வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 27, 2022

குடியரசில் ஒரு சர்வாதிகாரம்

 صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُۥ عَٰبِدُونَ

நேற்று முந்தினம் இந்தியக் குடியரசின் 73 வது தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்றன.

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடம் அளிக்காமல் புறக்கணித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு நாள் அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், எந்த வகையான அம்சங்களும், அடையாளங்களும், தகவல்களும் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெற்றவையே. அந்த அடிப்படையில் தமிழகத்துக்கான அலங்கார அணிவகுப்பில், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வ.உ.சி., பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நியமித்த 10 பேர் கொண்ட குழு நிராகரித்துள்ளது

தமிழக அரசின் சார்பிலான வாகனம் நிராகரிக்கப் பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழ்க அரசின் ஊர்தியில் இடம் பெற்றிருந்த மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஆரம்ப காலத்திலேயே போரிட்டவர்கள்.

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப்தொண்டைமான், ஆங்கிலேயர் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போர் சோழவந்தானில் தொடங்கி சிலைமான், மணலூர், திருப்புவனம், முத்தனேந்தல் என நடைபெற்று கடைசியாக மானாமதுரையில் போர் பயிற்சியே பெறாத சுதந்திர தாகமிக்க மக்களின் உதவியோடு போர் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படை பேருதவி புரிந்தது. உதவியது. வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் மருதுபாண்டிய சகோதரர்களும் ஹைதர் அலியும் அமர வைத்தனர்.

இந்தக் கூட்டணியின் விளைவாக தமிழகத்தில் மிகச் சிறந்த மத நல்லிணக்கம் பேண்ப்பட்ட்து என்று வரலாறு கூறுகிறது.

இது போதாதா பாஜாக வினரை ஆத்திரப் படுத்துவதற்கு.? மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்ற வார்த்தையே அவர்களுக்கு கசக்கும் செய்தியல்லவா ?  மருது சகோதர்ர்களின் போராட்டம் விடுதல்லப் போர் அல்ல என்று கூறி நிராகரித்து விட்டார்கள்.  

மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருதுக்களுடன் அவர்கள் ஆண் வாரிசுகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர்.

ஒரு குடியரசு தினவிழாவில் தங்கத்தில் பசுவின் தோற்றத்தை காட்டுவதைவிட சாமியார்களை காட்டுவதை விட இந்த வீர்ர்களை காட்டுவது மோசமாகிவிட்ட்தா ?

குடியரசு தினம் கொண்டாடப்படுகிற நாளில் இத்தைகைய நடவடிக்கைகள் குடியரசு தத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பதாகும்.

பாஜக அரசு ஆட்சி செய்யும் மாநிலங்கள் முழுக்க முழுக்க இந்தியாவை அல்லாமல் இந்துத்துவாவை பிரதி நிதித்துவப்படுத்தும் வாகனங்களையே இடம் பெறச் செய்தன. உத்தரப் பிரதேச வாகனத்தில் பசுவை கொண்டாடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஊர்தியில் தவம் செய்யும் சாமியார்கள் இடம் பெற்றார்கள். இது மட்டுமல்லாது எல்லா இடத்திலும் காவி வண்ணம் இடம் பெற்றது. நடனமாடிய பெண்கள் கூட காவி வண்ணத்தில் ஆடை அணிந்திருந்தனர்.  ஜம்மு காஷ்மீரின் ஊர்தியில் கூட நாட்டின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் காட்சிகள் இடம் பெறவில்லை. நாட்டின் முன்னேற்றத்தை பிரதபலிக்கும் ஏற்பாடுகளுக்கு பதில் நாட்டை ஆக்ரமிக்க முயலும் சிந்தனையே இவற்றில் மேலோங்கி இருந்தது.

மத்திய பாஜக அரசு மக்கள் அளித்த ஆட்சியதிகாரத்தை தவறான வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.  அரசு ஆபத்தான பாதையில் பயனிக்கிறது.

சில நிகழ்வுகளின் விளைவுகள் உடனடியாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பின்னால் விபரீதங்கள் தெரிய வரும் போது அது அதிக கவலைக்குரியதாக இருக்க கூடும்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பாஜக வின் மூல அமைப்பான ஜன்சங்கத்தின் நடவடிக்கைகள் எப்படி நாட்டு பிரிவிணைக்கு வழிகோலியதோ அதே போன்ற நடவடிக்கைகளை இப்போதைய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இது இந்திய மக்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தியாவின் பன்முகத் தன்மையை இந்திய குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு பிரதிநிதிக்கவில்லை என்பதை ஜனநாயக சக்திகள் கண்டித்திருக்க வேண்டும்.  ஆனால் துரதிஷட வசமாக யாரும் அது குறித்து வாய் திறக்க வில்லை.

இந்திய உலகின் ஆகச் சிறந்த குடியரசு நாடுகளில் ஒன்று.

குடியர்சு தினம் என்றால் என்ன என்பது பலருக்கும் புரிவதில்லை. ஏதோ கொடியேற்றுகிறார்கள் என்பதை தவிர  சுதந்திர தினத்திற்கு குடியரசு தினத்திற்கு வித்தியாசம் தெரிவதில்லை.

நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15 தேதி விடுதலை பெற்றோம். அது சுதந்திர தினம். அப்போது ஜவஹர் லால் நேரு பிரதமராக நியமிக்கப் பட்டார். அதற்கு பிறகு 3 ஆண்டுகளாக நமக்கான சட்ட அமைப்பு உருவாக்கப் பட்டது.  1950 ஜனவரி 26 முதல் அது நடை முறைக்கு வந்தது. அதன் பிறகு தேர்தல் நடை பெற்றது அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஜவஹர்லால் நேரு பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டார். எனவே குடியரசு தினம் என்பது இந்தியாவின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளாகும். இந்திய அரசியல் சாசனம் என்பது உலகின் மிகப் பெரிய அரசியல் சாசனமாகும். இந்தியக் குடிமகன்களுக்கான உரிமையும் இந்தியாவின் பன்முகத்தன்மையும் அதில் மிக முக்கியமாக பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அந்த அரசியல் சாசனமும் அதன் அடிப்படையில் அமைந்த நிர்வாக கட்டமைப்பும் தான் இந்தியாவின் சுதந்திரத்தை 75 ஆண்டுகளாக பாதுகாத்து நாட்டை ஒருங்கிணந்து கொண்டு செலுத்தி வருகிறது. நம்மோடு சுதந்திரப் பெற்ற பாகிஸ்தான் பர்மா பல நாடுகளில் மக்களாட்சி முறைக்கு ஆபத்து வந்திருக்கிறது.  இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இதுவரை நடை பெற்றதில்லை.

ஆனால் இந்தியாவின் குடியரசு தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து சர்வாதிகார மனப் போக்கில் செயல் பட்டு வருகிறது.   இந்தியாவின் வண்ணத்தை மாற்ற முயல்கிறது.

திருக்குர் ஆன் உலக மக்களுக்கு சில சாகா வராலாறுகளை கூறுகிறது. மக்கள் அதிலிருந்து பாடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக.

பிர் அவ்னுடைய வரலாறு அதில் முக்கியமானது. எகிப்தின் சர்வாதிகாரியான பிர் அவ்னின் பெயர் திருக்குர் ஆனின் 27 அத்தியாயங்களில் 74 முறை கூறப்பட்டுள்ளது. இந்த அளவு வேறு எந்த ஒரு தவறான மனிதனைப் பற்றியும் குர் ஆன் பேசவில்லை.

இதில் ஒரு பேரதிசயமாக பிர் அவ்னின் உடலை அல்லாஹ் கியாமத் நாள் வரை பாதுகாத்துவருகிறான்.

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)

இந்த வசனத்திற்கு ஆரம்ப காலத்தில் விளக்கம் சொன்ன விரிவுரையாளர்கள். பிர் அவ்னின் உடலை கடலுக்கு மேலே அவன் அணிந்திருந்த ஆயுதங்களுடன் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். இதன் மூலம் யூதர்கள் நிம்மதி அடைந்தனர் என்று கூறினார்கள்

فقد قال ابن كثير في التفسيرقال ابن عباس وغيره من السلف: إن بعض بني إسرائيل شكوا في موت فرعون، فأمر الله تعالى البحر أن يلقيه بجسده سويا بلا روح وعليه درعه المعروفة على نجوة من  الأرض (وهو المكان المرتفع) ليتحققوا من موته وهلاكه

ஆனால் பிற்காக தொல்லியல் அறிஞர்கள் ஒரு பள்ளத்தாக்கில் பிர் அவ்னின் உடலை கண்டுபிடித்த போது அல்லாஹ் அவனது உடலை பாதுகாப்பான் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்தது.

1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு பள்ளத்தாக்கில் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து அது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.  இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது. தொள்பொருள் ஆய்வாளர்கள்  மரபணு நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். இக்கு  குழுவுக்கு prof:Maurice Bucaille  மாரிஸ் புக்கல் தலைமை தாங்கினார். அக்குழு இது பிர் அவ்னின் உடல் தான் என்பதையும் இது மற்ற மம்மிகளைப் போல அல்லாமல் பாடம் செய்யப் படாமலே பாதுகாக்கப் பட்டு வருகிறது என்பதையும் கண்டு பிடித்தனர்.

அந்த உடல் இப்போதும் பொதுமக்களின் பார்வைக்காக கெய்ரோ மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளது.

அந்த உடல் இன்று வரை வாழும் மனிதர்களுக்கு ஒரு செய்தியை சொல்லுகிறது. பிர் அவ்ன் ஏழ்ன் அழிந்தான் தெரியுமா ?

அவன் சர்வாதிகாரம் செய்தான். தனது எண்ணத்திற்காகவும் கருத்திற்காகவும் மற்றவர்களை அழிக்க முயற்சித்தான். எல்லை மீறி நடந்து கொண்டான்.

 وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ

எல்லை மீற்சி செல்வோர் அனைவருக்கும் இத்தைக நிலை தான்.

பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தி நெப்போலியனுக்கு என்ன நடந்தது.

இன்றும் அவனை உலகின் பெருவீர்ர்களில் ஒருவனாக மக்கள் போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு ஏற்பட்ட நிலை என்ன ? அவன் கைது செய்யப் பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப் பட்டு செயிண்ட் ஹலீனா என்ற தீவில் தனிமை சிறை வைக்கப் பட்டு மாண்டான்

ஏன் தெரியுமா

பிரான்ஸில் நடைபெற்ற ஒரு மக்கல் புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றிய அவன் பின்னர் பிரான்ஸின் மன்னராக தனக்கு தானே முடி சூடிக் கொண்டான். சர்வாதிகாரம் செய்தான்.

அடுத்த ஒரு புரட்சி அவனது அடையாளத்தை மாற்றி கைதியாக்கிவிட்டது.

சர்வாதிகாரம் செய்வோர் யாரும் கவனிக்க வேண்டிய பாடம் இது. உலகம் சர்வாதிகாரிகளை சகித்துக் கொள்வதில்லை. அவர்கள் எத்தனை பலத்தில் இருந்தாலும்.

இதில் ஒரு பெரிய வருத்தம் என்ன வென்றால் சர்வாதிகாரிகள் தங்களுடைய அழிவுக்கும் மட்டுமல்ல தங்களுடைய தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறார்கள்.

ஹிட்லர் தனக்கு மட்டுமல்ல ஜெர்மனிக்கும் பேரழிவை தேடித்தந்தான்.

இந்தியாவின் தற்போதைய பிரதமரும் அவர் சார்ந்த கட்சியினரும் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய செய்தி.

அவர்கள் நாட்டை காவி மயமாக்க முயற்சி செய்கிறார்கள்.

அவர்கள் தலைகீழ் நின்று தவம் செய்தாலும் பயிர்களை பசுமை நிறத்திலிருந்து மாற்ற முடியாது. நெல் மணிகளை காவி நிறத்திற்கு மாற்றிவிட முடியாது.

இயற்கையின் வண்ணங்கள் நிரந்தரமானவை அந்தி வானத்தின் சிவப்பையோ ஆகாயத்தில் உலவும் மேகங்களின் வெண்மையையோ யாரும் திருத்தி விட முடியாது.

திருக்குர் ஆன் கூறுகிறது.

صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُۥ عَٰبِدُونَ

சோவியத் ரஷ்யா உலக வரை படத்தை செஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றி விட முயற்சித்தது.  என்ன நடந்தது ? . இன்று கம்யூனிசம் சாயம் போன கிழிந்த துணியாக கிடக்கிறது.

மத்தியில் ஆட்சி செய்வோர் இயற்கை விதிகளையும் இந்தியாவின் பெருமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இல்லை எனில் அவர்கள் மட்டுமல்ல நாடும் ஒரு பெரும் சோதனையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment