வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 03, 2015

பேரிடர் மேலாண்மை

சென்னை கடலூர் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வடகிழக்குப் பருவ மழையின் கடும் பொழிவுக்கு ஆளாகி பரிதாபகரமாக காட்சியளிக்கின்றன.

பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு  கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

பலர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரழந்துள்ளனர்.  இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் இன்று மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.

தங்களது வீட்டிற்கு பக்கத்திலிருந்த ஒரு சிறுவன் வீட்டிற்குள்ளிருந்த பையை எடுத்து வரச் சென்ற போது தங்களது கண்ணெதிரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக சென்னையை சார்ந்த ஒரு பெண்மணி தொலைக் காட்சியில் கூறினார்,

தங்களது கீழ் வீட்டில் ஒரு மூதாட்டி தாத்தாவுடன் குடியிருந்ததாகவும். வெள்ளம் தலைக்குமேல் சென்ற போது தாக்குப் பிடிக்க முடியாமல் மூதாட்டி இறந்துவிட்டதாகவும், தாத்தா  சீலிங் ஃபேனைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார், அவரைக் காப்பாற்றி படகில் அனுப்பி வைத்தோம். மூதாட்டியின் பிணம் நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது, இனி இங்கிருந்தால் இன்பெக்ஸன் அதிகமாகிவிடக் கூடும் என பயந்ந்து வெளியேறுவதாகவும் ஒரு பெண்மணி இன்று பாலிமர் சேனலிடம் தெரிவித்தார்,

பல இடங்களில் மக்கள் இறந்திருக்கிறார்கள், தண்ணீர் வடியும் போதுதான் வீட்டிற்குள் இறந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய மழையில் சென்னைக்கும் மட்டும் ஏற்பட்டிருக்கீற பாதிப்பை தொலைக்காட்சிகள் தொடர்ந்து காட்டி வருகின்றன.

நாட்டின் நடுப்பகுதியில் வசித்தவர்கள் காட்டிற்குள் சிக்கிக் கொண்டவர்களைப் போல நான்கைந்து நாட்களுக்குப் பின் மனித சஞ்சாரத்தைப் பார்க்கிறார்கள்.

மூன்று நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை.

எல்லா வசதிகள் இருந்தும் அத்தியாவசியத் தேவையான பால் குடி தண்ணீர் சாப்பிடத் தேவையான எதுவும் கிடைக்காமல் பல இலட்சம் பேர் தவித்து வருகின்றனர்

சாப்பாடு வேண்டும் என்று வெளிப்படையாக கதறுகிற ஒரு சூழல் சென்னை மக்களுக்கு ஏற்படும் யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்,

குழந்தைகளுக்கு பால் இல்லை, நோயாளிகளுக்கு மருந்துமுதலுதவிக்கான வழியில்லை.

வீடுகளுக்குள்  சாக்கடைத்  தண்ணீரோடு  விஷ  ஜந்துக்கள்  நுழைந்து விட்டன. இது வரை வீட்டிற்குள் நுழைந்த மூன்று பாம்புகளை தான் அடித்ததாக ஒருவர் தொலைக்காட்சியில் கூறினார்,

பணிக்குச் சென்ற பலர் வீடு திரும்ப முடியாமல் அலுவலத்திலேயே தங்க நேர்ந்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கில் வாகனங்கள்  நீரீல்  மூழ்கியுள்ளன.

பயணத்தில்  இடையில் செல்லு மிடமில்லாம் பேருந்து நிலையத்திலும் விமான நிலையத்திலும் ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள்.

வரலாற்றின் முதல் நிகழ்வாக சென்னை விமான நிலையம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

ஆறுகளும் ஏரிகளும் கரை உடைந்து விழும் அபாயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன,

யா! அல்லாஹ் இதற்கு மேல் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது, !
யா அல்லாஹ் உன் எளிய படைப்புக்கள் மீது கருணை காட்டுவாயாக!
இந்த துயரம் இன்யும் தொடராமல் பாதுகாப்பாயாக!

இந்த வெள்ளத்திற்கு பின் அதன் பின் விளைவை பாதுகாப்பானதாக நன்மையானதாக ஆக்கியருள்வாயாக!



பேரிடர்களை அறவே தவிர்க்க முடியாது.

ஜப்பான் நாட்டில் ஏற்படுகிற சுனாமி போல இயற்கையாகவோ ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா அண்குண்டை வீசியது போல செயற்கையாகவோ பேரழிவுகள் ஏற்படுவது  அல்லாஹ்வின் சுன்னத்து. வழி முறை.

இத்தகு சோதனைகளை மனித இனம் எதிர் கொண்டே ஆக வேண்டும்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
அல்லாஹ் மனிதர்களை அவர்களது வாழ்வில் வாழ்விடங்களில் பொருளில் குடும்பத்தில் சமயவிவகாரங்களில் என பல வழிகளிலும் சோதிப்பான்.

இவை அனைத்தும் நன்மை தீமையை நாம் பிர்த்தறிந்து கொள்வதற்காகவே!
நல்லது கெட்டது எது என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவே

وكل هذه الابتلاءات ما هي إلا امتحانات يمتحن الله بها عباده ليميز الخبيث من الطيب ، وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين

பாதுகாவலான இறைவன் மனிதர்களுக்கு ஏற்படுத்து கிற சோதனைகளுக்கான காரணங்கள் பல

1.   நமது பொறுப்புணர்வை நாம் அறிந்து கொள்வதற்காக

أحسب  النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لا يُفْتَنُونَ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ- سورة العنكبوت الآيات : 1-2

குழந்தைகள்,  பணிகள் எப்படி நமது பொறுப்புணர்வை உண்டு பண்ணுகின்றனவோ  அது போல  சோதனைகளும்  நமது  பொறுப்புணர்வை மெருகூட்டுகின்றன,

2.  நமது பாவங்கள் மன்னிக்கப்படவும் அந்தஸ்து உயர்த்தப்படவும்

عن سعد رضي الله عنه قال : قلت : يا رسول الله ، أيُّ الناس أشَدُّ بلاء ؟ قال :
الأنبياءُ ، ثم الأمثلُ فالأمثلُ ، يُبْتَلَى الرَّجُلُ على حَسْبِ دِينه ، فإن كان دِينُهُ صُلْبا اشتَدَّ بلاؤه ، وإن كان في دِينه رِقَّة على حَسبِ دِينه ، فما يَبْرَحُ البلاءُ بالعبد حتى يتركَهُ يَمْشِي على الأرض وما عليه خطيئة
 أخرجه الترمذي

أشد الناس بلاءً الأنبياء ، ثم الصالحون ، لقد كان أحدهم يُبتلى بالفقر حتى ما يجدُ إلا العباءة يجوبها ، فيلبسها ، ويُبتلى بالقمَّل حتى يقتلُه ، ولأحدهم كان أشدَّ فرحاَ بالبلاءِ من أحدكم بالعطاء[ أخرجه الحاكم في مستدركه ]

3.       தன்னுடைய வல்லைமை காட்டவும். மக்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும்,

وأين هامان ؟ وأين قارون ؟ وأين عاد ؟ وأين ثمود
﴿ فَكُلّاً أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِباً وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
الشوق لله تعالى 

இத்தகைய சோதனைகளின் போது மக்கள் சில விசயங்களை கடை பிடிக்க வேண்டும்.

الواجب على العبد حين وقوع البلاء عدة أمور: 

·       أن يتيقن ان هذا من عند الله فيسلم الأمرله. 
·       أن يلتزم الشرع ولا يخالف أمر الله فلا يتسخط ولا يسب الدهر. 
·       أن يستغفر الله ويتوب إليه مما أحدث من الذنوب. 
·       أن يتعاطى الأسباب النافعة لد فع البلاء. 
 
சோதனைகளிலிருந்து காத்துக் கொள்ளும் வழி முறைகளை கையாளுதல் என்ற இந்தக்  கடைசி  அம்சம் இன்று மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

பேரிடர்களை நாம் தவிர்க்க முடியாது, ஆனால் அதிலிருந்து மீளவும் அதன் பாதிப்புக்கள் அதிகமாகாமலும் கவனித்துக்கொள்ள மனிதனுக்கு அல்லாஹ் அறிவைக் கொடுத்திருக்கிறான்,

அந்த அறிவுத்திரனுக்கு  பேரிடர் மேலாண்மை Disaster management or emergency management என்று இன்றைய நவீன உலகம் பெயர் கூறிக் கொள்கிறது.


பேரிடர் மேலாண்மை என்பது அறிவு திறன் படைத்த மனிதன் இயற்கையாக அல்லது செயற்கையாக் ஏற்படும் தீமைகளிலிருந்து எவ்வளவு தூரம் சாத்தியப்படுமோ அவ்வளவு தூரம் தற்காத்துக் உருவாக்கிக் கொண்ட வழிகளாகும்

அல்லாஹ்வின் தீர்மாணிக்கப்பட்ட அதாபிலிருந்து மனிதர்கள் தம்மை தற்காத்துக் கொண்டுள்ளனர்,

யூனூஸ் நபி நைன்வா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார். நினேவா என்பது ஈராக் நாட்டின் டைக்ரிஸ் நதியை ஒட்டி இருந்த நகராகும். அங்கிருந்த மக்களிடம் யூனூஸ் நபி பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே இறைவனுடைய தண்டனை மூன்று நாட்களில் உங்களுக்கு வரும் என்று சொல்லிவிட்டு அந்த ஊரை விட்டு கிளம்பிப் போய்விட்டார்.

முதலில் தென்றலாக வீசிக் கொண்டிருந்த காற்று பின்பு சூடாக ஆரம்பித்ததும், யூனூஸ் நபி சொன்ன தண்டனை வந்து விட்டதென மக்கள் உணர்ந்து கொண்டு பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்களில் மூத்த ஒரு மனிதர் சொன்ன ஆலோசனையின் படி தங்களது குடும்பத்தினர், கால்நடைகள் அத்தனையை அழைத்துக் கொண்டு ஒரு மைதானத்தில் கூடி கூக்குரலிட்டு அழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரினர். அவர்களுடைய கண்ணீரையும், திருந்திய உள்ளத்தையும் பார்த்த இறைவன், அனுப்ப இருந்த தண்டனையை நீக்கி அவர்களை மன்னித்தான்:

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ() (10:98).

யூனுஸ் அலை அவர்களுக்கு மிகத்தனியான ஒரு சிறப்புண்டு

ஒரு நபியின் பிரச்சாரத்துக்குப் பிறகு, அவநம்பிக்கையாளர் ஒருவர்கூட இல்லாமல், ஒட்டு மொத்த ஊரும் நம்பிக்கை கொண்டது யூனூஸ் நபிக்குத்தான். ஒரு லட்சம் பேருக்கு மேல் நம்பிக்கை கொண்டார்கள் என்று குர்'ஆன் கூறுகிறது (37:147).
وَأَرْسَلْنَاهُ إِلَى مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ(147)فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ

எத்தகையை பேரிடரிலிருந்து தப்பிப்பதற்கான வழியைஅதன் ஆபத்துக்களின் சதவீதத்தை குறைத்துக் கொள்வதற்கான வழி முறையை தேடுவது மனிதர்கள் மீது கடமை.  

அவநம்பிக்கை என்பதற்கே இடமில்லை. நிராசையடையுதலும் கூடாது.

அவ்வாறு மக்கள் முய்றசிக்கிற போது அல்லாஹ் மக்களின் பாதுகாப்பு நிம்மதிக்கான வழிகளை நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

பேரிடர்கள் ஏற்படுகிற போது அதிலிருந்து மக்களை காப்பாற்றும் வழிகளை ஆராய வேண்டிய முதல் கடமை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடையது.

நூஹ், லூத், (அலை) ஆகிய நபிமார்களை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கு கடைசியாக பெரும் வேதனையை இறக்கிய இறைவன் அந்த வேதனை வருவதற்கு முன்னதாக நன்மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நபிமார்க்களுக்கு உத்தரவிட்டான்,

நபி நூஹ் அலை அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான்

وَاصْنَعْ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ(37)

قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ

நபி லூத் (அலை)  அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான்
فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنْ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ
லூத் அலை அவர்களது மக்களுக்கு விதிக்கப்பட்ட வேதனைக்கான நேரமாக சுபுஹுடைய நேரம் தீர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் இரவின் கடைசிக் கொஞ்ட நேரத்தில் நம்பிக்கையாளர்களை காப்பாற்றி அழைத்துச் செல்லும் பொறுப்பு லூத் நபிக்கு தரப்பட்டது. நபித்துவ அற்புதமாக வெகு சீக்கிரத்தில் லூத் அலை தன் மக்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார். அது மட்டுமல்ல மக்களை முன்னே செல்ல விட்டு அவர்களுக்குப் பின்னே செல்லுமாறு அல்லாஹ் லூத்து (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டான்.

பேரிடர் ஏற்படும் சமயங்களில் ஆட்சியாளர்கள், தலைவர்கள் மக்கள் மீதான அக்கறையுடனும் கவலையுடனும் நடந்து கொள்வதே பேரிடர் மீட்பு பணியிம் முக்கிய அம்சமாகும்.

தலைவர்களின்  அக்கறைக்கும் கவலைக்கும் பல வகையிலும் தனி முக்கியத்துவம் இருக்கிறது,
·         தமது அதிகாரிகள் தம் மீது அக்கறை கொண்டுள்ளனர் என மக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்
·         தலைமை பொறுப்பிலுள்ளவர்கள் அக்கறை செலுத்தினால் தான் கீழ் மட்ட ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
·         மற்ற உயர் மட்ட பொறுப்பில் இருப்பவர்களும் துணைக்கு வருவார்கள், உதவிகள் பெருகும்.
·         அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.

நபி யூசுப் அலை அவர்கள் வரலாறு காணாத எகிப்தின் உணவுப் பஞ்சத்தை தன்னுடைய பேரிடர் மேலாண்மை நடவடிக்கையால் சமாளித்தார்கள், அந்த சமயத்தில் ரேஷனில் மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கினார்கள், அவ்வாறு உணவு தானியம் வழங்கும் நாட்களில் அவர் நோன்பு வைத்திருந்தார் என்பது மக்களின் வாட்டத்தை போக்கும் முயற்சியில் ஒரு தலைவரின் தனியாத அக்கறைக்கு சான்றாக விளங்குகிறது,

தலைவரின் அக்கறைக்கும் கவலைக்கும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விடம் தனி முக்கியத்துவம் இருக்கிறது,

பத்ரின் போர்க்களத்தில் சஹாபாக்களை அணிவகுத்து நிறுத்திய பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்காக உருவாக்கப்பட்ட அரீஸ் கூடாரத்தில் சஜ்தாவில் விழுந்து யா ஹய்யு யா கய்யூம் என அல்லாஹ்வை இறைஞ்சி தம தோழர்களுக்காக  பிரார்தித்தார்கள். அந்த அக்கறைக்கு வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) பெருமானார் (ஸ்ல) அவர்களுக்கு நாம் ஜெயிப்போம் எதிரிகள் தோற்பார்கள் என ஆறுதல் சொன்னார்கள், அப்படியே நடந்தது.

பெருமானாரிடம் பாடம் பெற்ற அமீருல் முஃமினீன் உமர் ரலி அவர்கள் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கண்டு துடிதுடித்துப் போகிறவராக இருந்தார்கள்,

வரலாறு அந்த அற்புதமான நிகழ்வுகளை பாடம் செய்து வைத்திருக்கிறது,
(உமர் (ரலி) அவர்களைப் பற்றி உமர் உத்தம அரசியலின் அரிச்சுவடி என்று நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இது.) 

பாரசீகம் இராக்  சிரியா பாலஸ்தீனம் லிபியா எகிப்து ஆர்மீனியா இன்றைய ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை உமர் (ரலி) அவர்களின் சாம்ராஜ்ய எல்லை விரிந்து கிடந்தது. வெற்றி கொள்ளப் பட்ட பகுதிகள் அனைத்திலும் திட்டமிட்ட நீதிமிக்க நிர்வாகத்தை உமர் (ரல்) வழங்கியதால் உமர் என்ற ஒற்றைப் பெயர் மக்களுக்கு ஆறுதலை அளிக்கிற சொல்லாகவும் எதிர்களை கிளிபிடிக்கச் செய்கிற சொல்லாகவும் எங்கும் எதிரொளித்தது. இத்தனையும் ஒரு பத்தாண்டுகளுக்குள் நடந்த்து. அதிலும் ஆச்சரியம் என்னெவென்றால் தன்னுடைய படை வென்றெடுத்த பல பகுதிகளை அவர் நேரில் சென்று பார்க்க கூட வாய்ப்புக் கிட்டவில்லை. மதீனா நகரின் பள்ளிவாசல் முற்றத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் போல உட்கார்ந்து கொண்டு பல லட்சம் சதுரமைல்களை அவர் ஆட்சி செய்தார். தனது நிர்வாக நிலப் பரப்பின் எந்த மூளையிலும் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார்.
உமர் (ரலி) மக்கள் வாழ்வுக்கு பொறுப்பேற்றிருக்கிற ஒரு சிறந்த நிர்வாகி என்பதை எப்போதும் நிரூபித்து வந்தார். மக்கள் பஞ்சத்தில் வாட  அவர் மஞ்சத்தில் உல்லாசமாக படுத்திருந்தவர் அல்ல. குளு குளு அறையில் ஆலோசனைகள் என்ற பெயரில் காலம் கட்த்தியவர் அல்ல. மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையில் அதற்குத்தேவையான அக்கறையோடு திறனோடும் செயல்பட்டார்.

கி.பி 630 ல் அரபுலகத்தை கடுமையான பஞ்சம் வாட்டியது. கிராமவாசிகள் பலர் பசி பட்டினியால் இறந்து போனார்கள். பன்னூற்றுக் கணக்கானோர் தலைநகர் மதீனாவை முற்றுகையிட்டனர். அங்குதான் உணவு பங்கிடப் பட்டு வந்த்து. உடனே உமர் (ரலி) சிரியா இராக் பாலஸ்தீனில் உள்ள கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார். சரியான நேரத்தில் ஆளுநர்களுடை உதவி வரவே பல்லாயிரக்க்கணக்கானோர் உயிர் பிழைத்தனர். சிரியாவின் ஆளுநராக இருந்த அபூ உபைதார் (ரலி) பெருமளவிலான உதவிப் பொருட்களை அனுப்பியதோடு ஒரு கடிதமு எழுதினார். அதில புகழ் பூத்த அந்த வாசகம் எழுதப் பட்டிருந்த்து.

நான் உங்களுக்கு உணவுப் பொதிகளைச் சுமந்த ஒட்டக அணிகளை அனுப்பி வைக்கிறேன். அதன் ஒரு முனை சிரியாவில் இருக்கும்.மறு முனை மதீனாவில் இருக்கும் என அதில அபூஉபைதா எழுதியிருந்தார்.

மதீனாவை தேடி வந்த மக்களின் துயரை ஆற்றிய பிறகு பாலைவனத்தில் உள்ளோடிய மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு உதவ உமர் (ரலி) ஆட்களை அனுப்பினார்.
அக்காலங்களில் இரவு தோறும் மக்களை உமர் (ரலி) பொது விருந்துக்கு அழைத்தார். நூற்றுக் க்ணக்கானோர் அந்த விருந்தில் கலந்து தங்களது பசியை ஆற்றிக் கொண்டனர். (ஹய்கல்)

நிலமை ஓரளவு சீரடைந்த்தும் மதீனாவில் தங்கியிருந்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை உமர் செய்து கொடுத்தார்.

மக்களுக்கான அத்தியாவசியக் கடமைகளை நிறை வேற்றுவதை அவர்களுக்கு தான் செய்கிற கிருபையாக அவர் அர்த்தப் படுத்த முயல வில்லை. கடமையாக கருதினார். இந்தக் கடமைகளை செய்வதற்கு தானே அதிக பொருத்தமான ஊழியன் என்று அவர் கூறி வந்தார்.

ஒரு முறை அரசாங்க ஒட்டகத்தை ஒரு நீர் குட்டையில் அவர் கழுவிக் கொண்டிருந்தார். உள்ளூர் கார்ர்களுக்கு இந்தக் காட்சி சகஜம். வெளியூரிலிருந்து வ்ந்த ஒரு அரசப்பணியாளருக்கு இது ஆச்சரியத்தை தந்த்து. ஏன் ஒரு ஊழியரிடம் இந்த வேலை நீங்கள் உத்தரவிடக் கூடாது என்று அவர் கேட்டார். உமர் திருப்பக் கேட்டார். சொன்னார் (அய்யுன் அஃபது மின்னீ) என்னை விட சிறந்த ஊழியன் யார்? வந்தவர் வாய்டைத்துப் போனார். அவர் மட்டுமல்ல வரலாறும் கூடத்தான்.     

மற்றொரு முறை அரசாங்க ஒட்டகை ஒன்று காணாமல் போய்விட்ட்தாக் காவலாளி கூறினார். உட்கார்ந்திருந்த இட்த்திலிருந்து வேகமாக எழுந்து கொண்ட உமர் அதை தேடிப் புறப்பட்டார். உடனிருந்தவர்கள் ஒரு வேலைக் கார்ரை விட்டு அதை தேடச் சொல்ல்லாமே என்றார்கள்.

வரலாறு ஒருவரை ஏன் நினைவில் வைத்திருக்கிறது என்பதற்கான காரணத்தை கவனியுங்கள் !

உமர் கூறினார் : ஒட்டகை குறித்து என்னிடம் தான் விசாரிக்கப் படும். என வேலைகாரனிடம் அல்ல

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் தோழர்களோடு பேசுகிற போது
அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவை யில்லாத நிலையில் தான் விட்டுச் செல்வேன்:” என்று அவர் சொன்னார்.
ஒரு தலைவர்  இந்த அக்கறையோடு இருப்பார் எனில் அல்லாஹ்வின் உதவியும் மக்களின் உதவியும் கைகோர்க்கும் எந்த பேரிடரையும் மனிதர்களால் வென்றெடுக்க முடியும்.

தலைவர் என்று நாம் சொல்லுகிற போது ஆட்சித்தலைவர்கள் என்று மட்டும் அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது,

மக்களுக்கான பொதுப் பொறுப்பு வகிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்தக் கடமை இருக்கிறது.

பேரிடர் மேலாண்மையின் முதல் அம்சம் மக்களைப் பற்றிய கவலையும் அந்தக் கவலையின் அடிப்படையிலான தீவிரமான திட்டமிட்ட செயலுமாகும்.

இதை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பேரிடர் மேலாண்மையில் அரசுகளுக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட மக்களுக்கும், சமூக சேவை அமைப்புக்கள், குடியிருப்போர் சங்கங்கள் போன்ற மக்கள் குழுவினருக்கும் பொறுப்பு இருக்கிறது.

காரணம் அரசின் உதவி பின்னால் வரும், உடனே கிடைப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி தான்.

என்வே பேரிடர் மேலாண்மை என்ன என்பது சம்பந்தமாக நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

சென்னை உலகின் ஒரு பெரு நகராக இருந்த போதும் சிங்கப்பூர் போன்ற ஒர் சின்ன நாட்டின் கால் வாசி அளவுக்கு கூட பேரிடர் மேலாண்மையில் போதிய அறிவும் அனுபவமும் அக்கறையும் இல்லாமல் இருக்கிறது.  

பேரிடர் மேலாண்மை என்றால்  அபாயநிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும் 

நன்றாக ஞாபகத்தில் வையுங்கள் ஆபத்து ஏற்பட்ட பிறகு செய்யப்படும் நடவடிக்கை களுக்கு மட்டும் பேரிடர் மேலாண்மை என்று பொருளல்ல.
அதற்கு முன்னரே அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், தொற்றுநோய் பரவாமல் தடுத்தல், தூய்மை செய்தல் ஆகியவையே பேரிடர் மேலாண்மையின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் இப்போதோ நம்முடைய அரசுகள் எல்லாம் கைமீறிப்போன பிறகு இந்த நிர்வாக அமைப்பை பற்றி பேசுகின்றன, அந்தக் குழு வந்தது இந்தக் குழு வந்தது என்கிறார்கள்.
பேரிடர் மேலாண்மையின் இன்னொரு முக்கிய அம்சம
அரசாங்கம், அரசாங்கம் சார்ந்த, மற்றும் அரசாங்கம் சாரா சேவை அமைப்புக்களின் சேவை அனைத்தும ஒன்று பட்டு பயனுள்ள அவசரநிலை நிர்வகித்தல் என்பதாகும் பேரிடர் மேலாண்மை என்பது இதையே  முற்றிலுமாக சார்ந்திருக்கிறது என நிர்வாக இயல் கூறுகிறது.
நமது இப்போதைய சென்னை வெள்ளத்தை அதன் பிறகு செய்யப்படுகிற சேவைகளை எடுத்துக் கொண்டால் எங்கே அவசர தேவை யாருக்கு தேவை என்ன மாதிரியான சேவை தேவை என்பதை நிர்வகிக்க ஒரு பைசாவுக்கு கூட முயற்சி மேற்கொள்ளப்பட வில்லை என்பதை நாம் பார்த்த்தோம்.
வெள்ளச் சேதத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் பேரிடர் மேலாண்மைக்கான ஒரு ஒழுங்கமைப்பு உடனடியாக ஏற்படுத்தப் பட்டிருக்குமானால் பலரை நாம் பாதுகாத்திருக்க முடிய்ம், இன்னும் பலருக்கு தேவையான உதவிகளைச் செய்திருக்க முடியும்,
இன்று வரைக்கும் அத்தகைய ஒரு அமைப்பு இல்லை என்பது தான் தமிழக் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் சோகமாகும்.

மாநிலம், மாவட்டம். தாலுகா, மாநகராட்சி என முழு நிர்வாக அமைப்பைக் கொண்ட ஒரு மாநிலத்தின் தலை நகரத்தில் ஒரு பொறுப்பான அவசர கால் நிர்வாக அமைப்பு ஏற்பட வில்லை என்பதை நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருந்தால் மறக்க கூடாது.
நம்முடைய நாட்டில்  National Disaster Management Authority  தேசிய பேரழிவு நிர்வகித்தல் ஆணையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இது மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கீழ்படிந்த ஒரு அரசாங்க அமைப்பு ஆகும்.

இந்த ஆணையம் 2008-ல் அமைக்கப்பட்டதிலிருந்து 2012 வரை ஆணையத்தின் தேசிய செயற்குழு ஒரு முறைகூடக் கூடியதில்லை என்று இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தனது 2013 அறிக்கையில் குற்றம் சாட்டினார்  என விக்கீபீடியா கூறுகிறது.

அதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் பீகார், குஜராத், ஒடிசா தம்ழிழகம்  உட்பட ஏழு மாநிலங்களைத் தவிர,வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆணையம்கூட அமைக்கப்படவில்லை

தமிழ் நாட்டில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல், சுனாமி, மழை வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவும் முதலமைச்சர் தலைமையில் செயல்படுகிறது என அரசு அறிவிப்பு கூறுகிறது.

அது எப்படிச் செயலபடுகிறது என்பதை இந்த மழைக்கால வேதனையை அனுபவித்த மக்கள் அறிவார்கள்.

அதே போல இதற்காக தனிப் படை அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதை ஒரு மாநிலம்கூடச் செய்யவில்லை  (தி இந்து. 16 அக்டோபர் 2013. )

இதை எல்லாம் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதற்காக குறை கூறி க் கொண்டிருப்பதற்காக சொல்லவில்லை,

ஒரு நாகரீக சமுதாயத்தில் வாழ்கிற பிரஜைகளாக நாம் கவனிக்க தவறு விசயங்கள் என்ற அடிப்படையிலேயே இங்கு எடுத்துக் கூறுகிறோம்.

ஜப்பானிய மக்களின் விழிப்புணர்வை நாம் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பல முறை சுனாமித் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அமெரிக்காவின் குண்டு வீச்சுக்கு ஆளானவர்கள், இயற்கையான பேரிடர், செயற்கையான பேரிடர் இரண்டுக்கும் ஆளானவர்கள் பேரிடர் கால நிர்வாக அமைப்பை மிகச் சிறப்பாக பராமரிக்கிற காரணத்தால் தமக்கேற்படுகிற பாதிப்பின் அளவை கனிசமாக குறைத்துக் கொள்கிறார்கள்.

இந்த வேதனையான சந்தர்ப்பத்தில் இதை நா ம் எண்ணிப் பார்க்க வேண்டும்,

பாதிப்புக்குள்ளான மக்கள் தமக்கேற்பட்ட சிரமங்களை இது அல்லாஹ்வின் நாட்டம் என தங்களுக்கு ஏறபட்ட சிரமங்களைத் தாங்கிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை கவனிக்க வேண்டும். மற்றவர்கள் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தாரளமாக உதவி செய்ய வேண்டும்.

இது மாதிரி சந்தர்ப்பத்தில் உதவுவதற்கு நிகரான மனிதாபிமானச் செயல் வெறெதுவும் இருக்க முடியாது,

அல்லாஹ்வை சந்திக்கிற இடம் இது

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي- مسلم 4661


மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிற அதே நேரத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான 4 அம்சங்களை அறிந்து கொள்வது நாம் பொறுப்பை உணர்ந்து நடக்க உதவும்.  

பேரிடர் மேலாண்மையின் முக்கியமான நான்கு அம்சங்கள் இவை

1.   Mitigation மட்டுப்படுத்தல்
2.   Preparedness ஆயத்தமாயிருத்தல்
3.  Response பிரதிசெய்தல்
4.       Recovery மீட்பு


மட்டுப்படுத்தல் Mitigation

பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே அதன் பாதிப்பை மட்டுப்படுத்தும் நீண்டகால நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
யூனுஸ் அலை அவர்களது மக்களின் பிரார்த்தனை
காலரா பரவியிருக்கிற ஊருக்குள் நுழைய வேண்டாம் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் உத்தரவு ஆகியவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.  
பேரிடருக்கான அறிகுறிகள் தோன்றுகிற போதே பள்ளிக் கூடங்கள் மண்டபங்கள் பூங்காக்கள் போன்ற இடங்களை நிவாரணக் கூடங்களாக தயார் செய்தல் போன்ற மட்டுப்படுத்தல் நடவடிக்கைகள்  இடையூறுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு மிகவும் ஆற்றல்வாய்ந்த முறையாகும்
இது பேரிடர் மேலான்மையின் முன்னோடி நடவடிக்கையாகும்.
இது குறிந்து அரசு மட்டுமல்ல, இந்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிற மக்களும் சிந்திக்க வேண்டும்.

 

ஆயத்தமாயிருத்தல்

பேரிடரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருத்தல் என்பதில் இது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களுகான திட்டங்களை வகுப்பதும் தீயனைப்பு போன்ற தேவையான சேவைகளை  சரியான பராமரிப்பதும்  பயிற்சி மேற்கொள்வது மாகும்,
மேலை நாடுகள் பலவற்றில் இத்தகைய சூழ்நிலையில் வசிப்பவர்களுக்கு ஆபத்து காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகள் குறித்து முறையான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன,
ஏரிக்குள் வீடு கட்டிக் கொண்டிருக்கிற நம்முடைய மக்களுக்கு இத்தகைய பயிற்சிகள் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது எதார்த்தமாகும்.
அதே போல ஆபத்து ஏற்பட்டால் மக்கள் செல்ல வேண்டிய பாதுகாப்பிடங்கள் மற்றும் வெளியேற்றுதல் சம்பந்தமான  திட்டங்களும் ஆயத்த நடவடிக்கையில் அடங்கும்.  -
அதே போல பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை உருவாக்குவதும் இதில் ஒரு முக்கிய அம்சமாகும்.
எவ்வளவு இழப்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்று ஊகிப்பதும் இதில் ஒரு அம்சமே  
மீட்புக்குழுக்களுக்கும் இடையில் பரஸ்பர உதவி ஒப்பந்தங்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வெளியேற்றுதலைச் செயல்படுத்தல் போன்ற திட்டமிடல் முன்னதாகவே முறைப்படுத்தி பயிற்சியளித்திருக்க வேண்டும்.
மக்கள் சரியான எச்சரிக்கை வழங்குவது பேரிடர் மேலாண்மையின் மிக முக்கிய அம்சமாகும்.
நம்முடைய நாட்டில் வானிலை அறிக்கை என்பது ஏதோ ஜோசியக்காரனின் அறிக்கைகள் போலவே அமைந்திருகக்கின்றன. துல்லியம் இவற்றில் மிகவும் குறைவாக இருக்கிறது.
இலண்டனிலிருந்து ஒருவர் பத்ரிகைகளுக்கு எழுதுகிறார்.
1988 ம் ஆண்டு இங்கிலாந்து அரசி எலிசபெத் அம்மையார் இந்தியாவுக்கு வந்த போது 10 மாதங்களுக்கு முன்னதாகவே அவரது திட்டம் ஆராயப்பட்டது, அதில் அவர் காஞ்சிபுரம் செல்வதும் தீர்மாணிக்கப்பட்டது, அப்போதே பிரிட்டிஷ் அதிகாரிகள் அரசியின் பயண காலத்தின் சீதோஷ்ணம் குறித்து ஆராய்ந்தார்கள், அப்போது அரசி காஞ்சிபுரம் செல்கின்ற அன்று கடுமையான மழை இருக்கும் என்று அனுமானித்தார்கள், அதை இந்திய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி தக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள், அதன் படியே அரசி காஞ்சிபுரம் வந்த அன்று கடும் மழை பொழிந்தது, காஞ்சிபுரம் பயணத்தை இரத்து செய்யுமாறு அதிகாரிகள் கூறினார்கள், ஆனால் தகுந்த ஏற்பாடு செய்யப் பட்ட கார்ணத்தால் அரசி அந்த மழையிலும் காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்.
எனவே நமது வானிலை அறிக்கைகளின் துல்லியம் கேள்விக்குள்ளாக்ககப் பட வேண்டும். தேவையான ஆய்வுக்கருவிகள் விஞ்ஞானிகள் இதில் ஈடுபடுத்தப் பட வேண்டும்,
இவை அனைத்தும் ஆயத்தமாக்குதலின் செயல்பாடுகளாகும்.
திருக்குர் ஆண் யூசுப் அலை அவர்கள் கடும் பஞ்சகாலத்தை எதிர் கொள்ள ஆயத்தமாவதற்கு சொன்ன செய்திகளை கூறுகிறது. அதே போல திருக்குர் ஆனிய விரிவுரையாளர்கள் அந்தப் பேரிடரை யூசுப் அலை எதிர் கொண்ட வரலாற்றையும் தெளிவாக கூறுகிறார்கள்.
பயிர்களை அதன் கதிரிலேயே பக்குவப்படுத்தி கெட்டுப் போகாமல் பாதுகாத்த யூசுப் அலை அவர்கள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்களுக்கு ரேஷன் முறையில் தானியங்களை வழங்கினாரக்ள்.
يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ(46)قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ(47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ(48)ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ(49)

 

பிரதிசெயல் Response

பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான சேவையை ஒருங்கிணைத்துச் செய்வதே பேரிடர் மேலாண்மையின் ஒரு முக்கிய அம்சமாகும்.
பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதும் மீட்பதும் இதில் அடங்கும்.
பால் தண்ணீர் உணவுப் பொருட்கள் கம்பளிகள் முன்னெச்சரிக்கையான மருந்துகள் ஆகியவற்றை அரசுகளும் நிர்வாக அமைப்புக்களும் தயாரக வைத்திருக்க வேண்டும்.
சிரமம் ஏற்பட்ட பிறகு திரட்டிக் கொண்டிருப்பது பேரிடர் மேலாண்மை ஆகாது,

மீட்பு Recovery


மீட்பு என்றால் அழிந்த சொத்துக்களை மறு கட்டமைத்தல், மறு-வேலைவாய்ப்பை உருவாக்குதல்  மற்றும் மற்ற தேவையான உள்கட்டமைப்புகளைச் சரிசெய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும்.
இந்த அம்சங்கள் குறித்து நம்முடைய அக்கறையை பரிசோதித்துக் கொள்வதற்கு இப்போதை பேரிடரை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.
தீடீர் ஆபத்துக்கள் சோதனைகள் தவிர்க்க முடியாதவை அது நாம் நல்லது கெட்டதை அறிந்து கொள்ள உதவக் கூடியது என்பதை கவனத்தில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.
இந்தக் கடும் மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலையும் நிவாரணத்தையும் தந்தருள்வானாக!
மழையை பாதுகாப்பானதாக நன்மையானதாக ஆக்கியருள்வானாக!
இத்தகைய பேரிடர்களிலிருந்து மனித குலம் முழுவதையும் அல்லஹ் பாதுகாப்பானாக!
பேரிடர்கள் நிகழ்கிற போது அதை அறிவார்த்தகமாகவும் சரியாகவும் அணுகக் கூடிய பக்குவத்தை அல்லாஹ் நம்க்கும் நம்முடைய ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கும் வழங்குவானக!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இயன்ற வழிகளிலெல்லாம் உதவியவர்களுக்கு அதற்குத் தகுந்த கூலியை அல்லாஹ் தந்தருள்வானாக. அவர்களுடைய ஈருலக வாழ்க்கையை அல்லாஹ் வெளிச்சமானதாக ஆக்குவானாக! அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த  செல்வத்தையும் முழு ஆபியத்தையும் தந்தருள்வானாக!!!



9 comments:

  1. الحمدلله رب العالمين

    ReplyDelete
    Replies
    1. musab bilali7:43 PM

      Masha Allah alhamdhulillah allahubakbar

      Delete
  2. இந்த நேரத்திற்கு பொருத்தமான பயான். الحمد لله. جزاك الله خىرا كثيرا.BY:M.G.S.மஹ்ழரி.

    ReplyDelete
  3. இந்த நேரத்திற்கு பொருத்தமான பயான். الحمد لله. جزاك الله خىرا كثيرا.BY:M.G.S.மஹ்ழரி.

    ReplyDelete
  4. அற்புதமான கட்டுரை...இன்றைய அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் கட்டாயம் நாம் நடத்த வேண்டிய பாடம் தங்களது கட்டுரை

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் ...
    பேரிடரின் சமயம் மக்களின் பொறுப்பு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பு துயர் துடைக்கும் முறை குறித்து ஆழமாகவும் அழுத்தமாகவும் சமகாலத்தில் பொருப்பிலிருப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமைந்தது இவ்வார வெள்ளிமேடை...ஜஸாகல்லாஹ் ஹஸரத்

    ReplyDelete
  6. جزاك الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete
  7. அருமையான காலத்திற்கு தோதுவான கட்டுரை

    ReplyDelete
  8. Anonymous9:46 PM

    ما شاء الله

    ReplyDelete