வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, October 11, 2023

பாலஸ்தீனுக்கு சுதந்திரம் வேண்டும்

 பாலஸ்தீனப்பகுதியில் மிக கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் தரப்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  பல்லாயிரக்கணக்கானோர் காயமுற்றிருக்கிறார்கள்.  (பலியானோர் மற்றும் காயமுற்றோரின் சரியான எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான்)

காஸா பகுதி மீது இஸ்ரேல் முற்றுகை நடவடிக்கையை  தொடங்கி யிருப்பதால் அங்கு வாழ்கிற சுமார் 25 இலட்சம் மக்கள் உணவு, மருந்து மின்சாரம் தண்ணீர் இன்று தவித்து வருகிறார்கள்

எல்லாம் வல்ல இறைவன் இந்த யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவானாக!  சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் நீதியின் வழியை கடைபிடிக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

தங்களுடைய மக்களை இழந்து தவிக்கும் இஸ்ரேல் நாடு,  சுமார் 75 ஆண்டுகளாக நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்கள் இதே போல அனுபவித்து வருகிற துன்பங்களை எண்ணிப்பார்த்து நடந்து கொள்ள அல்லாஹ் அதற்கு வழிகாட்டுவானாக உலகின் பல பகுதியிலிருந்தும் கண் மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிக்கும் நாட்டுத்தலைவர்களுக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை தந்தருள்வானாக. அது சாத்தியமாகாது எனில் அடாவடித்தனமாக நடத்ந்து கொள்கிற சக்திகளை அல்லாஹ் முறியடிப்பானாக. அத்தகையோருக்கு எதிராக போராடுகிற மக்களுக்கு மலக்குகளின் முலமாகவும் தனது சக்தியை கொண்டும் உதவி செய்வானாக!

பத்று ஷுஹதாக்களின் பொருட்டால் சுமார் ஒரு நூற்றாண்டாக அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிற பாலஸ்தீன் மக்களுக்கு அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு மிக விரைவில் வெற்றியை தருவானாக!

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதப்பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்களிடம் அல்லாஹ் விரைவில் மீட்டுத்தருவானாக! அதன் மூலம் அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் கிருத்துவர்கள், யூதர்கள் என அனைத்து தரப்பினரும் நிம்மதியாக வாழ அல்லாஹ் வழி செய்வானாக!

இன்றைய உலகிற்கு நாம் சொல்லுகிற முதல் செய்தி!

முழு பாலஸ்தீனிலும் குறிப்பாக ஜெரூசலத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் ஏற்பட்டால் மட்டுமே உலக மக்கள் அங்கு நிம்மதியாக இருக்க முடியும்.

இதை ஒரு வெற்று பெருமைப் பேச்சாக நாம் சொல்லவில்ல. இதுதான் வரலாறாகும்.

இந்தயுத்தம் தொடங்கியதிலிருந்து பலரும் ஜெருசலம் மூன்று மதத்தவர்களுக்கும் பொதுவானது என்று பேசுகிறார்கள்

ஆனால் அவர்களுக்கு நாம் தெரிவிக்க விரும்புகிற மிக முக்கியமான ஒரு வரலாற்று உண்மை என்னவென்றால்? 

ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது தான் மூன்று சமூகத்தவர்களும் நிம்மதியாக இருக்க முடிந்தது.  மூன்று சமூகத்தினருடையவும் வழிபாட்டு உரிமைகளும் வாழ்வுரிமைகளும் ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைக்க முடியாதவாறு மதிக்கப்பட்டன.

ஜெருசலம் ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை அவர்கள் ஒரு குப்பை மேடாக ஆக்கி வைத்திருந்தார்கள். பாலஸ்தீன வெற்றியின் போது  அது கண்டு வருத்தப்பட்ட ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்தை தன் கைகளால் சுத்தப்படுத்தி முதன்முதலாக அங்கு பாங்கு சொல்லுமாறு உத்தரவிட்டதோடு அங்கு தொழுகை நடக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.

பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் ஒரு பெரிய சர்ச் இருக்கிறது.. இப்போது அது ரோம ஆர்த்தோடக்ஸ் கிருத்துவர்கள் வசம் இருக்கிறது. அதன் பெயர் கனீசத்துல் கியாமா என்கிற கல்லறை தேவலாயம். இதை இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் என்று நம்புகிறார்கள். இதையே கவ்வாரி மலை என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். இங்குதான் இயேசு உயிர்த்தெழுந்த்தாகவும் நம்புகிறார்கள். அதனால் தான் கனீசத்துல் கியாமா எழுந்த மலை என்று அழைக்கிறார்கள்.

உமர் ரலி அவர்கள் பைத்துல் முகத்தஸை வென்ற போது இந்த தேவலாயத்திற்குள் தான் சென்றார்கள். தொழுகை நேரம் நெருங்கியதால் இங்கேயே தொழுமாறு கிருத்துவர்கள் கேட்டுக் கொண்ட போது அதை மறுத்து வெளியே இருந்த பாறையில் உமர் ரலி அவர்கள் தொழுதார்கள்.

இயேசு கல்லறை தேவாலயத்திலேயே புதைக்கப்பட்டார் என்று கிருத்துவர்கள் நம்புகிறார்கள். ஈசா அலை அவர்கள் சிலுவையில் அறையப்பட வில்லை என்று உரத்து கூறுகிற முஸ்லிம்கள் தங்ளது ஆதிக்கத்தின் உச்ச நிலைகளில் கூட கிருத்துவர்களின் நம்பிக்கைகு தீங்கிழைக்கவில்லை, அவர்களுடைய தேவலாயத்திற்கு முழு பாதுகாப்பையும் உரிமையையும் வழங்கினார்கள்.

அந்த நேரத்தில் கிருத்துவ துறவிகள் உமர் ரலி அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.  ஜெரூசலமின் பாதுகாப்பிற்காகவும் நன்மைக்காகவும் சொல்கிறோம். இங்கு ஒரு யூதரை கூட அனுமதிக்காதீர்கள். அவர்கள் அனைவரையும் வெளியேற்றி விடுங்கள் என்பதே அந்த கோரிக்கை.

அதற்கு உமர் ரலி அவர்கள் “எங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும் எவருக்கும் நாங்கள் அநீதி இழைக்க முடியாது என்று கூறினார்கள், வேண்டுமானால் அவர்கள் உங்களது பகுதியில் வசிக்க அனுமதிக்கப் பட மாட்டார்கள். ஆனால் மற்ற இடங்களில் அவர்கள் தடுக்கப்பட மாட்டார்கள் என்று கூறி எழுதிக் கொடுத்துள்ளார்கள். வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமான அந்த வாசகம் உமரின் ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் இப்போதும் இருக்கிறது. மற்ற பகுதிகளில் யூதர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டார்கள்.

العهدة العمرية

بسم الله الرحمن الرحيم،

هذا ما أعطى عبد الله، عمر، أمير المؤمنين، أهل إيلياء من الأمان، أعطاهم أماناً لأنفسهم وأموالهم ولكنائسهم وصلبانهم وسقمها وبريئها وسائر ملتها. أنه لا تسكن كنائسهم ولا تهدم، ولا ينقص منها ولا من حيِّزها ولا من صليبهم ولا من شيء من أموالهم، ولا يُكرهون على دينهم، ولا يضارّ أحد منهم، ولا يسكن بإيلياء معهم أحد من اليهود.

 அதனால் இன்றும் யூதர்களும் கிருத்துவர்களும் ஒரு சேரக் கொண்டாட வேண்டிய நபர் ஹழ்ரத் உமர் ரலி அவர்களாவர்கள். கொண்டாடப்பட வேண்டிய சமூகம், உமர் ரலி அவர்களின் வழியை பின் தொடர்ந்து வந்த முஸ்லிம் சமூகமாகும்.

இப்போது ஜெரூசலம் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கே முஸ்லிம்கள் சொல்லணா துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள் ஆயிரம் ஆண்டுகளாக அது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை அமைதி கோலோச்சியது என்பது. வெறும் வார்த்தை அல்ல வரலாறு

உலகின் மிகச் சிறந்த வரலாற்று வாசிப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிற் பண்டித ஜவஹர்லால் நேரு அவரது புகழ் பெற்ற “உலக வரலாறு” என்கிற புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் “உலக வரலாற்றில் முஸ்லிம்களின் நிழலில் தான் யூதர்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்தார்கள்

இன்று எந்த ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுகின்றனவோ அதே ஐரோப்பிய நாடுகளில் தான் யூதர்கள் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். கொத்ததடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். இழிவான நடத்தப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டார்கள்.

மூன்று யூதக் குழந்தைகள் ஒரு தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு பெண்மணியின் வீட்டுக் கதவை தட்டி உதவி கேட்கிறார்கள். அந்த அம்மையாருக்கும் மூன்று குழந்தைகள் இருந்தனர். அந்த தாய்  வந்த குழந்தைகளை வரவேற்றார், தன்னுடைய குழந்தைகளுக்கும் அந்த குழந்தைகளுக்கும் உணவளித்தார். பின்னர் தனது குழதைகளை படுக்கைக்கு அனுப்பினார். அதை தொடர்ந்து யூதக் குழந்தைகள் மூவருக்கும் விஷம் கொடுத்து கொன்று தனது கொல்லைப் புறத்தில் புதைத்தார்.

அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வு இது. .

ஆனால் முஸ்லிம்களின் வாழ்விடங்களில் யூதர்கள் ஆதரிக்கப்பட்டார்கள். ஐரோப்பாவில் பட்ட எந்த் துயரையும் அரபு நிலத்தில் யூதர்கள் அனுபவித்ததில்லை.

அதே போல கிருத்துவர்களுக்கும் அங்கு எந்த பெருந்துயரும் நடந்ததில்லை.

சிலுவை யுத்தக்காரர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றிய போது அங்கு ஒரே நாளில் ஒண்ணரை இலட்சம் முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். குப்பத்துஸ் ஸஹ்ரா என்ற பாறை குவிமாடப் பள்ளிவாசலின் முற்றத்தில் முழங்கால் அளவு இரத்தம் தேங்கியிருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் சலாஹுத்தீன் அய்யூபி பாலஸ்தீனத்தை வென்ற போது மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். கிருத்துவர்களை கொல்ல வில்லை. வெளியேற வாய்ப்பளித்தார். வெளியே செல்லும் வழியற்றவர்களுக்காக தனியான வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை ஐரோப்பிய வரலாற்றாளர்களே போற்றுகிறார்கள்.

அதனால் தான் சொல்கிறோம். பாலஸ்தீனம் முஸ்லிம்களிடம் இருப்பது தான் உலகிற்கு நல்லது.

இந்த யுத்தத்தை காஸா இஸ்ரேல் யுத்தம் என்று மட்டும் பார்க்காமல் இந்த கண்ணோட்டத்தில் உலகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் சரியான தீர்வுக்கு வழி ஏற்படும்.

நாம் சிந்திக்கிற இரண்டாவது செய்தி

இந்த யுத்தம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 6;30 மணியளவில் தொடங்கியது.

பாலஸ்தீன் என்பது மேற்கு கரையை மையமாக கொண்ட இஸ்ரேலுடன் இணக்கமாக இருக்கிற பிஎல் என்ற ஒரு நிர்வாக அமைப்பு என்றும் காஸா என்ற இஸ்ரேலுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற ஹமாஸின் நிர்வாக அமைப்பு என்றும் இரண்டு நிலப்பகுதிகளாக இருக்கிறது.   

இந்த  காஸா பகுதியை நிர்வகித்துக் கொண்டிருக்கிற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவினர். அது மட்டுமல்ல இஸ்ரேல் வரையறுத்து வைத்டிருந்த எல்லைகளை உடைத்துக் கொண்டு இஸ்ரேலுக்கு ஊடுறுவி தாக்குதல்

இந்த யுத்தத்தை ஹமாஸ் அமைப்பு தான் தொடங்கியது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும் என்று இஸ்ரேலின் பிரதமர் அமெரிக்க அதிபர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

இது எந்த அளவில் நியாயமானது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

1948 ல் இஸ்ரேல் எனும் நாடு பிரிட்டனால் திருட்டுத்தனமாக அரபுளின் நிலமான பாலஸ்தீனில் ஒரு சிறு பகுதியில் உருவாக்கப்பட்டது, அதன் பிறகு இஸ்ரேல் பல யுத்தங்களையும் நடத்தி பாலத்தீனத்தின் மொத்த நிலப்பரப்பையும் ஆக்ரமித்துக் கொண்டது.  பாலஸ்தீன மக்கள் தங்களது நிலத்தை மீட்கவும் நிம்மதியாக வாழவும் பைத்துல் முகத்தஸை காப்பாற்றவும் தலை முறையாக கடுமையாக போராடி வந்தனர்.  

1988 ல் பாலஸ்தீன் போராளி யாசர் அரபாத்தும், இஸ்ரேலின் பிரதமர் இட்ஸாக் ரபீனும் செய்து கொண்ட ஓஸ்லோ உடனபடிக்கையின் படி பாலஸ்தீனிற்கு கொஞ்சம் தன்னாட்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அது உலக மக்களை ஏமாற்றிய ஒரு பெரிய ராஜ தந்திரம்.

பாலஸ்தீன் மக்கள் வாழும் நிலப்பரப்பின் ஆதிக்கம் முழுவதும் இஸ்ரேலிடம் இருக்கும். உள்ளூர் வேலைகளில் மட்டும் அவர்கள் அதிகாரம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஒரு நகராட்சிக்கான அதிகாரத்தை மட்டும் பாலஸ்தீனர்களுக்கு கொடுத்து விட்டு  பாலஸ்தீன மக்களை அடிமைகளைப் போல இஸ்ரேல் நடத்துகிறது. 30 இலட்சம் பேர் எந்த வித வசதிகளும் இல்லாமல் பணையக்கைதிகளைப் போல வாழ்கிறார்கள்.

நியாயமாக சிந்திக்கிற எவரும் ஒரு முறையேனும் பாலஸ்தீனத்திற்கு பயணம் செய்து விட்டு வந்தால், அல்லது அங்கு நிலவரத்தின் எதார்தத்தை அறீந்து கொண்டால் பாலஸ்தீன் மக்கள் உண்மையில் உலகின் மிகப் பெரிய திறந்த வெளீச் சிறையில் வாழ்கின்றனர் என்பதை புரிந்து கொள்வார்கள்.  கொரோனோ காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிய தடுப்பூசிகளை கூட இஸ்ரேல் பாலஸ்தீனிற்குள் அனுமதிக்க வில்லை.

எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பாலஸ்தீன் மக்கள் கொல்லப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் இரணுவம் கொல்லும். சில நேர ங்களில் யூத தீவிரவாதிகள் கொல்வார்கள். தங்களது சொந்த நாட்டில் யூதர்கல் வாழும் நிலப்பரப்பிற்குள் பாலஸ்தீனர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் 

அல்கலீல் என்ற ஹெப்ரான் நகரத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல் இருக்கிறது, அதில் இபுறாகீம் அலை இஸ்ஹாக் அலை ஆகியோரது மண்ணரைகள் இருக்கின்றன. திடிரென் அந்தப் பள்ளிவாசலை தாக்கிய யூதர்கள் ஒரு மாத காலம் அந்தப் பகுதியை சீல் செய்து விட்டு பிறகு திறந்தார்கள்.

பள்ளிக்குள் சென்ற முஸ்லிம்களுக்கு ஆச்சரியம் பள்ளிவாசலில் யாகூப் அலை அவர்களது மண்ணறை இருந்த பகுதியை யூதர்களுக்கு என்று தனியே பிரித்து எடுத்துக் கொண்டார்கள்.

அதில் ஒரு கவனிக்க தக்க விசயம் என்னவெண்றால் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதி ஆண்டுக்கு ஒரு மாதம் யூதர்களுக்காக ஒதுக்கப்படும். அப்போது அங்கு முஸ்லிம்கள் செல்ல முடியாது. யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற வருடத்தில் 10 நாட்களுக்கு முஸ்லிம்களுக்கு திறந்து விடப்படும் என்பது

இது ஒரு சிறு உதாரணம். 

இது போல நூற்றுக்கணக்கான அத்துமீறல்களை அன்றாடம் இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன மக்களிடம் நடத்தி வருகிறது.  ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறுவர்கள் பெண்கள் என்று பாக்பாடு காட்டாமல் ஏராளாமானோரை கொன்று குவிப்பது, வீடுகளை புல்டோசர்களை கொண்டு தகர்பப்து, மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், அகதிகள் முகாம்கள் போன்ற பெரிய கட்டிடங்களை விமானங்களால் குண்டு வீசி தகர்ப்பது என்பதை எந்த உறுத்துலும் இல்லாமல் மிக சாவகாசமாக செய்து வருகிறது. பாலஸ்தீன் மக்கள் மிக மோசமான பொருளாதார நிலையிலும் வாழ்கை வசதிகளிலும் வாழ்கின்றனர். குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகளை கூட இஸ்ரேல் பல நேரங்களில் அனுமதிப்பதில்லை/

எல்லாவ்ற்றிற்கும் மேலாக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்த்துல் முகத்தஸில் அத்துமீறி நுழைந்து மக்களை கொல்வது , அவமரியாதை செய்வதுபைத்துல் முகத்தஸிற்குள் யூதர்களை அதிகாரத் திமிரோடு அனுமதிப்பது போன்ற காரியங்கள் இஸ்ரேல் மிக சகஜமாக செய்து வந்தது. சமீபத்தில் ரமலான் மாதத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஃதிகாப் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலரை இழுத்துச் சென்றது. தொழுகையை தடை செய்தது. இப்போதும் இஸ்ரேலிய அரசால் அனுமதிக்கப்படுபவர்கள் மட்டுமே பைத்துல் முகத்தஸில் தொழ முடியும் என்ற நிலை இருக்கிறது.

 ஆகையால் தங்களது நிலமான  பாலஸ்தீனையும் புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவையும் விடுவிக்க வேண்டும் என்ற வேகம் பாலஸ்தீன் மக்களிடம் மிக உறுதியாகவே இருக்கிறது. இதில் மரணத்தை கூட அவர்கள் பெரிய சிரமமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த வகையில் பாலஸ்தீனில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் விடுதலையை நோக்கிய ஒவ்வொரு முன்னெடுப்பையும் மிக தைரியமாகவே செய்து வருகிறார்கள்.. உலக நாடுகளோ சக முஸ்லிம் நாடுகளோ ஆதரிக்காவிட்டாலும் சரி! பயங்கர வாதிகள் என்று பட்டம் கட்டினாலும் சரி என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இப்போது காஸா பகுதியில்ருந்து ஹமாஸ் போரை தொடங்கியிருக்கிறது.

சண்டை தொடங்கிய பிறகு ஊடகங்களிடம் பேசிய ஹமாஸின் பிரதிநிதி இதை தெளிவு படுத்தினார் (அல்ஜஸிரா)

அவர் கூறினார் 

இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனில் நிகழ்த்தி வருகிற குற்றச் செயல்களுக்கான பதிலடிதான் இது. பைத்துல் முகத்தஸை அது அவமதிப்பதிலிருந்து மீட்கும் போராட்டம் இது.

எனவே இந்த தாக்குதலை ஹமாஸ் தொடங்கியதாக சொல்வது உண்மையில் ஒரு திரிபு வாதமாகும்.

ஹமாசின் நிலைப்பாட்டை திருக்குர் ஆன் ஆதரிக்கிறது. 

فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ (194

இஸ்லாம் மிக சுத்தமான யுத்த நெறிகளை உலகிற்கு கற்றுக் கொடுத்தது.

எல்லை மீறாதீர்கள்! மோசடி செய்யாதீர்கள்! சிதரவதை செய்யாதீர்கள்! குழந்தைகளை கொல்லாதீர்கள் பெண்களை கொல்லாதீர்கள். துறவிகளை கொல்லாதீர்கள். பழம் தரும் மரங்களை வெட்டாதீர்கள். கட்டிடங்களை இடிக்காதீர்கள். உணவுக்காக வே தவிர கால் நடைகளுக்கு இடையூறு செய்யாதீர்கள். தோட்டங்களுக்கு  தீ வைக்காதீர்கள். தண்ணீரில் மூழ்கடிக்காதீர்கள். கூலிக்காக வேலை செய்ய வந்திருப்போரையும் சண்டையிடுவோருக்கு துணையாக வருவோரை தாக்காதீர்கள். 

என்ன அருமையான உலகிற்கு முன் மாதிர்யான நடைமுறைகள் 

قال رسول الله صلى الله عليه وسلم : " اغْزُوا بِسْمِ اللهِ وَفِي سَبِيلِ اللهِ، قَاتِلُوا مَنْ كَفَرَ بِاللَّهِ، اغْزُوا وَلاَ تَغُلُّوا، وَلاَ تَغْدِرُوا، وَلاَ تُمَثِّلُوا، وَلاَ تَقْتُلُوا وَلِيدًا 

ففي صحيح البخاري : أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، «فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَان

قال أبو بكر الصديق لقائد جيشه «إِنَّكَ سَتَجِدُ قَوْمًا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لِلَّهِ. فَذَرْهُمْ وَمَا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لَهُ "

جاء في وصية أبي بكر رضي الله عنه : لَا تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا، وَلَا تُخُرِبَنَّ عَامِرًا، وَلَا تَعْقِرَنَّ شَاةً، وَلَا بَعِيرًا إِلَّا لِمَأْكَلَةٍ، وَلَا تَحْرِقَنَّ نَخْلًا، وَلَا تُغَرِّقَنَّهُ، وَلَا تَغْلُلْ، وَلَا تَجْبُنْ 

فقد جاء في أوامر النبي صلى الله عليه وسلم لقائده على جيشه خالد بن الوليد «قُلْ لِخَالِدٍ لَا يَقْتُلَنَّ امْرَأَةً وَلَا عَسِيفًا» . [31]. وعند مصنف ابن أبي شيبة : " نَهَانَا أَنْ نَقْتُلَ الْعُسَفَاءَ وَالْوُصَفَاءَ " [

  والعسيف : هُوَ الْأَجِير .]والوصفاء : هم الخدم الذين لا يحملون السلاح ولا يقاتلون مع العدوّ

முஸ்லிம்கள் அவர்கள் நடத்திய சண்டைகளீல் அதை சிறப்பாக கடைபிடித்தார்கள்.

ஆனால் அவர்களிடம் அத்தகைய கட்டுப்பாட்டை கடைபிடிக்காத  வன் முறையாளர்களிடம் அவர்கள் எப்படித்தான் நடந்து கொள்ள முடியும்.

World Health Organization’s Tarik Jasarevic said that 13 attacks on health facilities in Gaza had been confirmed by its monitoring service since hostilities began.

இப்போதும் கூட காஸாவிலுள்ள உலக சுகாதார நிறுவனம் ஐநாவின் 13 சுகாதார மையங்கள் தாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. இது இரண்டு நாட்களுக்கு முன்புள்ள நிலவரம்.

இப்போது இஸ்ரேலில் பெண்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் முதியவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கல் பணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்று புலம்புகிறவர்கள் ஒரு கணமேனும் பாலஸ்தீன மக்களிடம் இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவமும் எப்படி நடந்து கொள்கிறது என்று ஒரு முறையாவது விசாரித்துப் பார்க்கட்டும். பாலஸ்தீனர்களை மிருகங்கள் என்று சிலர் வர்ணித்தனர். அவர்களை மிருகங்களாகியது யார் என்று சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

நா சபையில் 55 கண்டனத்தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக இருக்கின்றன எனபதை உலகம் மறக்க கூடாது.

இப்போதும் கூட முஸ்லிம்கள் எல்லை மீறி நடந்து கொண்டார்கள் என்று கூறுகிறவர்க்ள் பணையக் கைதிகள் விடுதலை செய்யப் பிறகு எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை விசாரித்தால் இஸ்லாமின் பண்பை அறிந்து கொள்வார்கள் .

எனவே பாலஸ்தீன் மக்களின் யுத்தம் என்பது இஸ்ரேலின் அக்கிரமத்திற்கான பதிலடியே ஆகும்.

அந்த பதிலடியை இந்த முறை பாலஸ்தீனர்கள் மிகுந்த ஒருங்கிணைப்போடு செய்திருக்கிறார்கள் என்பது தான் எதிரிகளுக்கு எரிச்சலை தந்திருக்கிறது.

இதுவரை நடை பெற்ற எந்த யுத்தத்திலும் இஸ்ரேலியர்கள் இவ்வளவு இழப்பை சந்தித்ததில்லை. 

இஸ்ரேலின் பிரதமர் நெதன் யாகூ அமெரிக்க அதிபரிடம் பேசுகிற போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹோலோகோஸ்டை விட பெரிய பாதிப்பு என்று கூறுகிறார்.

இஸ்ரேல் முழுவது கடும் பாதுகாப்பில் இருக்கிறது. யூதர் கள் வாழும் இடமெங்கும் ஐயர் டோம்ஸ் எனும் ஏவுகனை எதிர்ப்பு ஏவுகணைகள் வைக்கப் பட்டிருக்கின்றன.

இது தான் இஸ்ரேலின் பெரும் பலம். One of the best air defense system in the world  உலக வான்பாதுகாப்பின் மிகச் சிறந்த சிஸ்டம் என்று இது புகழப்படுகிறது.  நவீன் போர் உத்திகள் பெருமளவில் கண்டு பிடிக்கப்பட்டுவிட்ட நிலையில் 2011 லிருந்து இஸ்ரேலை பெருமளவில் பாதுகாப்பது இந்த் சிஸ்டம் தான். 2012 ல் ஹமாஸ் அனுப்பிய 400 ராக்கெட்டுகளில் 85 சதவீதத்தை அது அழித்தது. 2014 ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவிய  4500 ராக்கெட்டுகளில் 735 மட்டுமே  கீழே விழுந்தது. இது ஐயர் டோமிற்கு கிடைத்ஹ்ட  90 சதவீதம் வெற்றியாகும். 2021 ல் ஒரு வாரம் நீடித்த போரில் கூட மொதம்ம 4500 ராக்கெட்டுகளை ஹமாஸ் ஏவியது, அவற்றில் பெரும்பாலானவற்றை ஐயர் டோம் வானத்திலேயே முறியடித்து விட்டது.

இதனால் தான் இஸ்ரேலுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட வில்லை.

இந்த முறை ஹமாஸின் ராக்கெட்கள் ஐயர் டோமை ஏமாற்றி விட்டன.

ஹமாஸின் தற்போதைய முன்னேற்றத்தைப் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. .

Israel's Nearly Impenetrable Iron Dome Struggles To Stop Hamas' 5,000 Rockets

தகர்க்க முடியாத அரண் என்று கருதப்படுகிற ஐயர் டோம்ஸ் ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணைகள் ஹமாசின் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை எதிர் கொள்ள போராடுகிறது என்று தலைப்பிட்டிருக்கிறது. How hamas outfoxe iron domes ஹமாஸ் எப்படி ஐயர்ன் டோம்களுக்கு கண்ணாமூச்சி காட்டியது என்று ஆய்வு செய்கிறது.

ஹமாஸின் ராக்கெட்டுகள் இஸ்ரேலின் மையப்பகுதியை தொட முடியும் என்று தெரிகிறது என்று கூறுகிறது  சி என் என் தொலைக்காட்சி.

அதே நேரத்தில் அஸ்கலான் நகரில் ஹமாஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துத்தான் தாக்குகிறது என்றும் கூறுகிறது சி என் என் தொலைக்காட்சி

பாலஸ்தீன போராளிகளை மிருகம் என்று சொல்கிறவர்கள் பாலஸ்தீனில் உள்ள ஐநா அமைப்பின் நிவாரண நிலையங்களையும் நாவால் நடத்தப்படுகிற பள்ளிக் கூடங்களையும் கூட தாக்குகிற இஸ்ரேலை என்ன வென்று கூறுவார்கள் ?

இந்த யுத்தம் பாலஸ்தீன மக்களுக்கு பெரும் தொல்லைகளை தரக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இப்போது தெரிகின்றன என்றாலும் நடை பிணங்களாகஉணர்வும் உரிமைகளும் அற்றவர்களாக வாழ்வதை விட போராடி மடிவதே மேல் என்ற நிலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். என்பதே உண்மையாகும்

இதை உலகம் புரிந்து கொண்டாலும் சரி. இல்லை என்றாலும் சரி.

ஹிட்லரும் முசோலியினியும் சோவியத் ரஷ்யாவும் எவ்வளவுதான் வலிமையாக இருந்த போதும் எப்படி தடம் தெரியாமல் அழிந்து போனார்களோ அதே போன்ற அழிவு அக்கிரமச் சக்திகளுக்கு ஏற்பட்டே தீரும்.

தற்போதைய இந்த யுத்ததில் நாம் சிந்திக்கிற மூன்றாவது செய்தி

உலக நாடுகள் பாலஸ்தீன பிரச்சினையை கண்டு கொள்ளாமல் போக முடியாது என்பதாகும்

அல்ஜஸீராவின் ஒரு கட்டுரை கூறுகிறது.

“பாலஸ்தீனியர்கள், பல ஆண்டுகளாக  தினசரி அடிப்படையில் இஸ்ரேல் தங்கள் மீது செலுத்தும் வன்முறையை உலகளாவிய கவனத்திற்கு கொண்டு வர முயன்றனர். இஸ்ரேல் செய்கிற கொலைகள், சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அனைத்தையும் பதிவு செய்தனர். அவர்கள் திருடப்பட்ட வீடுகள், நிலங்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை பட்டியலிட்டனர். சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில், இஸ்ரேலிய அரச வன்முறை அவர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் எப்படிப் பறிக்கிறது, மேலும் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துகிறது மற்றும் துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை விரிவாக ஆவணப்படுத்தினர்.

ஆனால் அதற்கு உலக நாடுகள் எவ்வாறு பதிலளித்தன?

மௌனத்தை விட மோசமான ஒன்றை அவர்கள் பதிலளித்தனர்.

எப்படித் தெரியுமா ?

அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக மீண்டும் உரத்து குரல் கொடுத்தனர். அதன் மூலம் இஸ்ரேலின் அடக்குமுறைக்கு உதவினார்கள். பாலஸ்தீனியர்களை அவர்களது எஞ்சிய நிலங்களில் இருந்து வெளியேற்றவும், பாலஸ்தீனத்தை உலக வரை படத்திலுருந்து அழிக்க இஸ்ரேல் செய்யும் முயற்சிகளை அவர்கள் ஊக்குவித்தார்கள்.”

இந்தக் கட்டுரையாளரின் மிக எதார்த்தமான கருத்துக்கள் பாலஸ்தீனத்தின் வலி மிகுந்த பக்கங்களை உலகிற்கு திறந்து காட்டி சர்வதேச சமுதாயத்தை வெட்கப்பட வைக்கிறது.

ஆனால் தொடர்ந்து என்ன நடந்தது ?

சமீபத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இந்தியாவிலிருந்து துபாய் வழியாக ஐரோப்பாவிற்கு ஒரு வணிக வழித்தடம் அமைக்கப்படுவது பற்றி பேச்சு வந்தது. அந்த வழித்தடம் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை மையமாக கொண்டிருந்தது. இதற்கு சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமிரகம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் சம்மதம் தெரிவித்தன.

அப்போதே ஆய்வாளர்கள் பெரும்பாலோர் ஆச்சரியப்பட்டனர். முஸ்லிம் நாடுகள் கூட எவ்வளவு எளிதாக பாலஸ்தீன பிரச்சனையை மறந்து விட்டு இஸ்ரேலோடு கைகோர்த்து வியாபாரத்தில் இறங்கிவிட்டன என்று பேசிக் கொண்டார்கள்.

இஸ்ரேலின் தொடர் ஆக்ரமிப்பில் இருக்கிற தங்களைப் பற்றி கவலை கொள்ளாமல். தங்களுக்கு ஒரு தீர்வை தர சிந்திக்காமல் திட்டமிடுகிறவர்களுக்கு ஒரு நினைவூட்டுதலாகவும் இந்த தாக்குதல் நடை பெற்று இருக்கலாம்.

கனடாவில் மவுண்ட ராயல் யுனிவர்சிடியில் சமூகவியல் பேராசிரியராக இருக்கிற முஹம்மது அய்யாஷ் அல் ஜஸீராவிற்கு எழுதிய கட்டுரையில் இதை தெளிவு படுத்துகிறார்.

The recent attacks on Israel from Gaza are not aimed at immediately liberating Palestine, even if that discourse is sometimes used by the resistance. Rather, these operations are meant to change the outlook and dynamic of the struggle. They are meant to shake up the current international consensus, which holds that Palestine is a lost cause and should be completely ignored and eventually forgotten. These operations are reminders – and from the viewpoint of those who call for organised armed resistance, the only ones that will work in this system – that Palestinians exist and will never give up their right to live as a free and sovereign people on their lands.

இஸ்ரேலின் மீதான சமீபத்த்திய தக்குதல் உடனடியாக பாலஸ்தீனத்தை விடுவித்துவிட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டதல்ல. சில பேர் அப்படி கூறிக் கொண்டாலும் கூட. பாலஸ்தீன் மக்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய வடிவம் தரவும் அது பற்றிய் உலகின் கவனத்தை ஈர்ப்பதுமே இதன் நோக்கமாகும். பாலஸ்தீனப் பிரச்ச்னையை ஒரு முடிந்து போன பிரச்சனையாக அல்லது கண்டு கொள்ள தேவையிலாத மறக்கப்பட்டபிரச்சனையாக கருதும் சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்குவது இத்தாக்குதலின் நோக்கமாகும் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு உரிமையுள்ள நிலத்த்தில் சுதந்திரமாக வாழ்கிற உரிமையை ஒரு போதும் விட்டுத்தர மாட்டார்கள் என்று சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டுவதுமாகும்.

இது சர்வதேச சமுதாயம் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.

இதனடிப்படையில் பார்க்கிற போது பாலஸ்தீனப் பிரச்சனையை ஒரு தொலைந்து போன பிரச்சனையாக கருதிக் கொண்ட சவூதி, அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் அமெரிக்க ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இந்த தாக்குதலுக்கு ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த விவகாரத்தில் நான்காவதாக சிந்திக்க வேண்டிய செய்தி

இஸ்ரேலிடம் மிக பெரும் ராணுவ வலிமை இருக்கிறது. மட்டுமல்ல அதற்கு வலிமை மிகுந்த நாடுகளின் துணயும் இருக்கிறது.

அதை பயன்படுத்தி இஸ்ரேல் இப்போது காஸாவுக்கு செல்கிற உணவு தண்ணீர் மின்சாரம் மருதுகள் உடபட அனைத்து வசதிகளை தடுத்து அவர்களை முற்றுகையிட முயற்சிக்கிறது.

இது இஸ்ரேலின் இன்னுமொரு குற்றமாக அமையும்.

ஐநா மனித உரிமை அமைப்பின் தலைவர் காஸாவை முற்றுகையிடுவது சர்வதேச சட்டத்தின் சட்டவிதிகளின் படி சட்டவிரோதமாகும் என்று கூறியிருக்கிறார்.

UN Human Rights chief Volker Turk said on Tuesday, adding that “sieges” were illegal under international law.

இது சட்ட விரோதாமாகும் என்பதை விட சவூதி எழுத்தாளர் ஒருவர் அரப் நியூஸீல் கூறியுள்ள கருத்து முக்கியமானது.. இஸ்ரேலும் அதை ஆதரிப்பவர்களும் இதை கவனிக்க வேண்டும்

இஸ்ரேல் உண்மையாகவே ஸ்திரத்தன்மையை நாடினால்,

சுதந்திர  பாலஸ்தீனிய   அரசை நிறுவுவதற்கான ஒஸ்லோ ஒப்பந்தத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதை தடுக்கும் அதன் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உண்மையான அதிகாரம் மற்றும் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சட்டபூர்வமான பாலஸ்தீனிய அரசாங்கத்தால் மட்டுமே உண்மையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய முடியும். ஏனெனில் இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது பாலஸ்தீனப் பகுதிகளின் ஸ்திரத்தன்மையுடன் உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டுள்ளது.

உலக அமைதியின் மீது அக்கறை கொண்டவர்கள் மிக எதார்த்தமான இந்தக் கருத்தை உறுதியாக சிந்திக்க வேண்டும்

யுத்தத்தை வேடிக்கை பார்ப்பதோ, இழப்புக்களை எண்ணிக் கொண்டிருப்பதோ நா உள்ளிட்ட சர்வதேச சபைகளுக்கு பொருத்தமான செயல் ஆகாது, இஸ்ரேலின் அடவாடித்தனத்தை நிறுத்தி பாலஸ்தீன மண்ணுக்கும் மக்களுக்கும் நிம்மதி அளிக்கிற ஒரு விடுதலைக்கு சர்வதேச சமுதாயம்  முயற்சிக்க வேண்டும். அதுவே இஸ்ரேலுக்கும் நல்லது.

பாலஸ்தீன் மக்களின் தியாகத்தையும் தீரத்தையும்பயங்கரவாதம்” என்ற வார்த்தைகளால் கொச்சைப்படுத்திட முயலும் எவரும் சிந்திக்கும் திறனும் நல்லது கெட்டதை சீர்தூதூக்கிப் பார்க்கிற மனமும் அற்றவர்களே!

நிறைவாக ஒன்றை சொல்லிக் கொள்ள முடியும்.

சுதந்திர பாலஸ்தீன் மண்ணில் வாழும் உரிமையை பாலஸ்தீனர்கள் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள். ‘’

அதே போல சுதந்திர பாலஸ்தீனம் என்பதும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் புனித்த்தை காப்பதும் உலக  முஸ்லிம்களின் உள்ளங்களில் கனன்ன்று கொண்டிருக்கிற ஒரு பெரு நெருப்பாகும்.

உலகில் முஸ்லிம்கள் அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் சமாதான விரும்பிகளாகவும் நடந்து கொள்கிற சமுதாயம் வேறெதுவும் இல்லை. அக்கிரமமான செயல்கள் எதற்கும் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மதத்தின் பெயரால் ஆதரவு தெரிவித்தது இல்லை.  இப்போதைய ஹமாஸீன் தாக்குதலை முஸ்லிம்கள் மனதார ஆதரிக்கிறார்கள் எனில் அதற்கு காரணம் இஸ்ரேலிய எல்லையற்ற அத்துமீறல்களும் அதற்கு ஆதரவாக இருக்கிற சர்வதேச சமூகத்தின் போக்குமே காரணமாகும்.

சுதந்திர பாலஸ்தீனம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் இன்ஷா அல்லாஹ் விரைவில் அது அமையும்.

அதற்கான தெளிவான திட்டமிடுதலும் உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முஸ்லிம்களிடம் வலு இருக்கிறது என்பதை இப்போதைய நிகழ்வு காட்டியிருக்கிறது.

ஹமாஸின் பேச்சாளர் கூறினார்.  இஸ்ரேல் என்றால் ஒரு பெரும் சக்தி என்ற மாயை உலக மக்களிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் இருக்கிறது. அப்படி ஒன்றும் கிடையாது. அவர்களை நாம் திட்டமிட்டால் மிக சாதாரணமாக எதிர் கொள்ள முடியும் என்று காட்டுவதும் எங்களது நோக்கமாகும் எனறு அவர் சொன்னார்.

இந்த தெளிவும் உறுதியும் தொடருமெனில் சுதந்திர பாலஸ்தீனம் விரைவில் மலரும்.    

ஆதிக்க சக்திகளுக்கு ஒத்தூதுவோர் யாராக இருந்தாலும். ஒரு நாள் அவமானப்பட்டு பாலஸ்தீனியர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள்.

சீக்கிரமே அப்படி ஒரு நிலைமை உருவாக எல்லாம் வல்ல இறைவன் துணை செய்ய வேண்டும். 

 

 

 

 

 

 

 

 

 

3 comments:

  1. Anonymous7:37 AM

    அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  2. Anonymous10:24 PM

    அருமையான பதிவு
    جزاكم الله احسن الجزاء

    ReplyDelete
  3. Anonymous9:22 PM

    alhamdhulillah masha allah jazakakumullah

    ReplyDelete