வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 20, 2023

ஹிஜ்ரீ சொல்வதென்ன ? மணிப்பூரில் நடப்பது என்ன ?

 இஸ்லாமிய ஹிஜ்ரீ புத்தாண்டு பிறந்திருக்கிறது

இது ஹிஜ்ரீ 1445 ம் ஆண்டு.

இந்த காலண்டர் நடைமுறையை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் உமர் ரலி அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

இந்த ஆண்டை அல்லாஹ் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாக்கியமான ஆண்டாக ஆக்கியருள்வானாக!

இந்த ஆண்டில் இஸ்லாமின் எதிரிகள்  தாழ்வுறவும் அவர்களது திட்டங்கள் தோல்வியடைவும் அல்லாஹ் வழி ஏற்படுத்துவானாக

இஸ்லாமிய ஆண்டின் அடையாளமாக ஹிஜ்ரத்தை உமர் ரலி அவர்கள் தேர்வு செய்தது, மகத்தான பல சாதனைகள் ஹிஜ்ரத்திற்கு இருக்கின்றன என்பதனால் ஆகும்.

ஹிஜ்ரத்தின் சாதனைகளில் ஒரு பெரும் சாதனை, மனித குலங்களை வேறுபாடுகளை கலைந்து அது ஒன்றிணைத்த்து.

இன்னும் ஒரு வார்த்தையில் சொல்லப் போனால், அதை ஹிஜ்ரத்தின் முதல் சாதனை என்று கூட சொல்லலாம்

பெருமானாரின் ஹிஜ்ரத்திற்கு முன் மதீனாவிலிருந்த மக்கள் அவ்ஸ் கஜ்ரஜ் என்ற குலத்தினராக இருந்தனர். இருவரும் சகோதர குடும்பத்தினர் தான் என்றாலும் பிற்காலத்தில் சின்ன சின்ன காரணங்களுக்காக வெல்லாம் தலை தலைமுறையாக சண்டையிட்டுக் கொண்டனர்.

இவ்விரு குழுவினருக்கிடையே எதற்காக வெல்லம் யுத்தங்கள் நடை பெற்றன என்பதை அரபு வரலாறுகள் கதை கதையாக பேசுகின்றன. \

அவற்றில் ஒன்று இது

அவ்ஸ்களில் ஒருவர் கஜ்ரஜ்கள் வாழும் இடம் வழியாக நடந்து சென்றார். நீ வரக்கூடாது என்று கஜ்ரஜ்கள் தடுத்தார்கள். நீ யார் தடுக்க என்று அவர் மறுத்து நடந்தார். இரண்டு சகோதர குடும்பத்தினரிடையே சண்டை தொடர்ந்தது. பலர் கொல்லப்பட்டனர்.   

ثم كانت حرب بين بني ظفر من الأوس وبني مالك بن النجار من الخزرج، وذلك أن رجلا من ظفر كان يمر إلى أرضه في أرض رجل من بني النجار فمنعه فلم يمتنع فنازعه فقتله الظفري فاجتمع قومهما واقتتلا فانهزم بنو مالك بن النجار.

 மற்றொரு யுத்தம் இது

அவ்ஸ்களில் ஒருவர் கஜ்ரஜிகளில் ஒருவரிடம் வாக்குவாதம் செய்தார். முடிவில் கஜ்ரஜீயை அவர் கொன்றார். இதை அறிந்த கஜ்ரஜீ குடும்பத்தினர் அவரை பின் தொடர்ந்து சென்று கொன்றனர். அதில் ஒரு பெரும் யுத்தம் மூண்டது,

 இவ்வாறு சின்ன சின்ன காரணங்களுக்காக இரு சமூகங்கள் காட்டுமிராண்டித்தனமாக மோதி அழிந்து கொண்டிருந்தன.

 முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது மதீனாவிற்குள் நுழைவதற்கு முன்னதாக அவ்விரு பங்காளிகளுக்கிடையேயிருந்த தலை முறை பகையை ஒன்று மில்லாமல் செய்தார்கள்.

 நீண்ட வரலாற்றை சுருக்கமாக தருகிறேன்.

 பெருமானார் (ஸல்) அவர்களை மதீனாவிற்கு வருமாறு அழைத்தவர் அஸ்அது பின் ஜராரா (ரலி)

அவர் கஜ்ரஜ்களை சேர்ந்தவர். அவரது வீட்டிலிருந்து தான் இஸ்லாமிய பிரச்சாரம் மதீனாவில் நடந்தது.

இரண்டு குலத்தவர்களும் வேறுபாடின்றி இஸ்லாமை ஏற்றனர். எனினும் கொலைப் பலிகளின் சூடு அப்படியே இருந்தது.

 நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த போது குபாவில் பனூ அம்ரிப்னு அவ்புகளிடம் தங்கினார்கள். அவர்கள் அவ்ஸ் குடும்பத்தை சார்ந்தவர்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த அஸ் அது ரலிக் பெரிய கவலை – அவரால் உடனே பெருமானாரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவ்ஸ்களுக்கும் அவருக்குமிடையே பழைய பகை இருந்தது.

 ஒரு நாள் என்ன நடந்தாலும் சரி என்று ஒரு தீர்மாணத்திற்கு வந்தவராக குபாவை நோக்கி வந்தார். இரவு நேரத்தில் யாரும் கண்டு பிடிக்க முடியாதவாறு முக்காடு போட்டுக் கொண்டு வந்து பெருமானாரைச் சந்தித்தார். அவர்களுக்கிடையே இருந்த பகையை அறிந்து கொண்ட பெருமானார் அவர் விடை பெற்று சென்ற பிறகு தன்னை சந்தித்த அவ்ஸ்கள் மூவரிடம் அஸ் அதுக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று கூறினார்கள். பெருமானாரின் சொல்லை மீற முடியாமல் அதே நேர தலை முறை பகையை மறக்கமுடியாத அவர்கள் எங்கள் சார்பாக நீங்களே அடைக்கலம் கொடுங்கள் என பொறுப்பை பெருமானாரிடம் கொடுத்தார்கள். அந்த அனுமதியை தான் பயன்படுத்தினால் அது சரியான தீர்வாகாது என்பதை தீர்க்க தரிசனமாக அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் மூவரில் சஃது பின் ஹைஸமா ரலி அவர்களின் பெயரிச் சுட்டி நீங்கள் அடைக்கலம் கொடுங்கள் என்றார்கள். அடுத்த கணம் மறுப்பேதும் சொல்லாமல் அவர் எனது அடைக்கலத்தில் இருக்கிறார் என சஃது கூறினார். அதன் பிறகு அவ்ஸ்கள் அனைவரும் அவருக்கு நாங்கள் அடைக்கலம் என்று சொன்னார்கள்.

 அதன் பிற்கு அம்மூவரும் மறைவாக வெளியே சென்ற அஸ்அது ரலி அவர்களை சந்தித்து அரத்தழுவிக் கொண்டார்கள்.

 இந்த உலகில் இஸ்லாம் நிகழ்த்திய மகத்தான சகோதரத்துவ சாதனையின் முதல் அடி அது.  

 عندما نزل النبي ﷺ في قباء على بني عمرو بن عوف (الأوس) ، كان بينهم وبين (الخزرج) عداوة الحروب التي كانت بينهم وآخرها معركة بعاث فكانت الخزرج تخاف ان تدخل الاوس . وكذلك تخاف الأوس أن تدخل الخزرج، وكان اسعد بن زرارة من الخزرج قد قتل رجلا من الأوس يوم بعاث ، ولا يستطيع الدخول الى بني عوف، فعندما نزل النبي الى بني عمرو بن عوف . سأل : أين أسعد بن زرارة ؟

 فقال سعد بن خيثمة: كان يارسول الله قد أصاب منا رجلا يوم بعاث. فلما كانت ليلة الأربعاء جاء اسعد الى النبي ﷺ مُتَقَنّعا بين المغرب والعشاء ، فلما رآه رسول الله قال : يا أبا أمامة ، جئت من منزلك الى هاهنا وبينك وبين القوم ما بينك وبينهم ؟ قال أبو امامة: لا والذي بعثك بالحق ماكنت الأسمع بك في مكان إلا جئتُ ، ثم بات عند رسول الله ﷺ حتى أصبح ، ثم غدا ، فقال رسول الله لسعد بن خيثمة ورفاعة ومبشر ابني عبدالمنذر : أجيروه ، قالوا : أنت يا رسول الله فأجره فجوارنا في جوارك، فقال رسول : يُجيره بعضكم ، فقال : سعد بن خيثمة : هو في جواري ، ثم ذهب سعد بن خيثمة الى أسعد بن زرارة في بيته ، فجاء به مخاصره ، يده في يده ، ظهرا حتى انتهى به الى بني عمرو بن عوف ، ثم قالت الأوس: يارسول الله كلنا له جار ، فكان أسعد بن زرارة بعد يغدو ويروح الى رسول الله صلى الله عله وسلم    

 

இந்த சாதனையை குர் ஆன் மதிப்பிடுகிறது.

 هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ (62وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

 சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்டுவதில் முஹம்மதை போல வெற்றி கண்டவர் எவரும் இல்லை என்று விவேகானந்தர் பாரட்டுவதற்கு மூல விதை இங்குதான் அடித்தளமிடப்பட்டது.

 அந்த சகோதரத்துவ ராஜ்பாட்டையில் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு பட்டணப் பிரவேசம் செய்தார்கள். அன்றைய தினத்தை இறைவன் முஸ்லிம் சமூகத்தின் பெருநாளாக ஆக்கினான். வெள்ளிக்கிழமை ஜும் தொழுகை நடைமுறைக்கு வந்தது. அதில் திருக்குர்ஆன் உரத்து ஒதப்பட்டது.

 மக்களிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் மலரச் செய்த  ஹிஜ்ரத்தின் பெருமையின் பிரம்மாண்ட்த்தை இன்று நாம் எண்னிப்பார்க்கிறோம்.

நம்முடைய நாட்டில் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகங்களுக்கு இடையே நடைபெற்று வருகிற சண்டைகள் உள்ளம் பதறவைக்கின்றன.

அதன் உச்சபட்சமாக போட்டி சமூகத்தின் மூன்று பெண்களை நிர்வாணமாக்கி ஒரு சமூகத்தினர் தெருத்தெருவாக அழைத்துச் சென்று இறுதியில் அவர்களில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்கின்றனர். அதை தடுக்க வந்த அவளது தந்தையையும் சகோதரனையும் பலர் கண் முன்னிலையில் படுகொலை செய்கின்றனர்.

இந்தியாவை மட்டுமல்ல உலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்நிகழ்வு.

நாட்டில் மனிதாபிமானம் இன்னும் வாழ்கிறதா என்று பலரும் குமுறியபடி கேள்வி எழுப்பி வருகின்றனர்

மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது ? .

எதனால் இந்த கொடுமை நடக்கிறது.

இதை தூண்டி விடுபவர்களும் வேடிக்கை பார்ப்பவர்களும் யார் ?

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள மணிப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் அங்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது பீரன் சிங் முதல்வராக உள்ளார்..

மணிப்பூர் பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த்து.

80 விழுக்காடு மலைகள் சூழ்ந்தும் நடுவே 20 விழுக்காடு பள்ளத்தாக்கும் கொண்ட இயற்கை எழிலும், அதை இன்னமும் விட்டுவைத்திருக்கும் மக்களும் கொண்ட வடகிழக்கு மாநிலம்   அதன் இயற்கை வளத்தை பாதுகாத்து வைத்திருப்பதில் பழங்குடி மக்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

அது சீனா, மியான்மர், பங்களாதேசம் ஆகிய அந்நிய நாடுகள் சூழ்ந்திருக்கும் வடகிழக்கு எல்லையாகவும் இருக்கிறது.

பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கான உரிமைகளும் வசதிவாய்ப்புகளும் மிகவும் குறைவு, நாடு சுதந்திரம் அடைந்து விட்ட்தன் பலன் பெரிதும் போய்ச்சேராத பகுதி அது.

ஒன்றிய அரசிலிருந்து செல்கிற எஸ் அதிகாரிகள் ஆங்கிலேயே வைஸ்ராய்களைப் போல அம்மாநிலங்களில் நடந்து கொள்வார்கள். மக்களை துன்புறுத்துவது பெண்களை வேட்டையாடுவது என்பது மிக சகஜமானது. மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் அக்கிரமும் அதிகம்.

அதற்கு எதிர்வினையாக ஐரோம் ஷர்மிளா உள்ளிட்ட பெண்கள் போராட்டத்தில் குதித்ததும், இராணுவம் ஓரளவிற்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் மிகப் பிரபலமான செய்திகள்

மணிப்பூரில் மூன்று இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மியான்மரிலிருந்து ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்து மணிப்பூரின் பள்ளத்தாக்குகளில் குடியேறிய மைத்திகள். மலைப் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் குக்கி மற்றும் நாக இன மக்கள்.

இவர்களில் குக்கி இனத்தவர்தான் மணிப்பூரின் பூர்வீக மக்கள். அதன் மலைப்பகுதியை தங்களது பாரம்பரியத்தோடு பாதுகாத்து வருபவர்கள்.

ஆனால் அதிகாரம் முழுவது சம நிலத்தில் வாழும் மைத்திகளிடம் இருக்கிறது.

60 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் மைத்திகள் தான்  40 சட்டமன்ற உறுப்பினர்கள். ஓரளவு கல்வி, வேலைவாய்ப்பு, வசதிகள், அதிகாரம் என பிரிட்டிஷ் அரசுக்கு முன்பும், பிரிட்டிஷ் அரசிலும், நிலங்கள் மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகம் பெற்றவர்கள்

நாடு சுதந்திரமடைந்த பிறகு பழங்குடி இன மக்களுக்கான உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்ட போது குக்கி இன மக்கள் அவர்களுடைய  சொற்ப நிலங்களை யாரும் வாங்க முடியாத சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

கிருத்துவ மிஷினரிகளின் சேவையால் குக்கிகளி பெரும்பாலும் கிறித்துவர்களாயினர்.

இந்துத்து சக்திகளுக்கு இது போதாதா ?

குக்கிகளுக்கு எதிராக மைத்திகளை தூண்டிவிட்டனர்.

பழங்குடி அந்தஸ்து தங்களுக்கும் வேண்டும் என்று கேட்குமாறு தூண்டினர்.

சென்ற பிப்ரவரி மாதத்தில், ஆளும் பா... அரசு, வனங்களைப் பாதுகாக்க ஒரு கணக்கெடுப்பு செய்கிறோம் என்ற போர்வையில், சோங்க்ஜோன் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த குக்கிகளை இடம் பெயரச் சொல்லி இருக்கிறது அரசே அவர்களின் வீடுகளை இடித்துள்ளது. அது நடக்கும்போதே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் வழி, மைத்தி இனத்தையும் பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என தீர்ப்பு வாங்கி இருக்கிறது.

கொதித்துப் போன குக்கி மாணவர் படையினர், தங்கள் மீதான இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் எதிர்வினையாக அந்த மக்களை வைத்து ஒரு பேரணியை மே3 அன்று சுரச்சந்தர் மாவட்டத்தில் நடத்தி உள்ளார்கள்.

எதுவுமே நடவாதது போல, அங்கு ஒரு உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைக்க வந்த முதல்வர் பைரன் சிங்கை முற்றுகையிட்ட குக்கி மக்கள், கூட்ட அரங்கையே அடித்து உடைத்துள்ளார்கள். அந்தக் கோபத்தில் தான் அந்த மக்கள் மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிட்டது மணிப்பூர் அரசு

மாநிலத்தில் இருந்து, கொஞ்ச காலம் இல்லாமல் இருந்த இந்திய இராணுவமும், அசாம் ரைஃபில் படையும் வரவழைக்கப்பட்ட்து ,

இரண்டு சமூகத்தையும் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக சண்டைய ஒன்றிய மாநில அரசுகள் இரண்டும் வேடிக்கை பார்த்தன.

பிபிசி உள்ளீட்ட ஊடகங்கள் மாநில அரசு மைத்திகளுக்கு சார்பாக நடந்து கொண்ட்தாக கூறுகிறார்கள்.

இரண்டு பக்கமும் வன்முறை பற்றி எரிந்திருக்கிறது.

இணையம், தொலை பேசி போன்ற தொலைத் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு,  ஒரே நாளில் ஏறத்தாழ 75 பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியப் பயணம், புதிய நாடாளுமன்றத் திறப்பு என ஒன்றியப் பிரதமரின் முன்னுரிமைகள் மணிப்பூரில் மடிந்த உயிர்களின் மீது கவனம் வராமல் பார்த்துக் கொண்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு 29.05.23 அன்று, உள்துறை அமைச்சர் வந்தபோது, 40 பேரை உயிர்பலி வாங்கி,144 ஊரடங்கு போட்டு, முதல்வரும் அதிகாரிகளும் பேசி இருக்கின்றனர்.

அப்போதும் வன்முறை குறையவில்லை. ஒரு நாளைக்குப் பத்துப் பேர் வீதம் கொல்லப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர்.

இந்த வன்முறைகளின் ஒரு பகுதியாகத்தான் பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பல் அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மே மாதம் 4ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் 800 முதல் 1000 பேர் அடங்கிய கும்பல் அந்த ஊரிலிருந்த குக்கி இன குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த கும்பலால் அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.  நவீன ரக துப்பாக்கி, ஆயுதங்களை கொண்டு தாக்கி மிரட்டியது. இதனால் 5 பேரும் வனப்பகுதிக்குள் ஓடினர். இவர்கள் 5 பேரையும் நோங்போக் செக்மாய் போலீசார் மீட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் இந்த பெண்களை காவல்துறையினரிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். பிறகு இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

 மூன்று பெண்களும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நடக்க வற்புறுத்தப்பட்டனர். ஒரு இளம் பெண் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் 19 வயது சகோதரர் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் கொல்லப்பட்டார்.என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

 வீடியோவில் 20 வயது மற்றும் 40 வயது நிரம்பிய 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளது பதிவாகி உள்ளது. ஆனால் இன்னொரு பெண்ணும் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 50 ஆகும். இதில் 20 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்பிறகு பொதுமக்களின் உதவியுடன் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 3 பெண்களும் நிவாரண முகாம்களில் உள்ளனர்''

கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்த போதும் இப்போது வெளியாகியிருக்கிற வீடியோவால் நாடு முழுவதும் அது பெரும் பிரச்சனையாகி இருக்கிறதுஇவ்வளவிற்குப் பிறகு இப்போது உச்சநீதிமன்றமும் தானே தலையிடப் போவதாக கூறியிருக்கிறது.

இத்தனை பிரச்ச்னைகளுக்கிடையேயும் வாய் திறவாமல் இருந்த பிரதமர் மோடி நிர்பந்த நிலையில் வாய்திறந்து தனது கவலையை வெளிக்க்காட்டியிருக்கிற அதே நேரத்தில் தேவையில்லாமல் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் பெயர்களை சொல்லி இம்மாநிலத்திலும் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்.

அந்த அவரது வார்த்தைகளே மணிப்பூர் பிரச்சினையை தீர்க்கும் திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை காட்டுகிறது.

இந்தக் கலவரத்தில் தனது மகனை பறிகொடுத்த சாய்கோம் ராக்கெட் கேட்கும் கேள்வி மிக நியாயமானது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறான செயல்களைச் செய்யக்கூடாது. மனித வாழ்க்கையை பொம்மை வாழ்க்கையாகக் கருதக் கூடாது. தற்போது மத்தியிலும் மணிப்பூரிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த இரண்டு அரசுகளும் ஏதாவது செய்ய முடியாதா? ஏன் உங்களால் முடியாது?"

உண்மையில் நடப்பது என்ன வெனில் ?

குக்கி இனத்தவர்கள் கிருத்துவர்கள் . அவர்கள் பழங்குடி இனத்தவர்களுக்கான சலுகைகளுடன் வாழ்கிறார்கள். அவர்களது சலுகைகளை பறிக்க வேண்டும். என்பது ஆர் எஸ் எஸின் வழி நடக்கும் ஒன்றிய அரசின் திட்டம்.

இதற்காக அம்மக்களை துன்புறுத்த மாநிலததிலுள்ள செல்வாகுள்ள மைத்தி இனத்தவர்களை தூண்டி விட்டுள்ளது.

அவர்களால் நிகழ்த்தப்பட்ட நிர்வாணப்படுத்தும் வன்முறை என்பதும் இந்துத்துவ அமைப்புகளின் திட்டமிட்ட அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையே ஆகும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கிற மக்களை ஒடுக்குவதற்காக எப்படி திட்டமிட்ட கொடூர நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டு எங்களை  எதிர்த்தால் என்ன ஆகும் என்று காட்டினார்களோ அது போன்ற ஒரு நடவடிக்கை தான் இதுவும்.

இது அரசிற்கு தெரியாமல் நடந்திருக்கும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. காவல்துறையினரிடமிருந்து தான் இந்த பெண்களை அவர்கள் இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இது போல ஒன்றல்ல ஏராளமாக நடந்திருக்கிறது என்று பத்ரிகைகள் கூறுகின்றன.

இந்த நிகழ்வும் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவுடன் பிரதமரும் முதல்வரும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய கோரம் நிகழ்ந்திருக்கிறது.  இது வரை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மட்டுமே கூறி வந்த மாநில அரசு வீடியோ ஆதாரம் இருக்கிற நிலையில் இப்போதுதான் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறது.

 

இப்போது அரசு வேறு கதை சொல் ஆரம்பித்திருக்கிறது. இது இரு இனங்களுக்குள் நடைபெறும் சண்டையில்லை, அரசுக்கும் தீவிரவாதத்துக்கும் நடைபெறும் சண்டை என்கிறது.  இன்னும் எத்தனை பேரை அரசு பலி கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. தங்களது பழங்குடி இன உரிமைக்காக போராடும் குக்கிகள் கிருத்துவர்களாக இருப்பதால் அவர்களை எப்போத் தீவிரவாதிகளாக அறிவிக்கப்போகிறார்களோ தெரியவில்லை.

இந்துத்துவா தனது தீய கரங்களால் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரை இப்போது தீ பற்ற வைத்திருக்கிறது.

இது குக்கி மக்களை அகதிகளாகவும் அதிகாரமற்றவர்களாகவும்  மாற்றிவிடக் கூடும்.

இந்துத்துவம் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்காது என்பதற்கு இது மற்றொரு சான்றாகியிருக்கிறது. என்பதை விட மனிதாபிமானத்தை சீரழிப்பதில் இந்துத்துவா வின் பங்கு எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் மிக அச்சம் தரக் கூடியது,

அல்லாஹ் பாதுகாப்பானாக!!

தீய சக்திகள் ஒரு போதும் நிலையான வெற்றியை பெற முடியாது,

மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் தான் நிலையான வெற்றி பெறுவார்கள் என்பத்ற்கு ஹிஜ்ரீ ஒரு பெரும் பாடம்

இந்திய நாட்டு அரசியல்வாதிகளும் மக்களும் இதை புரிந்து கொள்ளவும்  

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி விரைவாக திரும்பி மக்கள் பேதம்ற்று வாழவும்

எல்லாம் வல்ல இறைவன் தவ்பீக் செய்வானாக! ஆமின்

அனைவருக்கும் இனிய ஹிஜ்ரீ 1445 ம்  ஆண்டு நல்வாழ்த்துக்கள்.

 

 

 

.

 

 

 

 

 

No comments:

Post a Comment