வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 31, 2019

அல்லாஹு அக்பர்


பொதுவாக மனிதர்களில் ஒவ்வொருவரிடமும் நிறைந்திருக்கிற சிந்தனை
நான் பெரியவன்

இந்த சிந்தனை எவ்வளவு அற்பமானது என மஸ்னவியில் ரூமி ரஹ் அழகிய ஒரு உவமையில் கூறுவார்கள்.
ž     أينك إي دريا وإي كشتي --  مردي كشتبال واهل راي وفن

ஒரு கப்பலைப் பற்றியும் அதன் பிரம்மாண்ட்த்தையும் அதை செலுத்தும் மாலுமியின் திறமையைப் பற்றியும் கேள்விப்பட்டது.

சில நாட்களில் ஓரிடத்தில்  ஒரு கழுதை சிறு நீர் கழித்த தண்ணீர் தேங்கி நின்றது. எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்த ஒரு புல் அந்த சிறுநீரில் வந்து விழுந்து மிதந்தது. அந்தப் புல்லில் வந்து உட்கார்ந்த ஈ  இதோ கடல் , இதோ படகு நானும்  தான்  இதை ஒட்டத் தெரிந்த மாலுமி  என்று பாடியதாம்.

நான் பெரியவன் என்று நினைக்கும் யாரும் கழுதையின் சிறுநீரில் கப்பலோட்டும் மாலுமி தான்.

கல்வி, செல்வம் ¸ செல்வாக்கு , பதவி எதிலும் தம்மை பெரியவர்களாக கருதிக் கொள்ளும் எவருக்கும் இது பொருந்தும்.
அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!

இந்தப் பெருமை தலை தூக்குகிற முக்கிய இடம் ஆட்சியதிகாரம்.
நானே அரசு என்றார்கள் சிலர்
நானே கடவுள் என்றார்கள் சிலர்
அனைவரும் அற்பமாக அழிந்து போனார்கள்.
எவ்வளவுதான் பாடங்களை பெற்ற பிறகும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் எங்கோ ஓரிடத்தில் நான் பெரியவன் என்ற எண்ணம் ஒளிந்தே இருக்கிறது .
இந்த எண்ணம் தான் சகல தீமைகளுக்கும் அக்கிரமங்களுக்கும் காரணமாகிறது.

குடும்பத்தில் மூத்தவன் சொத்துக்களை சுரண்டுகிறான். சீனியர் மானவர்கள் ராகிங்க் செய்கிறார்கள். உயர் குலத்தோர் தீண்டாமையை கடை பிடிக்கிறார்கள். அதிகார வர்க்கத்தினர் மக்களை வஞ்சிக்கிறார்கள். இத்தனைக்கும் நான் பெரியவன் என்ற எண்ணமே காரணம்.
அந்த எண்ணத்தை தகர்த்தெறியும் ஒரு வார்த்தை தான். 

அல்லாஹு அக்பர்

பாங்கின் முதலில் 4 தடவையும் கடைசியாக இரண்டு தடவைஎன ஆறுமுறை சொல்லப்படுகிறது.
வாழ்க்கைகான மிக முக்கியமான செய்தி அது.
அல்லாஹ் தான் எல்லாவற்றையும் விட மிகப் பெரியவன்.
அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலுக்கு மனிதனே பெரிய உதாரணம்.
தலையிலிருந்து கால் வரை மனிதனுக்கான ஆற்றல்களை அவனே வழங்கினான்.
பார்வை எவ்வளவு பெரிய அருள்
அல்லாஹ் பார்க்கும் திறனை மனிதர்களுக்கு மட்டும் வழங்க வில்லை.
ஆனால் மனிதனின் பார்வைத் திறனை மற்றவற்றின் பார்வை திறனை விட உன்னதமாக்கினான்.
யானை மனிதனை பார்க்கும் ஆனால் மனிதனின் முழு உடலும் அதகு தெரியாது. ஏதோ ஒரு உயிருள்ள  பொருள் என்று மட்டுமே அதற்கு தோன்றும்.
மனிதன் ஒன்றை பார்க்கிற போது அதன் சகல புற வடிவத்தையும் அறிகிறான்.
மனிதனுக்கு தரப்பட்டுள்ள கையை போன்ற நிஃமத் வேறு யாருக்கும் இல்லை.
விரல்களால் வித்தைகளை நிகழ்த்துகிற மனிதனுக்கு முன்னாள் கைகளை வைத்திருக்கிற விலங்குகள் மிக சாமாண்யமானவை.
மனித மூளைக்குள் இருக்கிற சிக்கலான நரம்புகளை சரி செய்கிற ஆற்றல் மனித விரல்களுக்கு இருக்கிறது.
பேச்சு என்பது விலங்குகளுக்கும் உண்டுதான், ஆனால் மனிதனைப் போல இலக்கியம் பேச எதனால் முடியும். அந்த இலக்கியத்தால் மக்கள் அடைகிற இனிமை எவ்வள்வு ? எழுச்சி எத்தகையது ?
அறிவாற்றல் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய எத்தகைய பெரிய பேரருள்.
பிரபஞ்சத்தில் இருக்கிற துகள்களின் விபரங்களைக் கூட புரிந்து கொண்டு அதன் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை கொண்டது அறிவு.
 இறைவன் கொடுத்திருக்கிற இந்த மகத்தான ஆற்றலால் மனிதன் உருவாக்கிய வைத்திருக்கிற அற்புதங்களை அதிசயங்களை பார்க்கிற எவரும் மனிதனை  கிரேட் என்று என்றே நினைப்பார்கள்

ஒரு செல்போன் எத்தகைய வசதிகளை நமக்கு கொடுக்கிறது.
உணவு போன்ற தேவையான பொருட்களை கொண்டு வந்து சேர்க்கிறது. வங்கிப் பரிவர்த்தை செய்கிறது.  பில் கட்டுகிறது. டிக்கட் எடுக்கிறது. பதிவு செய்கிறது. பதிவு செய்தவற்றை பாதுகாக்கிறது.  உடலில் செலவழியும் கலோரியின் அளவை காட்டுகிறது. விளையாட்டு துணையாக இருக்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிக்க உதவுகிறது. நம்முடைய பயணங்களுக்கும் பெரும் துணையாக வழிகாட்டுகிறது.

நாம் பயன்படுத்துகிற செல்போன்கள் எவ்வளவு தான் வசதியானவையாக இருந்தாலும் அவற்றில் முக்கியமான இரண்டு பலவீன்ங்கள் உண்டு.
ஒன்று அதனுடைய டிஸ்பிளே , கைதவறி போன் கீழே விழுந்தால் உடைந்து விடுகிறது.  இரண்டாவது போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டால் வீணாகி விடுகிறது. இப்போது atom என்ற புது வகையான ஒரு போனை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மீது கார் ஏறினாலும் அது உடையாது. இரண்டாவது தண்ணீருக்குள் அது செயல்படும்,

புதிதாக ஒரு மிஷின் தயாரிக்கப் பட்டிருக்கிறது, அதன் பெயர் ஸ்கின் ஜிட்
(SKIN ZIT ) மீன் வாங்குபவர்களுக்கு பெரிய சிரம்மாக இருப்பது அதை சுத்தம் செய்வது. இந்த இயந்திரம் மீனின் தலையை மட்டும் வெட்டி விட்டால் அதை சுத்தம் செய்து கொடுத்து விடுகிறது.
நாளுக்கு பல நூறு புதிய ஆச்சரியமூட்டும் உற்பத்திகளை மனிதர்கள் தயாரித்து வருகிறார்கள்.

மனிதனின் இது போன்ற நுட்பமான உற்பத்திகளை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
 ஆனால் இவற்றினால் மனிதனை த கிரேட் என்று சொல்லி விடமுடியுமா என்றால் விஞ்ஞானமே கூட அதற்கு தயாராக இல்லை.
ஏனெனில் உந்த உலகில் காணப்படுகிற இயற்கை மனிதனின் அத்தனை உற்பத்தியையையும் வெகு சாதாரணமாக தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

High tide  பேரலைகள்
கடலில் உருவாகும் பேரலைகள் மனிதனை சாமாணியனாக உணரச் செய்யக் கூடியவை . அதற்கு முன் ஒரு கணம் நின்று பார்த்தால் நாம் எவ்வளவு சாதாரணமானவர்கள் என்பது புரியவரும்.
பேரலைகள் கடலில் இருக்கும் தண்ணீரை சுமார் 15 அடி அளவுக்கு கூட உயர்த்தக் கூடியவை. எத்தகைய பிரம்மாணட மோட்டார்கள் வைத்தால் கூட மனிதர்களால் இத்தகைய அலைகளை உற்பத்தி செய்ய முடியாது .
கடலுக்குள் உள்ளேயும் பிரம்மாண்ட அலைகள் உருவாகின்றன என்ற ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன,  நிலத்தில் ஏற்படுகிற வெடிப்புகளால் உருவாகி அலைகள் தான் சுனாமியாக வெளியேறி பூமியை புரட்டிப் போடுகின்றன.
கடலுக்குள்ளே அலைகள் உண்டு என்பதை திருக்குர் ஆன் கூறுகிறது.
فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ  (النور :40)

கடலுக்குள் இருக்கும் அதிசயங்களைப் பற்றி இன்னும் கூட மனிதர்கள் ஓரளவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
குர் ஆன் கூறுகிறது.
وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ ﴿٥٩ الأنعام﴾




பூமியின் பிரம்மாண்டம் .
பூமியி உருண்டது. அதன் துருவப் பகுதி மட்டுமே 24 ஆயிரம் மைல் அளவு விசாலமானது.
பூமி ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் கீ மீ வேகத்தில் சுற்றுகிறது.
நாம் காரில் பயணம் செய்கிற போது 120 கீமீ யை தாண்டினாலே வண்டி குதிக்க ஆரம்பித்து விடும். அதிகப் பட்சமாக உயர் ரக கார்கள் 150 கிலோ மீட்டர் வரை தாக்குப் பிடிக்கும்.
சில நேரங்களில் குறைந்த அளவு வேகத்திற்கே கார்கள் குதிக்கும். மெக்கானிக் கிடம் காட்டினால் வீல் பேலன்ஸ் இல்லை என்பார்கள். அதற்காக மிகச் சிறிய அளவிலான இரும்பு பட்டைகளை சக்கரத்தில் ஒட்டுவார்கள்.  ஒரு சிறு அளவு இரும்பு பட்டை வித்தியாசத்தின்காரணமாக வண்டி பெரிய அளவில் குலுங்குகிறது.
அல்லாஹ் அக்பர்
பூமி ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அதன் ஓட்டத்தை
அதன் மேல் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பி வசிக்கிற நாம் துளியும் உணர்வதில்லை.
பொருட்களை ஓரிட்த்திலிருந்து இன்னொரு இட்த்திற்கு மாற்றுகிற போது கப்பலோ விமானமோ தடுமாறும்.  பூமியின் பேலன்ஸ் எந்த நிலையிலும் தடுமாறுவதில்லை.  
பூமியின் தோற்றம் பிரம்மாண்டமானது என்பது மட்டுமல்ல. அதன் பயன்களும் மிக பிரம்மாண்டமானவை
ஆறு நாட்களில் இந்த உலகம் படைக்கப் பட்டது என்று கூறுகிற திருக்குர் ஆன் அதில் மண்ணையும் மலைகளையும் படைக்க இரண்டு நாட்களாகியது மற்றவைகளை நான்கு நாட்களில் இறைவன் படைத்தான் என்கிறது .
خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَندَادًا ۚ ذَٰلِكَ رَبُّ الْعَالَمِينَ (9وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ

இந்த வசனத்தில் பூமியில் அல்லாஹ் பரக்கத் செய்தான் என்கிற வாசகம் ஆழமாக கவனிக்கத் தக்கது.

பூமி மிக பாக்கியமான அல்லாஹ்வின் பிரம்மாண்டமான படைப்பாகும்.

மனிதனை மண்ணால் படைத்த இறைவன் அந்த மண்ணிலிருந்தே மனிதரின் சகல தேவைகளையும் நிறைவேற்றி கொள்ளும் சூழலை அமைத்தான்.

وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا

தண்ணீர் மண்ணிலிருந்து கிடைக்கிறது. அரிசி கோதுமை மண்ணிலிருந்து கிடைக்கிறது. காய்கறிகள் மண்ணிலிருந்து,  ஆடைகள் உற்பத்தி செய்யும் பருத்தி மண்ணிலிருந்து , கல் மண்ணிலிருந்து , இரும்பு மண்னிலிருந்து, கண்ணாடிக்கான மூலப் பொருள் மண்ணிலிருந்து, உப்பு மண்ணிலிருந்து , சர்க்கை மண்ணிலிருந்து விளையும் கரும்பிலிருந்து, பூக்கள் மண்ணிலிருந்து என மனிதனின் அனைத்து தேவைகளை மண்ணிலிருந்தே பெற்றுக் கொள்ளும் வகையில் அல்லாஹ் அமைத்தான்.

மண் பாணை தண்ணீர் – மண் பாத்திரத்தில் உணவு – குடிசையில் வாழ்கை என்று சென்று கொண்டிருந்த மனிதன் அவற்றை உதரி அவை பலகீனமானவ என்று கருதி செயற்கையாக உருவாக்கியவை அனைத்தும் இப்போது அவனுக்கு இடையூறு தறக்கூடியவை என்று புரிந்து கொண்டு மீண்டும் மண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதை இப்போது நாம் பார்க்கிறோம்.

மண்ணிலிருந்து கிடைப்பவை எல்லா மக்கிப் போகக் கூடியவை மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் அலுமினியம் போன்றவை மக்கா பொருட்கள். மக்கா பொருட்கள் தீயவை என்று உணர்ந்து மீண்டும் பழங்காலத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்ட நிலையில் நார் பைகள் மீண்டும் வழக்கத்திற்கு வந்துள்ளன, இப்போது அவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்.

பெரிய கார்களில் வருகிறவர்கள் கூட பைகளை தூக்கிக் கொண்டு ஷாப்பிங்க் மால்களுக்கு நுழைகிற காட்சி சந்தைக்கு செல்லும் பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

அல்லாஹ் பூமியையும் அதிலிருந்து கிடைப்பவைகளையும் பரக்கத்தான ஆக்கி வைத்திருக்கிறான்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு பொருள் உபயோகப்படுத்தப் படும் போது அது குறைந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.
பூமியின் விளைச்சல் ஆதம் அலை அவர்களிலிருந்து இன்று வரை கிடைத்து க் கொண்டே இருக்கிறது.

மனிதர்கள் பேராசை கொண்டு இரசாயணங்களை பயன்படுத்தியதன் பூமியின் ருசி சில இடத்தில் மாறியிருக்கிறது என்றாலும். முற்றிலுமாக பூமி அழிந்து விடவில்லை. பசுமையான வயல்வெளிகள் தோட்டங்கள் பழங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதனுக்கு பூமியிலிருந்து கிடைக்கிற பரக்கத்துக்கள் இன்னும் ஏராளம் உண்டு.

கிரணைட்டுகள். தங்கம் , வெள்ளி, வைரக்கற்கள், பெட்ரோல் . கேஸ், மற்ற உலோகங்கள், இயறகை தாதுக்கள்  என ஏராளமாக மனிதர்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன,

இவ்வளவு நன்மைகளை தருகிற பூமி பெரியதா என்றால் ? இல்லை
பூமியை விட பெரிய கோள்கள் பல இருக்கின்றன.

வியாழன் ( ஜுபிடர்) கோள் சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளாகும்.

பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் எடை பூமியை யைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. பூமிக்கு ஒரு நிலா இருக்கிறது என்றால் வியாழனுக்கு 79 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன.

பூமி  தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

சூரியன் வியாழனை விட ஆயிரம் மடங்கு கனமானது.

பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன்.

சூரியன் வெகு தொலைவில் இருக்கிறது. சூரியக் கதிர்கள் புறப்பட்ட பிறகு நம்மை வந்தடைய

சூரியனிலிருந்து மனிதர்களுக்கு 3 முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன,

1.      வெளிச்சம்
2.      சூடு
3.      ரேடியன்ஸ்

வெளிச்சத்தினால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெளிச்சம் இல்லையேல் பூமியில் எந்த தாவரமும் விளையாது.

நமது வாழ்கைக்கு சூடும் மிக அவசியமானது.

சூரியனின் சூட்டை முழுமையாக தாங்கிக் கொள்ள முடியாது , ஆகையால் அல்லாஹ் கற்று மண்டலத்தை வைத்து அதன் சூட்டை தேவையான அளவு நமக்கு கிடைக்கச் செய்கிறான்.

குளிர் பிரதேசங்களில் சூடு இல்லாமல் போவதால் மனிதர்கள் எவ்வளவு அவஸ்தைக்கு ஆளாகிறார்கள்.

நம்க்கு பக்கத்தில் இருக்கிற ஊட்டியில் டீ வாங்கினால் உடனே குடித்து விட வேண்டும். இல்லை எனில் அது தண்ணீராகிவிடும்.

சூரியனின் சூடு 40 டிகிரியை கடந்தாலே நம்மால் வாழ முடியாது. ஒருவேளை அது 100 டிகிரியை எட்டுமானால் பூமியே கரிந்து போய்விடும். அதே போல குளிர் மைனஸ் 5 டிகிரியை சமாளிப்பதே கடினம். அது மைனஸ் 20 டிகிரியை தாண்டுமானால் அனைத்துமே உறைந்து போய்விடும்.

அல்லாஹ் நமக்கு அளவாக சூரியனின் சூட்டை வழங்கியுள்ளான், இது எத்தகைய பெரும் பேர் அருள் .

சூர்யனிலிருந்து கிடைக்கிற ரேடியேஷன் – கதிர் வீச்சும் மிக முக்கிய தேவைகளில் ஒன்றாகும்.

யார் சூரிய வெளிச்சத்திற்க்குள் அறவே நிற்பதில்லையோ அவர்களுக்கு விட்டமின் சத்து குறைபாடு ஏற்படுகிறது.

சூரியனை விட பெரிய நட்சத்திரங்கள் உண்டு

வான் வெளியில் ஸ்கார்பியன் என்ற ஒரு நடசத்திரக் கூட்டம் இருக்கிறது, அது தேள் வடிவத்தில் இருப்பதால் இந்தப் பெயர். அந்த நட்சத்திரக் கூட்ட்த்தின் நடுவில் இண்ட்ரஸ் என்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது,

 பூமியின் குறுக்களவு (டயா மீட்டர் ) 12, 742 கிலோ மீட்டர் . இந்த இண்ட்ரஸ் நட்சத்திர்த்தின் டயா மீட்டர் மூவாயிரம் இலட்சம் கிலோ மீட்டர். கணக்கை யோசித்தாலே தலை சுற்றும்.  இந்த நட்சத்தித்தின் முன்னிலையில் பூமிப் பந்து ஒரு அணுவைப் போல தோன்றும்.

இது போல ஒன்றல்ல இரண்டல்ல்ல எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் உள்ளன.
இந்த நட்சத்திரங்களை எல்லாம் உள்ளடக்கியதை  கேலக்ஸீ என்கிறார்கள்.  பத்தாயிரம் கோடி(டிரில்லியன் ) நட்சத்திரங்கள்  
ஒரு கேலக்ஸிக்கள் இருக்கிறது என்கிறார்கள்.

இது போல ஒரு கேலக்ஸீ அல்ல எண்ணற்ற கேலக்ஸீகள் இருக்கிறது என்கிறார்கள்.

கடல் எவ்வளவு பெரியது ? பூமி எவ்வளவு பெரியது ? வியாழன் எவ்வளவு பெரியது ? சூரியன் எவ்வளவு பெரியது ? நட்சத்திரங்கள் . கேலக்ஸிகள் எவ்வளவு பெரியவை?

இவை அனைத்தையும் படைத்த வல்ல நாயன் எவ்வளவு பெரியவன் .

அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.

وَالسَّمَاء بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ﴾ [الذاريات: 47]

இவை அனைத்தைய்ம் நாம் கையால் படைத்தோம்.

அதாவது இவற்றை படைக்க எனக்கு எந்த துணைச் சாதனமும் தேவையிருக்க வில்லை.

இந்த வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள وَإِنَّا لَمُوسِعُونَ என்பதற்கு لموسِعون الرِّزق என்று அக்காலத்தில் விளக்கம் சொன்னார்கள்.

இது ஒரு மகத்தான அறிவியல் தத்துவம் என்பதை தற்போதைய விஞ்ஞானம் கண்டுணர்த்துகிறது.

இந்தப் பிரபஞ்சம் படைக்கப் பட்ட்து போல ஒரே மாதிரி இருக்கிறது என்றே நீண்ட காலம் வரை அறிவியலாளர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

கட்டிடங்கள் பாலங்கள் அனைத்து ம் நாம் கட்டிய அளவிலேயே இருக்கின்றனவே அது போல இந்தப் பிரபஞ்சமும் ஒரே அளவில் இருக்கிறது என்றே ஆய்வாளர்கள் கூட நம்பினர். ஐசக் நியூட்டன் கூட இதே கொள்கையை கொண்டிருந்தார்.

அறிவியல் வளர்ச்சியடைந்த போது வான் வெளியை space வெட்ட வெளி என்றார்கள்.  வான் வெளியானது விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை 1929 ல் Edwin Hubble என்பவர் கண்டறிந்தார்.
இந்த விரிவால் பிரபஞ்சத்திற்குள் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

ஒரு பெரிய பலூனில் கட்டிடங்களின் படம் வரையப் பட்டிருக்குமானால் அந்த பலூன் ஊதப்படுகிற போது அது விரிவடைகிற போது அதிலுள்ள சித்திரங்கள் சிதறாமல் இருப்பதை போல அண்டம் விரிவடைகிறது ஆனால் அதிலுள்ள கட்டிடங்கள் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்று ஆய்ந்து சொன்னார் Edwin Hubble.

இந்தப் பிரபஞ்சத்தை மனிதக் கற்பனைகளுக்கு அப்பால் விர்விபடுத்திக் கொண்டே செல்கிற அல்லாஹ் எவ்வளவு பெரியவன் ?

அல்லாஹ்வின் பிரம்மாண்ட்த்தை பற்றி பறை சாற்றுகி ஆயத்துல் குர் ஸீ வசனம் அல்லாஹ்வின் அர்ஸு குர்ஸியை பற்றி கூறுகிறது.

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ (255  

அர்ஸு என்பது அரியாசனம். குர்ஸி என்பது கால் வைக்கும் திண்டு.

அல்லாஹ்வின் குர் ஸீ வானமண்டலங்களை விட விசாலமானது என்கிறது இந்த வசனம்.

நபிகள் நாயகம் (ஸல்) அந்த விசாலத்தை ஒரு உவமையில் விளக்கினார்கள்.

ஒரு கேடயத்தில் வீசப்பட்ட ஏழு திர்ஹம்களைப் போலத்தான் – அல்லது ஒரு வெட்ட வெளியில் வீசப்பட்ட சிறு வளையங்களைப் போலத்தான் வானங்கள் அல்லாஹ்வின் குர்சியில் இருக்கின்றன.

قال رسول الله صلى الله عليه وسلم" ما السماوات السبع في الكرسي إلا كدراهم سبعة ألقيت في ترس

قال أبو ذر: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما الكرسي في العرش إلا كحلقة من حديد ألقيت بين ظهري فلاة من الأرض 

அப்படியானால் அர்ஷூ எப்படி இருக்கும்.

قال أصحاب النبي صلى الله عليه وسلم: يا رسول الله هذا الكرسي وسع السموات والأرض، فكيف العرش؟ فأنـزل الله تعالى: وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إلى قوله: سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ[الزمر: 67]

அப்படியானால் அல்லாஹ் எவ்வளவு பெரியவன்

அல்லாஹு அக்பர்

என்று பாங்கில் ஆறு முறை ஒலிக்கிற வார்த்தை எத்தகைய உன்னதமான உறுதியான கருத்தை நமக்கு ஒவ்வொரு பொழுதிலும் தந்து கொண்டிருக்கிறது ?

இதற்குப் பிறகு நான் பெரியவன் என்று யாராவது நினைப்பார்கள் எனில் கழுதியின் சிறு நீரில் கப்பலோட்டுகிற ஈயைப் போன்றவன் என மெளலானா ரூமி ரஹ் அவர்கள் கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்,

இனி எப்போதாவது நான் பெரியவன் என்ற சிந்தனை நமக்குள் வரும் என்றால் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையை நினைத்துக் கொள்ள வேண்டும். ரூமியின் உவமையையும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் பெருமித்த்தை உணர்ந்து வாழக் கூடிய ஒரு வாழ்வை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் வானாக!



2 comments:

  1. MASHA allah - மிக மிக அருமை அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக.

    ReplyDelete