வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 01, 2024

பனாரஸ் பள்ளிவாசலுக்கு குறி

وَلا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُفْسِدِينَ [القصص:77

உலக வரலாற்றில் முக்கியமான ஒரு காட்சி இருக்கிறது.

உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸ் வெற்றியின் போது மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுகையை நிலை நாட்டினார்கள். அதே நேரத்தில் அங்குள்ள கனீசத்துல் கியாமா என்ற கல்லறை தேவாலயத்தில் தொழுமாறு பாதிரிகள் கேட்டுக் கொண்டபோது நான் இங்கே தெழுதால் பின்னால் அதுவே சர்ச்சையாக அமைந்து விடக் கூடும் என்று உமர் ரலி அவர்கள் மறுத்து வெளியே வந்து தொழுதார்கள்..

மனித வரலாறு கண்ட மகத்தான செய்தி இது.

மூஸா அலை அவர்கள் அல்லாஹ்வுடன் பேசிய தூர் மலையில், ஒரு தேவலாயம் கட்டப்பட்டது. எகிப்தில் தூர் மலை இருக்கிற சினாய் பிரதேசம் 1420 ஆண்ட்டுகளாக முஸ்லிம்களிடம் இருக்கிறது. அந்த தேவாலயம் இப்போதும் அப்படியே ரோமிலுள்ள ஆர்த்தோடகஸ் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  முஸ்லிம்கள் அதை ஆக்ரமிக்கவில்லை. மூஸா அலை அவர்களுடன் அல்லாஹ் பேசிய இடம் என்று அதற்கு சொந்தம் கொண்டாடவில்லை.

கலீபா ஹாரூன் ரஷீதின் காலத்தில் பக்தாதில் ஒரு பெரிய பள்ளிவாசலை கட்ட பக்தாதின் கவர்னர் நினைத்தார். அதற்கு ஒரு யூதப்பெண்ணின் வீடு தேவைப்ட்டது. அதை விலை பேசினார்கள். அப்பெண்மணி ஆரம்பத்தில் மறுத்தார். தொடர்ந்து அதிகாரிகள் பேசி இரண்டு மடங்கு விலைக்கு அந்த இடத்தை வாங்கினார்கள். பிரம்மாண்டமாக அப்பள்ளிவாசல் கட்டப்பட்டது.

 அந்த யூதப் பெண்மணிக்கு ஒரு முறை கலீபாவை சந்தித்துக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தனது முன்னோர்கள் வசித்த வீடு தனது விருப்பமின்றி பெறப்பட்ட்து என்று அப்பெண் புகார் கூறினார். கலீபா ஹாரூன் ரஷீது,  அந்தப் பள்ளிவாசலை இடித்து அப்பெண்மணியின் வீட்டை அது  முன்பு இருந்தவாறு கட்டிக் கொடுக்க உத்தரவிட்டார். அவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டாம். அது அவருக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்றும் கூறினார். .

 இது தான் உலகம் முழுவதிலும் காலம் காலமாக முஸ்லிம்கள் கட்டபிடித்து வரும் வரலாறு,

 நியாயமின்றி எதைய்ம் யாருடையதையும் ஆக்ரமிப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை

 وقال صلى الله عليه وسلم : ( من غصب شبراً من الأرض طوقه من سبع أرضين ) , 

وقال صلى الله عليه وسلم : ( من قضيت له بحق أخيه ؛ فلا يأخذه ؛ فإنما أقطع له قطعة من نار ) .

கடவுளை வழிபடுதல் என்றாலும் அதற்குரிய நீதி கடைபிடிகப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆக்ரமிக்கப்பட்ட நிலத்தில் தொழுவது சரியல்ல என்பதும் அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடடம் அகற்றப்பட வேண்டும் என்பதும் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அனைவரின் தீர்ப்பாகும்.\

ஆக்ரமிக்கப்பட்ட நிலத்தில் ஒரு செடியை நட்டு வைத்தாலும் அது பிடுங்கப்பட வேண்டும்.

அதில் கொஞ்ச நேரம் தங்குவதே கூட கூடாது.

وقال النووي في شرحه لكلام الشيرازيالصلاة في الأرض المغصوبة حرام بالإجماع.

قال القرطبي رحمه الله: ( وإذا بنى في البقعة المغصوبة أو غرس فإنه يلزم قلع ذلك ‏البناء والغرس)

قال الشيرازي في المهذبولا يجوز أن يصلي في أرض مغصوبة، لأن اللبث فيها يحرم في غير الصلاة، فلأن يحرم في الصلاة أولى.

இதுவே இஸ்லாம் கற்றுக் கொடுத்த பண்பாடாகும்.

திருக்குர் ஆன் வழிபாடு குறித்து ஒரு அருமையான செய்தியை சொல்கிறது.

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ)، «

நீங்கள் உங்கள் இறைவனை பக்தியுடனும் பகட்டில்லாமலும் தொழுங்கள். வரம்புமீறுகிறவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

வழிபாட்டிலும் வழிபாட்டு ஸ்தலங்களில் அகம்பாவ பகட்டிற்கு இடமில்லை. அதில் அதிகார திமிருக்கும் இடமில்லை.

பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாஸிய்யா அரசர் மன்சூர், தொழுகையில் மீசையை முறுக்கினார். அதை கண்ட சுப்யான் தவ்ரீ (ரஹி) பகிரங்கமாக கண்டித்தார்கள். இதனால் கோபமடைந்த அரசர் அவரை பிடித்து தண்டனை கொடுக்க உத்தரவிட்டார். ஆனால் தண்டனை வழங்கப்பட்டுவதற்கு முன் அரசர் இறந்து போனார் என்கிறது இஸ்லாமிய வரலாறு .

அதே போல குழப்பத்தை உருவாக்கும் செயல்களை யாரும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

وَلا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُفْسِدِينَ [القصص:77]

இது முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிக முக்கியமான உத்தரவாகும்.

அதிகாரம் கிடைக்கிற போது காரணங்களை தேடிக் கண்டு பிடித்து சிலர் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார்கள்.

பிரச்சனைகள் அல்லாஹ்விற்கு பிரியமானவை; அல்ல நிம்மதியும் அமைதியும் தான் அல்லாஹ்விற்கு பிரியமானது.

அல்லாஹ் பிரச்சனைகளை அமிழ்த்தவே விரும்புகிறான்.

..كُلَّمَا أَوْقَدُوا نَارًا لِلْحَرْبِ أَطْفَأَهَا اللَّهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ [المائدة: ٦٤]

அதிகாரத்திற்கு வந்த பிறகு பிறகு மக்களுக்கிடையே பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.

 

فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ  [محمد: ٢٢


இதை தலைவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் மிக கவனமாக நினைவில் கொள்ள வேண்டும். (குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் கூட இப்படித்தன் நாம் நடந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளை தேடிச் செல்லக் கூடாது.)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கஃபாவை இபுறாகீம் நபி கட்டியது பொல பெரிதாக கட்ட ஆசைப்பட்ட போதும் அது குழப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என நினைத்து அதை தவிர்த்துக் கொண்டார்கள். மக்கா வெற்றியின் போது காபிர்கள் கஃபாவின் மீது போர்த்தியிருந்த திரையை கூட பெருமானார் (ஸல்) அவர்கள் அகற்றவில்லை.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அவர்கள் வெற்றி கொண்ட நிலமெங்கும் இத்தகைய அனுகுமுறைகளையே கடைபிடித்தார்கள். சமய நல்லிணக்கத்தை நிலை நாட்டினார்கள்.

அதனாலேயே இஸ்லாமிய அரசுகள் சிறுபான்மை அரசுகளாக இருந்த போதும் நெடுங்காலம் நீடித்தன.

இதற்கு மாற்றமாக நியாமின்றி ஆக்ரமிப்புச் சிந்தனையோடு முஸ்லிம் ஆட்சியாளர்கள் நடந்து கொண்டார்கள் என்பது பெரும்பாலும் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளே ஆகும்.

அவ்வாறு இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளில் ஒன்று தான் தற்போது நமது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிற வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலைப் பற்றிய சர்ச்சையாகும்.

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி நகரத்தில் பிரபல காசி விசுவநதர் கோயில் உள்ளது. அதற்கு அருகிலேயே ஞானவாபி பள்ளிவாசல் இருக்கிறது.

வாரணாசியிலிருந்த ஒரு கோயிலை இடித்து விட்டு அங்கு  அவுரங்கசீப் இந்த பள்ளிவாசலை கட்டினார் என்று அப்பட்டமான ஒரு பொய்யை பகிரங்கமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

வரலாற்றில் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய பேரரசை நட்த்தியவர் அவுரங்கசீப் ஆவார். அவரை போல ஆசியாவின் பெரு நிலப்பரப்பை ஆட்சி செய்த தனி அரசர் வேறெவரும் இன்று வரை இல்லை என்பது புகழ் பெற்ற பல வரலாற்று ஆசிரியர்களின் முடிவாகும்.

மிகப்பெரும் ஒரு அரசை நடத்தியவர் கோயில்களை இடிப்பவராக இருந்திருந்தால் 50 ஆண்டுகள் வலிமையான ஒரு அரசை நடத்தியிருக்க முடியுமா ?    என்று பலரும் சிந்திப்பதில்லை.

அதனால் திரும்ப திரும்ப அவுரங்கசீப் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசல் கட்டினார் என்ற பொய்யை பெரும்பாலான மக்களும் உண்மையாக இருக்கலாம் என்று நம்பி விடுகிறார்கள்

துரதிஷ்ட வசமாக மக்கள் பொதுவாக செய்திகளை தேடிக் கொள்ளும் தளமாக இருக்கிற விக்கீபீடியாவில் இப்படியே செய்தி பதிவாகி இருக்கிறது.

உண்மையில் இந்த பள்ளிவாசல் அவுரங்கசீப்புக்கு பல வருடங்களுக்கு முன்னதாகவே கட்டப்பட்டதாகும்.

அவுரங்க சீப்புக்கு 50 வருடங்களுக்கு முந்தியவர் முகலாய மன்னர் அக்பர். அவரது காலத்தில் இந்த பள்ளிவாசல் இருந்திருக்கிறது. அக்பர் காலத்துக்கு முன்னாள் வாழ்ந்த மக்தூம் ஷா பனாரஸி என்ற மிகப்பெரிய சூபி அறிஞர் இந்தப் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுதிருக்கிறார் என்ற வரலாற்று குறிப்புகள் உண்டு என்பதை கனித்துப் பார்க்கிற போது அவுரங்கசீப்புக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த பள்ளிவாசல் இருந்திருக்கிறது.

அவுரங்கசீப் இந்த பள்ளிவாசலை புணர் நிர்மாணம் செய்திருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.

இதற்கான குறிப்புகளும் ஆதாரங்களும் அந்தப் பள்ளிவாசலிலேயே உண்டு.

வாரணாசி நகரில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் ஒரு காலத்தில் கங்கை நதிக்கரையில் இருக்கிற அந்த  நகரம் அனைத்து சமூக மக்களும் நட்புடன் பழகி அறிவார்த்தமான விவாதங்கள் செய்து கொண்ட நகராக திகழ்ந்திருக்கிறது.

காசி நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

காசிப் பட்டு (பனாரஸ் பட்டு) மிகவும் பிரபலமானது, இந்த பட்டு உற்பத்தி என்பது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிலாகும். அந்த பட்டை பிரபலப்படுத்தியவர்கள் முஸ்லிம்களே ஆவார்கள்.

பனாரஸ் பட்டு பற்றி விக்கீபீடியா கூறுகிறதுல் (ஆங்கிலம்)

Silk weaving is the dominant industry in Varanasi. Muslims are the influential community in this industry with nearly half a million of them working as weavers, dyers, sari finishers, and salespersons

 . வாரணாசியில் பட்டு நெசவு முக்கிய தொழிலாக உள்ளது. முஸ்லீம்கள் இந்தத் தொழிலில் செல்வாக்கு மிக்க சமூகமாக உள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட அரை மில்லியன் ( ஐந்து இலட்சம்) பேர் நெசவாளர்கள், சாயமிடுபவர்கள், புடவை முடிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களாக வேலை செய்கிறார்கள்.

காசி நகரத்தை இந்துக்களின் புனித தலம் என்று இப்போது அழுத்தமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

அங்கு முஸ்லிம்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க 15 பள்ளிவாசல்கள் உண்டு  There are 15 mosques of significant historical value in Varanasi. என்று ஆங்கில் விக்கிபீடியா கூறூகிறது,.

உண்மையில அது இந்துக்கள் முஸ்லிம்களின் புனித தலம் மட்டுமல்ல, புத்தர்கள் ஜைனர்களின் புனித தளமும் ஆகும். ஜைனர்ர்களின் பிர்தான தீர்த்தங்கர்ர்களில் ஒருவர் காசியில் பிறந்திருந்திருக்கிறார்.

அந்த வகையில் காசியில் வசிக்கிற மக்கள் தொகையில் ஒரு சதவீத்த்திற்கும் குறைவான புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கூட காசி முக்கியமானது  

அந்த வகையில் காசி நகரத்தில் தழைத்தோங்கி நின்ற ஆன்மீக ஒருமைப்பாட்டின் சின்னமாக கியான் வாபி பள்ளிவாசலும்  காசி விசுவநாதர் கோயிலும் அருகருகருகே அமைந்துள்ளன.

கியான் வாபி என்பது தமிழில் ஞானவாபி என்று கூறப்படுகிறது. அதன் பொருள் ஞானத்தின் கிணறு என்பதாகும். பள்ளிவாசலுக்கு அருகே உள்ள இந்தப் பெயரில் ஒரு கிணறு உள்ளது. அதை யொட்டி இப்பெயர் வந்துள்ளது.

காசு விசுவநாதர் ஆலயத்திற்கு செல்லும் வழியும் கியான்வாபி பள்ளிவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பெயர்ப்பலகையில் காசி நகரத்தில் இப்போதும்  இருக்கிறது.

இந்த நல்லிணக்கத்தை சகித்துக் கொள்ல முடியாத சக்திகள் தான் இப்போது கியான்வாபி பள்ளிவாசலை பிரச்சினைக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

இது நமது நாட்டில் நடை பெற்று வருகிற சமீப காலத்திய அப்பட்டமான அத்துமீறலாகும்.

விசுவ இந்து பரிஷத் அமைப்பு தொடர்ந்து அந்த பள்ளிவாசலை கோயில் என்று வாதிட்டு வருகிறது. 1996 ல் பாபரீ மஸ்ஜிதை இடித்த்து போல இந்த பள்ளிவாசலையும் இடிக்க விசுவ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது. ஆனால் மக்கள் வரவில்லை.

தொடர்ந்து அந்தப் பள்ளிவாசலை ஆகரமிப்ப்தற்கான என்னென்ன வேலைகள் உண்டோ அத்தனையையும் முறைகேடாக செய்துவருகிறது அந்த அமைப்பு.

2019 மார்ச் மாதம் அந்தப் பள்ளீவாசலின் மேற்குப் புற வாசலில் நந்தி சிலை இருப்பதாக புரளியை கிளப்பி விட்டது. இதற்காக 4 பெண்களை வைத்து வழக்குத் தொடர்ந்தது.

2021 அக்டோபர் 8 ம் தேதி வாரணாசி கோர்ட் இந்திய தொல்பொருள் துறைக்கு இந்த பள்ளிவாசலை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

2022 ஏப்ரல் 14 மே 15 ஆகிய நாட்களில் ஞானவாபி பள்ளிவாசலை வீடியோ பதிவு செய்தனர்.

இந்த பணிக்கு நியமிக்கப் பட்ட ஒரு ஹிந்து அதிகாரி நீதிமன்ற நடைமுறைகளுக்கு எதிராக அவரது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதிலாக பொது வெளியில் தெரிவித்தார்.

அவர் பள்ளிவாசலின் ஒளு செய்யுமிட்தில் அலங்காரத்திற்காக கட்டப்படும் நீரூற்றை லிங்கம் இருப்பதாக கூறினார்.

வாரணாசி நீதி மன்றம் உடனடியாக இதை ஏற்று ஒளு செய்யும் இட்த்திற்குள் முஸ்லிம்கள் செல்வதை தடுத்ததோடு பள்ளிவாசலுக்கு 20 முஸ்லிம்கல் மட்டுமே தொழு அனுமதிக்கப்படுவார்கள் என்ற் கூறீயது.

இதை எதிர்த்து மஸ்ஜித் இன்திஜாம் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட்து.

சுப்ரீம் கோர்ட் ஒலூ செய்யும் மிட்த்திற்கான தடையை அப்படியே தொடரவும் பள்ளிவாசலில் தொழுகைக்கான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்றும் கூறியது.

வாரணாசி நீதிபதியின் முன் மற்றும் ஒரு வழக்கு இருந்தது.

சைலேந்திர குமார் பதக் என்பவர் கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார் என்றும் 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே  அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனுவை மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா விசாரித்தார். அவர் ஓய்வு பெறுகிற கடைசி நாளான கடந்த புதன் கிழமை இதுவிசயத்தில் அதிர்ச்சியளிக்கிற ஒரு தீர்ப்பை அளித்துள்ளார்.

அத்தீர்ப்பு பற்றி சைலேந்திர குமார் பதக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்ரதவிட்டுள்ளது. எனவே, இன்னும் 7 நாட்களில் இந்துக்கள் அங்கு சென்று வழிபட முடியும். அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதுஎன தெரிவித்தார்.

தொடர்ந்து விஷ்னு சங்கர் கூறிய வார்த்தைகளையும் நாம் கவனிக்க வேண்டும்

அயோத்தி வழக்கில் நீதிபதி கே.எம்.பாண்டே 1986-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராமர் கோயிலின் பூட்டை திறக்க உத்தரவிட்டார் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இன்றைய உத்தரவை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதுதான் இந்த வழக்கின் திருப்புமுனை.

பாபர் மஸ்ஜித் வழக்கைப் போலவே இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் திட்டமிட்டு நாட்குறிப்பிட்டு பயன்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.  

வாரணாசி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கியான்வாபி பள்ளிவாசலின் தரப்பு தெரிவித்த்த்து என்றாலுலும் தீர்ப்பு வெளியான உடனேயே வியாழன் இரவு 3 மணியளவிலே பள்ளிவாசல் வளாகத்தில் பூஜைகள் நடத்தப்பட்ட்தாக வாரணாசி மாவட்ட ஆட்சியாளர் கூறியுள்ளார். அவர், ‘‘எனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது." என்று அவரிடம் பூஜை நடத்தப்பட்டதா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நீதிமன்றம் எதைச் சொன்னதோ அது நிறைவேற்றப்பட்டதுஎன்று மீண்டும் அதே பதிலைத் தெரிவித்தார்.

இதிலுள்ள தீவிரமான தில்லுமுல்லுகள் அரசு அமைப்பு எந்த அளவில் இந்துத்துவ மயமாக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

முஸ்லிம்களும் மக்களும் நினைவில் கொள்ள வேண்டும்.

வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசலை ஆய்வு செய்ய அமைத்த குழுவின் அறிக்கை முற்றிலும் முன் கூட்டி முடிவு செய்யப்பட்ட கருத்தின் அடிப்படையிலானது தான்.  

அவுரங்கசீப் பள்ளிவாசலின் (சஹன்) முற்றத்தை சீரமைத்தார் என்று கல்வெட்டில் இருக்கிறது. அதே கல்வெட்டை காட்டி இது அவரங்கசீப் கட்டியது என்று அக்குழு கூறுகிறது.  மற்ற தகவல்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரிவித்தது. அக்குழுவின் அறிக்கையும் பாபர் மஸ்ஜிதை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை போல திட்டமிட்ட அறிக்கைகளே தவிர உண்மையான கருத்துக்கள் அல்ல

 

தொல்லியல் துறையின் இந்த  ஆய்வு முடிவுகளை  இறுதியான ஆதாரம்இல்லை என்று சொல்லி  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  றுத்தது.

 

வாரியத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் சையது காசிம் ரசூல் இல்யாஸ், பல ஆண்டுகளாக இந்து அமைப்புகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருவதாக தெரிவித்தார்.

.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தொல்லியல் துறையின் அறிக்கையை ஊடகங்களில் இந்து அமைப்புகள் வெளியிட்டது நீதிமன்ற அவமதிப்பாகும். மதவாதிகளின் கைகளில் பொம்மைகளாக மாறுவதன் மூலம் தங்களது முக்கியத்துவத்தை இந்திய தொல்லியல் துறை போன்ற முக்கிய அமைப்புகள் இழந்து வருவதாக்கவும் அவர் கூறீயிருந்தார்.

 இந்த அறிக்கை அராஜக ணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக  அப்போதே முஸ்லிம் சட்ட வாரியம் தெளிவாக  கருத்து தெரிவித்தது. .

 

 

ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன ? முஸ்லிம்களின் குரலுக்கு ஒரு சின்ன மதிப்பும் அளிக்கப்படாமல் . எதிர் கருத்துக்கான வாய்ப்பே இல்லாதாவாறு  இப்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

 

பாபர் மஸ்ஜித் விசயத்தில் இப்படித்தான் நடந்த்து.

பள்ளிவாசலுக்கு கீழே கோயிலின் அடையாளங்கள் இருக்கின்றன. தூண்கள் கோயில் தூண்களைப் போல இருக்கின்றன. என்றெல்லாம் கதை கட்டினார்கள். கடைசியில் உச்சநீதிமன்றம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது, பள்ளிவாசல் இடிக்கப்பட்டது தவறு என்றும் கூறியது.  

ஓய்வு பெறுவதற்கு முதல் நாளில் வாரணாசி மாவட்ட நீதிபதி அவசர அவசரமாக ஆனால் காரியத்தை முடிக்கும் கனகச்சிதமான் தீர்ப்பை வழங்குகிறார். அதை படுவேகமாக வாரணாசி மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுகிறது எனும் போது.

இந்தப் பள்ளிவாசல் விசயத்திலும் அவதூறான பிரச்சாரங்களின் பின்னணியில் ஞானவாபி பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படலாம்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது அக்கறை யுள்ள சக்திகள் இதுபற்றி உறுதியான கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது பொருத்தமானது அல்ல;

நீதிமன்ற உத்தரவு என்று சொல்லி அமைதி காப்பது சரியல்ல;

சுதந்திரத்திற்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலையில் இருந்த்தே அதே நிலையில் தொடர வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது. பாபரி மஸ்ஜித் வழக்கு சர்ச்சையில் இருந்த போது பாபர் மஸ்ஜித் வழக்கை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையையே கடைபிடிக்க வேண்டும் என்றூ உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இத்தனைக்குப் பிறகு நம் நாட்டின் உள் நீதிமன்றங்கள் எப்படி நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன என்கிற கேள்வியை எதிர்கட்சித்தலைவர்கள் உறுதியாக எழுப்ப வேண்டும்.

1993-க்குப் பிறகு 30 ஆண்டுகளாக அங்கு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை நீதிபதியே  கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, உள்ளே சிலை இருக்கிறது என்று அவருக்கு எப்படித் தெரியும். எனவே, இது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாகும் என்றும் அஸதுத்தீன் உவைஸியை தவிர வேறு யாரும் ஏன் கூறவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.

சமூகங்களுக்கிடையே பிளவை உண்டுபண்ணுவது நாட்டிற்கு பெரும் சேதத்தை உண்டு பண்ணி விடக்கூடியதாகும்.

நபிகள; நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்த மிகப்பெரிய தீமை அது

فعَنْ أبِي الدَّرْدَاءِ رضي الله عنه عَنْ رسول الله صلى الله عليه وسلم قَالَ: «ألا أخْبِرُكُمْ بِأفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامَ وَالصلاة والصدقة؟»، قَالُوا: بَلَى يَا رسول الله، قَالَ: «إِصْلاحُ ذَاتِ الْبَيْنِ، وَفًسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ»

இந்த நாசகர வேலையை தங்களுடை அற்ப அரசியல் இலாபத்திற்காக சிலர் அநாயசமாக செய்து வருகிறார்கள்

.உத்திரப்பிரதேச முதல்வர் வாரணாசி நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாகவே “அதை ஞானவாபி பள்ளிவாசல் என்று சொல்லாதீர்கள். பிரச்சனையாகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார். (பிபிசி)

ராமர் கோயில் திறப்பு என்ற மாய்மால வேலை இந்துக்கள் மத்தியில் பெரிய அளவில் முஸ்லிம் விரோதத்தை ஏற்படுத்தவில்லை. நீங்கள் இப்படி ஒரு கோயில் வேண்டும் என்றால் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பல வட நாட்டு முஸ்லிம்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதை ஒரு திட்டமிட்ட அரசியல் என்று நாட்டு மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு விட்டதையே இது காட்டுகிறது.  

இந்த நிலையில் இந்து முஸ்லிம்களிடையே மேலும் பிரிவினையை வளர்க்க வாரணாசி விவகாரம் உதவும் என்று இந்துதுத்துவ சக்திகள் நினைக்கலாம்.

·         இந்து முஸ்லிம் வெறுப்பு மேலும் விகாரமாகாதபடி இந்த விவகாரத்தை முஸ்லிம்கள் அனுகவேண்டும்.

·         நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடுவோம்.

·         நமக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து பதிலளிப்போம். அதை பிரச்சாரம் செய்வோம்.

சமூக ஊடகங்களில் பயணிக்கிற ஐ டி திறனாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

விக்கீபீடியா போன்ற பொது தகவல் களஞ்சியங்களில் கூட இந்துத்துவ அமைப்பினர் அப்பட்டமாக அவர்களது அவதூறுகளை உண்மைகளை போல பரப்பி இருக்கின்றனர்.

ஞான்வாபி பள்ளிவாசல் பற்றிய தகவல்கள் அதற்கொரு உதாரணம்

முஸ்லிம் அரசர்கள் மீது விஷமத்தமான பொய்களை உண்மைகளைப் போல எழுதியுள்ளனர். (திருத்தம் தேவைப்படுகிறது என்ற வார்த்தை கூட இல்லை)

வாரணாசி பற்றிய தமிழ் விக்கீபீடியாவில் அங்கு வாழ்கிற முஸ்லிம்களைப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை.

அதுபோல வாரணாசியின் சுற்றுலா தளங்களின் பட்டியலில் ஒரு பள்ளிவாசலின் பெயர் கூட இல்லை.

ஆனால் ஆங்கில விக்கீபீடியாவில் ஓரளவு இருக்கிறது.

முஸ்லிம் சமூக ஊடகவியளாளர்கள் அவர்களது ஆற்றலையும் நேரத்தையும் பயன்படுத்தி தவறான தகவல்கள் பதியப்படுவதை ஆதாரங்களோடு திருத்த முயற்சிக்க வேண்டும். உண்மையான செய்திகளை தேடி எடுத்து பதிவு செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் கடும் கவலைக்குள்ளானாலும் இந்த நிலை நீண்ட நாள் தொடராது என சமாதானம் அடைவோம்.

இந்த அற்பர்களின் ஆசை தொடரும் எனில் வானமும் பூமியும் வெடித்து விடும்.

وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَوَاتُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ بَلْ أَتَيْنَاهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُعْرِضُونَ  [المؤمنون: ٧١]

மக்காவின் அனைத்து வழிகளும் அடைபட்ட சமயத்தில் தான் அல்லாஹ் பெருமானார் (ஸல்)அவர்களை வின்னுலகிற்கு மிஃராஜுக்கு அழைத்துச் சென்று இஸ்லாமின் மறுமலர்ச்சி வழி வகுத்த்தான். 

நமது பகுதிகளில் குழப்பங்கள் ஏற்படாமல் கவனித்துக் கொள்வோம். விழிப்போடு இருப்போம்.

وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ  [الأعراف: ٥٦

கீழக்கரையில் உள்ள ஒரு பள்ளிவாசலை பற்றி அப்பகுதியில் உள்ள ஒரு இந்துத்துவ வாதி கேள்வி எழுப்பி இருக்கிறான். இந்து சகோதர்ரகளை வைத்தே அதற்கு பதில் கூறவும். சட்ட ஒழுங்கை சீர் குலைப்பதாக அவர் மீது வழக்கு தொடரவும் முயற்சிப்போம். எச்சரிக்கையாக அனுகுவோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 



 

 

 

 

.

 

1 comment:

  1. அருமை..... செங்கல் வாங்க வக்கற்ற திருடர்கள் கூட்டம்தான் கோவில் கட்ட தனது சொந்த பணத்தை செலவு செய்ய துப்பில்லாத சங்கிகளின் வேலை தான் இவைகள்.... நம் அமைதி தமிழ்நாட்டிலும் இப்போது முளை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்... அதை முளையிலேயே கிள்ளி எரிந்து விட வேண்டும் அல்லாஹ் கிருபை செய்வானாக.... ஆமீன்

    ReplyDelete