வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 13, 2014

பாகப்பிரிவினை! சில பிரச்சினைகளும் தீர்வுகளும்



آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِنْ اللَّهِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

சமீப சில நாட்களாக சொத்துரிமை தொடர்பில் சில குடும்ப சர்ச்சைகள்  கேள்விகளாக வருகின்றன.

இது ஒரு பொதுப்பிரச்சினையாக இருப்பதால்இது தொடர்பான மார்க்கத்தின் சில வழிகாட்டுதல்களை  இன்றைய ஜும்ஆவில் பார்க்க இருக்கிறோம்.

சொத்துரிமை தொடர்பாக பெரும்பாலும் கேட்கப்படுகிற கேள்வி எங்களுக்கு இரண்டு பசங்க இரண்டு பொண்ணுங்க இருக்காங்க! பசங்க எங்கள கண்டுக்கிறதே இல்லை. பொண்ணுங்க தான் பார்த்துக்கறாங்க அதனால் பொன்னுங்களுக்கு பசங்களுக்கு சமமா சொத்துக் கொடுக்கலாமா?

இதே கேள்வி வேறு ஒரு வடிவத்திலும் வருவதுண்டு எங்களுக்கு மூணு பசங்க. முதல் பையன் தான் எங்கள கவனிச்சுக்கிறான். அதனால அவருக்கு மட்டும் கொஞ்சம் அதிகமா சொத்து தரலாமா?

இந்தக் கேள்விகளின் பொதுவான அம்சம். வாரிசுதர்ர்ரகளில் ஒரு சிலருக்க்கு இஸ்லாம் குறிப்பிட்டிருப்பதை விட அதிகமாக சொத்தை எழுதி வைக்கலாமா என்பது தான்.

இந்தக் கேள்விக்கான பதிலை பார்ப்பத்ற்கு முன் பாகப்பிரிவினை தொடர்பாக இஸ்லாமின் சில  முக்கிய வழிகாட்டுதல்களை நாம் அறிந்து கொள்வது நல்லது. அறிந்து கொள்வது மட்டுமல்ல நமது வாழ்க்கையை மார்க்கம் கூறும் நடை முறைப் படி அமைத்துக் கொள்வோம் உறுதியேற்பதும் அவசியமாகும்.

இவ்வாறு  உறுதி கொள்வது நமக்கு மறு உலகில் வெற்றியை தரும் என்பது மட்டுமல்ல இந்த உலகிலும் அதுவே நல்லதாகவும் இருக்கும்.

ஒரு முஸ்லிமாக அனைத்து துறைகளிலும் மார்க்கத்தில் நமக்கு தேவையான சட்டங்களை அறிந்து கொள்வது நம்மீது கடமையாகும். அந்த வகையில் பாகப்பிரிவினை பற்றிய சட்டங்களையும் நமக்கு தேவையான அளவு அறிந்து கொள்ள வேண்டும்.

பாகப்பிரிவினை பற்றிய சட்டங்களை அறிந்து கொள்ளுமாறு  பெருமானார் (ஸல்) அவர்கள் ஆர்வப்படுத்தி உள்ளார்கள்
وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم "تعلموا الفرائض وعلموه الناس فإنه نصف العلم وهو ينسى وهو أول شيء ينزع من أمتي " رواه ابن ماجه
அது ஏன் அறிவின் பாதி என்று சொல்லப்பட்ட்து? மக்கள் அனைவரும் பிரச்சினைக்குள்ளாகிற விசயம் அது.

قال ابن عيينة: إنما سمى الفرائض نصف العلم لأنه يبتلى به الناس كلهم


இஸ்லாம் கூறும் பாகப்பிரிவினை சட்டங்கள் அல்லாஹ்வால் முழுக்க முழுக்க திட்டமிட்டு தரப்பட்டதாகும். திருக்குர்ஆனின் அன்னிஸா அத்தியாயம் இஸ்லாமிய பாகப்பிரிவினை சட்டங்கள் தொடர்பாக பேசும் அத்தியாயமாகும். அதிலுள்ள  3 வசங்களில் பாகப்பிரிவினை தொடர்பான 95 சதவீதமான சட்டங்கள் அதன் நுணுக்கங்களுடன் பேசப்பட்டிருக்கின்றன.

(ஹாபிழ் இப்னு கஸீ கூறுகிறார் ;علم الفرائض مستنبط من هذه الآيات الثلاث

தொழுங்கள் என்று சொன்ன இறைவன் அதற்கு விளக்கம் சொல்லும் பணியை பெருமானாரிடம் வழங்கினான். இவ்வாறே நோன்பு ஜகாத் ஹஜ் போன்ற பெரும்பாலான சட்டங்களிலும் பெருமானார் தான் விளக்கம் சொன்னார்கள்.

பாகப்பிரிவினைச் சட்ட்த்தை பொறுத்தவரை அல்லாஹ்வே அனைத்து சட்டங்களையும் வரையறுத்துள்ளான்.   

இந்த இட்த்தில் திருக்குர் ஆனின் ஒரு அற்புத அம்சத்தை குறிப்பிடுவது பொருந்தும் என நினைக்கிறேன். அதை நீங்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

குர் ஆன் மூன்றே வசன்ங்களில் வாரிசுரிமை தொடர்பான மொத்தச் சட்டங்களையும் வேறு விளக்கங்கள் தேவையில்லாத படி தெளிவுபடுத்தியிருக்கிறது. 50 கோடியல்ல 100 கோடியல்ல எத்தனை டிரில்லயன் சொத்துக்களையும் – எவ்வளவு சிக்கலான் பிரச்சினைகளிலும் – அந்த வசன்ங்களின் படி பங்கு பிரித்துக் கொடுத்து விட முடியும்.

பாகப்பிரிவினை தொடர்பான திருக்குர் ஆனின் வசன்ங்கள் சட்டம் சொல்லும் திருக்குர் ஆனின் ஆற்றலுக்கு ஒரு சான்றாகும். இது அல்லாஹ்வின் வேதம் என்பதற்கான சான்றாகும்.

நீங்கள் ஆர்வம் கொண்டு அந்நிஸா அத்தியாத்தின் இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை வாசித்துப்பாருங்கள். இதன் அற்புத அமைப்பை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்

لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَفْرُوضًا(7)
يُوصِيكُمْ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِنْ اللَّهِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا(11)وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمْ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ وَإِنْ كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوْ امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ فَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ(12)
يَسْتَفْتُونَكَ قُلْ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ إِنْ امْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ وَهُوَ يَرِثُهَا إِنْ لَمْ يَكُنْ لَهَا وَلَدٌ فَإِنْ كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ مِمَّا تَرَكَ وَإِنْ كَانُوا إِخْوَةً رِجَالًا وَنِسَاءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَنْ تَضِلُّوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(176)

முதல் வசனம் ஒருவர் இறந்து போனால அவரது சரியன வாரிசுகளுக்கே சொத்து சென்று சேரும் என்பதை தெரிவிக்கிறது.

பண்டைய அரபகத்தில் ஒருவர் இறந்து போனால் அவருடைய பெண் மக்களும் சிறு குழுந்தைகளும் மனைவியும் சொத்து பெற முடியாது என்ற நிலை இருந்த்து.

ஒருவர் இறந்தால் அவரை சண்டையில் காப்பாற்றக் கூடிய ஆண் மகனோ அல்லது சகோதர்ர்களோ சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்வார்கள். இறந்தவனின் குடும்பத்தினரை நிர்க்கதியாக் விட்டுவிடுவார்கள். இஸ்லம் இதில் முதல் மாற்றத்தை கொண்டு வந்த்து,. இதில் இஸ்லாம் செய்த மாபெரும் புரட்சி பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்த்து.

முதல் வசனம் இறங்கியதற்கான காரணத்தை  இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

·         :عن جابر قال: جاءت امرأة سعد بن الربيع إلى رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله هاتان ابنتا سعد بن الربيع قتل أبوهما معك في يوم أحد شهيدا إن عمهما أخذ مالهما فلم يدع لهما مالا ولا ينكحان إلا ولهما مال قال: فقال " يقضي الله في ذلك" فنزلت آية الميراث فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى عمهما فقال: "أعط ابنتي سعد الثلثين وأمهما الثمن وما بقي فهو لك" وقد رواه أبو داود والترمذي وابن ماجه

இரண்டாவது வசனம் பாகப்பிரிவினையின் விதிகளை முழுவதுமாக அற்புதமாக விளக்குகிறது. நாம் அந்த விதிகளை பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு நாள் விரிவாகப் பார்க்கலாம். இன்றைய தினம் சமூகம் சிக்கலை ச்ந்திகிற சில விசயங்களை மட்டுமே பார்க்க இருக்கிறோம்,

மூன்றாவது வசனம் பாகப்பிரிவினை ஒரு அடிசனல் சேர்க்கையாக முறையான முழுமையான வாரிசுகள் இல்லாத நிலையில் சொத்தை எப்படி பங்கிடுவது என்பதை சொல்லுகிறது.

இந்த வசன்ங்களில் பிரதான வசனமான இரண்டாவது வசனத்திலிருக்கிற சில நுணுக்கமான செய்திகளை  திருக்குர் ஆனின் வல்லுநர்கள் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.

உங்களது பிள்ளைகளுக்கு சொத்துக்களை பங்கிடுங்கள் என் அல்லாஹ் பெற்றோர்களுக்கு வஸிய்யத்து செய்கிறான், என்ற வார்த்தை மக்களின் மீது பெற்றோரை விட அல்லாஹ் அதிக அக்கறை கொண்டிருக்கிறான் என்பதை சுட்டுக்காட்டுவதாக அறிஞர்கர்கள் கூறுகிறார்கள்.

وقد استنبط بعض الأذكياء من قوله تعالى "يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثين" أنه تعالى أرحم بخلقه من الوالدة بولدها حيث أوصى الوالدين بأولادهم فعلم أنه أرحم بهم منهم كما جاء في الحديث الصحيح وقد رأى امرأة من السبي فرق بينها وبين ولدها فجعلت تدور على ولدها فلما وجدته من السبي أخذته فألصقته بصدرها وأرضعته فقال رسول الله صلى الله عليه وسلم وآله وسلم لأصحابه "أترون هذه طارحة ولدها في النار وهي تقدر على ذلك" ؟ قالوا: لا يا رسول الله قال "فوالله لله أرحم بعباده من هذه بولدها"

இந்த இட்த்தில் இன்னொரு செய்தியும் நினைவு கூறத்தக்கது.
எந்த தந்தையும் இஸ்லாம் கூறும் சட்டரீதியான காரணங்கள் இருந்தால் ஓழிய தன்னுடை பிள்ளைகளை சொத்துப் பெறுவதிலிருந்து ஒதுக்கி வைக்க முடியாது.

அல்லாஹ் மக்கள் மீது எத்தகைய அன்பு கொண்டவன் என்பதை உணர்ந்து பாகப்பிரிவினை விச்யத்தில் அவனது சட்ட விதிகளை ஏற்க தூண்டுவதாக இது இருக்கிறது.

இதற்கடுத்த்தாக இந்த வசனம் குறிப்பிடுகிற 3 செய்திகளை நாம் காது தாழ்த்தி கவனமாக கேட்க வேண்டும்.  அவை

1.    நான் நிர்ணயித்துள்ளபடி பங்கீடு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு யார் பயனுள்ளவர்களாக இருப்பர்ர்கள் என்பதை நான் அதிகம் அறிந்தவன
آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا
2.   இது என்னுடைய தீர்ப்பு
فَرِيضَةً مِنْ اللَّهِ
3.        அல்லாஹ் நம்மை விட அறிவும் ஞானமும் மிக்கவன்
إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

கொஞ்சம் நிதானித்து இந்த வசன்ங்களின் தார்தத்தை நாம் உணர்ந்து கொண்ட பிறகு பாகப்பிரிவினை தொடர்பான இஸ்லாத்தின் மற்ற வழிகாட்டுதல்களுக்குள் நாம் செல்ல்லாம்.

மவ்திற்கு பிறகே வாரிசுரிமை

உங்களிடம் சொத்து இருக்கிறது எனில் அதை நீங்கள் உயிருடன் இருக்கிற போதே உங்களுடைய வாரிசுகளுக்கு பங்கு வைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று முய்றசி செய்ய தேவையில்லை. உங்களுடைய சொத்துக்கள் உங்களுக்குப் பிறகு மிகச் சரியாக பங்கு பிரிக்கப்படுவதற்கான ஏற்பாட்டை அல்லாஹ் ஏற்கெனவே செய்து வைத்து விட்டான். எனவே அல்லாஹுவும் ரஸூலும் சொன்னபடி பங்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று குடும்பத்திற்கு அறிவுரை சொல்வது தான் குடும்பத்தலைவருக்கு நல்லது.

சில பெற்றோர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்துக் கொடுத்து விட்டு அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டிருக்கிற அவல நிலையை தற்காலத்தில் நாம் பார்க்கிறோம். ஆரம்பத்தில் சொத்து வாங்கிக் கொள்கிற பிள்ளைகள் சொத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு கவனிக்காமல் விட்டு விடுகின்றனர், அதனால் என்  மவ்திற்கு பிறகு என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்லுகிற அதிகாரம் சொத்துக்கு சொந்தக்கார தந்தைக்கும் இருக்கிறது, தாயிக்கும் இருக்கிறது,

வாழும் காலத்திலேயே சொத்தை எழுதி வைக்கும் முயற்சியில் ஈடுபடுவது அதிகப் பிரசங்கித்தனமான ஒரு வேலையாகவே அமைந்து விடுவதை நாம் பார்க்கிறோம்.

அதே போல நல்ல பிள்ளைகளுக்கும் இலக்கணம் என்ன்வென்றால் பெற்றோர்கள் உயிரோடு இருக்கிற போது  சொத்துக்களை பிரித்துக் கொடுக்குமாறு கேட்காமல் இருப்பது தான். அப்படிக் கேட்கிற உரிமை இஸ்லாமிய சட்ட்த்தின் படி அவர்களுகு சிறிதளவும் கிடையாது

அதே போல பாட்டனின் சொத்து அல்லது குடும்பச் சொத்தில் பேரனுக்குத்தான் அதிக உரிமை என்பதும் இஸ்லாத்தில் இல்லை. சொத்து தற்போது யாருடைய வாரிசுரிமையில் இருக்கிறதோ அவரே சொத்துக்கு முழுமையான வாரிசாவார்.

சில நாட்களுக்கு முன்பு ஹஜ்ஜுக்கு போவது தொடர்பாக என்னிடம் விசாரிப்பதற்காக ஒரு முதிர்ந்த தம்பதியினர் வந்திருந்தனர். அவர் அரசு வேலையொன்றில் பதவி ஓய்வு பெற்றவர். அவர் பேச அவரது மனைவி கண்கலங்கினார்.

எங்களுக்கு கொஞ்சம் சொத்து இருக்கிறது. இப்போது ஹஜ்ஜுக்கு போகலாம் என்று நினைத்திருக்கிறோம். எங்களது பிள்ளைகள் சொத்தை பிரித்துக் கொடுத்து விட்டு போங்க! இல்லை எனில் உங்களுடை ஹஜ் செல்லாது என்கின்றனர் இது சரியா என்று அவர்கள் கேட்ட போது அதில் தோய்ந்திருந்த வருத்தம் என்னை அதிகம் சிரம்ப்படுத்தியது.

சொத்து சேர்த்து வைத்தால் இப்படி பிள்ளைகள் கல் நெஞர்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் ஒரு கணம் திகிலை ஏற்படுத்தியது..

உண்மையில் பணபெருமையில் பிள்ளைகளை வளர்த்தால் தான் இது போன்ற அச்சத்திற்குரிய சூழ்நிலைகள் ஏற்படும். தக்வாவின் அடிப்டையில் குடும்பம் வளர்த்தெடுக்கப்படும் எனில் அந்தப் பிள்ளைகளே பெற்றோர்களை முதலில் ஹஜ்ஜுக்கு அனுப்பி வைப்பார்கள். எத்தனை அருமையான பிள்ளைகளை நாம் பார்க்கிறோம். தங்களுக்கு கொஞ்சம் வச்தி வந்தாலும் முதலில் பெற்றோர்களை ஹஜ்ஜுக்கு அனுப்ப அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

ஹஜ்ஜுக்கு போகிற போது பிள்ளைகளுக்கு சொத்தை பங்கிட்டு எழுதி வைத்து விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, கடன் – பற்று ஏதாவது இருந்தால அதைத்தான் பிள்ளைகளுக்கு வஸிய்யத் செய்து விட்டு செல்ல வேண்டும்.

இங்கே இன்னொரு விசய்ம் கவனிக்கத் தக்கதாகும்.
தந்தை வசதியானவராக இருந்து அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவர் விட்டுச் சென்ற சொத்திலிருந்து முதலில் அவர் மீதான ஹஜ் கடமையை அவருடைய வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் பிறகு தான அவரது சொத்துக்கள் பிரிக்கப்படவேண்டும் என இமாம் ஷாபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

உடனடிப் பங்கீடு

பாகப்பிரிவைனை தொடர்பில் குடும்பங்களில் பிரச்சினையை ஏற்படுத்துகிற மற்றொரு விச்யம் சொத்துக்கள் நீண்ட காலத்திற்கு பிரிக்கப்படாமல் இருப்பதாகும்.

3 தலைமுறைகளாக பிரிக்கப்படாத சொத்துக்களை இப்போது பிரிக்குமாறு மார்க்கத் தீர்ப்புக்கள் கேட்கப்படுகின்றன. இதில் மார்க்கத்தீர்ப்பு கிடைத்து விடும் தான், ஆனால் இந்த சொத்திற்கு உரிய பலரும் அதை அனுபவிக்க விடாத பாவத்திற்கு யார் பொறுப்பேற்பது ?

எனவே ஒரு மனிதர் இறந்த வுடன அவர் விட்டுச் செல்கிற சொத்தில் நிறைவேற்றப்படுகிற கடமைகளை நிறைவேற்றியவுடன் அவருடை சொத்து வாரிசு தார்ர்களுக்கு உரிய முறையில் பங்கிடப்பட வேண்டும்.

ஒரு மனிதர் விட்டுச் செல்கிற சொத்தை تركة   தரிகத் என அரபியில் சொல்லுவோம்

தரிகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் 4 ஆகும். இதில வரிசை முறை கவனிக்கப்பட வேண்டும். முந்தியது முதலில் அடுத்த்து பிறகு என்ற அடிப்ப்டையில் நிறைவேற்றப்பட வேண்டும்.  
·       تركة وهي ما يتركه الميت من الأموال والأشياء.

1.       كفن- تجهيز
2.      قضاؤ ديونه
3.      الوصية
4.     التوريث

கபன் துணி கற்பூரம் அத்தர் போன்றபற்றிற்கான செலவு ஒரு மனிதரின் சொந்த சொத்திலிருந்து நிறைவேற்றப்படுவதே சிறந்த்து. குழிவெட்டுதல் போன்ற செலவும் அதிலிருந்து செலவிடப்படும்.

இறந்தவருக்கு கடன் இருப்பின் அதை அவருடை சொத்திலிருந்து நிறைவேற்றப்படவேண்டும்.
இஸ்லாமிய அரசு இருக்கும் எனில் ஒருவருடை சொத்து பங்கிடப்படுவதற்கு முன் கடனுக்காக சொத்தை ஜப்தி செய்யும்.

قال النبي صل الله نفس المؤمن معلقة بدينه حتي يقضي -  أحمد
ஒரு மனிதர் இறந்த் போது அவருடைய கடனுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த நாள் அவரைச் கண்ட பெருமானார் அந்த கடனை நிறைவேற்றி விட்டீர்களா என்று கேட்டார்கள் அவர் ஆம் என்றார். பெருமானார் (ஸல்) சொன்னார்கள்
الآن برد جلده
இப்போது தான் அவருடை உடல் குளிர்ந்திருக்கிறது என்றார்கள்.

ஷஹீதுடை எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். கடனை தவிர

ஒருவர் இறந்த பிறகு அவருடை கடனை அடைக்க வேண்டியது வாரிசுதார்ர்களின் கடமையாகும். இப்போது சிலர் ஜனாஸா தொழுகையின் போது என் தகப்பனாரின் கடனுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன், என்று கூறுகிறார்கள். அப்படிச் சொல்வது நல்லது தான் என்றாலும். ஒரு விச்யத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் சொல்லாவிட்டாலும் கடனை நிறைவேற்றியாக வேண்டியது வாரிசு தார்ர்களின் கடமையாகும்.

தரிகாவில் மூன்றாவது நிறைவேற்றப்பட வேண்டியது இறந்து போனவர் மரணசாசனம் ஏதாவது செய்திருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.
சொத்துக்கு அதிபதியாக இருக்கிறவர்களுக்கு தங்கள் சேர்த்த சொத்தில் 3 ல் ஒரு பங்கு அளவுக்கு வாரிசுதார்ர் அல்லாதவர்களுக்கோ தர்ம காரியத்திற்கோ வழங்க உரிமையுண்டு.  

இந்தப் பங்கு தான் இறந்தவருக்கு கப்ரில் உதவி செய்யக் கூடியதாகும்.

ق عن عبد الله بن مسعود  قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا مِنَّا أَحَدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ قَالَ فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ

وفي الترمذي عن عائشة رضي الله عنها: «أنهم ذبحوا شاة فتصدقوا بها سوى كتفها، فقال النبي صلى الله عليه وسلم: بقي كلها غير كتفها 
சொத்து சேர்த்து வைத்திருக்கிற எவரும் தன்னுடைய சொத்து தனக்கு பயன்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

எல்லா சொத்தையும் தன் பிள்ளைகளுக்கு மட்டுமே விட்டுச் செல்வதில் தனக்கு என்ன நன்மை என்று யோசிக்க வேண்டும்.

வஸிய்யத்தின் அவசியத்தையும் நன்மையையும் இன்றை முஸ்லிம் சமுதாயம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஒரு காலத்தில் மதரஸாவுக்காக பள்ளிவாசல்களுக்காக பொதுக்காரியங்களுக்காக என்று நிறைய வக்பு செய்து விட்டுப்போனார்கள். இப்போதோ வக்பு என்ற வார்த்தையை கேட்பதே அரிதாக இருக்கிறது,

வஸிய்யத்தினால கிடைக்கிற நன்மை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَضَرَتْهُ الْوَفَاةُ فَأَوْصَى وَكَانَتْ وَصِيَّتُهُ عَلَى كِتَابِ اللَّهِ كَانَتْ كَفَّارَةً لِمَا تَرَكَ مِنْ زَكَاتِهِ فِي حَيَاتِهِ  _ إبن ماجة 2701

3ல் ஒரு பங்கு அளவுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும் என்ற கடமையில்லை. அது உச்ச பட்ச அளவாகும் அதற்கு குறைவாகவும் செய்யலாம். .  

பொதுவாக உயில் (வஸிய்யத் ) என்பது வாரிசுரிமை பெறாதவர்களுக்கோ அல்லது தர்மக காரியங்களுக்கோ மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒருவர் தன் பிள்ளைகள் மீது அதிருப்தி கொண்டு மொத்த சொத்தையும் வேறுயாருக்காவது எழுதிக் கொடுத்தால் அது செல்லாது. பள்ளிவாசலுக்கு எழுதி வைத்தால் அதுவும் செல்லாது, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஒரு மனிதர் தன்னுடைய வாரிசுகளுக்கு அநீதமிழைக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالشَّطْرُ قَالَ لَا قُلْتُ الثُّلُثُ قَالَ فَالثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ وَإِنَّكَ مَهْمَا أَنْفَقْتَ مِنْ نَفَقَةٍ فَإِنَّهَا صَدَقَةٌ حَتَّى اللُّقْمَةُ الَّتِي تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ وَعَسَى اللَّهُ أَنْ يَرْفَعَكَ فَيَنْتَفِعَ بِكَ نَاسٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ وَلَمْ يَكُنْ لَهُ يَوْمَئِذٍ إِلَّا ابْنَةٌ  - البخاري 2742

வாரிசுகளுக்கு அநீதியிழைத்தால் அவர்கள் சபிப்பார்கள். கப்ரில் நிம்மதியாக இருக்க முடியாது.

வஸிய்யத்து விசயத்தில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விசயம்

நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு வாரிசுரிமை கிடைக்காமல் போகலாம். அவ்வாறு அல்லாஹ் நிர்ணயித்திருப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அத்தகையோருக்கு சொத்து கிடைப்பதற்கு வஸிய்யத்தை பயன்படுத்திக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது,

உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவருடையை நான்கு மகன்களில் ஒருபையன் விபத்தில் இறந்து போனார். அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். மார்க்கச் சட்டப்படி தந்தைக்கு முன்னால் மகன் இறந்து போனால் தந்தையின் சொத்திலிருந்து அவருக்கு பங்கு வராது , இந்த அடிப்படையில் விபத்தில் இறந்து போன மகனின் குடும்பத்திற்கு பங்கு தர முடியாது என்று சகோதர்ர்கள் சொன்னார்கள்.

அந்த தந்தை கேள்வியோடு வந்தார். நான் சொன்னேன். உங்களது பிள்ளைகள் இறக்கமின்றி பேசுகிறார்கள். பணம் என்று வருகிற போது சொந்த சகோதரனின் குடும்பத்தின் மீது கருணை காட்ட மறுக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்து விடக்கூடாது உங்களது தார்மீக கடமையை நீங்கள் நிறைவேற்றுவதற்கு வசதியாகத்தான் அல்லாஹ் உங்களுக்கு வஸிய்யத் என்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறான், உங்களுடை சொத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இறந்து போன உங்களது மகனின் குடும்பத்திற்கு வஸீய்யத் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. நீங்கள உங்களுடைய மவ்திற்கு முன்னதாக உங்களது தார்மீக கடமையை நிறைவேற்றி விடுங்கள். உங்களது பொறுப்பை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களது மற்ற மகன்களிடம் பேசுங்கள். உங்களுக்கு 3 கோடி மதிப்பிற்கு சொத்து இருக்கிறது .அதில் ஒரு கோடி அளவிற்கு இறந்து போன மகனின் குடும்பத்திற்கு எழுதி வைப்பதற்கு மார்க்கத்தில் இடம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லிப் பாருங்கள், உங்களது மகன்கள் சரியான வழிக்கு வந்து விடுவார்கள் என்று சொல்லி அனுப்பினேன், அதற்குப் பிறகு அந்த தந்த்தை தன்னுடைய சொத்தில் ஒரு சிறு பங்கை இறந்த மகனுடைய குடும்பத்திற்கு எழுதி வைத்தார்.

இன்னொரு வழக்கை நான் சந்தித்தேன். ஒரு கல்யாண வீட்டில் சாப்பாட்டு மேஜையில் இந்த வழக்கை ஒருவர் எடுத்து வைத்தார்.

நான் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன், நான் முதலில் திருமணம் செய்திருந்த பெண் இறந்து விட்டாள், எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். நான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டேன். என்னுடை முதல் மனைவியின் குடும்பம் வசதியான குடும்பம். என மாமனார் இறந்த்  பிறகு அவருடை மற்ற மகன்கள் பெரும் கோடீஸ்வர்ர்களாகிவிட்டார்கள். ஆனால் என்னுடை முதல் மகனுக்கு சொத்து தர மறுக்கிறார்களே இது நியாயமா என்று கேட்டார்.

நான் அவருக்கு பதில் சொன்னேன், இஸ்லாமிய சட்ட அடிப்படையில் தந்தைக்கு முன் மகள் இறந்து விட்டாள் சொத்து பெற முடியாது, அதற்கு பல நியாயங்கள் உண்டு. அது அல்லாஹ்வுடைய தீர்ப்பு. ஆனால் உங்களுடைய மாமனார் அவர் மீதான ஒர் தாரமீக கடமையை  செய்ய தவறி விட்டார். அவர் உங்களது மகனுக்காக அதாவது அரது மகள் வ்யிற்றுப்பேரனுக்காக ஏதாவது ஒரு அளவு சொத்தை வஸிய்யத் செய்திருக்க வேண்டும். இது பற்றிய அறியாமையினால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின் கிஸ்மத்தை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றேன். கேட்டு முடித்த பிறகு அவர் சொன்னார். மகளுக்கு உரிய பங்கை அவர்கள் தர வில்லை ஆணால் ஒரு தொகை கொடுத்தார்கள் என்றார். நான் அல்ஹம்து லில்லாஹ் சொன்னேன்.

(மக்களில் சிலர் சட்ட்ம் கேட்கிற போது முதலில் முழு உண்மையை சொல்வதில்லை என்று என் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்)

இவற்றிலிருந்து கிடைக்கிற பாடம் என்னவென்றால் சொத்து வைத்திருப்பவர்கள் தங்களுடை உறவுகளில் தார்மீகமாக கவனிக்கப் பட வேண்டியவர்கள் இருக்கிறார்களா என்பதை கவனித்து அவர்கள் விசயத்தில் வஸிய்யத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதே போல குடும்பத்திற்காக உழைத்த அல்லது நெருக்கமான வாரிசுரிமை பெறாத உறவின்ர்களுக்காக ஏழைகளுக்காக அநாதைகளுக்காக உதவுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُوْلُوا الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُمْ مِنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا(8 - النساء

ஒருவர் இறந்து விட்டால் அவருடை நல்லடக்கச் செலவுகளை முடித்த பிறகு அவர் மீதான கடன்களை அடைத்த பிறகு அவர் உபதேசித்திருக்கிற வஸிய்யத்தை நிறைவேற்றிய பிறகு தான் வாரிசு தார்ர்கல் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும் என்கிற போது ஒருவர் உயிரோடு இருக்கிற போதே தன்னுடைய சொத்து முழுவதையும் பிரித்துக் கொடுத்து விடுவது அல்லது விடுமாறு கேட்பது எப்படி நியாயமாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்/

ஒரு தந்தை கவலையோடு வந்தார். என்னுடையை மகள் ஒருத்தி கணவரை இழந்தவள் தனியே வசிக்கிறார். அந்த மகளுக்கு நான் ஒரு சொத்தை அதிகமாக எழுதி வைக்கலாமா என்று கேட்டார்.

மார்க்கம் அப்படி எழுதி வைக்க அனுமதிக்க வில்லை. வாரிசு தார்ருக்கு அவருடைய பங்கிற்கு மேல் வஸிய்யத் செய்ய முடியாது.

ஆனால் உங்களுடை மற்ற வாரிசுதார்ர்கள் சம்மதித்தால் அவ்வாறு கொடுக்கலாம். நீங்கள் உயிருடன் இருக்கிற போதே உங்களது மகளுக்கு காசோ பணமோ சொத்தோ கொடுக்கலாம், அது அன்பளிப்பு. அந்த அனபளிப்புக்கு உங்களுக்கு உரிமை உண்டு, அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு தருவதிலும் நீதி நடுநிலையை கடை பிடிக்க வேண்டும் என்று மார்க்கம் உத்தரவிட்டுருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று சொன்னேன்

அதே நேரத்தில் ஒரு குடும்பத்திற்குள் பரஸ்பரம் அன்பு நல்லிணக்கத்தின் அடிப்பட்டயிலும் விட்டுக் கொடுத்தலின் அடிப்படையிலும் பாகப்பிரிவினை செய்து கொள்ளப்பட்டால் இஸ்லாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் யாரையும் நிர்பந்தப் படுத்தவோ திருப்தியில்லாமல் பிடுங்கிக் கொள்ளவோ கூடாது.

ஒரு தந்தை தனது மவ்திற்கு முன்னதாக தங்களுக்குப்பின் சிரம்ம் இல்லாமல் சொத்தை பிரித்துக் கொள்வதற்கு வசதியாக இஸ்லாம் கூறும் நியதிகளின் அடிப்படையில்அல்லது பரஸ்பரம் நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு சூமூக ஏற்பாட்டை காண்பாரானால் அது அனுமதிக்கப் பட்டதே! ஆனால் ஒரு பக்க சார்போ இஸ்லாமிய நியதிகளுக்கு முரணாகவோ அது அமைந்து விடக்கூடாது.

இஸ்லாமின் வழி காட்டுதலுக்கு எதிராக எழுதி வைக்கப்டும் உயில் செல்லாது. உதார்ணமாக ஒரு தந்தை தனது இரண்டு மகளகளுக்கும் இரண்டு மகன்களுக்கு சொத்து சம்மாக பங்கிடப்பட வேண்டும் என்று எழுதி வைத்தால அந்த உயில் செல்லாது. இஸ்லாமின் பாகப்பிரிவினை சட்டப்படியே சொத்து பங்கிடப்படும்.

ஒரு முஸ்லிம் காபிரான் தனது தந்தையின் சொத்துக்கு வாரிசாக முடியாது, அது போல முஸ்லிமின் சொத்துக்கு காபிர்களும் வாரிசாக முடியாது.

காதியானி மத்த்துக்கு மாறிவிட்ட ஒருவன் முஸ்லிமான மனிதரின் சொத்துக்கு வாரிசுரிமை கோர முடியாது.

பொதுவான சொத்தை மற்ற வாரிதார்ர்களின் சம்மதம் இல்லாமல் ஓரிருவர் மட்டுமே நீண்ட காலத்திற்கு அனுபவிப்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.

பெண்களுக்கு சொத்தில் உரிய பங்கை கொடுக்க வேண்டும்.  அவ்வாறு கொடுக்காமல் தவிர்ப்பது அநீதியும் இஸ்லாம் காட்டிய குடும்ப அமைப்பை சித்தைப்பதுமாகும்.

திருமணச் செலவை காரணமாக இதில் காட்டக் கூடாது,

வரதட்சனை

வரதட்சனை இஸ்லாத்தில் இல்லை. ஒரு வேளை குடும்பச் சொத்தில் ஒரு கனிசமான அளவு ஒரு பெண்ணின் திருமண்ச் சீராக கொடுக்கப் படும் எனில் அது அன்பளிப்பாக கருதப்படும். அதற்கு நிகரான அன்பளிப்பை மற்ற வாரிகளுக்கும் வழங்க வேண்டும். இல்லை  எனில் அது அநீதியாகிவிடும்.

சில முஸ்லிம் நகரங்களில் வரதட்சனை என்ற காரணத்தைச் சொல்லி பெண்ணின் சொத்துரிமையை பறிக்கிறார்கள். இது இஸ்லாமிய கட்டமைப்பை உடைப்பதாக அமைந்து விடும், ஆகையால் ஒரு வீட்டில் பெண்ணில் திருமண் ஏற்பாட்டில் அதிகப்படியான சொத்து செலவிடப்படும் எனில் அது குறித்து மற்றவாரிசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும், அதற்கான தகுந்த ஏறபாட்டை அந்த்தந்தப் பகுதிகளில் உள்ள ஆலிம்களும் பிரமுகர்களும் மேற்கொள்ள வேண்டும். பொத்தம் பொதுவாக வரதட்சனை காரணத்தை சொல்லி பெண்ணின் சொத்துரிமையை பறிக்க முடியாது.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மிக அற்புதமானது குடும்பத்தில் சொத்து சார்ந்த பிணக்குகள் ஏற்படுகிற போது அல்லாஹ் ரஸுலின் வழிகாட்டுதல் அடிப்படையிலான சொத்து பங்கீடு என்பது நடைமுறைக்கு வருமெனில் குடும்ப்ப் பிரச்சினைகள் எவ்வளவு பெரிதாக தெரிந்தாலும் பனி போல கரைந்து விடும்.

எல்லா நிலையிலும் மார்க்க வரைகளை அறிந்து அதை கடைபிடித்து வாழ்கிற தவ்பீக்கை அல்லாஹ் தந்தருள்வானாக!



7 comments:

  1. mohammed hathees9:16 AM

    Ratthina surukkamaha vilaivitteerhal.Ennai ponra aalimgalukku eppodhum idhu helppaha iirukkum.Jazakallah.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்......... தண்ணீரைத் தேடியவனுக்கு பிரியாணியே கிடைத்ததைப் போலிருந்தது......... வாரிசுகளுக்கு சேர வேண்டிய சொத்தின் அளவீடுகளை (2வது வசனத்தின் விளக்கம்) கூடிய விரைவில் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  3. மார்க்கச் சட்டப்படி தந்தைக்கு முன்னால் மகன் இறந்து போனால் தந்தையின் சொத்திலிருந்து அவருக்கு பங்கு வராது

    இதற்கு ஆதாரம் கொடுக்கவும்....

    ReplyDelete
  4. இஸ்லாம் கூறும் சொத்து பங்கு தகப்பனின் சொத்தில் தாய் மற்றும் 2 ஆணுக்கு 3 பெண்ணுக்கு எப்படி பிரிக்க வேண்டும்

    ReplyDelete
  5. Anonymous2:45 AM

    சொத்தில் பங்குபெறும் நபர்களுடைய பெயரை கூறுங்கள்

    ReplyDelete