வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 07, 2023

திருக்குர்ஆனின் உதவும் கரங்கள்

.அல்லாஹ் நமக்கு வழங்கிய திருக்குர்ஆன் மகத்தான சிறப்புக்களை கொண்ட ஒரு வேதம்.

அது வணக்க வழிபாடுகளுக்கு பயன்படுகிற ஒரு நூலாக மட்டும் இல்லாமல் மக்களின் வாழ்க்கையில் பிரமிப்பூட்டும் திருப்பங்களை  ஏற்படுத்தியது. இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்றைய அரபுகள் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். வியாபாரிகளான அவர்கள் தங்களது சந்தைகளுக்கு சரக்குகளை கொண்டு வருவதோடு அவரவர்களது சமூகத்தில் உள்ள கவிஞர்களையும் அழைத்து வருவார்கள். கடைச் சரக்குகளை விற்ற பிறகு கவிதை சரக்குகளுக்கு சபை அமைப்பார்கள். அதில் சிறந்த கவிதைகளை தங்க எழுத்துக்களில் எழுதி கஃபாவின் திரையில் தொங்க விடுவார்கள். அப்படி தொங்க விடப்பட்ட கவிதைகளில் ஏழு கவிதைகள் மிகப் பிரபலமானவை.

இந்தக் கவிதகள் ஆபாசத்தின் உச்சத்தில் இருந்தன.

      سبع معلقات  ஏழு தொங்கும் கவிதைகளில் அதில் ஒன்று امرآ القيس   உடை கவிதை.

அந்தக் கவிதையில் அவன் தான் உறவு கொண்ட பெண்களின் கவர்ச்சிகளையும் பாலுறவு திறமைகளையும் பாடினான்.

இதை தான் அன்றைய அரபு மக்கள் ஆரவரித்து ரசித்தார்கள். (இப்போதும் கூட ஆபாசமான பாடல்கள் தானே மக்களிடம் பிரபலமடைகிறது.)

இந்தச் சூழ்நிலையில் தான் திருக்குர் ஆன் அரபுகள் மிகவும் நேசித்த அதே இலக்கிய வடிவத்தில் அவர்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பண்பாடுகளை எடுத்துக் கூறியது.

திருக்குர் ஆனுடைய இலக்கியத்தில் மனதை பறிகொடுத்த மக்கள் அது பேசும் தத்துவங்களுக்கு தலை சாய்த்தார்கள். வரலாற்றின் பேரொழுக்கத்திற்கும் பெரும் பண்புகளுக்கும் சொந்தக்கார்ர்களாக மிளிர்ந்தார்கள். எந்த அளவுக்கென்றால் பெருமானார் (ஸல்) தன் தோழர்கள் அத்தனை பேர் குறித்தும் நம்பிக்கையோடு கூறினார்கள்

ن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم )

 எனது தொண்டர்கள் அத்தனை பேரும் நல்லவர்கள் என்று சர்ட்பிகேட் வழங்கும் தைரியம் இந்த உலகில் எந்த தலைவருக்காவது இருந்தது உண்டா?

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே அந்த தகுதி இருக்கிறது.

அவ்வாறு ஒரு சமூகத்தை உருவாக்க அவர்களுக்கு மூல கருவியாக இருந்த்து. திருக்குர் ஆன்

குர்ஆன் பேசிய பேரழுகளில் ஒன்றுதான் திருக்குர்ஆனுடைய 90 வது அத்தியாயமான அல்பலத் அத்தியாயசம். மக்கா நகரின் மீது சத்தியமிட்டு அந்த அத்தியாம் தொடங்குகிறது.

அதன் 11 முதல் 18 வரையிலான வசனங்கள் மிக அற்புதமானவை. அந்த வசனங்கள் ஆபாசம் கோலோச்சிய அரபுலகில் அதே கவித்துவ நடையில் மகத்தான் மானுடத்தை போதித்தவை.

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ (11وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (12فَكُّ رَقَبَةٍ (13أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ (16ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ (17أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ()

இந்த வசனம் சிராத்துல் முஸ்தகீம் பாலம் பற்றியது.

இதன் கருத்து.

சிரமப்பட்டாவது அவர் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட வேண்டாமா? அந்தப் பாலத்தை கடக்கும் வழி என்ன தெரியுமா ? அடிமைகளை உரிமை விடுவதும், நெருக்கடி நாளில் நெருங்கிய அனாதைகளுக்கு உணவளிப்பதும், வறிய ஏழைகளுக்கு உணவளிப்பதும், நம்பிக்கை கொண்டு பொறுமையாக இருக்கவும் கருணையோடு நடந்து கொள்ளவும் பிறருக்கு உபதேசிக்கிற குழுவினரோடு சேர்ந்திருப்பதும் ஆகும். அவர்களே வலது புறம் இருப்பவர்கள் ஆவார்கள்,

சிராத்துல் முஸ்தகீமை கடப்பது என்பது ஒவ்வொரு முஃமின் பெருங்கவலையாகும்.

சிராத்துல் முஸ்தகீமை வெற்றி கரமாக கடந்து விட்டால் சொர்க்கம் சொந்தமாகிவிடும். அதை எவ்வளவு விரைவாக கடக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் சொர்க்கம் செல்ல முடியும்.

சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடப்பது எளிதானதல்ல.

சிலருக்கு அது மூவாயிரம் ஆண்டு தூரம் கொண்டதாக இருக்கும்

مسيرته ثلاثة الاف سنة

இன்று அரசுகள் போடுகிற பாலம் கட்டுகின்றன. அதற்கு கட்டணமும் வசுலிக்கின்றன. ஒரு நிமிடம் இரண்டு நிமிட்த்தில் நாம் அதை கடந்து விட முடியும். அதற்கே எவ்வளவு கட்டணம் செலுத்த  வேண்டியிருக்கிறது ?

மக்கள் அவர்களது செயல்களுக்கு ஏற்ப சிராத்துல் முஸ்தகீம் காலத்தை கடப்பார்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 يؤمر بالصراط فيضرب على جهنم فيمر الناسر كقدر أعمالهم زمرا كلمح البرق، ثم كمر الريح، ثم كمر الطير، ثم كأسرع البهائم، ثم كذلك، حتى يمر الرجل سعيا، ثم مشيا، ثم يكون آخرهم رجلا يتلبط على بطنه، قال: فيقول: أي رب ـ لماذا أبطأت بي؟ فيقول لم أبطئ بك، إنما أبطأ بك عملك.رواه الحاكم 

சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க எப்படிப்பட்ட நற்செயல்கள் வேண்டும் ?

இந்த பலத் அத்தியாயம் கூறுகிறது.

فَكُّ رَقَبَةٍ (13

அடிமைகளை உரிமை விடுவது. 

ஆச்சரியமூட்டுகிற செய்தி இது.

கடவுளுக்கு வழிபாடு செய்வதை அல்ல; மக்களுக்கு உபகாரம் செய்வதை சிராத்துல் முஸ்தகீமை கடக்க வழியாக கூறுகிறது.

இந்த வசனத்திற்கு அடிமைகளை விடுதலை செய்து என்பது பொருள் என்றாலும் காலத்திற்கேற்ப அதற்கு பொருள் கொள்ள முடியும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த வகையில் நெருக்கடியில் சிக்கியிருப்பவர்களுக்கு உதவுகிற அனைத்து செயல்களையும் இது எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள்.

புயல் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றுவது, அவர்களுக்கு தேவையான, இடவசதி, செய்திகளை தருவது, உணவளிப்பது, மற்ற நிவாரணம் பணிகள் அனைத்தையும் இது எடுத்துக் கொள்ளும்.

நிவாரணம் தேவையுடையோர் எவ்வளவு வசதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்

தேவையுடையவர்கள் குதிரையில் வந்தாலும் சரி அவர்களுக்கு உதவு என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وى الإمام مالك في الموطأ عنه أن النبي صلى الله عليه وسلم قال : ( أَعْطُوا السَّائِلَ وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ ) .

 இதில் பேதம் பாராட்டக்கூடாது என முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) கற்றுக் கொடுத்தார்கள்.

 الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ، ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ».أَخْرَجَهُ أَبُو دَاوُدَ 

 இவ்வாறு செய்கிற உதவிகள் வாழ்வில் நம்முடைய அனைத்து காரியங்களையும் இலேசாக்கி வைக்கும் என்று மற்றொரு வசனம் கூறூகிறது.

 فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى

 இந்த வசனமும் மக்கள் பணியை தான் முதலாவதாக கூறுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்கள் மேலும் சொன்னார்கள்

أن رسول الله صلى الله عليه وسلم قال: (من نفَّسَ عن مسلمٍ كُربةً مِن كُربِ الدُّنيا نفَّسَ اللَّهُ عنهُ كربةً مِن كُرَبِ يومِ القيامةِ، ومن يسَّرَ على مُعسرٍ في الدُّنيا يسَّرَ اللَّهُ عليهِ في الدُّنيا والآخرةِ، ومن سَترَ على مُسلمٍ في الدُّنيا سترَ اللَّهُ علَيهِ في الدُّنيا والآخرةِ، واللَّهُ في عونِ العَبدِ، ما كانَ العَبدُ في عونِ أخيهِ) (الألباني في صحيح الترمذي

 

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "الخلق كلهم عيال الله وأحب خلقه إليه أنفعهم لعياله "الطبراني

ومعنى "عيال الله" فقراء الله 

(அல்லாஹ்வின் குடும்பம் என்பதன் பொருள் அல்லாஹ்வின் உதவியில் வாழ்பவர்கள் என்பதாகும்).

இந்த வழிகாட்டுதல்கள் தேவையுடையவர்களுக்கு உபகாரம் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதை தலைமேல் கடமையாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கின. பேரரசர்களாக இருந்தவர்கள் கூட அவசர காலத்தில் மக்களுக்கு உதவும் செயலை நேரடியாக செய்தார்கள்.

 உமர் ரலி அவர்கள் தன்னிடம் எதுவும் இல்லை என்று  உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு தானே உதவிப் பொருட்களை எடுத்து வந்து கொடுத்து இது தீர்வதற்குள் அடுத்த உதவி வந்து சேரும் என்று ஆறுதல் படுத்தினார்கள்

 ا رواه أسلم مولى عمر قال: (خرَجْتُ مع عمرَ بنِ الخطابِ رضي الله عنه إلى السُّوقِ، فلَحِقَتْ عمرَ امرأةٌ شابةٌ، فقالت: يا أميرَ المؤمنين، هلكَ زوجي وتركَ صِبْيَةً صِغارًا، والله ما يَنْضِجون كُراعًا، ولا لهم زرعٌ ولا ضَرْعٌ، وخَشِيتُ أن تأكلَهم الضَبْعُ، وأنا بنتُ خَفافِ بنِ إيماءَ الغِفارِيِّ، وقد شَهِدَ أبي مع النبيِّ صلى الله عليه وسلم، فوَقَفَ عمرُ ولم يَمْضِ، ثم قال: مرحبًا بنَسَبٍ قريبٍ. ثم انصرَفَ إلى بَعِيرٍ ظَهِيرٍ كان مربوطًا في الدارِ، فحَمَلَ عليه غَرارتَيْنِ ملأَهما طعامًا، وحَمَل بينهما نَفَقَةً وثيابًا، ثم ناولَها بخِطَامِه، ثم قال : اقْتَادِيه، فلن يَفْنَىَ حتى يأتيَكم اللهُ بخيرٍ، فقال رجلٌ: يا أميرَ المؤمنين، أكثرْتَ لها؟ قال عمرُ: ثَكِلَتْك أمُّك! واللهِ إني لأرى أبا هذه وأخاها، قد حاصرَا حِصْنًا زمانًا فافتَتَحَاه، ثم أصبحنا نَسْتَفِيءُ سُهْمَانَهما فيه) (صحيح البخاري 4160) .


அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஸ்தி ரஹ் அவர்கள் ஒரு குடியானவனுக்கு அவனது நிலம் பற்றிய பிரச்சனையில் உதவு வதற்காக அஜ்மீரிலிருந்து தில்லி வரை நடந்தே சென்றார்கள். அப்போதைய அரசர் இல்துமிஷ் தில்லியியின் வாசலுக்கே வந்து காஜா நாயகத்தை வரவேற்றார். இதை யாரிடமாவது சொல்லி அனுப்பியிருக்கலாமே என்றார். காஜா நாயகம் கூறினார்கள் இந்த நன்மை எனக்கு கிடைக்க வேண்டுமே அதற்காக நானே வந்தேன் என்றார்கள்.

சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க உதவும் அடுத்த செயல் சிரமப்படுகிற நாளில் சொந்தக்கார அநாதைகளுக்கு உணவளிப்பது, அடித்தட்டிலிருக்கிற ஏழைகளுக்கு உணவளிப்பது என்று அல் பலத் அத்தியாயம் கூறுகிறது.  

أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ (16

பொதுவாக பசித்தோருக்கு உணவளிப்பதை பல வகைகளில் திருக்குர் ஆனும் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகச் சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்கள்.

திருக்குர் ஆனின் அத்தஹ்ர் (76) அத்தியாயத்தின் 5 முதல் 12 வரையிலான வசனங்கள் உணவளிப்போரின் சிறப்பை எடுத்துப் பேசுகின்றன.

அற்புதமான செய்திகள் அவை

 إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا؛ عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا؛ يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا؛ وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا؛

 நல்லவர்கள் சொர்க்கத்தில் கற்பூரம் கலந்த மணம்மிக்க தண்ணீரை அருந்துவார்கள். அந்த தண்ணீர் அவர்கள் விரும்புகிற இட்த்தில் அவர்களாக உற்பத்தி செய்த அருவிகளிலிருந்து கிடைத்த தண்ணீர்ரை அருந்துவார்கள்.  

 விரலசைவில் வந்து விழும் அருவிகள்

 இந்த வசனம் நல்லவர்கள் நாளை மறுமையில் தங்களது விரலசைவிற்கேற்ப அருவிகளை உருவாக்கி கொள்வார்கள். அவர்கள் அருவிகளை தேடிப் போக வேண்டியிருக்காது என்று கூறுகிறது.   

عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِير என்ற வார்த்தைக்கு அவர்கள் பீறிடச் செய்கிற அருவிகள் என்று பொருள் என்று முஜாஹித ரஹி விளக்கம் கூறுகிறார்.

 وقال مجاهد( يفجرونها تفجيرا ) يقودونها حيث شاؤوا ، وكذا قال عكرمة وقتادة . وقال الثوري : يصرفونها حيث شاؤوا .

 .இவ்வளவு பெரும் சிறப்பு அவர்களுக்கு எதனால் கிடைத்த்து ?

அவர்கள் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் நிர்கதியானவர்களுக்கும் உணவளிப்பார்கள் அதனால் கிடைத்த்து.

 وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا

தேவையுடையோரின் பசியை ஆற்றுவோருக்கு கிடைக்கும் இந்த பெருமையை எவ்வளவு மதிப்பு மிக்கது?

வசதி வாய்ப்பிருந்தும் நெருக்கடியான கால கட்ட்த்தில் மக்கள் பசியாற்றாதோர் நரகத்தின் சொந்தக் கார்ர்கள் என்று மற்றொரு வசனம் கண்டிக்கிறது.

நரகவாசிகளிடம் உங்களை இங்கு இழுத்து வந்தது எது என்று கேட்கப்படும். அப்போது அவர்கள் சொல்வார்கள். நாங்கள் ஏழைகளுக்கு உணவளித்திருக்க வில்லை.

 مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ (44)

அல் பலத் அத்தியாயம் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க மூன்றாவது ஒரு வழியையும் சொல்கிறது .

(16ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

நம்பிக்கையாளர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு பரஸ்பரம் பொறுமையாக இருக்க அறிவுறுத்துவார்கள். பரஸ்பரம் கருணையை வெளிப்படுத்தவும் அறிவுறுத்துவார்கள்.

இது நெருக்கடி காலங்களில் இதுவும் தேவைப்படும் மிக முக்கிய மான ஒரு சேவையாகும். நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்போர் பல சந்தர்ப்பத்திலும் பதட்டத்தில் இருப்பார்கள்.

அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அவர்களிடம் பொறுமையாக இருங்கங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கடவுள் உங்களுக்கு கிருபை செய்வான் என்று ஆறுதல் கூறவேண்டும். அதே போல அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்த மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இத்தகைய மூன்று செயல்கள் சிராத்துல் முஸ்தகீமை கடக்க உதவும் என்று சொல்லி விட்டு திருக்குர் ஆன் இறுதியாக சொல்கிறது.

أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

தப்ஸீர் தன்தாவீ கூறுகிறது.

هم أصحاب الجهة اليمنى التى فيها السعداء الذين يؤتون كتابهم بأيمانهم 

அவர்கள் வலது பக்கத்துக் கார்ர்கள் என்பதன் பொருள் அவர்களுடைய பட்டோலைகள் அவர்களது வலது கையில் கொடுக்கப்படும் என்பதாகும்.

மறுமையில் முஸ்லிம்களுடைய பெரும் கவலைகளில் ஒன்று அவர்களது பட்டோலை எந்த கையில் தரப்படும் என்பது.

ஆக் அல்பலத் அத்தியாயத்தின் இந்த வசனம் சிராத்துல் முஸ்தகீமை கடக்க ஆரம்பத்தில் வழி சொல்கிறது. இறுதியில் அதையே வலது கையில் பட்டோலையை பெருவதற்கானது என்றும் கூறிவிடுகிறது.

இத்தகைய அறிவுறுத்தல்கள் தான் முஸ்லிம் உம்மத்தை எந்த சூழ்நிலையிலும் உபகாரிகளாகவும் உதவியாளர்களாகவும் ஆக்கியிருக்கிறது. வரலாறு நெடுகிலும்.

அந்த வகையில் தான் தற்போதைய சென்னை பெரு வெள்ளத்தில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த வாரம் 50 வருடங்களில் இல்லாத அளவு கன  மழை பொழிந்துள்ளது. பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சுமார் ஒரு வார காலமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். குழந்தைகளும் வயதானவர்களும் ஒதுங்க இடமின்றி அல்லல் படுகிற சூழ்நிலையில் முஸ்லிம்கள் தங்களது பள்ளிவாசல்களை அனைத்து மக்களும் தங்கிக் கொள்ள தாரள அனுமதிகளை வழங்கியுள்ளனர். கடைகள் மூடிக்கிற நிலையில் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கியுள்ளனர். குடிக்கிற தண்ணீருக்கு மக்கள் பெரிதும் சிரமப்படுகிற நிலையில் தண்ணீர் வழங்கியும், இன்றைய அத்தியாவசியமான செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளவும் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் மட்டுமல்ல மற்ற பல மத சமுக அமைப்புக்களும் இதில் மிகச் சிறப்பாக பங்காற்றிவருகின்றனர். ஏனெனில் மக்களுக்கு உதவி செய் வதை போற்றாதவர்கள் இருக்க முடியாது. எனினும் முஸ்லிம்களின் பணி இன்னும் சிறப்பாக இருந்தது.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விரைவான நிவாரணத்தையும் நிம்மதியையும் தந்தருள்வானாக!

அரசாங்கம், அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் தூய்மைப்பணியாளர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், பொதுத்துறை அதிகாரிகள் மாநகராட்சி பணியாளர்கள் இவர்களோடு சேர்ந்து ஏராளாமானோ பொதுமக்களும் இந்த காரியத்திற்காக தம் உயிரை, உடல் நலனை பொருட்படுத்தாது பணியில் ஈடுபட்டுள்ளனர். வசதி வாய்ப்புள்ளோர் தாராளமாக உதவி செய்துள்ளனர். அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் தகுந்த பாதுகாப்பையும் நற்கூலிகளையும் வழங்கியருள்வானாக!

நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முஸ்லிம்களின் பணிகளை அல்லாஹ் கபூல் செய்தருள்வானாக! அவர்கள் அனைவரும் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை அல்லாஹ் மின்னல் வெட்டும் நேரத்தில் கடக்கச் செய்வானாக! அவர்களது பட்டோலைகளை வலது கரத்தில் தந்தருள்வானாக!

இவ்வாறு துஆ செய்யும் போது ஒரு விசயத்தை நினைவு படுத்துவது நமது கடமை.  

நிவாரணப்பணிகளில் ஈடுபடும் முஸ்லிம்கள் நினைவில் வைக்க வேண்டிய முக்கியமான ஒரு அறிவுரையை திருக்குர் கூறுகிறது.

அரசியல் ரீதியா ஒரு பலத்தை வளர்த்துக் கொள்வதற்காக, அல்லது சமூக அளவில் கிடைக்கும் ஒரு நற்பெயருக்காக என்று இந்த அருமையான காரியத்தை மலிவுபடுத்தி விட வேண்டாம். என்பதே அந்த அறிவுரை

அத்தஹ்ரு அத்தியாயம் கூறுகிறது.

நல்லவர்கள் கூறுவார்கள். நாங்கள் அல்லாஹ்விற்காக செய்கிறோம். நாங்கள் மிக கடுமையான முகத்தை கடுகடுப்பாக்குகிற அந்த இறுதி நாளை பயந்து செய்கிறோம். உங்களிடமிருந்து ஒரு நன்றியை கூட நாங்கள் எதிர்பார்க்க வில்லை (தப்ஸீர் தப்ரீ)

إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا؛ إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا؛ فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا؛ وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا} [الإنسان:5-12

 இவர்கள் விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்று மக்கள் நினைத்து விடாத அளவில் நமது பணி தூய்மையாக இருக்க வேண்டும்.

அப்போது அல்லாஹ் திருப்தியடைவான்.

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் பிலால் ரலி அவர்களை விலைக்கு வாங்கி உரிமை விட முன் வந்த போது பிலால் ரலி அவர்களின் முதலாளி “ இவர் வேண்டாம் இவரை விட சிறந்த வேறு அடிமையை தருகிறேன் என்றார். அபூபக்கர் சித்தீக் ரலி அதை மறுத்து அவர் தான் வேண்டும் என்றார்கள். அப்போது அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கிசு கிசுத்தார்கள். இவருக்கும் அவருக்கும் ஏதோ ஒரு உறவு அல்லது இரசியம் இருக்கிறது. அதனால் தான் நோஞ்சான் அடிமைய வாங்குகிறார் என்று பேசினார்கள்.

அவர்களுக்கு அல்லாஹ் பதிலளித்தான்.

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ (18وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ (19إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ (20وَلَسَوْفَ يَرْضَىٰ (21

அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வான் என்றான்.

இதுவே மக்கள் தொண்டாட்டுகிற முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அழுத்தமான செய்தி .

அல்லாஹ்வுக்காக நாம் காரியங்களை ஆற்றுவோம். அல்லாஹ் கபூல் செய்வானாக!

)ஒரு அறிவுப்பு ஹஜ்கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.  ஹஜ் செய்ய நாடியிருப்பவர்கள். உரியவர்களை அனுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

6 comments:

  1. Anonymous8:52 AM

    மாஷா அல்லாஹ்.
    அற்புதமான கட்டுரை.
    தேவைக்கேற்ப தந்துள்ளீர்கள் அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிவானாக.
    ஆமீன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் பேரற்புதம்

    ReplyDelete
  3. Anonymous7:01 PM

    சரியான நேரத்தில் சரியான கட்டுரை மிக ஆழிய கருத்துக்கள் அல்லாஹ் தங்களை பொருந்திக் கொண்டு சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்

    ReplyDelete
  4. Masha Allah,
    Very good content Hazrath.
    Jazakallah Usthad

    ReplyDelete
    Replies
    1. Anonymous8:56 PM

      மாஷா அல்லாஹ் சிறப்பான கட்டுரை அல்லாஹ் உங்கள் முயற்சியை கபூல் செய்வானாக ஆமீன்

      Delete
  5. Anonymous11:45 AM

    அருமையான பதிவு தாங்களின் சிறப்பான பணி சிறக்க வாழ்த்துக்கள்
    அக்பர் சார்ஜா

    ReplyDelete