வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 26, 2018

கவலையளிக்கும் உயர் கல்வி

இஸ்லாம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம்  அளித்திருக்கிறது.
முடிந்த வரையில் கல்வியில் கரை காண இஸ்லாம் வலியுறுத்துகிறது.
வானம், பூமி, காலம், பேச்சு, விலங்குகள் என படைப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து அதன் இறுதி உண்மைவரை சென்று விட வேண்டும் என்கிறது திருக்குர் ஆன்.  
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ، الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ).[٥

وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ﴾ [16:12].

மனிதர்களுக்கு இடையே எல்லா வகையிலும் சமத்துவத்தைப் போதிக்கிற இஸ்லாம் கல்வியாளர்களை உயர்த்துகிற இடத்தில் மற்றவர்கள் அவர்களுக்கு சமமமல்ல என்கிறது.

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُو الْأَلْبَابِ
கல்வியாளர்களை இலக்காக வைத்து அல்லாஹ் பேசுகிறான்.
 وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم

கல்வியை தேடும் பயணத்தை இறைப்பாதையில் மேற்கொள்ளும் பயணமாகவும் சொர்க்கத்தை தேடிச் செல்லும் பயணமாகவும் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.  

مَن خَرَجَ في طَلَبِ العِلمِ فهو في سَبِيلِ اللهِ حتى يَرجِعَ - - أبي هريرة  الترمذي
وَمَن سَلَكَ طَرِيـقـَاً يَلتَمِسُ فيهِ عِلمَاً سَهَّلَ اللهُ لهُ طَرِيقاً بِهِ إلى الجَنَّةِ - أبي هريرة  -مسلم

மனித வரலாற்றில் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை வேறு யாரும் கொடுத்தத்தில்லை.

தனது வீட்டுப் பெண்கள் கல்வியை வளர்த்து கொள்வதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் வழி செய்தார்கள் .

ஹப்ஸா அம்மையார் எழுதப் படிக்க கற்பதை பெருமானார் (ஸல்) ஆர்வமூட்டினார்கள்
عاشت السيدة حفصة رضي الله عنها في بيت النبوة‏, وكانت ذكية عاقلة‏,‏تعلمت القراءة والكتابة علي يد صحابية جليلة هي السيدة الشفاء بنت عبداللهوقد شجعها الرسول صلي الله عليه وسلم  علي ذلك‏.

இத்தைகைய தூண்டுதல்களால் முஸ்லிம்கள் கல்விக் கூடங்களையும் ஆராய்சிக் கூடங்களையும் நூல் நிலையங்களையும் அமைப்பதில் மிகப் பெரும் ஆர்வத்தை செலுத்தினார்கள்.

கணக்கற்ற புதிய கண்டு பிடிப்புக்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப் படுத்தினார்கள்.

ஹிஜ்ரீ 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு ஹைஸம் “ கண் தனது சுய திறனால் அல்ல ஒளியின் ஊடுவறலால் தான் பார்க்க முடிய்கிறது என்ற பார்வையை பற்றிய அடிப்படை உண்மையை உலகிற்கு புரிய வைத்தார்.

இது போன்ற பன்னூற்றுக்கணக்கான உண்மைகள் முஸ்லிம்கள் மூலமாகவே உலகிற்கு தெரிந்தன.

உலகின் முதல் பல்கலைக் கழகம் கெய்ரோவில் உள்ள ஜாமி ஆ அல் அஸ்கர் பல்கலைக் கழகமாகும் . கிபி 940 ல் நிறுவப் பட்டது. ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் பல்கலைக் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் அனைத்தும் 1000 வது ஆண்டுகளுக்கு பின் நிறுவப் பெற்றவை ஆகும்.  

முஸ்லிம்கள் செழித்த பகுதிகளில் எல்லாம் மிகச் சிறப்பான நூல் நிலையங்கள் அமைக்கப் பட்டன. அங்கு தேடித் தேடி நூல்கள் சேகரிக்கல் பட்டன,

ஜெர்மனிய எழுத்தாளர் ஆதம் மித்ஸ் எழுதுகிறார்/

“முஸ்லிம்கள் தங்களது பொற்காலத்தில் நூல்களை சேகரிப்பதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை வரலாற்றில் வேறு எந்தச் சமூகமும் கொடுதததில்லை,  ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூல் நிலையம் இருந்தது. அரிய கையேட்டுப் பிரதிகளை சேகரிப்பதற்காக வியாபாரிகள் தொலை தூரத்திற்கும் பயணம் செய்தார்கள்.  கலீபாக்களும் செல்வந்தர்களும் கையேட்டுப் பிரதிகளுக்காக ஏராளமாக செலவ்ழித்தார்கள்” Die Renaissance des Islams)

கலீபா ஹாரூன் ரஷீதுடை சபையில் புத்தங்கள் தயாரிப்பவருக்கு புத்தகத்தின் எடைக்கு எடை தங்கம் வழங்கப் பட்டது.

இதைப் பெருவதற்காகவே உலகின் பல பகுதிகளில் இருந்தும் எழுத்தாளர்கள் பக்தாதுக்கு வருவார்கள்

முஸ்லிம்களின் இத்தனை முன்னேற்றத்திற்கும் இஸ்லாமின் தூண்டுதலே காரணமாக இருந்தது.

இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகிற அதே நேரத்தில் இறையச்சம் , , ஒழுக்கம் ஆகியவை அந்தக் கல்வியின் இரு கண்களாக இருக்க வேண்டும் என்கிறது.

முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கான அடிப்படைக் கல்வி உயர் கல்வி பற்றி சிந்திக்கிற போதே இந்த இரு அம்சங்களையும் மிக உறுதியாக நினைவில் வைத்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள்.                    மார்க்க அறிஞர்கள் எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை மிக அழகாக அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஒழுக்கம் என்பது சப்பாத்திக்கான மாவு அளவுக்கு இருக்க வேண்டும் கல்வி என்பது அதில் போடப்படுகிற உப்பின் அளவுக்கு இருக்க வேண்டும் என்றார்கள்.
என்ன அருமையான உதாரணம் ?
ஒழுக்கம் இருக்கிற இடத்தில் சிறு அளவு கல்வி இருந்தாலும் அது பெரிய அள்வில் பரிணமிக்கும்.
ஒழுக்கம் தவறும் பட்சத்தில் பெரிய அளவில் படித்தாலும் அது தீமையாக வந்து சேரும்.

இன்றைய கல்விக் கூடங்கள் திட்டமிட்டு அவர்களுடைய சமய நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் பிள்ளைகளிடம் திணிக்கின்றன.

சமீபத்தில் கேரளாவில் ஒரு கல்லூரி விழாவில் முஸ்லிம் மாணவிகள் மாணவர்களுடன் சேர்ந்து அலங்கோலமாக நடனமாடுவதை சமீபத்திய வாட்ஸ் அப் வீடியோ வழியாக நம்மில் பலரும் பார்த்திருக்கலாம்.

இறையச்சத்தையும் பண்பாட்டையும் எந்தக் கட்டத்திலும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதை மிக அழுத்தமாக நமது மாணவச் செல்வங்களுக்கு போதிய அளவில் போதிக்கவும் வலியுறுத்தவும் பெற்றோர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மிக கவனமாக மாணவர்களை கண்காணிக்கிற பொறுப்பும் பெற்றோர்களுக்கு இருக்கிறது.

நல்ல பள்ளிக் கூடத்தில் அல்லது கல்லூரியில் சேர்த்து விடுவதோடு பெற்றோர்கள் தமது பொறுப்பு முடிந்து விட்டதாக கருதக் கூடாது.

அதன் பிறகு அந்த மாணவருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் என்ன பேக்கேஜில் சமபளம் கிடைக்கிறது என்பதை மட்டும் பெற்றோர்கள கவனிக்க கூடாது.

நம்முடைய இத்தகைய சிந்தனையினால் கல்வி நிலையங்களில் எவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்பதை அருப்புக்கோட்டையில் கைது செய்யப் பட்ட பேராசியை நிர்மலா தேவியின் நடவடிக்கைகள் உணர்த்து கின்றன.

கல்லூரி மாணவிகள் குறிப்பாக பலவீனமான மாணவிகள், ஆய்வு மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை உயரதிகாரிகளின் காமப் பசிக்கு இரையாக்கப் படும் கோடூரம் வெளியே வந்துள்ளது.

பல மட்டத்திலும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                                                                               உயர் கல்வி பெருவது என்பதே பண்பாட்டில் சிறப்படைவதற்காகத்தான். அதனாலேயே பல்கலைக்கழகங்கள் பண்பாட்டின் சின்னங்களாக கருத்தப் படுகின்றன, சமூகத்தில் பல்கலைக் கழங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்து இருக்கிறது. பல் வேறு சமூக புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பல்கலைக் கழகங்களே காரணமாக இருந்துள்ளன,   அத்தகைய பல்கலைகங்களுக்கு நேர்ந்துள்ள அவலம் சாமாணியமானதல்ல                           
                  உண்மையில் இந்தப் பிரச்சனைக்காக தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்காக திரண்டதை விட பெரிய அளவில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும் . இது எதிர்கால தலைமுறையை பாதிக்க கூடிய விசயம், நாம் பரிசுத்தமாக அனுப்பி வைக்கிற நமது செல்வங்களை கல்வியின் புனிதப் பெயரால் களங்கப்படுத்திகிற அவலம். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழக மக்கள் நிச்சயமாக பொங்கி எழுந்திருக்க வேண்டும். 

இதில் முதலில் விழிப்படைய வேண்டியவர்கள் மாணவ மாணவியரின் பெற்றோர்களே!

எப்படியாவது படிக்கட்டும் எப்படியாவது பாஸாகட்டும் . நல்ல வேலையில் சேர்ந்தால் சரி என்ற மனோபாவத்தை பெற்றோர்கள் விட்டொழிக்க வேண்டும்

தம்முடைய மகனோ மகளோ கல்வியில் அதிக மதிப்பெண் பெருவதற்காக தவறான வழிக்கு  இழுத்துச் செல்லப் பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை அத்தகை நிர்பந்தங்கள் ஏதும் ஏற்படும் என்றால் தயங்கமால் தங்களிடம் தெரிவித்தால் பக்குவமான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம், உன்னைப் பாதுகாப்போம். ஒரு வேளை ஒழுக்கங் கெட்டுத்தான் அந்தப் பட்டம் கிடைக்கும் என்றால் அது நமக்கு தேவையே இல்லை என்பது போன்ற ஆலோசனைகளை ஒரு நண்பனைப் போல் நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை நம்க்கு இருக்கிறது.

அருப்புக் கோட்டை வழக்கு ஏற்படுத்தியிருக்கிற மற்றொரு அதிர்ச்சி இந்த விவகாரத்தில் ஆளுர் மாநில அதிகாரிகள் மட்டும் அல்ல ஆளுநர் வரை தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறார்.

பேராசியை நிர்மலா தேவி மாநில ஆளுநர் என்ற பெயரையும் தன்னுடைய பேச்சில் குறிப்பிடுகிறார். அதற்கேற்றார் போல ஆளுநரின் நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.

தமிழக வரலாற்றில் மிகவும் கவலைப் பட வைத்த சூழலில் சமீபத்தில் இது போல வேறு எதுவும் இல்லை.

சமூகத்தின் மிக உயர்ந்த மரியாதைக்குரிய பல்கலைக் கழங்கள் இப்படி தீய மனிதர்களின் பிடியில் சிக்கியுள்ளதே !  நம்முடைய மாணவ மாணவிகள், ஆய்வாளர்கள் தமது நியாயமான உரிமைக்காக எத்தனை எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறார்களோ என்ற கவலை இதயத்தை இறுக்கமாக பிழிகிறது.

பேராசியை நிர்மலா தேவி சில மார்க்குகளுக்காக மட்டுமல்ல இன்னும் வசதியாக வாழ்வதற்கும் இது உதவி செய்யும் என்று சொல்லி மாணவிகளை தவறான வழிக்கு ஆழைக்கிறார்.

உயர் பண்பாடுகளை , வாழ்வின் உன்னத இலட்சியத்தை போதிக்க வேண்டிய பல்கலைக் கழங்கள் தமிழகத்தில் எந்த அளவு தரம் தாழ்ந்து விட்டன என்பதை காட்டுகிறது.

ஏ பி ஜே அப்துல் கலாம் தனது வெற்றிக்கு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி விரிவுரையாளர்கள் எவ்வள்வு தூரம் உதவி யிருக்கிறார்கள் என்பதை தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

இஸ்லாத்திலோ ஆசிரியர்களே வாழ்க்கையின் பிரதான வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்.

இமாம் ஷாபி ரஹ் அவர்களுக்காக இமாம் அஹ்மது பின் ஹன்பல் தனது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் பிரார்த்திப்பார்கள்.

தமிழக அரசு பல்கலைக் கழங்கள் கல்லூரிகள் பள்ளிக் கூடங்களில் மதிப்பெண்ணுக்காகவும் மற்ற சலுகைகளுக்காகவும் மாணவ மாணவிகள் இவ்வாறு துன்புறுத்தப் படுவதற்கு எதிராக மிகச் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப் பட்டால் எத்தகைய கடும் தண்டனை கிடைக்கும் என்பதை அறிவிக்க வேண்டும்

பாலில் விஷம் கலக்கிற வேலை இது.

தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள மாணவர்கள் மதிப்பெண்ணிற்காக சான்றிதழகளுக்காக சின்னச் சின்ன சலுகைகளுக்காக பல்வேறு வழிகளில் துன்புறுத்தப் படுவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வுக்கான முடிவை குறிப்பிட்ட ஆசிரியர் வழியாகவே பெற வேண்டி இருப்பதால் அவர் கேட்கிற பணம் அவர் விரும்புகிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பக ஆய்வு மாணவிகள் ஆசிரியர்களின் காமப் பசிக்கு பழியாக வேண்டியிருக்கிறது. மாநில அரசு இந்த விபத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்க தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இது போன்ற நேரங்களில் மாணவ மாணவியர் தமது குற்றச் சாட்டுக்களை அச்சமினிற் தெரிவிப்பதற்கான வழி முறைகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

ஒரு நிர்மலா தேவை மட்டுமல்ல. பல முதலைகள் இந்தக் கல்விக்கடலை அசுத்த படுத்திக் கொண்டிருக்கின்றன.

அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மக்களும் தங்களுடைய மகன அல்லது மகள் உயர் கல்வி படித்து கை நிறை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற அதே நேரத்தில் இறையச்சத்டிலும் பண்பாட்டிலும் அவர்கள் தோற்று விடக் கூடாது என்பது குறீத்து சிந்திக்க வெண்டும்.

அல்லாஹ் தமிழ கல்வித்துறையை பாதுகாப்பானாக!  நமது மாணவ மாணவர்களின் கல்விப் பயணத்தை இலேசாக்குவானாக!  அதை சொர்க்கத்தின் பாதையாக மாற்றியமைப்பானாக!


No comments:

Post a Comment