வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 19, 2026

நாம் சிக்கந்தர் வலிகளை பின் தொடர்வோம்.

 மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ளது.

நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்ப்போம். எந்த வழக்கிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தீர்ப்பே வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நியதி மத்திய அரசின் சார்பில் நீதிமன்றங்களுக்கு உறுதியாக வழங்கப்பட்டிருப்பது போல தோன்றுகிற இந்தியாவின் இப்போதைய சூழலில் ஒருவேளை தீர்ப்பு வேறு விதமாகவும் வரலாம்.

அதற்கு முன்னதாக இந்தியாவில் முஸ்லிம் ஆன்மீக பெரியோர்கள் இந்தியாவில் எத்தகைய மகத்தான மக்கள் பணிகளை ஆற்றியுள்ளார்கள் என்பதையும் அதில் சிக்கந்தர் வலி அவர்களின் பங்கு என்ன என்பதையும் பார்க்கலாம்.

சிக்கந்தர் பாவா 8 நூறு ஆண்டுகாலத்திற்கு முன் மக்கள் பணியாற்றிய ஒரு அரும் ஆட்சியாளர் ஆவார்.

அவர் ஜித்தாவின் ஆளுநராக இருந்தவர்.  ஏர்வாடி செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் மதீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த போது அவருடன் சேர்ந்து இவரும் வந்தார்.

ஆளுநர் பதவியை விட ஆன்மீக பணியே சிறந்தது என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் ஜித்தாவின் ஆளுநர் பதவியை உதறி விட்டு வந்தவரை அல்லாஹ் மதுரையின் ஆளுநராக ஆக்கினான்.

சிக்கந்தர் வலியின் வரலாற்றை வசீகரமானதாக ஆக்கிய நிகழ்வு அது.

பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் அவரது சட்டப்படியான மனைவி மூலம் பிறந்த சுந்தரபாண்டியன் இன்னொறுவர் அவரது ஆசை நாயகிக்கு பிறந்த வீரபாண்டியன். குலசேகர பாண்டியனுக்குப் பிறகு அரியனை யாருக்குரியது என்பதில் சகோதரர்களுக்கிடையே சண்டை நடந்தது.

ஏர்வாடி செய்யது இபுறாஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் மதுரைக்கு வந்த சந்தர்ப்பத்தில் சுந்தரபாண்டியன் மன்னர்களுக்கிடையேயான தகறாற்றை தீர்த்து வைக்கும் படி சமரசம் செய்து வைக்க வேண்டினார்.   இது தங்களுடைய வேலை அல்ல என்றாலும் மக்களின் நன்மைக்காக இதில் தலையிடுவதாக இபுறாஹீம் ஷஹீது வலி கூறினார்.  

அதில் ஒரு பகுதியாக  தனது  பிரதிநிதியாக பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியனிடம் பேச சிக்கந்தர் பாவாவை அனுப்பி வைத்தார்.  விக்ரம பாண்டியன் அவரிடம்  கடுமையாக தகறாறு செய்து சண்டைக்கு அழைத்தார். சண்டை நடந்தது. விக்ரம பாண்டியன் கொல்லப் பட்டான். அப்போது இபுறாஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் பவுத்திர மாணிக்கம் (ஏர்வாடி) என்ற இடத்திலிருந்து மதுரை நெல்லை ஆகிய பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் சிக்கந்தர் பாவா அவர்களை மதுரையின் ஆளுநராக நியமித்தார்.  இது 1195 முதல் 1207 வரை உண்டான கால கட்டமாகும்.

ஆளுநர் என்றாலும் அரசர்கள் வாழ்ந்த நிலம் என்பதால் சிக்கந்தர் வலி அரசரகளைப் போல நடந்து கொள்ள வில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு மனிதாபிமான ரீதியி தீர்வு காண்பவராக இருந்தார்.

சிக்கந்தரி வலியை பற்றிய இரண்டு இயல்புகள் சொல்லப்படுகின்றன. ஒன்று அவர் ஆன்மீக வாதியாக இருந்தார். இரண்டாவது மனிதாபிமானியாக இருந்தார்.

அதிகாரம் செய்வது அவரது இலக்காக இருக்கும் எனில் அவர் சர்வ அதிகாரம் படைத்த ஜித்தாவிலேயே இருந்திருக்க முடியும். சண்டைகளும் சச்சரவுகளும் நிறைய நிலத்திற்கு வந்திருக்க மாட்டார்.  

அவர் மிகச் சிறந்த ஆன்மீக வாதியாக இருந்ததால் என்னேரமும் இறை தியானத்தில் இருப்பவராகவும் இருந்தார்.

அவருடைய இறைய தியான ஈடுபாடு மலை மீது ஒரு பள்ளிவாசலை கட்ட அவரை தூண்டியது. அது முடிவுறும் சமயத்தில் இருந்த போது திடீரென தாக்கிய பாண்டிய மன்னர் திரு பாண்டியனின் படையினரால் அவர்  கொலை செய்யப் பட்டார். அங்கேயே அவர் நல்லடக்கம் செய்யப் பட்டார்.

அவருடைய அடக்கத்தலம் தான் சிக்கந்தர் மலையில் இருக்கிறது. அவருடன் அவரது அமைச்சராக இருந்த ஷரீப் என்பவரும் அங்கு அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.

அவர் ஒரு சிறந்த மனிதாபி மானி என்பதற்கு மதுரை மக்களின் வழக்கத்தில் உள்ள ஒரு மரபுக் கதை போதும்.

சிக்கந்தர் பாவாவை கொலை செய்த பாண்டிய மன்னனுக்கு பிற்காலத்தில் கண் பார்வை பறி போனது. அவன் சிக்கந்தர் பாவாவின் கல்லறைக்கு அருகே வந்து அழுதான் . அதன் பிறகு அவனுக்கு பார்வை திரும்பியது

பிற்காலத்தில் மதுரையை ஆண்ட கான் சாஹிப் என்ற மாவீரன் பள்ளிவாசல் பணியை முழுமைப்படுத்தியதோடு சிக்கந்தர் பாவாவின் அடக்கவிடத்தின் மீது ஒரு கட்டிடடத்தையும் எழுப்பினார்.  

இதே கான் சாஹிபுக்கு மீனாட்சி அம்மன் ஆலயத்தையும் சிக்கந்தர் பாவா மலையையும் ஒரு சேர பராமரித்தவர் என்ற சிறப்பு இருக்கிறது.

சிக்கந்தர் பாவாவை பற்றிய கதைகளை பேசுவதும் அந்த மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும் முஸ்லிம்களை விட இந்து பெருமக்களே அதிகம்.

இத்தகைய பன்னூறு ஆண்டு கால சமூக நல்லிணக்க வரலாற்றையும் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும்  கொண்ட தர்கா வளாகத்தை தான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

திருப்பரங்குற்றத்திலிருக்கிற ஒரு மலையில் காசி விசுவநாதர் ஆலயமும் இன்னொரு மலையில் சிக்கந்தர் பாவா தர்காவும் இருக்கிறது.

காசி விசுவநாதர் ஆலயத்தின் வரலாறு என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை.

ஆனால் சிக்கந்தர் பாவா மலையின் வரலாறு தெளிவானது.

அதனால் நூறாண்டுகளாக இந்த மலையை பற்றிய சர்ச்சையை இந்துதுத்துவ சக்திகள் எழுப்பும் போதெல்லாம் அதை தெளிவாக ஆய்வு செய்த நீதிமன்றங்கள் தர்கா தரப்புக்கு சார்பாகவே தீர்ப்பளித்துள்ளனர்.

இபோதைய போதாத காலகட்டம் நீதிபதிகள் மிக அப்பட்டமான பழைய தீர்ப்புக்களை கண்டு கொள்ளாமலும் நீதியை சரியாக விசாரிக்காமலும் தங்களது மதவாத  சித்தாந்தப்படி தீர்ப்பளித்துவருகின்றன.

நூறாண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் நவம்பர் 24 ம் தேதி உச்சிப் பிள்ளையார் கோயில் இருக்கிற இடத்தில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ராமரின் பெயரைச் சொல்லி ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி வட இந்தியாவில் லாபம் அடைந்தது போல தமிழகத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சனையை சொல்லி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிற சக்திகள் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தின் கருத்தை மீறி சிக்கந்த பாவா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள எல்லை தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இதுவிவகாரத்தில் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றம் இந்த விவாகாரத்தை பெரிது படுத்தி மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது தான் பெரும் சோகம்.

சிக்கந்தர் மலையில்  உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற இந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிக்கந்தர் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அவர் சிக்கந்தர் பாவா தர்கா கமிட்டியினரின் எந்த கருத்தையும் பொருட்படுத்தாமல் – அலட்சியம் செய்து நூற்றாண்டு பழக்கத்திற்கு எதிராக – கோயில் நிர்வாகத்தின் கருத்துக்கு எதிராகவே – சிக்கந்தர் பாவா தர்கா வளாகத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இன்றுவரை அந்த தீர்ப்பு செயல்படுத்தப்பட வில்லை.  

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

 செவ்வாய்க்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்டார்.

"நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா வருகிறது. அப்போது மதுஐ உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்காவிட்டால் சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகும்" என ஜெய்தீப் குப்தா தெரிவித்துள்ளார்.

தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றுவதில்லை. உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வருவதை கோவில் அர்ச்சகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சிக்கந்தர் பாவா மலைக்கு மேல் ''தீபம் ஏற்றும் பழக்கம் இருந்த்து என்று இதுவரை மனுதாரர்கள் (இந்துத்துவ சக்திகள்) நிரூபிக்கவில்லை'' எனவும் அவர் வாதிட்டார்.

 மதுரை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழக்கின் தன்மையை ஆராயாமல்  ''தமிழ்நாட்டில் மலை உச்சியில் பொதுவாக தீபம் ஏற்றப்படுகிறது எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திருப்பரங்குன்றம் வழக்கத்துக்கான ஆதாரமாக பார்க்க முடியாது. உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதாகக் கூறுவதே வழக்கத்துக்கான ஆதாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இதே வாத்த்தை தான் கோயில் நிர்வாகமும் வைத்துள்ளது. ''100 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்?'' என அது கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்'' எனவும் அது வாதிட்டுள்ளது.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ''சர்ச்சைக்குரிய தூண் வேறொரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதே தவிர, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தீபத் தூண் அல்ல'' என வாதிட்ட அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலத்தை அளவீடு செய்வதற்கு கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்திலும் இதே நில அளவைக் கல்லைப் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

 

அவர் தெரிவித்த இன்னொரு கருத்து மிக முக்கியமானது.

மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் இதுபோன்ற அனைத்துத் தூண்களுக்கும் மதச்சாயம் பூசப்பட்டுவிடும்.  என்பதே மாநில அரசின் அச்சமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

மதுரை உயர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளது என்பதை சூசகமாக குறிப்பிட்ட கோபால் சங்கரநாராயணன் இதை தடுக்காவிட்டால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நில அளவைத் தூண்கள் மத அடையாளங்களாக மாறத் தொடங்கிவிடும்" என்று கூறியுள்ளார்.

 

சிக்கந்த பாவா மலை மீது தீபம் ஏற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் குறைந்தபட்சம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

 

அவர் முன் வைத்த மற்றொரு வாதமும் முக்கியமானது. வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபின் புனிதத்தன்மையை பாதிக்கும். இதுபோன்ற மத வழக்கம் தொடர்புடைய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'' என்றும் அவர் கூறினார்.

 சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அகமதி வாதிடும் போது “பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் வழங்காமலேயே சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பு மிக தெளிவாக கருத்துக்களை கூறியுள்ளது.

 ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை எனக் கோவில் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்பதையே அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

 

பிரிட்டிஷ் காலத்திலிருந்து நடைபெற்ற பல வழக்குகளிலும் தெளிவான தீர்ப்புகள் தர்கா தரப்புக்கு சாதகமாக இருக்கின்றன என்பதை அது உறுதியாக எடுத்து வைத்துள்ளது. தற்போதைய உயர் நீதிமன்ற தீர்ப்பு மட்டுமே மாறி வந்துள்ளது.

 

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தர்கா பகுதியை ஆய்வு செய்ய வந்த போது தர்கா கமிட்டியினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவர் தர்கா நிர்வாகத்தின் கருத்தை கேட்டிருந்தார். இப்படி தீர்ப்பு கூறியிருக்க மாட்டார் என்றும் தர்கா தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

மிக விரிவான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்த போதும் அந்த தூண் யாருக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

இந்த கேள்வி இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தலையிடும் என்ற யூகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த யூகம் இந்த விவகாரத்தில் தர்கா தரப்பிற்கு எவ்வளவு சாதகமான இருக்கும் என்பதில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 எனினும் முஸ்லிம்கள் இது விவகாரத்தில் பொறுமை காக்கவே செய்ய வேண்டும்.

 ஆயிமாண்டு கால பள்ளிவாசல்களை அநாசயமாக தகர்ந்தெறிந்து விட்டு போவது தான் இப்போது நம் நாடு சென்று கொண்டிருக்கிர பாதை.

 தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் செய்தி வாசிப்பாளர் இதை தான் மிக எதார்த்தமாக கேட்டிருக்கிறார்.

 நீதி மன்றங்கள் பள்ளிவாசல்களை இடிக்கவே சாதாரணமாக உத்தரவிடுகிற போது இந்த தீபம் ஏற்றுகிற வேலைக்கு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகின்றன என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.

 அதிகார ஆணவத்தின் உச்சம் எந்த அளவில் சென்றுள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

 

தீர்ப்பு எப்படி வந்தாலும் முஸ்லிம்கள் பெருமை காக்க வேண்டும். சட்டப்படியான தங்களது நீதிமன்ற போராட்டங்களை தொடர வேண்டும்.

 

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மம் வெல்லும்.

 நாம் சிக்கந்தர் வலியுல்லாஹ்வின் பெருமையை நினைவு கூர்வோம்.

 

அதிகார போதை ஆட்டம் போட வைக்கலாம். ஆனால் ஆன்மீகத்தின் பாதையிடம் அது இறுதியில் சரணடைந்தே தீரும்.

 

திருக்குர் ஆன் வரலாற்று ஆதாரங்களோடு கூறுகிறது.

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ 

இறைந்த்தூதர் ஈஸா அலை அவர்களுக்கு எதிராக திட்டமிட்டவர்கள் இறுதியில் தோற்றே போனார்கள்.

وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

அது போல முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய மக்காவின் காபிர்கள் தீட்டிய திட்டமும் தவிடுபொடியாகிப் போனது.

 

நாம் சிக்கந்தர் வலிகளின் வழியில் நடைபோடுவோம். வரலாறு நமக்கான இடத்தை நிச்சயமாக உச்சத்தில் வைக்கும்.

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment