அவ்வாறு உரிமம் வைத்திருப்பவர்களில் 54% ஓட்டுனர் சோதனையில் தோல்வியடைந்தார்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன,

இந்தியாவில் போக்குவரத்து துறை, ரியல் எஸ்டேட் மற்றும் அரசு சேவைகள் இம்மூன்றில் தான் அதிக படியான ஊழல் நடக்கிறது என்று ஒரு தகவல் கூறுகிறது.

இந்தியாவில் நடைபெறுகிற ஊழல் பற்றி பேசத்தொடங்கினால் நாட்கள் போதாது.

டிராண்பரன்ஸி அமைப்பு 2005 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி இந்தியாவில 62 சதவீதம் பேர் இலஞ்சம் கொடுத்து தான் தங்களது பணிகளை நிறைவு செய்து கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது.

இந்தியாவின் தற்போதைய பெரும் சவால்களில் ஒன்று இலஞ்சத்தை கட்டுப்படுத்துவது என்று நம்முடைய பிரதமர் உள்ளிட்ட உயர் அரசுத்தலைவர்கள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள்

ஆனால் இந்திய நாடாளுமன்றத்தின் நிலை என்ன வென்றால்

டிசம்பர் 2008 இல், 523 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 120 நபர்களுக்கு மேல் குற்றவியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாவர்.  2010 இல் இருந்து நடந்த மிக பெரிய ஊழல்களுக்கும், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் போன்ற மிக உயர் அரசு நிலைகளுக்கும் தொடர்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு, 2010 காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடு, கர்நாடக சுரங்க ஊழல் போன்ற வற்றில் அரசின் உயர்பீடத்தில் இருந்தவர்கள் ஊழலில் புரண்டு எழுந்திருப்பதை நாடு கண்டது.

ஊழலை ஒழிப்பதற்கான ஏராளமான சட்டங்களும் துறைகளும் நம் நாட்டில் இருந்த போதும் இப்போது ஊழல் சம்பாதிப்பதிப்பதற்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட வழியாக மாறியிருப்பது  வேதனையிலும் வேதனையாகும்

பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் என்ற அடிப்படையில் இரத்தப் புற்றுநோயை விட வேகமாக பரவிப்படர்ந்து வருகிற இந்த இலஞ்சப் பெருச்சாளிகளை ஓழிப்பது கட்டுப்படுத்துவது குறித்து கவலைப்பட வேண்டியது நமது கடமையாகும்.

இலஞ்ச ஊழலுக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்று திரண்டு ஒரு பெரும் ஜிஹாதிற்கு தயாராக வேண்டும். இல்லை எனில் நம்மையே நம்மிடமிருந்து நமது அரசியல் வாதிகள் திருடி வெளிநாட்டில் விற்று விடுவார்கள்.

முஸ்லிம்களைத் தவிர இன்றைய பொதுச் சமூகத்தில், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமும் சம்பாத்தியத்தில் நல்லது  கெட்டது பார்க்காத குணமும் பரவியுள்ளது. இந்தியச் சமூக அமைப்பிலும் மனசாட்சிக்கு மாற்றமான இக்கருத்து இப்போது வேர் கொண்டுள்ளது. கோயில் உண்டியல்களில் சேருகிற கோடிக்கணக்கான காசுகள் பெரும் பாலும் தப்பான சம்பாத்தியத்தை நியாயப்படுத்திக் கொள்ளும் அற்பமான தந்திரமே என இந்து சமய அறிஞர்கள் கூறிகிறார்கள்.

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் எப்படியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற கருத்தோட்டத்தை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது. அந்த வகையில் நியாயமற்ற சம்பாத்தியமான இலஞ்சத்தை இஸ்லாம் கடுமையான ஹராமாக குறிப்பிட்டுள்ளது. அரபியில் அதை சுஹ்து என்று கூறுவார்கள்.

أخذ الرشوة من السحت، ومن أشد الحرام

தண்டனைக்குரிய குற்றம் என்பதை தாண்டி அல்லாஹ்வின் சாபத்திற்குரிய ஹராம்கள் சுஹ்து என்று சொல்லப்படும்.

فعن عبد الله بن عمرو - رضي الله عنهما - قال : ((لعن رسول الله - صلى الله عليه وسلم - الراشي والمرتشي)) (رواه الترمذي وأبو داود ،

أن النبي صلى الله عليه وسلم لعن الراشي والمرتشي ولعن الرائش ‏[‏رواه الإمام أحمد في ‏مسنده‏‏]‏ - وهو الساعي بينهما -،

واللعن يقتضي أن الرشوة كبيرة من أعظم كبائر الذنوب، وهي من السحت‏.‏

والله جل وعلا قال في اليهود‏:‏ ‏{‏سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ‏}‏ ‏[‏سورة المائدة‏:‏ آية 42‏]‏‏.‏
قال تعالى‏:‏ ‏{‏وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ‏}‏ ‏ [‏سورة البقرة‏:‏ آية 188‏]‏، وهذه الآية على أحد التفسيرين تعنى في الرشوة وتحذر منها‏.‏

இலஞ்சப்பணத்தில் நிறைவேற்றப் படும் வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இலஞ்சவாதியின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது.

وقد جاء في الحديث‏:‏ أن النبي صلى الله عليه وسلم‏:‏ ‏"‏ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي‏!‏ يا ربي‏!‏ ومطعمه حرام، ومشربه حرام، وملبسه حرام، وغذي بالحرام؛ فأنّى يستجاب له‏؟‏‏!‏‏" ‏[‏رواه مسلم في ‏صحيحه‏‏‏]‏‏.‏

அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்கள் தருகிற அன்பளிப்புகளை ஏற்கக் கூடாது என எச்சரித்திருக்கிறது.

 بيَّن النبي - صلى الله عليه وسلم - ما سيلقاه المرتشي من العقوبة ، وما يلحقه من الإثم حين استعمل رجلاً ، فلما قدم قال : هذا لكم وهذا أُهدي لي ، فقام رسول الله - صلى الله عليه وسلم - على المنبر وقال : ((ما بال عاملٍ أبعثه فيقول : هذا لكم وهذا أُهدي لي ! أفلا قعد في بيت أبيه أو في بيت أمه حتى ينظر أيُهدى إليه أم لا ؟ والذي نفس محمد بيده ، لا ينال أحد منكم منها شيئـًا إلا جاء به يوم القيامة يحمله على عنقه ، بعير له رغاء ، أو بقرة لها خوار ، أو شاة تيعر))

இது அரசாங்கத்திற்குரியது இது எனக்கு அன்பளிப்பாக தரப்பட்டது என்று ஒரு சஹாபி சொன்ன போது , அவர் அம்மா வீட்டிலோ அத்தா வீட்டிலோ உட்கார்ந்திருந்தால் இந்த அனபளிப்பு கிடைத்திருக்குமா என்று கேட்ட பெருமானார் ஸ்ல்) அவர்கள் இலஞ்சப் பொருளை கழுத்தில் சுமந்து வரும் சூழ்நிலை கியாமத்தில் ஏற்படும் என எச்சரித்தார்கள்.

அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகள் அரசு கஜானாவில் வைக்கப்பட வேண்டும்.

وقال ابن بطال: هدايا العمال تُجعل في بيت المال، وإن العامل لا يملكها إلا إذا طلبها له الإمام.


இஸ்லாத்தின் இக்கருத்துக்கள் பொது தளத்தில் பரப்ப பட வேண்டும்.

இலஞ்சம் என்பது ஒரு அவலட்சமான குணம் என்பது பொதுப்படையாக அதிகமாக போஸ்டர்கள் பேனர்கள் நோட்டீஸ்கள் சமயச் சொற்பொழிவுகள் வழியாக இந்தியச் சமூகத்திற்கு போதிக்கப்பட வேண்டும்,

இலஞ்சத்தால் சமூகத்தில் ஏற்படுகிற பாதிப்புக்கள் நிகழ்வுகள் போஸ்டர்களாக அச்சடிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இலஞ்சம் விளையாடுகிற இடங்களிலும் பொது இடங்களிலும் வைக்கப்பட வேண்டும்.

இலஞ்சத்தால் ஏற்படும் சமூக தீமைகள்

 • இறைவனின் கோபத்திற்கு ஆளாவது
 • பண்பாடுகள் சிதைவது
 • உரியவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது
 • முறையற்றவர்கள் முன்னுக்கு வருவது
 • அநீதி பெருகுவது
 • பொது மக்கள் மன உளைச்சலுக்கு நியாயமின்றி ஆளாவது
 • போலி மருந்துகள் தொடங்கி அனைத்திலும் போலிகள் உலவுவது அது மக்களை பாதிப்பது.

இதற்கான உதாரணங்கள் செய்திகளாக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் விநியோகிக்ககப்பட வேண்டும்

உதாரணத்திற்கு கும்பகோணத்தில் பள்ளிக் குழந்தைகள் மிகக் கொடூரமாக தீக்கிரையானதற்கு இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு அதிகாரி கொடுத்த உத்தரவு தான் காரணம் என்பது போஸ்டராக்கப் பட வேண்டும்.
கொல்லப்பட்ட புலியின் படத்தை பத்ரிகைக்கள் எவ்வளவு பெரிதாக பிரசுரித்தன ? அது போல ஊழல் பெருச்சசலிகளின் படங்கள் வெளியிடப்பட வேண்டும்..

சுனாமியில் பாதித்த மக்களுக்கு உதவுவதாக சொல்லிக் கொண்டு நடை பெற்ற ஊழல் சுனாமி பாதிப்பு பின்னணியோடு விளக்கப்பட வேண்டும்.

ஒரு அரசு மருத்துவர்  தன்னுடை சொந்த மகன் அடிபட்டு ஆம்புலன்ஸில் வந்திருக்கும் போது அதை அறியாமல் அவனுக்கு மருத்துவம்  செய்ய மருத்த்தையும் அவன் இறந்து போனதையும் செய்தியாக்க வேண்டும்.

இலஞ்சத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் அது தான் இலஞ்ச ஒழிப்பிற்கான வழி என்று ஆய்வாளர்கள் பல ரும் கூறுகிறார்கள்.

எதார்த்தம் என்ன வென்றால், சட்டங்களைப் பொறுத்த வரை நமது நாட்டில் கடுமையாகவே இருக்கிறது. பிரச்சினை சட்டம் அமுல் படுத்தப் படுகிற இடத்திலும் இலஞ்சம் விளையாடுவது தான்,

இஸ்லாம் செய்தது போல பண்பாடுகளை பக்குவப்படுத்துவதே நம் நாட்டில் இலஞ்ச ஓழிப்பில் செய்யப் பட வேண்டிய முதன்மைப் பணியாகும்.

தற்போது அதிகாரிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கிற பழக்கம் பிரபலமடைந்து வருகிறது. அது போல தர்ம நியாயங்களை கற்றுக் கொடுக்கிற பழக்கமும். மனசாட்சி இறையச்சம் ஆகியவற்றை பதிய வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப் பட வேண்டும்.

எல்லா வற்றிற்கும் மேலாக பொது மக்களின் புத்தியில் இலஞ்சம் பற்றிய கோபமும் வெறுப்பும் மறையாமல் இருக்க வேண்டும். ஆணால் இன்றைய பொது ஜனம் இலஞ்சத்தை அங்கீகரித்து விட்டதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. அரசியல் வாதிகளை அவர்கள் ஆதரிப்பதிலிருந்தே இதை அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களின் கடமை இலஞ்சம் கொடுத்து தன்க்கு நியாயமற்ற ஒரு காரியத்தை சாதித்து கொள்வதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அது ஹராமாகும்.

நியாயமற்ற எதுவும் ஒரு அதிகாரி அனுமதித்து விடுவதால் நியாயமாகிவிடாது.



عن أم سلمة ، أن رسول الله - صلى الله عليه وسلم - قال : إنما أنا بشر ، وإنكم تختصمون إلي ، فلعل بعضكم أن يكون ألحن بحجته من بعض فأقضي له على نحو ما أسمع منه ، فمن قضيت له بشيء من حق أخيه فلا يأخذ ( منه شيئا ) ، فإنما أقطع له قطعة من النار . مالك
நிர்பந்த சூழலில் இலஞ்சம் கொடுக்க நேர்ந்தால் அந்த ஹராமின் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றாலும் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்

நமது மாநிலத்தில் மக்களை கொன்ற மனித உண்ணிப் புலியை கொன்று விட்டார்கள். அதை போலவே கடுமையான குணம் கொண்ட இலஞ்ச எலிகள் மீது ஒரு ஜிஹாது தொடங்கப்பட வேண்டும்.

அது வே இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராக இருக்கும்.

5 comments:

 1. طلحة مصباحي5:31 PM

  جزاك الله خيرا كثيرا

  ReplyDelete
 2. அருமையான சிந்தனை

  ReplyDelete
 3. அருமையான சிந்தனை

  ReplyDelete

 4. புலியைப்பற்றிய தகவல்கள் அருமை.

  ReplyDelete
 5. ஆஹா! சரியான அருமையான உண்மையான நேர்த்தியான துல்லியமான தகவல்கள்...ஒவ்வொரு இந்தியரும் இதை படிக்க வேண்டும் ஊழல் இல்லாத இந்திய உருவாக வேண்டும் இறைவன் அருள் புரிவனாக உங்கள் சேவையை அல்லா அங்கீகரித்து கொள்வானாக!!! ஆமீன்...

  ReplyDelete