வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 04, 2024

மறுமையின் பிள்ளகளாக புத்தாண்டை வரவேற்போம்.

 2024 ம் ஆண்டு பிறந்திருக்கிறது.

அல்லாஹ் இந்த புதிய ஆண்டில் அமைதியும் நிம்மதியும் தவழச்செய்வானாக! சண்டையும் ஆபத்துக்களும் இல்லாத ஆண்டாக ஆக்கியருள்வானாக! மக்களுக்கிடையே நீதியும் நல்லுறவும் நிலைக்க வழி வகை செய்வானாக!

இந்த புதிய ஆண்டை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள்.

ஆனால் ஜப்பான் நாட்டிலும் ஈரானிலும் இரு பெரும் சோகங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

ஜனவரி 1 ம் தேதி ஜப்பானில் மிகப்பெருரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பூமியின் அதிர்ச்சியை ரிக்டர் என்ற அளவில் கணக்கிடுவார்கள். அதில் 6 ரிக்டர் அளவை கடக்கிற போது கட்டிடங்கள் இடிந்து போகும். இப்போது ஜப்பானின் ஹொன்ஸு (Honsuh) பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பூமி  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.    இது கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவு என்கிறார்க்கள். இதனால் சில இடங்களில் சுனாமிப் பேரலையும் சில இடங்களில் பெரும் நெருப்பும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதிகள் மிகப்பெருமளவில் சேதமடைந்துள்ளன. பன்னூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சிதைந்து போய் கிடக்கிற காட்சி காண்போரை பதற வைக்கும் அளவில் இருக்கிறது.

ஆயினும் ஜப்பான் அரசின் முன்னெச்செரிக்கை நடவடிக்கையினால் .இறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 62 பேர் இறந்துள்ளனர். சுமார் 40 ஆயிரம்  பேரை பாதுகாப்பான இடங்களில் ஜப்பானிய அரசு தங்க வைத்துள்ளது.

பூகம்ப பாதிப்புக்குள்ளான் ஜப்பானிய மக்களுக்கு அல்லாஹ் தகுந்த நிவாரணத்தையும் பாதுகாப்பையும் தந்தருள்வானாக.\

நேற்று ஜனவரி 3 ம் தேதி ஈரானில் இரண்டு மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.  காஸிம் சுலைமான என்ற ஒரு ஈரான் ராணுவ தலைவரை 2020 ம் ஆண்டு அமெரிக்கா குண்டு வீசி கொன்றது. அது ஒரு மிகப்பெரும் அநீதி. தன்னிடமிருக்கிற தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி அமெரிக்க நடத்திய கோழைத்தனமான ஒரு தாக்குதல். காஸிம் சுலைமானியின் இறப்பு ஈரான் மக்களை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியிருந்த்து. அவருடைய 4 வது வருட நினைவு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பதை அறிந்து அந்தக் கூட்டம் நடைபெறுகிற இடத்தில் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. குண்டு வெடிப்பிலிருந்து தப்பி வருகிற மக்களை குறிவைத்து மற்றொரு குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு குண்டு வெடிப்புக்களிலும் இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும்.

மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்றிருக்கிற உலகத்திற்கு இந்த இரண்டு நிகழ்வும்களும் பெரும் பாடங்களாகும்.

இந்த உலகில் எவ்வளவு இன்பங்கள் இருக்கிறதோ அதற்கு நிகரான துன்பங்கள் உண்டு. இதில் இயற்கையாக ஏற்படுகிற துன்பங்களை விட செயற்கையாக ஏற்படுகிற துன்பங்கள் அதிக வலியையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தக் கூடியவை.

புதிய ஆண்டில் இத்தகைய ஆபத்துக்களிலிருந்து நம்மையும் முழு உலகத்தையும் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாக்க வேண்டும் என்ற அச்சமும் பிரார்த்தனையும் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். நமக்கு கிடைத்திருக்கிற நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காவும் ஓவ்வொரு நிமிடத்திலும் நாம் அல்லாஹ்வுக் நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

இயற்கையான செயற்கையான இத்தகைய ஆபத்துக்களை விட இந்த உலகமும் இதில் கிடைக்கிற இன்பங்களுமே போதுமானவை என்ற இயல்போடு மக்கள் வாழ்வது மிகப் பெரிய அறியாமையும் ஆபத்துமாகும்.

இஸ்லாம் உலக மக்களுக்கு மிக அடிப்படையன ஒரு  செய்தியை கற்றுத்தருகிறது..

இந்த உலகை அனுபவியுங்கள் ஆனால் இதில் எதுவும் நிரந்தரமானது அல்ல என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். இந்த உலகின் மீது ஆசை வைப்பதை விட நிரந்தரமான அல்லாஹ்வின் மீது அதிக  அன்பும் ஆதரவும் கொள்ளுங்கள்.

ஒரு புது வருடம் பிறக்கிற போது நாம் பல  புதிய கற்பனைகளை உருவாக்கிக் கொள்வோம். பல திட்டங்களையும் தீர்மாணிப்போம். அது சரியானதுதான். அதே நேரத்தில் இந்த உலக வாழ்வு பற்றிய தெளிவான சிந்தனையும் நம்மிடம் இருக்க வேண்டும்.  

திருக்குர் ஆன் கூறுகிறது..

 قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا} (77

இது நமது இதயத்தை திறக்கும் ஒரு மந்திரச் செல்லாகும்.

இஸ்லாம் எச்சரிக்கிற அம்சங்களில் மிக முக்கியமானது இந்த உலகின் மீதான் ஆசையாகும்.

இந்த உலகம் நாம் நினைக்கிற அளவு நல்லதோ மகிழ்ச்சியானதோ அல்ல. இந்த உலகம் நம்மை ஏமாற்றும் ஒரு மாயக் கவர்ச்சியாகும்

திருக்குர் ஆன் இன்னொரு இட்த்தில் சொல்கிறது. இது ஏமாற்றும் உலம்

وما الحياة الدنيا إلا متاع الغرور 

அதாவது, யார் இந்த உலகில் ஜெயிப்பதையும் இதில் மகிழ்ச்சியாக இருப்பதையும் பெரிது என்று நினைக்கிறார்களோ அவர்கள் ஏமாந்து போவார்கள்.

ஜப்பானியர்கள் உலகின் பெரும் அறிவாளிகள்; தொழிநுட்ப வலமை படைத்தவர்கள்; செழிப்பானவர்கள், ஜனவரி 1 ம் தேதி புது வருடம் பிறந்த சில நிமிடங்களில் 12;40 லிருந்து 7 நிமிடங்களுக்காக அவர்களின் அத்தனை வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கேள்விக்குள்ளாகிவிட்டதே. ஒட்டு மொத்த ஜப்பானும் சோகத்தில் மூழ்கி விட்டது.

இதுதான் ஏமாற்றுகிற உலகம். எதுவும் எப்போதும் நிகழலாம். எதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.  

இந்த உலகம் நம்மை ஏமாற்றும் அம்சங்களில் மிக பிரதானமானது படைத்த அல்லாஹ்வின் சிந்தனையை மறக்கடிப்பதாகும்.

அறிஞர்கள் சொல்வார்கள் . 

الدنيا اسحر من هاروت وماروت 

இந்த உலகம் ஹாரூத் மாருத்தை அதிக சூனியம் செய்யக் கூடியது.

ஹாரூத் மாரூத்தின் பெரிய சூனியம் என்பது அவ்விருவரும் கணவன் மனைவியை பிரிப்பார்கள். يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ

 இந்த உலக ஆசையோ படைத்த  அல்லாஹ்வையும் அடியானையும் பிரித்து விடும் .

 அதே போல இந்த உலகத்தின் மீதான் ஆசை மக்களுக்கு எதிராக எந்த அக்கிரமத்தையும் செய்ய வைக்கும்.

ஈரானில் எந்த சம்பந்தமும் நியாயமும் இல்லாமால் ஈரானை பணியவைக்க நினக்கிற அதிகாரத்தை தேடுகிற சர்வதேச ஆதிக்க வெறியர்களின்  திட்டம் தான் இப்படிப்பட்ட குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கிறது. . 

 எனவே இந்த உலகத்தின் சுக போகங்களில் மட்டுமே ஆசை கொள்வதும் நம்பிக்கை கொள்வதும் ஆபத்தானதாகும்.

இதை தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மிகச் சுருக்கமாகவும் வலிமையாக்வும் எடுத்துச் சொன்னார்கள்

حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي في الشعب

 அதிகாரப் போட்டி ஆக்ரமிப்பு சிந்தனை ஊழல் சர்வாதிகாரம் வன்முறை கட்டற்ற ஆபாசம் அனைத்திற்கும் இதுவே காரணமாகும்.

காரூனிடமிருந்த தை போன்று நம்மிடம் சொத்துக்கள் இருக்கலாம். பிர் அவனிடமிருந்த்தை போல அதிகாரம் இருக்கலாம். அதை கண்டு .

இந்த உலகமே  வியக்கலாம் ஆனால் இந்த உலக ஆசை நம்மை ஆட்கொண்டு விடக் கூடாது.

 அதனால் இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் நாம் உறுதியேற்போம்.

இனிவரும் காலங்களில் நாம் இந்த உலகில்  மறுமையின் பிள்ளைகளாக வாழ்வோம்.

روى الإمام البخاري عن سَيِّدِنا عَلِيٍّ رَضِيَ اللهُ عنهُ قال: ارْتَحَلَت الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الْآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ، وَلَا تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ الْيَوْمَ عَمَلٌ وَلَا حِسَابَ، وَغَداً حِسَابٌ وَلَا عَمَلٌ.

 

அதாவது மறுமையை கணக்கில் வைத்து இந்த உலகில் வாழ்வோம். உலக ஆசாபாசங்களில் அதிகம் இலயித்து விட வேண்டாம்.

அதி புத்திசாலி யார்  – இமாம் ஷாபி rah

இமாம் ஷாபி  அவர்கள் கூறினார்கள். ஒரு ஆள் தனது சொத்தில் ஒரு பகுதியை இந்த உலகின் பெரிய அறிவாளிக்கு வழங்க வேண்டும் என்று வஸிய்யத் உயில் எழுதி வைத்தால் யார் இந்த உலகின் மீது அதிக ஆசை இல்லாமல் வாழ்கிறானோ அவருக்கு அதை கொடுக்க வேண்டும் என்று நான் தீர்ப்புச் சொல்வேன். என்றார்கள்.

 தற்காலிக இன்பத்தை தவிர்த்து நிரந்த இலாபத்தை கணக்கில் கொள்பவன் தானே உண்மையில் புத்திசாலியாக இருக்க முடியும்

 இந்த உலகை புரிந்து கொண்டு நடப்பது தான் சிறந்த புத்திசாலித்தனம் என்பதால் ராபியா பஸரிய்யா (ரஹ்) தஹஜ்ஜுதுக்கு பிறகுண்டான முக்கியமான நேரத்தில் இப்படி துஆ கேட்பார்கள்.

 "இறைவா! இரவு வந்து விட்டது. நட்சத்திரங்கள்  ஒளிர்கின்றன. உலகின் அரசர்கள் தங்களது கதவுகளை அடைத்து உறங்கச் சென்று விட்டார்கள். உன்னுடைய கதவுகள் இப்போதும் திறந்திருக்கின்றன. நான் எனது கைகளை உன்னை நோக்கி விரித்து வைக்கிறேன். வானம் பூமியின் மீது விழுந்து விடாமல் காப்பவனே! இந்த உலக ஆசை என் இதயத்தில் புகுந்து விடாமல் தடுத்துவிடு!"

 நக்ஷபந்தி தரீக்காவின்  ஷைகு  மழ்ஹர் ஜான் ஜானா அவர்களிடம் அப்போதைய  அரசர் ஒரு ஓலை அனுப்பினார். உங்களது கான்காஹ்வுக்கு நிறைய ஆட்கள் வருகிறார்கள். நீங்கள் வாருங்கள் உங்களுக்கேற்ற ஒரு நிலத்தை நான் தருகிறேன் என்றார்.  

ஷைக் தூதரிடம் சொல்லி அனுப்பினார். அரசருக்கு என் வாழ்த்துக்க்ளை சொல்!  மேலும் அவரிடம் சொல் இந்த உலகமே கொஞ்சம் என்று   அல்லாஹ் சொல்கிறான் .

قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ 

அதில் கொஞ்சம் உங்களிடம் இருக்கிறது அதிலும் கொஞ்சத்தை பெற நான் வெட்கப்படுகிறேன்.

 ஒரு அறிஞர் அரசர் செல்லும் வழியில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அரசர் அவருக்கு பணம் கொடுத்தனுப்பினார். அறிஞர்  சொன்னார். அரசர் நீடூழி வாழட்டும்! அரசே உங்களிடம் கை நீட்டி விடக் கூடாது என்பதற்காகத்தான் கால் நீட்டி அமர்ந்திருக்கிறேன் என்றார்.

 பேரறிஞர்கள் உலகிற்கு இவ்வளவு தான் முக்கியத்துவம் அளித்தாகள்.

 உலக மோகத்தை குறைக்க   என்ன வழி ?

உலக ஆசையை துறந்து விட வேண்டும் என்று சொன்னால் மக்கள் வீடுகளை விடுத்து காடுகளில் சென்று தங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. குடும்பம் வணிகம் அரசியல் போன்ற உலகியல் சூழல்களை விட்டு விலகி வாழ வேண்டும் என்றும் அர்த்தமில்லை. மாறாக இதயத்தில் அல்லாஹ்வின் மிதான நேசம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே!

 அறிஞர்கள் கூறுவதுண்டு

மனிதா! பறவைகள் தண்ணீரில் உட்காருகின்றன  ஆனால் வற்றின் இறகுகள் அதில்  நனைவதில்லை. அதனால் தான் அது பறக்க நினைக்கிற போது நிமிடத்தில் எழுந்து விடுகிறது. இறகு காய வேண்டும் என்று காத்திருப்பதில்லை. மனிதா நீயும் அது போல இருந்து பழகு!

 நினைவில் வையுங்ள்!  சொத்து சுகம் என்பது துன்யா அல்ல அல்லாஹ்வை மறப்பதே துன்யா

 அல்லாஹ்வை மறக்காமல் இந்த உலகில் வாழ ஆசையா ?

இதோ குர் ஆன் கூறுகிறது.

 நன்மக்களோடு இணைந்திருங்கள்

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ (التوبة - 119)

 

நாம் எதனுடன் இணைந்திருக்கிறமோ அது சார்ந்த அம்சங்கள்  (கண்டண்டுகள்) தானே நமக்கு வந்து கொண்டிருக்கும்.

பேஸ்புக்கிலோ யூடியூபிலோ நாம் எதில் ஒரு முறை ஆர்வத்தை வெளிப்படுத்துகிறோமோ அது சார்ந்த விசயங்கள் தானே தொடர்ந்து கிடைக்கின்றன.

அது போலத்தான் நன்மக்களுடன் இணைந்திருக்கும் போது அது சார்ந்த உணர்வை நாம் பெற முடியும். தனிமையோ படிப்போ தவமோ அல்ல; நல்ல தொடர்புகளே இந்த பண்பை தருவதில் முதன்மையானவை.

எனது மனம் போதலிக்கிற போது நான் முஹம்மது பின் வாஸிஃ ரஹ் அவர்களின் முகத்தைப் பார்ப்பேன். என ஒருவர் கூறியது இங்கு கவனிக்கத் தக்கது.

இத்தகைய தொடர்புகளுக்கு இஸ்லாத்தில் ஒரு முக்கியத்துவம் இருப்பதை நாம் அறியலாம்.

பெருமானார் (ஸல்) அவர்களை நம்பிக்கையோடு பார்த்தவர்கள் சஹாபாக்கள் என்று அழைக்கப் பட்டவர்கள்.

சஹாப்பாக்களை சந்திதவர்கள் ஸிஆருத்தாபியீன் என்றூம் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தவர்கள் கிபாருத்தாபியீன் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இதே போல அந்த தாபிஃகளை சந்தித்தவர்கள் தபவுத்தாபிஃ என்று அழைக்கப்பட்டார்கள் .

நற்சந்திப்புகள் தருகிற மகத்தான பெருமையை இது நமக்கு புலப்படுத்துகிறது. 

சாலிஹான பெற்றோர்கள், ஆலிம்கள், ஷைகுகள், பெரிய மனிதர்களின் முகங்களைப் பார்ப்பதே கூட நமது மனதில் மறுமை உணர்வையீட்டும்.

நன்மையான சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இதயத்தின் அழுக்குகளுக்கு சிறந்த மருந்து அது.

இரண்டாவதாக

எதுவெல்லாம் இந்த உலகில் நம்மை அதிகம் கவர்ந்திழுக்கிறதோ அதுவெல்லாம் நாளை நமக்கு எவ்வளவு பயன்படக் கூடும் என்று நாம் சிந்திப்போம்.

திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது.

زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب ) [ آل عمران : 14 ]

 இவற்றின் மீது ஆசைப்படக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. இவற்றிலிருந்து நாளை பெரும் பயனை அடைந்து கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

 இபுறாகீம் அலை தனது குடுமபத்தின் மீதுள்ள பற்றில் அல்லாஹ்வை மறக்காமல் வாழ்ந்தார்கள். சுலைமான அலை அதிகாரத்தின் உச்சத்தில் அல்லாஹ்வை மறக்காமல் வாழ்ந்தார்கள். தாவூத் அலை திறமையின் எழுச்சியில் அல்லாஹ்வை மறக்காமல் வாழ்ந்தார்கள். முஹம்மது நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களோ மானுட்த்தின் உச்சம் என்ற மரியாதையிலும்  அல்லாஹ்வை மறக்காது வாழ்ந்தார்கள்.

 இத்தகையோருக்கு கிடைத்ததெல்லாம் நாளை மறுமைக்கும் இவர்களுக்கு பயன்பட்டது. 

 பெண்கள் பிள்ளைகள் சொத்துக்கள் மீதான நமது ஈடுபாடு நாளை மறுமையில் நமக்க்கு உதவும் வகையில் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 நமது உறவுகளின் ஆசைகளை நிறைவேற்றுவோம். அவர்களை அல்லாஹ்வை பயந்தவர்களாக உருவாக்குவோம். அந்த உறவு நாளை நமக்கு பயன்படும். காசு பணத்தை சேகரிப்போம். இந்த உலகின் மீதான ஆசையில் அவற்றை சொத்துக்களாக திரட்டி மட்டுமே வைப்பதை தவிர்த்து   அவற்றை தேவையான நல் வழியில் செலவழிப்போம்

 இதில் எந்த அளவு நாம் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறோமோ அந்த அளவில் நாம் புத்தி சாலிகளாக இருப்போம்.

 ஆயிஷா ரலி அவர்கள் மானியமாக தனக்கு கிடைத்த `12 ஆயிரம் திர்ஹம்களை ஒரு இரவில் தர்மம் செய்தார்கள்.

இந்த உலகை எந்த அளவில் அவர்கள் மதித்தார்கள் என்பதற்கான அடையாளம் அது.

 உலகின் மாபெரும் புத்திசாலிகள் இப்படித்தான் இருப்பார்கள்

 நபித்தோழர் சஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் சிரியாவிலிருந்து காதிஸிய்யாவை நோக்கி படை நடத்திச் செல்லும் போது திஜ்லா – டைகிரீஸ் நதி  குறிக்கிட்டது. அது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. நுரை பொங்கி வழிந்து கொண்டிருந்தது என்று வரலாறு கூறுகிறது

. ومن كُثرة الماء المتواجد بالنهر أصبحت ترمي بالزبد.  

சஃது ரலி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சஹாபாக்கள் 

 نستعين بالله ونتوكل عليه، حسبنا الله ونعم الوكيل، ولا حول ولا قوة إلّا بالله العليّ العظيم”. என்று ஓதிக் கொண்டே திஜ்லாவை கடந்தார்கள்.

 அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள் , எங்களது குதிரை காலடிகள் கூட நனையவில்லை.

  قال أبو هريرة: فمشينا على الماء، فوالله فما ابتلت قدم ولا خف بعير ولا حافر دابة، وكان الجيش أربعة آلاف.

.    இவ்வளவு பெரிய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது இஸ்லாமிய ஆய்வாளர்கள் என்ன கவனிக்கிறார்கள் என்றால்

 இதை விட பெரிய அதிசயம்,  இந்த நிகழ்விற்கு பிறகு மத்யன் நகரிலிருந்த பாரசீக பேரரசின் மொத்த சொத்துக்களும் முஸ்லிம்களுக்கு கிடைத்தன. என்றபோதும் சஃது ரலி அவர்களோ அவர்களது படையினரோ அந்த சொத்துக்களில் நாட்டம் கொள்ளவில்லை. அது தான் பெரிய ஆச்சரியம் என்கிறார்கள்.

  உண்மையில் இவர்களைப் போல புத்திசாலிகள் வேறெவரும் இல்லை.

 மூன்றாவதாக

 இந்த உலகமே பிரதானமானது என்று வாழால் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்றாவது வழி முறை

 சைத்தானிய செயல்களை விட்டு விலகி இருத்தலாகும்.

 إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء﴾.

 சைத்தான் தான் குடும்பம், குலம், வியாபாரம், அரசியலில் பகையையும் வெறுப்பை தருகிறான்.

 அற்ப காரணங்களுக்காக தேவையற்ற பகையை வெறுப்பை நாம் சுமந்து திரிகிறோம். இந்த உலகத்தின் மீதான மோகம் அதற்கு காரணமாகும்.

 மறுமையை அல்லது அல்லாஹ்வை சிந்தித்து வாழ்பவர்களிடம் இத்தகை பகை வெறுப்பு இருக்காது.

 தனது மகள் ஆயிஷா ரலி அவர்கள் மீது அவதூறு சொன்ன மிஸ்தஹ் என்ற தன்னுடைய உறவினருக்கு இனிமேல் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று அபூபக்கர் ரலி அவர்கள் சத்தியம் செய்தார்கள். அவ்வாறு நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் உத்தரவிட்டான். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா என்று திருக்குர் ஆன் கேட்டது.

 

وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنكُمْ وَالسَّعَةِ أَن يُؤْتُوا أُولِي الْقُرْبَىٰ وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ ۖ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (22)

 அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இனிமேல் மிஸ்தஹுக்கு நான் கொடுக்காமல் இருக்க மாட்டேன் என்று அபூபக்கர் ரலி அவர்கள் சத்தியம் செய்தார்கள்.

  فقال أبو بكر: والله إني لأحب أن يغفر الله لي، فرجَّع إلى مسطح نفقته التي كان يُنْفِق عليه، وقال: والله لا أنـزعها منه أبدا.

 புதிய ஆண்டில் நாம் பகை வெறுப்பு ஆகியவற்றிற்கு விடை கொடுத்து வாழ்வோம்இந்த உலக மோகம் நம்மிடமிருந்து விடை பெற்று விடும்/

 நிறைவாக நினைவூட்டுகிறேன்.

 இது அவநம்பிக்கையூட்டுகிற உரை அல்ல;. நமது நம்பிக்கையை சரிப்படுத்திக் கொள்வதற்கான உரை..

இந்த உலக சுகங்கள் அனைத்தையும் துறந்து விட வேண்டும் என்பது இந்த உரையின் நோக்கமல்ல.  

 இந்த உலகின் சுகங்கள் சாதாரணமானவை. நிரந்தரமற்றவை.

 நிரந்தரமான அசாதாரணமான மகிழ்ச்சிக்காக நாம் இந்த உலகில் வாழ வேண்டும்.

 அந்த நிரந்தரத்தின் பேரழகை ஒற்றை வார்த்தை பெருமானார் (ஸல்) அவர்கள் வர்ணிக்கிறார்கள்.

 قال رسول الله - صلى الله عليه وسلم - : " موضع سوط في الجنة خير من الدنيا وما فيها . اقرءوا( وما الحياة الدنيا إلا متاع الغرور 

நாம் மறுமைக்கான பிள்ளைகளாக இந்த புதிய ஆண்டில் வாழ்வோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

3 comments:

  1. بارك الله في علمكم

    ReplyDelete
  2. Anonymous9:40 PM

    ماشاء الله

    ReplyDelete
  3. Anonymous10:20 PM

    Masha allah

    ReplyDelete