வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 01, 2024

கண்ணீரில் கடவுளின் தேசம்

 கேரளா மாநிலத்தை god’s own country  கடவுளின் சொந்த நாடு என்று மளையாளிகள் பெருமிதமாக கூறுவார்கள்.

இஸ்லாமிய அறிஞர்கள்-   خير الله   என்பதே கேரளா என்று மருவியதாக கூறுவதுண்டு.

அல்லாஹ்வின் மிகச்சிறந்த நிலம் என்று சொல்லும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் நிலமாக கேரளா திகழ்கிறது.

.  தென்னிந்தியாவில் அதிகமான சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக கேரளா மாறியிருக்கிறது.

.கேரள சுற்றுலா தளங்களில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் இடங்களில் ஒன்று வயநாடு. 

20 க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்கள் அங்கு உண்டு.எனவே களிப்பிடங்களின் தொட்டில் என்று வயநாடு போற்றப்பட்டது.

ஒரு இரவில் அது மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.  .

கேரளாவின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவ மழை வழக்கமாக பெய்ந்து வந்தது.  வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து ந்தது.

 30 ம் தேதி அன்று அந்த இரவு பெய்த  வரலாறு காணாத மிக கன மழை காரணமாக  வயநாட்டில் சாளியாற்றில் பெரு வெள்ளம் கரை புரண்டு ஓடியது. முதலில் அது மேப்பாடி என்ற ஊரை அரித்தது. அந்த நிலம் உறுதியற்ற நிலமாக இருந்தால் அது அப்படியே சரிந்து வழிந்து முண்டக்கை என்ற ஊரை மூடியது. முண்டக்காய் டவுன் முழுக்க முழுக்க களிமண்ணில் கட்டப்பட்ட கிராமம். இது சரிந்து அப்படியே சூரல் மாலா கிராமத்தில் விழுந்துள்ளது. இதனால் அந்த கிராமமும் சரிந்து உள்ளது. இதில் இருந்து சென்ற மண்.. அப்படியே தண்ணீரில் கலந்து அங்கே இருக்கும் ஏறுவலாஞ்சி ஆற்றின் போக்கையே மாற்றி உள்ளது. அதாவது அந்த ஆறு தடை பட்டு அருகே உள்ள ஊர்களை அடித்துக்கொண்டு புதிய திசையில் தண்ணீர் தன் போக்கிற்கு பலவாக பிரிந்து பிரவாக மெடுத்து பல பகுதிகளையும் அடித்துச் சென்று விட்டது. பெரு வெள்ளத்தில் உருட்டி வரப்பட்ட பெரும் பாறைகளும் மரங்களும் ஏராளமான வீடுகளையும் சொத்துக்களையும் அழித்து விட்டன.

இரவு 12;40 மணிக்கு தொடங்கிய முதல் நிலச்சரிவு நள்ளிரவு 2 மணியிலிருந்து 5 மணிக்குள் மூன்று பெரும் ஏற்படுத்தி பொழுது விடிவதற்கு மூன்று ஊர்களை அடையாளம் தெரியாமல் அழித்துவிட்டது. பன்னூற்றுக்கணக்கான மக்கள் உறக்க நிலையிலேயே என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே மண்ணுக்குள் புதைந்து விட்டனர்.

முண்டக்கை பகுதியை சேர்ந்த பிரன் ஜோஷ் என்பவர் கூறுகிறார் . இரவு 12;40 மணிக்கு ஒரு பெரும் சப்தம் கேட்டது நான் விழித்துப் பார்த்த போது எங்களது முன் வீட்டிலிருந்த எனது சின்னம்மாவின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்தது. அவர்கள் அதில் பலியாகிவிட்டனர். (தினத்தந்தி)

நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய சூரல்மலை பகுதியை சேர்ந்த பிரசன்னா (பெண் - வயது 40) கூறியதாவது, சேறு நிறைந்த வெள்ளம் எனது சகோதரியையும் அவரது குடும்பஎன் கண்முன்னே அடித்து சென்றதை கண்டேன். நான் எனது தந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அவரை தூக்கிக்கொண்டு வனப்பகுதியை நோக்கி ஓடினேன். எனது சகோதரிக்குஎன்னால் உதவ முடியவில்லை. அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த 2 குழந்தைகள் அடித்து செல்லப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் , நிலச்சரிவில் அடித்து செல்லும்போது அவர்கள் அலறிய சத்தம் எனக்கு கேட்டது. எங்கள் வீடு அடித்து செல்லப்பட்டது' என்றார் (தினத்தந்தி)

முண்டக்கை பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றிய கூடலூர் பகுதியை சார்ந்த ஷிஹாப் மெளலவி இரவில் பாய்ந்த காட்டாற்று வெள்ளத்திற்கு பலியாக பள்ளிவாசலுக்குள்ளே ஷஹீதாகி இருந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதுவரை சுமார் 300 பேர் இறந்து போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முண்டக்கையில் இருந்த 450 வீடுகளில் 400 வீடுகளை காணவில்லை. அங்கிருந்த மலையையே காணவில்லை என்கிறார்கள். உயரமான மலைப் பகுதியிலிருந்த ஒரு எஸ்டேட்டில் வேலை செய்து வந்த கூலியாட்களில் நூற்றுக்கணக்கானோர் என்ன ஆயினர் என்று தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்களின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை.

தொடர்ந்து மழை பொழிவதாலும் பாதிக்கப்பட்டா ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்பு பணிகள் அதி விரைவில் நடை பெறவில்லை. தற்போது தான் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு விரைவான தேடுதலுக்கு வழி ஏற்பட்டுள்ளது. இனி தெரியவரும் கணக்குகள் இன்னும் அதிக கவலையை தரலாம் என்று கூறப்படுகிறது.

எல்லாம் வல்ல இறைவன் பாதிப்பின் அளவை குறைத்தருள்வானாக! ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை பாதுகாத்தருளவானாக! ஆபத்திலிருப்பவர்களை விரைந்து அடையாளம் காண வழிகாட்டுவானாக! இந்த மழையை நன்மையானதாக ஆக்குவானாக! பாதிப்பற்றதாக ஆக்குவானாக!

இதில் உயிரழ்ந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லாஹ்வே ஆறுதல் தருவதற்கு போதுமானவன்.

ஒரு போன் உரையாடல் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

மஜீத் கா! உம்மா போயி! அக்கா தங்கச்சிகள் குழந்தைகள் எல்லோரும் போய்ட்டாங்க! என்னையும் கொண்டு போயிருக்க கூடாதா என்ற அந்தக் குரல் கேட்போர் நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது.

இந்திய ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளும், பல மாநிலங்களிலிருந்து வந்துள்ள பாதுகாப்பு வல்லுனர்களும் ஏராளமான தன்னார்வலர்களும் இரவு பகல் பாராது கடும் மழையை பொருட்படுத்தாது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு குழுவினர் கூறுகிறார்கள் , "ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி மீட்டு வருகிறோம். இப்படி ஒரு பேரிடரை எங்கும் பார்த்ததில்லை (தினத் தந்தி).

பாதிப்புக்களை பார்வையிடச் சென்ற கேரள சுகாதாரத்துறை அமைச்சர் விபத்தில் சிக்கினார்., கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் நிலச்சரிவில் சிக்கி பிறகு மீட்கப்பட்டார். அது போல மீட்பு பணிக்குச் சென்ற சிலர் சிரமத்திற்குள்ளாகி யிருக்கின்றனர்.

மீட்புக்குழுவினரின் பணிகளை அல்லாஹ் இலேசாக்கி அருள்வானாக! அவர்களுக்கு போதிய சக்தியையையும் பாதுகாப்பையும் அளித்தருள்வானாக!

மீண்டும் பயம்

கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம்,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி போன்ற போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது

எல்லாம் வல்ல கருணை மிக்க இறைவன் இனி பெய்கிற மழையை நன்மையானதாக ஆக்கியருள்வானாக!  மழையினை வேறுபக்கம் திருப்பி விடுவானாக!

ஒரு முறை மதீனாவில் மழை அதிகரித்து நாசங்களை ஏற்படுத்திவிட்ட்தாக சஹாபாக்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் பின்வறுமாறு துஆ செய்தார்கள்.

فَقالَ: يا رَسولَ اللَّهِ، هَلَكَتِ الأمْوَالُ وانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قالَ: فَرَفَعَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يَدَيْهِ، ثُمَّ قالَ: اللَّهُمَّ حَوَالَيْنَا، ولَا عَلَيْنَا،

 இறைவா மழை தேவையுள்ள பிரதேசத்திற்கு இம்மழையை திருப்பி விடுவாயாக என பிரார்த்தித்தார்கள்.

 மழையை நிறுத்தி விடு என்று கேட்கவில்லை மிக அற்புதமான நபித்துவ நிதானம் அது.

 அது போல இந்த பருவமழையை தேவையான நிலங்களுக்கு அல்லாஹ் கொண்டு சேர்ப்பானாக !

 மீட்பு பணிகளுக்கு அல்லாஹ் அவனது தரப்பிலிருந்து உதவி செய்தருள்வானாக!

 நமக்கு அருகிலே மக்கள் இவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற போது நாம் அவர்களுக்கு பிரார்த்தனை செய்தால் மட்டும் போதுமா ?

 இல்லை. நிச்சயம் இல்லை.

 நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

ஆனால் தேவையான நன்மையான உதவிகளை செய்ய வேண்டும்.

 அங்கு போய் வேடிக்கை பார்க்க குவியக் கூடாது.

 இன்று காலை நிலவரப்படி மீட்புக் குழுக்கள் இதுவரை 1,592 பேரை மீட்டுள்ளனர், இப்போது 82 நிவாரண முகாம்களில் 8,017 பேர் உள்ளனர். மருத்துவமனைகளில் இப்போது 90 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்க கூடும்.

 முகாம் களில் இருக்கிற மக்களுக்கு அடிப்படையான தேவைகளை நிறைவேற்றித்தர போதுமான அனைத்தும் இப்போது எங்கள் கைவசம் இருக்கிறது. ஆகவே நீங்கள் இப்போதைக்கு இங்கு வர வேண்டாம். இப்போதைக்கு உடல்களை மீட்பதிலும் அடக்கம் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அந்த பகுதிகளில் நிர்வாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகிறார்கள்.

 ஆகவே சற்று பொறுத்து நிலமை ஓரளவு சீரானவுடன் என்ன தேவை என்று அறிந்து உதவிகள் செய்யப்பட வேண்டும்.

 மாநில அரசு அனைத்து தரப்பினர்களிடமும் உதவி கேட்டுள்ளது. பணமாக இருந்தால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று பொருட்களாக இருந்தால் அதற்கும் ஒரு எண்ணை குறிப்பிட்டு அதில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. தயவு செய்து பயன்படுத்திய பழைய பொருட்களை அனுப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

 எனவே நமது பகுதியை சார்ந்து சரியாக நிவாரணப்பணிகளை கவனிக்க கூடியவர்களிடம் நமது உதவிகளை முடிந்த அளவில் நாம் வெளிப்படுத்துவோம்.

 தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மக்களின் கோரிக்கைகு ஏற்ப சரியான வழிகளில்  நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 நாமும் உதவுவோம்.

 عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "الخلق كلهم عيال الله وأحب خلقه إليه أنفعهم لعياله "الطبراني

ومعنى "عيال الله" فقراء الله 

 (அல்லாஹ்வின் குடும்பம் என்பதன் பொருள் அல்லாஹ்வின் உதவியில் வாழ்பவர்கள் என்பதாகும்).

 பாடங்கள்

 உலகை உலுக்கிய இந்த நிலச்சரிவுகளும் அதனால ஏற்பட்டுள்ள பாதிப்புக்களும் நம்மை பெரிதும் கவலைக்குள்ளாக்குகின்றன. ஆழமாக சிந்திக்க தூண்டுகின்றன.

கேரள மாநிலம் பொதுவாக மலைச்சரிவுகளின் பூமியாகும். அங்குள்ள 50 சதவீத நிலங்கள் 20 சதவீத சரிவுகளை கொண்டவையாகும்.

அதே போல இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலங்களுக்கு அடுத்த படியாக அதிக பருவ மழை பொழிகிற மாநிலம் கேரளா ஆகும். 3107 மில்லி மீட்டர் மழையை ஒவ்வொரு பருவத்திலும் கேரளா பெருகிறது. அதிலும் குறிப்பாக தென்மேற்கு பருவ மழை காலத்தில்/

(தமிழ் நாட்டிற்கு பெரும் பாலும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்கிற வடகிழக்கு பருவ மழை தான் அதிக மழையை தரும்.)

கேரள மலைச் சரிவுகளில்  தொன்று தொட்டு மக்கள் வசித்து வருகிறார்கள். அதிக மழையையும் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

எனவே சரிவான மலைப்பகுதியும் அதிக மழை பொழிவதும் புதிதல்ல.  

இதில் ஒரு ஆச்சரியமான செய்தி என்ன வெனில் ?

பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலமான ஜூலையிலிருந்து செப்டம்பருக்குள் வயநாட்டில் பெய்கிற மழையின் அளவில் சுமார் 14 சதவீதம் குறைவாகத்தான் இப்போது மழை பெய்திருக்கிறது.

பிரிட்டனிலிருந்து செயல்படுகிற ஒரு வானியல் ஆய்வு மையம் இந்த தகவலை கூறுகிறது.

“Whilst rainfall in Kannur District has been 21 per cent above the average between June 1 and July 30, it is 14 per cent below the average in the neighbouring district of Wayanad, and up to 25 per cent below average in Idukki and Ernakulam districts,” said Akshay Deoras, Research Scientist, National Centre for Atmospheric Science and the Department of Meteorology, University of Reading, Britain.

அந்த அறிக்கை ஆச்சரியப்படுகிறது.

மழை அளவு குறைந்திருக்கிறது. ஆனால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆச்சரியத்திற்கான விடை என்ன வெனில் வயநாட்டில் பெய்த மழையின் அளவு குறைவாக இருந்தாலும் பெரிய அளவிலான மழை ஒரே நேரத்தில் பெய்திருக்கிறது.

இதை மேக வெடிப்பின் விளைவு என்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் மாறிவருகிற கிளைமேட் சேஞ்ச் என்கிற பருவ நிலை மாற்றத்தின் விளைவு இது

இதன் காரணமாகவே காலாகாலமாக இல்லாமல் தற்போது கேரளாவை பருவ மழைகள் அதிகம் பாதித்து வருகின்றன.

2017 ம் ஆண்டு அடித்த ஒக்கி புயல்ல அடுத்து 2018 ம் ஆண்டு வரலாறூ காணாத அளவில் கேரளாவை வெள்ளம் சூழ்ந்தது.

அதே போல 2019 ஆகஸ்டிலும் கேரளாவில் பெருமளவில் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ள்ச சேதங்களுக்கு காரணம் பருவ மழை அதிகமாக பெய்வது அல்ல; பருவ மழையின் வடிவம் மாறியிருப்பதாகும். அதாவது திடீரென அதிக மழை பொழிவதாகும்.

கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் சொல்லியிருப்பது போல 115 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 572 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

"The IMD had predicted rains to the tune of 115 mm to 204 mm in the affected area. But in the first 24 hours, there was 200 mm and in the next 24 hours, 372 mm rain came down, making it a staggering 572 mm in 48 hours -- much more than predicted.     

இந்த பெரிய சோகத்திற்கு நடுவே மத்திய உள்துறை அமைச்சர்,  நம் நாட்டை பற்றி பெருமிதமாக ஒரு செய்தியை சொன்னார். உலகிலேயே 7 நாட்களுக்கு முன்னதாக வானிலையை கனிக்க கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்

"India is among four countries that can provide warning on natural disasters at least seven days in advance,"

நாங்கள் கேரளாவுக்கு 23 ம் தேதியே எச்சரிக்கை கொடுத்தோம். கேரளா அதை பொருடபடுத்த வில்லை என்று சந்தடி சாக்கில் தன்னுடைய சங்கித்தனத்தை உள்துறை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

கேரள முதலமைச்சர் பிணராய் விஜயன் அதற்கு பதில் அளிக்கும் போதுதான் “ ஒரு வாரத்திற்குள் அதிக மழை பெய்யும் என்று கூறினீர்கள். ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என்று கூறினீர்களா ? நீங்கள் ரெட் அலார் தரவே இல்லையே! அது மட்டுமல்ல நிலச்சரிவு பற்றி எல்லாம் ஒன்றுமே சொல்லவில்லை என்று பதிலளித்திருந்தார். இதை அரசியலாக்க விரும்ப வில்லை என்றும் கூறீயிருந்தார்.

Pinarayi Vijayan said, "there were predictions... they never mentioned a red alert in the affected area. In fact, the red alert came on Tuesday at 6 am, when the tragedy occurred several hours before"

விஜயன் இன்னொன்றும் சொன்னார். நிலச்சரிவு ஏற்படக்கூடும்  என்ற மத்திய நீர்வளத்துறையின் எச்சரிக்கை வந்து சேர்வதற்கு முன்பே அந்த சோகம் நிகழ்ந்துவிட்டிருந்த்து.

The Chief Minister also said that there was no prediction of landslides from the Geological Survey of India and when this came, the tragedy had already taken place

இந்த அரசியலுக்கு நடுவே இஸ்லாம் ஒரு கருத்தை உறுதி பட உலகிற்கு சொல்கிறது.

மழை பற்றிய தகவல்களை எதுவும் உறுதியானவை அல்ல. இது பற்றி உறுதியாக தெரிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنزلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ‌‌{ لقمان:34 }.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதை தெளிவு படுத்தினார்கள்.

فقد روى البخاري عن ابن عمر - رضي الله عنهما - عن النبي صلى الله عليه وسلم أنه قالمفاتيح الغيب خمس لا يعلمها إلا الله، لا يعلم ما تغيض الأرحام إلا الله، ولا يعلم ما في غد إلا الله، ولا يعلم متى يأتي المطر أحد إلا الله، ولا تدري نفس بأي أرض تموت إلا الله، ولا يعلم متى تقوم الساعة إلا الله

 இந்த இறைவசனம் மற்றும் நபி மொழியின் கருத்து மழையின் முழு அளவையும் நேர்த்தையும் அல்லாஹ் தனது தீர்மாணத்தில் வைத்திருக்கிறான். மனிதர்கள் சில வற்றை யூகிக்கலாமே தவிர உறுதிபட அறிய முடியாது.

விஞ்ஞானத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு பிறகும் ஏன் நம்மால் இயற்கையின் போக்கை கனிக்க முடிவதில்லை என்று பலரும் புலம்பது வது உண்டு

அதற்கான பதில், இறைவன் தனக்காக சில ரகசியங்களை வத்திருக்கிறான் என்பதே!

இந்த கவலையான தருணத்திலும் கூட அமைச்சர்களுக்கு இடையே நடை பெற்ற உரையாடல் அல்லாஹ்வின் வார்த்தைகளை நிஜப்படுத்து கின்றன.

எனவே காற்றும் மழையையும் வேகமாக வீசுகிற போது இது ஆபத்தாகி விடுமோ என மனித சமுதாயம் பயப்பட வேண்டும்

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்.

كان إذا رأى غَيْمًا أو رِيحًا عُرِفَ ذلك في وجههِ! فقلتُ: يا رسولَ اللهِ ،الناسُ إذا رأوْا الغَيْمَ فرحوا رجاءَ أن يكونَ فيه المطرُ، وأَراك إذا رأيتَه عُرِفَتْ في وجهِك الكراهيةُ! فقال: يا عائشةُ ، ما يُؤْمِنُني أن يكونَ فيه عذابٌ ؟ قد عُذِّبَ قومٌ بالريحِ ، وقد رأى قومٌ العذابَ قالوا هذا عارض ممطرن

 யாரும் இத்தகைய ஆபத்திலிருந்து தப்ப முடியாது,

இப்போதைய அறிஞர்களே என்ன பட்டியலிடுகிறார்கள் பார்த்தீர்களா ?

கிளைமேட் சேஞ்ச் பருவ நிலை மாற்றம் காரணமாக  இப்போது நிம்மதியாக இருக்கிற பல ஊர்களில் ஆபத்து ஏற்ப வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். கோவை அந்த பட்டியலில் 36 வது இடத்திலும் திண்டுக்கல் 41 வது இடத்திலும் இருக்கிறது என்கிறார்கள்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

எனவே எல்லா வசதியும் இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் தலை தெறிக்க ஆடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. அல்லாஹ்வை பற்றிய அச்சத்தை எப்போதும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

வயநாடு நிலச்சரிவின் முதல் பாடம்

வானிலை முன்னறிவிப்புகள் என்பது ஓரளவிலானவை மட்டுமே பயனளிப்பவை. அது முழுமையானது அல்ல; மழையின் மொத்த ரகசியங்களும் அல்லாஹ்விடமே இப்போதும் இருக்கின்றன என்பதாகும். இது பற்றி அச்சடக்கத்துடனேயே வாழ மனிதன் நிர்பந்திக்க்பட்டிருக்கிறான் என்பதாகும்.

 வயநாட்டு நிலச்சரிவின் இரண்டாவது பாடம்

அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக கேரளாவில் அதிக மழை பொழிந்தாலும் நிலம் அதை உறிஞ்சிக் கொள்ளும், அதனாலேயே அங்கு சீக்கிரம் தண்ணீர் வடிந்து விடும்.

ஆனால் சமீப காலமாக நிலம் தண்ணீரை உறிஞ்சும் அமைப்புக்கள் அங்கு குறைக்கப்பட்ட்தாலும் புவி வெப்பத்தினாலும்  மண் காய்ந்து போனது.

மண் காய்ந்து போகிற இட்த்தில் அதிகமாக பெய்கிற மழை மண்ணை அடித்துச் செல்லும். இதுவே இயற்கை

இப்போது வயநாட்டிலும் அதுதான் நடந்துள்ளது என்கிறார் பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் ஆராய்ச்சியாளராக இருக்கிற மரியம் ஜகரிய்யா.  

Dry soils absorb less water and heavy rainfalls cause run-offs that can lead to landslides, such as the ones we've seen this week,” said Mariam Zachariah, Research Associate, Imperial College London.

இந்த எச்சரிக்கை என்ன சொல்கிறது என்றால் “இந்த பூமியை நம்மிஷ்ட்த்திற்கு நாம் பயன்படுத்தி விடக் கூடாது. அதன் அமைப்பில் அதை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்திருக்கிறான்.

மலைகளில் இருக்கிற பெரிய பெரிய மரங்கள் நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை அந்த நிலத்திற்கு தருகின்றன. மலைப் பிரதேசங்களில் அத்தகைய மரங்களை வெட்டுகிற போது மலை அதிக சூடாகிறது என்பது மட்டுமல்ல. பூமியின் உறிஞ்சும் தன்மையும் குறைகிறது இது நிலச்சரிவுக்கு வழி வகுக்கிறது.

எனவே வளமான  பிரதேசங்களை அதன் இயற்கைகை அமைப்புக்களுக்கு  ஏற்ப பராமரிக்கனும்.

அதிகப்படியான ஆசை கொண்டு, சீக்கிரம் மரங்களை அறுத்துவிட முடியும் பெரிய கட்டிடங்களை எழுப்பி விட முடியும் எங்கும் எங்களது சக்தியை காட்ட முடியும் என்று மக்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள் எனில் இயற்கை தனது முடிவை காட்டுகிற போது வாயடைத்து நிற்க வேண்டியதாகிவிடும்.

வயநாட்டில் தற்போது நிகழ்ந்துள்ள சோகத்தில் நாம் சோகத்திற்குள்ளாகியிருந்தாலும் கூட இந்த இரண்டு செய்திகளையும் அதன் ஆழத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

அல்லாஹ் வயநாட்டு மக்களுக்கு  தகுந்த ஆறுதலை தருவானாக! பாதிப்புக்குள்ளானவர்களை விரைவில் மீட்பானாக! மீட்பு பணிகளை இலேசாக்குவானாக

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தேவையான உதவிகளை செய்ய நமக்கு தவ்பீக் செய்வானாக!

நாம் வாழும் பகுதிகளை பாதுகாத்தருள்வானாக! 

2 comments:

  1. Anonymous9:35 PM

    Masha allah Thakka narthill yalla saithigalum oru msg porkoviyallaga thantha hazrath avargallukku zazakallah allah ugallukku neenda aaulaum aafiyathaum tharuvaanaga aameen

    ReplyDelete
  2. Anonymous9:53 PM

    masha allahhh

    ReplyDelete