வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 25, 2024

வாசமில்லா மலர்களா நாம்?

 قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا}

ரமலான் மாதம் நாம் குர்ஆனை ஓதுவதற்கும் கேட்பதற்குமான மாதமாக இருந்தது.

இந்த ஷவ்வால் மாதம் திருக்குர் ஆனை ஓதக் கற்பிப்பதற்கு தொடங்கும் மாதமாகும்.

உலகம் முழுவதிலும் ரமலானிய ஓய்விற்கு பிறகு மதரஸாக்கள் ஆரம்பிக்கிற காலம் இது.

திருக்குர்ஆனை நாம் ஓதிக் கொள்வதற்கும் நமது பிள்ளைகளுக்கு ஓதக் கற்றுக் கொடுப்பதற்கும் நாம் முக்கிய கவனம் கொடுக்க வேண்டிய நேரம் இது.

நாம் குர்ஆனை ஓத தெரியாதவர்களாக இருந்து விடக் கூடாது.

வாசமில்லா மலர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நபிமொழியில் இப்படி கூறினார்கள்.

 مثلُ المؤمنِ الَّذي يقرأُ القرآنَ كالأُتْرُجَّةِ طعمُها طيِّبٌ وريحُها طيِّبٌ والَّذي لا يقرأُ كالتَّمرةِ طعمُها طيِّبٌ ولا ريحَ لها

குர் ஆன் ஓத தெரிந்த முஸ்லிம் எலுமிச்சையை போல சுவையும் மணமும் உள்ளவர். ஓத தெரியாதவர் சுவை மட்டுமே இருக்கிற வாசமில்லாத பேரீத்தம் பழத்தை போன்றவர்..

இந்த உதாரணம் அரபு நாட்டு சூழலுக்கு ஏற்ப சொல்லப் பட்டுள்ளது. நம்முடைய நாட்டின் சூழலுக்கு ஏற்ப சொல்வதானால்

குர் ஆன் ஓத தெரியாத முஸ்லிம் வாசமில்லா மலரை போன்றவர்.

நம்மிடம் இவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருந்தும் நாம் வாசமில்லா மலர்களாக இருக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்.

கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும் மிக அற்புதமாக நம்மால் ஓதி விட முடியும்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை தழுவிய சகோதரி பாத்திமா சபரிமாலா அழகாக குர் ஆன் ஓதுவதை இன்ஸ்டாகிராம் வீடியோவில் பார்க்கிறோம்.

இவ்வளவு தான் யார் முயற்சி செய்தாலும் அருமையாக மிக குறைந்த காலத்தில் குர் ஆனை கற்றுக் கொண்டு சிறப்பாக ஓத முடியும்.

திருக்குர்ஆன் நமக்கு ஓத தெரியும் என்றால் நமக்கு லோன்லீனஸ் என்ற தனிமையின் வெறுமையே இருக்காது.

அரபு நாடுகளில் வாகனங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மிக சாதாரணமாக குர்ஆனை மனனமாக ஓதிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம்.

இமாம் ஷாபி ரஹி அவர்கள் மினாவில் ஒரு முதியவரை சந்தித்தார்கள். அந்த முதியவர் ஷாபி அவர்களை விருந்துக்கு அழைத்தார். அதை உடனே ஏற்றுக் கொண்டார்கள். முதியவர் தன்னிடமிருந்த காய்ந்த ரொட்டியை இரண்டாக பிய்த்து ஒன்றை இமாம் ஷாபியிடம் கொடுத்த போது நீங்கள் குறைஷியரா என்று கேட்டார். ஆம் என்று பதிலளித்த இமாம் ஷாபி அதை எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் சொன்னார்.

குறைஷிகள் எவ்வளவு எளிதாக மற்றவர்களுக்கு விருந்தளிக்கிறார்களோ அதே எளிதில் மற்றவர்களின் விருந்தை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள்

இமாம் ஷாபி “ நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். மதீனாவிலிருந்து வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் அதை கேட்டதும் மகிழ்ச்சி பீறிட அப்படியானால் நீங்கள் இமாம் மாலிக்கை பார்த்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். பார்த்திருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் இமாம் மாலிக்கை பற்றி ஆர்வமாக மேலும் பல செய்திகளை கேட்டுக் கொண்டார்.

அப்போது அந்த முதியவர் நாங்கள் 14 பேர் இங்கு பயணம் வந்தோம். எங்களில் ஒருவர் வரும் வழியில் இறந்து விட்டார். அவருடைய ஒட்டகம் காலியாக இருக்கிறது.   நீங்கள் விரும்பினால் எங்களுடன் வரலாம் என்று அழைத்தார். இமாம் ஷாபி ரஹ் அவர்கள் தனது தாயாரிடம் சம்மதம் பெற்று இமாம் மாலிக்கிடம் கல்வி கற்க மதினாவிற்கு  சென்றார்கள்.

அந்த பயணம் 14 நாட்கள் பிடித்தது. அந்த 14 நாட்களிலும் இமாம் ஷாபி 14 முறை குர் ஆன் ஓதினார்கள்.

பயணங்களில் குர் ஆனும் ஓதும் வழக்கம் மிக சாதாரணமாக நமது முன்னோர்களிடம் இருந்த்து. அது அவர்களுடைய நீண்ட பயணங்களின் வெருட்சியை மாற்றி சுகமானதாக ஆக்கியது.

வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்ட அபுல் காஸிம் பஜ்லுல் ஹக் அவர்களுடைய வாழ்வில் அவருக்கு அது பெரும் பாதுகாப்பை தந்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அரசியலில் குறிப்பாக இன்றைய வங்க தேச பிராந்தியத்தின் அரசியலில் மிகப் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர் பஜ்லுல் ஹக். வங்க இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் செயலாளராக இருந்தார்.

அவர் ஒரு முறை ரயிலில் பயணம் புறப்பட்டார். ஏராளமானோர் அவரை வழியனுப்ப வந்திருந்தனர்.  அந்த ரயிலில் குண்டு வெடித்தது. பஜ்லுல் ஹக் கொல்லப்பட்டதாக அனைவரும் பதறினர். இந்த பீதிக்கு நடுவே அன்று மாலை நகரின் பிரதான மைதானத்தில் பஜ்லுல் ஹக் பேசுவார் என்ற செய்தி பரவியது. ஏராளமான மக்கள் கூடினர். பஜ்லுல் ஹக் அக்கூட்டத்தில் தோன்றினார்.   பஜ்லுல் ஹக் கூறினார். என்னைக் கொல்ல யாரோ சதி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த குர் ஆன் என்னைக் காப்பாற்றியது. வழக்கமாக நான் பயணங்களில் ஓதுவதற்காக ஒரு சிறு குர் ஆனை கையில் வைத்திருப்பேன். அன்று பயணம் புறப்பட்ட பிறகு தான் அந்த குர்ஆனை எடுத்து வரவில்லை என்பது தெரிந்தது. அதனால் நான் அடுத்த ஸ்டேஷ்னிலேயே இறங்கி விட்டேன். அதனால் இந்த பெரிய விபத்திலிருந்து நான் காப்பாற்றப் பட்டேன் . இந்த குர் ஆன் என்னைக் காப்பாற்றியது என்று கூறினார்.

உலகத்தில் வாழும் மக்கள் இந்துக்கள் பெளத்தர்கள், யூதர்கள் கிருத்துவர்கள் என பலரிடமும் வேதங்கள் இருக்கின்றன.

அந்த வேதங்கள் குர் ஆன் அளவுக்கு ஓதப்படுகின்றனவா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்தால் போதுமானது.

குர் ஆன் எந்த அளவு சிறப்பானது என்பது புரிய வரும்.

இதற்கு மேல் குர் ஆனிலிருந்து கிடைக்கிற மற்ற நன்மைகள் ஏராளமாக இருக்கின்றன.

குர்ஆனை ஓதுவது, ஓதிக் கொடுப்பது. அதன் பொருளை படிப்பது படித்துக் கொடுப்பது அதில் சிந்திப்பது, ஆய்வுகள் செய்வது, ஏன் திருக்குர் ஆனை பார்த்துக் கொண்டிருப்பது கூட ஒரு வணக்கமாகும்.

ஒரு முஸ்லிமாக அல்லாஹ் நமக்கு செய்த பேருபகாரம் திருக்குர் ஆனை வழங்கியது.

இந்த ஒரு அருள் நமக்கு போதும். உலகின் வேறு எந்த நூலும் நமக்கு தேவையில்லை என்று முந்தைய முஸ்லிம் சமுதாயம் நம்பியது.

மற்ற செய்திகளை அறிந்து கொள்ளக் கூடாது என்பதல்ல இதன் நோக்கம். நம்மிடமிருக்கிற பொக்கிஷத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

முஸ்லிம்கள் பாரசீகத்தை வென்ற போது, அப்ப்டையின் தளபதி உமர் ரலி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

كُتب إلى عمر -رضي الله عنه- عند فتح بلاد فارس : "إنا قد وجدنا من كتب القوم حمل وقرين أو ما أشبه ذلك، وفيها من الحكمة وفيها من العبر، فما رأيك فيه؟

இந்த மக்களிடம் சில புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் அறிவு ஞானக்கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றை என்ன செய்வது என்று அந்த தளபதி கேட்டிருந்தார்.

 உமர் ரலி பதில் எழுதினார்கள்

فكتب -رضي الله عنه-: أن أحرقها جميعًا، فإن الله -تبارك وتعالى- قد أغنانا بالقرآن" لا نحتاج إلى حكمة، ولا نحتاج إلى منطق، ولا نحتاج إلى فلسفة، ولا إلى دراسات اجتماعية، ولا إلى دراسات نفسية، ولا إلى ما يقال وما يسطر، لا نحتاج إلا إلى أن نؤمن بكتاب ربنا تبارك وتعالى

அவை அனைத்தையும் எரித்து விடுங்கள், அல்லாஹ்வின் வேதம் நம்மிடம் இருக்க வேறு எந்த வாக்கும் விளக்கமும் நமக்கு தேவையில்லை என்றார்கள்

 இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணம் அவர்கள் சொந்தக் சிந்தனை அல்ல;

 பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் பெற்ற பாடமாகும்.

 لما أن رآه وفي يده صحيفة من التوراة، قال: «يا عمر، والله لو كان موسى حيًا ما وسعه إلا اتباعي

ஒரு முறை தவராத்தின் சில ஏடுகளை வைத்து உமர் ரலி அவர்கள் படித்த்துக் கொண்டிருப்பதை பார்த்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூஸா இப்போது உயிருடன் இருந்தால் என்னைப் பின் தொடர்ந்து எனக்கருளப்பட்ட வேத்த்தை படிப்பார் என்று  கூறினார்கள்.

 இது திருக்குர்ஆனில் முஸ்லிம் சமுதாயம் எத்தகைய அக்கறையை செலுத்த வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டாக அமைந்த்து.

 நாம் இந்த உலகில் மற்ற கல்விகள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இஸ்லமை பொருத்தவரை எல்லாவற்றையும் விட நாம் படித்தே ஆக வேண்டிய கல்வி திருக்குர் ஆன் ஆகும்.

 இதை முஸ்லிம்களான நாம் மறந்து விடக் கூடாது.

 இன்று முஸ்லிம்கள் என்ற பெயரில் அதிகாரத்தையும் சலுகைகளையும் மரியாதையையும் கேட்பதில் நாம் முன்னணியில் நிற்கிறோம்.

 சமூக ஊடகங்களை திறந்தால். சமுதாயத்திற்காக என்ற குரல்கள் கணக்கின்றி ஒலிக்கின்றன.

 ஆனால் ஒன்றை உறுதியாக நினைவூட்டுகிறோம். சகோதரர்களே!

 நமது மார்க்கம் சில அடிப்படைகளை முஸ்லிம்களின் இயல்பாக சொல்லிக் காட்டுகிறது.

ஒன்று தொழுகை, மற்றது குர் ஆன் ஓதுவது,

 இந்த இரண்டும் இல்லாத ஒருவர் இல்லாத ஒருவர் தன்னை சமூகம் சார்ந்தவராக சித்தரிப்பது உண்மையில் ஒரு வேடிக்கையானதாகும்.

 நம்முடைய தமிழ் நாட்டில் ஏகத்துவம் என்ற பெயரில் பல போலியான அமைப்புக்கள் வந்தன. அவற்றில் பலர் மிக தீவிரமான ஈடுபாடு கொண்டுள்ளதாக கருதிக் கொள்கின்றனர். உண்மையில் அவர்களுடைய ஈடுபாடு என்பது வெத்து வாதங்களைச் செய்வதில் மட்டுமே வெளிப்படுகிறது,

 ஹதீஸ் சஹீஹா ? எந்த கிதாபு ? எந்த எண் என்று கேட்கிற பலரும் கச்சையை கட்டிக் கொண்டு சமூக ஊடகங்களில் கேள்வி கேட்க வந்து விடுகிறார்கள்.

 மதுரையை சேர்ந்த நம்முடைய சகோதர்ர் நவ்ஸாத் அலி பாக்கவி அவ்வாறு கேட்போரிடம் “ முதலில் உனக்கு குர் ஆன் ஓத தெரியுமா என்று ஒரு கேள்வி கேட்கிறார். எவனும் பதில் சொல்வதில்லை.

 அப்படியானால் மார்க்கம் இவர்களிடம் ஒரு ஈகோவாகவும் விவாதப் பொருளாகவும் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை.

 எங்களது அன்பு இளவல்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மார்க்கத்தின் மீது கொஞ்சம் மதிப்பு இருக்கிறது என்றால். இந்த சமூகத்தை பற்றி நீங்கள் கொஞ்சமேனும் அக்கறை செலுத்துகிறீர்கள் என்றால்.

 நீங்கள் செய்ய வேண்டிய முதன்மையான நல்ல காரியம் குர் ஆனை ஓதுவதும் தொழுவதும் ஆகும்.

 அடிப்படையில் இதை நிறைவு செய்து விட்டு நீங்கள் மற்ற விசயங்களை பற்றி சிந்தியுங்கள். அதுவே அர்த்தமுள்ளதாகும்.

 இந்திய அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடைய்யை நினைவகம் இராமேஸ்வரம் பேக்கரும்பில் இருக்கிறது. அங்கு சென்று பாருங்கள். அவர் தன்னுடைய கடைசி பயணமான சிம்லாவிற்கு அவர் எடுத்துச் சென்ற பொருள்களை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஓதுகிற குர்ஆனும் தொழுகிற முஸல்லாவும் இருக்கிறது.

 இன்று அப்துல் கலாமை கூட ஒரு சரியான முஸ்லிமா என்று விமர்சிப்பவர்கள் உண்டு ?

 உங்களுடன் உங்களது பயணத்தில் குர் ஆனும் முஸல்லாவும் இருந்ததா என்று யோசித்து விட்டு பிறகு பேசுங்கள் !

 அருமையானவர்களே குர் ஆனை ஓத தெரிவது நமது இஸ்லாமிய வாழ்விற்கு மிக அடிப்படையான அளவுகோல்

 இது நமக்கு மனிதர்களான நமக்கு மட்டுமே கிடைத்த பெருமை

 குர் ஆன்  சப்தமாக ஓதப்படுகிற இடத்தில் மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள் என்ற கருத்தில் பல  ஹதீஸ்கள்  உண்டு.

  ما اجتَمَعَ قَومٌ في بَيتٍ مِن بُيوتِ اللهِ تَعالى، يَتلُونَ كِتابَ اللهِ، ويَتَدارَسونَه بَينَهم؛ إلَّا نَزَلتْ عليهمُ السَّكينةُ، وغَشيَتْهمُ الرَّحمةُ، وحَفَّتْهمُ المَلائِكةُ، وذَكَرَهمُ اللهُ فيمَن عِندَه.

 மலக்குகள் ஏன் சூழ்ந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள்.

 இந்த வேதத்தை ஓதும் பாக்கியம் மனிதர்களான நமக்கு மட்டுமே உண்டு. மலக்குகளுக்கு கூட கிடையாது. மலக்குகளில் ஜிப்ரயீல் அலை அவர்கள் மட்டுமே திருக்குர் ஆனை ஓதத் தெரிந்தவர்.

மற்ற மலக்குகளால திருக்குர் ஆனை கேட்க மட்டுமே முடியும். அதனாலேயே திருக்குர் ஆனை யாரேனும் சப்தமாக ஓதினால் அதை கேட்பதற்கு அவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.

முதலில் ஒருவர் வருகிறார். அடுத்தடுத்து பலர் வந்து சேர்ந்து கொள்கிறார்கள். அங்கு மலக்குகளின் ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து விடுகிறது என்பது இதன் கருத்து என்று அவர்கள் விளக்கம் தருகிறார்கள் .

திருக்குர் ஆனை அழகு பட ஓதுபவரின் உதட்டில் மலக்குகள் முத்தமிடுகிறார்கள்

திருக்குர் ஆனை மிக அழகு பட ஓதியவர்களில் ஒருவர் ஆஸிம் (ரஹ்) ரிவாயத்து ஹப்ஸின் அன் ஆஸிமின் என்று இந்த ஓதலைப் பற்றிய ஒரு பாரம்பரியம் இருக்கிறது.

அந்த ஆஸிம் ஓதும் போது வாய் மணக்கும்.

ஒருவர் அவரை சந்தித்து நீங்கள் ஏலக்காய் சாப்பிட்டு விட்டு ஓதுகிறீர்களா என்று கேட்டார். அவர் பதிலளிக்கவில்லை. நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு அவர் பதிலளித்தார். ஒருமுறை நான் கனவில் ஓதிக் கொண்டிருந்தேன். என் முன் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள் எனது உதட்டில் முத்தமிட்டார்கள். அன்றிலிருந்து இந்த நறுமனம் வருகிறது என்றார்.

ஆஸிம் ரஹி அவர்களது வாயிலிருந்து நறுமணம் வந்த்தை மக்கள் அறிந்து கொண்டது அவருக்கு மட்டுமானதாக இருக்கலாம்.

ஆனால்  நாம் திருக்குர் ஆனை ஓதுகிற போது நமது வாய் அதிலிருக்கும் மணத்தை நுகர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குகள் இருக்கிறார்கள்.  

நாம் வாசமுள்ள மலகர்களாக தயாராவோம். நமது  பிள்ளைகளை வாசமுள்ள மலர்களாக்கவும் அக்கறை செலுத்துவோம்

அல்லாஹ் தவ்பீக செய்வானா!

 

No comments:

Post a Comment