வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 05, 2021

வட்டியின் கோரம் விற்பனைக்கு வந்த நட்சத்திர விடுதிகள்

 பெருளாதார மீட்சிக்கு வட்டி தவிர்க்கப்பட வேண்டும்.

ஜூலை மாதத்தின் இறுதியில் (23) வந்த  ஒரு பத்ரிகை செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

சென்னையிலும் கோவையிலும் உள்ள லீ மெரிடியன் ஹொட்டல்கள் ஏளத்திற்கு வந்தன. ஏளம் எடுத்த கம்பெனி சென்னை ஹோட்டலை மருத்துவ மனையாக ஆக்க விருப்பதாகவும் கோவையில் உள்ள ஹோட்டலை அப்படியே ஹோட்டலாகவே நடத்தப் போவதாகவும் கூறியது.

இந்த ஹோட்டல்கள் 5 நட்சத்திர அந்தஸ்த்து பெற்றவை. நகரிலுள்ள முதல் தரமானது மட்டுமல்ல. முதல் தரத்தில் முதல் நிலையில் இருக்க கூடியது. பெருந்தொழிலதிபர்கள். அரசு பிரதிநிதிகள் அமைச்சர்கள் தங்க கூடிய ஹோட்டல்கள் இவை, ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திலிருந்து இலட்சங்கள் வரை வாடகையாக வசூலிக்க கூடியவை. இந்த இரண்டு ஹோட்டல்களுக்குமான ஏலத் தொகை 423 கோடி.

இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இந்த ஹோட்டலின் மதிப்பு 1600 கோடி.

1600 கோடி ரூபாய் சொத்தை 423 கோடிக்கு ஏலத்தில் விட வேண்டிய

சூழல் ஏற்பட்டதற்கு காரணம் கடனும் அதற்கான வட்டியுமாகும்.

இதுமாதிரியான சொத்துக்களை வைத்திருப்பவர்கள் எத்தகைய செல்வந்தர்களாக இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அத்தகையோர் பொய்யான வளர்ச்சியை தேடி ஓடி கடன் வாங்குகிறார்கள்.

லீ மெரிடியன் ஹோட்டல் அப்பு ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நல்லா பழனி ஜி பெர்யசாமி. தமிழகத்தின் ஒரு பெரும் தொழில் அதிபர். தரணி சுகர்ஸ் மற்றும் பல நிறுவனங்களின் உரிமையாளர். அவர் இந்த இரு ஹோட்டல்களின் பேரில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடமிருந்து சுமார் 200 கோடி கடன் பெற்றுள்ளார். அது வட்டி எல்லாம் சேர்த்து 389 கோடியாக வளர்ந்துள்ளது. இதற்கான சர்ச்சையில் தலையிட்ட தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை இந்த இரு ஹோட்டல்களையும் ஏலம் விட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு பெரும் பண முதலையான பாலாஜி எஜிகேசனல் & சாரிட்டி பப்ளிக் டிரஸ்டின் உரிமையாளர் ராஜகோபலன் இதை 423 கோடிக்கு ஏளம் கேட்க அதுவே சரி என்று தீர்ப்பாயம் தீர்ப்பு சொல்லி விட்டது.

அப்பு ஹோட்டல்ஸின் உரிமையாளரான பெரியசாமி 1600 கோடி சொத்துக்க்கு 423 கோடி மதிப்பிடுவது என்ன நியாயம் என்று ஆட்சேபித்தார்அதை தீர்ப்பாயம் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த கொரோனா நெருக்கடிச் சூழலில் இந்த சொத்துக்கு இது தான் மதிப்பு என்று அது கூறிவிட்டது.

இது ஏதோ இரண்டு பெரிய கம்பெனிகள் மற்றும் கம்பணிகள் விவகாரத்தை தீர்க்கும் சட்ட அமைப்புகளுக்கு இடையிலான் போராட்டமாக மட்டும் நாம் பார்க்க இயலாது.

ஒரு பெரிய புகழ்மிக்க நிறுவனம் வட்டியில் சிக்கி எத்தகைய நஷ்டத்தை சந்திக்கிறது என்பது அனைவரும் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

அது கூட பெரிதல்ல. லீமெரிடியன் ஏலத்திற்கு வருகிறது . அதில் ஒன்று மருத்துவமனையாக மாற்றப்பட இருக்கிறது என்ற அறிவிப்பு அந்த அந்த நிறுவனத்தை உருவாக்கியவர்களுக்கு எத்தக்கய இழிவை சமூக மட்டத்தில் ஏற்படுத்தி விடும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெரிய சொத்து இழப்பு என்பதோடு சேர்த்து வைத்திருக்கிற மரியாதைக்கு விழும் அடி என்பது சாதாரணமானதல்ல.

இதுதான் அதிகப்படியான கடன் மற்றும் வட்டியின் வரலாறு.

அது சொத்தை அழிக்கும். மட்டுமல்ல. சுகத்தையும் அழிக்கும்

திருக்குர் ஆன் இந்த உலகிற்கு உரத்து மிக உரத்துச் சொல்லுகிற செய்தி இது

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (276

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மத்தை வளர்க்கிறான்.

வட்டிக்காரன் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறான். வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்பவர்கள் வளர்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள் என்று சிலர் கேட்கலாம்.

அதனால் தான் இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்னவர்கள். வட்டியில் காசு அதிகமாக தெரிந்தாலும் அதில் பரக்கத் இருக்காது . என்றும் வட்டிக்கு மறுமையில் எந்த வளர்ச்சியும் இருக்காது, வட்டிக்காரன் செய்த எந்த நற்செயலுக்கும் மதிப்பு இருக்காது என்றும் விளக்கம் அளித்தார்கள்.

ஆனால் திருக்குர் ஆனிய நிபுணர்கள் சொல்கிற கருத்து நிச்சயம் வட்டியில் எந்த வளர்ச்சியும் கிடைக்காது என்பதே ஆகும்.

இன்றைய பெருளாதார அறிஞர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள்   

முஸ்லிம்கள் மிக உறுதியாக மனதில் நிறுத்த வேண்டிய அல்லாஹ்வின் ஒரு வார்த்தை யம்ஹகுல்லாஹு ர்ரிபா அல்லாஹ் வட்டியை அழிப்பான். திருக்குர் ஆனிய அறிஞர்கள் இதற்கு சன்னம் சன்னமாக காலியாகிவிடும் என்று விளக்கம் தருவார்கள்.  ينقُصُ الله الرّبا فيذْهبه

வட்டி இஸ்லாம் தடுத்திருக்கிற மிக கடுமையான ஒரு தீமை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல வட்டியை இவ்வளவு கடுமையாக சாடியவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அளவு வட்டி குறித்து எச்சரித்துள்ளார்கள். 

மூன்று நபி மொழிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கூறுகிறேன்.

முடிவு தீமையானது.

وعن ابن مسعود رضي الله عنه، عن النّبي - صلّى الله عليه وسلّم - أنّه قال: (ما أحدٌ أكثر من الرّبا إلا كان عاقبة أمره إلى قِلَّة) سنن ابن ماجه .

மிக அறுவறுப்பான காசு

عن عبد الله بن حنظلة غسيل الملائكة أنّه قال: قال رسول الله صلّى الله عليه وسلّم: (درهم ربا يأكله الرّجل وهو يعلم أشدُّ من ستٍّ وثلاثين زنيةً) أخرجه أحمد 

எல்லோருக்கு சாபம்.  வட்டி வாங்குபவரும் கொடுப்பவரும் சமமே

عن جابر رضي الله عنه قال: (لعن رسول الله صلّى الله عليه وسلّم: آكل الرّبا، وموكله، وكاتبه، وشاهديه، وقال: هم سواء

ஒரு பெருமானார் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு எல்லாம் தாண்டி உலகில் ஆசாபாசங்களை முன்வைத்து வட்டிக்கு வழி திறப்பாரானால் அவருக்கான எச்சரிக்கை தான்  ينقُصُ الله الرّبا فيذْهبه

இன்றைய நெருக்கடியான சூழலில் பணத்தட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் ஏற்படக் கூடியது. இந்த சூழலில் வட்டி குறித்து நாம் அதிகம் எச்சரிக்க்கயாக இருக்க வேண்டும்.

நீங்கள் யூடியூப் சேனலில் பொருளாதார அறிஞர்கள் கூறும் எச்சரிக்கையை கேட்டுப் பாருங்கள்.

கடன் வட்டியின் பக்கம் செல்லாதீர்கள். தவணைக்கு பொருள் வாங்காதீர்கள். போன் கார் வீட்டு உபயோகப் பொருட்கள் எதுவானாலும் பழையதை பயன்படுத்த முடியும் என்றால் அதையே பயன்படுத்துங்கள். வட்டிக்கு வாங்கினீர்கள் என்றால் மாதா மாதம் பணம் கட்ட வேண்டியது அவசியமாகும். இனி எப்போது லாக்டவுன் வரும் எத்தனை நாள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உங்களது வட்டி வளர்ந்து கொண்டே இருக்கும். லாக்டவுன் காலத்தில் வட்டி கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு சொன்ன உத்தரவு சரியாக அமுல்படுத்தப்பட வில்லை. பல நிருவனங்களும் அப்போதைக்கு கேட்க வில்லை என்றாலும் கூட வட்டித் தொகையை மூல கடன் தொகையோடு சேர்த்து விட்டன. இனி அதற்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டும் என்ற நிலை தான் உருவாகி யிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். சமீபத்தில் ஒரே ஒரு லாரி வைத்திர்ப்பவரிடமிருந்து மூன்று மாத தவனை கட்டாததற்காக வங்கி லாரியை பறிமுதல் செய்து விட்டதை அவர் கண்ணீரோடு யூடியூபில் பதிவு செய்திருந்தார். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

எனவே மனித வரலாறு சந்தித்திராத ஒரு புது வகையான நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். எல்லா இடத்திலும் பணத்தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. அதிலும் குறிப்பாக ஏழை நடுத்தர குடும்பங்களின் நிலை மிகவும் கவலைக்குரியது.

இந்த நிலையில் வட்டிக்கு கடன் என்பதை ஒரு உடனடித் தீர்வாக பலரும் கருத வாய்ப்பிருக்கிறது.

அதனாலேயே இந்த ஜும் ஆவில் இது குறித்து எச்சரிக்கிறோம்.

வட்டியின் பக்கம் செல்லாதீர்கள்.

அது வளர்ச்சியல்ல. வீழ்ச்சி.

அது நிம்மதியை தறுவதில்லை. வட்டிக்கு கடன் வாங்கியோர் நிம்மதியாக வாழ முடிவதில்லை. மாதமானால் வட்டி கட்டனுமே என்ற கவலை. இல்லை என்றால் வட்டி அதிகரித்துவிடுமே என்ற பயம் வாட்டி வதைக்கிறது. பல குடும்பங்களின் தற்கொலை கதைகளை நாம் அவ்வப் போது பத்ரிகைகளில் படிக்கிறோம்.

வட்டியில் வீழ்வது சாமானிய மனிதர்கள் மட்டுமல்ல . பெரிய மனிதர்களுக்கும் கூட வீழ்ச்சியாகவும் நிம்மதியை பறிக்க் கூடியதாகவும் அமைந்து விடுகிறது.

விஜய் மல்லையாவின் பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள்.அவரது தந்தை கேட்பரீஸ் மாதிரியான பல நிறுவன்ங்களின் இந்திய பிரதிநிதி. அவரது தந்தையின் பெயரில் பெங்களூரில் தெருக்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவின் புகழுக்குரிய செல்வந்தராக இருந்த மல்லைய்யா இப்போது இலண்டனில் சிறை வாசஸ்திற்கு பயந்து அன்றாடம் பொழுதை கழித்து வருகிறார்.

எனவே வியாபாரத்தை பெருக்குவதற்காக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்து விடுவோம்.

குடும்ப செலவுகளுக்காக வட்டிக்கு வாங்கி நிம்மதியை இழப்போர் பலர் உண்டு.

அது குடும்ப செலவுகளை சமாளிக்க வட்டி தான் சாதாரண வழி என்று நினைப்பதால் ஏற்படுவதாகும்.

இன்று வீடு தேடி வந்து  வட்டிக்கு காசு தறுவதற்கு ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.

நமது மாநிலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அனைத்தும் இப்போது வட்டியில் தான் மிதந்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் மஹல்லாக்களில் கூட இது பெரிய அளவில் நடைபெறுகிறது. பர்தா அணிந்த பெண்கள் குழுக்கள் என்ற பெயரில் வெட்கத்தை கடைபிடிக்க முடியாத ஒரு உலகிற்குள் அடி எடுத்து வைக்கிறார்கள். இதனால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புக் கதைகள் ஏராளம். அதை எல்லாம் இங்கு சொல்வது சாத்தியமல்ல.

ஒன்று நிச்சயம். பணத்தை எளிதாக கடன் பெற மகளிர் குழுக்கள் உதவுகின்றன என்று நமது பெண்களை வட்டிக்கு கடன் வாங்குவதற்காக எங்கும் அனுப்ப நம்மில் பலர் தயாராகி விட்டோம்.

பெண்கள் சிறு தொழில் செய்து கொள்வதற்கு வசதியாக ஒரு காலத்தில் அரசாங்கம் மகளிர் குழுக்களை அமைத்துக் கலக்டர் தலைமையில் கடன் வழங்கியது. அதில் சிலர் பயனடைந்துள்ளனர் என்பது வாஸ்தவம் தான். ஆனால் பெண்கள் பலரும் எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காகவே அதில் இணைந்தனர்.

கடந்த சில வருடங்களாக மகளிர் குழுக்களை அரசு கண்டு கொள்வதில்லை. இப்போது அக்குழுக்களை வட்டி முதலைகள் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர்.

கடை வைத்து ஊடுறுவ முடியாதவர்கள் நமது வீடுகளுக்குள்ளேயே கூட்டம் நடத்தி  நமது பெண்களை வைத்தே வட்டி வசூல் செய்து கொள்கின்றன.

இடைக்காலத்தில் முஸ்லிம் மஹல்லாக்கள் படோபடமாக வலம் வரும் ஈட்டிக்காரன் இல்லாத மஹல்லக்களாக திகழ்ந்தன. இப்போது புல்லட் வண்டிகளுக்கு பதில் யமஹா வண்டிகளில் சாதாரண ஆடைகளில் வலம் வரும் ஈட்டிக்காரர்கள் முஸ்லிம் மஹல்லாக்களிலும் அதிகரித்திருக்கிறார்கள். சப்தமில்லாமல் தவனை என்ற பெயரில் வட்டி வசூல் செய்து விட்டு சென்று விடுகிறார்கள்.

10 ஆயிரம் கடன் கேட்டால் 2 ஆயிரம் பிடித்துக் கொண்டு 8 ஆயிரம் கொடுக்கின்றனர். இதுவே 30 ஆயிரமாக இருந்தால் 6 ஆயிரம் பிடித்துக் கொண்டு 24 ஆயிரம் கொடுக்கின்றனர். இப்படி கடன் வாங்கும் பெண்கள் ஒரு குழுவில் பணம் கட்ட முடியாத போது இன்னொரு குழுவில் இணைந்து பணம் பெற்று வட்டி கட்டுகின்றனர்.

எனவே குழுவுக்கு பணம் கட்டுதல் என்பது இப்போதைய நமது பெண்களுக்கு பெரும் மன்க்கவலையை தரும் ஒரு விசயமாகி இருக்கிறது. அது பல நோய்களுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது.

நமது சமூக அமைப்பில் வட்டி என்பது ஒரு பாவம் என்ற மனோ நிலையில் மாறிவருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது குறிதுது மிக கவலையோடு சிந்திக்க வேண்டியது குடும்பத்திலுள்ள ஆண்களாகும்.

வட்டி அல்லாஹ் ரஸூலின் சாபத்திற்குரியது.

அது நிம்மதியை குலைத்து விடும்

அது வளர்ச்சியை அல்ல வீழ்ச்சியை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

என்பதில் நாம் மிக உறுதியாக இருப்போம்.

வட்டிக்கு கடன் வாங்க முடியாவிட்டால் நாம் என்ன செய்வோம் என்று யோசித்தால் வட்டியை விட்டு விலகி நிற்க வழி பிறக்கும்.

மீண்டும் ஒரு எச்சரிக்கையை சொல்கிறேன்.

வட்டி சன்னம் சன்னமாக எந்த அளவில் நம்மை அழித்து விடும் என்றால்.

யூதர்கள் பாலஸ்தீன நிலப்பரப்பை அரசியல் ரீதியாக ஆக்ரமிப்பதற்கு முன்னால் அங்கிருந்த மக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து அவர்களது நிலங்கலை எழுதி வாங்கியே பொருளாதார ரீதியாக பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். பாலஸ்தீனம் வட்டியின் காரணமாக பொருளாதார ரீதியாக வீழ்ந்த பிறகே அரசியல் ரீதியாக வீழ்ந்த்து.

அதே போல நமது இந்தியாவில் வியபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி குறுநில மன்னர்களுக்கும் நவாப் களுக்கும் வட்டிக்கு கடன் கொடுத்தார்கள். நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டார்கள். அப்படியே நாட்டை கொள்ளை அடித்தார்கள்.

எனவே ஒரு சின்ன ஏழைக் குடும்பமாக இருந்தாலும் சரி. பெரிய செல்வந்தராக  இருந்தாலும் சரி . அரசுகளே ஆனாலும் சரி. தொடர்ந்து வட்டியில் விழுவார்கள் என்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை சந்திக்க வேண்டிதாகிவிடும்.

எல்லா எச்சரிக்கைகளையும் மீறி நான் வட்டிக்கு சார்பு தான் என்றால். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ

 நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!

 

No comments:

Post a Comment