வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 21, 2023

இமாம் அபூஹனீபா (ரஹ்)ஆன்மீகம் செழித்து நின்ற பேரறிஞர்

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

(இந்த வ்சனத்தின் கருத்து, அறிவாளிகள் அல்லாஹ்வை சரணடைபவர்களாகவே இருப்பர்கள்)

சமீபத்தில் தமிழ் இஸ்லாமிய ஊடகங்களில் ஒரு வீடியோ பிரபலமடைந்தது.

நான்கு மத்ஹபுகளுக்கு எதிராக 40 க்கும் மேற்பட்ட இயக்கங்க உருவாக காரணமாக இருந்து பிறகு ஒழுக்க கேடுகள் காரணமாக அனைத்து இயக்கங்களாலும் வெளியே துரத்தியடிக்கப்பட்ட ஒருவரிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார். சாமி படங்கள் வைக்கப்பட்டிருக்கிற ஹோட்டல்களில் சாப்பிடலாமா ? இதற்கு அவர் பதிலளிக்கிறார்.

நம்முடைய நாட்டில் இது ஒரு கேள்வியே அல்ல; ஏனெனில் நம்முடைய நாட்டில் கோயில் இல்லாத ஊரே இல்லை. அதனால் யாரும் கோயில் இருக்கிற ஊரில் குடியிருக்க மாட்டோம் என்று சொல்வதில்லை. சாமி படங்களை பேருந்தில் வைத்திருக்கிறார்கள், அதனால் நாம் பேருந்தில் பயணிக்காமல் இருப்பதில்லை. மளிகை கடைக்காரரில் இருந்து கூரியர் பாய் வரை பலரும் சாமி படங்களை நெஞ்சி தொங்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களை நாம் ஒதுக்கி வைப்பதில்லை. இத்தனை இருந்தும் தூய இஸ்லாம் என்ற பெயரில் இது போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு மெனெக்கெட்டு ஒருவர் பதிலும் அளிக்கிறார்.

தமிழகத்தில் நடைபெற்று விட்ட இத்தனை களோபரங்களுக்க்ப் பிறகும் நம்பிக்கைக்கு பொருத்தமில்லாத ஒருவரிடம் கேள்வி கேட்கிறீர்களே அத் நியாயாமா என்றும் நாம் கேட்கவில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவருடைய தகுதிக்கு ஏற்றவ்ரை தான் அனுகுவார்கள். திருக்குர் ஆன் கூறுகிறது. الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ ۖ 

பிரச்சனைக்குரிய் அந்த மெளலவி என்ன பதில் சொனார் என்பதிலும் நமக்கு அக்கறை இல்லை. ஏனெனில் அவர் மார்க்க விளக்கம் சொல்லத் தகுந்தவரே அல்ல. நம்பிக்கையிலும் வழி  கெட்டவர், வாழ்க்கையிலும் நெறி கெட்டவர்.

நாம் இதில் சிந்திப்பதற்குரிய செய்தி என்ன வெனில் ?

மக்களிட்த்தில் ஏராளமான கேள்விகள் இருக்கிறது. அந்தக் கேள்விகளுக்கான் பதிலை அவர்களால் குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியாக தெரிந்து கொள்ள முடியாது. அத்தகைய சூழ்நிலையில் சட்டம் தெரிந்த ஒரு அறிஞரை அனுகித்தான் ஆக வேண்டும்,

அப்படி அனுகுகிற போது யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

வெளியூர்களுக்கு பயணம் செல்கிறபோது ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கு கூட அது தகுதியான கடை தானா என்பதை அறிந்து கொள்ள நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம்.

நமது மார்க்க வழிகாட்டியை தேர்ந்தெடுப்பதில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டாமா ?

ஏமாற்றுகிற ஒரு டாக்டர் எவ்வளவு நுட்பம் தெரிந்தவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோமா? கலப்படம் செய்கிற ஒருவரை எவ்வளவு பெரிய கடை வைத்திருந்தாலும் தேடிச் செல்வோமா? நாணயமற்ற ஒரு வழக்கறிஞரை எவ்வளவு திறன் படைத்தவர் என்றாலும் நாடிச் செல்வோமா?

மாட்டோம். நாம் சரியான சிந்தனையில் இருந்தால் நம்பிக்கைகுரியவரை நாணமானவரை நேர்மையாளரைத்தான் நாம் பின்பற்றுவோம்.  அவர் எவ்வளவு சாதாரணமானவராக தெரிந்தாலும்.

அந்த வகையில் எப்படிப்பட்ட ஒரு சட்ட அறிஞரை நாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் ஆவார்.

-----------------------

உலகில் மக்களுக்கு சட்டம் சொன்ன அறிஞர்களில் மகத்தான் செல்வக்குப் படைத்தவர் இமாம் அபூஹனீபா (ரஹ) அவர்கள்.

அவர் இஸ்லாமிய சட்ட அறிஞர்களில் முதன்மையானவர்.

பிரபலமான நான்கு சட்ட அறிஞர்களில் அவர் மூத்தவர் ,அவரை பின்பற்றுகிறவர்கள் தான் உலகில் அதிகம் என்ற இரண்டு அர்தத்திலும்  அவர் முதன்மையானவர்

இன்றைய நிலையில் இராக் சிரியா எகிப்து துருக்கி, இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற பல முஸ்லிம் நாடுகளிலும் வாழ்கிற கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் இமாம் அபூஹனீபாவை பின்பற்றி நடக்கிறார்கள். அந்த வகையில் அவர் இறந்து போய் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் கடந்த விட்ட பிறகும் கூட மக்களிடம் செல்வாக்குச் செலுத்தும் மாபெரும் சட்ட அறிஞராக அவர் திகழ்கிறார்

ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 11 ல் அவர் இறந்தார் என்பதன் அடிப்படையில் இன்று நாம் இமாம் அபுஹனீபா ரஹ் அவர்களை பற்றி சில செய்திகளை அறிந்து கொள்ள இருக்கிறோம்.

இஸ்லாமிய பேரரசை உமய்யா ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் ஹிஜ்ரீ 80 ம் ஆண்டு இமாம் அபூஹனீபா பிறந்தார்.

அவருடைய இயற்பெயர் நுஃமான் பின் சாபித் என்பதாகும்.

அரபியரா பாரசீகரா

நவீன் கால ஆய்வாளர்கள் பலரும் அவர் அரபியர் தான் என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள். எனினும் இமாமின் முன்னோர்கள் பாரசீகத்தை சேர்ந்தவர்கள்  என்பதுதான் பிரபலமான கருத்தாகும்

 கூஃபா – ஹதீஸ் கலையின் பட்டணம் – தருல் இல்மு

 அவர் கூபா நகரில் பிறந்தார். கூபா என்பது உமர் ரலி அவர்களது யோசனையின் பேரில் படைத்தளபதி ஸஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்களால் இராக்கில் உருவாக்கப்பட்ட ஒரு ராணுவ நகராகும். அந்நகரம் தொடக்க காலத்தில் ஹதீஸ் கலையின் கேந்திரமாக திகழ்ந்த்து. அது தாருல் இல்மு என்று அழைக்கப்பட்டது.  அந்த காலகட்ட்த்தில் தாம் இமாம் அபூஹனீபா ரஹி பிறந்தாரக்ள். அந்த காலத்து ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வான் ரஹ் அவர்களும் மிகச் சிறந்த் ஹதீஸ்களை அறிஞர்களில் ஒருவராக இருந்தார்.

 இமாம் அபூஹனீபாவின் தந்தை துணி வியாபாரியாக இருந்தார். அவரை ஒட்டி இமாம் அபூஹனீபா ரஹி அவர்களும் வியாபாரத்தில் அதிகம் கவனம் செலுத்தினார்கள். இளமையில் பெரிய் அறிஞர்களை அவர் தேடிச் சென்றதாக தெரியவில்லை.

 சஹாபாக்கள் சந்திப்பு

 அன்ஸ் பின் மாலிக் (ரலி) மஃகல் பின் யஸார் (ரலி) ஸஹ்லு பின் ஸஃது (ரலி) ஆமிர் பின் துபைல் (ரலி ) ஆகியோர் உட்பட சுமார் 20 நபித்தோழர்களை இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் சந்தித்துள்ளார்கள். இவர்களில் அனஸ் பின் மாலிக் ரலி அவர்களை சந்தித்தார்கள் என்பது மிக உறுதியானது.

ஆனால் இந்த சஹாபிகளிடமிருந்து அதிகப்படியான ஹதீஸ் களை கற்றார்க்கள் என்பது நிரூபன மாகவில்லை அதனால் صعار التابعين  என்ற வகையில் இமாம் அபூஹனீபா தாபியீன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

صعار التابعين   சிஆருத்தாபியீன் என்றால்  சஹாபியை சந்தித்த நிலையிலும் அதிகமான ஹதீஸ்களை தாபியீன்களிடமே கற்ற்றிந்தவர் என்பது பொருளாகும். சஹாபிகளிடமிருந்தே அதிகமான ஹதீஸ்களை கற்றவரை கிபாருத் தாபியீன் என்று அழைப்பர்கள்.

கல்விப் பாதைக்கு திரும்புதல்

ஜவுளி வியாபரத்தில் திழைத்திருந்த இமாம் அபூஹனீபா ரஹி அவர்களை கல்விப்பணிக்கு திருப்பி விட்ட பெருமை இமாம் ஷஅபி ரஹி அவர்களை சேரும்.

பெரு மனிதர்களின் வார்த்தைகளால் பேரு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் இமாம் அபூஹனீபா

நீ கல்வியில் கவனம் செலுத்து! அறிஞர்களுடன் சுற்று! உன்னிடம் ஒரு துடிப்பு இருக்கிறது என்று ஷாஅபீ அவரை தூண்டினார். .

 ويروى عن أبي حنيفة أنه قال: مررت يوماً على الشعبي وهو جالس فدعاني، فقال لي: «إلى من تختلف؟»، فقلت: «أختلف إلى السوق»، فقال: «لم أعن الاختلاف إلى السوق، عنيت الاختلاف إلى العلماء»، فقلت له: «أنا قليل الاختلاف إليهم»، فقال لي: «لا تغفل، وعليك بالنظر في العلم ومجالسة العلماء، فإني أرى فيك يقظة وحركة»، قال: «فوقع في قلبي من قوله، فتركت الاختلاف إلى السوق، وأخذت في العلم، فنفعني الله بقوله»

 அந்த தூண்டுதலுக்குப் பிறகு கூபா வின் மிகப்பெரும் சட்ட அறிஞரான ஹம்மாத் பின் சுலைமான் (ரஹ்) அவர்களிடம் 18 ஆண்டுகள் கல்வி கற்றார்.

 இயல்பாக அறிவுக் கூர்மைமிக்க இமாம் அவர்களுக்கு அங்கு கிடைத்த கல்வி அவரை அன்றைய அறிஞர்களில் பேரளுமை மிக்கவராக தீர்க்கமான சிந்தனை கொண்டவராகவும் ஆக்கியது.

 இமாம் அபூஹனீபா ரஹி அவர்களின் திட்ட வட்டமான தீர்க்கமான கருத்துக்களே அவர்களது பெரும் சிறப்புக்கு புகழுக்கும் காரணமாகும்.

 உன்னை ஏன் மாணவராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 பிற்காலத்தில் அதா பின் அபீ ரபாஹ் ரஹ் அவர்களிடம் மாணவராக சேர்ந்து கல்வி கற்க இமாம் அபூஹனீபா ரஹ் ஆசைப்பட்டார். அவரை அனுகி சம்மதம் கேட்டார்.

 நான் ஏன் உன்னை மாணவராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டார்.

 இமாம் அபூஹனீபா ரஹி அவ்ர்கள் அதற்கு மூன்று காரணங்களை கூறினார்கள்.

 ·         நான் முன்னோர்களை பழித்ததில்லை

·         பெரும் பாவம் செய்தவனை காபிர் என்று சொல்லும் கருத்து எனக்கில்லை

·         நான் விதியை நான் நம்புகிறேன்.

இந்த பதில்கள் இன்று நமக்கு சாதாரணமாக தெரியலாம்.

 ஆனால் அன்றைய காலகட்ட்ட்தை சிந்தித்தால் இதன் அருமை புரியும்.

 இமாம் அபூஹனீபா ஹிஜ்ரி 80 பிறந்தார் என்று பார்த்தோம். ஹிஜ்ரீ 132 வரை உமய்யாக்களின் அரசு ஆட்சியில் இருந்தது. தனது வாழ்நாளின் பெரும் பக்தியை அந்த கால் கட்டதில் இமாம் அபூஹனீபா கழித்தார்.

உமய்யாக்களின் ஆட்சிக் காலம் என்பது இஸ்லாமின் தொடக்க கால கொள்கை குழப்பவாதிகளான கட்ட்த்தில் கொள்கை குழப்ப வாதிகள் இராணுவம் வைத்து போரடுகிற அளவில் வளர்ச்சி கண்டிருந்தனர்.ஷியாக்கள் காரிஜிய்யாக்கள் முரிஜியாக்கள் முஃதஸிலாக்கள் என்ற அந்த பிரிவினரை உமய்யாக்கள் ஒடுக்கினார்கள் என்றாலும் அக் கொள்கை குழப்ப வாதிகளின் கருத்துக்கள் சமூகத்தில் விஷக் காளான்களாக பரவி இருந்தன.

 இன்றைய நம்முடைய காலத்தில் முன்னோர்களை பழிப்பது, சியாரத்தை மறுப்பது, தொழுகை உள்ளிட்ட வழிபாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் பரவி இருப்பது போல.

 இமாம் அபூஹனீபா ரஹி தனது ஆசிரியரிடம் தனது நிலையை உறுதி பட தெரிவித்த போது அதிலிருந்த அறிவின் ஆழத்தை அதா பின் அபீ ரபாஹ் ரஹ் புரிந்து கொண்டு இமாம் அபூஹனீபாவை சேர்த்துக் கொண்டார்கள்.  

 அபூ ஹனீபா எனும் பட்டப் பெயர்

 இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் இத்தகை தீர்க்கமான சிந்தனையும் கருத்துக்களுமே அவருக்கு அபூஹனீபா என்ற பட்டப் பெயரை பெற்றுத்தந்தன

 இமாமுக்கு ஹனீபா என்ற பெயரில் ஒரு மகனோ மகளோ இருந்த்தாக வரலாற்றில் தெளிவில்லை

 நேரான மார்க்கத்தின் வழியில் செல்பவர் என்ற பொருளில் தான்  அவர் அபுஹனீபா என்று அழைக்கப்பட்டார் என ஷிப்லி நுஃமானி அவரது ஆய்வில் கூறுகிறார்;

அறிவின் ஆழம்

இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் மார்க்கப் பணியின் தொடக்கமாக

அன்றை கொள்கை குழப்பவாதிகளோடு வாதம் செய்து அவர்களை வெற்றி கொள்பதாக இருந்தது.

 யாருடன் வாதம் செய்தாலும் அவர்களை தனது அறிவாற்றலால் அவர்களை வென்றார்கள்.

 விவாதம் என்றவுடன் இன்றைய விதண்டாவாத பேர்வழிகளோடு நீங்கள் ஒப்பிட்டு விடக் கூடாது.தாங்கள் நினைப்பதே சத்தியம் என்று வாதிடுபவர்கள் இன்று விதண்டாவாத பேர்வழிகள். எதிரி தவறிழைக்க மாட்டானா என்று காத்துக் கிடப்பது இவர்களது வழக்கம்.

 இமாம் அபூஹனீபா ரஹி கூறுகிறார்கள். நான் அச்சத்துடனேயே வாதம் செய்வேன். என்ன அச்சம் என்றால் என்னுடைய எதிர் வாதி தவறிழைத்து விடக் கூடாதே என்ற அச்சம்.

 இதுதான் உண்மையான அறிவாளிகளின் நடைமுறையாகும்

 எனது எதிர்ப்பாளரிடமிருந்தே  சத்தியம் வெளிப்பட வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன் என்று இமாம் ஷாபி ரஹி அவர்கள் கூறுவார்கள்

இமாம் அபூஹனீபா அவர்களின் வாதிடும் திறன் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த்து.

ஒரு முறை இமாம் ஷாபி அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் இமாம் அபூஹனீபாவை நீங்கள் பார்த்த்துண்டா என்று கேட்டார். அதற்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள், எனக்கு முன்னால் இருக்கிற இந்த தூண் தங்கம் என்று வாதிடுவாரானால் அதை அவர் நிரூபித்து விடுவார். அவரை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். (தகபீ)

وقال الإمام الشافعي: سئل مالك بن أنس: «هل رأيت أبا حنيفة وناظرته؟»، فقال: «نعم، رأيت رجلاً لو نظر إلى هذه السارية وهي من حجارة، فقال إنها من ذهب لقام بحجته-  مناقب الإمام أبي حنيفة وصاحبيه، الذهبي

 தனது அறிவார்த்தமான வாதத்திறமையால் கொள்கை குழப்பவாதிடகளிமிருந்து சமூகத்தை பாதுகாப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள்.

நாத்திகர்களுடன் ஒரு விவாதம்

இந்த வகையில் இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் நாத்திகர்களுடன் செய்த ஒரு விவாதம் மிகவும் பிரபலமானது.

கலீபா அபூஜஃபர் அல் மன்சூரின் காலத்தில் நாத்திகர்களின் ஒரு குழு தங்களிடம் வாதிட ஒரு வரை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள். இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் அதற்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

அந்த விவாதத்திற்கு இமாம் அபூஹனீபா ரஹி தாமதாக வந்தார்கள். என்ன உங்களுடைய் ஆள் இப்படி தாமதாக வந்திருக்கிறாரே என்று நாத்திகர்கள் கேலி பேசினர். அதற்கு இமாம் அபூஹனீபா தான் வரும் வழியில் தானாக சரக்குக்குகளை ஏற்றி இறக்கி விட்டு தானாக வந்து திரும்பி செல்கிற ஒரு படகை பார்த்து அதிசயித்து நின்று விட்டதாக கூறினார்கள். அதை கேட்டு நாத்திகர்கள் சிரித்தனர். அதெப்படி எல்லாம் தானாக நடக்கும் என்றனர். அப்போது இமாம் அபூஹனீபார் ரஹி அவர்கள் ஒரு சாதரண படகு தானாக செயல்பட முடியாது எனில் இத்தனை அடுக்குகளை கொண்ட வானம். இத்தனை பாதைகளை கொண்ட பூமி, இத்தனை அலைகளை கொண்ட கடல் இவை அத்தனையையும் கொண்ட உலகம் தானாக எப்படி உருவாகியிருக்க முடியும் என்று கேட்டார் . எதிரிகள் வாயடைத்துப் போயினர்.   

وَيُحْكَى عَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ: أَنَّ قَوْمًا مِنْ أَهْلِ الْكَلَامِ أَرَادُوا الْبَحْثَ مَعَهُ فِي تَقْرِيرِ تَوْحِيدِ الرُّبُوبِيَّةِفَقَالَ لَهُمْأَخْبِرُونِي قَبْلَ أَنْ نَتَكَلَّمَ فِي هَذِهِ الْمَسْأَلَةِ عَنْ سَفِينَةٍ فِي دِجْلَةَ، تَذْهَبُ، فَتَمْتَلِئُ مِنَ الطَّعَامِ وَالْمَتَاعِ وَغَيْرِهِ بِنَفْسِهَا، وَتَعُودُ بِنَفْسِهَا، فَتَرْسُو بِنَفْسِهَا، وَتُفْرِغُ وَتَرْجِعُ، كُلُّ ذَلِكَ مِنْ غَيْرِ أَنْ يُدَبِّرَهَا أَحَدٌ؟! فَقَالُواهَذَا مُحَالٌ لَا يُمْكِنُ أَبَدًا! فَقَالَ لَهُمْ: إِذَا كَانَ هَذَا مُحَالًا فِي سَفِينَةٍ، فَكَيْفَ فِي هَذَا الْعَالَمِ كُلِّهِ عُلْوِهِ وَسُفْلِهِ!! وَتُحْكَى هَذِهِ الْحِكَايَةُ أَيْضًا عَنْ غَيْرِ أَبِي حَنِيفَةَ."

 இந்த உரையாடல் நாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போனதாக தோன்றினாலும் இன்று வரைக்கும் நாத்திகர்களுக்கு பதிலாக கூற இதைவிட சிறந்த ஒரு உவமை கிடையாது.

இது இமாம் அபூஹனீபா ரஹி அவர்களின் அறிவாற்றலுக்கான சான்றாகும்.

 மதீனாவில் கல்வி   

 பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா அம்மாவின் மகன் சுலைமான் ரலி அவர்களிடமும் இப்னு உமர் ரலியின் மகன் சாலிம் (ரலி) அவர்களிடமும் இமாம் அபூஹனீபார் ரஹ் அவர்கள் கல்வி கற்றுள்ளார்கள்,  

உஸ்தாத் ஹம்மாதின் மரணமும் இமாம் அபூஹனீபாவின் வெளிப்பாடும்,

இமாம் ஹம்மாது உயிருடன் இருக்கும் போதே இமாம் அபூஹனீபாவிடம் சட்ட ஆய்வு திறன் வெளிப்பட்டது.

  ஒரு தடவை ஒரு இறப்பு நிகழ்விற்காக உஸ்தாது ஹம்மாது வெளியே சென்ற போது அந்த கொஞ்ச நேரத்தில் 60 கேள்விகளுக்கு இமாம் அபூஹனீபா பதிலளித்தார். அந்த பதில்களை எழுதி வைத்தார். உஸ்தாது திரும்பியவுடன் மிக பெருமிதமாக் அந்த பதில்களை காட்டினார். அவற்றில் 40 சரியாக இருந்தது. 20 ல் பிழைகள் இருந்தன. அந்த பிழைகளை ஹம்மாது சுட்டிக் காட்டினார்அது இமாம் அபூஹனீபாவுக்கு திகைப்பளித்தது. இமாம் அபூஹனீபா ரஹி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மாணித்தார். அத்தோடு  இனி ஹம்மாது இருக்கும் வரை தான் சட்டம் சொல்லப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொனார்.

எங்கெல்லாம் அறிவு கிடைக்குமோ அங்கிருந்தெல்லாம் அதை தேடி எடுத்துக் கொண்டார்.

 இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுவார்கள்.

 மக்காவில் ஒரு நாவிதனிடமிருந்து நான் ஐந்து விசயங்களை கற்றுக் கொண்டேன்.

 முடிவெட்டிக்கொள்ள அமர்ந்த போது காசு எவ்வளவு என்று கேட்டேன். அவர் இது ஹஜ்ஜின் அமல், இதில் நிபந்தனை எதுவும் கூடாது. உங்களுக்கு பிரியமானதை கொடுங்கள் என்றார்.

 கிப்லாவிற்கு எதிர் திசையில் உட்கார்ந்தேன் அவர் என்னை கிப்லாவை நோக்கி உட்காருமாறு சைகை செய்யவே கிப்லாவை நோக்கி உட்கார்தேன்.

இடது தலையை முதலில் மழிக்க கொடுத்தேன் அவர் வலது தலையை காட்டு என்றார்.

நான் சும்மா உட்கார்திருந்தேன். தக்பீர் செல்லிக் கொண்டிரு என்றார்.

வேலை முடிந்ததும் எழுந்து என் இருப்பிடம் செல்ல நினைத்தேன். இரண்டு ரக்க அத் தொழுது விட்டுச் செல் என்றார்.

 நான் ஆச்சரியத்தோடு இவற்றை எல்லாம் எங்கே கற்றீர்கள் என்று கேட்டேன்.

நான் எங்கே படித்தேன் ?. அதா பின் அபீ ரபாஹ் இவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்தேன். அதிலிருந்து என்னிடம் வருபவர்களுக்கு இப்படிச் செய்கிறேன் என்றார் அந்த நாவிதர்.

 ஒவ்வொரு நிகழ்விலும் அறிவை தேடி நடந்த இமாம் இஸ்லாமின் சட்ட்த்துறைக்கு தலை ஏற்கும் அந்த நாளும் வந்தது. 

 ஹிஜ்ரீ 120 ல் கூபாவின் மிகப்பெரிய அறிஞரான  ஹம்மாது பின் சுலைமான்  வஃபாத்தானார். அப்போது இமாம் அபூஹனீபாஅவுக்கு 40 வயது. அவர் தான் உஸ்தாது ஹம்மாதின் இட்த்திற்கு தகுதியானவர் என்று ஊர் மக்கள் கூறினார்கள்/

எனக்கு அதற்கு தகுதியில்லையில்லை என இமாம் அபூஹனீபா மறுத்தார்கள்.  

ஹம்மாத் (ரஹ்) அவர்கள்க்கு ஒரு மகன் இருந்தார்.  – அரபு மொழியாற்றலில் தேர்ந்தவராக இருந்த அவரிடம் போதிய சட்ட ஞானம் இருக்க்க வில்லை.

அவருக்கு அடுத்ததாக ஹம்மாது (ரஹ்) அவர்களின் மாணவர் மூஸா பின் கஸீர் என்பவர் இருந்தார் அவருக்கும் இஸ்லாமிய சட்ட துறையில் அதிக அனுபவம் இருக்கவில்லை.

எனவே இமாம் அபூஹனீபா ரஹி அவர்களே கூபாவின் சட்ட அறிஞராக தனது ஆசிரியரின் இட்த்தில் அமர்ந்தார்.

அவரது அறிவாற்றலும் திருக்க்குர் ஆன் ஹதீஸிலிருது எடுத்துச் சொல்லும் திறனும் அன்றைய இஸ்லாமிய உலகம் முழுவதிலும் தீயாய் பரவியது.

அவரது தீர்ப்புகள் பலத்த விவாத்த்தை எழுப்பின. நுனுக்கமாக சிந்தித்து ஆய்வு செய்து சட்டம் சொல்லும் அவரது பாணி மக்களை ஈர்த்த்து.  

அதுவரை நடை பெற்று வந்த சட்ட வகுப்புகள்  அவ்வப்போது உருவாகும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவையாக இருந்தன.  இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள். இனி எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய மூலங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து சட்டம் சொன்னார்கள் . இதில் இஸ்லாமிய சட்ட்த்துறை புதிய பரிணாமத்தை பெற்றது. இந்த வகையில் அறுபதாயிரம் சட்டங்களை இமாம் அபூஹனீபா ரஹி கூறினார் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 ولم يقف اجتهاد أبي حنيفة عند المسائل التي تعرض عليه أو التي تحدث فقط، بل كان يفترض المسائل التي لم تقع ويقلّبها على جميع وجوهها ثم يستنبط لها أحكاما، وهو ما يسمى بالفقه التقديري وفرص المسائل، وهذا النوع من الفقه يقال إن أبا حنيفة هو أول من استحدثه، وقد أكثر منه لإكثاره استعمال القياس، روي أنه وضع ستين ألف مسألة من هذا النوع.

 அதனால் தான் இமாம் ஷாபி ரஹ்) அவர்கள் இமாம் அபூஹனீபா )ரஹ்) அவர்களை புகழ்ந்து கூறும் போது மக்கள் எல்லோரும் இஸ்லாமிய சட்டம் விசயத்தில் இமாம் அபூஹனீபாவின் பிள்ளைகளே. இஸ்லாமிய சட்டத்துறை என்பது அல்லஹ் அவருக்கு வழங்கியது என்று கூறினார். (சுயூத்தி ரஹி)

وقال: «من أراد أن يتبحر في الفقه فهو عيال على أبي حنيفة، كان أبو حنيفة ممن وُفق له الفقه )

 இமாம் அபூஹனீபா ரஹி அவர்களிடம் சட்டம் பயில மக்கா, மதீனா, டமாஸ்கஸ், பஸரா, மெசூல். எகிப்து, எமன் யமாமா பஹ்ரைன், தப்ரிஸ்தான், இஸ்பஹான், நிஹாவந்த், நைஸாபூர், புகாரா சமர்கன்த் என் பல நாடுகளிலிருந்தும் மக்கள்  இமாம் அபூஹனீபாவை தேடி வந்தனர். அப்படி தேடி வந்தவர்களில் அவருக்கு ஹதீஸ்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் இருந்தனர்.

 திருக்குர் ஆனிலிருந்து ஹதீஸிலிருந்து அவர் ஆய்வு செய்து சொன்ன சட்டங்களை உலகின் பல பாகத்திலிருமிருத முஸ்லிம்கள் இஸ்லாமை கடைபிடிக்கும் ஒரு வழி முறையாக கொண்டனர்.

அதுவே ஹனபி மத்ஹபு என்று பின்னர் அறியப்படலாயிற்று.

மத்ஹபு என்றல் ரூட். வழி என்று பொருள்.

இஸ்லாமிய மார்க்கத்தை கடைபிடிக்கும் ஒரு ரூட்டாக வழியாக அது ஆனது.

சட்டமும் பக்குவமும்

பொதுவாக சட்டம் பேசுகிறவர்களிடம் பக்குவம் ஒழுக்கம் இருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.

இன்றைய காலம் கூட அதற்கு ஒரு முக்கிய உதாரணம் . சட்டமீறுதல்களில் பெரும்பாலும் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள். அல்லது அதற்கு துனை நிற்பார்கள்.

நம்முடைய தமிழ் நாட்டிலே கூட பல வழக்கறிஞர்களாக ரவுடிகளாக இருக்கிறார்கள். அல்லது ரவுடிகள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு சட்ட நுணுக்கம் தெரிய்ம் என்பது. அதற்கு காரணம். 

இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் எந்த அளவு சட்ட வல்லுனரோ அந்த அளவு சமயப்பேணுதல் மிக்கவராகவும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவராகவும் இருந்தார்கள்

இமாம் ஷாபி ரஹ் அவர்களின் உஸ்தாத் வகீஃ கூறுகிறார்

كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على كل شيء، ولو أخذته السيوف في الله تعالى لاحتملها

 இமாம் அபூஹனீஃபா மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அனைத்தையும் விட அல்லாஹ்வின் திருப்தியை தேடுபவராக இருந்தார். அல்லாஹ்விற்காக ஒரு வெட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அந்த வாள் வீச்சையும் தாங்கிக் கொள்வார்.

 இமாம் அபூஹனீபார் ரஹ் ஒரு சட்டம் சென்னார்கள். ஒரு திர்ஹம் அளவுக்கு குறைவாக ஆடையில் நஜீஸ அசுத்தம் பட்டிருந்தால் அது பரவாயில்லை. அத்தோடு தொழலாம் என்று கூறியிருந்தார். ஒரு முறை அவருடைய் ஆடையில் மிகச் சிறிய அளவில் அசுத்தம் பட்டது.  அதை தேய்த்து தேய்த்து கழுவிக் கொண்டிருந்தார்.

 ஒரு திர்ஹ்ம அளவு இருந்தால் பரவாயில்லை என்று சட்டம் சொல்லி விட்டு இப்படி சிரத்தை எடுக்கிறீர்களே என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இமாம் அபூஹனீபார் ரஹி அவர்கள் கூறினார்கள். அது சட்டம். ஒரு துளி கூட அச்த்தம் இருக்க கூடாது என்பது  என் விருப்பம்.

 இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் உலகின் மிக சிறந்த இறைபக்தியாளராகவும் நம்பிக்கை நாணயம் நிறைந்த வாழ்க்கை சொந்தக்காரராகவும் திகழ்ந்தார். அதன் மூலம் சட்டம் என்பது பிறருக்கு உபதேசிப்பதற்கு மட்டுமானதல்ல. முதலில் சொந்த உபயோகத்திற்கானது என்று அவர் புரிய வைத்தார்.  

 வழ்வும் நிறைவும் 

இஸ்லாமிய உலகெங்கும் புகழுடன் வாழ்ந்த இமாம் அபூஹனீபா ரஹி அவர்களின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அவருக்கு ஆட்சியாளர்கள் சிரமம் கொடுத்தனர்.

 உமய்யா ஆட்சியாளர் ஹிஷாம் பின் அப்துல் மலிக் அவர்களின் ஆட்சி காலத்தில் கூபாவின் அதிகாரியாக இருந்த யஜீத் பின் உமர் இமாம் அபூஹனீபாவை நகரத்தின் செல்வாக்கு மிக்க அதிகாரியாக நியமிப்பதாக கூறினார். அவரது முத்திரையிடப்பட்ட சட்டங்களே நாட்டில் செல்லுபடியாகும் என்று ஆசை காட்டினார். இமாம் அபூஹனீபார ரஹி அவர்கள் அதற்கு மசியவில்லை. ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிக்க தன்னால் முடியாது என்று மறுத்துவிட்டார்கள். காவலர்கள் அவரை சிறை வைத்து சவுக்கடி கொடுத்தார்கள். மிக மோசமான சவுக்கடிகளை பெற்ற பிறகும் தனது கருத்திலிருந்து அவர் பின் வாங்க வில்லை. அவர் இறந்து விடுவார் என்று பயந்த அவர்கள் அவரை விடுதலை செய்தனர். இமாம் அபூஹனீபார் கூபாவிலிருந்து வெளியேறி மக்காவில் அடைக்கலமானார். கற்றோருக்கு செல்லுமிட மெங்கும் சிறப்பு கிடைக்கும் அல்லவா இமாம் அவர்களுக்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்தது அங்க் தனது கல்விப் பணியை தொடர்ந்தார். இது ஹிஜ்ரீ 130 ல் அதாவது இமாம் அபூஹனீபாவின் 50 வயதில் நடந்தது.

 உமய்யாக்களின் அரசு அகன்று அப்பாஸிகளின் அரசு ஏற்பட வேண்டும் என்ற ஆசை இமாம் அபூஹனீபா ரஹி அவர்களுக்கு இருந்தது. அதற்கேற்ப அடுத்த சில வருடங்களில் ஹிஜ்ரீ 132 இமாம் அபூஹனீபாவின் 52 வயதில் அப்பாஸிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தனர்.

 இரண்டு பேர்ரசுகளின் காலத்திலும் செல்வாக்குடன் வாழ்ந்தவர் என்ற பெருமை இமாம் அபூஹனீபாவுக்கு உண்டு.

 அப்பாஸிகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இமாம் அபூஹனீபா கூபா நகருக்கு திரும்பினார்.

 கூபாவின் நகரைப் போலவே பஸ்ரா நகரையும் உமர் ரலி அவர்களின் உத்தரவின் பேரில் சஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் உருவாக்கியிருந்தார்கள். அப்பாஸிய அரசர்கள் பக்தாதை தலை நகராக ஆக்கிக் கொண்டனர்.

 அப்பாஸிய மன்னர் அபூ ஜஃபர் அல்மன்சூர் இமாம் அபூஹனீபாவின் அறிவாற்றலை போற்றி பக்தாதை நிர்மாணிக்கும் பொறுப்பை அவரிடம் வழங்கினார். பக்தாது நகரை கட்டமைத்த்தில் இமாம் அபூஹனீபா ரஹி அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.  4 ஆண்டுகள் அப்பணியின் மேற்பார்வையாளராக இமாம் அவர்கள் அப்பொறுப்பை வகித்தார்கள், அப்போதும் அரசரிடமிருந்து தரப்பட்ட அன்பளிப்புகளை தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.  

 அதிகாரத்திலிருப்பவர்கள் சட்ட்த்தோடு மோதுகிற சூழ்நிலைகள் எங்கும் ஏற்படும் என்பதற்கேற்ப அப்பாஸிய மன்னர் மன்சூருக்கும்  இமாம் அபூஹனீபாவுக்கும் சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இமாம் அபூஹனீபா ரஹி கூபா நகருக்கு திரும்பினார்கள்.

 பின்னர் ஒரு சமயம் மன்னர் மன்சூர் இமாம் அபூஹனீபா ரஹி அவர்களை தலைமை நீதிபதியாக பெறுப்பேற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதை இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் மறுத்தார்கள்.

 அந்த சந்தர்ப்பத்தில் கலீபாவுக்கும் இமாம் அவர்களுக்கும் இடையில் நடை பெற்ற உரையாடல் மிகவும் பிரபலமானது/ இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் மகத்தான உணர்வை வெளிப்படுத்தக் கூடியது.

 ஏன் காழி பதவியை மறுக்கிறீர்கள் என்று மன்னர் கேட்டார்.  

உங்களுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல முடியவில்லை எனில் நான் அல்லாஹ்விடன் என்ன சொல்வேன் ? என இமாம் பதிலளித்தார்கள்/

ஏன் எனது அன்பளிப்புக்களை நிராகரித்தீர்கள்? என்று மன்னர் கேட்டார்/

அது உங்களுடைய சொந்த சம்பாத்தியமாக இருக்குமெனில் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். பைத்துல் மாலிலிருந்து கொடுத்தனுப்பியதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று இமாம் பதிலளித்தார்கள்.

இமாம் அபூஹனீபா ரஹி தொடர்ந்து மறுக்கவே அவர் சிறை வைக்கப்பட்டார். மார்க்க தீர்ப்பளிக்க அவர் அனுமதிக்கப்பட வில்லை. சிறையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டா என்றும் அவருக்கு நஞ்சு தரப்பட்ட்து என்றும் வரலாற்றில் சில செய்திகள் கூறிகின்றன

ஹிஜ்ரீ 150 ம் ஆண்டு சிறையில் அவர் மவ்த்தானார். மரண வேளை நெருங்கிய போது இமாம் அபூஹனீபா ரஹி அவர்கள் சஜ்தா செய்தார்கள் சஜ்தாவின் நிலையிலேயே அவர் மரணமடைந்தார் என . இமாம் சுயூத்தி ரஹி அவர்கள் கூறுகிறார்கள்.

وصحَّ أن الإمام لما أحس بالموت سجد، فمات وهو ساجد - السيوطي

இமாம் அபூஹனீபா ர்அஹ் அவர்களின் ஜனாஸா தொழுகை ஆறு முறை நடத்தப்பட்டது. முதல் தடவையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அன்னாரது புனித உடல் பக்தாதில் உள்ள கைஸ்ரான் கப்ரஸ்தானின் கிழக்கு பகுதியில் நல்லடக்கம் செய்யப் பட்ட்து. அந்த இடம் இப்போது இமாமுல் அஃழம் மஹ்ல்லா என்று அழைக்கப்படுகிறது.

இமாம் ஷாபி ரஹ் பக்தாதுக்கு வருகை தரும் போது இமாம்  அபூஹனீபா சியாரத் செய்வதையும் அவர்களுக்காக துஆ செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்கள்.

இமாம் அபூஹனீபா ரஹ் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான மனிதர்களில் ஒருவராகவும் இந்த உலகில் சட்ட அறிஞராக இருந்தும் பேணுதல் மிக்க வாழ்வுக்கு சொந்தக் காரராக இருந்தார்கள்.

இது நமக்கு தருகிற பாடம் நாம் எப்படிப்பட்ட சட்ட அறிஞர்களை பின்பற்ற வேண்டும் அவர் நம்பிக்கைகுரியவராகவும் இருக்க வேண்டும். சாலிஹான வாழ்க்கைக்கு சொந்தக் காரராகவும் இருக்க வேண்டும்.

இதை புரிந்த் நடக்க எல்லாம் வல்ல இறைவன் நமக்கு தவ்பீக் செய்வானாக!

இமாம் அபூஹனீபா ரஹி அவர்கல் இஸ்லாமிய சமூகத்திற்கு செய்த பேருபகாரத்திற்கு நன்றி செலுத்துவது என்பது அவர் கொடுத்த சட்ட அமைப்பை முழையைகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முயற்சிப்பதாகும் .

எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!  

 

  

2 comments:

  1. Anonymous5:16 PM

    இமாம் அபூ ஹனீபா ரஹ் அவர்களிடம் வயதைக் கேட்டால் இரண்டு என்று சொல்வார்கள்.காரணம் இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதில் தான் வாழ்க்கைக்கான அர்த்தங்களை நான் உணர்ந்தேன் என்று கூறுவார்கள்....

    ReplyDelete
  2. Anonymous11:15 PM

    மாஷா அல்லாஹ் சிறப்பான பதிவு நன்றி அனைவருக்கும் பயனுள்ளது

    ReplyDelete