வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 30, 2024

சாவிகள் கைமாறும்

 ஹஜ் என்பது ஹஜ்ஜுக்கு செல்லக் கூடிய ஹாஜிகளுக்கும் ஹாஜிகளை வழியனுப்பி வைக்க கூடிய மக்களுக்கும் ஈமானிய பலத்தை தரக்கூடியது.

நமது பயணங்களையும் ஹஜ்ஜின் மீதான ஆசையையும் அல்லாஹ் அப்படி ஆக்கியருள்வானாக!

வெறும் நான்கு திர்ஹம் அளவுக்கு மட்டுமே உணவுப் பெருட்களை எடுத்துக் கொண்டு ஹஜ்ஜுக்குப் புறப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி விட்டு இப்படி துஆ ஓதினார்கள்.

இறைவா! எனது ஹஜ்ஜை பெருமையற்றதாக புகழை நாடாததாக ஆக்கு!

حجَّ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ علَى رَحْلٍ رثٍّ وقَطيفةٍ تُساوي أربعةَ دراهمَ أو لا تُساوي ثُمَّ قالَ اللَّهمَّ حَجَّةٌ لا رياءَ فيها ولا سُمعةَ

الراويأنس بن مالك‏ | المصدرصحيح ابن ماجه

தற்காலத்தில் ஹஜ்ஜுக்கு செல்வதும், வழியனுப்புவதும் கூட பெருமையடித்துக் கொள்ள பயன்படும் காரியமாகி வருகிறது.

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ்ஜுக்கு செல்வோர் வழியனுப்பி வைக்கப்பட்ட்த்தாக வரும் புகைப்படங்களில் அவர்களுக்கு நல்லதை சொல்லி நல்ல வார்த்தைகளில் துஆ ஓதி வழியனுப்பி வைத்த்த ஒரு ஆலிமை பார்க்க முடியவில்லை. பெருத்தமற்ற அரசியல் ஆரவாரத்தை தான் பார்க்க முடிகிறது.

இதே போன்ற விளம்பர சிந்தனை ஹஜ்ஜுக்கு செல்வோரிடமும் ஹஜ்ஜுகு வழியனுப்பு வோரிடமும் இருக்குமானால் அதிக சிரமங்களை மேற்கொண்டு, நிறைய காசு பணத்தை செலவழித்து நடை பெறுகிற பயணம் உரிய பயனை தராமல் போய்விடும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

நாஹ் ஹஜ்ஜுக்கு செல்வதாக இருந்தாலும் ஹாஜிகளை வழியனுப்பி வைப்பதாக இருந்தாலும் ஒரு காரியத்தை மனதில் இருத்துவோம். இது ஈமானை பலப்படுத்தும் ஒரு அற்புத முயற்சியாகும்.

ஹஜ்ஜுக்கு செல்வோர் அனைவரையும் அல்லாஹ் அரபா எனும் ஒரு திடலில் ஒன்று திரட்டுகிறான். அல்லாஹ் ஒருவனே நம் வாழ்வில் எல்லாவற்றையும் விட பிரதானமானவன், அவனே அனைத்தையும் தர முடியும். அவனால் எதையும் எடுத்துக் கொள்ளவும் முடியும் என்பதை அங்கு வருகிற அத்தனை பேரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே!

ஒரு ஹாஜி இந்த ஈமானிய பலம் பெற்று வருவாரானால் அவருடைய ஹஜ்ஜு ஹஜ் மப்ரூர் ஆகிவிடும்.

ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் ஹஜ் மப்ரூருக்கு விளக்கம் சொன்னார்கள். எந்த ஹஜ்ஜுக்கு பிறகு ஒரு ஹாஜி உலகிற்கான முக்கியத்துவத்தை குறைத்து அல்லாஹ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாரே அது ஹஜ் மப்ரூர் என்றார்கள்.

ஹாஜியின் அனுபவங்கள்

ஹாஜி ஹஜ்ஜில் காணும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வை பற்றி அவரது நம்பிக்கைக்கு வலுவூட்டுபவை ஆகும்.

 فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا

மகாமே இபுறாகீம்

ஹஜருல் அஸ்வது

ஜம் ஜம் தண்ணீர்

போன்ற ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அல்லாஹ் நிலை நிறுத்திய அடையாளங்களாகும்.

அந்த அடையாளங்களை பார்க்கிற ஹாஜி அல்லாஹ்வின் சக்தியை கண்கூடாக புரிந்து கொள்கிறார்.

புரிந்து கொள்ள வேண்டும்.

ஜம் ஜமை குடித்து விட்டு சும்மா துஆ கேட்டால் மட்டும் போதாது, இது எவ்வளது பெரிய அல்லாஹ்வின் குத்ரத் அதிசயம் என்பதை சிந்திக்கவும் வேண்டும்.

ஜம் ஜம் வெறும் தண்னீரல்ல;

தனித்து விடப்பட்டிருந்த ஹாஜரா அம்மையாருக்கு அல்லாஹ் ஜம்ஜம் நீரூற்றை வழங்கினான்.

இஸ்மாயீல் (அலை) அவர்களின் தண்ணீர் தாகத்துக்கு தீர்வாக கிடைத்த அந்த நீர் இருக்கும் இடம் அறிந்து பறவைகள் வந்தன. பறைவகள பின் தொடர்ந்து மனிதர்கள் வந்தார்கள். அப்படி வந்த மனிதர்களில் ஜுர்ஹும் என்ற ஒரு கூட்டம் ஹாஜாரா அம்மையாரிடம் சம்மதம் பெற்று அங்கே தங்கிக் கொண்டனர்.

மக்கா நகரம் உருவாயிற்று.

ஜம் ஜம் ஒரு நகரின் வரலாறு. ஒரு புதிய சமூகத்தின் வரலாறு.

அதன் பிறகு இடைக்காலத்தில் படையெடுப்பாளர்களின் ஆக்ரமிப்பிற்கு ஆளான போது ஜம் ஜம் கிணறு மூடப்பட்டது.

அதை பெருமானாரின் பாட்டானார் அப்துல் முத்தலிப் மீண்டு தோண்டி எடுத்தார். அது முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வருகைக்கான முன்னறிவிப்புக்களில் ஒன்றாக இருந்தது.

அப்துல் முத்தலிப் மூடிக்கிடந்த ஜம்ஜம் கிணற்றை திரும்ப தோண்டிய போது அவருக்கு சொல்லப்பட்டது. இனி இது ஒரு போதும் வற்றாது.

وقيل لعبد المطلب في صفتها أنها لا تنزف أبدًا

அவ்வாறே இன்று வரை ஜம் ஜம் வற்றவில்லை.

இரண்டரை அடி விட்டமும், 30 அடி ஆழமும் கொண்ட ஒரு கிணறு நானகாயிரம் ஆண்டுகளாக பல லட்சம் மக்களுக்கு பாலை வனத்தில் இடைவிடாது தண்ணீரை தந்து கொண்டே இருக்கிறது என்றால் அது எத்தகைய பேர் அற்புதம். இதை கொடுத்த அல்லாஹ்வின் சக்தி எப்படிப்பட்டது என்பதை ஜம் ஜமை குடிப்போர் சிந்திக்க வேண்டும்,

மறைமுக அற்புதம் கஃபாவின் சாவி

கஃபாவின் முற்றத்தில் இருக்கிற ஏராளமான அற்புதங்களில் மற்றும் ஒன்று கஃபாவின் சாவி,

பெருமானாரின் பாட்டானரான குஸை, சில காலம் ஆகரமிப்பாளர்களிடம் சிக்கியிருந்த கஃபாவை மீட்டு ஜுர்ஹும் குடும்பத்தின் ஒரு கிளையான குறைஷிக் குலத்திடம் பெற்றுக் கொடுத்தார்

அவர் கஃபாவின் சாவிவை பராமரிக்கும் சதானத் எனும் பொறுப்பை அவரது மூத்த மகனான அப்து தார் இடம் ஒப்படைத்தார். அவரது வமிசத்திடமே அது தொடர்ந்து இருந்து வந்தது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அந்த குடும்பத்தை சார்ந்த உஸ்மான் பின் தல்ஹா என்பவரிடம் அந்த சாவி இருந்தது.  

استردها منهم قصي بن كلاب وهو من أبناء إسماعيل، وهو الجد الرابع للنبي محمد صلى الله عليه وسلم.
ثم صارت من بعده في ولده الأكبر عبد الدار، ثم صارت في بني عبد الدار جاهلية وإسلاماً، ولم تزل السدانة في ذريته حتى انتقلت إلى عثمان بن طلحة بن أبي طلحة بن عبد الله بن عبد العزى بن عثمان ابن عبد الدار بن قصي

ஒரு முறை உஸ்மான் பின் தல்ஹா கஃபாவின் கதவறுகே நின்று கொண்டிருந்தார். எல்லோருக்கும் கஃபாவை கதவை திறந்து விடுகிற உஸ்மான் பெருமானாருக்கு கதவை திறந்து விட மறுத்தார். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உஸ்மான்! ஒரு காலம் வரும் அப்போது நீ நிற்கிற இடத்தில் நான் இருப்பேன். என்னுடைய இடத்தில் நீ இருப்பாய்! அப்போது கஃபாவின் சாவி என்னிடம் இருக்கும். அன்று நீ விரும்பிய படி நான் நடந்து கொள்வேன் என்று சொன்னார்கள்.

அதற்கு உஸ்மான் கூறினார். அப்படி நடந்து அது குறைஷிகள் நாசமான நாளாகத்தான் இருக்கும் என்று கூறினார்.

மக்கா வெற்றியின் போது கஃபாவை திறக்க பெருமானார் உத்தரவிட்டார்கள். உஸ்மான் அழைத்து வரப்பட்டார். அவரிடமிருந்து சாவியை வாங்கிய அலி ரலி அவர்கள் கஃபாவை திறந்து விட்டார்கள். உள்ளே நுழைந்த பெருமானார் (ஸல்) அவர்கள் சாவிவை வாங்கி கதவை தானே மூடினார்கள். பின்னர் அங்கு தொழுது விட்டு கஃபாவை தானே திறந்தார்கள்.

அதன் பிற்கு வெளியே வந்து 7 அடி உயரத்தில் இருந்ந அதன் படிக்கட்டில் நின்றார்கள். கஃபாவின் சாவி பெருமானாரின் கையில் இருந்தது.

நபி (ஸல்) உஸ்மான் பின் தல்ஹா எங்கே என்று கேட்டு அவரிடம் கேட்டார்கள்  உஸ்மான் முன்னர் ஒரு தடவை உங்களிடம் நான் சொன்னது நினைவிருக்கிறதா என்று கேட்டார்கள். பிறகு சாவியை கொடுத்து  விட்டு

خذوها يا بني طلحة خالدة تالدة لا ينزعها منكم إلا ظالم

என்று சொன்னார்கள். தல்ஹாவின் மக்களே! இந்தச் சாவி இனி நிரந்தரமாக உங்களிடமே இருக்கும். அக்கிரமக்காரர்கள் தான் இதை உங்களிடமிருந்து பறிப்பார்கள்.  என்றார்கள்.

நெகிழ்ச்சியடைந்த உஸ்மான் சொன்னார் :  

فَقُلْتُ بَلَى أَشْهَدُ أَنّكَ رَسُولُ اللّهِ.

(இந்நிகழ்வை இப்னு சஃது உஸ்மான் பின் தல்ஹாவிடமிருந்து நேரடியாக இப்படி அறிவிக்கிறார்.)

ذكَرَ ابْنُ سَعْدٍ فِي الطّبَقَاتِ عَنْ عُثْمَانَ بْنِ طَلْحَةَ قَالَ: كُنّا نَفْتَحُ الْكَعْبَةَ فِي الْجَاهِلِيّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ فَأَقْبَلَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ يَوْمًا يُرِيدُ أَنْ يَدْخُلَ الْكَعْبَةَ مَعَ النّاسِ فَأَغْلَظْتُ لَهُ وَنِلْتُ مِنْهُ فَحَلُمَ عَنّي ثُمّ قَالَ:«يَا عُثْمَانُ لَعَلّك سَتَرَى هَذَا الْمِفْتَاحَ يَوْمًا بِيَدِي أَضَعُهُ حَيْثُ شِئْت» فَقُلْتُ لَقَدْ هَلَكَتْ قُرَيْشٌ يَوْمَئِذٍ وَذَلّتْ. فَقَالَ: «بَلْ عَمَرَتْ وَعَزّتْ يَوْمَئِذٍ» وَدَخَلَ الْكَعْبَةَ فَوَقَعَتْ كَلِمَتُهُ مِنّي مَوْقِعًا ظَنَنْتُ يَوْمَئِذٍ أَنّ الْأَمْرَ سَيَصِيرُ إلَى مَا قَالَ.

فَلَمّا كَانَ يَوْمُ الْفَتْحِ قَالَ:«يَا عُثْمَانُ ائْتِنِي بِالْمِفْتَاحِ» فَأَتَيْتُهُ بِهِ فَأَخَذَهُ مِنّي ثُمّ دَفَعَهُ إلَيّ وَقَالَ:«خُذُوهَا خَالِدَةً تَالِدَةً لَا يَنْزِعُهَا مِنْكُمْ إلّا ظَالِمٌ..يَا عُثْمَانُ إنّ اللّهَ اسْتَأْمَنَكُمْ عَلَى بَيْتِهِ فَكُلُوا مِمّا يَصِلُ إلَيْكُمْ مِنْ هَذَا الْبَيْتِ بِالْمَعْرُوفِ» قَالَ فَلَمّا وَلّيْت نَادَانِي فَرَجَعْتُ إلَيْهِ فَقَالَ:«أَلَمْ يَكُنْ الّذِي قُلْتُ لَكَ؟» قَالَ فَذَكَرْت قَوْلَهُ لِي بِمَكّةَ قَبْلَ الْهِجْرَةِ لَعَلّك سَتَرَى هَذَا الْمِفْتَاحَ بِيَدِي أَضَعُهُ حَيْثُ شِئْت فَقُلْتُ بَلَى أَشْهَدُ أَنّكَ رَسُولُ اللّهِ.

வரலாற்றின் ஒரு பேராச்சரியம்.

அரபு உலகின் ஆட்சி அதிகாரம் பல கரங்களில் கைமாறி வந்த போதும் கஃபாவின் சாவி தொடர்ந்து உஸ்மான் பின் தல்ஹாவின் குடும்பத்தினரிடமே இன்று வரை இருந்து வருகிறது.

அக்குடும்பத்தினர் ஷைபிய்யீன் என்று அழைக்கப்பட்டனர்.  

அவர்களின் வாரிசுகளி தற்காலத்தில் பிரதானமானவராக ஷைக் முஹம்மது ஜைனுல் ஆபீதீன் இருந்தார். தற்போது அவருடைய மகன் ஷைக் சாலிஹ் என்பவரிடம் தான் கஃபாவின் சாவி இருக்கிறது.

سدانة الكعبة المشرفة في هذا العصر : جميع آل الشيبي الموجودين في هذا العصر هم من أبناء الشيخ محمد بن زين العابدين رحمه الله تعالى

فهؤلاء هم السدنة الموجودين حاليا وهم محل احترام وإكرام كما دلت على ذلك الأخبار الواردة في حقهم وهم لا يزالون في موضع الإكرام والرعاية عند عموم حكام المسلمين وبالأخص عند كل من تولى خدمة الحرمين الشريفين

 

கஃபாவின் சாவி பெருமானார் சொன்ன அந்தக் குடும்பத்திடமே இருக்கிறது என்பது மட்டும் அதிசயமல்ல; அதன் ஊடாக இன்னொரு பேரதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடும்பம் இன்றளவும் தழைத்து நிற்கிறது.

 

ولا يزال وجودهم من معجزات رسول الله صلى الله عليه وسلم التي اخبر أمته بها بقوله صلى الله عليه وسلم خذوها يا بني طلحة خالدة تالدة لا ينزعها منكم إلا ظالم

ஹாஜிகள் உணரும் இந்த அல்லாஹ்வின் பேராற்றல் உலகிற்கு ஒரு செய்தியை அழுத்தமாக சொல்கிறது.

அதிகாரம் அல்லாஹ்வின் தீர்மாணத்திலேயே நிலைக்கிறது. எந்த ஒரு செல்வாக்கும் எப்படி நிலைக்கும் என்பதை அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான்.

இப்போது பாலஸ்தீனின் ரபா மக்களை இஸ்ரேல் மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காஸாவில் புலம் பெயர்தோர் குடியிருக்கிற ஒரு முகாமின் மீது வான் வெளித்தாக்குதல் நடத்தியதில் குறைந்த பட்சம் 45 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள்.

இத்தாக்குதல் திட்டமிட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கொடூரமான  இனப்படுகொலை ஆகும்.  

சமீபத்தில் சர்வதேச நீதிமன்றம் காஸாவின் மீதான் இஸ்ரேலின் தாக்குதலை பேர்க்குற்றம் என்று அறிவித்திருந்தது. அவ்வாறு அறிவித்த சில மணி நேரங்களில் தனது சட்டாம்பிள்ளைத்தனத்தை உலகிற்கு காட்ட இஸ்ரேல் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துள்ளது.

உலகின் அனைத்து தரப்பு மக்களையும் இது கடும் கொந்தளிப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. தாக்குதல் நிகழ்ந்த சிறிது நேரத்தில் பிரான்ஸின் அதிபர் மெக்ரோன் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து உலகத்தலைவர்கள் பலரும் தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். இது உள்ளத்தை உருக்கும் படி இருக்கிறது என்று கூறிய அமெரிக்கா மீண்டும் தனது வஞ்சக வாய்ப்பாட்டை வாசித்துள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கை காஸாவை நிரந்தரமாக ஆக்ரமிக்கும் நடவடிக்கையாக தான் கருதவில்லை என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்தப் பிரச்சினை இப்போது சர்வதேச அளவில் கொளுந்து விட்டு எரிந்தாலும் இதில் இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளும் ஐரோப்பிய மற்றும் நடுநிலை வகிக்கும் நாடுகளும் இன்னும் தீவிரமாகவும் உண்மையாகவும் செயல்பட்டாக வேண்டும். இல்லை இது போன்ற மனித படுகொலையை இஸ்ரேல் இன்னும் கொடுமையாக நட்த்திக் கொண்டே இருக்கும்.

ஐரோப்பிய நாடுகள் வெறுமனே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது அல்லது இஸ்ரேலை கண்டித்து அறிக்கை விடுவது என்ற பழைய பஞ்சாங்கத்தை நிறுத்தி விட்டு இஸ்ரேலுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வது விமானப் போக்குவரத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதுவே இப்போதைய சூழ்நிலையில் காஸா மக்கள் மீது காட்டுகிற உண்மையான கருணையாக இருக்க முடியும்.

அத்தோடு சுதந்திர பாலஸ்தீனத்திற்கான  முழு மூச்சான முயற்சிகளும் வெளிப்படையாக மேற்கொள்ளப் பட வேண்டும்.

அரபு நாடுகள் – முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து சுதந்திர பாலஸ்தீன் என்ற இந்த இறுதி இலக்கை நோக்கி உறுதியாக  நகர வேண்டும்.

இதில் எந்த தடுமாற்றமும் – சமரசமும் இருக்கவே கூடாது.

தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடை பெற்று வருகிற மக்கள் போராட்டங்களும் சில அரசுகள் வெளிப்படுத்திய பகிரங்க கோபமும் ஒரு வகையில் மனதுக்கு ஆறுதலாக இருந்தாலும் இன்னொரு புறம் ஆதிக்க வல்லூறுகள் இதற்கெல்லாம் மசிவது  போல நாடகமாடி  முன்னர் பாலஸ்தீனர்களுக்கு நகராட்சி உரிமையை வழங்கியது போல உப்புச் சப்பில்லாத அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து விடக் கூடாதே என்ற அச்சமும் இருக்கிறது.

பி எல் அமைப்பின் யாசர் அரபாத் அமெரிக்க அதிபர்  கிளிண்டனுடன் செய்து கொண்ட ஓஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன் மண்ணுக்கு என்ன  பலனை தந்தது என்பது இன்று வரை பெரும் கேள்விக்குரிதான் . இதற்குள்ளாக ஒரு தலைமுறை கடந்து விட்டது. 

எனவே ஒரு கோட்பாட்டளவிலான போராட்டம் என்றால் இஸ்ரேல் இல்லாத பாலஸ்தீன் என்பதே சரியானது. இதில் முஸ்லிம் உலகம் ஒன்று பட்டு நிற்குமானால் அது வரலாற்றுக்கு சமீபமான தொலைவில் நிகழ்ந்தே தீரும். அது தற்போதைக்கு சாத்தியமாகாது எனில் இஸ்ரேல் அங்கீகரிக்கும் பாலஸ்தீன் என்று ஒரு நாடு உருவானால் அது முழு சுதந்திர பாலஸ்தீனாக மலர வேண்டும்.

பாலஸ்தீனின் எந்த அதிகாரமும் இஸ்ரேல் சார்ந்த்தாக இருக்க கூடாது.

அத்தோடு கடந்த சில மாதங்களாக காஸாவில் நடை பெற்ற இரக்கமற்ற படுகொலைகளுக்கு இஸ்ரேல் பிரதமர் போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதி மன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.

மகா கண்ணியம் பொருந்திய முஹம்மது நபி (ஸல் ) அவர்களை கஃபாவிற்குள் அனுமதிக்க மறுத்த பனூ ஷைபாக்கலின் அதிகாரத்தை வெகு சீக்கிரத்தில் தலைகீழாக மாற்றிக் காட்டிய அல்லாஹ் அந்த மாற்றத்தை இப்போதைய பாலஸ்தீனில் நிகழ்த்திக் காட்ட சக்திபடைத்தவன்.

அந்த அல்லாஹ்வின் மீத் உறுதியான நம்பிக்கை வைத்து சுதந்திர பாலஸ்தீனம் என்ற தீர்மாணத்தில் நிலையாக நின்றால் நிச்சயம் விரைவில் அல்லாஹ் நல்ல தீர்வை தருவான்.

பெருமானாரின் கைகளில் கஃபாவின் சாவியை கைமாற்றியது போல.

அல்லஹ் தவ்பீக் செய்வானாக! பெருந் துயருக்கு உள்ளாகியிருக்கிற காஸா மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! அக்கிரமக் கார இஸ்ரேலை அல்லாஹ் அழித்தொழிப்பானாக! முஸ்லிம்களுக்கு அதற்கு தகுந்த உதவியை செய்தருள்வானாக!

 (மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹரம் முற்றத்திலிருந்து)

   

7 comments:

  1. அல்லாஹ் உங்களின் ஹஜ்ஜையும் இதர அமல்களையும் சமூக சேவைகளையும் பொருந்திக் கொள்வானாக!

    உங்களின் மேலான துஆவில் எங்களை மறந்து விடாதீர்கள் ஹழ்ரத்

    ReplyDelete
  2. Anonymous6:05 PM

    மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. அல்லாஹ் தங்களுடைய ஹஜ்ஜை நன்மைக்குரியதாக அங்கீகரிப்பானாக மன நிறைவான பயணத்தை வழங்குவானாக தாங்கள் செய்யும் அனைத்து துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக எங்களுக்காகவும் தங்கள் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  4. Anonymous11:45 PM

    Masha Allah

    ReplyDelete
  5. அருமையான பதிவு நன்றி இமாம் அவர்களே
    அக்பர் சார்ஜா மதுக்கூர்

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் குறிப்பு பேரற்புதம்

    ReplyDelete