வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 11, 2023

+2 தேர்வு முடிவுகள் சில தகவல்கள்

 தமிழகத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. (மே 8)

தமிழக மக்களைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளை விட அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிற செய்தி இது.

நீட் தேர்வு எனும் சாத்தான் குடியேறிய பிறகு இதற்கான மவுசு குறைந்திருந்தாலும் கூட மருத்துவம் அல்லாத துறைகளுக்கு இந்த மதிப்பெண் முக்கியமானது என்பதால் இந்த முடிவு சிறப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தேர்வு முடிவுகளில் கவனிக்க தக்க பல அம்சங்கள் இருக்கின்றன.

அரசியல் தலையீடு இதில் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு கல்வி அமைச்சர் வரத் தாமதமானதினால் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவது தாமதமானது.

9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என சுமார் 8 இலட்சம் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பரபரப்பாக காத்திருந்த நிலையில் அமைச்சர் தனது சொந்த ஊரில் சில வேலைகளை முடித்து விட்டு வருவதற்கு கால தாமதமாகியது என்ற அறிவிப்பு உண்மையில் தமிழகத்திற்கு நேர்ந்த நேர்ந்த வெட்ககக்கேடாகும்.

நீங்கள் கோவை பி எஸ் ஜி ஆர்ட் & சயின்ஸ் கல்லூரிக்கு அன்றைய தினம் அதிகாலையில் சென்று பார்த்தீர்களானால் பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பல் விளக்குவதும் காலை உணவருந்துவதும் தேர்வு முடிவுகளை காண்பதும் அங்கேயிருக்கிற மைதானத்திலாகத்தான் இருக்கும். ஒவ்வொரு மாணவருடையவும் பெற்றோர்களுடையவும் பதபதைப்பு அப்போதுதான் தெரியும்.

கல்வியமைச்சர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளை அறியாமல் போனது துரதிஷ்டமே!

உண்மையில் இதற்காக முதலமைச்சர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் இனிமேற் கொண்டு இந்த தேர்வு அறிவிப்புக்களை கல்வித்துறை அதிகாரிகளே கவனித்துக் கொள்வார்கள் என்று அறிவிப்பது நடந்த தவறுக்கு பிராயசித்தம் தேடுவதாக அமையும்.

முஸ்லிம் மாணவி முதலிடம்

12 வது வகுப்பு தேர்வு முடிவுகளின் படி மார்க் அடிப்படையில் திண்டுக்கல்லைச் சார்ந்த மாணவி நந்தினி 600 க்கு 600 என்ற மதிப்பெண் பெற்றிருக்கிறார்.  அவர் தமிழ் மொழியிலும் 110 மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பது தமிழகத்திற்கு பெருமை.

ஆனால் பொதுவாக மூன்றாம் குரூப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மானவியை மாநிலத்தில் முதலிடம் பெற்றவர் என்று குறிப்பிட படமாட்டார். ஏனெனில் 12 வகுப்பை பொருத்தவரை பர்ஸ் குரூப் எனப்படும் அறிவியல் பாட பகுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்குத்தான் உண்மையான முதல் மானவருக்குரிய அந்தஸ்து கிடைக்கும். அவருக்குத்தான் நாட்டின் உயர் படிப்பான மருத்துவ கல்வி பெறுவதற்கும் நீட் தேர்வு எழுதுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

தமிழக கவர்னர் தனது மாளிகையில் உயர் அதிகாரிகள் தங்குகிற விருந்தினர் அறையில் தங்க வைத்த கடைய யல்லூரி ஹிதாயத்துல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி மாணவி சப்ரீன் இமானா தான் இந்த ஆண்டு 12 தேர்வில் மதிப்பு மிகு அதிக மதிப்பெண் பெற்றவர் ஆவார்.  அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 590 – இதில் உயிரியல், இயற்பியல், வேதியல் (biology, physics and chemistry) ஆகிய மூன்று துறைகளில் அவர் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கவர்னர் மாளிகையில் அவர் அழைத்து தங்க வைக்கப்பட்டதன் பின்னணி இது தான்.  உண்மையில் துறை ரீதியாக மாணவி சப்ரீன் இமானா தான் இந்த ஆண்டு 12 வகுப்பு தேர்வில் மதிப்பு மிக்க அதிக மதிப்பெண் பெற்றவர் ஆவார்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நம் இதயப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது உயர்வான நோக்கங்கள் வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திர்க்கிறோம்.

12 வகுப்பு மாணவர்கள் என்பவர்கள் நமது நாட்டின் அடிப்படை கல்வியறிவை ஒரு மரியாதையான நிலைக்கு கொண்டு செல்பவர்கள் ஆவார்கள். +2 பாஸ் என்பது எந்த ஒரு மனிதனும் மதிப்பாக சொல்லிக் கொள்ள முடிந்த ஒரு வாசகம் தான்.

நான் சமீபத்தில் ஜோர்டான் போயிருந்த போது அங்குள்ள கைடு எங்கள் நாடு 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற நாடு என்று பெருமையாக கூறினார். அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால் சந்தோஷம் அவர் அத்தோடு நிறுத்தவில்லை, உங்கள் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருக்கலாம் ஆனால் கல்வியற்வு மிகவும் குறைவு. ஒரு முறை ஐ நா சபையில் உங்களது நாட்டு பிரதமர் நாங்கள் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்று பெருமையாக கூறிய போது அடுத்து பேசிய எங்கள் நாட்டு தலைவர் “ நாங்கள் மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற நாடு என்று கூறியதாக கூறிய அவர் எங்களது நாட்டில் எந்த குழந்தையும் +2 கல்வியை முடித்திருப்பார்கள் என்று கூறினார்.

மக்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்து 110 சதவீதம் கல்வியில் சிறக்கும் நாடாக நமது நாடு திகழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

கல்வி தான் ஒவ்வொரு தனி மனிதனுடையவும் நாட்டினுடையவும் பெரும் செல்வமாகும்.

وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ

 

அதுவே பொறாமைப்படக் கூடிய அளவிற்கான வளர்ச்சியாகும்.

 பணம் பதவி கார் பங்களா ஆகியவற்றை பார்த்து உண்மையில் பொறாமை படுவதற்கு எதுவும் இல்லை.

 ஏனெனில் இதனால் கிடைக்கும் பயன் என்ன ?

 பல கோடி மதிப்பிலான காரை ஒருவர் இறக்குமதி செய்தார். அதற்கான சட்ட விதிகளை அவர் அறிந்திருக்க வில்லை. அதனால் அவர் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார்.  அதிக அபராதம் செலுத்தவும் நேர்ந்தது?

 எனவே இஸ்லாம் கற்பிக்கிறது.

 தர்ம்ம் செய்பவை பார்த்து பொறாமைப் படனும் கல்வியாளரை பார்த்து பொறாமைப்படனும்.

 ن ابن مسعود قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول" لا حسد إلا في اثنتين : رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ، ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها " .

 பொறாமைப்படனும் என்றால் அவர்களைப் போல ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதாகும்.

 இந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பற்றி அவர்கள் படித்த விதம் அவர்களது பெற்றோர்களது ஒத்துழைப்பு ஆகியவற்றை நாம் முன்னுதாரானமாக எடுத்துக் கொள்ள வேண்டும் . அவற்றை நமது பிள்ளைகளுக்கும் சொல்ல வேண்டும்.

ஒரு கூலித் தொழிலாளியான மாணவி நந்தினி சொல்வதை கவனியுங்கள்

படிப்பு மட்டும் சொத்து என்று கூறி தான் பெற்றோர்கள் என்னை வளர்த்தார்கள்..படிப்பதுதான் எனது சொத்து என்று நினைத்து படித்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” 

நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக இருக்கிற நமது முஸ்லிம் சமூகத்து மாணவர்களும் கணிசமான மதிப்பெண்களை பெற போராடியிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு அடையாளம் தான் மாணவி சஃரீனா – தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து முஸ்லிம் சமூகத்து மாணவ மாணவிகளுக்கு அவர்களது இல்மிலும் வாழ்விலும் அல்லாஹ் பரகத் செய்வானாக!

மாணவி சப்ரீனா அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில ஆளுநர் அவரை தனது மாளிகையில் தங்க வைத்த்தற்கான காரணத்தை கூறும் போது “அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவர் கல்வியில் இவ்வளவு சிறப்பான நிலையை பெற்றதற்காக என்று கூறுதை நாம் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம் பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

முஸ்லிம் பெற்றோர்களே கல்வியில் கவனம் செலுத்துங்கள், நிறுவன்ங்களின் பெறுமையில் அல்ல.

கல்வியின் மீது அக்கறை செலுத்துகிறவர்கள் தேவையற்ற பெருமையில் நாட்டம் கொள்ளக் கூடாது. கல்வியில் தற்பெருமை கலந்தால் ஒரு போதும் நன்மை நடக்காது.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மங்கா புகழுடைய அறிஞர் இமாம் ஷாபி (ரஹி) அவர்கள் சொல்வதை கவனத்துடன் கேளுங்கள். பெற்றொர்களே! மாணவர்களே!

قال الإمام الشافعي: "لا يطلب هذا العلم من يطلبه بالتملل وغنى النفس فيفلح, ولكن من طلبه بذلة النفس وضيق العيش وخدمة العلم أفلح"

 அக்கறையில்லாத சடைவோடும், பணம் இருக்கிறது பதவி இருக்கிறது  என்ற சுய கவுரவத்தோடும் கல்வியை தேடுபவர்கள் வெற்றி பெற முடியாது. பணிவோடும் , சிரமங்களை சகித்துக் கொள்ளும் மன்ப்பக்குவத்தோடும் , கல்வியே கதி என்று கிடப்பவர்களே கல்வியால் வெற்றி பெற முடியும். என்பது இந்த வாசகத்தின் கருத்தாகும்.

எனவே கல்விக்கு பணிவோம். அதில் சிறிய தலைக்கணத்திற்கு இடம் தர வேண்டாம்.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிற பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு என்று என்பது ஒரு சராரசரியான நிஜமாகும்.

தனியார் பள்ளிகள் இல்லை என்றால் தான் முஸ்லிம் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேடிச் செல்கிறார்கள்.  அல்லது மிகவும் வறுமையான நிலையில் இருந்தால் தான் அரசுப் பள்ளிகளை முஸ்லிம்கள் நாடுகிறார்கள்  என்ற ஒரு கருத்தும் உண்டு,

தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறுவது நம்முடைய நோக்கம் அல்ல. நல்ல கல்வி கிடைக்கும் என்றால் தனியார் கல்வி நிறுவனங்களை தேடுவதில் தவறில்லை.

பெறுமைக்காக தனியார் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டாம் என்பதே நம்முடைய கருத்தாகும்.

அதே போல அரசு பள்ளிகளையோ அரசு உதவி பெறும் பள்ளிகளையோ தாழ்வாக கருத வேண்டாம் எனப்துமே நமது கருத்தாகும்.

ஒரு அரசு பள்ளி என்பது சாமாணிய விசயம் அல்ல. பல முஸ்லிம் பகுதிகளில் அரசு பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்த நிலை மாற வேண்டும்.

முஸ்லிம் சமூக அமைப்புக்களும் தனவந்தர்களும் அரசு பள்ளிகளுக்கு புரவலர்களாக செயல்பட்டால் அரசு பள்ளிகளை நாம் பாதுகாக்க முடியும்.

( ஆலிம்கள் தங்களது பகுதியில் முஸ்லிம்களால் கைவிடப்பட்டிருக்கும் அரசு பள்ளிகள் நகராட்சி பள்ளிகளை பற்றி பட்டியலிட்டால் நலம். )

அரசு பள்ளிகளில் கல்வி சரியில்லை கட்டுப்பாடுகள்  இல்லை என்பது பெற்றோர்களின் ஒரு பெரும் குறையாகும்.

உண்மையில் இந்த குறையை சொல்லிக் கொண்டு நாம் அதிக நாட்களை கட்த்துவோமானால் கல்வி நமக்கு பெரும் செலவாகிவிடும்,

ஒரு அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியை சமூக பெற்றோர் அமைப்புகள் அல்லது அந்தப் பகுதியில் உள்ள சமூக அமைப்புகள் ஜமாத்துகள் அதிகாரிகளுடன் கலந்து பொறுப்பேற்றுக் கொண்டால் சிறப்பான சூழலை உருவாக்க முடியும்.

அரசு பள்ளிகளில் சமூகம் காட்டுகிற அலட்சியமே அரசு பள்ளிளின் தரம் குறைய ஒரு முக்கிய  காரணமாகும்.

இந்த முறையும் மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் .

  இந்த ஆண்டு 8.17 லட்சம் மாணவர்கள் +2 தேர்வை எழுதினர்.  அதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர்  அவர்களில்  மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45%, தேர்ச்சி பெற்றுள்ளனர் .

பெண்கள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கிற செய்தி

அதனால் பெண்மக்களை சிறப்பாக படிக்க வைக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

இஸ்லாம் பெண்களின் கல்வியறிவை உச்சி முகர்ந்து வரவேற்ற மார்க்கம்.

ஆயிஷா ரலி அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னால் 2210 ஹதீஸ்களை சமூகத்திற்கு வழங்கியதை சமுதாயம் நன்றிப் பெருக்கோடு ஏற்று கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் இன்றைய கல்விச் சூழலில் இருக்கிற ஆபத்துக்களை பெண்மக்களின் பெற்றோர்கள் கவனத்தில் கொண்டே ஆக வேண்டும்.

மருத்துவம் ஆராய்ச்சி மற்ற போன்ற சிறப்பான புரபஷனல் கல்விக்காக மட்டுமே – தவிர்க்க முடியாத சூழலில் கோஎஜுகேசன் சிஸ்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

மற்ற சந்தர்ப்பத்தில் பெண்களுக்கான் தனி பள்ளிக் கூடம் தனி கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அதில் கிடைக்கிற கல்வியை கொடுப்பதே ஓரளவு பாதுகாப்பானதும் நன்மையானதும் ஆகும்.

தமிழகத்தில் பல இடங்களிலும் பெண்களுக்கான தனி கல்லூரிகளை அரசும் நடத்துகிறது. தனியார்களும் நடத்துகிறார்கள்.

பெண்மக்களின் கண்ணியம் பாதுகாப்பு என்ற சிந்தனையோடு நாம் கல்வி நிறுவன்ங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கல்வி பெறும் காலம் வரை அதில் கண்காணிப்போடு நடந்து கொள்வோமானால் நிச்சயம் கல்வி பெற்ற பெண்கள் சமுதாயத்திற்கு நிச்சயம் பயன் பெறுவார்கள்.

இப்போது ஒரு புதிய டிரண்டாக நிறைய பெண்கள் அரபுக்கல்லூரிகள் உருவாகி வருகின்றன.  நூற்றுக்கணக்கான மாணவிகள் அதில் பயின்று வருகிறார்கள்.

இது போன்ற அரபு கல்லூரிகளை தேர்ந்தெடுக்கிற போது ஒழுக்கம் என்ற இலக்கை மட்டும் வைத்துக் கொண்டு கல்வி நிறுவன்ங்களை தேடாமல் பெண் குழந்தைகளின் அறிவுத் திரண் வளர்ச்சிக்கு உதவக் கூடிய கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.  சில அரபுக்கல்லூரிகள் நேரத்தை கடத்தி  மாணவிகளின் வருடங்களை வீணடித்து விடுகின்றன.  

ஆண்களின் கல்யறிவு சதவீதம் தொடர்ந்து குறைவாக இருப்பது கவலைக்குரிய செய்தியாகும்.

நமது வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு இன்னும் சிறப்பான தூண்டுதலை நாம் தர வேண்டும்.

நம்முடைய சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் செல்லம் தரப்படுகிறது. அவர்கள் கட்டுப்படுத்தப் படுவதில்லை. அவர்களது கவனம் பல வழிகளில் திசை திருப்ப படுகிறது . அதுவே அவர்களது பின்னடைவுக்கு காரனமாகும்.

8 வது வகுப்பை கடந்த ஒவ்வொரு மாணவரும் டேட்டா வசதியோடு செல்போன் வைத்திருக்கிறார்கள்.

நமது மானவர்களுக்கு நாம் அதிகம் உணர்த்த வேண்டும். படிப்புதான் உண்மையில் பெரிய சொத்து.

உன்னை முழுவதுமாக படிப்புக்கு கொடுத்தால் மட்டுமே கொஞ்சமாவது உனக்கு படிப்பு கிட்ட்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும்.  

وقال الإمام الغزالي"العلم إن أعطيته كلك أعطاك بعضه"

விளையாட்டு பொழுது போக்கு ஊர் சுற்றலில் கவனம் செலுத்துகிற மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியாது.

அத்தகைய மாணவர்கள் பெற்றோர்களிடம் எவ்வளவு தான் வசதி இருந்தாலும் கல்லூரி படிப்புகளில் அதிகம் சிரமப்படுவதை பார்க்கிறோம்.

படிக்கிற காலத்தில் சிறப்பாக படித்து விட்டால் பிறகு உன்னதமாக வாழலாம் என்பதற்கு உள்ளூரிலும் உலக அளவிலும் உள்ள உதாரணங்களை பக்குவமாக அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தால் சிறப்பான முடிவுகளை பார்க்கலாம்

இந்த ஆண்டு +2 தேர்வில் சுமார் 60 அயிரம் பேர் தோற்றிருக்கிறார்கள் , பலருக்கும் அவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.  இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்றவர்களின் சதவீதம் வெகுவாக குறைந்திருக்கிறது, தமிழ்ல் இரண்டு பேர் மட்டுமே 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வெற்றி பெறாதவர்களுக்கும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும்.

 இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியான அன்றைய தினம் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நவூது பில்லாஹ்;  அவர்களில் ஒருமாணவர் முடிவு வருவதகு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்டார்.

மதிப்பெண் என்பது சட்டையில் குத்துகிற மெடல். அதுவே உடலோ சட்டையோ அல்ல.

நாம் மெடல் குத்திக் கொள்பவர்களாக ஆக முடியாவிட்டாலும் நமது குணத்தால் முயற்சியால் மெடல் குத்தி விடுபவர்களாக உயர முடியும்.

அப்துல் கலாம் தமிழகத்தின் முதல் மாணவரோ பத்ரிகைகளில் இடம் பிடித்தவரோ பாராட்டுப் பெற்றவரோ அல்ல.

ஆனால் தனது விடா முயற்சியால் அவர் பல நூறு பேருக்கு மெடல் தருபவராக உயர்ந்தவர்.

இன்று நம்முடைய ஆசிரியர்களாக அதிகாரிகளாக இருப்பவர்கள் பலரும் சாதனை மதிப்பெண்களை எடுத்தவர்கள் அல்ல.

பலர் தோற்றுப் போனவர்கள்

இந்தியாவில் ஆங்கில அரசை நிறுவிய ராபர்ட் கிளைவ் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இரண்டு முறை துப்பாகியின் டிரிக்கரை அழுத்தியும் துப்பாக்கி வெடிக்க வில்லை. மூன்றாம் முறை கோபத்தோடு வானத்தை நோக்கி சுட்டார். துப்பாக்கி வெடித்த்து. ராபர்ட் கிளைவ் அன்று முடிவு செய்தார். கடவுள் எனக்கு வேறு ஒரு வேளை வைத்திருக்கிறார்.  ராணுவத்தில் சேர்ர்ந்தார். சாதனைகளை படைத்தார் என்கிறது வரலாறு.

கே எப் சி என்கிற இன்றைய பிரபலமான சிக்கன் கடையின் உரிமையாளர் கர்னல் சாண்ட்ரஸ் – 1109 வது முயற்சியில் வெற்றி பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டால் வாழ் வழியே இல்லை என்று நினைப்பது தவறு. வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் பல பேர் தேர்வுகளில் தோற்றாலும் விடா முயற்சி செய்தவர்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதை நம் பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் பக்குவமாக நாம் உணர்த்த வேண்டும்

+2 வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,.  மாணவச் செல்வங்களின் இந்த வெற்றிக்கு உழைத்த கல்வு நிறுவன்ங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக் க்ளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் சிறப்பான வாழ்க்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

 

 

 

 

  

 

 

 

 

 

 

  

 

 

No comments:

Post a Comment