வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 02, 2023

இதயம் காப்போம்

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தின் ஒரு ஹோட்டலில் ஒரு இளைஞன் ரிஷப்ஷணிடாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அது இரவு நேரம். வெளியே கடும் மழை கொட்டிக் கொண்டிருந்தது  அப்போது  வயது முதிர்ந்த ஒரு தம்பதியினர் அந்த இளைஞனிடத்தில் எங்களுக்கு ஒரு அறை வேண்டும் என்றனர்.

அப்போது அந்த இளைஞன் சொன்னான் ஐயா என்னை மன்னிக்க வேண்டும். அனைத்து அறைகளும்  ஏற்கனவே புக் செய்யப்பட்டிருக்கின்றன.  உங்களுக்கு தருவதற்கு இங்கே எந்த அறையும் இல்லை என்று கூறினான். அந்த முதிர்ந்த ஆணும் பெண்ணும் தயங்கி நிற்கிறார்கள் அந்த இளைஞன் அவர்களைப் பார்த்து.  ஐயா! உங்களை பார்த்தால் பெரிய செல்வந்தர்கள் போல் தெரிகிறது நீங்கள் தவறாக நினைக்காவிட்டால்  நான் உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன் எனக்கு இந்த ஹோட்டலில் ஒரு அறை தந்திருக்கிறார்கள் வெளியே மழை பெய்கிறது உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் அந்த அறையில் நீங்கள் தங்கி கொள்ளலாம் என்று கூறினான்.  அந்த முதியவருக்கும் அவருடைய மனைவிக்கும் இந்த வார்த்தை அலாதியான சந்தோஷத்தை கொடுத்தது. இருவரும் அந்த இளைஞனின் அறையில் தங்கினார்கள். இது நடந்தது சரியாக இரண்டு வருடம் கழித்து அதே ஹோட்டலுக்கு அந்த முதியவரும் அவருடைய மனைவியும் வந்தனர்.

 எங்களை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு ஒரு மழை நாளின் இரவில் தங்கள் இருவருக்கும் தங்குவதற்கு இடமளித்த்தை ஞாபகப் படுத்தினார்கள்

 அந்த இளைஞன் அவர்களிடம் நலம் விசாரித்தான். இப்போது என்ன உதவி தேவை என்றான். அந்த முதியவர் அவனிடம் ஒரு சாவியை ஒப்படைத்து நாங்கள் ஒரு ஹோட்டல் கட்டியிருக்கிறோம். அந்த ஹோட்டலுக்கு இனி உன்னுடைய பொறுப்பு என்றார்கள்.

 சிகாகோ நகரின் இந்த நிக்ழ்வு நமக்கு தெரிவிக்கிற பாடம் மிக முக்கியமானது.  

 நமது உள்ளம் பரிசுத்தமாக இருக்கும் எனில் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் அது வெற்றியை தேடித்தரும் 

 நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த ஞானத்துளிகளில் ஒரு பெரும் துளி இது

 أَلا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ, وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ, أَلا وَهِيَ الْقَلْبُ   - البخاري

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனித உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு. அது சரியானால் மனிதன் முழுவதுமாக சரியாக இருப்பான் அது சீர்கெட்டுப் போய் விடுமானால் மனிதன் கெட்டுப்போய் விடுவான். அது தான் இதயம் என்றார்கள்.  

 இன்றைய பாஸ் புட் கலாச்சாரத்தில் அதிக கொளுப்புச் சத்துள்ள உணவுகளால் இதயம் வேகமாக பாதிப்படைவதை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் சேவ் யுவர் ஹார்ட் உங்களது இதயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடை அறிவுரை சொல்கிறார்கள். பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார்கள்.

 இதயத்தை பாதுகாத்த்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். இதயத்தை கவனிக்காமல் விட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பார்கள்.

 இமாம் கஜ்ஜாலி ரஹ் அவர்கள் சொல்கிறார்கள் இதயம் என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மனித உடலின் வலது பாகத்தில் 450  கிராம் எடையளவில் மென்மையாக இருக்கிற ஒரு சதைத்துண்டு தான் இதயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா

 அந்த சத்தைதுண்டைச் சார்ந்திருக்கிறஅகல் என்கிற அறிவு நப்ஸ் என்கிற மனது, பிக்ர் என்கிற சிந்தனை அனைத்தையும் உள்ளடக்கியது தான் இதயம் என்கிறார்கள்.

 இமாம் கஜ்ஜாலியின் நோக்கம் என்ன வென்றால் மக்கள் இதயத்தை பாதுகாப்பது என்று திட்டமிடுகிறது 450 கிராம் சதையை பாதுகாப்பது என்று மட்டும் சிந்திக்காமல் அது சார்ந்து நிற்கிற அனைத்தையும் பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகும்.

 ஒரு நபித்தோழர் நபியிடம் கேட்டார்  அல்லாஹ்  எங்கு இருக்கிறான் ?  

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் மனிதர்களின் இதயத்தில் இருக்கிறான் என பதிலளித்தார்கள்.

 நம்முடைய இதயம் அல்லாஹ் குடியிருக்கிற வீடு அந்த சிந்தனையோடு நம்முடைய இதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது ஞானமிக்க வாழ்க்கையின் அஸ்திவாரமாகும்.

 நாம் ஞானம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசை பட்டால் இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்வதற்கு இதயங்களை புரட்டுகிற இறைவனின் மீது சத்தியமாக என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் என்று ஹதீஸ்களில் வருகிறது. இதயங்களைப் திருப்புகிறவனே என் இதயத்தை தீனில் நிலைப்படுத்து என  அதிகமாக பிரார்த்திப்பார்கள்.  அல்லாஹ்வின் தூதரே நீங்கள்  ஏன் இவ்வாறு அதிகம் பிரார்த்திக்க வேண்டும் ? என தோழர் ஒருவர் கேட்ட போது , மனித இதயம் அல்லாஹ்வுடைய இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கிற ஒரு சருகு போல இருக்கிறது

அந்தச் சருகை எந்த நிமிஷத்திலும் இப்படியும் அப்படியும் திருப்புகிற ஆற்றல் அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

எகிப்திலே ஒரு பெரிய அறிஞர் இருந்தார். ஒரு நாள்  பள்ளிவாசலில் இருந்து இறங்கி வருகிற போது வழியில் ஒரு பெண் அவரை கடந்து சென்றாள் . அந்தப் பெண்ணின் அழகு அந்த கணமே அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரை தூண்டியது. அந்த பெண்ணுக்கு பின்னேயே சென்றார் . அவளுடைய வீட்டிற்குள் நுழைந்தார். அவளது பெற்றோர்களிடத்தில் உங்களுடைய மகளை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டார். “நாங்கள் எகிப்தில் வாழுகிற கிறிஸ்துவர்கள் என அவர்கள் கூறினார்கள்.  அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி பேரதிர்ச்சியாக மாறியது. அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்காக அவர் கிறிஸ்தவராக மாறினார்.   எகிப்து தேசமே   அதிர்ச்சியில் உறைந்து போனது.

 இது எங்கும் யாருக்கும் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவேதான் நபி (ஸல்) அவர்கள் இதயங்களைப் புரட்டக்கூடியவனே எங்களுடைய இதயத்தை தீனில்  நிலைத்திருக்கச் செய்வாயாக என பிராத்தித்தார்கள்.

எனவேதான் நமது இதயத்தின் துடிப்பை மட்டுமல்ல இதயத்தின் ஆத்மார்த்த சலனம் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் நாம் அடிக்கடி பரீசிலித்துக் கொள்ளவும் பக்குவப்படுத்திக் கொள்ளவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  

 இதயம் குறித்து சில கோட்பாடுகளை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளவேண்டும்

இந்த இதயம் காசு பணத்தை மட்டுமே எண்ணுகிற இயந்திரம் அல்ல
இதயம் வீடு வாசல்களை பெருக்கிக் கொள்கிற கணக்கல்ல  
இந்த இதயம் பிள்ளை குட்டிகள் விஷயத்தில் மட்டுமே ஆவல் கொண்டு கிடக்கின்ற ஒன்றல்ல

இது அல்லாஹ் குடியிருக்கிற வீடு என்று என்பதை மனம் நினைக்கவேண்டும்

 அல்லாஹ் அந்த பாக்கியத்தை நமக்கு தருவானாக 

நபி இபுறாஹீம் அலை  அவருகளுடைய இதயத்தில் அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனைத் தவிர யாரும்  அவர்களுடைய இதயத்தில் இடம்பெறவில்லை . மகன் மீதான் பாசம் கூட அல்லாஹ்விற்கு அப்புறம் தான் என்பதை குர்பானியின் மூலம் நிரூபித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு தப்பிச் சென்ற ஹிஜ்ரத்தின் போது சவ்ர் குகையில் மூன்று தங்கியிருந்தார்கள். பெருமானாரின் தலைக்கு  நூறு ஒட்டகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிரிகள் அந்த குகையின் வாசலுக்கும் வந்து சேர்ந்தார்கள். பெருமானாருடன் இருந்த அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் பார்வையாலேயேநம்மை அவர்கள் பார்த்து விட்டால் என்ன செய்வது ? என்று கேட்டார்கள்.  யாராக இருந்தாலும் எதிரிகளுடைய கண்ணில் பட்டால் என்ன ஆகும் என்று பயப்படுகிற  இடம் அது. அந்த இடத்தில் முஹம்மது ஸல் அவர்கள் சொன்னார்கள் அபூபக்கரே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?  நாம் ரெண்டு பேர் மட்டுமா இருக்கிறோம்?  அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் அல்லவா என்றார்கள்.

 அல்லாஹ்வை உள்ளத்தில் வைத்திருந்த ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சிறப்பான வாழ்கை நமக்கு காட்டுகீறார்கள்.

 இப்ராஹீம் (அலை) தன் மனைவியை ஹாஜராவையும்  மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு ஒரு பையில் பேரீச்சம்பழங்களையும் ஒரு பையில் தண்ணீரையும் கொடுத்து விட்டு திரும்பு போகிறபோது ஹாஜிரா ( அலை) அவர்கள் இபுறாகீம் நபியின் குதிரையை வழி மறித்துதனியாக வனாந்தரத்திலே விட்டுவிட்டு போகிறீர்களா ?  என்று கேட்டார்கள்.  

இரண்டு தடவை கேட்டார்கள் இரண்டு தடவையும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பதில் சொல்லவில்லை மூன்றாவது தடவையாக ஹாஜரா அம்மையார்  அவர்கள் இது அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையா என்று கேட்க இபுறாகீம் அலை அவர்கள் தலையை மட்டும் ஆசைத்து ஆம் என்பதாக சைகை செய்தார்கள்.

        قالت يا ابراهيم أين تذهب وتتركنا بهذا الوادي الذي ليس فيه إنس ولا شيء فقالت له ذلك مرارا وجعل لا يلتفت إليها فقالت له آلله الذي أمرك بهذا قال نعم قالت إذن لا يضيعنا                                                                 

 அன்னை ஹாஜரா அம்மையார் குதிரையை வழிமறித்துக் கொண்டிருந்த  தன் கையை கீழே இறக்கிவிட்டு அப்படியானால்  அல்லாஹ் எங்களை வீணடித்து விட மாட்டான் என்றார்கள்

 எந்த இதயத்தில் அல்லாஹ் குடிகொண்டிருக்கிறானோ அங்கே  வாழ்க்கையில் நெருக்கடி இருக்காது.  அங்கே பரக்கத் நிறைந்திருக்கும். எந்தச் சூழலிலும் பாதுகாப்பு கிடைக்கும் எங்கும் நாம் உயர்ந்தவர்களாக இருப்போம்

 திருக்குர்ஆன் சொல்கிறது

 وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ                                                 

 நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்

 நம்முடைய  இதயத்தில் அல்லாஹ் இருப்பான் என்றால் எல்லா இடத்திலும் நாமே உயர்ந்தவர்கள். அல்லாஹ்  நமக்கு சிரமமோ பின்னடைவோ  ஏற்பட அனுமதிக்க மாட்டான்

 இதயத்தில் அல்லாஹ் குடியிருக்க வேண்டும் எனில் அதனுள்ளிருக்கிற சைத்தானை வெளியேற்ற வேண்டும். சைத்தானை அனுமதிக்க கூடாது.

 இதயத்திற்குள் சைத்தான் நுழைவதற்கு பல வழிகள் உண்டு. அவன் அல்லாஹ்வின் கோட்டையை ஒட்டையிட பல உத்திகளை கையாள்கிறான்.  ஞானம் மிக்க வாழ்கைகு ஆசைப்படுவோர் அந்த சாத்தானிய ஒட்டகைகளை கவனமாக அடைத்தாக வேண்டும்.

 சைத்தான் நமது கடும் எதிரி அவன் . நாம் அசந்திருக்கும் நேரத்திற்காக காத்திருக்கிறான்.  

திருக்குர்ஆன் பல இடங்களில் நமக்கு எச்சரிக்கை செய்கிறது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ   لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

 குர்ஆனில் ஏழு இடங்களில் நபி ஆதமுக்கும் இப்லீசுக்கும் இடையில் இருந்த பகை  நிகழ்வை பற்றி அல்லாஹ் கூறுகிறான். தகவல் சொல்வதாக இருந்தால் ஒரு தடவை சொன்னால் போதுமானது ஆனால் 7 இடங்களில் ஒரே செய்தியை அல்லாஹ் திரும்ப திரும்ப கூறுகிறான் என்றால் சைத்தானுடைய விரோதத்தை நாம் எல்லா நிலையிலும்  ஞாபகத்தில் வைக்க வேண்டும் என்பதற்காகவே !

 இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மனித மனதிற்குள் சைத்தான் ஓட்டயிடுகிற அம்சங்களை ஏராளமாக பட்டில்யலிட்டிருக்கிறார்கள்.

 அவற்றில் சில மிக முக்கியமான கவனிக்க வேண்டியவை

காமம்

சைத்தான் மனித இதயத்திற்குள் நுழைகிற மில இலேசான வழி இது.

நாம் நம்முடைய ஆசைகளை யை  மார்க்கம் சொன்ன ஹலாலான வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்

காமல் குடி கொண்ட இதயம் சைத்தானுடைய கோட்டையாகிவிடும். அங்கே  அல்லாஹ்விற்கு இடமிருக்காது. அங்கே ஞானத்திற்கு வழியே இருக்காது.

 இன்று நமது கைகளில் தவழ்கிற செல்போன் நல்லதை காட்டுகிற போர்வையில் தீயதையும் இழுத்துக் கொண்டு வருகிறது. தொடர்ந்து அது தீமையின் வலையில் தள்ளிவிடுகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 நமது செல்போன் நமது ஞானத்தின் பாதையில் தடைக்கல்லாக வந்து விடக் கூடாது.

 அன்னிய ஆண்களுடன் பேசக்கூடாது என்று பெண்களுக்கு மார்க்கம் உத்தரவிட்டிருக்கிறது நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருக்கிறார்

களோ அவர்கள் அந்நிய பெண்ணோடு தனியாக இருக்க வேண்டாம்   

            لا يخلون رجل بامرأة إلا كان الشيطان ثالثهما قال النبي صلي

அதனால் பெண்கள் இது  விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அன்னிய ஆண்களின் பார்வையில் படுவதை  பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் அன்னிய பெண்கள் தங்களின் பார்வையில் நிலைத்திருப்பதை ஆண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

 வழ்யில் தட்டுப் படுகிற ஒரு பெண்னை  ஒரு தடவை பார்ப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. ஒரு தடவைக்கு இரண்டாவது தடவை பார்ப்பது மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை அதுபோலவே அந்நிய பெண்களோடு தேவைக்கு அதிகமாக பேசுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.

 எந்த இடத்தில் எந்த பேச்சு எந்த பார்வை மோசமாக இருந்தாலும் அந்த இடத்தில் நம்முடைய இதயத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடுகிறது

 இமாம் ஷாபிஈ அவர்களிடம் ஒரு சிறப்பு திறன் இருந்த்து.   ஒரு நூலை ஒரு தடவை பார்த்தால் போதும் அதை அப்படியே மணம் செய்து விடுவார்கள். ஒரு நாள் ஒரு ஹதீஸை மனனம்  செய்தார்கள். அது அவர்களின் இதயத்தில் பதிய மறுக்கிறது அவர்களுடைய உஸ்தாது வகீ ரஹ்  அவர்களிடம் சென்று :நான் எப்பொழுதும் ஒரு தடவை டித்தாலும்   எனக்கு னனம் ஆகிவிடும் ஆனால் இந்த ஹதீஸை பல தடவை பார்த்தும் என்னால் மனனம் செய்ய முடியவில்லை என்றார்கள். அதற்கு வகீஃ உன்  வாழ்க்கையில் ஏதோ ஒரு பாவம் நடந்திருக்கிறது என்றார்கள்.   இமாம் ஷாபி  அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தேன் என்று சிந்தித்தார்கள். முதல் நாள் அவர்கள் பாடத்திற்கு வரும்போது வழியில் ஒரு பெண்ணின் கீழாடை கொஞ்சம் மேலே உயர்ந்து அதன் காரணமாக அவள் அணிந்திருந்த கொலுசு அவர்களின் பார்வையில் விழுந்த்து.  அந்த ஒரு பார்வை அவர்களது மன்ன சக்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

 கோபம்

இதயத்திற்குள் சைத்தான் ஊடுறுவம் இரண்டாவது வழி இது

ஒரு நபித் தோழர் பெருமானாரிடம் வந்து  இறைத்தூதரே !எனக்கு ஒரு அறிவுரை சொல்லுங்கள் நபி ஸல் சொன்னார்கள் கோபப்படாதீர்கள் மீண்டும் கேட்டார் கோபப்படாதீர்கள்என மீண்டும் மீண்டு கூறினார்கள்.

عن أبي هريرة رضي الله عنه: أن رجلًا قال للنبي صلى الله عليه وسلم: أوصني، قال: ((لا تغضب))، فردد مرارًا، قال: ((لا تغضب))؛ رواه البخاري 

கோபத்தினால் மனிதன் எந்த நியாயத்தையும் ஏற்க மறுத்து விடுவான் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டான் நபி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்வை பார்ப்பதற்கு சினாய் மலைக்கு சென்றார்கள் போகும்போது இடையில் சைத்தான் அவர்களை சந்தித்தான், அவன் நபி மூசா இடத்தில் அல்லாஹ் உங்களை பெரிய அந்தஸ்திற்கு உயர்த்துகிறான். நான் ஒரு பாவம் செய்து விட்டேன் அந்தப் பாவத்திற்கு பரிகாரம் வேண்டும் என நான் நினைக்கிறேன் என்னை அல்லாஹ் சபிக்கப்பட்டவன் ஆக ஆக்கிவிட்டான் நீங்க போற இடத்தில் என்னையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று  சொல்லி அனுப்பினான்

மூஸா (அலை) அல்லாஹ்விடம் பேசிவிட்டு திரும்பினார்கள். சைத்தான் சொன்னதை மறந்து விட்டார்கள்   அதை சைத்தான் மூசாவுக்கு  ஞாபகப்படுத்தினான்.  மூசா (அலை) அல்லாஹ்விடத்தில் திரும்பி வந்துஉன்னுடைய அடியான் இப்லீஸ் அவனை மன்னிக்க வேண்டும் என்று கேட்கிறான் அவனை மன்னிப்பாயாக! என்றார்கள்.  அல்லாஹ் சொன்னான் என்னுடைய மன்னிப்பு ரொம்ப கஷ்டமான விஷயம் அல்ல மனிதர்கள்தான் மன்னிப்பதற்கு யோசிப்பார்கள் நான் யோசிக்க மாட்டேன் மன்னிப்புக் கேட்டால் மட்டும்  போதும் என்ற கூறிய இறைவன் இபுலீஸ் மன்னிப்பை பெறுவதற்கான வழியை அல்லாஹ் சொன்னான்
ஆதம் நபி உயிரோடு இருக்கிற போது அவருக்கு ஸஜ்தா  செய்ய சொன்னேன்  அவன் கேட்கவில்லை இப்போது ஆதமுடைய கப்ருக்கு ஸஜ்தா செய்யச் சொல்லுங்கள் நான் அவனை மன்னித்து விடுகிறேன் 

இப்லீசிடம் திரும்பிய மூஸா அலைஉனக்கு  மன்னிப்புக் கிடைத்துவிட்டது என்றார்கள் . அது எப்படி என அவன் ஆச்சரியப் பட்டான், அது இலேசானது தான்!  ஆதமுடைய கப்ருக்கு ஸஜ்தா செய்து விடு!  என்றார். இதைக் கேட்டதும் சைத்தான் கோபப்பட்டான். ஆதம் உயிரோடு இருக்கிற போதே  நான் ஸஜ்தாச் செய்யவில்லை அவருடைய கப்ருக்கு ஸஜ்தாச் செய்வேனா ? என்றான் ஒரு பெரும் பாக்கியத்தை இழந்தான்.

 கோபம் தவிர்க்கப் பட வேண்டும் என்கிற போது கவனித்தில் வைக்க வேண்டிய ஒரு செய்தியிருக்கிறது. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப் படனும்


அல்லாஹ்வுக்கு எதிரான காரியங்கள் பேசப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் கோபப்படுவார்கள் அதன் அடையாளம் அவர்களுடைய முகத்தில் தெயும்.

நம்முடைய வீட்டில் மனைவி குழந்தைகள் தீனுக்கு எதிரான காரியம் செய்கிற போது நாம கோபப்படலாம். கோபப் பட வேண்டும்

கௌரவத்திற்காக படுகிற சைத்தானுடைய ஒரு பெரிய  வாசல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது

பொறாமை

சைத்தான் இதயங்களுக்குள் ஊடுறுவும் அடுத்த வழி பொறாமை.

பொறாமை நாம் செய்கிற நன்மைகளை அழித்துவிடும்

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் நெருப்பு எப்படி விறகை சாப்பிட்டு விடுகிறதோ அதுபோல பொறாமை நம்முடைய அமல்களை சாப்பிட்டு விடும்

நூஹ் நபி அவர்கள் தன்னுடைய கப்பலில் மூஃமின்களை மட்டும் ஏற்றிக் கொண்டார்கள் 

வர வேண்டிய நபர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா என்று அவர்கள் சோதித்துக் கொண்டிருந்த  போது ஒரு வயது முதிர்ந்த கிழவனை கண்டார்கள்.  அவர் புதியதாக தெரியவே நீ யார் என்று கேட்டார்கள் அவன் சொன்னான் நீங்கள்  யாரை எல்லாம் இந்த கப்பலில் ஏற்றி இருக்கிறாயோ அவர்களெல்லாம் உனக்கு உடலில் மட்டுமே கட்டுப்படுவார்கள் ஆனால் அவர்களுடைய இதயத்தை என் பக்கம் திருப்பி விடுவேன் என்று சொன்னான். நூஹ் நபி அவர்களுக்கு ஆள் யார் என்று புரிந்து விட்டது. இது மாதிரியான எந்த சந்தர்ப்பத்திலும் ஏதாவது தத்துவங்களை தப்பித்துக் கொள்வது சைத்தானுடைய வழக்கம் அன்று நூஹ் நபிக்கு சைத்தான் சொன்னான்.    

எந்த மனிதருடைய உள்ளத்திலும் நான் ஊடுருவுவதற்கான வழி  பொறாமை என்றான் 

பேராசை
இது சைத்தானின் அடுத்த வாசல் .

வாழ்க்கையில ஆசை இருக்கலாம்.  வீடு கட்டனும்.  நல்ல வாகனம் வேண்டும் நல்ல பெண்ணை. திருமணம் முடிக்க வேண்டும் நல்ல வியாபாரம் செய்ய வேண்டும் சமுதாயத்தில் ஒரு மதிப்பு வர வேண்டும் என்று நிறைய ஆசைப்படலாம் அந்த ஆசை நல்ல முறையில் இருக்க வேண்டும். என்னை நம்பி நாளு குடும்பங்கள் இருக்கிறது நாஙன்கு  பேர் வேலை செய்கிறார்கள் அந்த குடும்பத்திற்கு தேவையானதாய்  நான் செய்ய வேண்டும் என்று இருக்கணும் இந்த ஆசை நமக்கு இருந்தால் அல்லாஹ் தெளிவான ஒரு வாழ்க்கையை  நமக்குத் தருவான் 
ஆசை எப்போது பேராசையாகிறது தெரியுமா ?  எனக்கு அவனை விட அதிகமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது பேராசை தொடங்குகிறது.

 சைத்தான் கூறூகிறான்ஒரு நபருடைய வீட்டுக்குள்   நான் நுழைவதற்கு எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. பொறாமையும்  பேராசையும் இருந்தால் போதும் பொறாமை எவ்வளவு கெட்டது என்றால் அதற்கு நானே உதாரணம் ஆதமை பார்த்து நான் பொறாமைப்பட்டேன் அதனால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

பேராசை எவ்வளவு கெட்டது என்றால் ஆதமிடம் நான் பேராசையை தூண்டித்தான் விலக்க பட்ட கனியை உண்ண வைத்தேன்.

 அளவுகடந்த சாப்பாடு

சைத்தானுக்கு இடமளிக்கும் அடுத்த வாசல் கட்டுப்பாடற்ற உணவுகளாகும்.

 முஹம்மது நபி ஸல் அவர்கள் நம்முடைய உணவிற்குக் கூட வழிகாட்டினார்கள் உங்களுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவிற்கும். மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருக்கும்  ஒரு பகுதியை உங்களுக்காக விட்டு வையுங்கள் என்றார்கள்

 நபி ஸல் அவர்கள் ஒரு ஞானி.

அவர்கள் உம்மத்திற்கு கற்றுத்தந்த ஞானத்தில் இதுவும் ஒன்று.

 இந்த அறிவுரையில் மூன்றில் ஒரு பங்கை  காலியாக விடுங்கள் என்று சொல்லவில்லை உங்களுக்காக விட்டு வையுங்கள் என்று சொன்னார் 

 அதிகமாக சாப்பிடுவது ஆசையை தூண்டும் காமத்தை தூண்டும் எனவேதான் சாப்பிடுகிறபோது அளவோடு சாப்பிட வேண்டும்

 சாப்பிடுகிற பொருளிலும் தரம் வேண்டும். நம்முடைய உணவு நமக்கு ஹலாலானதாக இருக்கவேண்டும்

ஹலாலான சாப்பாடும் ஹலாலான  சம்பாத்தியமும் தான்  நல் அமல் செய்வதற்கு தூண்டும் . அதே போல ஹலாலான உணவருந்திவிட்டு துஆச் செய்தால் அங்கீகரிக்கப்படும்  ஹராமை  சாப்பிட்டுவிட்டு துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளப்படாது

கவனத்தில் வையுங்கள் !ஞானமிக்க வாழ்க்கையில் ஹலாலான அளவான உணவும் அடக்கம்

அவசர குணம்

இதயத்திற்குள் சைத்தான் நுழையும் அடுத்த வழி அவசரப்படுவது.

 நிதானத்திற்கு அவசரத்துக்கும் இடையே ஒரு  சின்ன வித்தியாசம் தான் இருக்கிறது.

 எதையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது நிதானம் அதுக்கு முன்னாடியே செய்ய நினைப்பது.

 அவசரப்படுவது சைத்தானின் குணம் நிதானமாக இருப்பது ஈமானின் அடையாளம் 

பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருகிறபோது இமாம் ருகூவிற்கு செல்லுகிறார் என்பதற்காக நீங்கள் ஓட வேண்டாம் என்றார்கள் நிதானமாக கம்பீரமாக  செல்லுங்கள் என்றார்கள்.

 இயக்க வெறி

நாம் சேவையாற்றுவதற்காக ஒரு அமைப்அல்லது இயக்கத்தில் சேரலாம் . ஆனால் நான் மட்டுமே செய்கிறேன் என்ற நினைப்பு வரக்கூடாது இதுதான் இயக்கம் வெறி என்பது.

 இந்த வெறி கொண்டவர்கள் சமுதாயத்தில் என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

அலி ரவி அவர்கள் இரண்டாவதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்

அந்த அலி ரலி அவர்களைப் பார்த்து ஒரு குழு சொன்னது. நீங்கள் காபீர் !!

 யாரைப் பார்த்து?  அலி ரலி அவர்களை பார்த்து! எந்த தோழரை  ஹிஜ்ரத்தின் போது தன் படுக்கையில் படுக்க வைத்தார்களோ  எந்த தோழருக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார்களோ எந்த தோழரை  குறித்து ஏராளமான நல்ல வார்த்தைகளை சொன்னார்களோ அந்த அலி ரலி அவர்களைப் பார்த்து முஸ்லிம்களில் ஒரு குழு நீங்கள் முஃமின்கள்  அல்ல! நீ குர்ஆனின் வழிப்படி நடக்கவில்லை! என்று சொன்னார்கள்  அப்படிச் சொன்னதற்குக் இயக்க வெறி தான் காரணமாக இருந்தது

 எந்த இடத்திலும் நாம ஹனபி ஷாஃபி எதுவாக இருந்தாலும் நமக்குள் என்னுடைய மத்கப் மட்டும் தான் உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கக் கூடாது 

வாதம் செய்வது

இதயத்தில் சைத்தான் ஊடுருவுகிற அடுத்த  வழி விதண்டாவாதம் செய்வது

 இந்த தீனின்  சில விஷயங்களை புரியாத காரணத்தால் 25 ஆண்டு காலமாக தற்க வாதத்தில் இளைஞர்கள் தங்களுடைய நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்  எதற்கெடுத்தாலும் வாதம் எதையும் நிரூபித்து விடலாம் என்கிற எண்ணம் இருக்கிறதே  அது சைத்தானுடைய சிந்தனையாகும்.

  முகமது நபி ஸல் அவர்கள் வாதத்தால் இந்த தீனை வளர்க்க வேண்டும் என்கிற ஏற்பாட்டை எப்பொழுதும் செய்ததில்லை சில  கட்டங்களில் நபிஸல் அவர்கள் வாதம் செய்திருக்கிறார்கள் ஆனாலும் கூட அதில் ஒரு பிடிவாதம் இருந்ததில்லை

 எங்கு வாதம் வலுக்கிறதோ அங்கே சைத்தான் ஊடுருவி விடுவான் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாதம் செய்யலாம்

 கத்ரியா என்ற கூட்டத்தினர் ஒவ்வொரு பாங்கிளும் அஸ்ஸலாத்து கைரும்மினன் நவ்ம் சொல்லவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு  அவர்கள் சொன்ன காரணம் எல்லா நேரங்களிலும் மக்கள்  தூங்குவதற்கு  வாய்ப்பிருக்கிறது 

 ஒரு இடத்தில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த்து . பள்ளிவாசலில் மோதினார் பாங்கு சொல்ல ஆரம்பித்தார் உடனே ஒருவர் பேச்சை நிறுத்தி விட்டார் இன்னொருவர் பேச்சை நிறுத்தவில்லை பேசிக்கொண்டே இருந்தார். பாங்கு சொல்லும் போது பேசக்கூடாது பேச்சை நிறுத்து என்றார் மற்றவர்.  பேசுபவன் சொன்னான் பாங்கு சொன்ன பேச்சை நிறுத்த வேண்டும் என்பது நபியின் காலத்தில் தான் நம்முடைய காலத்தில் இல்லை ஏனென்றால் நபியின் காலத்தில் தான் சத்தமிட்டுச் மைக் வசதி இல்லை. பாங்கு சொல்லும் போது பேசினால் அடுத்தவருக்கு கேட்காது. இப்போது மைக் வசதி வந்து விட்டது. எனவே இப்போது பேசினால் தப்பில்லை என்று சொன்னானா,

 வேடிக்கை வாதம் பண்ணுகிறவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாதம் செய்யலாம் மார்க்கம் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல

 தேவையில்லாத விவகாரங்களில் தலையிடுவது

பொதுமக்கள் எது விசயத்தில் தங்களுக்கு போதிய விவரம் இல்லையோ  விஷயத்தில் அவர்கள் தலையிடச் செய்வதன் மூலமாகவும் சைத்தான்  இதயத்திற்குள் ஊடுறுவு கிறான்.

  அல்லாஹ் குர்ஆனில் சொல்லுகிறான் எதைப்பற்றி உங்களுக்கு ஞாம் இல்லையோ அதைப்பற்றி பேசாதீர்கள்

கேட்டதையெல்லாம் பேசுபவன் பொய்யன் என  நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

குறிப்பாக மார்க்க விஷயங்களில் நமக்கு தெரியாத செய்திகளை பேசக்கூடாது

 மார்க்க சட்டங்களில் வணக்க வழிபாடுகளை பற்றி நம் விருப்பத்திற்கு பேசுகிற பழக்கம் நம்மில் சிலரிட்த்தில் இருக்கிறது. கவனிக்கவும் . அதுவும் சைத்தானின் ஊடுறுவல்களில் ஒரு வழிதான்.

பெண்கள் தோன்றியது போல சட்டத்தை முடிவு செய்து கொடுக்கிறார்கள்  இத்தா இருப்பது, உடை உடுத்துவது போன்ற விவகாரங்களில் தாமாக ஒரு ஒரு முடிவை எடுத்துக் கொள்கிறார்கள். அனால்  மார்க்கம் சொல்லியிருக்கிற சட்டம் வேறு விதமாக இருக்கிறது.

கெட்ட எண்ணம்

மனிதர்களுடைய இதயத்திற்குள் சைத்தான் நுழைகிற வழிகளில் இது முக்கியமானது. தீய எண்ணம் கொள்வதும் தவறான எண்ணத்தை பரப்புவதும் இந்த வகையில் அடங்கும்.

 ஒருவனைப் பற்றி தவறாக எதையும் பரப்பக்கூடாது.  ஒருவருடைய வளர்ச்சியை பார்த்து நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் என்று மார்க்கம். சொல்லுகிறது

மூஃ மின்களை ப்பற்றி ஒருவன் தவறாக வந்து சொன்னாள் அவனைப் பார்த்து இது அவதூறு இது இட்டுக்கட்டப்பட்டது என்று நாம் சொல்ல வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது

 அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் சில எண்ணங்களே பாவகரமானவை

 அபலைப்பெண் விஷயத்தில் தவறா குற்றம் சாட்டி விட்டால் சொன்னவர்களுக்கு என்பது கசையடி தர வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. ஆண்கள் விஷயத்திலும் அப்படித்தான்

ஒரு தடவை நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் இந்த வழியாக ஒருவர் வருவார் அவர் சொர்க்கவாசி என்றார் அப்பொழுது ச்ஃதிப்னு அபி வக்காஸ்  ரலி அந்த வழியாக வந்தார். வருகிறபோது துணியை கொஞ்சம் தூக்கி பிடித்திருந்தார் இடது கையில் செருப்பை பிடித்திருந்தார் அவர் சலாம் சொல்லி விட்டு போய்விட்டார் மறுநாள் நபிஸல் அவர்கள் அதேபோல இப்பொழுது இந்த வழியாக ஒருவர் வருவார் அவர் சொர்க்கவாசி  என்றார்கள். சஃது பின் அபி வக்காஸ் அவர் தான் வந்தார்.  மூன்றாவது நாளும் இது போலவே நடந்தது அனஸ் ரலி அவர்கள்  சொன்னார்கள். எங்களில் ஒருவரான  அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ரலி இவர் எப்படி சொர்க்கவாசியாக ஆனார் ?  என்ன அமல் செய்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும் நினைத்தார்

சஃதுடன் போய் நான் உங்களுடன் இன்று இரவு தங்கி கொள்ளுகிறேன் என்று கேட்டார். அதற்கவர்  அனுமதி கொடுத்தார். காலையில் நேரமாக எழுந்து சஃது ரலி பஜரே தொழுகைக்கு போய்விட்டார்கள் வித்தியாசமாக எந்த அமலும் செய்யவில்லை ஒரு நாள் இரண்டு நாள் ஆனது எந்த அமலையும் சஃது அதிகமாக செய்யவில்லை மூன்றாவது நாள் அவர் எந்த அமலும் செய்யாமல் எழுந்து போகிறபோது அப்துல்லாஹ் ரலி அவர்கள் மூன்று நாள் உங்களுடன் நான் தங்கினேன் ஒரு காரணமாகத்தான் நான் தங்கினேன் மூன்று நாளாக நபி (ஸல்)  உங்களை சொர்க்கவாசி என்று சொன்னார்கள். ஆனால் நீங்கள் சொர்க்கவாசிக்கு உண்டான எந்த அமலும் செய்யவில்லையே என்றார். இதைக் கேட்டு மகிழ்சியடைந்த சஃது சொன்னார் காரணம் எனக்கு தெரியல்லை .அவர் ஏமாற்றத்தோடு திரும்பத் தொடங்கிய போது அவரை அழைத்து சஃதுரலி சொன்னார்கள் நான் விஷேஷமாக எதையும் செய்யவில்லை ஆனால் எந்த மனிதரை பற்றியும் தவறாக எண்ணியது இல்லை ...

 இதயம் என்பது அல்லாஹ் குடியிருக்கிற வீடு அதில்  சைத்தானுக்கு இடம் தந்து விடக் கூடாது

 

 

5 comments:

  1. மாஷாஅல்லாஹ்,அருமையான தகவல்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ். அற்புதமான ஆக்கம்.
    இதயம் இடது பக்கத்தில் தானே இருக்கிறது????

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ். மிக சிறந்த ஆக்கம்.

    ReplyDelete
  4. இதயம் என்பது சதை மட்டும் அல்ல,,
    அறிவு, சிந்தனை,மனது, இவற்றின் பிறப்பிடம் என்ற கஸ்ஸாலி இமாமின் கருத்து,மிக அருமை!.

    ReplyDelete
  5. அருமையான பதிவு பயனுள்ள தகவல் தொடரட்டும் தாங்கள் சிறப்பான பணி வாழ்த்துக்கள்

    ReplyDelete