வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 09, 2025

கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி ?

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا

செப்டெம்பர் 27ம் தேதி கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடந்துள்ளனர்.

உயிரழந்த ரவி என்ற கட்டிடத் தொழிலாளிக்கு அன்று  திருமணம் நிச்சயிக்கப் பட இருந்தது.

இது போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகள் ஏராளாமாக அதில் இருந்தன.

குடும்பமாக பலியானவர்கள், குழந்தைகளை இழந்தவர்கள், மனைவியை பறிகொடுத்தவர்கள், என பலியானவர்களின் விவரங்களை கேட்க கேட்க அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

இத்தனை இழப்புகளுக்கும் யார் காரணம் என்ற கேள்வி தமிழகத்தின் முன் பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது.

நிகழ்ச்சி நடந்து சுமார் ஒரு மாதம் ஆன பின்பும்.

இந்த கொடூர நிகழ்விற்கு நடிகர் விஜயின் நடிக இயல்பும்,  அக்கட்சியினரின் முதிர்ச்சியற்ற ஏற்பாடுகளும், தொண்டர்களின் அதீத கவர்ச்சி மோகமும் காரணங்களாக அமைந்தன என்பதை புரிய முடிகிறது.

நடிகர் விஜய் 2024  பிப்ரவரியில் கட்சியை தொடங்கினார். 2024 அக்டோபர் மாதம் விக்ரவாண்டியில் அக்கட்சி முதல் மாநாட்டை நடத்தியது.  அதில் 8 இலட்சம் பேர் கலந்து கொண்ட்தாக பத்ரிகை செய்திகள் கூறுகின்றன.. அவர் வெளியே தென்படுகிற ஒவ்வொரு இடத்திலும் தமிழகத்தில் இருக்கிற சினிமா கவர்சிக்கு எடுத்துக்காட்டாக கட்டுப்பாடற்ற உணர்ச்சிகரமான மக்கள் கூட்டம் திரள்கிறது.

ஒரு இளம் பெண் என் கணவனை விட நான் விஜையை நேசிக்கிறேன் என்கிறாள். ஒரு ஐடி இளைஞன் வேலைக்கு லீவு போட்டு பார்க்க வந்தேன் என்கிறான். ஒரு இளைஞன் 234 தொகுதியிலும் விஜய் நிற்பார். அவரே ஜெயிப்பார் என்று கூறுகிறார். அந்த கூட்டத்தின் முதிர்ச்சி பற்றி சமூக ஊடகங்களில் பலத்த விவாதங்கள் நடைபெற்று வந்தன. 

தனக்கு திரள்கிற ஒரு முதிர்ச்சியற்ற  கூட்ட்த்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அவரும் அவருடைய கட்சியினரும் இதுவரையிலும் கூட்டத்த்தை செம்மையாக வழி நட்த்துகிற திட்டம் எதையும் அவர் கண்டு கொள்ளவே இல்லை.மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கவே இல்லை.

மிக எதார்த்தமாக ஒரு செய்தியை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்திருக்கின்றன. பிபிசி கூறுகிறது.

நிகழ்வை நேரில் பார்த்த கோமதி ,  பிபிசி க்கு அளித்த பேட்டியில் கூறு கிறார்.

 

"விஜய் கரூர் பகுதிக்குள் வரும்போது பைபாஸ் பகுதியிலிருந்தே வண்டிக்குள் விளக்கை எரியவிட்டுத்தான் வந்தார். ஆனால், போலீஸ் குடியிருப்பு அருகில் வாகனம் வந்தபோது உள்ளே எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்துவிட்டார்." பின், "கண்ணாடி ஷட்டரையும் சாத்திவிட்டார். இந்தக் கூட்டத்தில் இருந்த பலர் விஜய்யை பார்த்தால் போதும் என்றுதான் வந்திருந்தார்கள். விளக்கை அணைத்து, ஷட்டரையும் மூடிவிட்டதால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியவில்லை. இதனால், அங்கிருந்த கூட்டம் விஜய் பேசும் இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தது."

 தன்னை காண திரளும் கூட்டத்தை தனக்கான அரசியல் ஆதாயமாக ஆக்கிக் கொள்ள நினைத்த நடிகர் விஜய் அந்த கூட்டத்தின் ஆவலை பூர்த்தி செய்யாதது அல்லது அந்த ஆவலை தூண்டி விட்டதே பெரும் நெரிசலுக்கான ஒரு காரணம் என்பதை வெள்ளிடை மலை போல புரிந்து கொள்ள முடிகிறது.   

 எனவே இந்த மிகப்பெரிய விபத்துக்கு அறிந்தோ அறியாமலோ நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணமாக ஆகியிருக்கிறார்.  இந்த கூட்ட்த்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். சந்தேகமில்லாமல்

ஒரு நடிகரை பார்ப்பதையே வாழ்க்கையின் மிகப் பெரிய லட்சியமாக கொண்டு தங்களது பாதுகாப்பை பற்றி கவலைப்படா ரசிகர்களும்,  குழந்தைகளை கூட அழைத்து வந்த பெற்றோர்களுமே முதல் குற்றவாளிகள். .பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் கூடிய மக்கள்

1.   நடிகர் விஜய்

2.   அவரது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள்

இந்த மூன்று தரப்புமே இதில் குற்றவாளிகள் தான்.

இப்போதைக்கு இரண்டு பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றாலும் சம்பந்தப் பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட முக்கியமானது இனி இது போல ஒரு விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வெண்டும்.

கூட்டங்களில் நெரிசலை தவிர்க்கும் வழிகள்

நவீன் தலைமைத்துவ பாடங்களில் Crowd management கூட்ட நெருக்கடிகளை சமாளிப்பதற்கு சில உத்திகளை சொல்கிறார்கள் /

1.       திட்டமிடுதல் Planning

2.       கண்காணித்தல் Monitoring

3.       வழிகாட்டுதல் Direction

4.       பாதுகாப்பு ஏற்பாடுகள். Safety Measures

5.       தகவல் தொடர்பு Communication

6.       அவசர கால முன்னேற்பாடுகள் Emergency Preparedness

 ஏடுகளில் இருக்கிற இத்தகை கருத்துக்களை தாண்டி மிக எதார்த்தமாக

இஸ்லாம் இதற்கும் சிறப்பாக வழிகாட்டியிருக்கிறது.

ஏனெனில் இஸ்லாமில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை கூட்டம் கூடுகிற நாளாகும்.

வருடத்தில் இரண்டு பெருநாட்களும் ரமலானுடைய இரவுகளும் கூட்டம் கூடுகிற நாட்களாகும்

இதை தவிர ஆண்டுக்கு ஒரு முறை புனித மக்கா நகரில் சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இட்த்தில் ஒரே நேரத்தில் கூடுகிற ஹஜ்ஜும் இஸ்லாமின் கடமைகளில் ஒன்றாகும்.

  ஒவ்வொரு சிற்றூர் அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறுகிற மாபெரிய கூட்டங்களில் மனித தவறுகளால நெருக்கடி ஏற்படுவதை இஸ்லம் மிக திறமையாக சமாளித்துள்ளது.

இஸ்லாம் கூறும் கூட்டங்களின் பண்புகள் இன்றைய சூழ்நிலைக்கும் மிக அவசியமானவையாகும்.

அவசியமானால் மட்டுமே கூட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

திருக்குர் ஆன் நல்ல மனிதர்களின் பண்புகளை கூறும் போது

 وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا (72)

என்கிறது.

لَّغْو என்ற சொல்லுக்கு தேவையற்றது என்று பொருளாகும்.

 

مَرُّوا كِرَامًا  மரியாதையாக கடந்து சென்று விடுவார்கள் என்பதற்கு அதை புறக்கணித்து விடுவார்கள் என்பது பொருளாகும்.

 عن مجاهد, قوله( وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا ) قال: صفحوا.

 ஒரு சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராத விதமாக இத்தகைய கூட்டங்களை நாம் கடந்து செல்ல நேரிடலாம். அப்போதும் அதற்குள் நுழைந்து விடாமல் ஒதுங்கிச் சென்று விட வேண்டும்.

 இப்னு மஸ்வூத் ரலி ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் வீண்களியாட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்னு மஸ்வூத் ரலி அது என்ன என்று பார்த்துக் கொண்டிருக்காமல் தனக்கு தேவையற்றது என்பதை உணர்ந்து வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றார். அவர் மரியாதையானவராக நடந்து கொண்டார் என்று பெருமானர் (ஸல்- அவர்கள் பாராட்டினார்கள்.

 

 عن إبراهيم بن ميسرة, قال: مرّ ابن مسعود بلهو مسرعا فقال رسول الله صلى الله عليه وسلم" إنْ أصْبَحَ ابْنُ مَسْعُودٍ لَكَرِيما ".

 இந்த நபி மொழி கற்பிக்கிற முக்கியமான ஒரு செய்தி

 ஒரு கூட்டத்தில் நாம் கலந்து கொள்வது நமக்கு மதிப்பை சேர்ப்பதாக இருக்க வேண்டும்.

 ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதே மரியாதையானது என்றால்

இன்னொரு வார்த்தையில் ஜெண்டில் மேன்கள் இத்தகை கூட்டத்தில் கலந்து கொள்ல மாட்டார்கள் என்றால் அத்தகைய கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

 இன்றைய தலைவர்கள் பலரையும் பாருங்கள். மக்களை கூட்ட்த்திற்கு அழைப்பார்கள். அதை சமூக நலனுக்கு அல்லது அரசியல் மாற்றத்திற்கு தேவை என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய கூட்டத்திற்கு தங்களாது பிள்லைகளை அல்லது குடும்பத்தினரை அழைக்கிறார்களா என்பதை கவனித்துப் பாருங்கள்.

 அந்த ஒன்று போதும் ஒரு கூட்டம் எவ்வளவு மரியாதைக்குரியது என்பதை நாம் தீர்மாணித்துக் கொள்வதற்கு.

 நமக்கு தீமையாக அமைகிற ஒரு கூட்டம் அல்லது நம்மை தீமையின் ஒரு பங்காளியாக ஆக்குக்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 தீமைகளில் பங்கேற்கிற கூட்டத்தை பெரும் பாவங்களில் ஒன்று என நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் கூறினார்கள்

  عن أبي بكرة قال : قال رسول الله صلى الله عليه وسلم" ألا أنبئكم بأكبر الكبائر " ثلاثا ، قلنا : بلى ، يا رسول الله ، قال" الشرك بالله ، وعقوق الوالدين " . وكان متكئا فجلس ، فقال : " ألا وقول الزور ، ألا وشهادة الزور ألا وقول الزور وشهادة الزور . فما زال يكررها ، حتى قلنا : ليته سكت

 وشهادة الزور  :  என்பதற்கு பாவ காரியங்கள் நடைபெறும் இடங்களில் இருப்பது என்றும் ஒரு பொருள் கொள்ளலாம் என்பதை இவ்வசனத்தின் விரிவுரையில் இந்த ஹதீஸை விரிவுரையாளர்கள் எடுத்துச் சொல்வதிலிருந்து அறியலாம்.

 வேடிக்கை

வேடிக்கை பார்க்க செல்வதை விட அதை பயனுள்ளதாக்கி கொள்வதே புத்திசாலித்தனம்.

 சாதாரணமாக நம்மில் பலரும் வேடிக்கை பார்க்க கூட்டங்களுக்கு செல்வதுண்டு. அந்த எண்ணத்தை விட அதை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் கூட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

 வேலூர் அண்ணல் அஃலா ஹழ்ரத் அவரக்ள் வெளியூர்களுக்கு செல்லும் போது அவர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள். அப்போது அஃலா ஹழரத் அவர்கள் நான் என்ன பொருட்காட்சியா பார்த்து விட்டு செல்வதற்கு? அறிஞர்களை காணும் போது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மஸ்ஜிதுன் னபவிக்கு வருகிறவர்கள் ஏதேனும் ஒரு கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

  مَن جاءَ مَسجِدي هذا لم يَأتِهِ إلَّا لِخيرٍ يتعلَّمُهُ أو يعلِّمُهُ فَهوَ بمنزلةِ المجاهِدِ في سبيلِ اللَّهِ ومن جاءَ لغيرِ ذلِكَ فَهوَ بمنزلةِ الرَّجُلِ ينظرُ إلى متاعِ غيرِهِ   - أبو هريرة- بن ماجه

 சும்மா போய்விட்டு வருதல் என்பதை விட எந்த கூட்டத்திலும்  ஒரு நன்மையை நாடி போக வேண்டும்.  அது நன்மையாக இருக்காது எனில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 قال معاذ بن جبل : إياك وكلَّ جليس لا يفيدك علماً .

கூட்டத்தின் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்.

 ·         சபைகளுக்கு உள்ளே வருதல்

 بينا رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم جالسٌ إذ أقبلَ ثلاثةُ نفَرٍ ، فأمَّا أحدُهُما فوجدَ فُرجةً في الحلقةِ فدخلَ فيها ، وأمَّا الآخرُ فجلسَ وراءَ النَّاسِ ، وأدبر الثَّالث ذاهبا ، فقال رسول الله صلَّى اللهُ عليه وسلَّم : ألا أنَبِّئكُم بخبرِ الثَّلاثةِ ؟ أمَّا الأولُ فآوَى إلى اللهِ فآواهُ اللهُ ، وأمَّا الثَّاني فاستحيَا فاستحيَا اللهُ منه ، وأمَّا الثَّالثُ فأعرضَ فأعرضَ اللهُ عنه

·         இறுதியில் அமர்தல்

عن جابر بن سمرة قال : كنا إذا أتينا النبي صلى الله عليه وسلم جلس أحدنا حيث ينتهي . رواه الترمذي 

 عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال : لا يحل للرجل أن يفرِّق بين اثنين إلا بإذنهما . رواه الترمذي

 . பிறருக்கு இடமளிக்க வேண்டும்.

يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات }

இந்த வசனம் ஒரு வெள்ளிக்கிழமையில் இறங்கிய வசனமாகும்.

மஸ்ஜிதுன்னபவிக்கு முன்னாள் வந்து விட்ட தோழர்கள் விசாலமாக இடம் பிடித்துக் கொண்டார்கள். பின்னால் வந்த பதறு சஹாபாக்களுக்கு இடம் கிடைக்கவ்ல்லை. இதை பார்த்த பெருமானார் (ஸல்) அவரக்ள் உட்கார்ந்திருந்த சிலரை எழுந்திருக்க சொல்லி அங்கே பத்று சஹாபியை அமர வைத்தார்கள். இதை வைத்து முஹம்மது நீதமாக நடக்க வில்லை என முனாபிக்குகள் கதை பரப்பினர். . இந்த செய்தி தன் காதுக்கு எட்டியவுடன் தோழர்களுக்கு இடமளித்தவர்களுக்காக பெருமானார் பிரார்த்தனை செய்தார்கள். அதன் பிறகு தோழர்கள் ஒருவருக் கொருவர் இடமளிப்பவர்கள் ஆனார்கள்.

 إن قوما أخذوا مجالسهم وأحبوا القرب لنبيهم ، فأقامهم وأجلس من أبطأ عنه . فبلغنا أن رسول الله - صلى الله عليه وسلم - قال" رحم الله رجلا فسح لأخيه " . فجعلوا يقومون بعد ذلك سراعا ، فتفسح القوم لإخوانهم ، ونزلت هذه الآية يوم الجمعة . رواه ابن أبي حاتم 

 

எனவே கூட்டங்களுக்கு முன்னே சென்று விட்டவர்கள் பின்னே வருகிறவர்களுக்கு வசதியாக இடமளித்து நிற்க வேண்டும் அல்லது அமர வேண்டும்.

 இடத்தை அடைத்துக் கொண்டோ ஆக்ரமித்துக் கொண்டோ இருக்க கூடாது.

 நமக்கிருப்பது போல உணர்வும் உரிமையும் அவர்களுக்கும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 ஆர்வத்திலும் ஆசையிலும் பிறருக்கு இடையூறு செய்து விடக்கூடாது.

 وعن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له: "يا عمر، إنك رجل قوي، لا تزاحم على الحجر، فتؤذي الضعيف، إن وجدت خلوة فاستلمه، وإلا فاستقبِله وهلِّل وكبِّر"؛ رواه أحمد.

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது ஒரு பாக்கியமான செயல், அதற்கு இரண்டு உதடுகளும் ஒரு நாவும் இருக்கிறது. அதை முத்தமிட்டவரக்ளுக்கு சார்பாக அது சாட்சி சொல்லும் என நபி (ஸல்) அவரகள் கூறியுள்ளார்கள்.

 இத்தைகைய பாக்கியம் பொருந்திய செயலை கூட பிறருக்கு துன்பம் தந்து நிறைவேற்ற வேண்டாம் என பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 மிக எதார்த்தமான ஒரு ஒழுங்கை அறிஞர்கள் கற்பிப்பார்கள்

 ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சுன்னத்து தான். ஆனால் பிறரின் காலை மித்தித்து வேதனையளிப்ப்பது ஹராம்.

 ஒரு ஹராமை செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

 காலில் நல்ல நகம் உள்ள ஒரு ஆசாமி சர்க்கரை நோய் உள்ள ஒருவரின் காலை மிதித்து காயப்படுத்தி விட்டால் அவருக்கு ஏற்படக் கூடிய துயரம் எப்படிப்பட்டது ? .

 எந்த ஒரு கூட்ட்த்தில் முண்டியடித்து செல்லும் போதும் இதை கவனிக்க வேண்டும்.

 ·         தலைகளை தாண்டிக் கொண்டு செல்வதை தடுத்த பெருமானார் (ஸல்)

 فعن عبد الله بن بُسر رضي الله عنه قال: " جاء رجل يتخطى رقاب النّاس يوم الجمعة والنّبيّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يخطب، فقال النّبيّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: (اجلس ، فقد آذيت) "أخرجه أبو داود

 எனவே  கூட்டங்களில் பங்கேற்கப்பதோ அல்லது அதில் நாம் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள  ஆசைப்படுவதோ மிக சாதாரணமான ஒரு விசயம் ஆனால் நமது ஆவலை நிறைவேற்றும் அவஸ்தையில் கூட்டத்தில் பிறருக்கு தொல்லை கொடுப்பது மிக அசாதாரணம் துயரமாகிவிடக் கூடும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்/

 தேவையின்றி ஒருத்தரை இடித்துக் கொண்டு நான் முன்னே செல்ல மாட்டேன் என்று நாம் ஒரு தீர்மாணம் எடுத்துக் கொள்வோமானல் எந்த கூட்டத்தில் நாம் பங்கேற்பதும் ஒரு நாகரீக பண்பாக அமையும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கவும் அது உதவும்.

 கூட்டங்களின் போது மக்கள் நடந்து கொள்கிற காட்டுத்தனமான நடவடிக்கையே பெரும்பாலும் விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது.

 பொறுப்பானர்களுக்கு முன்னிருக்கை

 கூட்டங்கள் எப்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்

 தலைவர்கள் சிறப்பாக கலந்து கொள்பவர்களாக மட்டும் இருக்க கூடாது. கூட்ட்த்தை சீர் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

 முக்கிய பொறுப்பாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும். 

 عن أبي مسعود قال : كان رسول الله - صلى الله عليه وسلم - يمسح مناكبنا في الصلاة ويقول" استووا ولا تختلفوا فتختلف قلوبكم ، ليليني منكم أولو الأحلام والنهى ، ثم الذين يلونهم ، ثم الذين يلونهم " 

 இந்த ஹதீஸை அறிவிக்கிர இப்னு மஸ்வூத் ரலி இதை சொல்லி விட்டு இறுதியில் சொல்வார். قال أبو مسعود فأنتم اليوم أشد اختلاف

ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் எல்லோரும்  சண்டையிட்டு முண்டியடிக்கிறீர்கள்.”

 இரண்டு வகை கவனிப்புகள்  அவசியம்.

 கூட்டங்களை எற்பாடு செய்கிறவரக்ளுக்கு இரண்டு வகையான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று உபசரிப்பு மற்றது . பாதுகாப்பு

 عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال : ما استخلف خليفة إلا له بطانتان بطانة تأمره بالخير وتحضه عليه وبطانة تأمره بالشر وتحضه عليه والمعصوم من عصم الله . رواه البخاري

 இந்த நபி மொழி இரண்டு வகை உதவியாளர்களை குறிப்பிடுகிறது. அது இரண்டு வகை கடமைகளை குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம். ஒன்று நன்மையின் பக்கம் கவனம் செலுத்துவது இன்னொன்று தீமையின் பக்கம் கவனம் செலுத்த்துவது. அதை உபசரிப்பது பாதுகாப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 சாலைகளை ஆக்ரமிக்க கூடாது.

 கூட்டங்கள் நட்த்துவோருக்கான பெரிய வழிகாட்டுதல் தேவையற்று பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகலை ஆக்ரமிக்க கூடாது.  ஒருவேளை சாலைகளில் கூட்டங்கள் நடைபெறும் எனில் பயணிகள் ஆம்புலன்ஸுகளுக்கும் நற்செயல்களுக்கும் வழி விட வேண்டும்..

 عن أبي سعيد الخدري أن رسول الله عليه السلام قال : إياكم والجلوس بالطرقات قالوا يا رسول الله لا بد من مجالسنا نتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم إلا المجالس فأعطوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر . رواه البخاري

 தலைவர்களை பார்க்கும் ஆசை இருந்தால் ஊரின் எல்லைக்கு வாருங்கள் என்று அழைத்தால் விரும்புகிறவர்கள் அங்கு சென்று கலந்து கொள்ளவே செய்வார்கள். மக்களிடத்தில் தமது கெத்தை காட்டுவதற்காகவே பலரும் பொத் இடங்களை ஆக்ரமித்து கூட்டம் கூட்டுகிறார்கள்.. இதில் தான் பல இடத்திலும் பிரச்சினைகள் எழுகிறது.

 மக்காவில் ஹஜ்ஜுக்கு பல இலட்சம் மக்கள் வருகிறார்கள். ஹஜ் நடைபெறுவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இடம் ஊருக்கு வெளியே இருந்த மினா மைதானமாகும். அதுமட்டுமல்ல ஹரமுக்கு வெளியே இருக்கிற அரபா மைத்தானத்தை தான் ஒரு நாளில் திரள்கிற பெருங்க் கூட்ட்த்திற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். இந்த கூட்டம் முழுவதும் கஃபாவுக்கு அருகில் திரண்டால் நிலை என்னவாகும்>

 நேரம் நீட்டிக்கப்பட வேண்டும்.

 பெருங் கூட்டம் கூடுகிற போது மக்கள் அதில் பங்கேற்பதற்கான நேரம் அல்லது தலைவரக்ள் அதில் கலந்து கொள்ளும் நேரம் குறுகியதாக இருக்க்க கூடாது.

 ஹஜ்ஜில் இந்த தத்துவத்தை அறியலாம்.

 ஹஜ் என்பது துல் ஹஜ் 9 ம் நாளில் மதியத்திலிருந்து மாலை வரை அரபா பெருவெளியில் தங்கியிருப்பதாகும்.

 ஒரு பெருங் கூட்டம் அந்த இட்த்திற்கு அந்த நேரத்தில் வந்து சேருவதில் சிரம்ம் இருக்கலாம் என்று கருதிய இஸ்லாம் அரபா நேரத்தை நீட்டித்து வழங்கியுள்ளது.

துல் ஹஜ் 10 ம்நாளி பஜ்ரு வரை அங்கு தங்குவதற்கான நேரமாக நீட்டிக் கப்பட்டுள்ளது.

 அதனால் தான் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் துல் ஹஜ் 10 நாளுக்கு இரவு இல்லை என்று சொல்வார்கள். காரணம் அதுவும் துல்ஹஜ் 9 தாகவே கருதப்படுகிறது.

 அதே சைத்தானை கல்லெறிவதற்கு சிறந்த நேரம் அஸருக்குள் என்று சொல்லப் பட்டாலும் அதற்கு பின்னரும் கூட கல்லெறியலாம் என்று நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

 அதே போல ஹஜ்ஜின் தவாபுக்கான நேரம் துல் ஹஜ் 9 ம் நாளில் சைத்தானை கல்லெறிந்ததில் இருந்து 12 ம் நாள் அஸர் வரை என நீட்டிக்கப் பட்டுள்ளது . அதற்கு பின்னரும் கூட தவாபிற்கான கால நீட்டிப்பு உண்டு என்று சில சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 ஹஜ்ஜை முடித்து மினாவிலிருந்து  திரும்புவதற்கான காலமும் துல்ஹஜ் பிறை 12 முதல் 13 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

 பிரதான நிகழ்வுகள் எளிதில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும்.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் போகிற போது அதில் பங்கேற்பவர்கள் பல மணி நேரம் காத்திருப்பதை கவனத்தில் கொண்டு பிரதான நிகழ்வுகள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

 قال رسول الله صلى الله عليه وسلم : إذا صلى أحدكم للناس فليخفف، فإن منهم الضعيف والسقيم والكبير، وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء. متفق عليه

 புனித மக்காவிலும் மதீனாவிலும் கூட்டம் அதிகாமாக இருக்கிற நாட்களில் மிக சின்ன சூராக்கள் ஓதப்பட்டு தொழுகை முடிக்கப்படுவதை பார்த்திருப்பீர்கள்.

கூட்ட நெருக்கடியை சமாளிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த உத்தியில் சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த கருணையின் கனமும் வெளிப்படுகிறது.

 கூட்ட ஏற்பாட்டாளர்களும் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சம் இதும்

  தம்முடைய சொந்த செல்வாக்கை விட மக்கள் மீதான கருணைக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஓடக் கூடாது.

 சில நேரங்களில் திடீர் நெருக்கடி ஏற்படும்.

 தீ பற்றிக் கொள்ளுதல்,  விபத்துக்கள்  மூச்சு திணரல்கள் உயிர்ப்பலிகள் போன்ற விபத்துக்கள் ஏற்படும்.

 அது போன்ற சந்தர்ப்பத்தில் நெருக்கடியை மேலும் சிக்கலாக்குகிற வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

 2015 ம் ஆண்டு ஹஜ்ஜில் ஒரு பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது  

துல்ஹஜ் 10 ம் நாள் முஜ்தலிபாவிலிருந்து திரும்புகிற ஹாஜிகள் மினாவில் சைத்தானுக்கு கல்லடித்து விட்டு மினா கூடாரத்திற்கு திரும்புவார்கள். அப்போது 203 எண் சாலையும் 204 ம் எண் சாலையும் சந்திக்கும் இடத்தில் வருவோருக்கு ஒரு வழியும் திரும்பி செல்வோருக்கு ஒரு வழியும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதில் ஈரான் நாட்டை சார்ந்த ஒரு சாரரார் அதை பொருட்படுத்தாமல் ஒரே வழியில் சென்றதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2500 ஹாஜிகள் ஷஹீதானார்கள்.  

 நெருக்கடியான சந்தர்ப்பங்களில் உரிய வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்காமல் செல்வது, அது போல நெருக்கடி நேரத்தில் வேடிக்கை பார்ப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடுவது ஆகியவை நெருக்கடிகளை அதிகப்படுத்தும் மேலும்  நிவாரணப்பணிகளை பாதிக்கும்.

 இதை புரிந்து ஜெண்டில்மேன்களாக நாம் நடந்து கொள்ள வேண்டும். ஆர்வக்கோளாறால் ஆபத்தை விளைவிப்பவர்களாக நாம் ஆகிவிடக் கூடாது.  

அதே நேரத்தில் நிவாரணப்பணிகளுக்கான் வாய்ப்பும் பொறுப்பும் இருக்கும் எனில் அதை விட்டு விட்டு ஓடக் கூடாது.

 ஹிஜ்ரீ 654 ம் ஆண்டு மஸ்ஜிதுன்னபவீ பள்ளிவாசலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

 இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து அது.

 ரமலான் ஒன்று வெள்ளிக்கிழமை இரவில் அத்தீவிபத்து நடந்தது. எவ்வளவு முக்கியமான நேரம் பாருங்கள்!

 ரமலான் முதல் தராவீஹை முடித்து தொழுகையாளிகள் வெளியேறிய பிறகு, பள்ளிவாசலின் பணியாளராக இருந்த அபூபக்கர் பின் அவ்ஹத் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு பள்ளிவாசலின் மேற்குபுரத்தில் இருந்த பொருட்கள் வைக்கும் அறைக்கு சென்றார்.

 அங்கிருந்த சின்ன விளக்குகளை எடுத்து வந்து பள்ளிவாசலின் சுற்றுச் சுவர்களில் வைப்பது வழக்கம். அப்படி எடுத்துக் கொண்டு வந்தவர், தான்  கொண்டு சென்ற பந்தத்தை மறந்து விட்டார்.

 அதிலிருந்து நெருப்பு பற்றி அந்த ஸ்டோர் தீப்பற்றியது. பிறகு பள்ளிவாசலின் அனைத்து திசைகளுக்கும் பரவியது. பள்ளிவாசலின் கூரை அப்படியே இடிந்து விழுந்தது. பள்ளிவாசலில் இருந்த குப்பாவும் அதன் கீழ் இருந்த மண்ணரைகளை தவிர அனைத்தும் சாம்பலாகின.

 அத்தீவிபத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்து அடையாளங்கள், கலீபாக்கள் காலத்து அடையாளங்கள், உமய்யாக்கள் அப்பாஸியாக்கள் காலத்து அடையாளங்கள் அனைத்தும் நாசமாகின

 இத்தனை களோபரத்தை கண்ட  அபூபக்கர் அவ்ஹத் கோர விபத்தை கண்டு ஓடிப்போய்விடவில்லை. ஒற்றை நபராக அந்த நெருப்பை அணைக்க போராடினார். ராட்சத நெருப்புக்கு முன் அவரது போராட்டம் தோற்றுப் போனது.  . அவர் நெருப்புக்கு பலியாகி ஷஹீதானார்.

 எந்த ஒரு நெருக்கடியிலும் அதை சரி செய்ய முடிந்த வரைக்குமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது சாத்தியப்பட்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

 இந்த உரையிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடங்கள்

 ·         தேவையற்ற நன்மையற்ற கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். – குறிப்பாக குடும்பத்தோடு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

·         கூட்டங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.

·         கூட்டங்களின் கட்டுப்பாடுகளையும் பண்பாடுகளையும் பேண வேண்டும்.

·         நம்மால் யாருக்கும் எந்த தொல்லையும் ஏற்படாதவற்று நடந்து கொள்ள வேண்டும்.

·         ஏதேனும் சிக்கல் ஏற்படுமாயின் இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

 கரூர் விபத்தில் பலியான 41 நபர்களின் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதல் அளிப்பானாக

தமிழக மக்களை பிடித்திருக்கிற சினிமா மோகத்திலிருந்து அல்லாஹ் மிட்சியை தருவானாக!

மக்கள் மீது கருணை காட்டுகிறவர்களாக தலைவர்களை அல்லாஹ் ஆக்கியருள்வானாக!