வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 04, 2024

ஹிஜ்ரத் நினைவூட்டும் தரமான வாழ்வு

  وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ

இன்னும் சில நாட்களில் அதாவது இரண்டு நாட்களில் ஹிஜ்ரீ 1446 புதிய ஆண்டு பிறக்கிறது.

இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீ என்று அழைக்கப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வின் 53 வருடத்தில் சங்கை மிகு மக்காவிலிருந்து ஒளிமிகுந்த மதீனாமா நகருக்கு குடியேறிய நிகழ்வு ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகிறது.

50 வயதை கடந்தாலும் வாழ்க்கயில் செய்வதற்கு நிறைய இருக்கிறது என்பதற்கான அற்புதமான எடுத்துக் காட்டு அது.

பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்வின் மிகச் சிறப்பான சாதனைகள் பலதும் இதற்கு பிறகே அரங்கேறின. மாஷா அல்லாஹ்,

எனவே மூப்பு என்பது ஓய்வுக்கானது அல்ல; அது சிறப்பான காரியங்களை செய்வதற்கான பக்குவம் என்பதை நினைவூட்ட ஹிஜ்ரத்தை போன்ற வேறு ஒரு பொருத்தமான நிகழ்வு கிடையாது.

நடுத்தர வயதை கடந்தவர்கள் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

-------

ஹிஜ்ரத்தை  இஸ்லாமிய ஆண்டுக்கு அடையாளமாக ஆக்கியவர் உமர் ரலி ஆவார்.

ஹிஜ்ரத் நடைபெற்று சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு ஹிஜ்ரத் ஆண்டுக்கு இது அடையாளமாக சூட்டப்பட்டது.

இவ்வாறு ஹிஜிரீ ஆண்டு பிறந்ததில நபித்தோழர் அபூ முஸா அல் அஷ் அரீ ரஹி அவர்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது.

தகுதி தான் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும்.

இதற்கான சூழலை வரலாறு காட்டுகிறது.

 أن أبا موسى كتب إلى عمر أنه يأتينا منك كتب ليس لها تاريخ، فجمع عمر الناس، فقال بعضهم: "أرخ بالمبعث"، وبعضهم: "أرخ بالهجرة"، فقال عمر: "الهجرة فرقت بين الحق والباطل"، فأرخوا بها، فلما اتفقوا قال بعضهم: "ابدأوا برمضان"، فقال عمر: "بل بالمحرم فإنه منصرف الناس من حجهم"، فاتفقوا عليه.  

முக்கியமான அரசு உத்தரவுகள் தேதியிடப்படாமல் எழுதப்பட்ட போது அது சிக்கலை ஏற்படுத்தியது. இதற்கான ஒரு ஏற்பாட்டை செய்யுமாறு அபூ மூஸ அல் அஷ் அரி ரஹி அவர்கள் ஜனாதிபதி உமர் ரலி அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

அபூமூஸா ரலி அவர்கள் பெருமானாரின் தோழர்களில் நிர்வாகத்திறன் மிக்க ஒருவராக இருந்தார். எமன் நாட்டை சார்ந்த அபூமூஸா ரலி அவர்கள் முன்னதாகவே இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்த போதும் கூட ஹிஜ்ரீ 7 ம் வருடத்தில் நடைபெற்ற கைபர் யுத்தத்திற்கு பிறகே   பெருமானார் (ஸல்) அவர்களுடன் வந்து இணைந்தார். பெருமானாருடன் சில வருடங்கள் மட்டுமே இணைந்திருந்தார் என்ற போதும் அவரது நடவடிக்கைகளால் நபித்தோழர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக மிளிர்ந்தார்.  நபி (ஸல்ல்) அவர்கள் அவரை உலகின் மிகப் பாரம்பரிய நகரான எமனில்பீ உள்ள ஜபீத் நகரின் பொறூப்பாளராக நியமித்தார்கள். அங்கு அவர் ஒரு பள்ளிவாசலை கட்டினார். அது அபூமூஸா அஷ் அரீ பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது. உலகில் ஐந்தாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசலான அது  இன்று அது உலகின் புராதான சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.

 உமர் ரலி அவர்கள் அபூமூஸா ரலி அவர்களை இராக்கின் பிரபல நகரான பஸராவின் ஆளுநராக நியமித்தார்கள். உஸ்மான் ரலி அவர்கள் அவரை கூபாவின் ஆளுநராக நியமித்தர்கள். அலீ ரலி அவர்களுக்கும் முஆவியா ரலி அவர்களுக்கும் புரச்சினை ஏற்பட்ட போது அலீ ரலி அவர்கள் தனது தரப்பின் பொறுப்பாளியாக அபூமூஸா ரலி அவர்களை நியமித்தார்கள் என்கிற வரலாற்று செழுமை அபூமூஸா ரலி அவர்களின் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது.

இத்தகைய அவருடைய சிறப்பான நிர்வாக செல்வாக்கின் காரணமாக அவர் எழுதிய கடிதத்திற்கு உமர் ரலி அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக இது குறித்து ஆலோசனை செய்தார்கள். அந்த ஆலோசனையின் விளைவாக ஹிஜ்ரத் பிறந்தது.  

இது நமக்கு ஒரு கருத்தை தருகிறது.

நமது கருத்துக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் எனில் அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தகுதி வந்த பிறகு தரமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமுதயத்திற்கு தர வேண்டும்.

அப்படி செய்யும் போது காலத்தை கடந்து வாழும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.

வள்ளுவன் சொல்லுவான்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

 தரம் மிக்க மனிதர்கள் என்பவர்கள் அவர்கள் விட்டுச் செல்லும் அடையாளங்களால் அறியப்படுவார்கள்.

 அபூமூஸா ரலி அவர்களும் உமர் ரலி அவர்களும் தாம் விட்டுச் சென்ற ஹிஜ்ரீ என்ற அடையாளத்தின் மூலம் இன்றும் நினைவு கூறப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும்.

 நாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல ஆலோசனைகளை சொல்லுபவர்களாக உருவாக வேண்டும்.

 இந்த ஹிஜ்ரீ பெயரிடுதல் போல உமர் ரலி அவர்களின் ஆலோசனைகளால் இஸ்லாமிய உலகு இன்னும் ஏராளமான நன்மைகளை அனுபவித்திருக்கிறது.

 அந்த கருத்துக்களுக்கு முவாபகாத்து உமர்   موافقات عمر

என்று தனி பெயரே இருக்கிறது.

 ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டில் பெருமானாருடன் கஃபாவை தவாப் செய்து கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மகாமு இபுறாகீமை கடக்கும் போது இதை நாம் தொழும் இடமாக ஆக்கினால் என்ன ? என்று கருத்துக் கூறீனார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள். அல்லாஹ் واتخذوا من مقام إبراهيم مصلى என்ற வனத்தை இறக்கினான்.

 இப்போதும் மாகாம் இபுறாகீமிற்கு பின்னால் நின்று தொழுவதற்கு மக்கள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை நாம் பார்க்கலாம். இதில் எல்லாம் உமர் ரலி அவர்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது.

 عن أنس قال : قال عمر بن الخطاب رضي الله عنه : " وافقت الله في ثلاث ، أو وافقني ربي في ثلاث قلت : يا رسول الله لو اتخذت مقام إبراهيم مصلى ؟ فأنزل الله تعالىواتخذوا من مقام إبراهيم مصلى ) وقلت : يا رسول الله ، يدخل عليك البر والفاجر فلو أمرت أمهات المؤمنين بالحجاب ؟ فأنزل الله عز وجل آية الحجاب ، قال وبلغني معاتبة النبي صلى الله عليه وسلم بعض نسائه فدخلت عليهن فقلت لهن : إن انتهيتن ، أو ليبدلنه الله خيرا منكن ، فأنزل الله تعالى : " عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن " الآية ( 5 - التحريم ) .

 பெண்கள் இப்போது அணிகிற பர்தாவின் நடைமுறையும் உமர் ரலி அவர்களின் ஆலோசனையால் விளைந்ததே! பெண்களும்  ஆண்களும் சந்திக்கிற இடத்தில் ஒரு பர்தா இருப்பதன் அவசியத்தை உமர் ரலி அவர்கள் தான் வலியுறூத்தினார்கள்.

 இன்று பர்தாவால் நன்மையை அனுபவிக்கிற ஒவ்வொரு முஸ்லிமும் உமர் ரலி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் பர்தா வை உமர் ரலி அவர்களின் பிராண்ட் என்று கூட நாம் சொல்லிவிடலாம்.

 தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்

 என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்?

 பிறருக்கு முன்னுதரானமான கருத்துக்களை சொல்லும் தகுதி எப்போது கிடைக்கும் எனபதற்கு திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது.

 அல்லாஹ் காட்டிய வழியில் உறுதியாக செயல்பட்டால் நமக்கும் நல்ல நடைமுறைகளுக்கு அது  வழி காட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ

وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا என்பதற்கு بذلوا مجهودهم في اتباع مرضاته

அல்லாஹ்விற்கு பொருத்தமான வழியில் முழு முயற்சியை செலவிடுகிறவர்கள் என்று பொருள் என சுஃதீ ரஹ் விளக்கமளிக்கிறார்

 இறையச்சமும் கருணையும்  உறுதியும் நிறைந்த பாதையில் நாம் நடந்தால் சமுதாயத்திற்கு சிறப்பான கருத்துக்களை வழங்க அல்லாஹ் வழிகாட்டுவான்.

 ஒவ்வொரு ஹிஜ்ரீ புத்தாண்டின் போதும் உமர் ரலி அபூமூஸா ரலி ஆகியோருடைய பெயர்கள் நினைவுக்கு வருவது இந்த மகத்தான செய்தியை நமக்கு தருகிறது.

 நாம் வாழும் சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற நற்செயல்களை முன்னோடிகளாக செய்வதற்கு அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக!

 புதிய ஹிஜ்ரீ ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு ஹிஜ்ரத் வழங்குகிற மற்றுமொரு செய்தி இருக்கிறது.

 வாழ்க்கையில் எந்த ஒன்றையும் நாம் அலட்சியமாக கருதக் கூடாது என்பதே அது.

 மதீனா அல்லாஹ்விற்கு பிரியமான பூமி

 ஒரு முஃமினாக அல்லாஹ்விடம் தனது நம்பிக்கையை முதலில் முன் வைத்தார்கள் பெருமானார்

 أن النبي صلى الله عليه وسلم قال حين خروجه من مكة إلى المدينة: «اللهم إنك تعلم أنهم أخرجوني من أحب البلاد إليّ فأسكني أحب البلاد إليك». رواه الحاكم

பெருமானார் (ஸல்) அவர்கள் பிரார்த்த்னையில் அலட்சியம் காட்டவில்லை.

 மற்ற ஏற்பாடுகளிலும் அலட்சியம் காட்டவில்லை

 ஹிஜ்ரத்தின் வரலாற்றை ரஷீத் ரிழா இப்படி எழுதுகிறார்.

 فلما مضت الثلاث وسكن الناس أتاهما دليلهما ببعيرين فأخذ أحدهما رسول الله صلى الله عليه وسلم من أبي بكر بالثمن لتكون هجرته إلى الله بنفسه وماله رغبة منه عليه الصلاة والسلام في استكمال فضل الهجرة إلى الله تعالى، ثم ركبا وأردف أبو بكر عامر بن فهيرة يخدمهما في الطريق وأتتهما أسماء بسفرة لها وشقت نطاقها وربطت السفرة فسميت «ذات النطاقين» وحمل أبو بكر جميع ماله وكان نحو ستة آلاف درهم وبينما هما في الطريق مجردين من كل سلاح بصر بهما سراقة بن مالك بن جُعشم فاتبعهما ليردهما فدعا عليه رسول الله صلى الله عليه وسلم فساخت (غاصت) قوائم فرسه في أرض صلبة، فقال: ادع لي يا محمد ليخلصني الله أن أرد عنك الطلب فدعا له فخلص، فعاد يتبعهما، فدعا عليه الثانية فساخت قوائم فرسه في الأرض أشد من الأولى، فقال: يا محمد قد علمت أن هذا من دعائك عليّ فادع الله أن ينجيني مما أنا فيه ولك عهد الله أن أرد عنك الطلب، فدعا له فخلص وعاهدهم أن لا يقاتلهم ولا يخبر عنهم وأن يكتم عنهم ثلاث ليال، فرجع سراقة ورد كل من لقيه عن الطلب بأن يقول ما ها هنا.

இந்த செய்திகளில் பெருமானாரின் பயண திட்டமிடுதல்கள் இருக்கின்றன. சிறுவயது முதல் பாலைவனத்தில் பயணித்த அனுபவம் இருந்தாலும். எதிரிகள் தேடிவரும் வரும் போது சிக்கிக் கொண்டு விடக் கூடாது என்பதற்காக பெருமானார் சவ்ரு குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த்தார்கள்.

அது சந்தர்ப்ப சூழ்நிலையின் நிர்பந்தங்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை காட்டுகிறது.

அப்துல்லா பின் உரைகித் عبد الله بن أرَيْقط الليثي  என்ற வழிகாட்டியை பெருமானார் வைத்துக் கொண்டார்கள். அவரிடம் ஒட்டகைகளை கொடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு கொண்டு வருமாறு கூறினார்கள். அவர் அவ்வாறே செய்தார்.

 அந்த ஏற்பாடு, அதிசயமான முறையில் அல்லாஹ் அவர்களை காப்பாற்றிய பிறகு பத்திரமாக மதீனா வந்து சேர உதவியது.

ஒரு வழிகாட்டியை தேர்ந்தெடுத்த்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் அலட்சியமாக நடந்து கொள்ள வில்லை.

அப்துல்லா பின் உரைகித் அப்போது முஸ்லிமாக இருக்க வில்லை என்றாலும் மிக நம்பிக்கையானவரை தேர்ந்தெடுத்தார்கள்..

 வரலாறு சொல்கிறது.

அப்துல்லா பின் உரைகித் பெருமானாரை குபாவில் விட்டு விட்டு மக்காவிற்கு திரும்பிய பிறகு தான் அபூபக்கர் ரலி அவர்களின் மகன் அப்துல்லாஹ்விடம் உங்களுடைய தந்தை மதீனாவில் இருக்கிறார் என்ற செய்தியை கூறினார்

 ولما رجع عبد الله بن أريقط إلى مكة أخبر عبد الله بن أبي بكر الصديق بوصول أبيه إلى المدينة المنورة، 

 உணவு கொண்டுவருவதற்கும் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த ஏற்பாடுகள் வாழ்க்கையின் மிக அவசியமான எது குறித்தும் பெருமானா (ஸல்) அவர்கள் அலட்சியம் செய்ய வில்லை என்பதை குறிப்பிடுகிறது.

 அதே போல அந்த ரக்சிய பயணத்தில் பெருமானாரை அடையாளம் கண்டு கொண்ட சுராக்கா பின் மாலிக் ரலி அவர்க்களுக்கும் பெருமானார்  (ஸல்) அவர்கள் உதவி செய்தார்கள். அவரை அலட்சியப்படுத்த வில்லை.

 அவர் மற்றவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை பின் தொடர்ந்து வராதவாறு திசை திருப்பி விட்டார்.

 எனவே அலட்சியம் தவிர்த்தல் என்பது ஹிஜ்ரத்தின் பிரதான பாடங்களில் ஒன்றாகும்.

 இது திருக்குர் ஆனின் பிரதான வழிகாட்டுதல்களில் ஒன்றாகும்

 ولا تكن من الغاافلين

அலட்சியப்பேர்வழி ஆகிவிடாதீர்கள் என்பது வெற்றிகரமான வாழ்க்கைகு முக்கிய அறிவுரை ஆகும்.

 அலட்சியப் பேர்வழிகளுடன் சேராதீர்கள் என்றும் திருக்குர் ஆன் கூறுகிறது.

 وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُۥ عَن ذِكْرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمْرُهُۥ فُرُطًا

.சிறப்பான மனிதர்கள் தமது மனைவியை அலட்சியப்படுத்த மாட்டார்கள் .

 இன்று நாம் பார்க்கிற பல குடும்ப வழக்குகளிலும் கணவன் அல்லது மனைவி ஒருவரை மற்றவர் அலட்சியப்படுத்துவதே பிரதான பிரச்ச்னையாக இருக்கிறது.

ஒரு பஞ்சாயத்தில் ஒரு பெண் கூறினாள்

 அவரது நண்பர்களை நேசிக்கிறார். மணிக்கணக்கான அரட்டை அடிக்கிறார் . என்னோடு ஒரு பத்து நிமிடம் பேசுவதற்குள் ஏன் தொன தொனக்கிறாய் என்று எழுந்து போய்விடுகிறார்

 ஒரு கணவன் கூறினான்.

என் மனைவி வெளியே போகிற போது அதிகமாக அலங்கரித்துக் கொள்கிறாள். ஆனால் வீட்டில் அலங்கோலமாக இருக்கிறாள்.

 இத்தகைய அலட்சியம் எப்படி உண்மையான பிணைப்பை ஏற்படுத்தும்?

 இதே போல தொழிலாளர்களை நண்பர்களை உடன் பணி செய்கிறவர்களை அலட்சியப்படுத்துகிறவர்களுக்கு சரியான ஒத்துழைப்பைபோ மரியாதையோ கிடைக்காது.

 மாறாக இத்தகைய சந்தர்பங்களில் வெறூப்புதான் ஏற்படும்.

 பிள்ளைகள் படிப்பை அலட்சியப்படுத்தினால்,

தொழிலாளர்கள் வேலையில் அலட்சியமாக இருந்தால்,  

உறவினர்களும் நண்பர்களும் உறவாடுவதில் அலட்சியம் காட்டினால்

 அவர்கள் மீது நமக்கு எப்படி வெறுப்பு ஏற்படுமோ அவர்களை எப்படி நாம் ஒதுக்குவோமோ அதே போல

நாம் காட்டுகிற அலட்சியம் நம்மை ஒதுக்கி விடும்.

 எனவே ஹிஜ்ரீ புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிற போது நான் தகுதிமிக்க மனிதனாக இருப்பேன். அவசியமான எதிலும் அலட்சியம் காட்ட மாட்டேன் என்று உறுதி ஏற்றுக் கொள்வோம்.

 அல்லாஹ் ஹிஜ்ரத்தை போல நமது வாழ்வையும் வளமாக்குவான்.

  அனைவருக்கும் ஹிஜ்ரீ 1446 ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

بكل عام وانتم بخير

ஆண்டு முழுவதும் நன்மையும் மகிழ்வும் நிறையட்டும். 

 

 

 

 

2 comments:

  1. Anonymous9:34 PM

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான தகவல்களை நமக்கு வாரவாரம் அள்ளித்தருகிறீர்கள் அல்லாஹ் இந்த வருடபிறப்பை உங்களுக்கும் எங்களுக்கும் சந்தோஷமானதாக நிம்மதி நிறைந்ததாக நோய் நொடிகள் இல்லாத மாசற்ற இபாதத்களோடு ஆக்கி அருள்புரிவானாக

    ReplyDelete
  2. Anonymous9:47 PM

    Baarakallah Hazarath بكل عام وانتم بخير

    ان:آزاد علي القدسي

    ReplyDelete