வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 28, 2024

சம்பலில் சமாதியாக்கப்படும் நீதி.

நம்முடைய நாடு நீதிக்கு பெயர் பெற்ற நாடு.

தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானது. சிலப்பதிகாரம்.

சிலப்பதிகார காப்பியம் தமிழ் மண்ணில் நிலவிய நீதியை பறை சாற்றும் காப்பியமாகும்.

கோவலன் எனும் பூம்புகார் நகரத்து வணிகர் வாழ்க்கையில் தோற்றுப் போய் மதுரை வந்து சேர்கிறான். அங்கு பிழைக்கும் வழி தேடி அவனது மனைவி கண்ணகியின் கால் சிலம்பத்தை விற்பதற்கு முயல்கிறான். அந்த நேரம் பார்த்து பாண்டிய மன்னன் முதலாம் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பு உடைந்து போனது. அதை சரி செய்ய பொற்கொல்லனிடம் கொடுத்தார்கள். அந்த பொற்கொல்லனிடமே தனது மனைவியின் சிலம்பை கொண்டு வந்தான் கோவலன். பொற்கொல்லன் ஒரு போல்லாத திட்டம் தீட்டினான். அரசியின் சிலம்பு காணாமல் போனதாகவும் அதை கோவலன் திருடிவிட்டதாகவும் குற்றம் சாட்டினான். அரசன் நெடுஞ்செழியன் கேவலனிடம் ஒற்றை கால சிலம்பு இருந்த்தை வைத்து அவனை குற்றவாளி என தீர்ப்பளித்து கொலை செய்யுமாறு உத்தரவிட்டான். கோவலன் கொல்லப்பட்டான்.

கனவனது கொலைச் செய்தியை கேட்டு வெகுண்டெழுந்த கண்ணகி நெடுஞ்செழியன் சபைக்கு வந்து தன்னிடமிருந்த மற்றொரு சிலம்பை உடைத்து காட்டி அதிலிருந்த மணிகளும் அரசியின் சிலம்பிலிருந்த மணிகளும் வேறு வேறாக இருப்பதை நிரூபித்தாள். பாண்டிய மன்னன் தான் நீதி தவறிவிட்டதை அறிந்து அந்த சபையிலேயே யானோ அரசன்! யானே கள்வன் என்று சொன்னபடி கீழே விழுந்து உயிரை விட்டான். நீதி தவறிவிட்ட்தை உணர்ந்து வருந்திய அவனது மனைவி கோப்பெருந்தேவியும் அங்கேயே விழுந்து உயிர் விட்டனர் என்பது சிலப்பதிகார வரலாற்றின் கதை

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;

அரசியலில் தவறு செய்வோருக்கு தண்டனை மரணமே என்பது சிலப்பதிகாரம் கூறும் தத்துவமாகும்.

(பிழைத்தோர்க்கு + தவறு செய்வொர்க்கு

கூற்று: மரணம் )

ஜஹாங்கீரின் நீதி

முகலாய மன்னர்களில் நான்காமவரான ஜஹாங்கீரின் நீதி உலகப் புகழ் பெற்றதாகும்.

அவரது காலத்தில் அரசரின் அரண்மனையின் வாசலில் ஜஞ்ஜீர் அல் அத்ல் என்ற பெயரில் ஒரு மணி கட்டப்பட்டது. அத்னுடன் ஒரு செயின் இணைக்கப்பட்டிருந்தது. குடிமக்களில் யாருக்கேனும் நீதி தேவைப்பட்டால்  கோல்டன் செயின் ஆப் ஜஸ்டிஸ் என்று அழைக்கப்பட அந்த செயினை பிடித்து இழுத்து தனக்கான நீதியை பெற்று கொள்ள முடியும் என்ற ஏற்பாட்டடை ஜஹாங்கீர் செய்திருந்தார்.

ஆக்ராவில் தாஜ் மாஹாலுக்கு நிகராக இருப்பது. ஆக்ரா கோட்டை

அவரது மனைவி நூர் ஜஹான் ஒரு தடவை வேட்டையாட சென்ற இடத்தில் அம்பெய்த போது அது ஒரு வண்ணானின் உயிரை பறித்து விட்டது.

தனது மனைவியிடம் பதிலுக்கு பதிலாக உயிரை விட தயாராகுமாறு ஜஹாங்கீர் உத்தரவிட்டார். தவறுதலாக நடந்து விட்டது அதனால் நஷ்ட ஈட்டுக்கு வண்ணானின் குடும்பத்தோடு பேசுமாறு மந்திரிகள் கூறிய போதும் தனது அரச செல்வாக்கை பயன்படுத்த ஜஹாங்கீர் மறுத்து விட்டார்.

வண்ணானின் குடும்பத்தினரே மன்னரிடம் வந்து தாங்கள் மன்னித்து விட்டதாக கூறிய பிறகு தான். நஷ்ட ஈட்டுக்கு ஜஹாங்கீர் ஒப்புக் கொண்டார்.

ஜஹாங்கீரின் வரலாற்றை பேசுகிற எவரும் அவரது நீதியுணர்வின் வேகத்தை பேசாமல் போவதில்லை.

இது போல இன்னும் பல சிறப்பான வரலாறுகளை கொண்ட்து இந்திய நீதியமைப்பு.

ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய நீதி அமைப்பு தாமதமாகிற நீதிக்கும் தடுமாறுகிற நீதிக்கும் பெயர் பெற்றதாகிவிட்டது.

உலகிலேயே மிக அதிகமான வழக்குகள் தேங்கியுள்ள நீதிமன்றங்களை கொண்ட நாடு இந்தியா என்ற அவப்பெயரை நாம் பெற்றிருக்கிறோம் என்று 2009 ம் ஆண்டில் நடைபெற்ற  உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட நீதித்துறை ஆய்வு மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நம் நாட்டின் உயர் நீதிமன்றங்களில் 42 இலட்சத்து 18 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளதாக கீழ் நீதிமன்றங்களில் 2 கோடியே 80 இலட்சம்  வழக்குகள் தேங்கியுள்ளதாகவும் 10 ஆண்டுகளுக்கு முந்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தேங்கியிருக்கிற வழக்குகளை தீர்க்கவும் முடிவுக்கு கொண்டு வரவும் 1547 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,207 கீழ் கோர்ட் நீதிபதிகளும் தேவை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. (தினமணி செப்- 2012)

நம் நாட்டில் 10 இலட்சம் மக்களுக்கு 13 நீதிபதிகள் இருக்கிறார்கள். இதே அளவுக்கு அமெரிக்காவில் 130 நீதிபதிகள் இருக்கிறார்கள்.

நீதிபதிகளின் அளவு குறைவாக இருப்பது நமது நாட்டின் நீதியமைப்பை கடந்த பல வருடங்களாக பாதித்து வந்தது.

இப்போதோ நமது நீதிபதிகளின் சிந்தனை போக்கு நமது நீதி அமைப்பின் மிகப்பெரிய பலவீனமாக மாறிவருகிறது.

சமீபத்தில் ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி வை சந்திர சூட் 2019 நவம்பர் மாதம் பாபரீ மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்குவது மிக சிக்கலாக இருந்ததாகவும் நல்ல தொரு தீர்ப்பை வேண்டி  கடவுளை பிரார்த்தனை செய்ததாகவும் வெளிப்படையாக கூறினார்.

பாபரீ மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நீதியின் அடிப்படையிலானது இல்லை என்பதை அப்பட்டமாக ஒப்புக் கொள்வதாக அவரது வாக்குமூலம் இருந்த்து.

இதற்கு சற்றும் குறைவில்லாத அளவில் தான் தற்போதைய நமது நாட்டு நீதிமன்றங்களின் பல தீர்ப்புகளும் அமைந்து வருகின்றன

அந்த வகையில்

தற்போது 5 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒரு பெரிய கலவரத்திற்கு உத்திரப் பிரதேச சம்பல் மாவட்ட நீதிமன்றம் காரணாமாகியுள்ளது.

முகலாய சக்ரவர்த்தி பாபரின் ஆட்காலத்தில் கட்டப்பட்ட மூன்று பெரிய பள்ளிவாசல்களில் ஒன்று அயோத்தியில் உள்ள பாபரீ மஸ்ஜித் – அது 1992 ம் ஆண்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் இடிக்கப்ட்டது. அங்கு இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இன்னொரு பள்ளிவாசல் பானிபட் நகரில் உள்ளது.

மூன்றாவது பெரிய பள்ளிவாசல் தான் உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் சாந்தவுசி நகரில் உள்ள  ஷாஹி ஜும் ஆ பள்ளிவாசல் ஆகும். 16 ம் நூற்றண்டை சேர்ந்த அந்த பள்ளிவாசல்  5 நூறு வருடங்கள் பழமையானதாகும்.   

அது இப்போது மத்திய அரசின் பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம், 1904 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும், 

 

இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டு அது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 இந்த பள்ளிவாசலை ஆக்ரமிக்கும் திட்டத்தோடு உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்  என்பவர் இந்த நவம்பர் மாதம்  19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஷாஹி ஜமா மசூதி கட்டப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்என கோரினார்.

இந்த மனுவை  நீதிபதி ஆதித்யா சிங் அன்றைய தினமே விசாரித்தார் பள்ளிவாசலில் அன்றைய தினமே ஆய்வு நடத்த உத்தரவிட்டார். இதற்காக வழக்கறிஞர் ரமேஷ் ராகவ் தலைமையில் ஒரு குழுவையும் அவர் அன்றே நியமித்தார்., வரும் 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்தக் குழுவினர் அன்றைய தினமே முதல்கட்ட ஆய்வை தொடங்கினர்.

எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தன.

எதிர் தரப்பினர் எந்த கருத்தையும் முன் வைக்க வாய்ப்பே வழங்கப்பட வில்லை.

இந்த வழக்கையும் ஆய்வையும் அப்பகுதியிலிருந்த முஸ்லிம்கள்  சற்றும் எதிர்பார்க்கவில்லை.   

நவம்பர் 24 ம் தேதி இரண்டாவதாகவும் அங்கு ஆய்வு செய்ய ஆய்வுக்குழ்வினர் வந்த போது அங்கு கூடிய முஸ்லிம்கள் அதை எதிர்த்தனர்.

அவர்களை கலைந்து செல்ல காவல் துறை உத்தரவிட்டது. கலை ந்து செல்லாத அவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் ஷஹீதாகியுள்ளனர். பலர் காயம் பட்டுள்ளனர். காவலர்களும் பலர் காயமடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக மக்கள் பிரதிநிகள் உட்பட சுமார் 30 பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரிய அக்கிரமம் என்ன வென்றால் 500 ஆண்டுகள் தாங்கள் தொழுகை நடத்திய இடத்திற்காக நியாயம் கேட்டு போராடிய  மக்களை கலவரக்காரர்களாக அரசு சித்தரிக்கிறது. மீடியாக்களும் அதை ஒத்து ஊதுகின்றன.

மக்கள் மீது கட்டுங்காத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

துப்பாக்கி சூடு கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. நியாயம் கேட்டு போராடிய 5 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளது. கேள்வியாக்கப்பட வில்லை.     

வழக்கு பதிவான அன்றைய தினமே ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதியின் நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை.

இதில் மிக அக்கிரமம் என்ன வென்றால் கலவரக்காரர்களே நாட்டு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டனர் என காவல் துறை கதை கட்டுகிறது. கொஞ்சமும் வெட்கமில்லாமல் கேள்வி கேட்காமல் ஊடகங்கள் அதற்கு ஒத்தூதுகின்றன்.

கலவரக் காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் எனில் காவல் துறையினர் அல்லவா பலியாகி இருக்க வேண்டும் ?  

      700 பேர் கலவரம் செய்தார்கள் என்று வழக்கப் பதியப்பட்டு இருக்கிறது. 700 பேரும் கல்வீசியிருந்தார்கள் எனில் 20 போலீஸ்காரகள் தான் காயம்பட்டிருப்பார்களா

முன் கூட்டியே ஏராளமான ஆயுதங்கள் அதாவது பேட்டுகள் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன என குற்றம் சாட்டப்படுகிறது. காவல் துறை கூறும் அளவு அங்கு கலவரக் காரர்க்ள் செயல் பட்டிருப்பார்கள் எனில் பாதிப்பின் அளவு இந்த அளவில் தான் இருக்குமா ?

 ஒரு சாதாரண அறிவுக்கு எழுகிற கேள்விகள் கூட வடநாட்டு ஊடக வியலாளர்களுக்கு ஏற்பட வில்லை. நம் தமிழ் நாட்டிலும் கூட ஏற்பட வில்லை. போராட்ட கும்பலைச் சேர்ந்தவர்களே துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது என இந்து தமிழ் பத்ரிகை எழுதுகிறது.

எல்லாம் எல்லாம் காவி மயமாகியிருப்பதை இது காட்டுகிறது.

சமாஜ்வாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் பர்க் மற்றும் சம்பவத்தின்போது அங்கிருந்த அப்பகுதி எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 2  வயதான  பெண்கள் ஒரு இளம் பெண் உட்பட 3 பெண்களையும் யோகி அரசு கைது செய்துள்ளது. .

இந்த அப்பட்டமான அநீதி குறித்து ஒரு சரியான கண்டனத்தை இது வரை எந்த அரசியல் கட்சியும் உறுதியாக பதிவு செய்யவில்லை.

பாதிப்புக்குள்ளான பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் செல்வதை டிஸம்பர் 1 வரை அரசு தடை செய்திருக்கிறது. இணையதள சேவையை முடக்கியிருக்கிறது.

இந்தியாவில் நீதி என்பது சமாதியாக்கப்பட்டுவரை அப்பட்டமாக இது காட்டுகிறது.

உலகின் மிக மோசமான காட்டுமிராண்டித்தனம் இது.

திருக்குர் ஆன் கூறுகிறது

வழிபாட்டு தலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறவர்களை விட  உலகின் பெரிய அக்கிரமக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது.

  وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

உத்திரப் பிரதேச அரசும் – அது சார்பு நீதிமன்றங்களும் தொடர்ந்து இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்க்கையையும் இருப்பையும் சிதைக்க முயற்சி செய்கிறார்கள்.

 முஸ்லிம்கள் நீதிமன்றத்தின் அநீதியையும் அரசாங்கத்தின் வன்முறையையும் சட்ட பூர்வமாக எதிர்க்க வேண்டும்

 பல முஸ்லிம் அமைப்புக்களும், சமபலில் முஸ்லிம்கள் மீது காவல்துறை நடத்திய அராஜகத்தை கண்டித்துள்ளன. நாமும் நமது கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

  மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாது​காப்புச் சட்டம் 1991-ஐ மீறி கீழ் நீதி​மன்​றங்​களில் பள்ளிவாசலகளில் ஆய்வுக்கான உத்தர​வுகள் பிறப்​பிக்​கப்படுவதை இஸ்லாமிய அமைப்புக்க்ள் சுட்டுக் காட்டியுள்ளன. அரசியல் கட்சிகளும் ஊடக்ங்களும் இதிலுள்ள நியாயத்தை கவனிக்க வேண்டும்.  

 சகோதர சமுதாய மக்களின் நீதி உணர்வை நாம் கேள்விக்குள்ளாக வேண்டும்.

 அரசியல் வாதிகள் வெளிப்படையாக நீதியை நிலை நாட்ட போராட வேண்டுமாறு கோரிக்கை வைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் ஓட்டுப்போடுவதற்கான இயந்திரங்களாக மட்டும் முஸ்லிம்களை கருத முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

 இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற இத்தகைய அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக சட்ட பூர்வமாக களமாட ஒருங்கினைக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

 கல்வீசுபவர்களின் புகைப்படங்களை வைக்கப்போவதாக உபி அரசு மிரட்டுகிறது.  நாங்கள் ஏன் இந்துத்துவ சக்திகளில் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டவர்களின் புகைப்படங்களை பொது இடங்களில்  வைக்க கூடாது என்று கேள்வி எழுப்ப வேண்டும் !

 முஸ்லிம்கள் நிய்யாத்திற்காக போராடுகிற அதே வேளையில் அல்லாஹ்வின் உதவியின் மீது அலாதியான நம்பிக்கையை கை விட்டு விட வேண்டாம்

 பள்ளிவாசல்களை தகர்த்தவர்கள் பள்ளிவாசல்களின் பணியாளர்களாக மாறினார்கள் என்பது தான் வரலாறு.

 கிபி 11   ம்  நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் செங்கிஸ்கானின் தலைமையில் வெளிப்பட்ட தாத்தாரிகள் முஸ்லிம் உலகின் மீது படை எடுத்தார்கள். பக்தாது வரை கைப்பற்றினார்கள். பல இலடம் முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள்.

பல்லாயிரம்  பள்ளிவாசல்களையும் மதரஸாக்களையும் சிதைத்தார்கள். நூல் நிலையங்களை எரித்தார்கள்

 வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா ?

 முஸ்லிம் உலகின் மீது பேரழிவை நிகழ்த்திய இந்த நாசகர சக்திகள் 40 வருடங்களுக்குள்ளாக முஸ்லிம்களாக மாறினார்கள்.

 அவர்களே பள்ளிவாசல்களை புணரமைத்தார்கள்.

 இஸ்லாம் அதுவரை செல்லாத நிலப்பரப்புகளுக்கும் இஸ்லாமை கொண்டு சென்றார்கள்.

 ரஷ்யாவை ஒட்டியிருக்கிற ஐரோப்பிய பகுதிகள் பின்லாந்து போலாந்து ஸ்காண்டினோவா போன்ற பல பகுதிகளுக்கும் இஸ்லாமை கொண்டு சென்றது தாதாரியர்களே என்று வரலாறு செல்கிறது.

 வரலாற்றின் ஒரு பெரிய திருப்பம் என்ன வெனில் ?

 இப்போதைய ரஷ்யாவிற்குள் தாதாரிஸ்தான் என்ற ஒரு சுயாட்சி பிரதேசம் இருக்கிறது. அது தாதாரிகளின் தற்போதைய நாடாக அறியப்படுகிறது.

 அந்த தாதாரிஸ்தானை ரஷ்யர்கள் ஆக்ரமித்தார்கள். இஸ்லாமை கைவிட நிர்பந்தித்தார்கள். பள்ளிவாசல்களை பூட்டினார்கள். மதரஸாக்களை மூடினார்கள். திருக்குர் ஆனை கூட தடைசெய்தார்கள்.

 ஓர் ஆண்டல்ல ஈராண்டல்ல. சுமார் 80 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகளுடைய கடுமையான ஆக்ரமிப்பு தொடர்ந்தது.

 ஆனால் அது நிலைக்க வில்லை. கம்யூனிஸம் வீழ்ந்த்து.

 தாதாரிஸ்தானின் முப்தி சொல்கிறார்.

எங்களது முன்னோர்களை சிறையில் அடைக்கத்தான் அவர்களால் முடிந்த்து. ஈமானை பறிக்க முடியவில்லை

 يقول غوسمان ، مفتي تتارستان ، ( ينتشر الإيمان في دمنا وعظامنا ، يمكنك أن تخلع عن الواحد منا ثيابه وأن تلقيه في غياهب السجون ، لكنك لا تستطيع أن تنتزع منه إيمانا يمارس من ألف عام ، ويضف الناس هنا ليسوا ملحدين ، على رغم أن ثلاثة أجيال نشأت تحت الحكم السوفياتي ، بل هم يجهلون دينهم واليوم يعود كثيرون منهم إلى الاهتمام بالإسلام

 அங்கு தற்போது 40 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் அது.

 ஒரு கட்டத்தில் இந்த பகுதியின் தலை நகரான காஸானில் ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்தது. இப்போது 50 பள்ளிவாசலகள் இருக்க்கின்றன.

 ففي 1990م في عهد البيرويسرويكا لم يكن هناك سوى مسجد واحد في قازان ، أما اليوم فهناك خمسون مسجداً ،   

தாதாரிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

 தாதாரிஸ்தான் தலை நகர் காஸானில் ஒரு இஸ்லமிய பல்கலை கழகம் இருக்கிறது . அங்கு 7 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். ரஷ்யாவின் பல பகுதிகளுக்கும் அவர்கள் இஸ்லாமை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.

 இஸ்லாமின் இந்த வரலாறு. ஒரு தொடர் கதை தான் –

 உமர் ரலி அவர்களில் தொடங்கி தாத்தாரியர்களில் தொடர்ந்து வந்திருக்கிறது.

 அந்த வரலாறு விரைவில் நம்முடைய நாட்டிலும் தொடங்கும்.

 அக்கிரமக்காரகள் நீடித்திருக்கிற முடியாது.

 திருக்குர் ஆன் எச்சரிக்கிறது .

 وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا} (سورة الكهف:59)

 நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அநீதிக்கு கொஞ்ச காலம் வாழ்வு கிடைக்கும் ஒரு உச்சத்தில் அவர்களை அல்லாஹ் தரையில் அடித்து விடுவான்.

 وعن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله ليملي للظالم، حتى إذا أخذه لم يفلته، ثم قرأ: {وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد} » (رواه البخاري ومسلم).

அலி ரலி கூறீனார்கள். வரலாறு திரும்புகிற போது அது மிக கடினமானதாக இருக்கும்.

 وقال علي بن أبي طالب رضي الله عنه: «يوم المظلوم على الظالم أشد من يوم الظالم على المظلوم»

 முஆவியா ரலி கூறினார்கள்

யாருக்கும் அநீதி இழைக்க் நான் பயப்படுகிறேன். ஏனெனில் அவருடன் அல்லாஹ் இருப்பானே!

 وكان معاوية رضي الله عنه يقول: «إني لأستحي أن أظلم من لا يجد علي ناصرًا إلا الله»

 அறிஞர்கள் சொல்வதுண்டு

 நீங்கள் அக்கிரம்ம் செய்து சொர்க்கத்தையே கட்டியிருந்தாலும். அது நிலைக்காது. அழிந்தே போகும்.

  لو أن الجنة وهي دار البقاء أسست على حجر من الظلم، لأوشك أن تخرب».

 வரலாற்றின் இந்த சத்தியமான எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் நம் நாட்டில் சிலர் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள். நீதியை வளைக்கிறார்கள்.

 நிச்சயமாக இது நிலைக்காது. எத்தகைய வலிமையான சக்தியும் அநீதியில் வீழ்ந்து விடும்.

 லூத் நபியின் சமூகம் அந்த நபியிடமே விளையாடியது. மலக்குகள் மீதே கை வைக்க முயன்றது.

 மனித அக்கிரமத்தின் உச்சத்தையும் அதற்கு கிடைத்த தண்டனையையும் அல்லாஹ் காட்டுகிறான்.

 فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد} (سورة هود:82-83).

 இது குர்ஆன் மட்டுமே கூறுகிற எச்சரிக்கை அல்ல

 சிலப்பதிகாரமும் கூறுகிறது.

 அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது

 நம்முடைய நாட்டிலும் நீதியை சிதைக்கிறவர்களுக்கு மிக சீக்கிரமே  இறவனின் தண்டனை கிடைக்கும் என்று நாம் உறுதியாக நம்புவோம்.

 அதே நேரத்தில் அநீதிக்கு எதிரான நமது தார்மீக போராட்டத்தையும் தொடர்வோம்.

 எல்லாம் வல்ல இறைவன் 140 கோடி மக்கள் வசிக்கிற இந்த பெரிய நாட்டில் நீதியும் சட்டமும் சரியாக செயல்பட தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment