வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 03, 2015

வளர்ப்புக் குழந்தை - வழிகாட்டுகிறது வான் மறை


இன்றைய நம்முடைய சமூக அமைப்பில் திருமணம், சொத்து பங்கீடு சம்பந்தமான சந்தர்ப்பங்களில் வளர்ப்புக் குழந்தைகளைப் பற்றிய சர்ச்சை ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

சமீபத்தில் ஒரு பெரிய வீட்டின் வளர்ப்பு மகளின் கல்யாணத்தில் மிக தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.

மணப்பெண்ணுக்கு, தான் வளர்ப்பு மகள் என்பதே தெரியாது. அதனால் மணப்பெண்ணின் தந்தை நிக்காஹ் ரிஜிஸ்டர் படிக்கிற போது அதில் தந்தையின் இடத்தில் தன் பெயரைத்தான் சொல்ல வேண்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பொண்ணுக்கு அத்தா நான் இல்லை என்பது தெரிய வேண்டாம் என்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்ய முடியாது என்று சொன்ன பிறகு இந்தப் பிரச்சனையை சாட்சிகள் உள்ளிட்ட ஜமாத்தார்களுக்கு மட்டும் தெரியப்படுத்திவிட்டு மைக் இல்லாமல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ரிஜிஸ்டரில் அவர் வளர்ப்புத் தந்தை என்றே குறிப்பிடப்பட்டார்.

இன்னொரு ஷாபி மத்ஹபின் படியான திருமணத்தில் மனைவிக்கு முதல்  கணவன் மூலம் பிறந்த குழந்தையை தன் மகளாக வளர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணுக்கு நிக்காஹ் நடத்தி வைக்கும் சந்தர்ப்பத்தில் தன் குழந்தையாக வளர்ர்த்த பெண்ணுக்கு தான் ஏன் வலியாக முடியாது என பெரும் கேள்வி எழுப்பினார்.

இரண்டு குடும்பங்களுமே மார்க்கத்தை கடை பிடித்து ஒழுகுகிற குடும்பங்கள் தான். ஆனால் மார்க்கத்தின் அடிப்படையான தனித்துவம் மிக்க ஒரு வழிகாட்டுதலை புரிந்து கொள்ளாத காரணத்தினால் கொஞ்சம் சலசலப்புக்கள் ஏற்பட்டன.

இப்போது இந்த சலசலப்பு கொஞ்சம் பரவலாகி வருகிறது,
எனவே வளர்ப்புக் குழந்தைகள் விசயத்தில் மார்க்கத்தின் வழிகாட்டுதலை உறுதியாக புரிந்து கொள்ள வேண்டியது. அந்த வழிகாட்டுதலுக்கு கீழே நமது உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டியதும் முஃமின்களின் ஈமானியக் கடமையாகும்.

அல்லாஹ் ரஸுலின் சட்டமும் திட்டங்களும் தான், நமக்கும் மனித சமூகத்திற்கும் நன்மையானவை என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும். அது நமது இதயத்தை இறைக் கோட்பாடுகளுக்கு கீழே நிலை நிறுத்தும்

திருக்குர் ஆனின் 33 வது அத்தியாயயமான அஹ்ஸாப் அத்தியாயம் 73 வசனங்களை மட்டுமே கொண்டது என்றாலும் இஸ்லாத்தின் தனித்துவத்தை புலப்படுத்தும்  மிக முக்கியமான சட்டங்களை நிறுவிய அத்தியாயமாகும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உயிரை விட மேலானவர் எனும் சட்டம், நபியின் மனைவியர் முஸ்லிம்களின் அன்னையர் எனும் சட்டம்,  பெண்கள்
பர்தாவிலிருக்க உத்தரவிடும் வசனங்கள், இறைவனுடையவும் இறைத்தூதருடையவும்  உத்தரவுகளில் தனிப்பட்ட கருத்தை கொள்ள முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவுமஹர் தொடர்பான சில சட்டங்கள், நபியின் விசயத்தில் சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான இன்னும் பல உறுதியான உத்தரவுகள் என அத்தியாயம் முழுவதும் சட்டங்களாலும் வழிகாட்டுதல்களாலும் நிரம்பியிருக்கிறது.

இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 4 வசனங்களும்  வளர்ப்புக்குழந்தைகள் தொடர்பாக இஸ்லாமின் கருத்துக்களும் உத்தரவுகளும் மிக உறுதியாகப பேசப்படுகின்றன.


அத்தியயம் முழுக்க இது தொடர்பான கருத்தோட்டமே பெரும்பான்மையாக நிலவுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

வளர்ப்புக் குழந்தை சம்பந்தமான உத்தரவு மட்டுமல்லாது அதை உறுதியாக நடை முறைப்படுத்த அல்லாஹ் கையாண்ட அலாதியான வழி முறையும் சமுதாயம் மிக கவனமாக கவனிக்க வேண்டிய செய்தி இது என்பதை புலப்படுத்துகின்றன.

அது மட்டுமல்ல இது சமப்ந்தமான உத்தரவு உலகின் பொதுக் கருத்த்துக்கு எதிரான சத்தியத்தின் உறுதியான பிரகடணமாகவும் அமைகிறது.

வளர்ப்புக் குழந்தைகள் இரண்டு வகையாக அமையலாம்.
1.   வேறு பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளை தத்தெடுப்பது.
2.   அல்லது இரண்டவாது திருமணம் செய்கிற போது கணவன் மனைவிக்கு முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பது

இந்த இருவகை குழந்தைகளையும் இஸ்லாம் வளர்ப்புக் குழந்தைகளாகவே கருதுகிறது.

வளர்ப்புக் குழந்தைகள் சொந்தப் பிள்ளைகளாக மாட்டார்கள். என் திருக்குர் ஆன் உறுதியாக உத்தரவிடுகிறது.

மட்டுமல்ல. அவ்வாறு சொந்தப் பிள்ளைகளைப் போல கருதிக் கொள்வது நீங்களாக உற்பத்தி செய்து கொண்ட கற்பனை. அது அல்லாஹ் விதித்தது அல்ல. அல்லாஹ் விதித்ததன் பக்கம் வாருங்கள், அவேன் நேர்வழியை காட்டுபவன் என்றெல்லாம் குர் ஆன் கூறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான் 

وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ 33;04

இது மட்டுமல்ல திருக்குர் ஆன் தொடர்ந்து அழுத்தமாக  கூறுவதைக் கேளுங்கள்

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا33;05

உண்மை தந்தையின் பெயரோடுதான் இணைத்து (இன்ஷியல்) அழைக்க வேண்டும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவ மனையில் அல்லது தனியாரிடமிருந்து தத்துப் பெருகிற போது பர்த் சர்ட்பிகெட்டில் தாய் தந்தையின் பெயரை தம்முடைய பெய்ராக மாற்றி பதிவு செய்கிறார்கள்.

இது தவறு.

சில பெற்றோர் குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழகளில் தமது பெயரை உண்மைக்கு மாற்றாக சேர்க்கிறார்கள் இதுவும் தவறு.

இதுவும் தவறு.

சொந்தப் தந்தையின் பெயரைத் தான் எந்தக் குழந்தைக்கும் இன்சியலாக சேர்க்க வேண்டும்.

தந்தையின் பெயர் தெரியாவிட்டால் கார்டியன்வளர்ப்புத் தந்தை என்றே  பதிவிட வேண்டும்.

இதற்கான வழி முறை சட்டப்படியான எல்லா விண்ணப்பங்களிலும் இருக்கிறது.

இதையே சகோதரகள் என்று அழையுங்கள் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.

இதற்கு முன்னாள் நடந்து விட்ட தவறுகளை விட்டு விடுங்கள். இனி உறுதியாக இறைக்கட்டளைக்கு கீழ்ப்படுங்கள் என திருக்குர் ஆன் கூறுகிறது.


திருக்குர் ஆனின் இந்த அறிவுரைகளை முஸ்லிம் சமுதாயம் இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கல்யாண மண்டபத்தில் வைத்து ஒரு வளர்ப்புத் தந்தைஅதெப்படி ஹஜ்ரத் நான் இத்தனை நாள என் மடியில் போட்டு வளர்த்த குழந்தையை என் பிள்ளை அல்ல என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிற போது அந்த தந்தைப் பாசத்தை நினைத்து நாம் மருகி நின்றாலும் அல்லாஹ்வின் இந்த தெளிவான உத்தரவுக்கு ஒரு முஃமினாக நாம் எப்படி மாறு செய்ய முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் வளர்ப்புக் முஹம்மது நபி (ஸல்) அவர்களி ன் வளர்ப்பு மகனான ஜைது ரலி க்கும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் இடையே யான பந்த பாசத்தை விட புனிதமாக இந்த உலகில் இன்னொரு பந்தம் இருக்க முடியாது, அதையே அல்லாஹ் மாற்றுமாறு உத்தரவிட்டான், அல்லாஹ்வின் சட்டமே சரியானது என அவர்கள் உணர்ந்து கொண்டதை ஒரு முஃமினாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெருமானாரின் தத்தெடுப்பு

கல்பு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், ஜைது பின் ஹாரிஸா பின் சராஹீல், 8 வயது குழந்தையாக இருந்த போது அவரது தாயார் சுஃதீ பின்து சஃலபா மகனை அழைத்துக் கொண்டு தன் தாய் வீடு இருந்த கிராமத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் அவரது கிராமத்தை திஹாமாவைச் சேர்ந்த  ஒரு கொள்ளைக் கூட்டம் சூழ்ந்தது. காசு பணத்தை கொள்ளயடித்தவர்கள் அந்த சிறுவரையும் தூக்கிச் சென்று சிரியாவின் சந்தையில் அடிமையாக விற்றார்கள். அங்கே கதீஜா அம்மாவின் உறவினர் ஹகீம் அச்சிறுவரை வாங்கி கதீஜா அம்மாவுக்கு அன்பளிப்புச் செய்தார். அச்சிறுவரை பெருமானாருக்கு கதீஜா அம்மா அன்பளிப்பாக கொடுத்தார்கள். யாரையும் அடிமையாக வைத்துக் கொள்ளாத பெருமானார் (ஸல்) அச்சிறுவரை விடுதலை விட்டு தன்னுடைய வளர்ப்பு மகனாக வைத்துக் கொண்டார்கள்.

தனது குழதையை இழந்த ஹாரிசா சந்தை சந்தையாகப் போய் மகனது இழப்பை கவிதைகளால பாடித் தேடினார். அப்போது மகன் மக்காவில் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் இருப்பது தெரிந்தது. ஹாரிதாவும் அவரது சகோதரர் கஃபு ம் மக்காவிற்கு வந்து பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து புகழ்ந்து பேசி தமது குழந்தையை ஒப்படைத்து விட்டால் அதற்கவர் நிர்ணயிக்கும் தொகையை தருவதாக கூறினார்.

பணம் எதுவும் தேவையில்லை என மறுத்த பெருமானார் (ஸல்) அவர்கள் அவர் உங்களுடன் வர விரும்பினால் அழைத்துச் செல்லலாம் என்று கூறினார்கள்.

ஜைது ரலி யிடம் இவர்கள் யார் எனத் தெரிகிறதா என விசாரித்தாரர்கள். சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஜைது, இவர் எனது தந்தை ஹாரிதா இவர் எனது சிறிய தந்தை கஃபு” என்றார். இவர்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் உனது விருப்பம் என்ன என்று கேட்ட போது . பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்களுடனேயே இருந்து கொள்வதாகவும் ஜைது (ரலி) கூறீனார்.

தந்தை ஹாரிதாவுக்கு கோபம் பீறிட்டதுஒரு சுதந்திர வாழ்க்கைக்கு உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். நீ அடிமையாக இருக்க விரும்புகிறாயே என நிலவரம் புரியாமல் சப்தம் போட்டார்.

அதற்கு பதிலளித்து ஜைது ரலி  சொன்ன வார்த்தைகள் வரலாற்றின் வைர வரிகளுக்குச் சொந்தமானவை.

“இவரிடம் கண்டதை நான் வேறுயாரிடமும் காணவில்லை. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால இவரைப் போல வேறு யாரையும் நான் பார்க்க வில்லை என்றார்.

பாசத்தோடு வளர்த்த் வந்த பையன் எங்கே போய்விடுவாரோ என்ற கவலை பெருமானாருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கவலை துடைத்தெரிந்த சிறுவர் கூறீய வார்த்தைகள் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களை மிகவும் நெகிழச் செய்தது. அவரது கையை இறுகப்பிடித்து கஃபாவின் முற்றத்திற்கு அழைத்து வந்த நபி (ஸல்) அவர்கள் அங்கு கூடியிருந்த அனைவரின் முன்னிலையிலும் சப்தமிட்டு ஒரு பிரகடனம் செய்தார்கள்.  

இன்றிலிருந்து இவர் என் மகன் எனக்கு அவர் வாரிசு, அவருக்கு நான் வாரிசாவேன். இதற்கு நீங்கள் அனைவரும் சாட்சி என்றார்கள்,

மக்காவின் ஒரு தலைவரின் அன்புப்பிள்ளையாக தங்களது மகன் இருப்பதை பார்த்து சமாதானப்பட்டுக் கொண்ட ஹாரிதாவும் அவரது சகோதரரும் திரும்பினார்கள்

அன்றீலிருந்து ஜைது ரலி ஜைது பின் முஹம்மது என்றே அழைக்கப்பட்டார்.

ஹிஜ்ரீ 5 ல் அஹ்சாப் அத்தியாயத்தின் இந்த வசனம் அருளப்படும் வரை.

وقد تبنى النبي صلى الله عليه وسلم زيد بن حارثة بن شراحيل الكلبي قبل الرسالة، فكان يدعى زيد بن محمد، واستمر العمل بالتبني على ما كان عليه زمن الجاهلية إلى السنة الثالثة أو الخامسة من الهجرة‏.‏

குர்துபி இந்த வரலாற்றை எழுதுகிறார். வரலாற்று நூல்கள் அனைத்திலும் இந்தச் செய்திகள் உண்டு

وكان زيد فيما روي عن أنس بن مالك وغيره مسبيا من الشأم, سبته خيل من تهامة, فابتاعه حكيم بن حزام بن خويلد, فوهبه لعمته خديجة فوهبته خديجة للنبّي صلى الله عليه وسلم فأعتقه وتبناه,

ரஷீது ரிழா வின் முஹம்மது ரஸூலுல்லாஹ்வில் வரலாறு இப்படி த் தொடர்கிறது.

فدخل حارثة وأخوه كعب على النبي صلى الله عليه وسلم
فقالا: يا ابن عبد المطلب، يا ابن هاشم، يا ابن سيد قومه جئناك في ابننا عندك فامنن علينا وأحسن إلينا في فدائه،
فقال: «من هو»؟
قالا: زيد بن حارثة،
فقال رسول الله صلى الله عليه وسلم «فهلا غير ذلك؟»
قالا: ما هو؟
قال: «ادعوه وخيروه فإن اختاركم فهو لكم وإن اختارني فوالله ما أنا بالذي أختار على من اختارني أحداً»،
قالا: قد زدتنا على النصف وأحسنت

فدعاه رسول الله صلى الله عليه وسلم فقال: «هل تعرف هؤلاء؟»
قال: نعم، هذا أبي وهذا عمي،
قال: «فأنا من قد عرفت ورأيت صحبتي لك فاخترني أو اخترهما»،
 قال: ما أريدهما وما أنا بالذي أختار عليك أحداً، أنت مني مكان الأب والعم،
فقالا: ويحك يا زيد أتختار العبودية على الحرية وعلى أبيك وأهل بيتك؟
قال: نعم، ورأيت من هذا الرجل شيئاً ما أنا بالذي أختار عليه أحداً أبداً،

فلما رأى رسول الله صلى الله عليه وسلم ذلك أخرجه إلى الحجر فقال: «يا من حضر اشهدوا أن زيداً ابني يرثني وأرثه»، فلما رأى ذلك أبوه وعمه طابت نفوسهما وانصرفا.


ஹிஜ்ரி 5 ம் ஆண்டில் அஹ்ஸாப் அத்தியாயத்தின் மேற்படி வசனம் அருளப்பட்ட பிறகு  ஜைது ரலி அவர்கள் அவரது உண்மை தந்தையுடன் இணைத்து ஜைது பின் ஹாரிதா என்று அழைக்கப்படலானார்கள்.

தனது பெயரிலிருந்து முஹம்மது எனும் நிஸ்பத் விலக்கப்படும் சூழ்நிலை கண்டு ஜைது ரலி அவர்கள் மிகவும் வருந்தினார்கள். அழுதார்கள்.

அந்த இழப்பிற்கு அல்லாஹ் ஈடு செய்தான். ஜைது ரலி அவர்களின் பெயரை திருக்குர் ஆனில் அல்லாஹ் பதிவு செய்தான்.

ஒரு பெயராக ஜைது ரலி அவர்களின் பெயரைத் தவிர வேறு எந்த நபித்தோழரின் பெயரும் திருக்குர் ஆனில் பதிவாகவில்லை. வேறு எந்த நபியின் தோழரின் பெயரும் திருக்குர் ஆனில் இடம் பெறவில்லை என்பதை அறிஞர்கள் பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.

ஜைது (ரலி)  நிலையுடன் தமது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிற யாரும் தமக்கேற்படுகிற வலியை பெரிதாக கருத முடியாது.


ஜைது ரலி அவர்களைப் போலவே சாலிம் ரலி அவர்களின் வர்லாறும் இந்த வகையில் உணர்ச்சி மயமானது,

சாலிம் ( ரலி ) சஹாபாக்களின் மிகச் சிறந்த காரி ஆக இருந்தவர் பெருமானார் (ஸல்) அவர்கள் பெருமைப் பட்ட சஹாபி.

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ أَبْطَأْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بَعْدَ الْعِشَاءِ ثُمَّ جِئْتُ فَقَالَ أَيْنَ كُنْتِ قُلْتُ كُنْتُ أَسْتَمِعُ قِرَاءَةَ رَجُلٍ مِنْ أَصْحَابِكَ لَمْ أَسْمَعْ مِثْلَ قِرَاءَتِهِ وَصَوْتِهِ مِنْ أَحَدٍ قَالَتْ فَقَامَ وَقُمْتُ مَعَهُ حَتَّى اسْتَمَعَ لَهُ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ هَذَا سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مِثْلَ هَذَا- إبن ماجة 1328
நான்கு பேரிடமிருந்து குர் ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன பெருமானார் அதில் ஒரு வராக சாலிமையும் குறிப்பிட்டார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ ابْنِ مَسْعُودٍ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَأُبَيٍّ وَمُعَاذِ بْنِ جَبَلٍ – البخاري – 3806
பாரசீகத்தை பூர்வீகமாக கொண்ட சாலிம் ரலி அங்கு அடிமையாக விற்கப்பட்டார், பின்னர் மதீனா சந்தையில் யாரும் வாங்க முன்வராத அவரை அபூஹுதைபா ரலி அவர்களின் மனைவி ثبيتة بنت يعار، زوجة أبي حذيفة    பரிதாபப் பட்டு விலைக்கு வாங்கினார்.  சில நாட்களில் அந்த அம்மையார் அவரை உரிமை விடவே போக்கிடம் ஏதுமற்ற அவரை அபூஹுதைபா (ரலி)  தனது மகனாக தத்தெடுத்துக் கொண்டார். சாலிம் பின் அபூஹுதைபா என்றே அவரும் அழைக்கப்பட்டார்,  அபூஹுதைபா ரலி அவர்களின் இதயத்திற்கு மிகவும் நெருகமானவரக இருந்தார்.
(யமாமா யுத்தத்தில் இருவரும் ஒரு சேர ஷஹீதானார்கள். அபூஹுதைபாவின் பாதத்தில் சாலிமின் முகம் இருந்தது,. சாலிமின் பாதத்தில் அபூஹுதைபாவின் முகம் இருந்தது   (ரலி),
இவ்வளவு சிறப்பிற்குரிய சாலிம் ரலி இந்த ஆயத்திற்கு பிறகு சாலிம் மவ்லா அபூஹுதைபா என்று அழைக்கப்பட்டார்,

அல்லாஹ்வின் உத்தரவிற்கு முதல் முஸ்லிம் சமுதாயம் மூற்றிலுமாக கட்டுப்பட்டு நின்றது, தன்னுடைய உணர்வுகளை அந்த கட்டளைகளுக்கு கீழ்பணிந்தே வைத்திருந்தது.

வளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியாது என்று உறுதியாக உத்தரவிட்ட அல்லாஹ் அதை சமூகத்தில் மிக உறுதியாக நடை முறைப் படுத்திக் காட்டவும் செய்தான். பெருமானார் (ஸல்) அவர்கள் மூலமாகவே!

நபி (ஸல்) அவர்கள் தனது மாமி மகள் ஜைனப் பின் ஜஹ்ஸ் ரலி அவர்களை ஜைது (ரலி) க்கு திருமணம் செய்து வைத்தார்கள். இதற்கு ஆரம்பத்தில் விருப்பம் தெரிவிக்காத ஜைனப் அம்மையார் பெருமானாரின் விருப்பத்திற்கேற்பவே இதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

இந்த இருவரின் குடும்ப வாழ்வு ரசிக்க வில்லை. ஜைது ரலி தனது மனைவியை தலாக் சொல்ல பெருமானாரிடம் சம்மதம் கேட்டார்கள். பெருமானாருக்கும் அது சரி என்றே பட்டது. தனது முறைப் பெண்ணை ஜைதுக்கு திருமணம் செய்து வைக்க அது இப்படியாகிவிட்டதே தானே ஜைனபை திருமணம் செய்திருக்கலாமோ என பெருமானார் (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். ஆனாலும் இது பற்றி ஜைது ரலி பேச வந்த போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினார்கள்.

அல்லாஹ் அவ்வாறு தடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டான். ஜைது ரலி தனது மனைவியை தலாக் சொன்னார்கள் . பிறகு ஜைனப் அம்மையாரை அல்லாஹ்வே பெருமானாருக்கு திருமணம் செய்து வைத்தான்.

. وجاء زيد إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن زينب تؤذيني بلسانها وتفعل! وإني أريد أن أطلقها, فقال له: (أمسك عليك زوجك وأتق الله) الآية. فطلقها زيد

وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا33;37

இதன் மூலம் தத்துப்பிள்ளை எந்த வகையிலும் சொந்தப் பிள்ளையாக முடியாது என்ற சட்டம் மிக வலுவாக உறுதிப்பட்டது, இந்த சட்டத்திற்கு எதிராக முகம் சுளிக்க யாருக்கும் வாய்ப்பில்லாமல் போனது..

ஒரு சட்டத்தை வலுப்படுத்த இப்படி ஒரு திட்டத்தை அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் தீட்ட முடியாது. ஜைனப் அம்மையாரின் திருமணம் பெருமானாரின் 58 வயதி ல் நடைபெற்ற்து.

பெருமானாரின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு காரணாம் இருந்தது, ஜைனப் அம்மையாரை திருமணம் செய்த காரணம் சமுதாயத்தில் புரையோடிப்போயிருந்த தத்துப்பிள்ளை சார்ந்த  ஒரு கருத்தை அதன் அடிவேறீலிருந்து தகர்ர்த்தெறிவதாகும்

தனது மருமகளையே முஹம்மது (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சில பேர் குறை பேசினார்கள். அல்லாஹ் விட வில்லை; இதே அத்தியாயத்தில் பதிலளித்தான்.


مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا33;40

இன்றும் திருக்குர்  உலக் சமுதாயத்தின் முன்னால் உறுதி பட எடுத்துக் கூறும் செய்தி இது

தத்துப் பிள்ளை சொந்தப் பிள்ள ஆக் முடியாது. இதுவே மனிதர்களுக்கு இலகுவானது.

உலகளாவிய சட்டங்கள் இன்றும் கூட  தத்துப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளைகளைப் போலவே கருதுகின்றன
பிள்ளைகளை தத்துக் கொடுத்துவிட்டால் சொந்தப் பெற்றோர்கள் அவர்கள் மீதான் உரிமையை இழந்து விட வேண்டியது தான் என்று மனிதர்கள் வரைந்த சட்டங்கள் சொல்கின்றன. ஒரு வருடம் ஒரு குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் தொடர்பில்லை என்றால் கோர்ட் அவர்களுடை பெற்றோர் உரிமையை இரத்து செய்து விட முடியும் என்று அந்தச் சட்டங்கள் கூறுகின்றன.
Stepparents can become legal parents to their stepchildren through the process of stepparent adoption. Both biological parents, if living, must consent or agree to the adoption. When a stepparent adopts a stepchild, either the non-custodial parent of the child willingly gives up his or her parental rights to the child, or the court terminates the parental rights of the biological parent if there is evidence of abuse or neglect to the child.
If a parent is not involved in the child's life, the court can terminate that biological parent's rights on the grounds of abandonment. Grounds for abandonment in most states is no contact between the parent and child for at least one year.

ஆனால் இது சரியானதல்ல்ல என்று அல்லாஹ் கூறுகிறான். அது தான் சொல்வதே நேர்வழி என்றும் சுட்டிக் காட்டுகிறான்.

ஏன் தத்துப்பிள்ளை சொந்தப் பிள்ளையாக முடியாது?

தத்துப் பிரகடனங்கள் இரத்து செய்யப்படுகிற நிகழ்வுகளும் சகஜமாக நடக்கின்றன, சொந்தப் பிள்ளையை அப்படிச் செய்ய முடியுமா? 

உலகின் பல இடங்களிலும் தத்துப்பிள்ளைகளை பின்னர் இரத்து செய்யப்பட்டிருக்கிறார்கள்

தற்போது கூட பத்ரிகைகை;  தமிழகத்தின் மிகப்பிரபலமான தொழிலதிபரும் செட்டி நாட்டு அரச குடும்பத்தவருமான  எம் ஏ எம் ராமசாமி  அவரது தத்துப் பிள்ளை ஐயப்பன் தனது சொத்துக்களை பறித்துக் கொண்டு தனக்கு தொல்லை கொடுக்கிறார் என்று சொல்லி அவரது தத்து சாஸத்தை இரத்து செய்ய இருப்பதாக பத்ரிகைகளில் செய்தி வெளியானது.  
நம்முடைய தமிழ் நாட்டின் பிரபல அரசியல் தலைவர். ஒரு இளைஞனை தத்துப்பிள்ளையாக அறிவித்து அவருக்கு விமரிசையாக திருமணம் செய்து விட்டு பிறகு அவரை தன்னுடை பிள்ளை இல்லை என்று அறீவித்ததார். .
இதற்கு எதிர் வினை வேறு ஒரு ரூபத்திலும் வெளிப்படுகிறது. தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் ஒரு காலகட்டத்திற்கு மேல் தமது வேர்களை தேடுகிறார்கள்
வெளிநாடுகளுக்கு தத்துப்பிள்ளைகளாக தாரை வார்க்கப்பட்டவர்கள் 20 , 30 வருடங்கள் கழித்து தமது சொந்தப் பெற்றோரை தேடிக் கண்டுபிடித்து அன்பில் திழைத்திருக்கிற செய்திகளை பத்ரிக்கைகள் வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
தத்துக் கொடுப்பதால் ஒரு உண்மைப் பெற்றோரின் உரிமையையும் உணர்வைய்ம் அழித்து விட முடியும் என்பது எத்தகைய அறிவீனம்? அதே போல ஒரு மகனின் உண்மைத் தேடலை அடக்கி விட முடியும் என்பது எவ்வளவு பெரிய அறிவீனம.

அமெரிக்காவில் தத்தெடுப்பதின் மூலம் இரத்த சம்பந்தமான அடையாளம் துடைத்தெரியப்படும் என்ற நிலையிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தமது இரத்த பந்த உறவை கண்டு பிடித்துக் கொள்ள உரிமை உண்டு என்ற நோக்கிலான தீர்ப்புக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. தனது சுய அடையாளத்தை அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்ற கோணத்தில் இந்த விவாதங்கள் நடை பெற்று வருகின்றன,


وَاللَّهُ يَقُولُ الْحَقَّ  
இது வே சத்தியம் என்று அல்லாஹ்  சொன்னதை நோக்கி உலக சமுதாயம் நகரத் தொடங்கியிருப்பதன் அடையாளம் இது,

அதே போல அல்லாஹ் காட்டிய வழி முறை தான் தத்தெடுப்பதற்கான நன்மையளிக்கிற வழி முறை

وَهُوَ يَهْدِي السَّبِيلَ
தத்தெடுத்தல் என்பதை ஒரு நல்ல காரியமாக தொடர வேண்டும் என நினைத்தால் அதற்கு அல்லாஹ் காட்டுகிற வழியே இலகுவானது, நன்மைகள் தொடர ஏதுவானது.
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதற்கு சமீபத்திய சட்ட அமைப்புக்கள் பெரும் தடையாகின்றன, சொந்த குழந்தைகளைப் போல முழு பாதுகாப்பு உத்திரவாதம் அளித்தால் மட்டுமே தத்தெடுப்பது சாத்தியமாகிறது.
இதனால் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறைகிறது.
ஆதரவற்றோர் அநாதை நிலையங்களிலேயே வாடும் நிலை ஏற்படுகிறது.
தத்தெடுத்தல் சமபந்தமாக பேசுகிற திருக்குர் ஆன் தன்னுடை கருத்தைச் சொல்லிவிட்டு உங்களது வளர்ப்புக் குழந்தைகள் விசயத்தில் இதுவே நீங்கள் சிரமப்படாமலிருக்க வழி என்றும் சுட்டுக் காட்டுகிறது. لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ
தத்துப்பிள்ளையை சொந்தப் பிள்ளையாக கருதுவது உணர்ச்சி சார்ந்த ஒரு விசயமாக இருக்கலாம். அறிவார்த்தமாக யோசிக்கிற போது இது சரியல்ல என்பது எளிதாக புரியும்.
தத்துப் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே மரபு ரீதியான (ஜெனடிக் ரிலேஷன் ஷிப்) இருக்க முடியாது என்பதை விஞ்ஞானம் உறுதிப் படுத்துகிறது,
தத்துக் குழந்தைகள் சொந்தக் குழந்தைகளாகவே கருதப்படவேண்டும் என்கிற போது தத்துக் குழந்தைகள் மீது சொந்தக் குழந்தைகளுக்கு வெருப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுகிறது.
பல குடும்பங்களிலும் பெற்றோர்கள் மேலும் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புகிற போது சொந்தக் குழந்தைகள் அதை ஆட்சேபிக்கிறார்கள், காரணம்   சொத்தில் பங்கிற்கு வந்து விடுவார்கள். பின்னால் பிரச்சனையாகி விடும் எனற அச்சமே காரணம்.
இன்றை மேற்குலகு சார்ந்த தத்தெடுப்பு நடை முறையால் தத்தெடுத்தல் என்பது சிரமமான ஒரு விசயமாகவும் உறவுகளுக்கிடையே சிக்கலை உண்டு பண்ணும் ஒரு அம்சமாகவும் இருக்கிறது.
அல்லாஹ் காட்டிய வழி எளிதானது. சரியானது.
சில பிரச்சனைகளும் தீர்வுகளும்
இஸ்லாமின் கருத்துப்படி பார்த்தால் தத்துக் குழந்தைகள் மஹ்ரமாக ஆக முடியாதே? –
பெண் குழந்தை பருவமெய்துகிற போது தன் வளர்ப்பு தந்தைக்கே பர்தா போட வேண்டியது வருமே ?
மார்க்கம் இதற்கு எதார்த்தமான ஒரு பாதுகாப்பான பதிலை தந்திருக்கிறது.
தத்துக்  குழந்தை மனைவியின் குழந்தையாகவோ கணவனின் குழந்தையாகவோ இருந்தால் இரண்டாவது திருமணத்தின் மூலம் அக்குழந்தைகள் தத்துப் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் மஹரமாகி விடுவார்கள்.
குழந்தை வேறு பெற்றோருக்குரியதாக இருந்தால் இரண்டு வயதுக்குள் இருக்கிற போதே அதற்கு பால் கொடுத்து விட்டால் அதன் மூலம் பால்குடி மஹ்ரமிய்யத்தை நிருவிக் கொள்ள முடியும். 
இரண்டு வயதைக் கடந்து விட்டதென்றால் இஸ்லாமின் வழிகாட்டுதலையே பேண வேண்டும்.
அதே போல இன்னொரு கேள்வி இருக்கிறது ,
தத்துப்பிள்ளை சொந்தப் பிள்ளையாக முடியாது என்கிற போது சொத்திலிருந்து அக்குழந்தை ஒதுக்கி வைக்கப்படும் ஆபத்து இருக்கிறதே ?
இதற்கும் இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதலை வைத்திருக்கிறது.  தத்துப் பிள்ளைக்கு வஸிய்யத்தின் மூலம் சொத்தை எழுதி வைக்க முடியும்.  ஒரு மனிதருக்கு அவரது சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு வரை வசிய்யத் செய்யும் அதிகாரம் இருக்கிறது.
அமெரிக்காவில் என்ன நிலை?
தத்துப்பிள்ளையை சொந்தப் பிள்ளையாக சட்ட ரீதியாக கருதும் அமெரிக்காவில் சொத்துக்கு வாரிசாகும் விசயத்தில் முழு அமெரிக்காவுக்குமான ஒரு சட்டம் கிடையாது.
பல  அமெரிக்க மாநிலங்களில் சொந்தப் பிள்ளைக்கு நிகராக தத்துப்பிள்ளைக்கும் சொத்தில் பங்குண்டு என்றாலும் சில மாநிலங்களில் உயில் எழுதி வைத்தால் தான் சொத்துல் பங்கு கிடைக்கும் என்று சொல்கின்றன, இதுவே இஸ்லாமின் வழி முறையாகும்.
In most American states, an adopted child has the same automatic rights of inheritance as a genetic child. In a few states, inheritance is not automatic but needs to be specified in the will as under Islamic law.

அல்லாஹ் சத்தியத்தை கூறுகிறான். அவனே நேரான வழியைக் காட்டுகிறான் என்பத இத்தகவல்கள் நிரூபிக்கின்றன,

குழந்தைகளை தத்தெடுக்க நினைக்கிற முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்த இறுதியான உறுதியான வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ளுங்கள்.

தத்தெடுக்கிற குழந்தைகளிடம் அதிக அன்பையும் கருணையையும் வெளிப்படுத்த வழிகாட்டினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

ஜைது ரலி அதற்கொரு உதாரணாம் , ஹிஜ்ரி 9 ல் மூத்தா யுத்தத்தில் வபாத்தான கடைசி நிமிசம்  வரை  ஜைது ரலி பெருமானாரின் அதிக அன்பிற்குரியவராக இருந்தார்.
ويقال له حِب رسول الله
அவருடை மகன் உஸாமாவும் (ரலி) பெருமானாரின் அதிக நெருக்கத்திற்குரியவராக இருந்தார்.

விவாகரத்தான பெண்களை திருமணம் செய்கிற போது அவர்களது முன்னாள் கணவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுடனேயே ஏற்றுக் கொண்டார்கள், தம் மடியில் வைத்து அவர்களை தம் குழந்தைகளை போலவே வளர்த்தார்கள்.

உம்மு சலமா ரலி  அவர்களது கணவர் உஹது யுத்ததில் ஷஹீதான போது அவரை பெருமானார் திருமணம் செய்து கொள்ள சம்பந்தம் பேசினார்கள் அப்போது உம்மு சலமா அம்மாவுக்கு சலமா. துர்ரா . உமர், ஜைனப் என நான்கு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பெருமானார் (ஸல்) பராமரித்தார்கள். வளர்ப்பி மகன் சலமாவுக்கு தன்னுடை சிறிய தந்தை ஹம்சாவின் மகள் உமாமா (ரலி) யை திருமணம் செய்து வைத்தார்கள். மற்ற சிறு குழந்தைகளை தன் மடியில் வளர்த்தார்கள்.
تربى أولاد أم سلمة في بيت النبي محمد، وزوّج النبي محمد ابنها سلمة من ابنة عمه أمامة بنت حمزة بن عبد المطلب
அருகில் உட்கார வைத்து சாப்பிடுகிற விதத்தை சொல்லிக் கொடுத்தார்கள் என மற்றொரு வளர்ப்பு மகன் உமர் ரலி கூறுகிறார்.

  عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : كُنْتُ غُلامًا فِي حِجْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَفِي رِوَايَةٍ : كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا غُلامُ سَمِّ اللَّهَ ، وَكُلْ بِيَمِينِكَ ، وَكُلْ مِمَّا يَلِيكَ  -الْبُخَارِيُّ

வளர்ப்புக் குழந்தைகளை பராமரிப்பதில் சாதாரண வழிகாட்டுதலை அல்ல. அலாதியான வழிகாட்டுதலை ப் பெருமானார் (ஸல்) முன் வைத்தார்கள்.
அந்த வளர்ப்புக் குழந்தைகள் அநாதைகளாக இருந்தாலோ பெருமானார் கூறிய புகழ் வார்த்தைக்கு அளவே இல்லை.
عَنْ سَهْلٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا – البخاري
நானும் எதீம்களை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் இருவிரலை போல இருப்போம் என்றார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُحْسَنُ إِلَيْهِ وَشَرُّ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُسَاءُ إِلَيْهِ- إبن ماجة – 3669
அன்பின் அடிப்படையில் வளர்ப்புப் பிள்ளைகளை இறுக்கமாக அரவணைக் கச் சொல்லுகிற இஸ்லாம் அறிவின் அடிப்படையில் அவர்களை சொந்தப் பிள்ளைகளாக கருத முடிகிறது என்றும் சொல்கிறது.

சில மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாம் தத்தெடுப்பதை தடை செய்வதாக சுயமாக எழுதுகின்றனர், இது தவறானதாகும். அவதூறாகும். தத்தெடுப்ப்பது என்பது தனிப்பட்ட மனிதரின் குடும்ப உறவில் தலையீடாக அமையக் கூடாது என்பதும். தத்தெடுக்கப்படடவரை மகன் என்றோ மகள் என்றோ அழைக்கக் கூடாது என்பதுமே இஸ்லாமின் கோட்பாடாகும் .

இது வே சரியானது , சத்தியாமனது, சாத்தியமானது, அல்லாஹ் காட்டும் நேர்வழி என்பதே குர் ஆனின் வாதமாகும்.


இந்த உத்தரவுகளை சரியாகப் புரிந்து சிரமேற்கொள்வது உம்மத்தின் கடமையாகும். 


3 comments:

  1. வித்தியாசமான தலைப்பு ஆழமான அலசல் மிக அருமை ஷுக்ரன்

    ReplyDelete
  2. Alhamdhulillah. Jazakallah. Halrath

    ReplyDelete