வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 08, 2025

யுத்தம் தீர்வல்ல

 கடந்த மாதம் 22 ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கோடூரமாக சுட்டதில் 26 நம் நாட்டு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

இந்த கொடூர செய்லை செய்தவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும் இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்றும் இந்தியா குற்றம் சாட்டியது.

இத் தாக்குதலில் ஈடுபட்டது T R F அமைப்பு என்று கூறிய இந்திய அரசு அது லஷ்கரே தய்யிபா அமைப்பின் துணை அமைப்பு என்று கூறியது. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டது. அவர்களை தேடும் வேட்டையில் தற்போது NIA அமைப்பு ஈடுபட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்குள் உள்ளானவர்களின் சில வீடுகளை இந்திய ராணுவம் இடித்து தள்ளியது.

நமது நாட்டிற்குள் இவ்வளவு தூரம் ஊடுறுவி பேராபத்தை விளவிக்க கூடிய ஆயுதங்களை தூக்கி சென்று சர்வசாதரணமாக சுற்றுலா பயணிகளின் பேர்களை விசாரித்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றவர்களை பிடிக்க முடிந்த்தா என்பதை பற்றி இது வரை ஒரு அறிக்கையை கூட மத்திய அரசு வெளியிட வில்லை.

ஆனால் புதன்கிழமை நள்ளிரவிலிருந்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களை தீவிரவாதிகளின் முகாம்கள் என்று கூறி ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.   

நம் நாடு நடத்திய தாக்குதலில் அதிகப்படியான உயிர்ச்சேதங்கள் ஏற்படாதவாறு துல்லியமான இலக்குகள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதலில் 31 பேர் பலியானதாக பாகிஸ்தான் கூறுகிறது.  

எப்போதுமே அதிகப் பட்ச உணர்ச்சியை வெளிப்படுத்தி போலித்தனமாக மார்தட்டிக் கொண்டிருக்கிற பாகிஸ்தானுக்கு தன்னுடையை நிலத்தையோ நகரங்களையோ பாதுகாத்துக் கொள்ள கூட துப்பில்லை என்பது இத்தாக்குதலில் வெளிப்பட்டு விட்டது. இந்தியாவின் பல விமானங்களை  அது சுட்டு வீழ்த்திவிட்டதாக கூறுகிறது. அதை சில அரபு ஊடகங்களும் வெளிநாட்டு ஊடகங்களும் அதை பிரதானப்படுத்துகின்றன என்ற போதும் கூட அது எடுபட வில்லை. பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தி பல இந்தியவர்களை கொன்றிருக்கிறது.

பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்களிலும் இந்தியாவில் கொல்லப் பட்டவர்களில் பலர் எதிலும் சம்பந்தமற்ற அப்பாவிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நம் நாட்டில் அரசாங்க ஏஜென்ஸிகளும் சமூக ஊடகங்களும் போர் வெறியை நாட்டு மக்களிடையே எண்ணை ஊற்றி வளர்க்கிற வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆளாளுக்கு ஒரு சேனலை உருவாக்கி வெறுப்பை வளர்க்கிற வேலையை தம் பங்குக்குச் செய்து வருகிறார்கள்.

நம்முடைய இப்போதைய கடமை இந்த ஊடக யுத்தத்திற்கு நமது உணர்ச்சிகளை பலி கொடுத்து விடக் கூடாது என்பது தான். இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி ஊடகங்கள் தம் நாட்டுக்கு சார்பாக இருப்பதாக கூறி பொய்யான செய்திகளையே பரப்பி வருகின்றன. செய்தியை தொகுக்கிற ஆண்களும் பெண்களும் கத்தி கத்தி பேசியே மக்களை சூடாக்கி வருகிறார்கள்.

இரண்டு அரசுகளுமே முழு உண்மையை சொல்வதில்லை. ஒரு சண்டை நடக்கிற நேரத்தில் அப்படி சொல்லவும் முடியாது. இந்திய விமான்ங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா என்ற கேள்விக்கு இந்திய அதிகாரி மிக சாமார்த்தியமாக அதை பற்றி தெரிவிக்கிற நேரம் இதுவல்ல என்று சொல்லிச் சென்று விட்டார்.  பாகிஸ்தான் அமைச்சரிடம் நீங்கள் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் எங்கே என்று கேட்ட கேள்வி கேட்ட போது அவரும் கோபப்பட்டு நழுவிச் சென்று விட்டார்.

எனவே இப்போது கிடைக்கிற செய்திகளில் உண்மை தன்மை என்பது இரு தரப்பிலும் அரைகுறையானதே!

ஆகவே சண்டை பற்றிய செய்திகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதே மக்களுக்கு நன்மையளிக்கிற செய்தியாகும். இது பற்றி கருத்துக்களை பொறுப்பின்றி பேசுவதையும் நாம் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சி விவாதங்கள் பெரும்பாலும் போலித்தனமானவையாக இருக்கின்றன. அவற்றை கண்டு கொள்ளாமல் விடுவதே நமது மன ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.

நாம் அல்லாஹ்விடம் ஆபியத்தை வேண்டுவோம்.

பனூ முறைசிஃ யுத்தத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவரக்ள் வந்த போது எதிரிகள் ஊரை காலி செய்து சென்று விட்டிருந்தனர். சண்டைக்கான வாய்பில்லாம போய்விட்டதே  என்று சிலர் அங்கலாய்த்தனர். வரலாற்றின் ஒரு ஒப்பற்ற தலைவரான முஹம்மதுந் நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் போர்க்களத்தில் நின்று கொண்டு தோழர்களிடம் சொன்னார்கள் சண்டைக்கு ஆசைப்படாதீர்கள். ஆபியத்தை கேளுங்கள்! எதிரிகள் கொக்கரித்தாலும் நீங்கள் மவுனமாக இருங்கள்.

 لا تَتَمَنَّوْا لقاءَ العَدوِّ، واسألوا اللهَ العافيةَ، إذا لَقيتُموهم فاثبُتوا، وأكثِروا ذِكرَ اللهِ تَعالى، فإذا صَيَّحوا وأجلَبوا فعَليكمُ الصَّمتُ.

 ஆபியத் என்ற சொல்லுக்கு மக்களின் உடல் உயிருக்கோ   அவர்களது குடும்பத்தினருக்கோ  அவர்களுடைய சொத்துக்களுக்கோ விரும்பத்தகாத எந்த விபரீதமும் ஏற்படாமல் இருப்பது என்று பொருளாகும்.

 இந்த உலகிலும் மறுமையிலும்…

 العافيةُ مِنَ الألفاظِ العامَّةِ المُتناوِلةِ لِدَفْعِ جَميعِ المَكروهاتِ في البَدَنِ والمالِ والأهلِ والدُّنيا والآخِرةِ،

எந்த ஒரு உன்னதமான தலைமையும் இப்படித்தான் சிந்திக்கும்.

 வீரத்தின் விளை நிலம் அண்ணல் அலி ரலி அவர்கள் கூறுவதை கேளுங்கள்

 யாரையும் சண்டைக்கு வா என்று அழைக்காதீர்.  உங்களை அழைத்தால் அப்போது நீ வெளியே வந்தால் அல்லாஹ் உனக்கு துணை நிற்பான். ஏன்னில் அவன் அக்கிரமக்காரன். அக்கிரமத்திற்கு எதிராக அல்லாஹ் துணை நிற்பான்.

 قال علي -كرم الله وجهه- لابنه: لا تدع أحدًا إلى المبارزة، ومن دعاك لها، فاخرج إليه؛ لأنه باغٍ، وقد ضمن الله نصر من بُغِي عليه

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு நபி மொழி எதிரிகளை சந்திக்க நேர்கிற போது  நீங்கள் முதலில் தாக்காதீர்கள் பொறுமையாக இருங்கள் என்று கூறுகிறது.

 أيُّها النَّاسُ، لا تَتَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ، وسَلُوا اللَّهَ العَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، واعْلَمُوا أنَّ الجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ

 எதற்காக பொறுமை காக்க வேணும் எனில்

சண்டையின் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அது எவ்வளவு தூரத்திற்கான பின்விளைவுகளை கொண்டு வரும் என்றும் தெரியாது. யுத்தம் தீர்வுகளை தந்ததும் இல்லை.

 ஐரோப்பாவில் சின்ன சின்னதாக நடைபெற்ற யுத்தம் தான் உலக யுத்தமாக மாறியது.

 முதலாவது உலக யுத்தம் தான் இரண்டாவது உலக யுத்த்திற்கு காரணமாகியது.

 இரண்டாவது உலக யுத்ததில் அனு ஆயுதம் பயனபடுத்தப்பட்டதும் அதன் பாதிப்பை மக்கள் அறிந்து கொண்டதுமே  மூன்றாவது ஒரு யுத்தம் உலக அளவில் மூளாமல் இருக்க காரணமாகும்.

 போர் வெறி கொண்டு உலக்க சூறையாடி வந்த ஹிட்லரின் படை ரஷ்யாவின் பனிப்புயலை எதிர் கொள்ள முடியாமல் தோற்றுப் போனது, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான்.

 இங்கிலாந்து உலக யுத்தத்தில் வெற்றி பெற்றது. அதற்கு காரணமாக இருந்த விண்ஸ்டன் சர்ச்சில் அதற்கு அடுத்த நடந்த தேர்தலில் தோற்றுப் போனார்.

 பத்று யுத்த்தில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற போதும் அதுவே உஹது யுத்தத்திற்கு காரணமானது.

 ஹுதைபிய்யா உடன்படிக்கை தான் பெருமானாரின் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியாக அமைந்த்து. அது பற்றி  பற்றி பேசுகிற போது தான் அல்லாஹ் இன்னா பதஹ்னா லக பத்ஹன் முபீனா என்று கூறினான்.

 எனவே எந்த சண்டையிலும் வெற்றி தோல்வி என்பதில் தொடக்கத்தில் தெரிவதில்லை. பல காலங்களுக்கு பிறகு தான் தெரிகிறது. எனவே அதிக பட்ச  பொருமை  கடை பிடிக்கப்பட வேண்டும்.

 எனவே சண்டை தொடரக் கூடாது. பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்றே நாம் அனைவரும் நினைக்க வேண்டும் பிரார்த்திக்க வேண்டும்.

 ஈமானுக்கு அடுத்த மதிப்பு மிக்க காரியம் அமைதியை பேனுவதே என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தனது முதல் குத்பாவிலேயே கூறினார்கள்/    قامَ أبو بَكرٍ الصِّدِّيقُ على المنبرِ ثمَّ بَكى فقالَ قامَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم عامَ الأوَّلِ على المنبرِ ثمَّ بَكى فقالَ سلوا اللَّهَ العفوَ والعافيةَ فإنَّ أحدًا لم يُعطَ بعدَ اليقينِ خيرًا منَ العافيةِ

 அந்த முதல் உரை  சாமாணியமானதல்ல. பல்வேறு தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு நபி (ஸ்ல) அவர்களும் மற்ற தோழர்களும்  சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த சூழல் அது. அங்கே பழி வாங்குவதை பற்றி மக்காவை மீட்பதை பற்றி பெருமானார் பேசவில்லை. நிம்மதியின் மதிப்பை எடுத்துச் சொன்னார்கள். அதையே பிரார்த்திக்க சொன்னார்கள்.

நிம்மதியை பெருமானார் வலியுறுத்தி விதம் இன்னும் அலாதியானது.

عن العباس بن عبد المطلب قال قلت يا رسول الله علمني شيئا أسأله الله عز وجل قال سل الله العافية فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا أسأله الله فقال لي يا عباس يا عم رسول الله سل الله العافية في الدنيا والآخرة   திர்மிதி

 நிம்மதியை கேட்பது அல்லாஹ்வுக்கு பிரியமானது

 عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما سئل الله شيئا أحب إليه من أن يسأل العافية திர்மிதி

 ஒவ்வொரு நாளும் ஐந்து முறை பாங்கு சொல்லப்படுகிறது. அந்த பாங்குக்கும் இக்காமத்திற்கும் இடையில் கேட்பதற்கு சிந்த பிரார்த்தனை

 عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الأذان والإقامة قالوا فماذا نقول يا رسول الله قال سلوا الله العافية في الدنيا والآخرة

 இந்த எதார்த்த்தை புரிந்து கொண்டிருப்பதால் இந்தியா பாகிஸ்தான் இரண்டு அரசுகளின் தலைவர்களும் பொறுப்பாகவே நடந்து கொள்கின்றனர். இந்தியா தனது சக்திக்கு தாக்க நினைத்தால் பாகிஸ்தான் கொஞ்ச நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாது என்பது நிஜம். அதே போல பாகிஸ்தான் தனது சக்திக்கு தாக்கினால் நம் நாட்டிற்கு சில இடங்களிலாவது பாதிப்பு ஏற்படும் என்பதும் நிஜம். அப்படி ஒரு முழு அளவிலான யுத்தம் மூண்டு விடக் கூடாது என்று இரண்டு அரசுகளின் தலைமைகளும் நினைக்கின்றன என்பது நிம்மதியளிக்க கூடிய செய்தியாகும்.

இது மேலும் மூர்க்கமாகி விடக் கூடாது என பிரார்த்திப்போம்.

தீவிரவாததிற்கு எதிரான போரை யுத்த்தில் முடித்து விட முடியாது. ஏனெனில் நேரடியாக சண்டை செய்கிற தைரியம் இருக்கிற எவனும் கோழைத்தனமான தீவிரவாதச் செயலில் இறங்க மாட்டான்.

ஆயுதம் இல்லாத அப்பாவிகளிடம் ஆயுதத்தை நீட்டி பயமுறுத்துகிற கீழ்த்தரமான இயல்புகளை கொண்ட குற்றவாளிகள் கண்டு பிடிக்கப் பட்டு அவர்களுக்கான தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படுவதே பிரச்சினைக்கு உண்மையான தீர்வாகும்.

ஒருவேளை அவர்கள் எதிரி நாட்டில் இருந்தால் அங்கிருந்து அவர்களை பிடித்து வர வேண்டும்.

ஹழ்ரத் முஆவியா ரலி அவரகள் காலத்தில் அவர்களது  படை வீர்ர் ஒருவரை ரோமின் அமைச்சர் ஒருவர் அநீதமாக  கன்னத்தில் அறைந்து விட்டார். இதை அறிந்த முஆவியா ரலி அவர்கள் அந்த அமைச்சரை ரோமிலிருந்து சிரியாவுக்கு கடத்திக் கொண்டு வர வைத்து தன்னுடைய சபையினர் முன்னே நிறுத்தி விசாரித்து அந்த வீரனை கொண்டு அமைச்சரை அடிக்க வைத்தார். பிறகு அவரை மரியாதையோடு திருப்பி அனுப்பினார்.  என்று வரலாறு சொல்கிறது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அவதிக்கு ஆளாக கூடாது.

இப்போது நடந்து கொண்டிருக்கிற ஒரு கொடுமை இந்தியாவின் எல்லையில் இருக்கிற காஷ்மீரின் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய பாதுகாப்பு என்ன உத்தரவாதம் என்று தெரிவிக்கப்பட வில்லை.

துரதிஷ்டமாக இந்த விவகாரத்தை பற்றி பேசிய வெளிவிவகாரத்துறை செயலாளர்” பாகிஸ்தான் சீக்கியர்களை குறிவைக்கிறது என்று சொல்லி யிருக்கிறார்.

பாகிஸ்தானின் தாக்குதலில் காஷ்மீர் பகுதியில் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவ்ர்களில் சுமார் 9 பேர் முஸ்லிம்கள். மூன்று பேர் சீக்கியர்கள்.  மற்றவர்களைப் பற்றி அடையாளம் தெரியவில்லை

இந்த நிலையில் பாகிஸ்தான் சீக்கியர்களை குறிவைக்கிறது என்ற வெளியுறவுத்த்துறை அமைச்சரின் சொல் ஒன்று பட்டு பாகிஸ்தானை எதிர்த்து நிற்கிற இந்திய மக்களை மத ரீதியாக பிளவு படுத்துகிற ஒரு சொல்லாகும்.

இந்த சூழலில் இத்தகை சொற்பிரயோகங்கள் நல்லதல்ல. அது அரசின் நோக்கத்தை சந்தேகத்திற்குள்ளாகி விடும்.

இந்தியா ஒன்று திரண்டு தீவிரவாததை  எதிர்க்க வேண்டும். வேரோடும் வேரடி மண்ணோடும்.

எல்லாம் வல்ல இறைவன் 140 கோடி மக்களை கொண்ட நமது நாட்டில் மர்மமாக மக்களை அழிக்கிற காரியங்களில் ஈடுபடுகிற எவரையும் தனது வல்லமையால் தடுத்து நிறுத்துவானாக!

ஆபியத்தின் அடையாளம் மூன்று அறிஞர்கள் சொல்வார்கள்.

 

1.       அரசர்களிடம் சிக்காமல் இருப்பது

2.      மருத்துவர்களிடம் செல்லாமல் இருப்பது

3.   அடுத்தவர்களிடம் தேவையாகமல் இருப்பது.

 அல்லாஹ் நம் அனைவருக்கும் பரிபூரண ஆபியத்தை வழங்குவானாக. தீய ஆட்சியாளர்களிடமிருந்தும். கொடிய தாக்குதல்களிலிருந்தும் யாரையும் எதிர்பார்த்து வாழ்வதிலிருந்தும் பாதுகாத்து அருள்வானாக!

 

2 comments:

  1. Anonymous9:54 PM

    அல்ஹம்துலில்லாஹ் இரண்டு நாட்டின் பாராளுமன்ற அவைகளில் ஒலிக்கப்பட வேண்டிய வரலாற்று வார்த்தைகள்

    ReplyDelete
  2. Anonymous10:20 PM

    Ameen

    ReplyDelete