வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 15, 2026

பொறுப்பற்ற பெற்றோர் சமூக குற்றவாளிகளே

 கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவை உலுக்கிய ஒரு நிகழ்வு நடந்தது.

கேரளத்தில் கொச்சி சர்வதேச விமான நிலைய சாலையில் 19 வயது இளைஞர் சுஹைல், மினி கூப்பர் காரை அதிவேகமாக ஓட்டி ஸ்கூட்டர் மீது மோதியதில் 2 இளம்பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர்

விபத்தை ஏற்படுத்திய மினி கூப்பர் காரை ஓட்டிய சுஹைல் , காக்கநாடு பகுதியைச் சேர்ந்த சுஹைல் சஜீவ் காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவருடன் அமீர் (வயது 20), ஜோயல் (வயது 20) மற்றும் நினவ் ( வயது 19) ஆகிய 3 பேரும் காரில் பயணம் செய்துள்ளனர்

 டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ''சுஹைல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில் 11.8 வது நொடியில் கார் 204 கி.மீ. வேகத்தைக் கடந்து உச்சபட்சமாக 220 கி.மீ. வேகத்தைத் தொடுகிறது.'' என்று கூறியுள்ளது பதிவாகியிருக்கிறது. அதாவது கண்மூடித்தனமான வேகத்தில் காரை அவர் ஓட்டியுள்ளது நிரூபணமாகியுள்ளது.

இதற்கு பலி மூன்று உயிர்கள்.

ஸ்கூட்டரில் சென்ற கர்நாடகா மாநிலம் கூர்க்கை சேர்ந்த இஜாஸ், பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்த கோபிகா, வயநாட்டைச் சேர்ந்த தேவிகா ஆகிய 3 பேரும் அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மூவரும் 20–30 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனையாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்

விபத்து ஏற்பட்ட பின்பு, காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பிக்க முயன்று, சுற்றிலும் இருந்த பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது சுஹைல் எல்லாவற்றையும் தனது தந்தை பார்த்துக் கொள்வார் என்று கூறியது இந்த விவகாரத்தின் ஹை லைட்டாக பேசப்படுகிறது.

இதில் மேலும் அதிர்ச்சியை தருகிற செய்தி

'சுஹைல் சஜீவும், அவரது நண்பர் நினாவும் அக்டோபர் 10 சனிக்கிழமை மாலையிலிருந்து கொச்சியில் உள்ள பல மதுக்கூடங்களுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வாக்கில், நெடும்பசேரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்த மதுக்கூடத்தில் தங்கள் நண்பர்களான அமீர் மற்றும் ஜோயல் ஆகியோரைச் சந்தித்து, பின்பு அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்

இதனை விசாரித்த கேரள காவல் துறை இளம் வயதினருக்கு மது வழங்கியதற்காக மூன்று மது விற்பனை நிலையங்களின் லைசன்ஸை ரத்து செய்துள்ளனர்.

இதற்கு முன்பு கேரளத்தில் எத்தனையோ விபத்துகள் நடந்துள்ளன. சில நாட்களில் அது மறக்கப்படும். ஆனால் இந்த மினி கூப்பர் விபத்து உலகம் முழுவதிலும்  பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பலத்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

அந்த விவதாங்களில் பிரதானமானது.  பணக்கார பெற்றோர் தங்களது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள். என்பது பற்றியதாகும்.

நமது ஜும் ஆ உரையின் நோக்கமும் அது பற்றி பேசுவதாகும்.

காரணம் இந்த நிகழ்வுக்குப் பிறகு ஒட்டு மொத்த சமூக ஊடகங்களிலும் குறி வைக்கப்பட்டிருப்பது சுஹைலின் பெற்றோர் ஆகும்.

சுஹைல் சஜீவ் தாயார், தன்னுடைய இளைய மகனான 19 வயது சுஹைலுக்கு பிறந்தநாள் பரிசாக இந்த மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது, அது மிக மோசமான வார்த்தைகளால் வருத்தெடுக்கப் படுகிறது. காசுக் கொழுப்புக்கு மூன்று உயிர்கள் பலியாகி இருக்கிறது என்பது மட்டுமல்ல. உடன் இருந்த மூன்று நண்பர்களுக்கும் சிறை தண்டனையை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

சுஹைலின் பெற்றோர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து இளம் வயதில் உயிரை இழந்த மூவருக்கும் ஆறுதல் தொகையாக பிரித்தளிக்கப் பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஒரு எதார்த்தமான உண்மை என்னவென்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்திற்கு இந்த பெற்றோர்கள் அவர்களது கைகளில் சிக்குவார்கள் எனில் அவர்களை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள் என்பதாகும்.

மக்கள் இந்த இளைஞர்களை கூட மன்னிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பெற்றோர்களை மன்னிக்க தயாராக இல்லை.

முஸ்லிம் சமூகத்தில் பெருகி வருகிற சீரழிவுக்கான பன்முக எடுத்துக்காட்டாக இந்திகழ்வு அமைந்திருக்கிறது.

பண வசதி படை த்த ஒவ்வொரு முஸ்லிம் தாயும் தந்தையும் இதை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குர் ஆன் மிக கடுமையாகா எச்சரிக்கை செய்த அம்சங்களில் ஒன்று இது.

நாம் வாரம் தோறும் ஓதுகிற சூரா கஹ்பு அத்தியாயத்தில் இது பற்றிய் எச்சரிக்கை உண்டு.

பிள்ளைகள் மீது வைத்திருக்கிற அளவு கடந்த பாசம் அல்லது செல்லம் காரணமாக பெற்றோர்கள் காபிர்களாக ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

கிழ்ரு அலை அவர்களோடு மூஸா அலை அவர்கள் ஒரு ஞானப் பயணம் மேற்கொண்ட போது ஓரிட்த்தில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர், அதில் ஒரு சிறுவன் அழகாகவும் துடிப்பாகவும் இருந்தான். கிழ்ரு அலை அவர்கள் அந்த சிறுவனை பிடித்து அவனது கழுத்தை திருகிற கொலை செய்து விட்டார்கள். அத்ர்ச்சியடையந்த மூஸா அலை அவரகளுக்கு அதற்கான காரணத்தை கிழ்ரு அலை அவர்கள் சொன்னது “ ஒவ்வொரு பெற்றோருக்குமான அபாச சங்கு ஆகும்.

وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا (80)

  يحملهما حبه على متابعته على الكفر .

 இந்த சிறுவனின் மீதுள்ள அன்பால் அவனது பெற்றோர்கள் காபிர்களாக கூடும்.

இன்று நம் கண்ணுக்கு நேரே நாம் இதற்கான சான்றுகளை ஏராளமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பிள்ளைகளுடைய ஆசைகளையும் கருத்துக்களையும் மீற முடியாமல் பெற்றோர்கள் அவர்களின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள். அதற்காக எந்த இழிவான விமர்சனத்திற்கு தயாராகி விடுகிறார்கள்.

கடையநல்லூரை சார்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் விவகாரம் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியதை நாம் அறிவோம்.

இப்போது அதில் டிரண்ட் என்ன தெரியுமா? அந்த பெண்ணின் தாயார் அவளுக்கு ஆறுதல் சொல்வது போல ஒரு ஆடியோ வெளிவந்திருப்ப்பதாகும்.

இதில் ஒரு அதிர்ச்சி என்ன தெரியுமா? இது அல்லாஹ்வா அனுப்பிய சோதனை என்று அந்த தாய் சொல்வதாகும்

அதே போல இளம் இரட்டை பெண்கள் நடனமாடுகிற வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பினார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் அதை பகிரங்கமாக ஆதரித்தார்கள்.

பிள்ளைகளின் மீதுள்ள பாசம் பெற்றோர்களை எந்த அளவிற்கு ஆபத்தில் போய்ச் சேர்க்கும் ஆபத்து இருக்கிறது என்பதை எடுத்துச் செல்ல இந்த ஆயத்தை விட இன்னொ உதாரணம் தேவையில்லை.

பிள்ளை பாசம் பெற்றோர்களின் குணத்தை மாற்றிவிடுகிறது என்பது மட்டுமல்ல இப்போதுள்ள சோதனை பிள்ளை பாசம் பெற்றோர்களின் பணத்தையும் பறித்து விடும் என்பதாகும்.

தற்போது சுஹைல் என்ற இந்த பையனால் உயிரிழந்த மூன்று இளம் பிள்ளைகளுக்காக அவனுடைய பெற்றோர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்திய தண்டனை சட்ட்த்தில் அது சாத்தியமா என்று தெரியவில்லை என்றாலும் அது இஸ்லாம் ஒப்புக் கொள்கிற கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் கூறினார்கள்.

مَنْ قَتلَ مُتعمِّدًا دُفِعَ إلى أولياءِ المقتولِ ، فإنْ شاءُوا قتَلُوا ، وإنْ شاءُوا أخَذُوا الدِّيَةَ ، وهِيَ ثلاثونَ حِقَّةً ، وثلاثونَ جذَعةً ، وأربعونَ خَلِفةً وما صُولِحُوا عليه فهوَ لهمْ

(வேண்டுமென்று கொலை செய்தவர் கொல்லப்பட்டவரின் வாரிசுதாரர்களிடம் (உறவினர்களிடம்) ஒப்படைக்கப்படுவார்; அவர்கள் விரும்பினால் (கொலையாளியை கொல்லலாம், அல்லது அவர்கள் விரும்பினால் நஷ்டஈட்டுத் தொகையை (திய்யா - Diyah) பெற்றுக்கொள்ளலாம். அந்த நஷ்டஈடு: முப்பது ஹிقَّة (மூன்று வயது பூர்த்தியடைந்து நான்காம் ஆண்டில் கால்பதித்த ஒட்டகங்கள்), முப்பது ஜத்அத் (நான்கு வயது பூர்த்தியடைந்து ஐந்தாம் ஆண்டில் கால்பதித்த ஒட்டகங்கள்), மற்றும் நாற்பது கலிஃபா (கருவுற்ற ஒட்டகங்கள்) ஆகும். மேலும், அவர்கள் எதன்மீது சமாதானம் செய்துகொள்கிறார்களோ அது அவர்களுக்குரியது.")

கண் மண் தெரியாமல் வாகனத்தை ஓட்டுவதும் – குடித்து விட்டு வாகனை ஓட்டுவதும்  அது வேண்டு மென்றே செயத கொலையை போன்றது தான்.

இந்த ஹதீஸ் சொல்கிற வார்த்தையை பாருங்கள். கொலைகாரனை பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் கூறுகிறார்கள்.

 இப்போது பாதிப்புக்குள்ளான இந்த மூன்று குடும்பங்களின் விருப்பத்தில் அந்த பையன் விடப்பட்டால் நிலை என்னவாகும் ?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளை மீது வைக்கிற பாசத்திற்காக தங்களது சொத்துக்களை கூட இழக்க வேண்டியது வரும் என்பதை ஆபத்தை ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த நிகழ்வு அழுத்தமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இது பிள்ளைகளின் மீதான பாசம் கிடையாது.

பெற்றோர்கள் தங்களுடைய பெருமையை பிள்ளைகளின்  வழியாக வெளிப்படுத்துவதாகும்.

முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது ஆணவத்தை ஆடையில் காட்டி, வீடு கட்டுவதில் காட்டி, விசேச வைபவங்களில் காட்டியது போக இப்போது  பிள்ளைகளிலும் காட்டுகிறாரகள் என்பதே எதார்த்தமான உண்மையாகும்.

கேரளாவில் விபத்தை ஏற்படுத்திய மினி கூப்பர் காரை தனது இளைய மகனின் 19 வது பிறந்த நாளுக்கு அவருடைய தாயார் பரிசாக கொடுத்த்தை வீடியோ பதிவு செய்து சமூக ஊடக்ங்களில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு தன்னுடைய பணத்தின் பகட்டை காட்டுதல் என்பதை தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்?

தற்போதைய விவகாரத்தை பெரிதாக்கியதில் ஒரு முக்கிய அம்சம் அந்த மினி கூப்பர் என்ற பெயரும் ஆகும்.

காரணம் அது சுமார் 25 லடச ரூபாய் மதிப்புடைய ஸ்போர்ட்ஸ் கார். பணக்கார இளைஞர்களின் கனவு அது.

பெற்றோர் தங்களுடைய பகட்டை காட்டிக் கொண்டதில் பிள்ளைகளின் அருமையான வாழ்க்கையே பறிபோய்விட்டதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி சுஹைல் என்ற அந்த 19 வயது இளைஞன் பலியாகி இருந்தால் என்ன ஆகியிருக்கும் ? உடன் இருந்த மூன்று நண்பர்களின் கதி என்னவாகியிருக்கும் ?

இந்த முறை சுஹைல் தப்பித்துக் கொண்டாலும் கூட அவனால் மூன்று இளம் உயிர்கள் பலியான கறையை அவனால் எப்படி கழுவ முடியும் ? காலம் முழுவதும் அவனது இதயத்தை அது கசக்கிப் பிழியாதா?

இப்போது அவன் வண்டி ஓட்டுவதற்கான லைசன்ஸை 10 வருடங்களுக்கு காவல் துறை இரத்து செய்திருக்கிறது.

தங்களுடைய மகனின் எதிர்காலத்தை பாழாக்கியது அந்த பெற்றோர்கள் தான்

என்று உலகம் இன்று காரித்துப்பிக் கொண்டிருக்கிறது.

வசதி வாய்ப்பை பெற்றுள்ள ஒவ்வொரு தாய் தந்தையும் குறிப்பாக தம் பிள்ளைகளுக்க்காக பரிந்து பேசுகிற ஒவ்வொரு தாயும் மறக்க கூடாத செய்தி இது.

பிள்ளை வளர்ப்பு என்பது பெறுமையை காட்டிக் கொள்வதறகான வழி அல்ல.

பிள்ளைகளை பொறுப்பானவர்களாக ஆக்குவதாகும்.

லுக்மான அலை அவர்கள் தனது அறிவுரைகளை உலகிற்கு பொதுவாக சொல்லியிருந்தாலும் கூட மகனுக்கு பிரதானமாக கூறியதாக திருக்குர் ஆன் கூறுகிறது

 وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (13)

இபுறாஹீம் அலை தனது மகனை எந்த அளவு பொறுப்புள்ள பிளையாயக வளர்ந்திருந்தார்கள் என்றும் திருக்குர் ஆன் கூறுகிறது

قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102)

 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்பில் இருந்த அனஸ் ரலி அவரகளுக்கு எப்படி பொறுப்புணர்வை கற்பிக்கிறார்கள் பாருங்கள். அற்புதமான ஹதீஸ்களின் ஒன்றான இது பெருமானாரின் வளர்ப்பு முறைக்கு ஒரு உதாரணமாகும் .

قال: عبدالله بن عباسٍ رضي الله عنهما كنت خلف النبي صلى الله عليه وسلم يومًا، فقال: ((يا غلام، إني أعلمك كلماتٍ: احفظ الله يحفظك، احفظ الله تجده تجاهك، إذا سألتَ فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعـوك بشيءٍ لم ينفعوك إلا بشيءٍ قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يضروك بشيءٍ لم يضروك إلا بشيءٍ قد كتبه الله عليك، رُفعت الأقلام، وجفَّت الصحف))؛ رواه الترمذي

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் இருந்தபோது, ​​அவர்கள் கூறினார்கள்: “ஓ இளைஞரே, நான் உங்களுக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்: அல்லாஹ்வை நினைவில் கொள்ளுங்கள், அவன் உங்களைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவனை உங்களுக்கு முன்னால் காண்பீர்கள். நீங்கள் கேட்கும்போது, ​​அல்லாஹ்விடம் கேளுங்கள்; நீங்கள் உதவி தேடும்போது, ​​அல்லாஹ்விடமே உதவி தேடுங்கள். அறிந்து கொள்ளுங்கள், ஒரு சமுதாயம் முழுவதும் உங்களுக்கு எந்த வகையிலாவது நன்மை செய்ய ஒன்று கூடினாலும், அல்லாஹ் உங்களுக்காக ஏற்கனவே விதித்ததைத் தவிர அவர்களால் உங்களுக்கு நன்மை செய்ய முடியாது. அவர்கள் உங்களுக்கு எந்த வகையிலாவது தீங்கு செய்ய ஒன்று கூடினாலும், அல்லாஹ் உங்களுக்கு எதிராக ஏற்கனவே விதித்ததைத் தவிர அவர்களால் உங்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகள் காய்ந்துவிட்டன.” (திர்மிதி)

 

இப்படியான வளர்ப்பு முறை சிறந்ததா தங்களது பெறுமையை காட்டிக் கொள்ளும் வளர்ப்பு முறை நல்லதா என்பதை முஸ்லிம் பெற்றோர்கள் அவசியமாக சிந்திக்க வேண்டிய கால கட்டும் இது.

இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் மிக தாரளமாக மது அருந்தியிருக்கிறார்கள் என்பதும் இந்த நிகழ்விலிருந்து தெரிகிறது.

19 வயது இளைஞனுக்கு இந்த பழக்கம் எப்படி வந்தது ?

அது அந்த பெற்றோர்களுக்கு தெரியாமல் நடந்ததா ?

அவர்கள் காசு கொடுக்க வில்லை எனில் இது சாத்தியமா ?

இன்று நம்மை சுற்றி இருக்கிற உலகம் மிகவும் கெட்டுப் போயிருக்கிறது. வாஸ்தவம் தான்.

ஆனால் அதிலிருந்து நமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இல்லாவிட்டால் பெற்றோர்களே இதற்கு வழி விடுகிறார்கள் என்பது தான் பொருளாகும்.

அது மது அருந்துதல் – அவலட்சணமாக நடக்குதல் – ஒழுக்கம் கெட்டுப் போகுதல் என எந்த மாதிரியான தீமையாக இருந்தாலும் சரி.

பிள்ளைகளின் குற்றச் செயல்களுக்கு பெற்றோர்களின் அலட்சியமும் அகம்பாவ குணமுமே காரணமாகும்.

உமர் ரலி காலத்தில் – எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ரு பின் ஆஸ் ரலி அவர்களின் மகன் முஹம்மது , ஒரு எகிப்து நாட்டு குடிமகனை அடித்து விட்டார். இந்த வழக்கை விசாரித்த உமர் ரலி அவர்கள் முஹம்மதுக்கு தண்டனை வழங்கியதோடு நிற்கவில்லை. அவருடைய தந்தை அம்ரு ரலி அவர்களையும் அடிக்குமாறும் கூறினார்கள். அப்போது அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் கவனத்திற்குரியது.

ஒவ்வொரு பெற்றோரும் நெஞ்சில் பதிய வைக்க வேண்டியது.

ثم يقول عمر: (أدرها على صلعة عمرو .. فما ضربك ابنه  إلا بسلطان أبيه

அம்ரின் வழுக்கைத் தலையில் திருப்புங்கள்... ஏனெனில் முஹம்மது தன் தந்தையின் அதிகாரத்தினால் தான் உங்களை அடித்தார்.)

 நமது பிள்ளைகள் நாம் இருக்கிறோம் என்ற தைரியத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விடக் கூடாது.

அது பிள்ளை வளர்ப்பல்ல;

அது நமக்கான சோதனைகளை நாமே வளர்த்துக் கொளவ்தாகும்.

நமது பிள்ளைகள் நாம் இருக்கிறோம் என்ற பயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அது வே பிள்ளை வளர்ப்பின் சரியான அடையாளமாகும்.

தம்முடைய பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பைக்குகளை  - கார்களை – வாங்கிக் கொடுக்கிற பெற்றோர். காசு பணத்தை கட்டிக் கொடுக்கிற பெற்றோர் . தம் பிள்ளைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறுகிற பெற்றோர் ஒவ்வொருவரும் பொறுப்பற்றோர் மட்டுமல்ல ஒரு சமூக குற்றவாளி ஆவார்.

கேரளாவில் நடந்த இந்த விபத்தை ஒவ்வொரு பெற்றோரும் தமக்கு பாடமாக கொள்ள வேண்டும்.

நிறைவாக ஒன்றை பதிவு செய்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் சொன்னார்கள்.

ما نحل والدٌ ولدًا مِن نحْلٍ أفضلَ من أدبٍ حسنٍ

الراوي : عمرو بن سعيد بن العاص | المحدث : الترمذي 

பிள்ளை வளர்ப்பின் பிரதான த்த்துவத்தை இந்த ஹதீஸ் பவு செய்கிறது.

முஸ்லிம் பெற்றோர்கள் இதை தான் கவனிக்க வேண்டும்.

சக மனிதர்களிடன் காட்டுகிற ஆடம்பரத்தையோ சமூக ஊடகங்களி வெளிப்படுகிற  ஆர்ப்பாட்டத்தையோ அல்ல.

அல்லாஹ் நம்மையும் நமது குடும்பத்தை நமக்கு கண் குளிர்ச்சியானதாக் ஆக்குவானாக!