வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, April 09, 2025

வக்பு திருட்டு சட்டம் 2025 (2)

உலகிற்கு இஸ்லாம் காட்டித் தந்த  மிக அற்புதமான நடைமுறைகளில் ஒன்று வக்பு.

மக்கள் அவர்களது சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை பொதுக் காரியங்களுக்காக அல்லாஹ்வுக்கு என்று வக்பு செய்து கொடுத்தால் நல்லது என்றும் . ஒரு மனிதர் அவருக்கு சொந்தமான அவரது கைவசத்தில் இருக்கும் சொத்தில் 3 ல் ஒரு பகுதிளவை இவ்வாறு தர்மம் செய்யலாம் என்றும் இஸ்லாம் கூறியது.

திருக்குர்ஆன் மரணிப்பதற்கு முன் இதை செய்து விடுமாறு ஆலோசனை கூறியது. மரணித்த பிறகு இவ்வாறு செய்யாமல் போனதற்காக வருத்தப்பட வேண்டியது வரலாம் என்ற எதார்த்த்தையும் சுட்டிக் காட்டியது.

 وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ * وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا) [المنافقون:10-11].

 நபி (ஸல்) அவர்களும் மரணத்தோடு தொடர்பு படுத்தி இதை அறிவுறுத்தினார்கள்.

 قول النبي -صلى الله عليه وسلم-: "إذا مات العبد أنقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له" رواه مسلم.

 எனவே வக்பு செய்வதை  தர்மங்களில் சிறந்தது என்றும் தர்மங்களில் பயன்மிக்கது என்றும் தர்மங்களில் அதிக கூலி கிடைக்க கூடியது என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறினார்கள்  .

من أفضل أنواع الصدقة وأنفعها وأكثرها أجراً

இதன் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் தொடக்கத்திலிருந்து வக்பு செய்யும் பழக்கம் அதிகமாக இருந்த்து.

 வக்பு செய்யும் அளவு சொத்து வைத்திருந்த எந்த நபித்தோழரும் வக்பு செய்தார் என ஜாபி ரலி கூறுகிறார்.

 قال جابر -رضي الله عنه-: ما بقي احد من أصحاب محمد -صلى الله عليه وسلم- له مقدره على الوقف إلا وقف،

அந்த எண்ணிக்கை என்பதை தொடும் என இமாம் ஷாபிஈ ரஹ் கூறுகிறார்

وقال الشافعي -رحمه الله-: بلغني أنَّ أكثر من ثمانين رجلاً من أصحاب رسول الله -صلى الله عليه وسلم- من الأنصار، تصدَّقوا بصدقات موقوفات.

முஸ்லிம்களிடம் பொருளாதார வளம் பெருகிற போது வக்பு செய்யும் வழக்கமும் அதிகரித்தது.

 நம்முடைய இந்திய நாடு ஆயிர்த்து நானூறு நாற்பது ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்கிற நாடாகும். முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்கிற காலத்திலேயே இங்கு இஸ்லாம் பரவி விட்டது.  ஹிஜ்ரீ 5 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கேரளமாநிலம் கொடுங்க நல்லூரில் இருக்கிறது. இன்று வரை முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

 கீபி 712 ம் ஆண்டு முஹம்மது பின் காஸிம் சிந்து பகுதியை ஆட்சி செய்ய தொடங்கியதிலிருந்து, 1799 ம் ஆண்டு திப்பு சுல்தான் ஷஹீதாகும் வரை இந்தியாவை பல் வேறு கட்டங்களாக வளமாக ஆட்சி செய்தார்கள்.

 அப்படியானால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் முஸ்லிம்களின் அரசு நடை பெற்றது. அந்த காலகட்டத்திலும் முஸ்லிம்களின் வக்பு பெருகியது. 

 1955 ம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவிலுள்ள வக்பு சொத்துக்களை கணக்கிட்ட போது, ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட ( 7.85,934) சொத்துக்கள் இருந்தன. . தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரம் இருந்தன. இந்த சொத்துக்களின் மதிப்பு ஒண்ணே கால் லட்சம் கோடியாகும். இந்தியாவில் 32 வக்பு வாரியங்கள் அவற்றை நிர்வகிக்கின்றன.

நாட்டிலுள்ள இந்து அறநிலையத்துறையோ தொழிலாளர் நல வாரியமோ எப்படி இந்திய அரசுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாதோ அதே போல வக்பு வாரியமும் இந்திய அரசுக்கு அப்பாற்பட்டது அல்ல; ஆட்சியில் இருக்கிற கட்சிகள் தான் தனகு வேண்டியவர்களை வக்பு வாரியத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கிறது.

நிலமை இப்படி இருக்க வக்பு வாரியங்களில் முறைகேடு நடப்பதாக பொய்யாக குற்றம் சாட்டி மத்திய பாஜக அரசு கடந்த ஏப்ரல் 2 ம் தேதி வக்பு திருத்த சட்டம் 2025 ஐ கொண்டு வந்துள்ளது. அத்தோடு பழைய வக்பு சட்டம் 1924 மற்றும் வக்பு சட்டம் 1995 ஆகியவற்றை இரத்து செய்துள்ளது. வக்பு வாரியத்தில் வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதற்காகவும் வக்பு சொத்துக்களை முஸ்லிம் சமூகத்திலுள்ள எளித தரப்பு மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த திருத்தம் செய்யப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக காரசாரமாக விவாதிக்கப் பட்ட இந்த சட்டம் எதிர்க் கட்சிகளின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் முஸ்லிம் சமூகத்தின் எந்த வேண்டுகோளையும் நிராகரித்து முழுக்க முழுக்க முஸ்லிம்களே இல்லாத ஒரு அரசால் வனமப் போக்குடன் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

உண்மையில் இந்த சட்டம் வக்பு திருத்த சட்டம் அல்ல்; வக்பு திருட்டு சட்டம் ஆகும். முஸ்லிம்களின் சொத்துக்களை எளிதாக பிடுங்கிக் கொள்ள மத்திய மாநில அரசுகளுக்கும் தனி நபர்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு சட்டமாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்ச அவர்கள் கூறியது போல முஸ்லிம்களை வஞ்சிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

உண்மையில் இது சட்ட திருத்தமே அல்ல; சட்டப் பூர்வ கொள்ளையாகும்.

ஒரு சட்டத்தில் திருத்தம் என்றால் ஒரு சில வார்த்தைகளை திருத்துவார்கள் . ஒரு சில விதிகளை திருத்துவார்கள். ஆனால் இந்த திருத்தமோ வக்பு சொத்துக்களின் தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறாது. வக்பை பலவீனப்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கிறது.

 மத்திய அரசு  44 திருந்தங்களை செய்துள்ளதாக கூறுகிறது. ஆனால் இதில் 33 அம்சங்களை புதிதாக சேர்த்துள்ளது. 45 பழைய விதிகளை மாற்றியுள்ளது. 37 விதிகளை அகற்றியுள்ளது. ஆக மொத்தம்  115 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 

 சுமார் நூற்றாண்டுகளாக இந்தி அரசால் கடைபிடிக்கப் பட்டு வந்த சட்டங்களை இத்தனை மாற்றங்களை செய்ததில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையடிக்க பாஜகவும் அதை பின்னாள் இருந்து இயக்குகிற ஆர் எஸ் எஸ் அமைப்பும் எத்தனை ஆண்டுகளாக திட்டமிட்டு வந்திருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது.

 ஷரீஅத்தில் தலையிடும் பாஜக அரசு.

 அது மட்டுமல்ல வக்பு என்ற இஸ்லாமிய சமய சட்டத்தை இந்துத்து அரசு தன்னிஷ்ட்த்திற்கு வளைக்கிறது.

இதன் மூலம் இந்திய அரசியல் சாசணம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையில் அப்பட்டமாக அபகரிக்கிறது. மத சுதந்திரத்தை பறிக்கிறது.

 1.   ஒரு முஸ்லிம் அவருக்கு சொந்தமான சொத்தை எப்போது வேண்டுமானாலும் வக்பு செய்யலாம் எனபது இஸ்லாமின் விதி. அதை ஒருவர் முஸ்லிமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு தான் வக்பு செய்ய முடியும் என்று மாற்றுவது இஸ்லாமின் சட்ட வரையும் அப்பட்டமான அத்துமீறலாகும்.

 2.   ஒரு சொத்து எதற்காக வக்பு செய்யப் பட்டதோ அதற்காகவே செலவு செய்யப்பட வேண்டும் என்பதே வக்பின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.ஒரு பள்ளிவாசலில் தொழுவதற்கு  என்று பாய்கள் வக்பு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றை தொழுகைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு தேவைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என்ற அளவில் வக்பு சட்டம் கூறுகிறது.

 (உலகின் பல பாகத்திலும் இந்தக் காலத்திலும் மக்கள் கட்டுக்கட்டாக சேகரித்து வைத்திருக்கும் பணத்தை பொதுக்காரியத்திற்காக அர்ப்பணிக்கிறார்கள். 

 இந்திய தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி, அமெரிக்க தொழிலதிபர்கள் வான் பப்பர்ட், பில்கேட்ஸ், போன்றோர் கோடிக்கணக்கான பணத்தை அறக்கொடையாக கொடுக்கிறார்கள் என்றார்கள் . அது சரியான முறையில் செலவு செய்யப்படுவதற்காக கடும் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். உதாரணத்திற்கு பில்கேட்ஸின் அறக் கொடை இந்தியாவில் சுகாதார முன்னேறத் திட்டங்களுக்கு மட்டுமே செலவழிக்கப் பட வேண்டும் என்று கூறுகிறது.

 தமது பணம் எந்த வகையில் செலவழிக்கப்பட வேண்டும் என்பதை மிக தெளிவாகவும் திட்டவட்டமாகவும் நுனுக்கமாகவும் முஸ்லிம் அல்லாதவர்கள் எழுதி வைத்தாக வேண்டும். அதையும் மீறி அதில முறைகேடுகள் நடப்பது உண்டு. இதனால் அடுத்த நூறு ஆண்டுகளில் இந்த அறக் கொடை எப்படி இருக்கும் என்பது கேள்விக்குரிதான்.

 ஆனால் ஒரு முஸ்லிம் வக்பு செய்து விட்டால் அதை பாதுகாக்கிற பொறுப்பை இஸ்லாமிய ஷரீஅத்  ஏற்றுக் கொண்டிருக்கிறது .  சவூதி தொழிலதிபர் சுலைமான் அப்துல் அஜீஸ் அர்ராஜி போன்றவர்கள் பெரிய அளவில் வக்பு செய்திருக்கிறார்கள்/ அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஆயிரமாண்டுகளாக முஸ்லிம் தனி நபர்களின் வக்புகள் ஒரு சில பாதிப்புக்குள்ளானாலும் கூட பெரும்பாலனவை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 இதற்கு காரணம் வக்பு குறித்த ஷரீஅத்தின் சட்டங்களாகும்.)

 தற்போது மத்திய் அரசு கொண்டு வந்திருக்கும் சட்டமோ, வக்பு சொத்துக்கள் மத்திய அரசு விரும்பும் வழிகளில் செலவிடப்படும் என்று கூறுகிறது.

 அதனால் தான் சொல்கிறோம் இது வக்பு திருத்த சட்டம் அல்ல; வக்பு திருட்டு சட்டம்

 3.   ஒருவர் வாய்ச் சொல்லாக வக்பு செய்தால் வக்பு செல்லும் என்று ஷரீஅத் சட்டம் அனுமதிக்கிறது . இல்லை எழுத்து வடிவில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்று இந்த திருத்தம் கூறுகிறது.

 இதுவும் இஸ்லாமிய ஷரீஅத் சட்ட்த்தில் எல்லை மீறுதலாகும்.

 நாடாளுமன்றத்தில் பாஜக எம் பி ஒருவர் திருக்குர் ஆனின் வசன்ங்களை ஓதிக் காட்டி  எந்த ஒப்பந்த்த்தை எழுதி வைத்துக் கொள்ள குர் ஆன் வலியுறுத்துகிறது என்று சொல்லி குர்ஆனை ஓதிக் காட்டுகிறார்.

 உண்மையில் இது சாத்தான் வேதம் ஓதிய கதையாகும்.

 எந்த உடன்படிக்கையையும் எழுதி வைத்துக் கொள்ளும் பாரம்பரியம் என்பது முஸ்லிம்களின் வழக்கமாகும். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உமர் ரலி அவரக்ள் எழுதிக் கொடுத்த ஒப்பந்தம் இன்று வரை முஸ்ளிம்களிடம் இருக்கிறது.  திருமணப் பதிவு என்பது முஸ்லிம்களின் ஆயிரமாண்டு மரபு என்பது ஊருக்கே தெரிந்த செய்தி. வக்புகளும் அப்படித்தான் எழுதி வைக்கப் பட்டுள்ளன

 விருப்பத்திற்குரியவரின் போட்டோவுக்கு முன் நின்று தாலி கட்டிக் கொண்டால் திருமணமாகிவிடும் என்று சொல்லும் கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவர் ஒப்பந்த்த்தை பற்றி பேசுவது வேடிக்கையானது.

 இறப்பு படுக்கையில் கிடைக்கும் ஒருவர் அல்லது அக்ரிமெண்ட் எழுதி வைத்துக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாத ஒருவர் வாய் வழியாக வக்பு செய்வதாக கூறினால் அது செல்லுபடியாகும் என்ற சட்டத்தை இஸ்லாமிய மதிப்பீடுகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

 வாழ்க்கைக்கு எந்த வித வித மதிப்பீடுகளையும் தராதவர்கள், ஏன் அரசியல் சாசண எழுத்துக்களை கூட மதிக்காதவர்கள் எழுதி வைத்தால் தான் வக்பு என்று பேசுகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறோம். இது ஒரு வக்பு திருட்டு சட்டம்  

 4.   வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்கான சட்ட விதிகள் கடுமையாக இருப்பதால் தான் வக்பு வாரியம் என்ற ஒன்றை தனியாக முஸ்லிம்கள் உமய்யாக்களின் காலத்திலிருந்தே – அதாவது இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டிலிருந்தே அமைத்தார்கள். அது தான் தொடர்ச்சியாக ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்று வரை தனி வாரியங்களாக நடப்பில் இருக்கிறது.

 எனவே வக்பு சொத்து விவகாரங்களில் நீதிமன்றங்களை விட வக்பு வாரியங்கள் நன்கறிந்தவை என்கிற காரணத்தால் வக்பு தொடர்பான பிரச்சனைகள் வக்பு கவுன்சிலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று வக்பு சட்டம் 1995  கூறுகிறது.

இந்த வக்பு சட்ட்த்தில் தான் இப்போது மத்திய அரசு கை வைத்துள்ளது.

இப்போதைய வக்பு சொத்துக்களின் விவகாரத்தை கோர்ட்டி முறையிட முடியும் என்று மாற்றுகிறது.

அதாவது கோர்ட் ஒரு சராசரி சொத்து விவகாரத்தை போலவே வக்பு சொத்தையும் விசாரிக்கும்

இதுவும் முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு திட்டமாகும்.

அதனால் தான் இதை வக்பு திருட்டு சட்டம் என்று நாம் கூறுகிறோம்.

இப்போதைய சட்ட திருத்தம் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு எந்த வகையில் முரண்படுகின்றன என்பதற்கான சாட்சிகள் இவை.

அரசியல் சாசனத்தை சிதைக்கும் பாஜக அரசு

இனி இப்போதை வக்பு திருட்டு சட்டம் இந்திய அரசியல் சாசணத்திற்கும் இந்திய மக்களின் சமூக நல்லிணக்கத்திற்கு எந்த வகையில் கேடு செய்ய நினைக்கிறது ?  இந்துதுத்துவ வகுப்பு வாத சக்திகள் முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க எப்படி  துனை செய்கிறது?  என்பதை பார்க்கலாம்.

5.   ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்தா என்பதை தீர்மாணிக்கும் அதிகாரம் மாவட்ட கலக்டருக்கு உண்டு என்று இந்த் சட்டம் கூறுகிறது.

இதன் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவரோ ஏன் ஒரு சப் கலக்ட்ரோ கூட ஒரு வக்பு சொத்தை வேறு யாருக்கு கொடுத்து விட முடியும்.

அதனால் தான் இது வக்பு திருட்டு சட்டம் என்கிறோம்.

  இந்த சட்ட திருத்ததின் ஒரு பெரும் கொடுமை. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர் வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப் படுவார்கள் என்று கூறுகிறது.

திருப்பதி தேவஸ்தான் பணியாளர்களில் இந்துக்கள் அல்லாதவர்களை நியமிக்க கூடாது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற மத்திய பாஜக அரசு, உத்தரப் பிரதேசத்திலும் வட நாட்டின் பல பகுதிகளிலும் இந்துக்களின் விழாக்கள் நடை பெறும் இடங்களில் முஸ்லிம்கள் கடை வைக்க கூடாது என்று இந்துத்துவ சக்திகள் அச்சுறுத்துவதை கண்டு கொள்ளாத மத்திய பாஜக அரசு முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக்க முயற்சிக்கிறது.

நீலகிரி தொகுதி திமுக எம் பி ஆ ராசா நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தன்னுடைய ஆவேசமான் எதிர்த்து போசிய போது மிக நியாயமாக ஒரு கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்லூரிகளில் முஸ்லிம் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று கேட்கும் பாஜாகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்கும் திருத்த்தை கொண்டு வந்துள்ளனர் என்று தோலுரித்துக் காட்டினார்.

அதனால் தான் இதை வக்பு திருட்டு சட்டம் என்று கூறுகிறோம்.

6.   வக்பு சொத்துக்களை முஸ்லிம்கள் நிர்வகித்தாலும் அவை அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

ஒண்ணரை இலட்சம் கோடி சொத்து இருக்கிறது. அதில் பல ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என்றால் அது முஸ்லிம் சமூகத்தின் எந்த ஒரு ஜமாத்திற்கும் வருவதில்லை. அரசாங்கத்திடம் தான் சென்று சேர்கிறது. அரசு தான் அதை செலவிடவும் செய்கிறது.

அரசு சொத்துக்களுக்கு எப்படி வருமான வரி இல்லையோ அது போல வக்பு சொத்துக்களுக்கும் இதுவரை வருமான வரி இருந்ததில்லை.

இப்போதை பாஜக அரசின் சட்ட திருத்தமோ

வக்பு சொத்தின் வருமானங்களுக்கும் வரி விதிக்கப் போகிறது.

இது அப்பட்டமாக. முஸ்லிம்களுக்குரியது என்ற ஒற்றை காரணத்திற்கா அரசின் சொத்தை அரசே அபகரிக்கும் முயற்சியாகும்.

அதனால் தான் இது வக்பு திருட்டு சட்டம் என்று சொல்கிறோம்.   

வக்பு வாரியத்திற்கு எதிரான பொய்யான் அவதூறுகளை பிரதமர் அமைச்சர் என்ற வேறுபாடில்லாமல் ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில்

7.   வக்பு சொத்த்துக்களை ஆக்ரமித்திருப்பவர்களுக்கு ஜாமீன் இல்லாத தண்டனைகள் வழங்கப்படும் என்பது முந்தைய சட்டம் கூறுகிறது.  அதை இப்போதைய சட்டம் ஜாமீன் வழங்கப்படும் தண்டனையாக மாற்றியிருக்கிறது. அதே வக்பு ஆகமிப்பாளர்களுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்ற பழைய சட்டத்தை சாதாரண தண்டனை வழங்கப்படும் என்று இப்போதைய சட்டம் மாற்றியிருக்கிறது.

 பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்களின் வீடுகள் இடிக்கப்படும். அவர்களது கடைகள் தகர்க்கப்படும் சேதங்களுக்கு ஈடாக அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். என்று நாட்டில் ஒரு கட்டாட்சியை பாஜக அர்சுகள் நடை முறை படுத்திக் கொண்டிருக்கின்றன். ஏன் இதை காட்டாட்சி என்று சொல்கிறோம் என்றால் இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே அதுவும் போலித்தனமாக பயன்படுத்தப்படுகிறது.

 இத்தகைய சூழலில் திருடர்களிடமிருந்து வக்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு வக்பு என்பது முஸ்லிம்களின் சொத்து என்ற ஒற்றை காரணத்திற்காக திருடர்களுக்கும் வக்பு கொள்ளையர்களுக்கும் பாதுகாப்பான சவுகரியான ஒரு சட்ட்த்தை இயற்றியிருக்கிறது.

 அதனால் தான் இதை வக்பு திருட்டு சட்டம் என்று கூறுகிறோம்.

 8.   எல்லாவற்றையும் விட ஒரு பெரிய அக்கிரமம். வக்பு சொத்துக்களை இனி மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.

 நம்முடைய வக்பு சொத்துக்கள் அனைத்தும் ஏற்கெனவே அதாவது 1955 ம் ஆண்டிலேயே பதிவு செய்யப் பட்டு விட்டன. இதற்கு முன் பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது அப்போதைய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி 100 சதவீதம் வக்பு சொத்துக்கள் டிஜிட்டஸைடு – கணிணி மயப்படுபத்தப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார். அதாவது எது வக்பு சொத்து என்பதை இணையத்தை பார்த்தே அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார். 

முழுக்க பதிவு செய்யப்பட்டு விட்டிருக்கிற வக்பு சொத்துக்களை இனியும் பதிவு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு வக்பு சொத்தையும் கேள்விக்குள்ளாக்குகிற அநீதியாகும்

 கிட்டதட்ட என் ஆர் சி எப்படி இந்திய குடிமக்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்குமோ அது போல வக்பு சொத்துக்களை கேள்விக்குள்ளாக்கும் திட்டமும் அபாயகரமான செயல்பாடுமாகும்.

இது ஒவ்வொரு முஸ்லிம் மஹல்லாவையும் நிம்மதி இழக்க செய்யக் கூடியதாகும்.

 மிக அப்பட்டமாக நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உலகை ஏமாற்றுவதற்காக இந்த சட்டம் எந்த பள்ளிவாசலையும் எந்த நினைவிடத்தையும் பாதிக்காது என்று உள்துறை அமைச்சர் சொல்கிறார்.

    உண்மையில், இந்த சட்டம் எந்த ஒரு பள்ளிவாசலையும் தர்காவையும் கப்ருஸ்தானையும் கேள்விக்குள்ளாக்கும். ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் நியாயமாக அனுபவித்து வரும் சொத்துரிமையை சச்சரவுக்குள்ளாக்கும் என்பதே எதார்த்தமாகும்.

 இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்குமுள்ள உரிமைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை ஒதுக்கி வைக்கும் ஒரு வஞ்சக திட்டத்துடனேயே மத்திய பாஜக அரசு இந்த திருட்டு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

 இது இந்திய முஸ்லிம்களுக்கு அல்ல; இந்திய ஜன்நயகத்திற்கு ஆபத்தானதாகும்.

 அதனால் தான் இந்த சட்ட திருத்த்த்தை முமுமையா வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மாணத்திற்கு பாஜக வை தவிர அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 தமிழக சட்டமன்ற தீர்மாணம் இப்படிச் சொல்கிறது..

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இதே உணர்வை கொண்டதாகத்தான் செயல்பட வேண்டும்.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, தனது அனைத்து செயல்பாடுகளையும் ஒருவித உள்நோக்கத்துடனே செய்து வருகிறது. எதை செய்தாலும், குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையிலேயே திட்டங்களை தீட்டுகின்றனர்.

தமிழக் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிய இத்தீர்மாணம் இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற வேட்கை மிகுந்ததாகும்

தீர்மானத்தை முன் மொழிந்த முதலமைச்சர் அவர்களுக்கும் அதை ஆதரித்த  காங்கிரஸ், அதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ வாழ்வுரிமை கட்சி  உள்ளிட்ட அஅனைத்து கட்சியினருக்கும். சட்ட மன்றத்திற்கு வெளியே இந்த சட்ட்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த  தவெக  உள்ளிட்ட கட்சிகளுக்கும் முஸ்லிம் சம்தாயம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு நம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு பெரும் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிற முஸ்லிம் சமூகத்திற்கு கட்சி பேதமின்றை ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசின் இந்த சட்ட திருத்தம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு  எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய எச்சரிக்கையை நாம் மறந்து விடக் கூடாது என்பதை நாட்டுமக்களுக்கு முஸ்லிம் சமூகம் நினைவூட்டுகிறது.

இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சமூகத்திற்கு செய்யப்படுகிற அநீதி தேசத்திற்கு செய்யப்படுகிற அநீதியாகும். இது தியாகிகளை அவமதிப்பது போன்ற கொடூரமாகும்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி பெரும்பான்மை சமூகத்திற்கு ஒரு வேண்டு கோள் வைத்துள்ளார்.

2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிராக ஏதே ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. கொலைகள் மசூதிகள் இடிப்பு, புல்டோசர் நடவடிக்கைகள் நடக்கின்றன. இப்போது அவர்கள் வக்பு சொத்துக்கள் மீது கை வைத்துள்ளார்கள். இத்தகைய அனுகு முறைக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் இந்து சகோதரர்கள் கை கோர்க்க வேண்டும். நாட்டின் இந்து மக்கள் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

இது ஒரு ஜன்நாயக அரசியல் வாதியின் கோரிக்கை அல்ல ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்கள் சார்பாக நாட்டிலுள்ள இந்து சகோதரர்களின் முன் வைக்கப்படுகிற கோரிக்கையாகும்.

முந்தைய வக்பு சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசும் அமைச்சர்களும் இந்துதுதுவ மீடியாக்களும் இந்துதுவ சக்திகளும் பரப்புகிற  பல குற்றச் சாட்டுகளும் பொய்யான அவதூறுகளாகும். இந்தியாவில் நிலவுகிற சமூக நல்லிணக்கத்தை சிதைத்து மக்களில் ஒரு சாராரை மற்றொரு சாராருக்கு எதிராக வன்மமாக திருப்பி விடுகிற முயற்சியாகும்.

கொஞ்சம் யோசித்தால் கூட அவற்றின் போலித்தன்மை வெளிப்பட்டு விடும்.

இந்த நாடாளுமன்றத்தை கூட வக்பு என்று சொல்லி விடுவார்கள் என்ற அமைச்சர் கிரன் ரிஜ்ஜுவின் பேச்சு, ஒரு நோட்டீஸில் ஏழை மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கி விடுவார்கள் என்ற பிரதமரின் பேச்சு  தரமற்ற மிக மோசமான சொற்றொடர்களாகும்.

1955 ல் வக்பு சொத்துக்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. அவை அனைத்தையும் கனினிமயப்படுத்தி விட்டோம் என்று பாஜக வை சார்ந்த ஒரு அமைச்சரே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிற போது இந்த அரசினால் நியமிக்கப் பட்ட உறுப்பினர்களை கொண்ட வக்பு வாரியம் தனக்கு சொந்தமில்லாத சொத்துக்களுக்கு உரிமை கோர முடியும் என்று கூறுவதை விட மோசடித் தனம் வேறு என்ன இருக்க முடியும் ?

அதே போல தமிழகத்தில் ஒரு சிலர் 31 ஆயிரம் கோடியாக இருந்த வக்பு சொத்துக்கள் இப்போது ஒரு இலட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. வக்பு வாரியம் ஆக்ரமிப்புக்களை செய்யாமல் இது எப்படி உயர்ந்த்து ? என்று கேள்வி கேட்கின்றனர். இந்து அறநிலையத்துறை ஆக்ரமிப்புச் செய்ய முடியும் என்றால் தான் வக்பு வாரியமும் ஆக்ரமிப்புச் செய்ய முடியும்?  வக்பு வாரியம் ஆக்ரமிப்பு செய்கிறது என்றால் அரசு ஆக்ரமிப்பு செய்கிறது என்றே பொருளாகும் ஏனெனில் வக்பு வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிற்கு வக்பு சொத்துக்களின் மதிப்பு அதிகறித்திருக்கிறது. உண்மை தான்.  அதற்கு இரண்டு காராண்ங்கள்

ஒன்று சொத்துக்களின் மதிப்பு காலத்திற்கேற்ப அதிகரித்திருப்பதாகும்

இரண்டாவது தொடர்ந்து முஸ்லிம்கள் இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி வக்பு செய்து வருவதாகும்.  அது போல தனியாருக்கு சொந்தமான பல பள்ளிவாசல்களும் தர்காக்க்களும் வக்பு வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்படுவதுமாகும்.  

தமக்கு சொந்த மில்லாத்தை மட்டுமல்ல, தன் சுவாதீனத்தில் இல்லாத எதையும் வக்பு செய்ய முடியாது என்ற அளவில் வக்பு அல்லாஹ்வுக்காக செய்யப்படக் கூடியவை என்ற வகையிலும் வக்பு சொத்துக்கள் புனிதமாக இருக்கின்றன என்பதையும் நாட்டு மக்களுக்கு மிக உறுதிபட நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.   .    

இந்த உண்மைகளை தெரிந்தும் வேணுமென்றே அபாண்டமான குற்றச் சாட்டுக்களை கூறி திரைப்படங்களில் மிக மோசமான ரவுடிகள் கையாள்கிற அரசியல் சதி வேலைகளைப் போலவே தற்போதைய மத்திய அரசு மக்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க முயல்கிறது

 அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் இந்த திருட்டு சட்ட்த்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு

பாஜக வின்  தனிப்பட்ட விருப்பத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ள இச் சட்ட்த்தை நாட்டு மக்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

 இந்த திருட்டு சட்டத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று நினைக்க வேண்டாம் என்று அக்கறையுள்ள பல தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளதை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம் .

 சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இப்போது முஸ்லிம்களின் சொத்துக்களில் கை வைத்துள்ளார்கள். அடுத்து கிருத்துவர்கள், சீக்கியர்களின் சொத்துக்களை பிடுங்க முயற்சிப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.

 பாஜக ஆட்சியில் 763 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கே. சி வேணுகோபால் சுட்டிக் காட்டியுள்ளார்.

 பாஜக அரசு தனது தோல்விகளை மறைக்க இது போன்ற சட்டங்களை திரும்ப திரும்ப கொண்டு வருகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

 மிக எதார்த்தமான இந்த கருத்துக்களை நாட்டு மக்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.  நாட்டு மக்கள் அனைவரும் இத்தகைய வஞ்சக சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிராக இருக்க வேண்டும்.  போராடும் மக்களோடு கை கோர்க்க வேண்டும்.

 இந்திய முஸ்லிம் சமுதாயம் 

·         நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கிடைப்பது போதும் என்று சமாதானமாக இருந்து விட்டது.

·         பாபர் மஸ்ஜித் இடிப்பை தாங்கிக் கொண்டது.

·         முத்தலாக் தடை சட்டம் என்ற் பெயரிலான அடக்கு முறையை சகித்துக் கொண்ட்து.

·         கல்வி உதவி பெறுதலில் இருந்து வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்படுவது வரை ஆன் அனைத்து புறக்கணிப்புக்களையும் எதிர் கொண்டது.

·         அரசியல் அதிகாரத்தில் ஓரங்கட்டப்படுகிற அக்கிரமத்தை ஏற்றுக் கொண்ட்து.

 இப்போது முஸ்லிம்களின் வக்பு சொத்தில் கை வைக்கிறார்கள்.

 இது நமது ஒவ்வொரு பள்ளிவாசலையும் கேள்விக்குள்ளாக்கும் முயற்சியாகும், ஒவ்வொரு தர்காவையும் கப்ருஸ்தானையும் மற்ற அறச் செயல்களையும் நம்மிடமிருந்து பறிக்க மேற்கொள்ளப் படும் திட்டமாகும், எனவே இந்த சட்ட்த்தை அகற்றும் வரை மத்திய அரசுக்கு எதிராக நாம் போராடியாக வேண்டும். அதற்காக ஜனநாயகம் வழங்குகிற அத்தனை வழிகளையும் கையாள வேண்டும்.

 நமக்கென்ன நம் வீட்டையா பிடுங்கினார்கள் என்று சும்மா சுகமாக உட்கார்ந்து விடலாம் என்று நினைக்க கூடாது.

அநீதியை கண்டால் முடிந்தவரை தடுக்க பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்

 عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ( من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمانرواه مسلم .

 போராட்ட்த்திற்கன வெற்றி எப்படியும் உறுதி என ஆர்வமுட்டினார்கள் நபிகள் நாயகம் (ஸல்)

 وعنْ أَبي هُريرة، t، قالَ: جاء رجُلٌ إِلَى رَسُول اللَّه ﷺ فَقَال: يَا رسولَ اللَّه أَرأَيت إنْ جاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَفَلا تُعْطِهِ مالكَ قَالَ: أَرأَيْتَ إنْ قَاتلني؟ قَالَقَاتِلْهُ. قَالَ: أَرأَيت إنْ قَتلَني؟ قَالَفَأنْت شَهيدٌ قَالَ: أَرأَيْتَ إنْ قَتَلْتُهُ؟ قَالَهُوَ فِي النَّارِ رواهُ مسلمٌ

 தனது சொத்தை பாதுகாப்பதற்காக – மானத்தை பாதுகாப்பதற்காக – மார்க்கத்தை பாதுகாப்பதற்காக – குடும்பத்தை பாதுகாப்பதற்காக போராடுகிற சூழல் ஏற்பட்டால் அதற்காக போராடி மரணிக்கிற நபர் ஷஹீதாவார் என்று நபிகள் நாயக்ம் (ஸல்) அவ்ர்கள் சொன்னார்கள்.

 وعنْ أَبي الأعْوَر سعيدِ بنِ زَيْدِ بنِ عَمْرو بنِ نُفَيْلٍ، قَالَ: سمِعت رسُول اللَّهِ ﷺ يقولُمنْ قُتِل دُونَ مالِهِ فهُو شَهيدٌ، ومنْ قُتلَ دُونَ دمِهِ فهُو شهيدٌ، وَمَنْ قُتِل دُونَ دِينِهِ فَهو شهيدٌ، ومنْ قُتِل دُونَ أهْلِهِ فهُو شهيدٌ.رواه أَبو داود،

 இந்த நபி மொழி எந்த அளவு போராட தயாராக வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

 இன்ஷா அல்லாஹ் வருகிற 13 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நமது தமிழ்நாட்டின் தலை நகர் ஒவ்வொன்றிலும் ஜமாஅத்துல் உலமா சபை கண்ட பொதுக் கூட்டங்களை அறிவித்திருக்கிறது. அதில் நாம் திரளாக கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்வோம்.

 மத்திய அரசே! மத்திய அரசே! திட்டமிட்டு முஸ்லிம்களை வஞ்சிக்கிற போக்கை நிறுத்து!

மத்திய அரசே! மத்திய அரசே! வக்பு சொத்துக்களை திருடும் சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்!

மத்திய அரசே மத்திய அரசே! நாட்டு மக்களை மேலும் மேலும் துன்புறுத்தாதே!

மத்திய அரசே மத்திய அரசே மக்களின் கவனத்தை திசை திருப்பி விலை வாசியை உயர்த்தாதே ! மக்களின் வயிற்றில் அடிக்காதே!

மத்திய அரசே மத்திய அரசே மத நல்லிணக்கத்தை குலைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்காதே!

மத்திய அரசே மத்திய அரசே அரசியல் சாசனத்தை அவமதிக்காதே !

மத்திய அரசே மத்திய அரசே வக்பு சொத்துக்களை திருடாதே!

மத்திய அரசே மத்திய அரசே வக்பு திருடர்களுக்கு துணை போகாதே!

 நாம் குரல் கொடுப்போம். அல்லாஹ் அதற்கு பலம் கொடுப்பானாக!

 

1 comment:

  1. الحمد لله இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் பேசலாம்
    بارك الله
    شكراً جزاك الله خير الجزاء في الدارين

    ReplyDelete