வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, November 22, 2023

நிம்மதி நிரந்தரமாகட்டும்.

 இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின் படி காஸாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

அல்லாஹ் பாலஸ்தீன் மக்களுக்கு நிரந்தர நிம்மதியை வழங்குவானாக! பாலஸ்தீன் சுதந்திர நாடு மலர இப்போதைய சூழ்நிலையை காரணமாக்குவானாக!  முஸ்லிம்களின் 3 வது புனித நிலமான பைத்துல் முகத்தஸ் மீண்டும் முஸ்லிம்களின் பரிபூரண கட்டுப்பாட்டில் வரவும் அங்கு அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

சண்டை போடுவதற்கான நியாயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் உடன்பாடு காண்பதே சிறந்தது என்பது எல்லாம் வல்ல இறைவனின் வழிகாட்டுதலாகும்.

وَالصُّلْحُ خَيْرٌ

உடனன்படிக்கை என்று வருகிற போது ஒவ்வொரு தரப்பிலும் சில விட்டுகொடுத்தல்கள் சகித்துக் கொள்ளுதல்களும் இருக்கத்தான் செய்யும் . அவ்வாறு நடந்து கொண்டால் அதற்கான நற்பலனை அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்று அடித்து வரும் வாசகங்கள் அறிவுறுத்து கின்றன

 وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ وَإِنْ تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا) [النساء : 128

 மனித மனங்களிலும் சுயநலம் ஊடுறிவியிருக்கிறது. நீங்கள் உபகாரிகளாக அல்லாஹ்வை பயந்து நடந்து கொண்டால் நடப்பவற்றை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

 குடும்பம் சமூகம் அரசியல் என அனைத்து விவகாரங்களிலும் சண்டையிடும் போக்கை விட ஏதேனும் ஒரு வகையில் சமாதானமாக செல்லும் போக்கே நன்மையானது.

 முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வில் ஹுதைபிய்யா உடன்படிக்கை என்பது மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த ஒன்றாகும்.

ஹிஜ்ரீ 6 ம் ஆண்டு உம்ரா செய்ய வந்த பெருமானாரையும் அவரது தோழர்களையும் மக்காவின் எதிரிகள் மக்காவிற்குள் அனுமதிக்க வில்லை. அவ்வாறு செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற போதும் அநீதியாக தடை செய்தனர். இறுதியில் அவர்களோடு பெருமானார் (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அந்த உடன்படிக்கை ஒரு தரப்பாக இருந்தது. முஸ்லிம்கள் உம்ராவை நிறைவேற்றாமலே தங்களது இஹ்ராமை களைந்து விட்டு மக்காவிற்கு திரும்பி விட வேண்டும். அடுத்த ஆண்டு வந்தால் அனுமதிக்கிறோம் என்றார்கள்.

 அந்த ஆண்டே அனுமதித்தால் ஒன்றும் கெட்டுப் போய்விடாது எனினும் அவர்கள் அகந்தையால் அனுமதிக்க மறுத்தார்கள்

மக்காவிலிருந்து யாரேனும் மதீனாவிற்கு வந்தால் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் தாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றும் நிபந்தனை விதித்தார்கள்.

 அமைதி உடன்படிக்கை சிறந்தது என்று போதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் மிக உணர்ச்சியமயமான கட்டத்திலும் கூட உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டார்கள்.

 உமர் ரலியின் கேள்வியும் பெருமானாரின் பதிலும்.

அல்லாஹ் ஹுதைப்பிய்யா உடன்படிக்கையை தெளிவான வெற்றி என்று கூறினான்.

فَجَاءَ عُمَرُ بنُ الخَطَّابِ، فَقالَ: يا رَسولَ اللَّهِ، أَلَسْنَا علَى الحَقِّ وهُمْ علَى البَاطِلِ؟ فَقالَ: بَلَى. فَقالَ: أَليسَ قَتْلَانَا في الجَنَّةِ وقَتْلَاهُمْ في النَّارِ؟ قالَ: بَلَى، قالَ: فَعَلَامَ نُعْطِي الدَّنِيَّةَ في دِينِنَا، أَنَرْجِعُ ولَمَّا يَحْكُمِ اللَّهُ بيْنَنَا وبيْنَهُمْ؟ فَقالَ: يا ابْنَ الخَطَّابِ، إنِّي رَسولُ اللَّهِ، ولَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا، فَانْطَلَقَ عُمَرُ إلى أَبِي بَكْرٍ فَقالَ له مِثْلَ ما قالَ للنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقالَ: إنَّه رَسولُ اللَّهِ، ولَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا، فَنَزَلَتْ سُورَةُ الفَتْحِ فَقَرَأَهَا رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ علَى عُمَرَ إلى آخِرِهَا، فَقالَ عُمَرُ: يا رَسولَ اللَّهِ، أَوَفَتْحٌ هُوَ؟ قالَ: نَعَمْ.

الراويسهل بن حنيف | المحدثالبخاري 

 திருமறை வாக்களித்த படி அல்லாஹ்  சூழ்நிலையை கணித்துக் கொண்டிருந்தான். இரண்டே வருடத்தில் ஹிஜ்ரீ 8ம் ஆண்டு பெருமானார் மக்காவை வெற்றிக் கொண்டார்கள்.

 ஆயிரமாண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கிற வெற்றி அது.

 தாங்கள் தோற்றுப் போய் சண்டை நிறுத்தம் கோர வில்லை. இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் இருந்து தங்களது மக்கள் கொஞ்சமாவது நிம்மதியை சுவாசித்துக் கொள்வதற்காக இந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

 தங்களது மக்கள் 12 ஆயிர்ம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிற நிலையிலும் 55 இஸ்ரேலிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

 எல்லாம் வல்ல அல்லாஹ் ஹுதைபிய்யாவில் முஸ்லிம்களுக்கு கொடுத்த வெற்றியை இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீனர்களுக்கு வழங்கியருள்வானாக!

 கத்தர் நாட்டிற்கு நன்றி

இப்போதைய போர் நிறுத்ததிற்கு கத்தர் நாடு மத்தியஸ்தம் செய்துள்ளது.

உலக மக்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருந்த கொடூர யுத்தததை தற்காலிகமாவது முடிவுக்கு கொண்டு வர கத்தார் நாடு பாடுபட்டதற்கு சர்வதேச சமுதாயமும் நன்றி கடன் பட்டிருக்கிறது.

 கத்தர் நாட்டின் நிலை பாராட்டிற்குரியது.

ஒரு சிறிய நாடு சர்வதேச விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்து நல்ல முடிவுகள் ஏற்பட உழைத்து வருகிறது. வலுவான பெரிய நாடுகளால் எதுவும் செய்ய முடியாத நிலையில் கத்தர் போர் நிறுத்ததிற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது.

கத்தார் நாட்டின் செல்வாக்கு

கத்தார் அதனுடைய வெளியுறவுக் கொள்கையை மிக்க உறுதியானதாகவும் தெளிவானதாகவும் அமைத்து கொண்டிருக்கிறது.

நடுநிலை நாடு என்ற பெருமையடித்துக் கொள்கிற உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா பாடம் படிக்க வேண்டிய கோட்பாடு இது.

கத்தார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. அதே நேரத்தில் ஈரானுடனும் துருக்கியுடனும் சீனாவுடனும் கூட நெருக்கமாக இருக்கிறது. (விக்கீபீடியா)

அதே போல பல இஸ்லாமிய குழுக்களுடனுன் கத்தாருக்கு நெருக்கம் இருக்கிறது. அதனால் 2006 ல் பாலஸ்தீனில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அல்பதாஹ் இயக்கங்களை ஒன்றினைய வைத்தது. 2008 ல் லெபனானில் செயல்பட்டு வந்த குழுக்களை ஒன்றிணைத்து அங்கு ஒரு அரசு ஏற்பட வழி வகுத்தது. மத்தியக் கிழக்கை தாண்டி ஆப்ரிக்காவின் சூடானில் உள்ள குழுக்களுக்கிடையே பங்காற்றி அமைதி ஏற்பட ஒத்துழைத்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கும் இடையே ஒரு சுமூக முடிவு காண்பதில் கத்தார் முக்கிய பங்காற்றிய போது அதன் மீதான் உலகின் கவனம் மேம்பட்டது.

இப்போது பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் மிக மோசமான தாக்குதலை தடுத்து நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் முடியாத போது நான்கு நாட்கள் யுத்தம் நிறுத்தப்பட கத்தார் காரணமாகி இருக்கிறது.

ஃபிஃபா உலக கால்பந்துப் போட்டியை ஆபாச ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இன்றி நடத்திக் காட்டியதில் கத்தர் அரசு தனது நிலைப்பாட்டை உலகிற்கு தெளிவாகவும் உறுதியாகவும் தெறிவித்திருந்தது. உங்களது உரிமையை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் எங்களது கொள்கையை விட்டுத்தர மாடோம். என்பதே அந்தக் கோட்பாடு.

சில வருடங்களுக்கு முன் சவூதி அரேபியே கத்தருக்கு எதிரான தடையை அறிவித்தது. தனது கைத்தடி நாடுகளையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டது.   கத்தார் இஸ்லாமிய போராளி அமைப்புக்களை ஆதரிப்பதாக கூறி சவூதி அரேபியா குற்றம் சாட்டியது. கத்தர் நாடு இந்த பூச்சாண்டிக்கு மசிந்து கொடுக்க வில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. துருக்கி சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கத்தருக்கு உதவின.  கடைசியில் சவூதி பின்வாங்கியது. இந்த நிகழ்வும்  உலக அளவில் கத்தரின் மரியாதையை மேம்பட வைத்திருக்கிறது.

உம்மதன் வஸதன் என்ற நடுநிலையான போக்கே கத்தாரின்  இந்த மரியாதைக்கான காரணமாகும்.

திருக்குர் ஆன் முஸ்லிம் சமுதாயத்தை நடு நிலைச் சமுதாயம் என்கிறது.

وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ              

 அவ்வாறு நடுநிலையாக இருப்போர் தான் மக்களுக்கான சாட்சியாளர்களாக இருக்க முடியும் என்பது இந்த வசனத்தின் கருத்தாகும்,

 சாட்சியாளர்கள் என்றால் நீதியை பராமரிப்போர் என்பது பொருளாகும்.

 இரண்டு தரப்பினரிடையே நீதியை பராமாரிப்போர் தான் சமரசம் செய்து வைக்கவும் முடியும்.

 கத்தார் அரசு இப்போது உலக முஸ்லிம் உம்மத்தின் பண்பை நிறைவேற்றி வருகிறது.

 இந்த நடுநிலைப் போக்குதான் சிறப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 وفي الحديث : خير الأمور أوسطها 

 அறிவுப் பட்டணத்தின் தலை வாசல் அலி ரலி அவார்கள் நடு நிலைமையால் ஏற்படும் அற்புதமான விளைவை சுட்டிக்காட்டினார்கள்

 عن علي رضي الله عنه" عليكم بالنمط الأوسط ، فإليه ينزل العالي ، وإليه يرتفع النازل " .

நடுத்தரத்தில் இருங்கள்! அப்போது மேலுள்ளவர்கள் உங்களை நோக்கி இறங்கி வருவார்கள். கீழுள்ளவர்கள் உங்களை நோக்கி ஏறி வருவார்கள்.

என்ன அருமையான கருத்து ?  சிந்தித்துப் பாருங்கள் !

 கத்தார் நடுநிலையாக இருந்ததால் தான் இஸ்ரேலும் ஹமாஸும் அவர்களை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறார்கள்.

 இத்தனைக்கும், கத்தார் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் தொடங்கிய முதல் நிமிட்த்திலேயே ஹமாஸை ஆதரித்த நாடாகும். கத்தாரின் நிலைப்பாடு ஆரம்பத்திலிருந்தே ஒன்றாகத்தான் இருந்தது.

 ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இப்போது கருத்துச் சொல்கிற பிரான்ஸ் கனடா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் இஸ்ரேலை ஆதரித்தன.

 அந்த நாடுகளின் நிலைப்பாடு நீதி சார்ந்தாக இருக்க வில்லை. கத்தாரின் நிலைப்பாடு நீதி சார்ந்த்தாக இருந்த்து என்பதே இப்போது சமரசம் செய்து வைக்கும் ஒரு உயர்ந்த நிலை அந்நாட்டுக்கு கிடைத்துள்ளதன் காரணமாகும்.

 அரசுகள் / அமைப்புக்கள்/ ஊடகங்கள்/ தனி மனிதர்கள் என உலகிலுள்ள அனைவரும் இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் தமது மரியாதையை நிலை நாட்டிக் கொள்ளலாம்.

 நடு நிலையாக இருந்து அமைதியையை நிலை நாட்டுபவர்கள், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோர் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

 தொழுகை நோன்பு தரமத்தை விட சிறந்தது

 قال رسـول الله صلى الله عليه وسلم ( ألا أخبركم بأفضل من درجة الصيام والصدقة والصلاة " أي درجة الصيام النافلة وصدقة نافلة والصلاة النافلة " ، فقال أبو الدرداء : قلنا بلى يا رسول الله ، قال : إصلاح ذات البين 

 ஆரம்பத்திலேயே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த உலக நாடுகள் தவறி விட்டனர்.

 ஐ நா சபை போராடிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை.

 6000 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேர் இறந்துசுமார் 5 ஆயிரம் பேர் காணாமல் போய், சுமார் 3 இலட்சம் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்ட பிறகு இப்போது இந்த சமரச சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 இத்தனை அழிவுகளுக்கும் காரணம் இஸ்ரேலை ஆதரித்த நாடுகளின் நீதியற்ற இயல்பாகும். இஸ்ரேல் எப்படி நடந்து கொள்ளும் என்பது அந்த நாடுகள் அறியாதது அல்ல. தெரிந்தும் இஸ்ரேலை நிதானப்படுத்தாமல் இஸ்ரேலுக்கு வரன்முறையற்ற ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்கா இஸ்ரேலுக்காக மற்ற நாடுகளை மிரட்டியது.

 காஸாவில் ஏற்பட்ட குழந்தைகளின் மரணித்திற்கு பெண்களின் அழுகைக்கு, மக்களின் துயருக்கு இஸ்ரேலை ஆதரித்த  நாடுகளும் முழுப் பொறுப்பாகும்.

 இஸ்ரேலிய போர்க்குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 இஸ்ரேல் தற்காலிக அமைதி உடன்படிக்கைகு ஒப்புக் கொண்டது என்பது பெரிய விசயம் அல்ல.

 அது ஒரு வகையில் இஸ்ரேலின் தோல்வியை மறைக்கும் தந்திரமாகும்.

 இஸ்ரேலின் ஒரு பெருமை

 இஸ்ரேலை ஒரு பெரிய இரணுவ நுட்பமிக்க நாடாகாவும் துணிச்சலான நடவடிக்கைகு பெயர் பெற்ற நாடாகவும் உலகம் கருதுவதற்கு ஒரு முக்கிய நிகழ்வு காரணமாகும்.

 அந்த நிகழ்வுக்கு Entebbe raid   என்டபே நடவடிக்கை என்று பெயர்,

 உலகில் மிகவும் திரில்லான நடவடிக்கைகளில் ஒன்றாக அது கனிக்கப்படுகிறது. இது பற்றி பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 இப்போது இஸ்ரேலின் பிரதமராக இருக்கிற பென்ஞமின் நெதன்யாகு பெரும்பாலான யூதர்களால் வெறுக்கப்படுகிறார். எனினும் அவர் செல்வாக்கான அரசியல் தலைவராக இருப்பதற்கு அந்நிகழ்வு ஒரு காரணமாகும்.

 1976 ஜூன் 26 ம் தேதி இஸ்ரேலின் தலை நகர் டெல் அவிவ் வில் இருந்து பிரான்ஸு நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் பாரிஸுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தை நான்கு பாலஸ்தீன் போராளிகள் கடத்தினர். பாலஸ்தீனில் இஸ்ரேலின் தொடர் வன்முறைக்கு எதிராக அவர்கள் விமானத்தை கடத்து வதாக கூறினர். முதலில் அந்த விமானத்தை லிபியாவுக்கு கொண்டு சென்றனர். அங்கு மனிதாபி மான நோக்கில் ஒரு கர்ப்பிணி பெண்ணை விடுவித்தனர்.  பின்னர் விமானத்தை உகாண்டாவுக்கு கொண்டு சென்றனர். அப்போதூ ஈதி அமீன் அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். உகாண்டா விமான நிலையத்தில் ஒரு  வரவேற்பரையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளில் இஸ்ரேலியர்களை தவிர மற்றவர்கள் 148 பேர் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலியர்கள் மட்டும் நூறு பேர் இருந்தனர்.

 அவர்களை விடுவிப்பதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஈதி அமீன் ஒரு முறை பாலஸ்தீன் போராளிகளை சந்தித்து பேசினார்.

 அந்த சந்தர்ப்பத்தில் தனது கைதிகளை தானே விடுவித்துக் கொள்வேன் என்று இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலுக்கும் உகாண்டாவில் கைதிகள் வைக்கப்பட்டிருந்த எண்டபே விமான நிலையத்திற்கும் இடையே 4000 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது.

 இஸ்ரேலிய கமாண்டோ படையினர் நான்கு விமானங்களில் யாருக்கும் தெரியாதவாறு உகாண்டாவின் ராடார்களில் சிக்காதவாறு மிக தாழ்வாக பறந்து இரவு நேரத்தில் அந்த விமான நிலையத்தில் இறங்கி ஈதி அமீன் வருவது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கி தீடீரென உள்ளே நுழைந்து விமானத்தை கடத்தியவர்கள் அனைவரையும் கொன்று தங்களது நாட்டவரில் நான்கு பேரை தவிர மற்ற அனைவரையும் விடுவித்துச் சென்றனர்

 ஜூலை 4 ம் தேதி இரவின் இருட்டில் நடைபெற்ற இந்த சாகசக செயல் உலகை பேராச்சரியத்தில் ஆழ்த்தியது.

 ஒரு குட்டி நாடு ஆயிரமாயிரம் மைல்களை கடந்து தனது அனைத்து கைதிகளையும் பத்திரமாய் விடுவித்ததை பல நாட்களாக கதை கதை யாக பேசின.

 இந்த நடவடிக்கையில் இஸ்ரேலின் கமாண்டோக்களில் இந்த நடவடிக்கையை முன்னின்று நடத்திய ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். அவரது பெயர் Yonatan Netanyahu   யோனதன் நெதன்யாகு.

 அவர் இப்போதைய நெதன்யாகுவின் மூத்த சகோதரர் ஆவார். அவரால் தான் இந்த நெதன்யாகுவுக்கு இவ்வளவு செல்வாக்கு கிடைத்தது. இது தவிர பென்ஞ்சமிடம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தவிர வேறெதுவும் இல்லை.

 இவ்வாறு இஸ்ரேல் தனது கைதிகளை பத்திரமாக மீட்டது என்கிற விவகாரத்தில் உலகில் தன்னுடைய பெறுமையை நிலைநாட்டியிருந்தது.

 அதை வைத்துத்தான் உலகில் பல நாடுகளும் அதன் திறனிலும் தொழில் நுடப் பயிற்சியிலும் நுண்ணிய நடவடிக்கைகளிலும் இஸ்ரேலை முன்னுதராணக நினைத்துக் கொண்டிருந்தனர்.

நமது நாடு இஸ்ரேலிடமிருந்து இராணுவ பாடம் படித்துதான் முஸ்லிம்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருக்கிறது.

 இப்போதைய ஹமாஸீன் தாக்குதலும் அது பிடித்து வைத்திருக்கிற கைதிகளை எப்பாடு பட்டும் மீட்க முடியாமல் போனதும் இஸ்ரேலின் பழைய பெருமைக்கு ஒரு பேரிடியாகும்.

 காஸா என்பது தனி நாடல்ல. அது இஸ்ரேலுக்குள்ளிருக்கிற ஒரு பகுதி தான். தனது சொந்த நிலத்திலேயே பல்லாயிரக்கணக்கான குண்டு மழையை பொழிந்தும் சுமார் 2 /12 இலட்சம் குடியிருப்பு தொகுதிகளை (ஹவுஸிங்க் யூனிட்) அழித்த பிறகும் கூட தனது கைதிகளை இஸ்ரேலால் கண்டு பிடிக்க முடியவில்லை.

 உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு பெரும் தோல்வியாகும்.

 கைதியாக சிக்கியிருக்கிற தங்களுடைய மக்களை மீட்காமல் வெற்று ஆத்திரத்தில் அப்பாவி மக்களை இஸ்ரேல் அரசு கொன்று குவித்துக் கொண்டிருப்பதை இஸ்ரேலிய குடிமக்களே ஏற்கவில்லை. எனவே அவர்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

 அந்த வகையில் தனது தோல்வியை மறைக்கவே இப்போது இஸ்ரேல் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது.

 உலகில் எந்த அரசு கேட்டுக் கொண்டும் தனது அநியாயமான இழிவான போரை நிறுத்தாத இஸ்ரேலை இப்படி கைதிகளை வைத்துத்தான் கட்டுப்படுத்த முடியும் என்பத அறிந்து தான் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலியர்களை கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இப்போது அவர்களில் 55 கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

 இதற்கு பதிலாக இஸ்ரேல் 150 கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

 இது வே இஸ்ரேலின்  மிக அப்பட்டமான  இனவாத வெளிப்பாடாகும். இஸ்ரேலியர் ஒருவருக்கு பல இஸ்லாமியர்கள் சமம் என்ற அதன் வக்கிர கோட்பாட்டின் அடையாளமாகும்.

 இஸ்ரேல் இந்த உடன்படிக்கைக்கு எப்போது வந்திருக்கிறது என்பதை கவனியுங்கள்.

 இந்த போர் அக்டோபர் 7 ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து இது சுமார் 1200 இஸ்ரேலியர்கள் இறந்திருக்கிறார்கள். இஸ்ரேல் அதற்கு பதிலாக சுமார் 15 ஆயிரம் பேரை கொன்று குவித்திருக்கிறது.

 அல் ஜஸீரா கூறும் இன்றைய நிலவரம்

o    The number of Palestinians killed since October 7 has risen to 14,532, including about 6,000 children, according to the government media office.

o    More than 60 percent of the buildings in Gaza have been damaged by Israeli bombardment.

o    The number of medical personnel killed has risen to 205.

o    The number of internally displaced people now stands at 1.5 million people.

பாலஸ்தீன் அரசின் செய்தி நிறுவனம் கூறும் கருத்துப்படி அக்டோபர் 7 ம் தேதியிலிருந்து இது வரை 14532 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 6000 குழந்தைகளும் அடங்குவர்.

காஸாவிலுள்ள 60 சதவீத கட்டிடடங்கள் இஸ்ரேலிய விமான தாக்குதலில் இடிக்கப்பட்டு விட்டன.

205 மருத்துவ பணியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

15 இலட்சம் மக்கள் இதுவரை தங்களது வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தில் 100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த உடன்படிக்கை நடை முறைக்கு வந்ததன் முதல் அடையாளமாக அந்த 100 பேரும் பெரிய குழிகள் தோண்டி அடக்கம் செய்யப்பட்டனர் என்று அல் ஜஸீரா கூறுகிறது.

  • More than 100 Palestinian bodies held in al-Shifa Hospital by Israeli forces buried together in Khan Younis.
  • More than 14,500 people killed in Gaza since October 7. In Israel, the official death toll from Hamas’s attacks stands at about 1,200.

இத்தகைய மிக கொடூரமான தாக்குதல்களுக்குப் பிறகு தோல்வியுற்ற ஒரு நிலையில் தான் இஸ்ரேல் இப்போது தற்காலிக உடன்படிக்கைகு வந்திருக்கிறது.

 பாலஸ்தீன் போராளிகள் இஸ்ரேலோடு தொடர்ந்து 75 ஆண்டுகளாக போராடி வருகிறவர்கள்.

அவர்களுக்கு இஸ்ரேலின் இயல்பு அத்துப்படியாக தெரியும்.

 1976 ல் பாலஸ்தீன் போராளிகள் விமானத்தை கடத்திய போது மனிதாபி மானத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை லிபியாவில் இறக்கி விட்டனர். அந்த பெண்ண்ணின் மூலமாக தகவலைப் பெற்றுத்தான் இஸ்ரேல் தன்னுடைய திறமையான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இப்போதும் அப்படி கிடைத்திருக்கிற இடைவெளியை பயன்படுத்தி, விடுதலை செய்யப்படுகிற கைதிகளை பயன்படுத்தி பாலஸ்தீன் போராளிகளை வெற்றி கொள்ள வழி வகைகளை தேடும்

 ஆகவே பாலஸ்தீன் போராளிகள் எச்சரிக்கையாகத் தான் இருப்பார்கள். இஸ்ரேலை முழுமையாக எந்த கட்டத்திலும் நம்ப முடியாது என்பது உலகிற்கும் தெரியும்.

 எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் என்பதல்லாம் தன்னுடைய சவுகரியத்திற்காக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நாடகமாக இருக்கலாம்.  

 அதனால் இஸ்ரேல் நிகழ்த்தியிருக்கிற வரலாறு காணாத கொடுமைகளுக்கு இந்த போர் நிறுத்த உடன்படிக்கை முழு சமாதானம் ஆகிவிடாது.  

 ஆகவே போர் நிறுத்த உடன்படிக்கை என்ற மயக்கத்தில் விழுந்து விடாமல் சர்வதேச உலகு இஸ்ரேலின் போர்க்குற்றத்தை விசாரிக்க உடனடியாக முயல வேண்டும். இஸ்லாமிய நாடுகளும் அதை வலுவாக கோர வேண்டும்.

 ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக பேசத் தொடங்கியிருக்கின்றன. இது மிக மிக தாமதம் என்றாலும் வரவேற்பிற்குரியது.

 இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை மட்டுமல்ல. அதன்  போர்க் குழுவினர் (வார் ரூம் உறுப்பினர்கள் )அனைவரும் போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறியிருக்கிறது.

 இது மிகவும் அவசியமானது. கோடிக்கணக்கான  மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு அரக்கன் கர்ண கொடூரமாக சாமாணிய மக்களை கொல்வதைப் போலத்தான் இஸ்ரேல் காஸாவின் மீது, அங்குள்ள மருத்துவ மனைகள், மீது அகதி முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி ஒரு நகரத்தை அழித்து சீரழித்திருக்கிறது.

 தங்களது சுய கவுரவத்திற்காக இத்தகைய மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்.

 இது போன்ற அநீதி இனி ஒரு முறை நடக்க கூடாது எனில், இது போன்ற மிகப்பெரும் மனித இன அழிப்பு இனி தொடராதவாறு தடுத்து நிறுத்தப்பட வேண்டு மெனில் ஐரோப்பிய யூனியனின் கோரிக்கைக்கு மேல் நடவடிக்கை அவசியமாகும்.

 இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் பேரிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையாயின் இப்போதைய தீர்வுகள் நிரந்தர பயனை அளிக்காமல் போய்விடும்.

 உலக யுத்ததின் முடிவில் முழுமையற்ற அநீதியான தீர்வுகள் மட்டுமே முடிவாக அமைந்தன. அதன் காரணமாகவே இரண்டாவது உலக யுத்தம் தோன்றியது என்று வரலாறு சொல்கிறது.

 அதே போன்ற தொரு நிலை பாலஸ்தீனும் தொடராமல் இருக்க சர்வதே சமுதாயம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 அப்போதுதான் நீண்ட காலத்திற்கு உலகம் அமைதியாக இருக்க முடியும்.

 எல்லாம் வல்ல இறைவன் அப்படி ஒரு நிலையான தீர்வு ஏற்பட, சுதந்திர பாலஸ்தீனம் மலர , மனித குலத்திற்கு எதிரான வன் கொடுமைகள் தடுக்கப்பட அருள் செய்யவேண்டும்.

3 comments: