வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 04, 2023

இத்தா, சங்கடம் அல்ல; சரி செய்தல்

 وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ [البقرة:228].

 சமீபத்தில் புர்கா என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அது இஸ்லாமிய இத்தா சட்டத்தையும் முஸ்லிம் சமூக அமைப்பையும் குறைபேசுகிற வித்த்தில் அமைந்திருந்த்து.

 இதில் முஸ்லிம்கள் பலரும் ஆத்திரமடைந்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை பரிமாறினர்.

 பொதுவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு எதார்த்தம் என்னவெனில்

 இன்றைய காலகட்டம் இஸ்லாம் எல்லா வகையிலும் குறிவைக்கப்படுகிற காலகட்டம். குறிவைப்பவர்கள் யோக்கியர்கள் அல்ல, அவர்களுடைய முதுகுக்குப்பின் மூக்கை துளைக்கிற நாற்றங்கள் உண்டு. இன்றைய நடைமுறையில் இஸ்லாமை விமர்சித்தால் பிரபல மாகிவிடலாம் என்பதற்காக அல்லது பொய்யை உண்மை போல காட்டி அரசியல் ஆதாயமடைவதற்காக இத்தகையை இழிவான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

 அத்தைகையோருக்கு தேவையற்ற விளம்பரத்தை தந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 அதே நேரத்தில் நமது அற்புதமான மார்க்கத்தின் சட்டங்களை நாம் சரியாக புரிந்து கொள்ளவும் புரிய வைப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 திரைப்பட்த்தை எதிர்ப்பதை விட்டு விட்டு இஸ்லாமை விளக்கி கூறும் விவாதங்களை ஏன் நாம் பொது வெளியில் எழுப்ப கூடாது? அது இஸ்லாமின் பிரச்சாரத்திற்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக அமையலாம் அல்லவா ?

 முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்களை உமர் ரலி அவர்கள் வெட்டுவதற்காக வாள் ஏந்தி வந்த சூழலில் அல்லவா இஸ்லாம் வென்றது.?

 இப்போது பாருங்கள்!

 இஸ்லாமிய இத்தா நடைமுறையை கொச்சைப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிற சூழலில்

 இஸ்லாமிய சட்ட அமைப்பே உலகின் தலை சிறந்த சட்ட அமைப்பு என்பதை நிரூபிக்கும் புதிய தொரு நிகழ்வு கடந்த வாரத்தில் நடைபெற்ற்றிருக்கிறது. .

 ஏப்ரல் 30 உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.

 மனம் ஒத்து பிரியும் தம்பதிகள் 6 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை

 இதற்கு முன்னதாக ஒரு தம்பதி பிரிய விரும்பினால் அவர்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று இருந்தது. பிறகு அந்த கால அளவை குறைத்து ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்ற சட்டம் நடப்பில் இருந்தது.

 இப்போது ஆறு மாதம் கூட காத்திருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் ஒரு திருமணத்தை ரத்து செய்ய கருதுமானால் 12 வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அதை உடனடியாக செய்து விட முடியும்

6 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை என்று இப்போது கூறியுள்ளது. இதை அதிரடி தீர்ப்பு என பத்ரிகைகள் ஆர்ப்பரிக்கின்றன.

 விவாகரத்திற்கு இறுதி முடிவெடுத்து விட்ட தம்பதிகளுக்கு இந்த சட்டம் பெரிய தொரு தலைவலியாக இருந்தது. இப்போது அதற்கொரு முடிவு வந்திருக்கிறது. இது  அறிவினுடையவும் சிந்தனையுடையவும் முதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

 இது இஸ்லாமிய சட்டத்துறைக்கான ஒரு வெற்றியாகும்.

 ஏனெனில் பிரிவது என்று முடிவு வந்து விட்டால் உடனடியாக பிரிந்து விடுகிற இலகுவான ஏற்பாட்டை இஸ்லாம் 1400 ஆண்டுகளாக அமுல்படுத்தி வருகிறது.

 அன்தி தாலிக் என்ற ஒற்றை வார்த்தையில் இஸ்லாமிய விவாகரத்து நடந்து விடும். சாட்சிகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

 ஆனால் இந்த ஒற்றை வார்த்தைக்கு முன்னதாக கவனிக்க வேண்டிய ஏராளமான விசயங்கள் உண்டு.

 ஏனெனில் இந்த ஒற்றை வார்த்தை அல்லாஹ்வை கோப்படுத்தக்கூடியது.

 عن ابن عمر ـ رضي الله عنهما ـ قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الحلال إلى الله الطلاق ـ رواه أبو داود,

முறைகேடாக தலாக் சொல்லப்படும் போது அல்லாஹ்வின் அர்ஷு குலுங்குகிறது

 தப்ரானியில் ஒரு ஹதீஸ் வருகிறது.

  تزوجوا ولا تطلقوا فإن الطلاق يهتز منه عرش الرحمن..

ஒரு முறையற்ற தலாக் உலகில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

 பெண் ஆண் துணையற்றுப் போவது

குழந்தைகள் நிராதரவாவது

குடும்பம் கடும் துயரை சந்திப்பது.

சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகள் ஏற்படுவது.

 இதில் ஒவ்வொன்றும் இரத்தக்கண்ணீர்ரை வரவழைப்பவையாகும்.

 அதே போல பெண்களுக்கும் விவாகரத்து கோரும் உரிமை இருக்கிறது என்றாலும் அவள் நியாயமற்று விவாகரத்து கோருவதை பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

 قال  رسولُ اللهِ - صلَّى اللهُ عليهِ وسلَّم - : أيُّما امرأةٍ سألَتْ زوجَها طلاقَها في غيرِ ما بَأْسٍ ؛ فحرامٌ عليها رائِحَةُ الجنةِ

 இதுவும் இது போன்ற இன்னும் ஏரளாமான அறிவுரைகளும் ஒரு திருமணத்தை பாதுகாப்பதற்கு இஸ்லாம் அளவிற்கு அக்கறை செலுத்தியது இந்த உலகில் வேறு யாரும் இல்லை எனபதற்கு சான்றாக இருக்கின்றன.  

 அதே நேரத்தில் ஒரு திருமண உறவை நியாயமாக தொடர முடியாத சூழலில் தம்பதியர் தங்களது மனோ விருப்பத்தை மறைத்துக் கொண்டு சமூகத்திற்காக போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 பெருமானார் (ஸல்) செய்து வைத்த ஒரு திருமணம் மனப்பொருத்தம் சரியாகாமல் தள்ளாடியது.

 நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்பு மகன் ஜைது பின் ஹாரிதா ரலி அவர்களுக்கு தனது மாமி மகள் ஜைனப் பின்து ஜஹ்ஸ் ரலி அவர்களை திருமணம் செய்து வைத்தார்கள். ஜைனப் அம்மையார் குறைஷிக் குலத்துப் பெண்மணி ஜைது ரலி அடிமையாக இருந்து பின்னர் பெருமானாரின் வளர்ப்பு மகனாக ஆனவர். இவர்களுக்கு மஹராக பெருமானார் (ஸல்) அவர்கள் 10 தீனார் 60 திர்ஹம்கள் 1 முக்காடு, ஒரு போர்வை,  ஐம்பது கையளவு கோதுமை, 10 கை பேரீத்தம் பழம் ஆகியவற்றை நிர்ணயித்து திருமனம் செய்து வைத்தார்கள்..

 அப்படி இருந்தும் இவ்விருவருக்கும் இடையே உறவு சரிப்பட்டு வரவில்லை. தனது மனைவிக்கும் தனக்கும் இடையே உறவு சரிப்பட்டு வரவில்லை என ஜைது ரலி முறையிட்டார்கள். தனது மாமி மகளுக்கு தான் செய்து வைத்த அந்த திருமணம் முறிவது பெருமானாருக்கு சங்கடத்தை கொடுத்தது. அதனால் அந்த உறவை முறித்து விட பெருமானார் (ஸல்) அவர்கள் தயங்கினார்கள். உன் மனைவியை விட்டு விட வேண்டாம் என ஜைது ரலிக்கு அறிவுரை கூறினார்கள்.  அல்லாஹ் இந்த தயக்கம் தேவையற்றது என்று அறிவுறுத்தினான்.

  وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ ۖ 

 எனவே நிம்மதியாக ஒரு திருமண உறவை தொடர முடியாத போது பிரிந்து விடும் வழியை இஸ்ளாம் எளிதாக்கியது.

 கல்யாணத்திற்கு கூட சாட்சிகள் அவசியம். விவாகரத்திற்கு சாட்சிகள் தேவையில்லை. 

இந்திய திருமண சட்டத்திலோ இரண்டு பேர் மனம் ஒப்பி கல்யாணம் செய்து கொள்ளும் போது சாட்சிகள் தேவையில்லை  ஒரு போட்டோ வுக்கு முன்னாள் நின்று ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி விட்டால் போதுமானது. ஆனால் இருவரும் மணம் ஒப்பி பிரிந்து விடலாம் என்று நினைத்தால் அது முடியாது, நீதிமன்றத்தை அணுக வேண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த நீதிமன்ற நடைமூறைகள் கூறின,.

 இவ்வாறு ஆறு மாத கால காத்திருப்பு என்று நீதிமன்றங்கள் கூறியதற்கு ஒரு காரணம் இல்லாமல் இல்லை.

 ஒரு உணர்ச்சி வேகத்தில் சண்டையிட்டு விவாகரத்து கோரும் தம்பதிகள் இடையில் மனவேற்றுமையை கலைந்து ஒன்று பட்டு விடுகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே இப்படி ஒரு காத்திருப்பு காலத்தை வைத்திருந்தனர்.

 ஆனால் இது பொருத்தமற்ற ஏற்பாடாகவே பெரும்பாலும் அமைந்த்து.

 ஏனெனில் சண்டையிட்டுக் கொள்கிற தம்பதிகள் விவாகரத்து கிடைப்பது வரை அதே கொதி நிலையிலேயே இருப்பதனால் இந்த காத்திருப்பால் பெரிதாக பயன் எதுவும் கிடைக்கவில்லை \. காத்திருப்பின் சிரமத்த தவிர.

 இந்த இட்த்திலே தான் அல்லாஹ்வின் சட்டம் அற்புதமாக பங்காற்றியது.

 மணவிலக்கு கோருகிற கொதி நிலைக்கு வந்து விட்டவர்களை உடனே பிரித்து வைத்து விட்டு அப்புறமாக காத்திருக்க இஸ்லாம் கூறியது.

அந்த காத்திருப்புக்கு பெயர் இத்தா ஆகும்.

 இங்கே கவனிக்க வேண்டும். முதல் அல்லது இரண்டாவது தலாக் விடப்படும் போது இத்தா காலத்தில் மனைவி கணவன் வீட்டிலேயே தங்கியிருப்பாள். அவளுக்கான உணவு உடை உறைவிட வசதிகளை இத்தா காலம் வரை கொடுப்பது கணவனின் கடமையாகும். இந்த காலத்தில் மனைவி தன்னை அலங்கரித்து கொள்ளலாம்

 இந்த ஏற்பாடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிற தம்பதிகளை மீண்டும் இணைத்து வைப்பதற்கான அற்புதமான  உளவியல் ஏற்பாடாகும்.

 இந்த காலகட்ட்த்தில் தம்பதிகள் இணைந்து கொள்ள விரும்பினால் ஐ லவ் யூ என்ற ஒற்றை வார்த்தையில் அல்லது அரை முழம் பூவில் அல்லது அரைக்கிலோ அல்வாவில் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி இணைந்து கொள்ளலாம்.. திரும்ப திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 தம்பதிகளுக்கிடையிலான சண்டை ஒரு சிறியதாக இருக்குமானால் அதை சரி செய்து கொள்ளவும் அவர்களுக்கிடையாயன சண்டை மிக தீவிரமானதா என்பதை கண்டறிந்து கொள்ளவும் இஸ்லாமின் இந்த  ஏற்பாடு அற்புதமாக உதவக் கூடியது.  

 இந்த காத்திருப்பு காலம் முடிந்த பிறகே உண்மையில் தலாக் என்பது தலாக பாயின் எனும் பிரிவாக மாறுகிறது.

 அதன்பிறகு தம்பதிகள் இணைய விரும்பினால் புதிதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

 உண்மையில் இஸ்லாமிய காத்திருப்பு காலமான இத்தா என்பது திருமண தம்பதிகளுக்கிடையிலான உறவையும் உரிமைகளையும் பேணுவதற்கான ஒரு அற்புதமான ஏற்பாடாகும்.

 குடும்ப அமைப்பு, சமூக ஒழுங்கு, வமிசப் பாதுகாப்பு, ஆகியவற்றிற்கு இத்தா மிக முக்கிய பங்களிப்பு செய்யக் கூடியதாகும்.

 இனி இத்தா பற்றிய தகவல்கலை ஓரளவிற்கு தெரிந்து கொள்வொம்.

 இத்தா என்ற வார்த்தைக்கு காத்திருப்பு காலம் என்று சுருக்கமாக அர்த்தம் வைத்துக் கொள்ளலாம்.

 அதனுடைய முழு பொருள்

 أجل حدده الشرع للمرأة التي حصلت الفرقة بينها وبين زوجها بسبب

 விவாகரத்து அல்லது கணவரின் மரணத்திற்குப் பிறகு அடுத்த திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்க வேண்டும் என ஷரீஅத் நிர்ணயித்த காலமாகும்.

 இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் முதன்மையானது இது ஷரீஅத்தின் ஹக் – அதாவது மார்க்கத்தின் விதியாகும்.

 அதாவது ஒரு கணவன் மனைவியிடம் நீ எனக்காக இத்தா இருக்க தேவையில்லை என்று கூறினால் அது செல்லாது. ஏன் எனில் இத்தா கணவரின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்றாலும் இது ஷரீஅத்தின் விதியாகும்.

 நமது மஹல்லாக்களில் இத்தா விசயத்தில் பல அத்துமீறல்களை பார்க்கீறோம். 

சிலர் சின்னப் பொண்ணு அதனால 40 நாட்கள் இத்தா இருந்தா போதும் என்றும்

 கணவன் மனைவிக்கு இடையே பல வருடங்களாக தொடர்பே இல்லை. அதனால் இத்தா வே தேவையில்லை என்றும்

 பெண் வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் தினசரி வேலைக்குச் சென்றால் தான் சாப்பிட முடியும் அதனால் இத்தா இருக்க தேவையில்லை என்றும்

 இத்தனை வயதிற்குப் பிறகு இத்தா எல்லாம் எதற்கு தேவையில்லை என்றும் மிக சகஜமாக சட்டம் கூறிவிடுகிறார்கள்.

 பல இடங்களிலும் 40 நாட்கள் இத்தா என்று மார்க்கத்தில் எந்த இட்த்திலும் இல்லாத ஒரு அபாண்டமான நடைமுறையை கடைபிடிக்கிறார்கள்.

 இவை அனைத்தும் அறியாமையாகும் அது மட்டுமல்ல அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிரான எல்லை மீறுதலும் ஆகும்.

 பெண் வயதுக்கு வராத சின்னப் பெண் என்றாலும் அவளுக்கு நிர்ணயிக்கப் பட்ட இத்த உண்டு.

 பெண் வாடகை வீட்டில் குடியிருக்கிறார் என்றால் அவருக்கான இத்தா முடியும் வரை வாடகையை செலுத்த வேண்டியது கணவன் அல்லது அவனது உறவினர்களின் கடமையாகும் யாரும் இல்லை எனில் ஜமாத்துக்கள் பொறுப்பேற்று வாடகை வழங்க வேண்டும்.

 அதே போல இத்தா இருக்கிற பெண் சம்பாதிக்க வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தால் அதற்காக வெளியே சென்று வர அனுமதி உண்டு ஆயினும் இத்தாவை அனுஷ்டிக்க வேண்டும்.

 நன்றாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இது ஷரீஅத்திற்கான ஹக்காகும்.

 இதை தவிர்க்க - அல்லது தள்ளுபடி செய்ய - அல்லது தளர்வுகளை தர நம்மில் எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.

 முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் இதை உறுதியாக புரிந்து கொள்ள வேண்டும்.

 அதே நேரத்தில் இத்தா என்றால் என்ன அதில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ன என்று தெரிந்து கொண்டால் இத்தா என்பது ஒரு பெரும் சிரம்மான காரியமாக தோன்றாது.

 நமது சமூகத்தில் சில இடங்களில் இத்தா வின் நடைமுறைகளை மிக சிக்கலானதாக புரிந்து வைத்திருக்கறோம். அதுதான் இத்தா நடைமுறைகளில் குழப்பம் ஏற்பட முக்கிய காரணமாகும்.

 பலரும் இத்தாவை துக்கம் அனுஷ்டிப்பது என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் எல்லா இத்தாவிலும் இந்தக் கருத்து பொருந்தாது.

 இத்தா வின் முதல் தடை என்பது – குப்பிட்ட காலத்திற்குள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதாகும்.

 இன்னொரு திருமணம் செய்ய காத்திருப்பது என்பதுதான் இத்தாவிற்கான விளக்கம் என்பதை நாம் முன்னரெ பார்த்தோம். அதை சமூகத்தின் எல்லா மட்டதிற்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

 மீண்டும் ஒரு தடவை நமக்குள் சொல்லிக் கொள்வோம்.

 இத்த என்பது இன்னொரு திருமணத்திற்காக காத்திருக்கும் காலமாகும்.

 இதில் நினைவில் வைக்க வேண்டிய மற்றொரு அம்சம்.

 இந்த காலத்தில் திருமணம் செய்தால் அது செல்லாது.  அது ஹராம் ஆகும்.

 சமீபத்தில் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மூன்றாவது திருமணம் செல்லாது என்று அறிவித்தது. அதற்கு காரணம் அவரது மூன்றாவது மனைவியை முந்தைய கணவரிடமிருந்து விவாகரத்து  பெற்ற பிறகு இத்தா காலம் முடிவதற்குள்ளாக திருமனம் செய்து கொண்டார்.

  நம்முடைய பகுதிகளிலும் சில நேரங்களில் இத்தகை விபத்து நடக்கிரது,  கணவனை பிரிந்து பல ஆண்டுகள் தனியாக இருக்கிற பெண்ணுக்கு வேறு திருமண வாய்ப்புகள் அமையும் போது அவசர அவசரமாக தலாக்கை பெற முயற்சி செய்கிறார்கள். அலைந்து திரிந்து தலாக்கை பெற்றவுடன் இத்தா காலம் கழிவதற்குளாக திருமணம் செய்ய அவசரப்படுகிறார்கள்.

 இது தவறாகும்.

 ஒரு ஞாயிற்றூக்கிழமை மறுமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் நடை பெற்ற பிறகு விவகாரம் தெரிய வந்த போது ஜமாத்தார்கள் மறுத்துவிட்டனர்.  பெண் வீட்டுக்காரர்கள் ஏதோ இது ஜமாத்தார்களின் சதி என்பது போல சண்டைக்கு சென்றனர், ஒரு பெண்ணிற்கு வாழ்கை கிடைப்பது உங்களுக்கு பொருக்கவில்லையா என்று கோபித்துக் கொண்டனர். எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டும் பயன் இல்லை,. ஏனெனில் இது இஸ்லாமின் சட்டம்.

 இத்தா காலம் முடியாமல் வேறு திருமணம் செய்தல் அது செல்லாது. அது ஹராமாகிவிடும்.

 எனவே மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

இத்தா என்பது இன்னொரு திருமணத்திற்கு காத்திருப்பதாகும்.

 இந்த இடத்தில் இடைப்பட்டு இன்னொரு ஆலோசனையையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்,.

 சில இடங்களில் கணவன மனைவிக்கு இடையே உறவு இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். இது போன்ற சந்தர்ப்பத்தில் தம்பதிகள் சேர்ந்து வாழ வழியில்லை என்பது தீர்மானமாகுமானால் விவாகரத்தை முறையாக செய்து கொள்வதே நல்லது.  அப்போதுதான் மறுமணம் செய்து கொள்ள வாய்ப்பு திடீரென் வரும் எனில் இத்தாவிற்கான பிரச்சனை இருக்காது. அதே தம்பதியர் மறுமணம் செய்து கொள்வதானாலும் முத்தலாக் இல்லாத பட்சத்தில் அதற்கு தடை  இல்லை./

 சரி!  இது வரை இத்தா என்பது அடுத்த திருமணத்திகாக ஷரீஅத் கூறும் அளவு காத்திருத்தல் என்று புரிந்து கொண்டோம்.

 இனி ஷரீஅத் காத்திருக்க கூறும் கால அளவு என்ன என்பதை பார்ப்போம்.  இத்தா என்றாலே நாலு மாதம் 10 நாட்கள் என்று சிலர் புரிந்து வைத்திருக்கிறார்கள் அது தவறு . 40 நாட்கள் இத்தா என்பதும் தவறு,

 இத்தா நான்கு வகையாக இருக்கிறது.

 1.   மூன்று மாதவிடாய் காலம்,

2.   மூன்று மாதம்

3.   நான்கு மாதம் பத்து நாட்கள்

4.   பிரசவம்

 திருமணம் ஆணவுடன் தாம்பத்தியத்திற்கு முன்  கணவன் தலாக் விட்டு விட்டால் அந்த பெண் இத்தா இருக்க தேவையில்லை.

 ا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا   [الأحزاب:49]

 திருமணமாகி தாம்பத்திய உறவிகுப் பின் தலாக் விடப்பட்ட பெண் மூன்று மாதவிடாய்க்காலங்கள் இத்தா இருக்க வேண்டும். (இது சிலருக்கு 48 நாட்களில் முடிந்து விடலாம்.)

 وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ البقرة:228

மாதவிடாய் வராத சிறுமி அல்லது மாதவிடாய் முடிந்த விட்ட பேரிளம் பெண் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.

 கணவரிடமிருந்து குலா பெற்ற பெண்களும் பஸ்கு முறையில் விவாகரத்து பெற்ற பெண்களும் மூன்று மாதவிடாய்க் காலம் இத்தா இருக்க வேண்டும்.

இதில் சில பேர் ஒரு மாதம் போதும் என்று சொல்வார்கள் அது மார்க்கத்தின் கருத்தல்ல)

 وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ الطلاق:4

 கணவன் இறந்து போய்விட்டால் அவன் மனைவி 4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும். தாம்பத்தியம் நடந்திருந்தாலும் சரி ! இல்லை என்றாலும் சரி ! இளவயதாக இருந்தாலும் சரி முதியவளாக இருந்தாலும் சரி.

 இது திருக்குர் ஆனிய உத்தரவாகும்

 وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ ‌أَزْوَاجًا ‌يَتَرَبَّصْنَ ‌بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا البقرة:234].

 கருவுற்ற நிலையில் இருக்கும் பெண் தலாக் விடப்பட்டாலோ அல்லது கணவனை இழந்து விட்டாலோ குழந்தையை பிரசவிக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.

 ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய்விட்டால் அவளுடைய கணவனை பற்றிய தகவல்கள் இல்லை என்று முடிவான நாளிலிருந்து 4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

  وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ لطلاق:4

 இந்த பெண்ணுடைய இத்தா காலம் 10 மாதம் வரை நீடிக்கவும் வாய்ப்புண்டு. 10 நாட்களில் முடிந்து போகவும் வாய்ப்புண்டு. கணவனை இழந்த 10 ம் நாளில் அவள் பிரசவித்தால் அவளுடைய இத்தா அப்போதே முடிந்து விடும்.

 புகாரியில் ஒரு ஹதீஸ்

 قال الإمام البخاري: حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ قَالَ«جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ  وَأَبُو هُرَيْرَةَ  جَالِسٌ عِنْدَهُ فَقَالَ: أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: آخِرُ الْأَجَلَيْنِ، قُلْتُ أَنَا﴿وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ [الطلاق:4] قَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا مَعَ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ، فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلَامَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ: قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ وَهِيَ حُبْلَى فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً، فَخُطِبَتْ، فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ ﷺ، وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا».

 பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும் போது அவர்களது இத்தா காலம் நீளமாக வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த காலத்தில் தலாக் விடக்கூடாது என்று ஆண்களுக்கு மார்க்கம் அறிவுறுத்துகிறது.

 فَطَلِّقُوهُنَّ ‌لِعِدَّتِهِنَّ  என்று குர் ஆன் கூறுகிறது,

 ஒருவேளை அப்படி தலாக் விட்டு விட்டால் கூட அவளை அப்போதைக்கு திரும்ப அழைத்துக் கொள்ள மார்க்கம் வலியுறுத்துகிறது.

 இத்த என்கிற காத்திருப்புக் காலத்தை பெண்களுக்கு தேவையற்ற சுமையாக்கி விடக்கூடாது என்ற மார்க்கத்தின் கரிசனமே அதற்கு காரணமாகும்.

 இத்தா வில் இருக்கும் பெண் விசயத்தில்  மார்க்கத்தின் கரிசனமும் சமூக அக்கறையும் பல மடங்கு உயர்வானது.

 தலாக்கிற்காக இத்தா இருக்கும் பெண் வேறு கணவனை திருமனம் செய்து கொள்ளக் கூடாதே தவிர கணவனுடையை வீட்டிலேயே தங்கிக் கொள்ளவும் தன்னை அலங்கரித்துக் கொள்ளவும் அவளுக்கு உரிமை உண்டு.

 மூன்று தலாக் விடப்பட்ட பெண்ணுக்கும் கணவருக்காக இத்தா இருக்கும் பெண்ணுக்கும் மட்டுமே சில அதிகப்படியான கட்டுப்பாடுகள் உண்டு. அவர்களுடைய இத்தா துக்கம் அனுஷ்டித்தல் வகையிலானதாகும்.

 அந்தக் கட்டுப்பாடுகள் கூட இப்போது நமது சமூக வழக்கத்தில் நாம் விளங்கி வைத்திருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அல்ல.

 இத்தாவில் இருக்கிற பெண் வெள்ளைச் சேலை தான்  அணிந்து கொள்ள வேண்டும்.

அவள் ஒரு அறைக்குள்ளே அடைந்து கிடக்க வேண்டும். முஸல்லாவிலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். சமையலறைக்கு வரக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிப்பது நமது மார்க்கத்தில் இல்லை.

 கணவனின் இறப்பிற்காக துக்கம் அனுஷ்டிக்க  4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்கிற பெண் செய்யக் கூடாதவை 4 காரியங்கள் மட்டுமே!

 வேறு திருமணம் செய்யக் கூடாது.

 وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ  [البقرة:235].

அதிலும் கூட ஒரு சலுகை இருக்கிறது. வெளிப்படையான முயற்சிகள் இல்லாமல் மன ஆறுதலுக்கான மறைமுகமான தேடல்களை மார்க்கம் அனுமதிக்கிறது.

 وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنتُمْ فِي أَنفُسِكُمْ ۚ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَن تَقُولُوا قَوْلًا مَّعْرُوفًا

இத்தாவில் இருக்கிற பெண்ணிடம் கவலைப்படாதீர்கள் உங்களை கவனித்துக் கொள்ளவா ஆள் கிடைக்காது என்பது போன்ற நிம்மதியளிக்கிற வார்த்தைகளை கூற இஸ்லாம் அனுமதியளிக்கிறது. நாம் இப்படியே இருந்து விட முடியாதல்லவா இத்தா முடிந்த பிறகு இன்னொரு திருமணத்திற்கு வரன் பார்க்கத்தான் வேண்டும் என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை குடும்பத்தினர்கள் பேசலாம்.

 இத்தா இருக்கும் பெண்ணிற்கான இரண்டாவது தடை வெளிப்படையாக திருமண சம்பந்தம் பேசக் கூடாது.

 وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنتُمْ فِي أَنفُسِكُمْ ۚ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَن تَقُولُوا قَوْلًا مَّعْرُوفًا ۚ

 இத்தா இருக்கும் பெண்ணிற்கான மூன்றாவது  தடை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது.

 لحديث أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ: «الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ، وَلَا الْمُمَشَّقَةَ، وَلَا الْحُلِيَّ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَكْتَحِلُ

 மஞ்சள் சாயம் பூசப்பட்ட ஆடை பொதுவாக சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது என்பது ஒரு வகை அலங்கார ஆடைகளாகும். ஆடைகளை தயார் நெயத பிறகு அதில் வண்ணம் சேர்ந்து அழகு படுத்துவார்கள்.

 இப்போதைய நமது வழக்கில் அதிக்ப்படியான  வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது என்று பொருள் கொள்ளலாம்.

 இயல்பான உற்பத்தியின் போதே வருகிற கலர் ஆடைகளை இத்தாவில் இருக்கிற பெண்கள் அணிந்து கொள்ள தடை இல்லை.

 வாசனைப் பொருட்களை அத்தியாவசியமான அளவில் மட்டும் பயன்படுத்தலாம். அதாவது உடல் நாற்றத்தை போக்கும் அளவுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.  

 வசனைக்காக அல்லாத எண்ணையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 மருதாணி இடுவது, முக அழகிற்காக மை தீட்டிக் கொள்வது, வெண்மைக்காக பவுடர் கிரீம்களை பயன்படுத்துவது, ஆகியவை கூடாது.

 நிர்பந்தத்திற்காக சில வற்றை பயன்படுத்த நேர்ந்தாலும் இரவில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  وروت أم سلمة ، قالتدخل علي رسول الله صلى الله عليه وسلم حين توفي أبو سلمة ، وقد جعلت على عيني صبرا ، فقال : ماذا يا أم سلمة ؟ . قلت : إنما هو صبر ، ليس فيه طيب . قال : إنه يشب الوجه ، لا تجعليه إلا بالليل ، وتنزعينه بالنهار ، ولا تمتشطي بالطيب ، ولا بالحناء ، فإنه خضاب . قالت : قلت : بأي شيء أمتشط ؟ قال : بالسدر ، تغلفين به رأسك } .

 நகம் வெட்டிக் கொள்ளுதல் தேவையற்ற முடிகளை களைதல் குளித்தல் தலைவாரிக் கொள்ளுதல் தடையில்லை

 மோதிரம் உடபட எந்த ஆபரணங்களையும் அணிந்து கொள்ளக் கூடாது.

 இத்தா இருக்கும் பெண் செய்யக் கூடாத நான்காவது தடை

 தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறக் கூடாது.

 وعنِ الفُرَيْعَةِ بِنْتِ مَالِكِ بْنِ سِنَانٍ رضي الله عنها، أنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ لَهَا لمَّا قُتل زَوْجُها: «امْكُثِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ»

சம்பாதிப்பதற்குரிய நிர்பந்தம் உள்ள சூழ்நிலையில்  பகல் நேரத்தில் வெளியே செல்ல அனுமதி உண்டு.

 இத்தாவின் இந்த கடுமையான நடைமுறைகள் மூன்று தலாக் விடப்பட்ட பெண் அவளுடைய இத்தா காலமான மூன்று ஹைலு அல்லது மூன்று மாதம் வரைக்குமாகும். கணவன் இறந்து போன விதவைக்கு 4 மாதம் 10 நாளைக்குமாகும்.

 அதற்குப்பின் அவர்களுக்கு இந்த தடைகள் எதுவும் இல்லை.

 அவர்கள் மறுமணம் செய்து கொள்ள மார்க்கம் தூண்டுகிறது.

 இத்தா என்பது இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்கு வசதியாக பரிபூரணமாக ஒரு பெண் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் காத்திருப்புக் காலமாகும்.

 முதல் இரண்டு தலாக்கின் போது தம்பதிகள் தங்களை திருத்திக் கொள்வதற்கும் மூன்றாவது தலாக்கிற்கு பிறகும் கணவன் மரணித்த பிறகும் இழப்பின் துயரை சரி செய்து கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாக இத்தா அமைகிறது.

 என்றாலும் மீண்டும் ஒன்றை நினைவூட்டுகிறோம். இது ஷரீஅத்தின் உத்தரவாகும்.

 இந்த உத்தரவிற்கான நியாயங்களை சிலர் அறிவியல் பூர்வமாக விவரிக்கலாம். ஒரு ஆண் ஒரு பெண்ணை தொட்டால் அவளுடைய உடலில் அவனது ரேகைகள் 120 நாட்கள் வரை தங்கியிருக்கிறது எனவே தான் இஸ்லாம் 3 மாதங்கள்  4 மாதங்கள் இத்தா இருக்க சொல்லியிருக்கிறது என்று ஒரு அறிவியல் அறிஞர் கண்டு பிடித்திருக்கிறார் என்பது போன்ற செய்திகள் எல்லாம் ஒரு சப்போட்டிவான தகவலாக எடுத்துக் கொள்ளலாமே தவிர ஷரீஅத்தின் சட்டங்களுக்காக இறுதி நியாயமாக நாம் கூறி விடக் கூடாது.

 அதை அல்லாஹ்வே அறிந்தவன.

 எனவே இத்தாவின் சட்டங்களை எதை பேசும் போதும் ஷரீஅத்தின் சட்டம் இது . இதுவே சிறப்பானது எனபது எங்களது நம்பிக்கை எங்களது அனுமபவம் என்று சொல்லி விடுவதே சிறப்பானதாகும்

 இத்தாவின் தேவை, இத்தாவின் வகைகள் இத்தாவின் நியதிகள் ஆகியவற்றை நாம் சரியாக புரிந்து இன்றைய சமூகத்திற்கும் சரியாக புரிய வைக்க நாம் முயற்சி செய்வோம்

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment