வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 18, 2021

இறப்பிலும் விடாத ஜாதி ; இறந்த பிறகும் கைவிடாத இஸ்லாம்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

 ٱللَّهُ وَلِىُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ

தமிழகத்தில் இன்று ஜாதீய அடக்குமுறைகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது.

நாடு சுதந்திரம் 75 ஆண்டுகளை கடந்த பிறகும் கூடமக்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு முன்பை விட பன்மடங்கு வளர்ந்திருக்கிற நிலையிலும் கூட ஜாதீய ஒடுக்குமுறைக்கு ஆளாவதிலிருந்து இந்திய மக்களில் ஒருசாரார் இன்னும் பாதுகாப்பு பெறவில்லை.  ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசின் அதிகாரம்மிக்க சபைகளில் கூட ஜாதீய ஆதிக்கம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் உலகிற்கு சொல்லிக் கொள்ள முஸ்லிம்களிடம் ஒற்றைச் செய்தி இருக்கிறது. “இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே தீர்வுவாருங்கள் இஸ்லாம் உங்களுக்கு மரியாதையான வாழ்கை தர காத்திருக்கிறது.

இஸ்லாத்திலும் பிரிவுகள் இல்லையா என்று சிலர் இடைக்கேள்வி கேட்டு திசை திருப்ப பார்க்கிறார்கள். இஸ்லாத்தில் ஷியா சுன்னீ ஹனபீ ஷாபி சுன்னத் ஜமாத் வஹாபிஸம் என்ற எந்த பிரிவாக இருந்தாலும் சரி. நீங்கள் விரும்பும் பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஜாதியில் அப்படி முடியுமா ? எனவே இது தவறான ஒப்பீடும். தப்பான வாதமுமாகும்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளிலிருந்து மனித சமூகம் நிம்மதி அடைய முடியும்.

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு சட்டம் உதவும் என்று நம்பப் படுகிறது.  சமூகம் தராத பாதுகாப்பை சட்டம் எல்லா இட்த்திலும் தந்துவிடும் என்று எதிர்பார்க்க் முடியாது.

அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சட்டம் பாதுகாப்பு தரவில்லையா ? அங்கே கறுப்பர்களின் நிலை என்ன ?

இந்திய அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்கவில்லையா ? இங்கே அடித்தட்டு மக்களின் நிலை என்ன ?

அனைத்து வகையான இருட்டிலிருந்தும் மக்களை வெளியேற்றும் ஒரே சக்தி இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமே இருக்கிறது.

14 நூற்றாண்டுகளுக்கு முன் பாரசீக படைத்தளபதி ருஸ்துமிற்கு இஸ்லாமின் நோக்கம் என்ன என்பது பற்றி நபித்தோழர் ரிப்இ பின் ஆமிர் இப்படி விளக்கினார்.

قال له رستم: ما جاء بكم؟ فقال له: لقد ابتعثنا اللهُ لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد، ومن جور الأديان إلى عدل الإسلام، ومن ضيق الدنيا إلى سعة الدنيا والآخرة

இன்றைக்கும் இது பொருந்தும்.

இஸ்லாமிடம் மட்டுமே இன்றைய உலகிற்கான நம்பிக்கை ஒளி இருக்கிறது.

இறப்பிலும் கூட இன இழிவை இந்திய சமூக அமைப்பு விடுவதில்லை. இறப்பிற்குப் பிறகும் மனிதருக்கான மரியாதையை இஸ்லாம் விடுவதில்லை.

ஒரு முஸ்லிம் இறந்தால் கூட மிக மரியாதையாக அடக்கம் செய்யப்படுவார் அவர் எத்தகையவராக இருந்தாலும். ஏழை பணக்காரன். குடும்பஸ்தன், ஒண்டிக்கட்டை, ஊர்க்காரன், அந்நியன் தெரிந்தவன தெரியாதவன் என யாராக இருந்தாலும்.

ஒரு உடலுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை என்றால் ஊர் முழுவதும் குற்றவாளியாகும்.

மதுரையில் ஒரு சகோதரர் இப்போதும் வாழ்கிறார்;

அவர் முஸ்லிமாகி விட்டார். ஆயினும் பெற்றோர் முஸ்லிமாக வில்லை. 17 வருடங்களாக இந்நிலை தொடர்ந்த்து. ஒரு பக்கம் அவர் குர் ஆன் ஓதிக் கொண்டிருப்பார். மறுபக்கம் அவரது தாய் பைபிள் படித்துக் கொண்டிருப்பார், ஒரு சுவற்றில் இஸ்லாமிய காலண்டர் மறுபக்கம் பைபிள் காலண்டர் என அவரது வீடு இரு மதங்களாக இருந்த்து. அவரது பெற்றோரை அவர் இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறை ஜும் ஆ விற்கு கிளம்பும் போதும் வா அப்பா! தொழுதுவிட்டு வரலாம் என தந்தையை அழைப்பார், நீ போய்ட்டு வா என அவர் சிரித்துக் கொண்டே சொல்லி விடுவார். 17 வருடங்களுக்குப் பிறகு திடீரென ஒரு வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. மகனே இன்று நான் பள்ளிவாசலுக்கு வருகிறேன்.

இத்தனை ஆண்டுகள் கழித்து அவரது இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் ?

சில வாரங்களுக்கு முன் அவரது மனைவி இறந்து போனார். அதற்கு முன் அவர் இஸ்லாமை தழுவியிருந்தார். இறப்பு செய்தி அறிந்து முஸ்லிம் பெண்கள் ஏரளமானோ அங்கு திரண்டனர். இறந்த பெண்ணின் உடலை தீட்டாக கருதாமல் ஏதோ நெருக்கமான ஒரு உறவை கையாள்வது போல் பூப் போல கையாண்டு குளிப்பாட்டி கபனிட்டனர். தனது மனைவிக்கு கிடைத்த இந்த மரியாதையை பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாமாகிவிடலாம் என்று தோன்றியிருக்கிறது, அந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமை தழுவிவிட்டார்.

மனித உடலுக்கு இறந்த பிறகு இஸ்லாம் தருகிற மரியாதையைப் பார்த்து முஸ்லிமான மனிதர் அவர்,  

ஒரு முஸ்லிமுக்கான இந்த மரியாதை எங்கு இறந்தாலும் கிடைக்கும் என்ற  உத்தரவாதம் உண்டு,

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வபாத்தான ஷைகுல் ஹதீஸ் லால்பேட்டை அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் கூறினார்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளருமான அல்லாமா,  எஸ் ஆர் ஷம்சுல் ஹுதா ஹஜரத் அவர்களை ஒரு கிளி ஜோசியக்காரர் அடிக்கடி சந்திப்பார். ஹழரத் அவர்கள் அவரிடத்தில் வேடிக்கையாக  :  "எப்படிப்பா உனக்கு ஜோசியம் தெரிஞ்சுது" என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்  "புத்தகத்தை பார்த்து பார்த்து விஷயத்தை எழுதி வச்சிருக்கேன் கிளி ஒரு சீட்டு எடுத்து கொடுத்தா அதை நான் படிப்பேன் பாதி அவருக்கு புரியாது மீதி எனக்குப் புரியாது. ஆனா நல்ல விஷயமாக சொல்றதுனாள எட்டணா காசு கொடுப்பாங்க." என்று கூறினார்

ஒருநாள் அந்த கிளி ஜோசியக்காரர் ஹழரத் அவர்களை சந்தித்து.  நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறேன் என்றார் . ஏன் என்று ஹழரத் அவர்கள் காரணம் கேட்டார்கள்.  அவர் சொன்னார் : " ஐயா நான் தனிக்கட்டை. எனக்கு உறவுகள் யாரும் இல்லை நான் இறந்து போனால் என்னைச் சார்ந்தவர்கள் இவன் எந்த ஜாதியோ என்ன குலமோ என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அருகே வர மாட்டார்கள். நான் முஸ்லிம் ஆகிவிட்டால் எனக்கு அந்த நிலை ஏற்படாது அல்லவா? 

அது சரி நீ முஸ்லிம் ஆகிவிட்டால் உன்னுடைய தொழிலை நீ பார்க்க முடியாதே! ஏதாவது கடையில் வேலை பார்த்து கொள்கிறாயா ?  என்று ஹழரத் கேட்க, அதற்கவர் சம்மதித்தார்.

அதன்பிறகு அவர் இஸ்லாமை தழுவினார். ஒரு உணவகத்தில் ஹழ்ரத் அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்கள்.

எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் இந்த மரியாதை கிடைக்கும்.

கொரோனோ தொற்று பற்றிய அச்சத்தால் இறந்தவர்களை எரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் சில அதிகாரிகள் கூறிய போது அதை மறுத்து எங்களிடம் தாருங்கள் நாங்கள் அடக்கம் செய்து கொள்கிறோம் என்று முஸ்லிம்கள் மன்றாடி முஸ்லிம் உடல்களை நல்லடக்கம் செய்தார்கள்.     

கொரோனோ கால கட்டத்தில் மேட்டுப்பாளையத்தைச் சார்ந்த ஒரு இன் ஞினியர் டெல்லியில் இறந்தார். அங்கு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

 

அதே கொரோனா காலகட்ட்த்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன நடந்த்து இந்தியாவில் என்பது உலகறியும்.

ஆந்திராவைச் சார்ந்த 60 வயது மருத்துவர் சென்னை அம்பத்தூரில் இறந்த போது அவரது உடலை அம்பத்தூரில் உள்ள மயானத்தில் எரிக்க கூட மக்கள் மறுத்தார்கள் .

அதே சென்னையில் சைமன் என்ற மருத்துவர் கொரோனாவில் இறந்த போது அவரை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதி இடுகாட்டிற்கு கொண்டு சென்ற போது அங்குள்ள மக்கள் திரண்டு அந்த உடலை சுமந்த மந்த ஆம்புலன்ஸை தாக்கி உறவினர்களை அடித்து விரட்டினர். உறவினர்கள் அந்த உடலை அப்படியே போட்டு விட்டு ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பாண்டிச்சேரியில் மற்றொரு ஒரு உடலை ஊழியர்கள் புதருக்குள் வீசிச் சென்றனர்.    

எப்படித்தான் வாழ்ந்தாலும் கடைசியில் இப்படி ஒரு மோசமான நிலையை சந்திப்பது பெரும் வேதனையாகும்.

மனித குலத்தை இத்தகைய துன்பத்திலிருந்து காத்த பெருமை இஸ்லாமிற்கே உரியது. அந்த சாதனைகளுக்கு சொந்தக் கார்ர் முஹம்ம்து நபி (ஸல்) அவர்கள் மாத்திரமே!

இறந்தவரை அடக்கம் செய்வது அதுவும் அந்த உடலை விலங்குகள் தோண்டிவிடாத அளவிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் உடல் வெளியே வந்து விடாத அளவிலும் அடக்கம் செய்வது கடமை என்று குறுகிறது இஸ்லாம்.

அந்த உடல் மாற்றுமத்தவருடையதாக இருந்தாலும் சரி.

 عن أبي سعيدٍ الخُدْريِّ رضِيَ اللهُ عنه، أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قال((اذهبوا، فادْفِنوا صاحِبَكم)

عن جابرٍ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال((ادفِنوا القَتْلى في مصارِعِهم

அதனால் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகீறார்கள்

يجب دفن الميت - أي مواراة جيفته في حفرة - بحيث لا تنبشه السباع، ولا تخرجه السيول المعتادة، ولا خلاف في ذلك، وهو ثابت في الشريعة ثبوتًا ضروريًّ حتى لو كان كافرًا

 

الكافِرُ إذا هَلَك بين ظهرانَيِ المسلمينَ، وليس له مِن أَهْلِ دِينِه مَن يَدْفِنه؛ واراه المسلمونَ، وهذا باتِّفاقِ المذاهِبِ الفقهيَّةِ الأربعةِ:

அபூதாலிபை அடக்கம் செய்த அலி ரலிக்காக பெருமானார் துஆ செய்தார்கள்

 

عن علي رضي الله عنه قال: قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم: إِنَّ عَمَّكَ الشَّيْخَ الضَّالَّ قَدْ مَاتَ، قَالَ: «اذْهَبْ فَوَارِ أَبَاكَ، ثُمَّ لَا تُحْدِثَنَّ شَيْئًا حَتَّى تَأْتِيَنِي»، فَذَهَبْتُ فَوَارَيْتُهُ وَجِئْتُهُ، فَأَمَرَنِي فَاغْتَسَلْتُ، وَدَعَا لِي- سنن أبي داود

நபி (ஸல் அவர்கள் ஒரு மனிதரின் இறப்பு மரணப் படுக்கையில் இருக்கிற செய்தி அறிந்தாலே அங்கே சென்று அவர் அருகே உட்கார்ந்து நல்ல வார்த்தைகள் சொல்வார்கள். அவர் இறந்து விட்டால் கண்களை மூடுவார்கள். அடக்கம் செய்யப்படும் வரை உடனே இருப்பார்கள்.

 

கப்ரு வெட்டுபவருக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என ஹதீஸ் வருகிறது.

 

عن رجل من الأنصار قال: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَأَنَا غُلامٌ مَعَ أَبِي، فَجَلَسَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى حُفَيْرَةِ الْقَبْرِ، فَجَعَلَ يُوصِي الْحَافِرَ وَيَقُولُ: «أَوْسِعْ مِنْ قِبَلِ الرَّأْسِ، وَأَوْسِعْ مِنْ قِبَلِ الرِّجْلَيْنِ، لَرُبَّ عَذْقٍ لَهُ فِي الْجَنَّةِ مسند الإمام أحمد

 

நபி (ஸல்) அவர்களே கூட கப்ருகளில் இறங்கி அடக்கம் செய்திருக்கிறார்கள்

5 நபர்களின் கப்ருகளில் இறங்கி பெருமானார் அடக்கம் செய்திருக்கிறார்கள்.

 

1.   கதீஜா (ரலி) மக்காவில் ஜன்னத்துல் முஅல்லா கப்ருஸ்தானில்  

மதீனாவில் 4 பேர்

2.       அப்துல்லாஹ் அல் முஜ்னி துல்பிஜாதைன்

3.       பெருமானாரின் மகன் இபுறாகீம் (ரலி).

4.       அபூபக்கர் ரலி அவர்களின்  மனைவி உம்மு ரூமான் ரலி

5.       அலி (ரலி) அவர்களின் தாயார் பாத்திமா பின்து அஸத் (ரலி)

 

மய்யித்களை மென்மையாக கையாள பெருமானார் (ஸல்) உத்தரவிட்டார்கள்

 

وعن عائشة رضي الله عنها: أن رسول الله ﷺ قال: كسر عظم الميت ككسره حيًّا. رواه أبو داود 

 

இறந்த மனிதருக்கு இறுதிச் சடங்கு செய்வதை ஒரு அளப்பெரிய நன்மை என்று பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

وعن أبي رافع قال: قال رسول الله صلى الله عليه وسلممن غسل ميتا فكتم عليه غفر له أربعون مرة، ومن كفن ميتا كساه الله من سندس وإستبرق الجنة، ومن حفر لميت قبرا وأجنه فيه أجري له من الأجر كأجر مسكن إلى يوم القيامة. رواه الحاكم.

 

 عن أبى هريرة رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: "مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يَتْبَعْهَا فَلَهُ قِيرَاطٌ، فَإِنْ تَبِعَهَا فَلَهُ قِيرَاطَانِ، قِيلَ: وَمَا الْقِيرَاطَانِ؟ قَالَ: أَصْغَرُهُمَا مِثْلُ أُحُدٍ

மய்யித்தை அடக்கம் செய்த பிறகு அவருக்காக துஆ செய்யவும் பெருமானார் அறிவுறுத்தினார்கள். இது ஒரு கடமையை உணர்வுப் பூர்வமனாதாக்குகிறது. நாளை நமக்காகவும் துஆ செய்பவர்கள் வேண்டும் என்று சிந்தித்து செயல்பட தூண்டுகிறது

عثمان بن عفان t قال: كان النبي ﷺ إذا فرغ من دفن الميت وقف عليه، وقالاستغفروا لأخيكم، وسلوا له التثبيت، فإنه الآن يسأل[1]رواه أبو داود.

 

கப்ரையும் மதிக்க பெருமானார் கற்றுத்தந்தார்கள்

فإذا رجلٌ يمشي في القبورِ عليْهِ نعلانِ، فقال: يا صاحبَ السِّبتيَّتينِ، ويحَكَ ألقِ سبتيَّتيْكَ فنظرَ الرَّجلُ فلمَّا عرفَ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ خلعَهما فرمى بِهم

 

மனிதர்களை உன்னதமாக மதிக்கிற இந்தப் பழக்கம் பெருமானாரின் காலத்திலிருந்து முஸ்லிம்களிடம் இன்று வரை நிலைத்திருக்கிறது.

 

சுனாமி காலத்தில் இறந்து போன ஏரளமான சடலங்களை நாகூர் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் தர்கா வளாகத்தில் முஸ்லிம்கள் அடக்கம் செய்துள்ளனர்.

 

கோவையில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியரால் பாலியல்  துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்த மாணவியின் உடலுக்கு அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஞாயிரன்று தகுந்த மரியாதை செய்து அடக்கம் செய்தனர்.   

 

இவை அனைத்தும்  மரியாதைக்குரிய மனித இனத்தை எல்லா நிலையிலும் மதித்து வாழ இஸ்லாம் கற்றுக் கொடுத்த வழிமுறைகளாகும்.

இந்த வழி ஒன்று மட்டுமே இன்றைய உலகின் பிரச்சனைகளுக்கான ஒற்றை தீர்வாகும்

அல்லாஹ் இதை புரிந்து கொள்ள மனித குலத்திற்கு வாய்ப்பளிப்பானாக!

முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள் இஸ்லாமின் இந்த வழிகாட்டுதல்களின் படி இறந்தவர்கள் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை செய்யுங்கள். இக்லாஸாக.

இந்த உலகில் கிடைக்கிற விளம்பரத்தை விட நாளை மறுமையின் நன்மைகளை எண்ணிப்பாருங்கள்!

சுய அடையாளத்தை பிரதானப் படுத்துவதற்காக இந்த அருமையான செயல்களை செய்யவேண்டாம்.

அது இந்த உல்கிலும் மரியாதையை பெற்றுத்தராது. மறுமையிலும் தான்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment