வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 05, 2023

அதிகாரம் ஃகிலாபத் ஆகும் வழி

மனிதர்களை அல்லாஹ் திட்டமிட்டு செயல்படும் அதிகாரிகளாக ஆக்கியிருக்கிறான்.

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ

குடும்பம் அல்லது கடை அல்லது பெரிய நிறுவனம் அல்லது சமூக அமைப்புக்கள் அல்லது அரசியல் கட்சிகள் அல்லது அரசு என ஏதேனும் ஒன்றில் அதிகாரம் செய்யும் வாய்ப்பு எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கிறது.

அந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவர் ஃகலீபா எனும் கடமையை சரியாக செய்தவர் ஆவார்.

உமர் ரலி அவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தின் அதிகாரம் கிடைத்த்தது. அதை எவ்வளவு அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை சிந்திப்போம்.

குர் ஆனை புத்தக வடிவில் ஆக்கிக் கொடுத்தது அவர்களது திட்டமே

தராவீஹ் தொழுகை அவரது திட்டமே

இன்றும் சிறப்புற்று திகழும் கூபா பஸரா எனும் இராக்கின் இரண்டு நகரங்கள் அவருடைய திட்டமே

ஹிஜ்ரீ வருடம் என்ற ஆண்டுக்கணக்கு அவருடைய திட்டமே

இந்தப்பட்ட்டியல் நீளமானது. உதாரணத்திற்கு இவைகளை குறிப்பிடுகிறோம். ஒரு மனிதருக்கு அதிகாரம் கிடைத்த போது அவர் இந்த சமூகத்திற்கு என்ன செய்தார் என்பது அவருடைய அதிகாரம் ஃகிலாபத்தாக இருந்த்தா என்பதை அறிந்து கொள்ளவும் அவர் ஃகலீபாவாக இருந்தாரா என்பதை அறிந்து கொள்ளவும் உதவக்கூடியது.

இந்திய ஆட்சியாளர்களில் ஷெர்ஷே சூரி என்றொருவர் உண்டு, அவர் வரலாற்றில் முகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்கு இடையே ஏதோ வானத்திலிருந்து வந்து விழுந்தவர் போல தீடீரென இந்தியாவின் பேரரசர் ஆனார். இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியை நிறுவிய பாபரின் மகன் ஹுமாயூனை விரட்டி விட்டு ஆட்சியில் அமர்ந்தார். ஷெர்ஷா இறந்த பிறகே மீண்டும் ஹுமாயூன் ஆட்சியை கைப்பற்றி முகலாய சாம்ராஜ்யத்தை தொடர்ந்தார்.

1540 லிருந்து 1545 வரை ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த ஷர்ஷாவின் பணிகளை விக்கீபீடியா பட்டியலிடுகிறது

இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் ரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும்.

மேலும் இவர் இந்திய அஞ்சல் துறையை புணரமைத்தார்

மேலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்த பாடலிபுத்திரத்தைப் புதுப்பித்து பாட்னா எனவும் மாற்றினார்

இன்று நகரங்களை இணைக்கிற பெரும் சாலைகள் பல உருவாகிவிட்டன. ஆனால் அன்றைய இந்தியாவில் சிட்டகாங்கில் இருந்து இன்றைய பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் வரை இணைக்கும் கிராண்ட் டிராங்க் சாலையை  சேர்ஷா சூரி உருவாக்கினார்.

எல்லாவற்றையும் விட பிரதானமாக இன்று வரை நம்முடைய நாட்டில் நிலங்களை அளவு செய்வதில் ஷெர்ஷா சூரி போட்டுக் கொடுத்த நில அளவை திட்டங்கள் தான் நடைமுறையில் இருக்கிறது.

முகலாய மன்னர் ஷாஜஹான் தனது அதிகாரத்த்தின் அடையாளமாக தில்லி ஜும் ஆ மஸ்ஜித் செங்கோட்டை தாஜ் மஹால் ஆகியவற்றை உருவாக்கினார்.

மாமன்னர் அவுரங்கஜீப் தனது அதிகாரத்தின் அடையாளமாக ஃபதாவா ஹிந்திய்யா எனும் ஃபதாவா ஆலம்கீரியையும் அரசாங்கப் பணத்தை உல்லாசம் அனுபவிக்காத நேர்மையையும் விட்டுச் சென்றுள்ளார்.

ஒரு குடும்பத்தை வழி நடத்தும் போது கூட நம்மிடமிருந்து நமது குடும்பம் எந்த நன்மையை பெற்றது அது பாரம்பரியத்திற்கும் தொடருமா என்பதை சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

ஒரு கடைக்கு உரிமையாளராக இருக்கிறீர்கள். அல்லது மேனேஜராக இருக்கிறீர்கள் அதில் நினைவு கூறப்படுகிற அளவு நாம் செயல்படுகிறோமா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு இலட்ச ரூபாய்க்கு இந்திய மக்களுக்கு கார் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்தவர் என்ற பெருமை ரத்தன் டாடாவுக்கு உண்டு.

அவரது முயற்சி எந்த அளவில் வெற்றி பெற்றது என்பது வேறு விசயம். ஆனால் அவரது சிந்தனை நிச்சயம் வரலாற்றில் நிற்கும்.

இன்று நாம் இஸ்லாத்தின் நான்கு கலீபாக்களையும் மதிக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் இஸ்லாத்தின் முதல் ஆட்சியாளர்களான கலீபாக்களின் பெயரைச் சொல்லி சமுதாயம் பிளவு பட்டுக் கொண்டிருந்தது. அலி ரலி எல்லோரையும் விட உயர்வானவர் என்று தாங்களாக ஒரு கோஷத்தை இருவாக்கி கொண்டு ஒரு கோஷ்டி அரசியல் செய்து கொண்டிருந்த போது போது நான்கு கலீபாக்களும் சம மரியாதை கொடுத்து ஜும் ஆவில் துஆ கேட்கும் வழமைய ஏற்படுத்தியவர் உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ், இன்றும் அவரது நற்சிந்தனை மக்களை நல் வழிப்படுத்திக் கொண்டிருக்கீறது.

 

அதிகாரம் கிடைக்கிற போது அதனால் பெருமைப்படுகிறவர்களாக – கர்வம் கொள்ப்வர்களாகவே பெரும்பாலும் மக்கள் வாழ்ந்து விடுகிறார்கள்.

தனக்கு கிடைத்த அதிகாரத்தால் பயன்மிக்க எத்தனை சாதனைகளை விட்டுச் செல்கிறோம் என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகாரத்தால் தான் பெருமை அடைவதை விட அதிகாரம் தன்னால் பெருமையடை வேண்டும் என்று நினைக்கும் அதிகாரி ஃகலீபா ஆகிவிடுவார்.

அதிகாரி, ஃகலீபா ஆவதற்கு தேவைப்படும் அடிப்படை சிந்தனை இது.

இதற்கு துணை செய்கிற அம்சங்களில் பிரதானமானது நன்மை செய்கிற சிந்தனை

அதிகாரத்தின் பெருமை மட்டுமே போதுமானது என்று பலரும் நினைக்கிறார்கள் . தலைவராக இருக்கிறேன். சுழல் விளக்கு சுற்றும் வாகனம் இருக்கிறது. பாதுகாவலர்கள் புடை சூழ வருகிறார்க:ள். கைகட்டி நிற்கிற ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே பெரிதாக நினைக்கிற பலர் இருக்கிறார்கள்.

நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு என்ன நன்மை நடந்தது என்று சிந்திக்க வேண்டும்.

இதுவரை நடந்து வருகிற நற்காரியங்களை தொடர்ந்து நடக்கிறதா என்பதை கவனிப்பதே அதிகாரத்தின் முதல் பணியாகும்.

நாங்கள் வீட்டில் வியாழக்கிழமை இரவு தோறும் ஒன்றாக உட்கார்ந்து யாசீன் ஓதுவோம் இப்போது அது தவறிவிட்ட்து என்று ஒருவர் கூறினார். அதை மீட்டுக் கொண்டு வாருங்கள் நீங்கள் சிறந்த குடும்பத்தலைவர் ஆகிவிடுவீர்கள் என்று ஒரு ஹழ்ரத் பதில் கூறினார்.

அற்புதமான செய்தி இது. இது போல சிந்தித்தாலே நிறைய நன்மைகளுக்கு நாம் சொந்தக்கார்ர்களாகிவிடுவோம்.

வீட்டிற்கு என்று யோசிக்கிற மாதிரி மஹல்லாவிற்கும் சமூகத்திற்கும் யோசித்தால் அதிகாரம் ஃகிலபத்தை நோக்கி செல்லும் வழி இலேசாகிவிடும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முந்தைய நபிமார்களை உண்மைப்படுத்தினார்கள் என்பது அவர்களது வெற்றிக்கான பிரதான காரணமாகும்

திருக்குர் ஆனை பற்றி குர் ஆன் இப்படிச் சொல்கிறது

 مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ (97

இது பெருமானாருக்கும் பொருந்தும்.

எனவே முந்தைய நன்மைகளை தொடர்ந்து பாதுகாப்பதே அதிகாரத்தின் முதல் கடமை.

அடுத்ததாக புதிய நன்மைகளை உருவாக்க சிந்திக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அதுதான் நமக்கு கிடைத்த அதிகாரத்தின் விசேசமாக அமையும்.

ஒரு குடும்பத்தில் நிறைய பணக்கார்ர்கள் இருந்தார்கள். அதில் ஒரு இளைஞர் தனி செல்வந்தராக உயர்ந்தார். மற்றவர்களைப் போல அவரும் பெரிய வீடு கட்டினார். கார்களை வாங்கினார். நிலபுலன்களை வாங்கிச் சேர்த்தார். ஆனால் அத்தோடு அவரது குடும்பத்தில் ஏழைகளாக இருந்த பலரை ஆண்டு தோறும்  வீதம் உம்ராவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த புதிய சிந்தனை அவரை பாராட்டிற்குரிய தலைவராக்கி விட்டது.

மற்றொரு தலைவர் பள்ளிவாசலின் வருமானத்தை பாதுகாத்தார். ஒரு பெண்கள் மதரஸாவை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார். கொஞ்சம் சிரமட்டு ஒரு மதரஸாவை உருவாக்கினார். இன்று அதன் மூலம் பல பெண் ஆலிமாக்கள் சமூகத்திற்கு கிடைத்தார்கள்.

இது அந்த பள்ளிவாசலின் தலைவர்களில் அவரை சிறந்தவராக்கி விட்ட்து இதை தான் கலீபா என்கிறோம்.

இவர்கள் பதவியால் பெருமைப்பட்டுக் கொண்டிருக்க வில்லை. இவர்களால் பதவி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது .

அதிகாரத்தின் ஒரு பெரிய பல்வீனத்தை மட்டும் இன்று சுட்டிக் காட்டுகிறேன்.

அதிகாரத்தின் பெரிய பலவீனம் அதிகாரம் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பதாகும்.

பிர் அவ்னை அழிவுக்குள்ளாக்கியது அவனது இந்த சிந்தனையாகும்

وَنَادَىٰ فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي ۖ أَفَلَا تُبْصِرُونَ (51)

அவன் அல்லாஹ்வின் அத்தாட்சிக்கு முன்னால் நியாயமும் பொருத்தமும் அற்ற இந்த வாத்த்தை முன் வைத்தான்.

எகிப்தின் அதிகாரம் அவனுக்கு முன்னால் அவனுடைய பாட்டன்களுக்கு உரியது. வாரிசுகளற்ற அவனுக்கு பின்னால் அது யாருக்கோ செல்லக் கூடியது அதை அவன் சிந்திக்க வில்லை. நைல் நதி அவனது நாட்டில் இருக்கிறது என்றாலும் அது அவனது கட்டுப்பாட்டில் கிடையாது என்பதை அவன் சிந்திக்க மறந்தான்.

மனிதனது அகந்தை, இப்படித்தான் வெளிச்சமான உண்மைகளை கூட கண்களை விட்டு மறைத்து விடுகிறது.

திருக்குர் ஆனிய அறிஞர்கள் அற்புதமான ஒரு செய்தியை சொல்வார்கள்

அல்லாஹ் குர் ஆனில் சில இடங்களில் தன்னைப்பற்றி பேசுகிற போது ஒருமையாக பேசுகிறான்.

 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

சில இடங்களில் பன்மையாக பேசுகிறான்.

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ

இதில் ஒரு நுட்பத்தை அல்லாஹ் வெளிப்படுத்தியிருக்கிறான்.

அன்பு கருணை உபகாரம் இவை சார்ந்து பேசுகிற போது அல்லாஹ் ஒருமையில் தன்னை குறிப்பிடுகிறான்.

அதிகாரம் சார்ந்து பேசுகிற போது அல்லாஹ் தன்னை பன்மையில் கூறிக் கொள்கிறான்.

எல்லாவற்றிற்கும் உண்மையான மாலிக்குல் முல்கான அல்லாஹ்வே அதிகாரத்தை பரவலாக்குகிற போது இந்த உலகில் சொற்ப காலம் கிடைக்கிற அதிகாரத்தை தனக்கு மட்டுமே சொந்தமானதாக நினைத்துக் கொள்வது அல்லது ஆக்கிக் கொள்வது அதிகார்த்தின் பெரும் பலவீனம் ஆகும்.

அதிகாரம் ஒரு கூட்டுச் செயல்பாடாக வெளிப்படும் போது பெரும் வெற்றியை பெறும்.

அது குடும்பமாக இருந்தாலும் சரி சமூகம் அரசியலாக இருந்தாலும் சரி.

குடும்பத்தில் மனைவி பிள்ளைகளுக்கு அதிகாரத்தில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தனது நியாயமான தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மனைவிக்கு அளிக்கப்படவில்லை எனில் அவள் கணவனுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துக் கொள்வாள் தானே!

அதே போல சமூகத்திலும் வியாபாரத்திலும் அரசியலிலும் நண்பர்கள் ஊழியர்கள் தொண்டர்களுடன் அதிகாரம் தேவையான அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஒரு மேனேஜருக்கு உரிய அதிகாரம் தரப்படாவிட்டால் அவர் கடித்த்திற்கு ஸ்டாம்ப் ஒட்டுவதற்கு குலு பயன்படுத்தட்டுமா ? எச்சிலை பயன்படுத்தட்டுமா என்பதை கூட கேட்டுக் கொண்டிருப்பார்.

அது சிறப்பாக பணியாற்ற தடையாகிவிடும்.

அதிகாரத்தின் இந்த பெரிய பலவீனத்தை தவிர்த்துக் மாத்திரமே நன்மைகள் நிறைய செய்வதற்காகன வாய்ப்புக்கள் பிரகாசமாகும்.

நமக்கு கிடைத்திருக்கிற அதிகாரத்தில் ஃகலீபாக்கள் செயல்பட அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

 

 

 

 

2 comments:

  1. வித்தியாசமான முறையில் அருமையான பதிவு
    ஜஸாகல்லாஹு கைரல் ஜஸா

    ReplyDelete
  2. Masha Allah Hazrath.Excellent Reminder about Authority and Power. May Allah bless us to use our Authority for Beneficial to the Society and to Our family...أمين يارب العالمين

    ReplyDelete