வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 15, 2012

ஹிஜ்ரத் புலம் பெயர்தலில் ஒரு புரட்சி


இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீரீ ஆண்டு என அடையாளப்படுத்தப்படுகிறது. ஹிஜ்ரீரீ காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாக கொண்டது. சந்திரக் காலண்டரே எல்லா இடத்திற்கும் அனைத்து வகைப்பட்ட மனிதருக்கும் எளிமையானது. ஆய்வுக்கருவிகளின் தேவையில்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக்கூடியது. அதன் காரணமாகவே சீனர்கள் இந்தியாகள் அரேபியாகள் என பெரும்பாலான பழைய கலாச்சாரங்களச்சாந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே தங்களது நாட்களை கணக்கிட்டு வந்துள்ளனர்.

கீ பீ காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டா என்று பெயர் அது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இன்று நாம் சிவகாசிக் காலண்டா களின் புண்ணியத்தில் சூரிய நாட்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்கி றோம். இல்லை எனில் சூரியன் நிற்கும் திசையை வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது.

கிராமத்து கிழவனோ கிழவியோ வானத்தில் உலாவும் வட்ட நிலாவை அண்ணாந்து பாத்து விட்டு இன்றைக்கு வளர்பிறை பத்து என்று நொடியில் செல்லிவிட முடியும். சூட்டெறிக்கும் சூரியனை கைகுவித்து பத்து தடவைப் பார்ததாலும் கருவிகளின் துணையின்றி அறிவியல் மாணவன் கூட தேதியை சரியாக சொல்வது சிரமம். எனவே பழமையான எளிமையான நாட்காட்டி நடைமுறையான சந்திர மாதக்கணக்கே இஸ்லாமிய மாதக் கணக்காகவும் அங்கீகாக்கப்பட்டது.

ஹிஜ்ரீரீ ஆண்டின் மாதங்கள் முஹர்ரமில் தொடங்கி துல்ஹஜ்ஜில் முடிவடைகின்ற 12 மாதங்களாகும்.

அரபு மக்களிடம் மாதங்களை குறிப்பிட 12 பெயர்கள் இருந்தன. அவர்களது நாட்டின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்பவும் கலாச்சார அடிப்படையிலும் அப்பெயர்களை சூட்டியிருந்தனர். அப்பெயர்களில் பல் வேறு பகுதிகளிலிருந்தும் இறக்குமதியானவை. ஆனால் வருடத்தை தொடர்ச்சியாக அடையாளப்படுத்துவதற்கு அவர்களிடம் குறிப்பித்தக்க எந்த அடையாளமும் இருக்கவில்லை. ஏதேனும் முக்கிய நிகழ்வுகளைச் சார்ந்து ஆண்டுக்கு அடையாளமிட்டுக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சற்று முன்னதாக எமன் தேசத்து அரசன் ஆப்ரஹா யானைப் படையோடு கஃபாவை அழிக்க வந்து அழிது போன நிகழ்ச்சி நடை பெற்றதால் அந்த ஆண்டை “யானை ஆண்டு” என்று அடையாளப் படுத்தினர். அன்றைய அரபுகளின் சமூக அமைப்பு ஆவணங்களை பராமரிக்கும் சமுதாயாமாக முறைப் படுத்தப் படாத காரணத்தால் இது பற்றிய தேவை அவர்களுக்கு இருக்க வில்லை.

பின்னர்ட்களில் இஸ்லாமின் எழுச்சிக்குப் பிறகு அரபுகளின் தேசீய கட்டமைப்பு உருவாக்கப் பட்டு இஸ்லாமின் பேரரசு நிலை நாட்டப் பட்ட போது வரலாற்றுத் தகவல்களை கனக்கிடுவதிலும் ஒப்பந்தங்களின் கால நிணயத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வருடத்தை குறிப்பதற்கு ஒரு அடையாளப் பெயரின் அவசியம் உணரப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 ல்) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அன்னார் ஓரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டா ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உணாந்தார்கள்.

எனவே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்படன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.

1) அண்ணலாரின் பிறப்பு
2) அண்ணலாரின் இறப்பு
3) அண்ணலார் நபியாக தேர்வு செய்யப்பட்டது
4) அண்ணலார் மக்காவிலிருந்து மதீனர்விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது.

உமர்(ரலி) அவர்கள் “ஹிஜ்ரத்”தை தேர்வு செய்தார்கள்.

மற்ற மூன்று விசயங்களும் கூட உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது .என்பதே உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு காரணம். ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படுவதற்கு மிகவும் பொருத்தமான ஆதே நேரத்தில் அழுத்தமான பொருளை தரக்கூடிய பெயரையே உமர் (ரலி) அவர்கள்தேர்வு செய்தார்கள்.

அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. ஆன்று தொடங்கிய ஹிஜ்ரீ ஆண்டின் வரலாறு இன்று 1431 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.

சீனர்கள் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டுப் பெயர்களாக சூட்டியுள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முந்தைய சீன ஆண்டுக்கு “நாய் ஆண்டு” என்று பெயர். நாய் ஆண்டு பிறப்பதற்கு முதல் நாள் இரவு நாய்களுடன் ஜந்து நட்சத்திர ஹோட்ல்களில் விழா கொண்டாடுகிற சீனர்களை தொலைகாட்சிகள் வினோதமாக கட்டின.

இது போல ஹிஜ்ரீ என்பது வேடிக்கை விநோதம் நிறைந்த விளையாட்டுப் பெயர் அல்ல. ஹிஜ்ரீ அலாதியான அத்த புஷ்டி மிகுந்த சொல்லாகும்.

ஹிஜ்ரத்தின் வரலாற்று பின்னணி கனமானது. ஹிஜ்ரத் என்ற அரபி வார்த்தைக்கு “குடிபெயர்தல்” என்று பொருள். எல்லா குடிபெயர்தலும் ஹிஜ்ரத் தான் என்றாலும் “மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்வதற்கே இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும்.

பொதுவாக அகதியாக இன்னொரு ஊரில் குடிபெயர்வது மிகவும் அவலமானது. சுயமரியாதை, கவுரவம், சுகமான வாழ்க்கை அகியவற்றை பறித்துவிடக் கூடியது. சகலவிதமான கலாச்சார தீமைகளுக்கும் இடமளிக்க்கூடியது.

உலக வரலாறு நெடுகிலும் அகதிகளின் வாழ்கை முறையைப் பற்றிக் கிடைக்கிற தகவல்கள் இப்படித்தன் அவர்களது வரலாற்றை படம் பிடிக்கின்றன.

பல வ்ருடங்களுக்கு முன்னாள் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகத்திற்கு வரதொடங்கிய காலகட்டத்தில் இராமேஸ்வரம் பகுதியில் நடை பெற்ற ஒரு நிகழ்வு பத்ரிகைகளில் வெளியாகி இருந்தது.

ராமேஸ்வரம் கடற்கரையோரமாக ஒரு நடுத்தவர வயதுடையவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வருவோர் போவோரிடம் நாசூக்காக யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தமிழ் நாட்டுக் காரருக்கு கோபம் வந்து விட்டது. ஏனய்யா! கை காலெல்லாம் நல்லாத் தானே இருக்கு! ஏதாவது வேலை செய்து உழைச்சு சாப்பிடலாமில்லே.. என்று அவரை அதட்டினார். அந்த மனிதருக்கோ அழுகை வந்து விட்டது. சற்று நிதானித்து விட்டு அவர் சொன்னார். “ஐயா! நான் சில நாட்களுக்கு முன்பு வரை இலங்கையில் இலட்சாதிபதி என் கடையிலும் வீட்டிலும் வேலை செய்ய பலர் இருந்தார்கள். நான் திடீரென்று எல்லாவற்றையும் இழந்து விட்டு. இங்கே வந்திருக்கிறேன். எங்கே செல்வது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. பசி தாங்க இயலவில்லை அதனால் தான் இப்படி..” என்று சொல்லி அழுதார். அதைப் பார்த்து அதட்டியவருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. தன்னிடமிருந்த சில்லரைகளை கொடுத்த அவர் இந்தச் செய்தியை பத்ரிகைகு எழுதி அனுப்பியிருந்தார்.

அகதிகளின் மறுவாழ்வுப் பிரச்சினைதான் இன்றைய முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள்க்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா வின் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் கூறியுள்ளார்.

இலங்கை,பாகிஸ்தான்,சோமாலியா ஆகிய நாடுகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களால் அகதிகள் பிரச்சினை நிச்சயம் பெரிய அளவில் தலையெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

2008 ம் ஆன்டில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பின் படி உலகில் 1 கோடியே 52 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர் . அவர்களில் 47 வீதம் பேர் பெண்களும் சிறுவர்களுமாவர். 2006ல் இந்த எண்ணிக்கை 84 லட்சமாக இருந்தது.

ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் அரைப்பங்கைக் கொண்டிருந்தன என்று ஒரு த்கவல் கூறுகிறது. அத்தோடு உலகில் உள்ள அகதிகள்ல் 8.27. 000 பேர் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது..

ஸ்வாத் பள்ளத்தாக்கில் தாலிபான்களுக்கு எதிரான யுத்தத்தால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 30 இலட்சம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

.சோமாலியாவில் 17 வருடங்களுக்கு முன் உடைந்த மத்திய அரசாங்கத்தால் அங்கு இரு தலைமுறைகளாக அகதி முகாமிலேயே வசித்து வரும் மக்கள் தொகை தற்போது 13 இலட்சம். மேலும் 4 இலட்சம் சோமாலியர்கள் கென்யா யேமென் போன்ற அயல் நாடுகளில் உள்ளனர்.

1990 களில் இலங்கையின் வட பகுதிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களில் சுமார் 1 லட்சம் பேர் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். இலங்கiயில் 30 ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

2004இல் சுனாமி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் 5 இலட்சத்திற்கும் அதிகம். இதில் ஐ.நா அறிக்கைப் படி 2009 இன் முதல் 3 மாதங்களில் மட்டும் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகம். 2009ஆம் ஆண்டு வட பகுதியில் நடைபெற்ற நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்

புலம் பெய்ர்ந்த இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மேற்குகரை, ஜோர்டான், காசா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் அகதி முகாம்களில் 44 லட்சம் பாலஸ்தீன அகதிகள் தங்கி இருக்கிறார்கள்.

இந்த அகதிகளின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமானது. பெரும்பாலும் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத வாறு அகதிகளின் வாழ்கை சிதைக்கப்பட்டிருக்கிறது.

போதுமான உணவு கிடக்காது. குழந்தைகளிக்கான பால் கூட கிடைக்காது. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு பால் கூட வழங்கப்படவில்லை என்று சமீபத்திய செய்தி ஒன்று கூறுகிறது.

அகதிகளின் மானத்திற்கு மரியாதைக்கும் எந்த வித உத்திரவாதமும் இல்லை. இந்த மாதம் 21 ம்தேதி வெளியான தினகரன் பத்ரிகையில் இலங்கை அகதி முகாம்களில் தமிழ் பெண்கள் இராணுவத்தால் மானபங்கப் படுத்தப் படுவதாக அதை நேரில் பார்த்து விட்டு வந்த இலண்டனில் வசிக்கிற இலங்கை பெண் மருத்துவர் இராணி சொன்ன செய்தி வெளியாகி இருக்கிறது. இராணுவ வீரர்களின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் தருகிற உணவுப் பொருட்களுக்காகவும் இதைப் பற்றி பாதிக்கப் பட்ட பெண்கள் வெளியே சொல்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். அது போல செய்தி வருவது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்கிற இலங்கை அரசு குறிப்பிட்டு புகார் தெரிவிக்கப் பட்டால் தவிர தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது.

இலங்கையின் வடமேற்குப் பக்கமான வங்காலை கிராமத்திலிருந்து வந்திருக்கும் 41 வயதான பிரின்ஸா லம்பேர்ட் என்பவர் கூறுகையில்;
“நான் கடைசியாக எப்போது அமைதியாக தூங்கினேன் என்பதையே என்னால் நினைவுபடுத்த முடியாது என்கிறார்.

சமீபத்தில் பதிரிகைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி இது. இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் அகதிகளின் படகுக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீட்டர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகவும் கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா இந்தொனேசியா உள்ளிட்ட நாடுகள் காலம் கடத்துவதாகவும் செய்திகள் இதயத்தை பிழிகிற வண்ணம் இருக்கின்றன.

பாலஸ்தீன அகதிகள் வாழ்கிற முகாம்களில் நிலமை இன்னும் மோசம். உலகம் இரத்தக் க்ண்ணீர் வடிக்காமக் அந்தச் செய்திகளை வாசிக்க முடியாது.

சமீபத்தில் லெபனானான் முகாமில் வசிக்கும், பாலஸ்தீன இளைஞர்கள் தயாரித்த குறும்படம் ஒன்று, பாலஸ்தீனியர்கள் அவல வாழ்வைப் பற்றி எடுத்துக் காட்டுகின்றது.தமது முகாமில் இருந்து ஆரஞ்சு பழத்தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளரைப் பற்றிய விவரணப்படம் இது.

கடந்த 60 வருடங்களாக லெபனானில் 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்களை லெபனானிய மக்களோடு சேர்க்காமல், இன்றும் அகதிகளாக அந்நாடு ஒதுக்கியே வைத்திருக்கிறது.

லெபனான் சட்டப்படி அவர்கள் வெளிநாட்டவர்களாக பார்க்கப்படுவதால், எந்த ஒரு அரசியல்-சமூக உரிமைகளோ, சலுகைகளோ இன்றி, முகாம்களுக்குள் காலம் கடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பல முக்கியமான வேலைகளை செய்வதற்கு, பாலஸ்தீன அகதிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு மருத்துவப்படிப்பை முடித்த ஒரு அகதி அரசு மருத்துவ மனைகளில் மருத்துவராக பணி புரிய முடியாது. தனியார் மருத்துவனைகளில் ஒருவேளை பணி கிடைத்தாகும் அது கூட தகுதிக்கேற்ற சம்பளமற்ற, தராதரம் குறைந்த வேலையாக இருக்கும்.

சக லெபனானிய தொழிலாளரில் இருந்து பாகுபாடு காட்டப்படுதல். மிகக் குறைந்த சம்பளம் வழங்கி, உழைப்பை சுரண்டும் முதலாளிகள். நெருப்பாக கொளுத்தும் வெயிலிலும், எலும்பை உருக்கும் பனிக்குளிரிலும், வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளை, தொழிலாளர்களே சொல்லக் கேட்டு, யதார்த்தத்தமாக அதை படம் பிடித்துள்ளனர்,


விலங்குகளை வளர்ப்பதாக இருந்தால் கூட அதற்காக வசிப்பிடம் தகுந்ததாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தச் சொல்கிற ஆஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோஷம் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.

உலகம் முழுவதிலும் அகதிகளை அரவணைக்கும் மனிதாபிமானம் என்பது ஒரு வகையில் மனிதாபிமானத்தை கேலி செய்வ்தாக அமைந்திருக்கிறது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவரின் கட்டளைக்கேற்ப மதீனாவுக்கு குடிபெயர்ந்து சென்றவர்களுக்கும் அற்புதமான வாழ்வாதாரங்களும் மரியாதையும் மதீனாவில் கிடைத்தன.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களோடு பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மதீனர்விற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மதீனர்வில் செழிப்பான வாழ்கை காத்திருந்தது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து குடிபெயர்ந்து மதீனர்விற்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவரை சஃது பின் ரபீஃ என்ற மதீனர் தோழரின் குடும்பத்தில் ஒருவராக இணைத்துவிட்டாகள். அந்த தோழர் தனது அகதி சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக் சென்று அவரது கையைப்பிடித்துக் கொண்டு
“சகோதரரே! எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு தோட்டங்கள் இருக்கின்ற ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மனைவியர் இருக்கிறாகள். அவர்களில் ஒரு வரை தேர்வு செய்யுங்ககள் அவரை நான் விவாக விலக்கு செய்து உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்”
என்று சொன்னர். நெகிழ்ந்து போன அப்துரரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு குடும்பத்திலும் செல்வத்திலும் அருட்செய்யட்டும். எனக்கு கடைவீதிக்கு வழி காட்டுங்கள் இவை எதுவும் எனக்கு தேவை இல்லை என்று சொன்னர்கள்.

கடைவீதிக்கு சென்று சிறிய அளவில் வெண்ணை வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கிய அப்துர் ரஹமான் பின் அவ்ப் (ரலி) பின்னாட்களில் அரபுலகின் மிகப் பெரிய செலவ்ந்தராக உயர்ந்தார்கள்.

இத்தகைய ஒரு சிறப்பான் சூழ்நிலை ஏற்படக் காரணம் புலம் பெயர்ந்தோருக்கான மறுவாழ்வை அமைத்துத் தருவதில் நபிகள் அவர்கள் ஏற்படுத்திய புரட்சிகரமான வ்ழிமுறையேயாகும்.

மதீனா நகருக்கு நபிகள் அவர்கள் புலம் பெயர்ந்த போது மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்காக அவர்கள் தனி முகாம்களை உருவாக்க வில்லை. அப்படி ஒர் திட்டத்தை அவர்கள் யோசிக்கவே இடம் தரவில்லை.

மக்காவின் அகதிகளை மதீனா மக்களின் சகோதரர்களாக நபிகள் இணைத்து விட்டார்கள். மக்காவின் அகதிகளை தங்களது வீடுகளில் வத்து பராமரிக்குமாறு பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

நபிகள் அவகள் சொன்னார்கள் “மதீனாவின் மக்களே! நீங்கள் விரும்பினால் உங்களது வீடுகளிலிலும் சொத்திலும் அகதிகளுக்கு இடமளியுங்கள். இல்லை எனில் நான் அவர்களுக்கு இனி கிடைக்கப் போகும் வெகுமதிகளை வழங்கிவிடுகிறேன் என்றார்கள்.

மதீனாவின் தோழர்கள் தங்களது வீடுகளிலும் சொத்துக்களிலும் மக்காவின் அகதிகளுக்கு இடமளித்த்னர்.

அபூபக்கர் (ரலி) அவர்களை காரிஜா தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
உமர் அவர்களை இத்பானும் (ரலி),உஸ்மான் அவர்களை அவ்ஸும் (ரலி)
சுபைர் அவர்களை சலமாவும் (ரலி),அப்துர் ரஹ்மான் பின் அவபை சஃதும் (ரலி)
அபூ உபைதா அவர்களை இன்னொரு ஸஃதும் (ரலி) தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.அன்றைய தினமே 45 அகதிகளுக்கு 45 உள்ளூர் வாசிகள் பொறுப்பேறுறுக் கொண்டனர்.

அகதிகளாக வந்தவர்களுக்கு தங்களது குடும்பத்தை பற்றிய கவலை வாட்டாதிருக்கவும் நபிகள் அவர்கள் கட்டமைத்த ஒரு சமூக அமைப்பில் மனிதர்கள் வசிப்பிடத்தின் அடிப்படையில் பிளவு படாதிருக்கவுமான ஒரு அற்புதமான ஏற்பாடாக அது அமைந்தது.

அகதிகளை ஆதரித்தல் என்பதற்கான ஒரு புதிய புரட்சிகரமான திட்டத்தை அது வழங்கியது. அகதிகளுக்கு ஆதரவு தெரிவிபதற்கான மனிதாபிமானப் பாடத்தை அது வரையறுத்தது. யாரும் தங்களது நாட்டில் குடியேறிய அகதிகளை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதக் கூடாது என்பதே ஆதரித்தல் என்பதன் சரியான பொருள் என்பதை அது உறுதிப்படுத்தியது.

அகதிகளை ஏற்குதல் என்பதில் மட்டுமல்ல அனாதைகளை ஆதரித்தல் என்பதற்கும் இஸ்லாம் தருகிற பொருள் இதுவேயாகும்.

அநாதைகளை பராமரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் இருவிரல் போல நெருக்கமாக இருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி 5304)
தான் சாப்பிடும் போது பருகும் போது கூட ஒரு அநாதையை சேர்த்துக் கொள்பவர் சொர்க்கம் செல்வார்.என்றும் நபிகள் அவர்கள் சொன்னார்கள். (திர்மிதி 1840)
அநாதைகளுக்கு உபகாரகமாக இருக்கிற வீடே சிறந்த வீடு அநாதைகளுக்கு தொல்லை தருகிற வீடு கெட்ட வீடு என்றும் நபிகள் அவர்கள் சொன்னார்கள்.(இப்னுமாஜா 3669)
தனது இதயம் கடினமாகவே இருப்பதாக முறையிட்ட ஒரு தோழருக்கு “உனது இதயம் மென்மையடைய வேண்டுமெனில் அநாதைகளுக்கு உணவு கொடு!, அவர்களின் தலையை தடவி விடு!” (அஹ்மது 7260)என்று நபிகள் அவர்கள் அறிவுரை சொன்னார்கள்.

இந்த அறிவுரைகளின் பொருள் அநாதைகளை ஆதரிக்க அநாதை நிலையங்களை தொடங்குங்கள் என்பதல்ல. அநாதைகளை உங்களது சொந்தப் பொருப்பில் பராமரியுங்கள் என்பதாகும். இதுவே அநாதைகளை பராமரித்தல் என்பதற்கு இஸ்லாம் கூறிய முதன்மை பொருளாகவும்.

இதிலுள்ள தத்துவம் மிக் எளிதானது. அதே நேரத்தில் மிக முக்கியமானது. அநாதகளை சொந்த வீட்டில் வைத்து பராமரிக்கும் போது அவர்களுக்கு குடும்ப உணர்வும் உறவின் நெருக்கமும் கிடைக்கும். உடலின் பசியை மட்டுமல்ல மனதின் காயத்திற்கும் அது ஆறுதலை தரும். சமூகத்தின் மீது ஒரு நல்லெண்ணத்தையும் அக்கறையையும் அது அவர்களிடம் விதைக்கும். அநாதைகளை நிலையங்களி தனிமைப்பாடுத்வது முழு மனிதாபிமானமாகாது என்பது மட்டுமல்ல அது ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைகவும் செய்யாது.

ஒரு தொழிலதிபர் சென்னையில் உள்ள ஒரு அநாதை நிலையத்திற்கு சென்றார். அங்குள்ளவர்களுக்கு தனது பங்களிப்பை தந்தார். அதன் பிறகு அந்த நிலையத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகிற போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து உனது பெயர் என்னப்பா என்று வாஞ்சையோடு விசாரித்திருக்கிறார். அந்தப் பையன் வெடுக் கென்று தனது பெயரைச் சொல்லிவிட்டு அகன்று விட்டான். அந்த தொழிலதிபர் சொன்னார். அந்த பையன் சமூகத்தை தூ என்று உதறித்தள்ளியது போல இருந்தது. அவன் முகத்தில் ஒரு வெறுமையும் கோபமும் தெரிந்தது என்றார்.

இதுதான் ஆதரிக்க வேண்டியவர்களை தனிமைப் படுத்தி வைப்பதின் தீய விளைவு. என்னதான் அவர்களுக்குத் தேவையானதை செய்தாலும் அன்புக்கும் அரவனைப்புக்கும் அது ஈடாகாது.

ஹிஜ்ரத் கற்றுத்தருகிற் அற்புதமான செய்திகளில் இதுவும் ஒன்று.

ஹிஜ்ரீரத் என்பது ஒரு வரலாறு அல்ல. நூற்றுக்கணக்கான உணாவெழுச்சிமிகுந்த வரலாறுகளின் தொகுப்பு.

அந்த வரலாறுகளின் வழியே பார்வையை செலுத்தினர்ல்..
• ஹிஜ்ரத் என்பது லட்சியத்திற்கான குறியீடு.
• ஹிஜ்ரத் என்பது எதிப்பு வேதனை ஏளனம் அனைத்திற்குமான முடிவு .
• ஹிஜ்ரத் என்பது வெற்றியின் தலைவாசல்
• ஹிஜ்ரத் என்பது திட்டமிடுதலை கற்றுத்தரும் பள்ளிக்கூடம்.
• ஹிஜ்ரத் என்பது நம்பிக்கையின் வௌச்சக் கீற்று..
• ஹிஜ்ரத் என்பது நட்பின் உரைகல்
• ஹிஜ்ரத் என்பது வளமான வாழ்கையின் முன்னறிவிப்பு
• ஹிஜ்ரத் என்பது இறைநம்பிக்கை - தவக்குலின் சிகரம்.
• ஹிஜ்ரத் என்பது சொர்கத்தின் வழித்தடம்.
• ஹிஜ்ரத் என்பது வீரத்தின் வெளிப்பாடு
• ஹிஜ்ரத் என்பது லட்சியத் துணைகளின் எடுத்துக்காட்டு.
• ஹிஜ்ரத் என்பது மகோன்னதாமான மனிதாபிமானிகளின் வரலாறு.

சிந்திக்க சிந்திக்க பெருகி வரும் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமானவை. இரத்தமும் சதையுமாய் உலாவிய உதாரணங்களைக் கொண்டவை.

ஹிஜ்ரத்திற்குப்பிறகு தான் இஸ்லாம் வளாந்தது; செழித்தது; உலகம் முழவதிலும் வியாபித்தது. இன்று இஸ்லாம் உலகமயமாகி இருக்கிறதென்றால், அதறகு வாசலை திறந்து விட்ட பெறுமை ஹிஜ்ரத்தையே சாரும்!.

புதிய ஹிஜ்ரீ ஆண்டு ஹிஜ்ரத்தின் புனித உணர்வுகள் அத்தனையையும் மொத்தமாய் புமிக்குத் தந்து மானுடத்தின் வாசலில் மகிழ்ச்சித் தோரணம் கட்டட்டும்.

No comments:

Post a Comment