வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 26, 2024

சாதனையின் உச்சம் தொட்ட ஆயிஷா (ரலி) திருமணம்,

وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ

இந்த உலகில் நடைபெற்ற திருமணங்களில் அதிக அளவில் நன்மையான விளைவுகளை ஏற்படுத்திய திருமணம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டதாகும். அதை ஒரு சாதனைத் திருமணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

துரதிஷ்ட வசமாக இந்த திருமணத்தில் வெளிப்படுகிற வெளிச்சமான அம்சங்களை பார்க்கத் தெரியாமல் குருட்டுத்தனமாக சிலர் அதை விமர்ச்கிக்கின்றனர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை தவறாக விமர்ச்சிப்பதற்கு மிக அதிகமாக பயன்படுத்தப்படும் நிகழ்வும் இது தான்.

ஒரு ஒப்பற்ற தலைவராக முஹம்மத் நபி அவர்களை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிர்பந்த நிலையில் அவர்களது பரிசுத்தமான வாழ்வின் மீது எங்காவது சேறு பூச முடியாதா என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயிஷா அம்மாவின் வயது ஒரு பெரும் ஆயுதம் போல கிடைத்து விட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா ரலி அவர்களை திருமணம்  செய்த போது அண்ணலின் வயது 50. ஆயிஷா அம்மாவின் வயது வெறும் ஆறு.

ஆயிஷா ரலி அவர்களே இந்தச் செய்தியை அறிவிக்கிறார்.

 تزوَّجَني رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ وأنا ابنةُ ستِّ سِنينَ بمكَّةَ، مُتَوَفَّى خَديجةَ، ودخَلَ بي وأنا ابنةُ تِسعِ سِنينَ بالمدينةِ.

الراويعائشة أم المؤمنين 

 என்னை நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதில் மக்காவில்  திருமணம் செய்தார்கள். ஒன்பது வயதில் மதீனாவில் இல்லறத்தில் இணைத்துக் கொண்டார்கள்.  (ஸஹீஹுல் புஹாரி)

 இன்றை சமூக சூழலில் இந்த செய்தி ஒரு முதல் பார்வையில் கொஞ்சம் அதிர்ச்சியை தரக் கூடியதே !

ஆனால் நாம் வரலாற்று நிகழ்வுகளை இன்றைய மனோநிலையோடு ஒப்பிட்டு பார்ப்பது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. இந்துக்கள் பாராட்டும் ராமபிரான் சீதாப்பிராட்டியை திருமணம் செய்யும் போது சீதா அம்மாவின் வயது 6 என்று ராமாயணம் சொல்கிறது. அப்போது ராமருக்கு வயது 13.

நவீன காலத்தில் தந்தை பெரியார், தன் கட்சியில் இளவயதிலேயே இணைந்து தொண்டாற்றிக் கொண்டிருந்த 32 வயது மணியம்மையை திருமணம் செய்த போது அவருக்கு வயது 70.

இந்த திருமணங்கள் அதற்குரிய காரணங்களோடும் விளைவுகளோடும் அலசப்பட வேண்டுமே அன்றி வயது வரம்புகளை கொண்டு அல்ல.

பெண்ணியவாதியும் பெரும் சொத்துக்களின் அதிபதியுமான தந்தை பெரியாருக்கு சட்ட ரீதியான ஒரு வாரிசு தேவைப்பட்டது. மணியம்மையை அதற்கு பொருத்தமானவராக அவர் கண்டறிந்தார். அதனால் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பையும் மீறி துணிச்சலாக அவர் திருமணம் செய்து கொண்டார். அவர் நினைத்தபடியே பெரியாரின் மறைவிற்குப் பிறது மணியம்மை சொத்துக்களுக்கும் இயக்கத்திற்கும் வாரிசானார், பெரியாருக்கு பிறகு 4 ஆண்டுகள் திராவிட இயக்கத்தை தலைவராக அவர் வழி நடத்தினார். 

முஹம்மது நபி (ஸல்) அவர்களது தனது 53 வயதில் 9 வயது ஆயிஷா ரலி அவர்களை திருமணம் செய்த போது அதற்கு ஒரு மகத்தான காரணம் இருந்தது. காமம், சொத்து பாதுகாப்பு, அரசியல் அணுசரனை என்ற என்ற சாமாணிய காரணங்களை கடந்து எல்லையற்று நிலைத்திருக்கப் போகும் இஸ்லாமிய மதத்தின் அறிவுச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற மாபெரிய நோக்கம் அதற்கு இருந்தது. அன்னை ஆயிஷா ரலி தனது பொறுப்பையும் திறனையும் மிகச் சரியாக நிறைவேற்றினார்கள். வெற்றிகரமான மிகவும் மதிப்பான திருமணம் அது. மகிழ்ச்சிகரமான மிகவும் பயனளித்த வாழ்க்கை அது. 

திருமணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முதல் திருமணம் அன்றைய அரபகத்தின் பெரும் தொழில் அதிபரும், சமூக மதிப்பும் கொண்டவரான கதீஜா (ரலி) அவர்களுடன் நடந்தது.  தன்னை விடவும்  15 வயது மூத்தவரான கதீஜா அம்மாவுடனான வாழ்க்கை முஹம்மது நபிக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. கதீஜா ரலி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 6 குழந்தைகளை பெற்றுக் கொடுத்தார்கள். கதீஜா ரலி இறக்கும் வரை நபிகள் நாயம் (ஸல்) இன்னொரு பெண்ணை திருமணம் செய்யவில்லை. தனது 50 வயது வரை நபிகள் நாயகம் (ஸல்) ஒற்றை மனிவியுடனேயே குடும்பம் நடத்தினார்கர்கள்.

அன்றைய அரபகத்தில் மக்கள் பல பெண்களை திருமணம் செய்வது சாதாரண வழக்கமாக இருந்தது. இன்னும் சொல்வதானால் பெரும்பாலோருக்கு அதிக மனைவியர் இருந்தனர். கைலான் பின் சலமா என்ற நபித்தோழர் 10 மனைவியை கொண்டிருந்தார் என்கிறது வரலாறு

ஆயினும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கதீஜா ரலி உயிருடன் இருக்கும் வரை இன்னொரு பெண்ணை நினைத்தும் பார்க்கவில்லை.

கதீஜா அம்மாவின் மறைவிற்க்குப் பின்னரே முஹம்மது (ஸல்) மற்ற திருமணங்களை செய்தார்கள். அப்போது அவர்கள் ஒரு சமயத் தலைவராகவும் அரசியல் அமைப்பின் நிறுவனராகவும் புதிதாக உருவான ஒரு சமூக கட்டமைப்பின் வழிகாட்டியாகவும் இருந்தார்கள்.

வரலாற்றை அற்புதமாக மாற்றிய இந்த முக்கிய பணிகளுக்கு  பல வகையான மனிதர்கள் தேவைப்பட்டார்கள். ஒரு நாட்டுக்கு பல வகையான இராணுவத்தினர் தேவைப்படுவது போல.

நபிகள் நாயகத்தின் சமயப் பணியில் தனது அறிவாற்றலால் மகத்தான துணை நின்றவர் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார். ஆயிஷா ரலி அவர்களின் திருமணம் இந்தக் கண்ணட்ட்த்தில் அனுகப்பட வேண்டிய ஒன்றாகும்.

என்ன காரணத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றது என்பதும், அந்த காரியம் எப்படி நிறைவேறியது என்பதும் கவனிக்கப்படுமானால் பெருமானாரின் வரலாற்றில் குறை காண நினைப்போர் ஆயிஷா அம்மாவின் திருமணத்தில் மூக்கில் விரைத்து விடும் அளவுக்கு ஆச்சரியங்களை காண்பார்கள்.

மக்காவிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடியேறிய பிறகு தான் இஸ்லாமின் அனைத்து வகையான சட்டங்களும் கலாச்சார கூறுகளும் நடைமுறைக்கு வந்தன. அந்தக் கட்ட்த்தில் நபிகள் நாயகத்தை கூர்ந்து கவனித்து அவரது செய்திகளை சேகரித்து வைப்பதும் அவற்றை சமூகத்திற்கு விளம்புவதும் மிக அவசியமான ஒரு பணியாக இருந்தது. அன்னை ஆயிஷா ரலி இந்தப் பணியை நபிகள் நாயகத்தின் வீட்டிற்குள்ளிருந்து மிக கச்சிதமாக நிறைவேற்றினார்.

இந்த திட்டம் இறைவனால் தீட்டப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عن عائشة رضي الله عنها ، أنَّ جبريل جاء بصورتها في خِرْقَة حَرير خضراء إلى النبي صلى الله عليه وسلم  فقال: «هذه زوجتُك في الدنيا والآخرة

 அதன் பிறகே நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் இது பற்றி ஆயிஷா ரலி அவர்களின் தந்தை அபூபக்கர் ரலி அவர்களிடம் பேசினார். அபூபக்கர் (ரலி) சம்மதித்தார். இது அன்றைய காலத்தில் ஒரு அரிதான இருக்கும் எனில் அபூபக்கர் ரலி அவர்கள் இதற்கு சம்மதித்திருக்க் மாட்டார். எந்த தந்தையும் தன் மகளை விட வேறெதற்கும் முக்கியத்துவம் தர மாட்டார் என்பது தெரிந்ததே!

இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த நேரம் அதிகாரத்தைப் பயன்படுத்தி முஹம்மது நபி (ஸல்) அபூபக்கர் ரலி அவர்களை நிர்பந்தப்படுத்தினார் என்றெல்லாம் சொல்வதற்கு வாய்ப்பில்லை. தந்தை அபூபக்கர் (ரலி) தாய் உம்மூரூமான் ஆகியோருடைய முழு சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்றது.

மக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது என்ன குறை சொல்லலாம் என்று சபை கூடி ஆலோசித்த எதிரிகள் கூட பெருமானாரின் இந்த திருமணத்தை குறையாக காட்டியதில்லை எனும்போது அன்றைய காலத்தின் மிக எதார்த்தமான ஒரு நிகழ்வாகவே இத்திருமணம் அமைந்திருந்தது என்பதை அறியலாம்.

இந்த திருமணத்தை இறைவனின் ஏற்பாடு என்று ஏற்றுக் கொள்ளாவிட்டால் இது முஹம்மது நபியின் மாபெரும் தொலை நோக்குப் பார்வை என்று அங்கீகரித்தாக வேண்டும். காரணம் இத்திருமணத்தின் விளைவு அத்தகையது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து இரண்டு வருடம் கழித்து பத்று யுத்தம் முடிந்த பிறகு ஆயிஷா (ரலி) அவர்களுடன் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் கட்டப்பட்ட தனி அறையில் வசிக்கத் தொடங்கினார்கள். அந்த அறை அன்னை ஆயிஷாவின் அறை என்றே அழைக்கப்பட்டது. அந்த அறையில் வைத்தே அன்னை ஆயிஷா ரலி அவர்களின் நெஞ்சுக்கும் வயிற்றிற்கும் இடையே தலை வைத்திருந்த நிலையில் முஹம்மது நபி (ஸல) அவர்களின் உயிர் பிரிந்தது. அந்த அறையிலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஆயிஷா ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின் 52 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார்கள். 

நபிகள் நாயகத்துடன் 8 ஆண்டுகள், நாயகத்தின்  பிரிவிற்குப் பிந்திய 52 ஆண்டுகள் என 60 வருட காலம் நபிகள் நாயத்தின் சமயப் பணியில் முன்னணித் தொண்டராக அன்னை ஆயிஷா (ரலி) இருந்தார். அவருக்கிருந்த photograbic memory திறனால் முஹம்மது நபியிடமிருந்து அவர் கண்ட செய்திகள் ஒவ்வொன்றையும் அவர் பத்திரமாக பாதுகாத்து முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கினார்.

மூத்த நபித்தோழர் அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) சொல்லும் கூறுகிறார்.

 عن أبي موسى الأشعريِّ، قال : ما أشكل علينا - أصحابَ رسولِ اللهِ - صلَّى اللهُ عليهِ وسلَّمَ - - حديثٌ - قطُّ -، فسألنا عائشةَ ؛ إلا وجدنا عندها منه علمًا .

 அபூமூஸா ரலி தன்னைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, மொத்த தோழர்களையும் அதில் இணைத்துக் கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட துறையில் என்று மட்டும் சொல்லவில்லை. அனைத்து விவகாரங்களிலும் ஆயிஷா (ரலி) யிடம் கேட்போம் என்கிறார். ஒரு ஆணாக இருந்தும் தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள முயற்சி செய்யாமல் ஆயிஷா (ரலி) யிடம்  நாங்கள் அறிவு பெற்றோம் என்கிறார். இன்றுள்ள மக்கள் ஆயிஷா அம்மாவை போற்றுவது சகஜமாக இருக்கலாம். பெண்கள் அடிமைகளுக்கு அடுத்த அந்தஸ்த்தில் வைக்கப்பட்டிருந்த அன்றைய காலத்தில் அபூமூஸா ரலி யின் இந்த வாசகம் அதிகம் கவனத்திற்குரியதாக இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தில் அதிகம் கேளிவிகள் கேட்கப்பட்ட அறிஞராக அன்னை ஆயிஷா ரலி இருந்தார்

وكانت كثيرة السؤال والاستفسار

 வரலாறு இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் முதல் ஆசிரியை என்று அவரை போற்றுகிறது.

அவர் சொன்ன பல செய்திகள் அவர் மாத்திரமே சொல்ல முடிந்த செய்திகள்,

அவற்றில் ஒன்றை கவனியுங்கள்!

ஒரு பெண்மணி ஆயிஷா ரலி அவர்களிடம் எங்களது வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே ஒரு படுக்கை இருக்கும் நிலையில் மாதவிடாய் காலத்தில் நான் என்ன செய்வது என்று கேட்டார்.  

عن عمارة بن غراب أن عمة له حدثته أنها سألت عائشة قالتإحدانا تحيض وليس لها ولزوجها إلا فراش واحد 

அதற்கு ஆயிஷா (ரலி) கூறினார். .

أخبرك ما صنع رسول الله - صلى الله عليه وسلم - دخل فمضى إلى  فلم ينصرف حتى غلبتني عيني ، وأوجعه البرد ، فقال : " ادني مني " . فقلت : إني حائض . قال : " وإن ، اكشفي عن فخذيك " . فكشفت فخذي فوضع خده وصدره على فخذي ، وحنيت عليه حتى دفئ ونام .

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து வீட்டுக்கு வர அதிக நேரமாகிவிட்டது. நான் உறங்கிவிட்டேன், நபி (ஸல்) என் பக்கத்தில் வந்து படுத்திருக்கிறார்கள். குளிர் அவரை வாட்டியிருக்கிறது. என் அருகில் வா என்று என்னை நெருங்கினார்கள். நான் வீட்டு விலக்காக இருக்கிறேன் என்று சொன்னேன். உன் தொடையை காட்டு என்றார்கள். நான் என் தொடையை காட்டினேன். அங்கு தலை வைத்துக் கொண்ட அவர்களுக்கு இதம் கிடைத்தது. அப்படியே தூங்கிப் போனார்கள். 

ஒரு கணவன் மனைவிக்கிடையில் இதுவெல்லாம் சகஜம் இதை எல்லாம் சொல்ல வேண்டுமா என்று மற்றவர்கள் கேட்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு இதிலுள்ள ஒவ்வொறு வார்த்தையிலும் தங்களது தலைவரைப் பற்றிய தகவலும் அவர்களது வாழ்க்கைகான சட்டமும் இருக்கிறது. மாத விலக்கான பெண்ணை வீட்டுக்கு வெளியே உட்கார வைக்கிற சமூகங்களுக்கான சாட்டை அடியும் இருக்கிறது.  

இன்னும் ஒரு செய்தியை கவனியுங்கள்

سَأَلَهَا أخُوهَا عن غُسْلِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَدَعَتْ بإنَاءٍ نَحْوًا مِن صَاعٍ، فَاغْتَسَلَتْ، وأَفَاضَتْ علَى رَأْسِهَا، وبيْنَنَا وبيْنَهَا حِجَابٌ.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை எந்த அளவு தண்ணீர்ல் குளிப்பார்கள் என ஆயிஷா ரலி அவர்களின் சகோதரர் ஆயிஷா அம்மாவிடம் கேட்கிறார். அதற்கவர் ஒரு ஸாஉ அதாவது சுமார் மூன்றரை லிட்டர் அளவு தண்ணீரை கொண்டு வரச் சொல்லி திரை மறைவி, அதில் குளித்து முடித்துக் காட்டினார்.(புகாரி)

என்ன அற்புதமான முறையில் நபி (ஸல்) அவர்களின் செய்தியை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு அன்ன ஆயிஷா ரலி கொண்டு சென்றார் பாருங்கள்!

இத்தகையை செய்திகளை வெளியிடுகையில் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மிகச் சரியான அளவில் மிகச்சரியான வார்த்தைக பயன்படுத்துவார்கள்.

இன்னொரு செயதியை கவனியுங்கள்

நபிகள் நாயகம் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன் தனது மனைவியரில் சிலரை முத்தமிடுவார்கள். தொழுக்கைக்குச் செல்வார்கள், ஒளு செய்ய மாட்டார்கள்.

كان النبيُّ – صلَّى اللهُ عليه وسلَّم – يُقَبِّلَ بعضَ أزواجِه ، ثم يصلي ولا يتوضأُ

الراويعائشة أم المؤمنين 

 இதில் தன்னை முத்தமிடுவார்கள் என்று சொல்லாதது ஒரு அழகு என்றால் இந்த இனிப்பான நிகழ்வு மற்ற மனைவியருக்கும் நடந்திருக்கும் என்ற யூகம் மற்றுமொரு பேரழகு. இதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த பல வழிகாட்டுதல்களும் இவை அனைத்தையும் விடச் சிறப்பானவை.

ஆயிஷா ரலி அவர்களின் இத்தகைய அறிவிப்புகள் பெண் இனத்தில் ஒரு நபி இல்லை என்ற குறைறை போக்கின என்று சொன்னால் அது மிகையாது.

அன்னை ஆயிஷா ரலி அவர்களிடமிருந்து கிடைக்கிற துல்லியமான வார்த்தைகளுக்காக அவரது வீட்டு வாசலுக்கு முன் நபி மொழிகளை அறிவிப்போர் கூட காத்திருப்பார்கள். நபிகள் நாயகத்தின் செய்திகளை மிக அதிக எண்ணிக்கையில் தெரிவித்தவர் என்று பெயர் பெற்ற அபூஹுரைரா (ரலி) ஒரு முறை ஆயிஷா ரலி அவர்களின் அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டு இப்படிக் கூறினார்

يا صاحبة الحجرة أتنكر مما اقول شيئا

 அன்னை ஆயிஷா ரலி நபிகள் நாயகத்தின் செய்தி (ஹதீஸ்) களில் 2210 செய்திகளை உலகிற்கு தெரிவித்துள்ளதாக புகழ் பெற்ற வரலாற்று ஆசிரிய தகபீ கூறுகிறார். தன் வாழ்வில் சுமார் 60 ஆண்டு காலத்தை நபியின் இந்தச் செய்திகளை சமூகத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக அவர் அயராது உழைத்துள்ளார்.

அவருக்கு நேரடியாக 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அவரது தந்தை அபூபக்கர் ரலி , அல்லாஹ் உமரின் நாவின் வழியாக பேசுகிறான் என்று நபிகள் நாயகத்தால் பாராட்டப்பட்ட உமர் ரலி அவர்களும், திருக்குர் ஆன் விரிவுரையின் தந்தை என்று பாராட்டப்படும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்களு, அரபுலகின் மிகப் பெரும் அறிவாளி என்று புகழப்பட்டட அம்ரி பின் ஆஸ் ரலி போன்றவர்களும் ஆயிஷா ரலி அவர்களிடமிருந்து நபிகள் நாயகத்தின் செய்திகளை கேட்டுப் பெற்றுள்ளனர்.

ஆயிஷா ரலி அவர்களின் திருமணம் எதற்காக நடை பெற்றது என்ற நோக்கமும், அது நிறைவேறியதா எப்படி நிறைவேறியது என்ற ஆய்வுமே இது விவகாரத்தில் பிரதானமானதாகும்.   

அப்படி நோக்குகையில் இந்த உலகில் நடைபெற்ற திருமணங்களில் மிக அதிக மரியாதைக்குரியத திருமணமாக நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா ரலி ஆகியோரின் திருமணம் அமைந்திருக்கிறது. நீங்கள் உங்களுக்கு தெரிந்த பெரிய மனிதர்கள் யாரையாவது இத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் ஆயிஷா அம்மாவின் திருமணத்தின் மகிமை அப்போது புரியும்.

ஆயிஷா ரலி அடைந்த பலன்

இந்த திருமணத்தில் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு என்ன கிடைத்த்து என்ற ஒரு கேள்வி இருக்கிறது.

 ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிந்த பின் இப்போதும் அறிவுலகில் அன்றாடம் பயன்படுத்தப்படுகிற ஒரு பெயராக ஆயிஷா ரலி என்ற பெயர் இருக்கிறது, உலகில் செல்வாக்கு மிக்க வேறு எந்தப் பெண்மணியாவது இந்த அளவு புகழை சந்தித்திருக்கிறாரா என்று சிந்தித்துப்பாருங்கள்!

அடுத்த்தாக, ஆயிஷா ரலி அவர்களின் திருமண வாழ்வு இனிமையும் மதிப்பும் நிறைந்ததாகவே இருந்தது. .

இளமையும் அறிவும் மிக்க ஆயிஷா ரலி அவர்களை முஹம்மது நபி (ஸல்) மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள்.

ஒன்றாக ஒரே இடத்தில் வாய் வைத்து உண்டார்கள்.

حديث عائشة رضي الله عنها : كنت أشرب وأنا حائض ثم أناوله النبي - ﷺ - فيضع فاه على موضع فيّ ، فيشرب وأتعرق العرق وأنا حائض ، ثم أناوله النبي - ﷺ - فيضع فاه على موضع فيّ . [ رواه مسلم ]

 ஒட்டப்பந்தயம்.

عائشة أم المؤمنين  

أنها كانت مع رسولِ اللهِ - صلَّى اللهُ عليهِ وسلَّم - في سَفَرٍ ، قالت : فسابقتُه فسبَقْتُه على رِجْلَيَّ ، فلما حَمَلْتُ اللحمَ ؛ سابقتُه فسَبَقَني ، فقال : هذه بتِلِكَ السَّبْقَةِ

 மனைவியை புரிந்து கொள்ளுதல்

 إنِّي لَأَعْرِفُ غَضَبَكِ ورِضَاكِ قالَتْ: قُلتُ: وكيفَ تَعْرِفُ ذَاكَ يا رَسولَ اللَّهِ؟ قالَ: إنَّكِ إذَا كُنْتِ رَاضِيَةً قُلْتِ: بَلَى ورَبِّ مُحَمَّدٍ، وإذَا كُنْتِ سَاخِطَةً قُلْتِ: لا ورَبِّ إبْرَاهِيمَ قالَتْ: قُلتُ: أجَلْ، لَسْتُ أُهَاجِرُ إلَّا اسْمَكَ.

الراويعائشة أم المؤمنين | المحدثالبخاري 

  ஆயிஷாவை நான் நேசிக்கிறேன் என்பதில் குறை காணாதீர்கள் அவருடன் நான் ஒரே படுக்கையில் இருக்கிற போது எனக்கு இறைச் செய்தி வந்தது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لا تُؤْذِينِي في عَائِشَةَ، فإنَّه واللَّهِ ما نَزَلَ عَلَيَّ الوَحْيُ وأَنَا في لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ غيرِهَا.

இறைச் செய்திகளை பாடம் செய்து பரப்புரை நிகழ்த்திய் ஆயிஷா ரலி அவர்களுக்கு கிடைத்த உட்சபட்ச மரியாதை இது.

இந்த திருமணத்தில் ஆயிஷா அம்மாவின் மகிழ்ச்சி கூடியது என்பது மட்டுமல்ல அவரது பரிசுத்தத்தை பாராட்டி திருக்குர் ஆனில் சுமார் 10 வசனங்கள் அருளப்பட்டன. பெண்களின் மீது அவதூறாக ஆபாச பழி சுமத்துவர்களுக்கு 80 சாட்டை அடி கொடுக்கப்படும் என்ற நியதி ஆயிஷா ரலி அவர்களுக்காகவே முதலில் சொல்லப்பட்டது. பெண்ணினத்திற்கு கிட்டிய வலு மிகு கேடயம் அது.

எனவே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா ரலி அவர்களை திருமணம் செய்தது. அவருக்கு பயனளித்தது. அவரை திருமணம் செய்த நபிகள் நாயகத்திற்கு மகிழ்ச்சியளித்தது. முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் கொடையாக அமைந்த்து. அந்த கொடை காலம் கடந்தும் இன்று வரை பேசு பொருளாக இருக்கிறது.

மாவீரன் நெப்போலியன் தனது முதல் மனைவி ஜோசபைனை விவாகரத்து செய்து விட்டு ஆஸ்திரிய நாட்டு இளவரசி 18 வயதான மேரி லூயியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 40 கடந்திருந்தது. பிரஞ்சு புரட்சியின் மாபெரும் வெற்றியாளராக  கருதப்பட்ட நெப்போலியன் பின்னர் செயிண்ட் ஹலீனா தீவில் தனிமைச்சிறையில் பரிதாபமாக மரணித்தார். நெப்போலியன் மேரீ லூயியை திருமணம் செய்த பிறகு தான் அவரும் பிரான்ஸ் தேசமும் மோசமான தருணங்களை எதிர் கொண்டார் என்று வரலாறு விமர்சனம் செய்கிறது.

திருமணங்களின் பின்னணியில் நிகழும் இப்படியான விளைவுகளும் ஒரு திருமணத்தின் மரியாதையை கூட்டுகின்றன. அல்லது வீழ்த்து கின்றன. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்த உலகின் மகத்தான இஸ்லாமிய புரட்சிக்கு துணை நின்ற மிகுந்த பாக்கியமான திருமணமாகும்.

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த பிறகு சிகரம் போல எழுந்து நிற்கும் ஆயிஷா அம்மாவின் சிறப்பிற்கு முன்னால் வயது வித்தியாசம் என்பது சரளைக் கல்லின் அளவுக்கு கூட ஆட்சோபனைக்குரியது அல்ல.

இந்த திருமணத்தை விகாரப்படுத்த முயற்சிப்போர் மானுடத்தின் எந்த நன்மைக்கும் மழைத்துளியின் அளவுக்கு கூட மதிப்பளிப்பவர்கள் அல்ல என்பதே பொருள். அத்தகையோர் தமது மனவிகாரங்களை நாயகத்தின் மீது பூசிப்பார்க்க முயற்சி செய்கின்றனர் என்பதுமே எதார்த்தமாகும்..

ஆயிஷா அம்மாவின் திருமண வரலாற்றையும் அதில் நிகழ்ந்துள்ள நன்மைகளையும்  இன்றைய சூழ்நிலையில் நம்மில் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்திருப்பது அத்தியாவசியமானது.

பெருமானாருக்கு சார்பாக பேசுவதற்கு நமக்கு கிடைக்கிற ஒரு வாய்ப்பு அது

அல்லாஹ் தவ்பீக் செய்தருள்வானாக!   

 

.

 

  

2 comments:

  1. الحمد لله
    بارك الله فيك على كل حال

    ReplyDelete
  2. Anonymous11:32 PM

    Masha Allah...
    அருமையான சிந்தனை...
    பாரகல்லாஹ்...

    ReplyDelete