வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 31, 2023

குடும்ப தகராறுகள்

 அல்லாஹ் நமக்கு வழங்கிய நிஃமத்துக்களில் ஒரு பெரும் நிஃமத் – குடும்ப அமைப்பு.

குடும்பம்னு ஒன்னு இல்லேன்னா நம்ம வாழ்கை எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தா அதன் அருமை புரியும்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் இந்த உலகிலிருந்து முதலில் தொடர்பாவது உறவுதான். அத்தா அண்ணன் மாமா சின்னம்மா என்ற உறவுகள் உடனடியாக வந்து ஒட்டிக் கொள்கின்றன. அந்த உறவுகளே இறுதியாக ஒரு மனிதரை மண்ணரைக்கு கொண்டு செல்வது வரை உடன் வருகின்றன.

இதன் அருமையை புரிந்து கொள்ளாமல் தற்போது முஸ்லிம் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து வருகின்றன,

காசு பணத்தில் المال ,

மதிக்கப்படுவதில் العزة

அதிகாரம் யாருடையது என்பதில் الحكم  والسيادة , ,

ஏற்படக் கூடிய சர்ச்சைகள் குடும்ப உறவில் இணக்கமற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. சில  இடங்களில் அதுவே மிகப் பெரிய பகையாகவும் ஆகிவிடுகிறது.

தமிழத்தின் இரண்டு பெரும் பணக்கார சகோதரர்கள் ஏராளமான நற்காரியங்களை செய்து வருகிறார்கள். சம்பாதிப்பதில் குறையில்லை. சமூகத்திலும் எதிர்ப்பில்லை.  ஆனால் சொந்த குடும்பத்திற்குள் நிலவும் பகையால் மிகுந்த மன உளைச்சளுக்குள்ளாகிறார்கள். காசு, அந்தஸ்து, நற்செயல்கள் அனைத்தும் இருந்தும், நிம்மதிக்கு தடையாக குடும்ப பகை இருக்கிறது.

தமிழகத்தின் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊரில் பாட்டனார் ஒரு கல்லூரியை நிறுவினார். நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த கல்லூரியை நிர்வகிப்பதில் சகோதரர்கள் சண்டையிட்டு கோர்ட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடம் பத்து வருடமாக அல்ல. ஒரு தலைமுறையாக கோர்ட்டில் வழக்கு நீண்டு கொண்டிருக்கிறது. கல்லூரியை கோர்ட் நிர்ணயித்திருக்கிற யாரோ நிர்வாகம் செய்கிறார்கள். சொந்தக்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை இதனால் அது சம்ப்ந்தப்பட்ட குடும்பங்களின் மகிழ்ச்சி பெரிது பாதிக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் எல்லா வகையான நிம்மதிக்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிற போது முஸ்லிம் குடும்பங்களில் சில இத்தகைய போட்டிகளில் பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் காசு பணம் வீணாகிறது என்பது பெரிதல்ல – குடும்பங்களில் கிடைக்க வேண்டிய அமைதி பறி போகிறது. அடுத்த தலைமுறை இணக்கமான உறவுகளற்றதாகி வருகிறது என்பது தான் பெரிய சோகம்..

ஓரிரு உதாரணங்களைச் சொல்லியிருக்கிறேன். விரிவாக  பேசப் புகுந்தால் இந்த உதாரணங்களே பெரிய உரையாகி விடும்.

இன்றைய பல  குடும்பங்களிலும் நிம்மதி குலைந்து பகையும் சண்டையும்  பெருகி வருகிறது. மகிழ்ச்சி பெருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அழுகையும் சோகமும் பீரிடுகிறது.

அல்லாஹ் நம் அனைவரது குடும்பத்தை பிரச்சனைகள் சண்டைகள் பகை வெறுப்பிலிருந்து பாதுகாப்பானாக!

குடும்பங்களுக்குள் பகை எப்படி உருவாகிறது. அதை தவிர்ப்பது எப்படி என்பதை சிநிக்க ஆரம்பிப்பதற்கு முன் அடிப்படையில் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம்

அல்லாஹ் ஒவ்வொரு மனிதருக்கும் தனி சுதந்திரதை  வழங்கியுள்ளான். தனித்தனியான இயல்புகளையும் அமைத்துள்ளான்.

சிலருக்கு கார்ட்டூன்கள் பிடிக்கும் சிலருக்கு ரெஸ்லின் பிடிக்கும் சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும்.

ஒரே தாயின் கர்ப்பத்திலிருந்து பிறந்த பிள்ளைகள் ஒரே இயல்பில் இல்லை. இருக்க முடியாது.

இந்த எதார்தத்தை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்திருப்பதில்லை.

சுய விருப்பு, சுய சுதந்திரம் , சுய மரியாதை   என்பது வெவ்வேறு வகையாக இருக்கிறது. அதனாலேயே குடும்பத்தில் தகறாறுகள் எழுகின்றன.  

இதனாலேயே ஒருவர் மற்றவருக்கு எதிரியாக இருக்கிறார்கள். இருப்பார்கள்.

இந்த எதிர்ப்புணர்வை குறைத்து நட்புணர்வையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதில் – தீன் -  இஸ்லாமிய மார்க்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை முறையாக உணர்ந்ந்து அதன்படி வாழ நினைத்தால் சங்கடங்கள் தீரும்  சந்தோஷம் வளரும்.     

மனித உடலில் ஒரு உறுப்பு கூட மற்றதற்கு மிக உறுதுணையாக இருக்கிறது. கண்களில் தூசு விழும் எனில் மிக வேகமாக கை உதவிக்கு வருகிறது. தலையில் அடி விழுந்தால் கண் அழுகிறது. கால் மருத்துவரை தேடி ஓடுகிறது.

இந்த ஒருங்கிணைப்பிற்கான ஒரே காரணம் உயிர் தான்.   

உயிர் விடை பெற்று விட்டால் ஒருவரது நாக்கை வெட்டினாலும் மற்ற உடலின் அங்கம் எதுவும் உதவிக்கு வரப்போவதில்லை.

உடல் உறுப்புக்களை உயிர் ஒருங்கிணப்பது போல குடும்ப உறவுகளை ஒன்று படுத்தும் உயிர் தீன் என்பதை அழுத்தமாக முஸ்லிம்களான நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தீன் வழி நடப்பதன் மூலம் இதயங்கள் இணையும் என்பதை திருக்குர் மிகச் சிறப்பாக  புரிய வைக்கிறது.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا (96)

இது விசயத்தில்  ஒரு மோடிவஸனல்  ஸ்பீக்கர் how to manage your relationship என்று வரிசையாக பட்டியலிடுவது போல இஸ்லாம் பல காரியங்களை பேசுவதில்லை. மிக சாதாரணமாக அடிப்படையாக ஓரிரு செய்திகளை சொல்லித்தருகிறது.

ஒவ்வொரு குடும்பமும் அந்த குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனி நபரும் இந்த அடிப்படைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் அடுத்த தலைமுறைக்கு இந்த கருத்துக்களை சுட்டிக் காட்டி செல்லிக் கொடுக்கவும் வேண்டும்.

குடும்ப உறவுகளுக்கிடைய பிரச்சனைகள் உருவாகாமல் இருக்க இஸ்லாம் இரண்டே வழிகாட்டுதல்களை கூறுகிறது.  

1 அல்லாஹ்வின் மீது பயம்

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சக உறுப்பினர் விசயத்தில் முதலில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் விசயத்தில் பெற்றோர்கள்.

பெற்றோர்கள் விசயத்தில் பிள்ளைகள்

சகோதர உறவுகள் விசயத்தில் மற்ற சகோதர்ரகள்

கணவன் மனைவியர் ஒருவர் மற்றவர் விசயத்தில்

எழுகிற குடும்ப பிரச்சினைகள் அனைத்திற்குமான தீர்வு இதில் இருக்கிறது.

திருக்குர் ஆனின் அந்நிஸா அத்தியாயம் குடும்ப உறவுகளையும் அவர்களது உரிமைகளையும் பற்றி பிரதானமாக பேசக் கூடியதாகும் அந்த அத்தியாயத்தின் முதல் வசனம் اتَّقُوا رَبَّكُمُ தொடங்குகிறது.

 يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 

திருக்குர் ஆனி விரிவுரையாளர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களே குடும்ப உறவுகளிடம் சரியாக நடந்து கொள்வார்கள் என்பதால் தான் இந்த அறிவுரை முதலாவதாக கூறப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகளுக்கிடையே அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள் என்ற போதனை அடிக்கடி செய்யப்படனும்.

ஆண் குழந்தைகள் பெண் பிள்ளைகளை அடிக்கிற போது. அல்லது சீண்டு கிற போது,

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேதம் பாராட்டுகிற போது.

கணவன் மனைவி ஒருவர் மற்றவரை முறைகேடாக நடத்துகிற போது

முதியவர்களில் ஒரு சிலர் மதிக்கப்படாமல் போகிற போது

அல்லாஹ்வை பயந்து கொள் என்று அறிவுறுத்தப்படனும்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் இளைய பையன், தாய் வழிப்பாட்டியை அதிகம் நேசித்தான் . தந்தை வழிப்பாட்டியை அலட்சியம் செய்தான். இதை அறிந்த மூத்த சகோதரன் இளையவரிடம் ஒரு நாள், “அல்லாஹ் எனக்கு மட்டும் உபகாரம் செய்து உனக்கு செய்யலேன்னா என்ன ஆகும்” என்று சிந்திக்குமாறு அறிவுரை கூறினார்.!

அன்றிலிருந்து இளைய மகனின் நடவடிக்கைகலில் மாற்றம் ஏற்பட்டதை நான் அறிவேன்.

அல்லாஹ்வின் மீதான் அச்சம் ஊட்டப்படுகிற இடங்களிலும் அது அறிவுறுத்தப்படுகிற இடங்களிலும் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

நம்முடைய முன்னோர்களில் ஒருவர் அவரது சகோதர்ருக்கு கடிதம் எழுதுகிற போது மற்ற விவகாரங்களை எதுவதற்கு முன் இப்படி எழுதுவார்.

أُوصِيكَ بِتَقْوَى اللَّهِ، فَإِنَّهَا أَكْرَمُ مَا أَسْرَرْتَ، وَأَزْيَنُ مَا أَظْهَرْتَ، وَأَفْضَلُ مَا ادَّخَرْتَ، أَعَانَنَا اللَّهُ وَإِيَّاكَ عَلَيْهَا، وَأَوْجَبَ لَنَا وَلَكَ ثَوَابَهَا.    

அல்லாவ பயதுக்க! நீ மறச்சு வெக்கிறவற்றில் மிக மரியாதைக்குரியது அது. நீ வெளியில காட்டுறவற்றில் மிக அழகானது அது. நீ சேமித்து வைப்பதில் மிக சிறப்பானது அது. இறையச்சுடன் வாழ அல்லாஹ் எனக்கு உனக்கும் உதவி செய்வானாக! அதற்குரிய கூலியை நம்மிருவருக்கும் தருவானாக!

குடும்பங்களுக்கிடையே செல்வம் அந்தஸ்து வசதி வாய்ப்புக்களைப் பற்றிய பெருமை தற்காலத்தில் அதிகம் பேசப்படுகிறது.

என மகனுக்கு ஏசி இல்லாம் தூக்கம் வராது. என் மகள் பிராண்டட் துணி மணிகள் தான் அணிவாள். என் பேரக்குழந்தைகளுக்கு கேஎப்ஸி தான் பிடிக்கும் என்றெல்லாம் பெருமை பேசும் வழக்கம் பெருகி இருக்கிறது.

அதில் கொஞ்சமாவது அல்லாஹ்வை பற்றி பேச்சு இருந்தாக வேண்டும். அவனைப் பற்றிய அச்சம் தரப்பட வேண்டும். மறுமை சிந்தனை கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு இறையச்சமூட்டி வளர்க்கப்படுகிற பிள்ளைகள் பின்னாலில் குடும்பத்திற்கு நன்மையாக இருப்பார்கள். அவர்கள் சிறப்பான வாழ்வையும் பெருவார்கள்.

உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் – உமய்யா சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. இன்றுவரை உலகை பெரிய அளவில் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவர்.

[صفة الصفوة لابن الجوزي   வில் ஒரு செய்தி வருகிறது.

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹி) மரணப்படுக்கையில் இருக்கிற போது அவரது மைத்துனர் மஸ்லமா அவரிடம் வந்து, உங்கள் பிள்ளைகளை இப்படி ஏதுவும் மற்ற ஏழைகளாக விட்டுச் செல்கிறீர்களே என்னைப் போன்ற குடும்பத்தவர்களை அழைத்து அவர்களை கவனித்துக் கொள்ளுமேறு கேட்கக் கூடாதா என்று கேட்டார்.

உமர் ரஹ் சொன்னா: நான் என் பிள்ளைகளை ஏழைகளாக விட்டுச் செல்வதாக கூறினாய்! நான் அவர்களுக்குரியதை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.. அவர்களுக்கு சொந்தமில்லாத எதையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை அவ்வளவு தான்.

உங்களைப் போன்ற உறவினர்களிடம் அவர்களை கவனித்துக் கொள்ள சொல்லவில்லை. வாஸ்தவம் தான். அவர்களை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். என் மகன்கள் ஒன்று அல்லாஹ்வை அஞ்சுகிறவராக இருக்க வேண்டும். அவர்களுக்கான வழியை அல்லாஹ் காட்டுவான். அவர்கள் பாவிகளாக இருந்து விட்டாலோ அந்த பாவிக்க்கு நான் வலுவூட்டக் கூடாதல்லவா ?

பிறகு அவரது 11 மகன்களை அழைத்துக் கூறினார்.

செல்வங்களே! உங்களது தந்தைக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன. ஒன்று உங்களை அரச செல்வாக்கில் பணக்காரர்களாக்கி அவர் நரகம் செல்வது. இரண்டாவது உங்களை ஏழைகளாக்கி அவர் சொர்க்கம் செல்வது, நான் சொர்க்கம் செல்ல விரும்புகிறேன். நீங்கள் செல்லுங்கள் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான் என்றார்.

 دخل مَسْلَمةُ بن عبد الملك على عمر بن عبد العزيز فقال: يا أمير المؤمنين: إنك أفقرت أفواه ولدك [وكانوا اثنا عشر ولداً] من هذا المال وتركتهم عَيْلَة [فقراء] لا شيء لهم فلو وصيت بهم إلَّي [وكان مسلمة أخاً لفاطمة بنت عبد الملك، زوجة عمر بن عبد العزيز] وإلى نُظرائي من أهل بيتك. فقال عمر بن عبد العزيز: اسندوني ثم قال: أمَّا قولك أني أفقرت أفواه ولدي من هذا المال فوالله أني ما منعتهم حقاً هو لهم ولم أعطهم ما ليس لهم وأما قولك لو أوصيت بهم فإن وصيي ووليي فيهم الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. إن بَني أحد رجلين إما رجل يتقي الله فسيجعل الله له مخرجاً وإما رجل مكبٌ على المعاصي فإني لم أكن أقويه على معاصي الله، ثم بعث إليهم وهم بضعة عشر ذكرا، فنظر إليهم، فذرفت عيناه، أي بَني: إن أباكم خُيِّرَ بين أمرين: بين أن تستغنوا ويدخل أبوكم النار أو تفتقروا ويدخل أبوكم الجنة، فكان أن تفتقروا ويدخل الجنة أحب إليه من أن تستغنوا ويدخل النار قوموا عصمكم الله

.البداية والنهاية  வில் இப்னு கஸீர் ரஹ் கூறுகிறார்.

இறையச்சத்தில் வளர்க்கப்பட்ட உமரின் பிள்ளைகள் பிற்காலத்தில் பெரும் செல்வந்தர்களாக திகழ்ந்தார்கள். ஏராளமான சொத்துக்களை விட்டுச் சென்ற அரசர் சுலைமானின் வாரிசுகள் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

 قال ابن كثير: قال بعضُ السلف: لَقَدْ رَأَيْنَا بَعْضَ أَوْلَادِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ يَحْمِلُ عَلَى ثَمَانِينَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ، وَكَانَ بَعْضُ أَوْلَادِ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ مَعَ كَثْرَةِ مَا تَرَكَ لَهُمْ مِنَ الْأَمْوَالِ يَتَعَاطَى وَيَسْأَلُ مِنْ أَوْلَادِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ

  இறையச்சம் ஊட்டி வளர்க்கப்படுகிற குடுமபங்களில்  - அல்லாஹ்வை பய்ந்துக்க என்று சொல் அதிகம் அறிவுறுத்தப்படுகிற குடும்பங்களில் உறவுகளுக்கிடையே நீதி பராமரிக்கப்படும்.

அப்போது

·         மனைவியை துன்புறுத்துகிற கணவனோ

·         பிள்ளைகளுக்கிடையே பேதம் பாராட்டுகிற பெற்றோர்களோ

·         பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகளோ

·         சகோதரர்களை அவமதிக்கிற சகோதரர்களோ

இருக்க மாட்டார்கள்.

குடும்ப உறவுகளுக்கிடைய பிரச்சனைகள் உருவாகாமல் இருக்க

2 வது வழி உறவை பேணுதல் صلة الرحم

صلة الرحم என்பதன் முதல் பொருள் நாம் உறவுகளோடுதான் பிறந்திருக்கிறோம். என்பதை அழுத்தமாக உணர்வதாகும்.

நாம் மேலே கூறிய அந்நியஸா அத்தியாயத்தின் முதல் வசனம்

الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً

கணவன், மனைவி, பிள்ளைகள் சகோதர்ர்கள் என்கிற கட்டமைப்பை அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான் என்பதை உணருமாறு உத்தரவிடுகிறது.

 நாம் தனி மரம் அல்ல. நமது விருப்பம் மட்டுமே பிரதானமல்ல. அல்லாஹ் கூறியபடி இந்த உறவுகளை நாம் பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை குடும்ப உறவுகள் அனைவருக்கும் வேண்டும்.

 திருக்குர் ஆன் பல வழிகளில் இதை நமக்கு நினைவூட்டுகிறது.

 ஒரு சிக்கல் வரும் போது சகோதரர்களே நினைவுக்கு வருவார்கள்.

மூஸா அலை அவர்கள் பல வருடங்கள் மத்யனில் தனியாக வாழ்ந்து விட்டு மனைவியோடு எகிப்துக்கு திரும்பி வருகிர வழியில் திடீரென ஒரு பெரும் நபித்துவ பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது அவருக்கு அவருடைய அண்ணன் ஹாரூன் (அலை) தான் நினைவுக்கு வந்தார்

وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي (29هَارُونَ أَخِي (30اشْدُدْ بِهِ أَزْرِي (31وَأَشْرِكْهُ فِي أَمْرِي (32كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا (33وَنَذْكُرَكَ كَثِيرًا (34

 

நாளை மறுமையில் ஒவ்வொரு விலகி ஓடுவார்கள் என்பதை குறிப்பிடும் போது அல்லாஹ் முதலில் சகோதரர்களையே குறிப்பிடுகிறான். குடும்பம் என்பது விலகி ஓட முடியாத உறவு என்பதையே உணர்த்துகிறது.   

  يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

உறவை பேணுதல் என்பதன் முதல் பொருள் உறவுகளோடு தான் நாம் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வை நினைவில் நிறுத்துவது.

இரண்டவது அந்த உறவுக்கான மரியாதையை தருவதாகும்.

மூன்றாவது உறவுகளுக்கு உதவுவது ஒத்துழைப்பது.

பெரும்பாலும் குடும்பங்களில் பிரச்சனைக்கு காரணம்

1.   உறவுகள் உரிய முறையில் மதிக்கப்படாதது

2.   அல்லது உறவுகள்  அதிகப்படியான மரியாதையை எதிர்பார்ப்பதும் ஆகும்.

இந்த இரண்டும் தவறான அனுகுமுறையாகும்.  

குடும்பத்தில் மூத்தவர்கள் வயதாகி விட்டாலும் கூட அவர்களேஎ அக்குடும்பத்தின் கேடயங்கள்!  அவர்களை முன்னிறுத்தித்தான் நல்ல காரியங்கள் செய்யப்படும்.

ஒரு பிரச்சனை எனும் போது அவர்களே முன்னிலைப் படுத்தப்படுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைவர்களைப் பற்றி சொன்ன ஹதீஸ் குடும்பத்தின் மூத்தவர்களுக்கும் பொருந்தும் அபூதாவீதில் அபூஹுரைரா ரலி அறிவிக்கும் இந்த நபி மொழி உள்ளது.

- إنَّما الإمامُ جنَّةٌ يقاتلُ بِهِ    أبو هريرة صحيح أبي داود

தலைவர் என்பவர் ஒரு கேடயம். அவரை வைத்துத்தான் பிரச்சனைகளை எதிர்கொள்ளப்படும்.

அதே போல இளையவர்களின் உணர்வுகளை மூத்தவர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். அது இளையவர்களை மதிக்கும் ஒரு விதமாகும்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மகனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு செயல்பட வேண்டும்.  பெருமானார் (ஸல்) அவர்கள் தனிச்சிறப்பு வாய்ந்த நபியாக இருந்த பொதும் கூட மற்றவர்களின் கருத்துக்களுக்கு பல இடங்களில் மதிப்பளித்துள்ளார்கள். அவரகளை பாராட்டியுள்ளார்கள்.

மதித்தல் என்பது தான் உறவை பேணுதலின் பிரதான அம்சமாகும்.  

குடும்ப உறவுகளி ஒருவரை தொடர்ந்து அலட்சியம் செய்வதோ அல்லது அவமரியாதையாக நடத்துவதோ , நமது சொந்த தேவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து விட்டு அவர்களது தேவைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதோ கட்டாயம் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது அல்ல. மார்க்க ரீதியாக மிகப்பெரியர் பாவமாகவும் அமையும்.

இரண்டு காரியங்களுக்கான பதில் உடனே கிடைத்து விடும் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள்

ஒன்று உறவை பேணுவதன்  பரக்கத்

இரண்டாவது தற்பெருமையினால் செய்யும் அநீதிக்கான தண்டனை.

ஒரு ஹதீஸில் இதை இன்னொரு வடிவத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

أبي بكر   عن رسول الله ﷺ قال: «ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه بالعقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم

 உறவை பேணுவதால் மூன்று வகையான பரக்கத்கள் கிடைக்கும் என்று ஹதீஸ்களின் அடிப்பட்டயில் அறிஞர்கள் சுட்டுகிறார்கள்.

  • 1.       நீண்ட ஆயுள்
  • 2.       விசாலமான ரிஜ்கு
  • 3.       கெட்ட மரணத்திலிருந்து பாதுகாகப்பு.

பொதுவாக நமது வாழ்க்கையில் ஏற்படும் பெரும் பிரச்சனைள் 3

  • 1.       உடல் ஆரோக்கியம்
  • 2.   பொருளாதார நெருக்கடிகள்
  • 3.   மார்க்கம் பறிபோவது

உறவுகளை பேணி வாழும் போது இந்த மூன்றிலிருந்தும் தானாக பாதுகாப்பு கிடைக்கும் என நமது மார்க்கம் அறிவுறுத்துகிறது.

இந்த அறிவுறுத்தலை நாம் நினைவில் மற்றகாமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்ச்னைகள் உருவாகாது.

இந்தை நாம் உணர்ந்தால் மட்டும் போதாது நமது பிள்ளைகளுக்கும் அறிவுறுத்தனௌம்.

உறவை பேணுவதால் இந்த உலகில் மட்டும் நன்மை இல்லை நாளை மறுமையிலும் அந்த நன்மைகள் தொடரும்.

மறுமையில் கிடைக்கும் 2 நன்மைகள்

1 கேள்வி கணக்கு இலேசாகும்.

2 சீக்கிரம் சொர்க்கம் செல்வர்  

உறவை பேணுதல் தொடர்பாக மார்க்கம் கூறிய மற்றொரு செய்தியும் மிகவும் கவனிக்கத்தக்கது. \

இதயங்களை இணைப்பதில் தீனுடைய பங்களிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிற இடம் இது.

சொந்தக்காரங்கள அரவணைக்கனும் என்பதை எல்லோரும் சொல்வார்கள். நாத்திகர்கள் கூட சொல்வார்கள்.

அதை தாண்டி, மதிக்காத சொந்தக்காரரையும் மதிக்கனும் என்று சொல்லி வழி காட்ட மார்க்கத்தால் தான் முடியும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .உறவை பேண் நினைத்தால் அந்த இரண்டு தரப்பிலும் பரஸ்பரம் இருக்கனும் என்பதல்ல. விலகிச் செல்கிற உறவுகளையும் அரவணைக்கனும் என்றார்கள்.

عن عبد الله بن عمرو أن رسول الله ﷺ قال: «ليس الواصل بالمكافئ، ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها.

குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் மிக முக்கியமான இரண்டு காரணிகள் பொறாமை - தவறான புரிதல்கள்

இந்த இரண்டு தீய சைத்தான்களையும் “இவர் நம் இரத்தமல்லவா” என்ற ஒற்றை வார்த்தையில் தூக்கி எறிந்து விட வேண்டும்.

எந்த ஒரு சர்ச்சையின் போதும்இது நம்ம மனைவி, இது நம்ம மகன், இந்து நம்ம அத்தா,இது நம்ம தம்பி என்ற எண்ணம் அழுத்தமடையுமெனில் சர்ச்சை பனிபோல காணாமல் போய்விடும். போய் விட வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது

அது வே மார்க்கம் கற்பிக்கிற உன்னதமான வழியாகும்.

அந்நிஸா அத்தியாய்யத்தின் நிறைவுப் பகுதி இதை உணர்த்துகிறது.

ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ

நீங்கள் என் சொந்தமல்லவா என்று கூறி உதவி கேட்கப்படும் என்ற வார்த்தை. அல்லாஹ்வை நினைவில் வைத்திருப்பதை போலவே இந்த வார்த்தையையும் நினைவில் வைத்திருக்க வலியுறுத்துகிறது.

 aலாஹ்வை பயப்படுதல். மார்க்கம் கூறியபடி உறவுகளை பேணுவேன் என்ற இரண்டு வழிமுறைகளை அழுத்தமாக பின்பற்றினால் குடும்பங்களில் எந்த பிரச்சனைகளும் எழாது. அவ்வப்போது எழுகிற பிரச்சனைகள் கூட எளிதில் தீர்ந்து அமைதி தவழும்.  

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

2 comments:

  1. அல்லாஹ் அருள் செய்யட்டும்

    ReplyDelete
  2. Anonymous7:03 AM

    உங்களின் பயான் தொகுப்பு மிக அருமை அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்குவானாக நீடித்த சுகத்தை வழங்குவானாக

    ReplyDelete