வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 09, 2015

இன்னாலில்லாஹ் .. இரங்கற் சொல் மட்டுமல்ல..

இன்னாலில்லாஹ் இரங்கற் சொல் மட்டுமல்ல.


சில சொற்கள் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலுப் பெற்றவை. அதன் கருத்தை நாம் உள்வாங்கிக் கொள்கிற போது மகத்தான மாற்றங்கள் நிகழும்.

1964  ம் ஆண்டு அமெரிக்காவின் ஹெவிவெயிட் குத்துச் சண்டைப் போட்டியில் அப்போதை சாம்பியன் லிஸ்டனை எதிர்த்து 22 வயதே ஆன முஹம்மது அலி கிளே சணடையிட்டார். பார்வையாளர்கள் அலியை பரிதாபமக பார்த்தார்கள்மூன்றாவது சுற்றில் முஹம்மது அலி விட்ட குத்து லிஸ்டனின் புருவத்தை காயப்படுத்தியது, லிஸ்டன் மருந்து போட்டுக் கொண்டு வந்து ஆக்ரோஷமாக தாக்கினார். அவரது புருவத்திலிருந்து தெரித்த மருந்து முஹம்மது அலியின் கண்ணில் விழுந்து நெருடலை ஏற்படுத்தியிருந்தது, அது பெரும் இடையூறாக இருந்தது. ஆறாவது சுற்றில் உறுத்தல் நீங்கியது, அப்போது அலி விட்ட குத்தில் லிஸ்டனின் மூட்டு விலகியது. முஹம்மது அலி வெற்றி பெற்றார். அமெரிக்காவே அந்த இளைஞனின் வெற்றியை கொண்டாடியது, இன்றும் கூட உலகம் மறக்காத போட்டி அது, அன்றைய வெற்றிக்கு என்ன காரணம் என்பதை கிளே சொன்னார்.

இரண்டாவதாக வருபவனை இந்த உலகம் ஒரு போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை என்று என்னுடைய கோச் பிரட்ஸ் டோனர் சொன்ன வார்த்தைகள் நாபகத்தில் இருந்து விலகாமல் இருந்ந்தது, அதுவே என்னை போராடத் தூண்டியது என்றார்.

டோனரின் ஒரு வாசகம் முஹம்மது அலியை வெற்றிக்கு தூண்டியது போல பல வாசகங்களை இஸ்லாம் மக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அவர்கள் வெற்றியை கொண்டாடவும் தோல்வியை தாங்கிக் கொள்ளவும்.

வெற்றியும் தோல்வியும் அதே போல மகிழ்ச்சியும் துக்கமும் மனிதனை சமநிலை தவறச் செய்து விடக் கூடியவை. அப்படி சமநிலை தவறுகிற போது விபரீதமான விளைவுகளை மனிதர்கள் வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தேர்வில் தோற்று விட்டால், வியாபாரம் நொடிந்து விட்டல், பிரியமானவரை இழந்து விட்டால், அந்த உணர்விலிருந்து மீளமுடியாமல் அதையே கடைசி நிமிடம் என்று நினைத்துக் கொண்டு, எதார்த்ததை புரிந்து கொள்ளாமல் தவறான முடிவுகளுக்கு சென்றவர்கள் பலருண்டு,

ஒரு சரியான வார்த்தை அவர்களை வழி நடத்தும் என்றால் அவர்கள் விழிப்புணர்வு பெற்றுதிகைப்பிலிருந்து வெளியேறிசராசரியான வாழ்க்கைக்கு திருமபி விடுவார்கள் .

அப்படி ஒரு வாசகம் தான் இன்னாலில்லாஹி என்ற வாசகம் . இஸ்லாம் துக்கத்தை மறக்க மக்களுக்கு கற்றுக்  கொடுத்த மந்திரச் சொல் அது.

பசி, பயம், உயிரழப்பு, பெருள் இழப்பு, என பல வழிகளிலும் நான் சில சோதனைகளை தருவேன். அவ்வாறூ ஏதேனும் சேதனை ஏற்படும் என்றால் இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன் இன்னாலில்லாஹ் சொல்லி  அதை தாங்கிக் கொள்ள வேண்டும். பொறுமை காக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنْ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنْ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرْ الصَّابِرِينَ(155)الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ(156)


மவ்த் செய்திக்கு மட்டும் அல்ல. ஒரு சிறு  துயரம் மனக்கஷ்டம் எது ஏற்பட்டாலும் இந்த வாசகத்தை சொல்லுமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

طفئ سراج رسول الله صلى الله عليه وسلم فقال إنا لله وإنا إليه راجعون .فقيل أمصيبة هي ؟ قال نعم ؛ كل شيء يؤذي المؤمن فهو مصيبة .-رواه ابو داود

كل ما يبتلى به المؤمن مما يؤذيه يعتبر مصيبة ولو كان شوكة أو هما أو غما أو غيرهما،

இந்த வாசகத்தை சோதனைக்கு உள்ளாகிறவர் மட்டுமல்ல. சோதனையான செய்திகளை கேட்பவரும் சொல்ல வேண்டும்.

 والاسترجاع يكون عند حدوث المصيبة أو السماع بها

இந்த வாசகம் முஸ்லிம் உம்மத்தின் தனிச்சிறப்பு – மற்ற உம்மத்துக்களுக்கு இப்படி ஒரு வாசகம் கிடைக்கவில்லை

இத்தகைய ஒரு வாசகம் கிடைக்காததால் தான் யாகூப் நபி  யூசுப் நபியை (அலை)   இழந்த சோகத்தை பகிரும் போது (12;84)
وَقَالَ يَاأَسَفَى عَلَى يُوسُفَ
என்று  சொன்னார்கள்     என்றார் சயீது பின் ஜுபைர் (ரஹ்) .

தப்ஸீர் குர்துபியில் இந்த செய்தி வருகிறது.

وقال سعيد بن جبير : لم يكن عند يعقوب ما في كتابنا من الاسترجاع ، ولو كان عنده لما قال : يا أسفى على يوسفالقرطبي





சோதனையான சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல. சோதனைகளைப் பற்றிய் நினைவு வருகிற போதும் இன்னாலில்லாஹ் சொல்ல வேண்டும்


சோதனைகளை சந்திக்கிற போது, அல்லது கேட்கிற போது. அல்லது நினைவு கூற்கிற போது இன்னாலில்லாஹ் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிற மார்க்கம் அதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதையும் சொல்லிக் காட்டுகிறது,

முதலில் இப்படிச் சொன்னால் அது நன்மை – திக்ராக அமையும். அடுத்ததாக இதனபயனாக அந்தச் சோதனையிலிருந்து மீளும் வாய்ப்பை அல்லாஹ் தருவான்.

அல்பகரா அத்தியாயத்தின் அடுத்த வசனம் இன்னாலில்லாஹ் சொல்வருக்கு கிடைக்கிற 3 முக்கிய நன்மைகளை சொல்கிறது

أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُوْلَئِكَ هُمْ الْمُهْتَدُونَ(157)

1.   அவர்களுக்கு இறைவனின் சமாதனம் கிடைக்கும் صَلَوَاتٌ
2.   அதிகப்படியான அருள் கிடைக்கும்  َرَحْمَةٌ
3.   அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சரியான வழியை அல்லாஹ் காட்டுவான். الْمُهْتَدُونَ

 وقال عمر رضي الله عنه : نعم العدلان ونعم العلاوة : الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون . أراد بالعدلين الصلاة والرحمة ، وبالعلاوة الاهتداء .-  البخاري 

عن أم سلمة- رضى الله عنها- قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ما من عبد تصيبه مصيبة فيقول: {إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} اللهم أجُرني في مصيبتي واخلف لي خيرًا منها، إلا آجره الله من مصيبته، وأخلف له خيرا منها» قالت: فلما تُوُفي أبو سلمة قلت كما أمرني رسول الله صلى الله عليه وسلم، فأخلف الله لي خيرا منه: رسولَ الله صلى الله عليه وسلم.

قال النبي {صلى الله عليه وسلم} من استرجع عند المصيبة جبر الله مصيبته وأحسن عقباه وجعل خلفا صالحا يرضاه- رواه الطبراني





இவைஅ மட்டுமல்ல  சொல்வதற்கு எளிய இந்த  வார்த்தைகள்,  ஆழமான கருத்துக்களையும் அடிப்படை தத்துவங்களையும் படைடத்தவனை புரிந்து கொண்டு பிறருக்கு , புரிய வைக்கிற - நடந்த்தை ஏற்றுக் கொள்ளச் செய்கிற சக்தியை கொண்டிருக்கிறது.

இந்த  வார்த்தையை சொல்வதே பொறுமையின் அடையாளமாகும் . அதனால் தான் இதற்கு முந்தைய வசனத்தில் பொறுமையாளர்களுக்கு நற்செய்தி என்று முடிகிறது,  

இழப்புக்கள் சிறியதோ பெரியதோ அந்த நேரத்தில் மனம் தடுமாறுவது சாமானிய மனித வழக்கம். அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளத்தான் இந்தப் பழக்கத்தை மார்க்கம் கற்றுக் கொடுக்கிறது, இன்னாலில்லாஹ் சொல்லி பழகுங்கள்,

சோதனைகளின் போது பொறுமை காப்பாவர்களுக்கு அல்லாஹ் மகத்தான் கூலியை வாக்களித்திருக்கிறான்,

எல்லா நன்மைக்கும் கூலி உண்டு. அது சிறியதாக இருந்தாலும்.
ஆனால் அந்தக் கூலிக்கும் ஒரு அளவு உண்டு.
அளவில்லாமல் கூலி கிடைக்கிற ஒரு காரியத்தை அல்லாஹ் சொல்கிறான்,

إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ(39;10 )

சோதனையான சந்தர்ப்பங்களில் பொறுமை காப்பவர்கள் கணக்கினறி கூலி பெறுவார்கள்.

சோதனைகளின் போது முதற்கட்ட பொறுமையை கடை பிடித்து இன்னாலில்லா சொல்லி விட்டால் அது அல்லாஹ்விடம் ஏராள நன்மைகள் பெற்று தருகிற அது மட்டுமல்ல.

இந்த வார்த்தை எத்தகைய மன அழுத்த்தையும் இறுக்கத்தையும் குறைக்கிறது.

ஒரு ஏழை பள்ளிக்கூட மாணவி 15 வய்து திடீரென் இறந்து விட்டாள். அந்தப் பகுதியையே அது பேரதிர்ர்சியில் ஆழ்த்தியிருந்தது, மக்கள் அனைவரும் சொல்லனா துயரத்தில் இருந்தார்கள். அந்த துயரத்தின் வடு இன்னும் அதிகாரித்து விடக்கூடாதுஅதை சற்று தணித்தாக வேண்டும் என்று சிலர் யோசித்தார்கள். உடனே சிறிய அட்டைகளில் இன்னாலில்லாஹி என்று எழுதி நாம் அனைவரும் அல்லாஹ்விற்குரியவர்கள் அவனிடமே திருமபிச் செல்ல வேண்டியவர்கள் என்ற வாசகத்தை எழுதி வைத்தார்கள். கடும் கோடையில் பூமாரி பெய்தது போல் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பகுதியின் இறுக்கம் ஓரளவு தணிந்தது.

இன்னாலில்லாஹி
இந்த திக்ரில் இரண்டு சொற்றொடர்கள் இருக்கின்றன. முதல் வாக்கியம் இன்னாலில்லா
அவர் இறந்து விட்டாரே அது போய் விட்டதே என்ற துக்கம் எழுகிற போது, இதுவெல்லாம் என்ன நம்முடையதா? எல்லாம் அல்லாஹ்வுடையது அல்லவா ? ஏன் நாம் கூட அவனுடைய உடமை தானே! தன் உடமைகளில் தன்னிஷ்டத்திற்கு காரியமாற்ற படைத்த அவனுக்கு உரிமை இருக்கிறதல்லவா? அவன் விருப்பப் படி தானே நடக்கும்? கொடுத்தவன தானே எடுத்துக் கொண்டான். கொடுத்தவனுக்கு எடுக்கும் உரிமை இருகிறதல்லவா?  நாம் அதிகம் துக்கிப்பதால் என்ன பயன் என்ற தத்துவார்த்த சிந்தனையை துக்கப்படுகிற மனதுக்கு இன்னாலில்லாஹி என்ற வாசகம் தருகிறது.

மனித உயிர் என்பது இறைவன் தன் புறத்திலிருந்து ஊதியதே என குர் ஆன் கூறுகிறது.

إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَراً مِن طِينٍ (71) فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ (72)

நம்முடையதா என்ன ? என்ற ஆழமான கேள்வியை இன்னாலில்லாஹ் எழுப்புகிறது.

மகன் இறந்த செய்தியை கணவருக்கு உம்மு சுலைம் அம்மையார் சொன்ன விதம் ஒரு அருமையான உதாரணம். இன்னாலில்லாஹ்வை புரிந்து கொள்ள.

فعن أنس رضي الله عنه أن أبا طلحة رضي الله عنه مات له ابن، فقالت أم سليم رضي الله عنها: لا تخبروا أبا طلحة حتى أكون أنا أخبره. فسجَّت عليه ثوبًا، فلما جاء أبو طلحة رضي الله عنه وضعت بين يديه طعامًا فأكل، ثم تطيّبت له فأصاب منها فتلقت بغلام، فقالت له: يا أبا طلحة، إن آل فلان استعاروا من آل فلان عارية، فبعثوا إليهم أن ابعثوا إلينا بعاريتنا، فأبوا أن يردوها. فقال أبو طلحة: ليس لهم ذلك؛ إن العارية مؤداة إلى أهلها. قالت: فإن ابنك كان عارية من الله، وإن الله قد قبضه فاسْتَرْجِعْ. قال أنس: فأُخبر النبي ، فقال: «بارك الله لهما في ليلتهما

இன்னாலில்லாஹ் எதார்த்தை விளங்கிக் கொள்ள துணை செய்கிறது. அந்த நேரத்தில் படைத்த ரப்பை நினைக்க வைக்கிறது.
ரப்பை நினைக்கிற போது உள்ளம் அமைதி பெறும் என்பது நிதர்சனம் தானே!

எனவே இன்னாலில்லாஹ் சோதனையை தாங்கிக்கொள்கிற மனோ வலிமையை தருகிறது.

இன்னா இலைஹி ராஜிவூன்

இந்த வாசகம் சோதனையான நேரத்தில் தம்மைப் பற்றி யோசிக்கும் மனப்பக்குவத்தை தருகிறது,

அவர் போய்விட்டார். அல்லத் அது போய்விட்டது. நாம் இருக்கிறோம். நாமும் போகவேண்டியவர்கள் தான். நமக்கான கடமைகளை நாம் யோசிக்க வேண்டும் என்ற சிந்தனையை இன்னா இலைஹி ராஜிவூன் என்ற வாசகம் தருகிறது.

நாம் மீள்வோம் என்ற வார்த்தை இந்த இழப்பு நிரந்தரமானதல்ல மற்றொரு சந்திப்பு உண்டு என்பதையும் நாபகப்படுத்துகிறது.

அன்பான துணையை இழந்தவர்களுக்கு இந்த தத்துவம் தரும் தேற்றுதலைப் போல் இன்னொன்று இல்லை.  நாம் மீண்டும் சந்திப்போம்    

சமீபத்த்தில் மதுரையில் புதித்தாக இஸ்லாமை தழுவிய பெரியவர் ஒருவர் தனது அன்பு மனைவியை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வந்தார்.

அவரை  சந்தித்து நீங்கள் இன்னா லில்லாஹ் சொன்னீர்கள் அல்லவா? அதன் பொருள் என்ன தெரியுமா? என்று கேட்டு விட்டு நாம் மறுபடியும் ச்ந்திப்போம் என்று சொன்ன போது அவர் அடைந்த ஆறுதலும் மகிழ்ச்சி அலாதியானது.

இரங்கல் செய்தி

அதே போல் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவும் இரங்கற் தெரிவிக்கவும் இதை விடச் சிறந்த சொல் உலகில் வேறில்லை,

அவர் போய்விட்டார். உலகே இருண்டு விட்டது என்று சொல்வார்கள், வானம் விழுந்தது, பூமி சரிந்தது, இடி விழுந்தது என்றெல்லாம் பயன்படுத்துகிற இரங்கற் சொற்களை விட நாம் எல்லோரும் ஒன்று தான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிற இந்த வார்த்தைகள் அதிகப் பட்ச பகிர்வை தரக்கூடியவை..

சில நேரங்களில் துக்கத்தை பகிரும் வார்த்தைகள் அதிக துக்கத்தை ஏற்படுத்தி விடும். விட்டுட்டு போய்ட்டாரே…” என்று புலம்பியபடி  துக்கம் விசாரிக்கும் பெண்மணியால், பாதிக்கப்பட்டவர் மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார். இப்படி நடந்து விட்டதே என்ற சொல்லால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

இன்னாலில்லாஹ்வின் இன்னொரு சிறப்பு

இந்த சொல் ஆறுதல் தேவைப்டுபவரையும் ஆறுதல் சொல்லுகிறவரையும் இறைவனது முடிவை ஏற்றுக் கொள்கிற, (கழா கத்ரை ) பக்குவத்திற்கு கொண்டு வருகிறது,

இன்னா லில்லாஹ் சொல்கிறவர்கள் இறைவனின் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள் என்ற திருக்குர் ஆனின் வாசகத்தையும் நினைவு படுத்தப்பட வேண்டிய ஒரு செய்தி தான்,

சில இழப்புக்கள் அடுத்து என்ன செய்வது என்ற பெரும் கேள்வியை எழுப்பி விடும்.
எதிர்காலம் இருட்டாக தெரியும். அச்சத்தை ஏற்படுத்தும்.

ஆனால் இன்னாலில்லாஹ்வை அதிகம் சொல்லிக் கொண்டிருந்தால் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலுக்கு அல்லாஹ் பெறுப்பேற்றுக் கொள்கிறான் என்ற செய்தி பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது,

கடந்த வெள்ளிக்கிழமை  தமிழக மூஸ்லிம்களான நாம் – அதிலும் குறிப்பாக ஆலிம்களாகிய நாம் – பெரும் துக்கத்தை சந்தித்தோம்.

அல்லாஹ்வின் நாட்டம் 8 ஆலிம்களும் ஒரு மாற்று மதச் சகோதரரும் கார் விபத்தில் ஒரு சேர உயிரழந்து விட்டனர். அதில் பெரும்பாலோர் இளம் ஆலிம்கள். திறமை சாலிகள். ஒருவருக்கு திருமணம் முடிந்து நாற்பது நாள் தான் ஆகிறது, இன்னொருவருக்கு திருமணம் முடிந்து 8 மாதம் தான் ஆகிறது, ஒருவருக்கு குழந்தை பிறந்து சில மாதம் தான் ஆகிறது, ஒருவர் மாணவர். ஒருவர் முஅத்தின் ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவரும் ஷஹீதாகிவிட்டனர். போனவருடம் குடும்பத்தலைவரை இழந்த இன்னொரு குடும்பத்தில் மகன் மருமகன் என இருவர் ஷஹீத் என்ற செய்திகள் நம் அனைவரின் இதயத்தையும் நொருங்கச் செய்து விட்டன.

இறந்தவர்களில் மூத்தவர் அப்துர் ரஹீம் பாகவி
வேடசந்தூருக்கு அருகிலுள்ள ஆர் புதுக்கோட்டை என்ற ஊரைச் சார்ந்தவர், அந்த கிராமத்தின் முதல் ஆலிம் இவர் தான்.

1994 ல் பாக்கியாத்தில் பாகவி சனது பெற்றவர். சில காலம் மஹாராஷ்டிராவில் வியாபாரத்தில் ஈடுபட்ட பிறகு தீன் பணியே என முடிவு என்று திரும்பியவர். பொதக்குடி அரபுக்கல்லூரியில் நான்கு ஆண்டுகள் சாதாரண ஆசிரியராகவும் மூன்று ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தவர். இந்த ஆண்டு தான் பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபுக்கல்லூரியில் பணியில் சேர்ந்திருக்கிறார். உமராவுக்கு போய்விட்டு வந்த ஒரு வாரத்திற்குள் இந்த விபத்தில் ஷஹீதாகிவிட்டார்.

ஹஜரத் ஒரு சிறந்த ஆலிம் என்பதை போலவே சிறந்த வணக்கசாலி. லுஹா அவ்வாபீன் தஹஜ்ஜத் என்று எந்த நபிலையும் விடமாட்டார். நிறைய வழாயிப்களை வழக்கமாக்கியிருந்தார். ஜமாத் தொழுகையில் அதிக ஈடுபாடு காட்டுவார். அவரைப் பார்க்கிறவர்களுக்கு இபாத்ததில் ஆர்வம் ஏற்படும் மக்தூமிய்யாவின் பேராசிரியர் வலியுல்லாஹ் ஹஜ்ரத் கூறுகிறார்.  

தவறாமல் ஜகாத் கொடுத்து வந்தார். அவரது வபாத்திற்கு பிறகு அறையை திறந்து பார்த்த போது ஒரு கவர் கிடைத்திருக்கிறது, அதில் ஜகாத் தொகை என்று எழுதி அதில் 2800 ரூபாயை வைத்திருக்கிறர்.

உர்து நன்கு தெரியும் என்பதால் பாடங்களில் அதிக விளக்கங்கள தருவார் என்றும். நஹ்வு சர்பு பாடங்களை சிறப்பாக நடத்துவார்,

எழுத்திலும் ஆர்வம் கொண்ட ஹஜ்ரத் கனவு ஒரு ஆய்வு என்ற நூலை எழுதி அதில் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இன்னும் 3 பாகங்களை எழுதி வைத்துள்ளார்,

ஹஜ்ரத் உடல் அவர்கள் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது,

அப்துஸ் ஸாலிஹ் சிராஜி சகாபி
பொள்ளச்சியை சேர்ந்தவர், ஹாபிழ். எப்போதும் ஓதிக் கொண்டே இருப்பார்.
திறமை மிக்கவர். கோழிக்கோடு மர்கஸ் சகாபாவில் இரண்டு வருடம் ஆசிரியராக இருநதவர். பேங்காங்கில் 4 மாதம் தஃவா பணியில் இருந்து விட்டு சிலோனில் ஒரு வருடம் முதர்ரிஸாக பணியாற்றி யிருக்கிறார். அதன் பிறகு சென்னை ஆமிர் கலீமி மதரஸாவில் உஸ்தாதாக இருந்தவர், இந்த ஷவ்வாலில் தான் மக்தூமிய்யாவில் உஸ்தாதாக சேர்ந்திருக்கிறார்.

நிறைய ஷரஹ்கள் வைத்திருந்திருந்திர்க்கிறார். கேரளாவிலிருந்து நிறைய நூல்களை வாங்கி வந்திருக்கிறார்.  

சிராஜிக்கு தெளிவான விரிவான விளக்க உரை ஒன்றை தமிழில் எழுதி அதை சரிபார்ப்பதற்கு தனக்கு வேண்டப்பட்ட ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்,
சாலிஹ் சிராஜிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது. மேட்டுப்பாளையத்தைச் சேந்த அவரது மனைவி ஒரு ஆலிமா. உஸூலுஷ் ஷாஸி கிதாபு சிறப்பாக நடத்துவார், பெண்களில் இப்படியும் ஒரு ஆலிமாவா என்ற அளவுக்கு திறமையானவர். மிக இளவயதில் தனது அன்புக் கணவரை பறி கொடுத்திருக்கிறார்.

சாலி சிராஜி மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என்று பலரும் கூறுகின்றனர், தனது தாயாரிடம் மரணத்தின் சிந்தனைகள் அதிகமாக வருகிறது என்று சமீபத்தில் கூறினாராம்,

சாலிஹ் சிராஜிதான் அவரது குடும்பத்திற்கு முதுகெலும்பு,

அவரது நல்லுடல் பொள்ளாச்சி கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது,  

ஹாபிழ். காரி, பஜ்லுல்லாஹ் பாகவி , வய்து 30

பள்ளபட்டியின் மரியாதையான ஷாஹா குடும்பத்தைச் சார்ந்தவர், பெருமானாரின் வம்சத்தைச் சேர்ந்தவர். அதற்கான முறையான ஆதாரங்களை வைத்திருக்கிறார்.

நிறைய தகவல்களை வைத்திருப்பார்.

சலவாத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சலவாத் சொல்லும் இடங்களில் அவரது குரல் உயர்ந்தே இருக்கும்.

மக்தூமீய்யாவின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் அஷ்ரப் அலி ஹஜ்ரத்தின் மகளை திருமணம் செய்திருக்கிறார். 8 மாத்தில் ஒரு குழந்தை இருக்கிறான்,

லிபாஸ் அமைப்பில் அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தார். லிபாஸின் செயற்குழு உறுப்பினர்.

அவரது நல்லுடல் பள்ளப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஹாபிழ் வலியுல்லாஹ் பிலாலி
வயது 24
இவர் பஜ்லுல்லாஹ் பாக்வின் தம்பி
திருமணமாகாதவர்.
தஹ்கீகானவர் என்று பலரும் இவரை குறிப்பிடுகிறார்கள், அதிகம் முதாலா செய்வார் என்றும். இவர் ஷாஹா குடும்பத்தைச் சார்ந்தவர் எனபதால் மக்தூமிய்யா மதரஸாவின் நூலகத்திலிருந்து அதிக கிதாபுகள் இவரது முதாலஆவிற்கு தரப்பட்டிருந்து,

சென்னை ஆமிர் கலீமீ மதரஸாவில் மூன்று வருடம் உஸ்தாதாக இருந்தவர், தற்போது  
கும்பகோணம் மதரஸாவில் உஸ்தாதாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இஸ்குர்ரஸூல் என்ற ஒரு நூலை மொழி பெயர்க்கும் முயற்சியில் இருந்துள்ளார்.

இவருடை உடலும் பள்ளப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது,

மெளலவி செய்யது இபுறாகீம் மக்தூமி
வயது 23
திருமணமாகாதவர், பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவரும் இந்த ஷவ்வாலில் தான் மக்தூமிய்யாவில் உஸ்தாதாக சேர்ந்துள்ளார், ஓதிய மதரஸாவிலேயே உஸ்தாதாக இருப்பதால்  ஒரு மாணவரைப் போலவே எல்லோரிடமும் பணிவாக பழகியுள்ளார். ஒழுக்கத்தில் அதிக ஈடுபாடு, அதனால் சூபி இபுறாகீம் என்று தான் மதரஸாவில் குறிப்ப்டுவார்களாம்.
மர்ஹும் அஷ்ரப் அலி ஹஜ்ரத் பை அத் கொடுத்த மூன்று பேரில் இவர் ஒருவர்.
நடப்பியல் செய்திகளை நிறைய தெரிந்து வைத்திருப்பார்.
இவரது நல்லுடலும் பள்ளப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.



ஹாபிழ் தமீமுல் அன்சாரி மன்பஈ
வயது 26
திருமணமாகி 40 நாட்களே ஆகியுள்ளன,
சிதம்பரத்தில் இமாமாக பணியாற்றிய இவர் தற்காலிக ஏற்பாடாக உம்ராவிற்கு சென்ற ஒரு ஆலிமுக்கு பதிலாக மக்தப் மதரஸாவை கவனித்துக் கொண்டிருந்தார்.
குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு.
இவரது கையெழுத்து தமழும் அரபியும் அழகாக இருக்கும்.
எல்லோரிடமும் இனிமையாக பழகுகிறவர் என்பதால் இவருக்கு நண்பர்கள் அதிகம்.
அம்மாவிடம் அதிகம் செல்லம் உள்ளவர். அம்மா பிள்ளை என்றே அழைப்பார்களாம்.
இவருடைய உடலும் பள்ளப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது,

மாணவர் அலி அஹ்மது
வயது 20
மக்தூமிய்யாவின் 5 ம் ஜும்ரா மாணவர். மர்ஹூம் அஷ்ரப் அலி ஹஜ்ரத்தின் மகன். திறமையானவர். அதனால் அவரது தந்தைக்குப் பிறகு அவா பணியாற்றிய பள்ளிவாசலில் இவரையே பணிக்கு அமர்த்திக் கொண்டனர். அங்கு ஜும் ஆ பயான் இவருடையது தான,

யாருக்கும் பணிவிட செய்வதில் இவரை மிஞ்ச முடியாது என உடனிருந்தவர்கள் கூறுகிறார்கள்,

இவருடைய நல்லுடலும் பள்ளப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது,

முஅத்தின் அப்துர் ரஹ்மான்
வயது 25
காரைக்குடிக்கு பக்கத்திலிருக்கிற திருப்பத்துரைச் சார்ந்தவர். பள்ளப்பட்டியில் வசிக்கிறார்.
2 வது ஜும்ரா வரை காயல் பட்டினம் மஹ்ழரா அரபுக்கல்லூரியில் ஓதியவர்.
நேரத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இவரது போக்கு வரவைப் பார்த்து நேரம் சொல்ல முடியும் என்கின்றனர் இவரை அறிந்தவர்கள். மோதினார்களுக்கு ஒரு முன்மாதிரி என்கின்றனர் ஆலிம்கள்.
ஆலிம்களிடம் அதிகம் நெருக்கம் காட்டுகிறவர்,
சலாம் சொல்ல முந்திக் கொள்வார் என்பதை இவருடைய பிரதான இயல்பாக குறிப்பிடுகின்றனர்,
அம்மாவுக்கு மிகவும் பிரியமானவர்.
பள்ளப்பட்டியில் நடை பெற்ற நல்லடக்கத்தின் போது ஒரு ஜனாஸா வருவதற்கு சற்று தாமதமானது. அது இவருடையது தான், இவரது அம்மாவின் அழுகையை சமாதானப்படுத்தி அங்கிருந்து ஜனாஸாவை எடுத்து வருவது மனதுக்கு மிகவும் கஷடமாக இருந்திருக்கிறது,

இவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அத்தா வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார் என்று சொல்லி அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

மக்தூமிய்யாவின் ஆசிரியர்கள் 4 பேர், 1 மாணவர், 1 மக்தப் ஆசிரியர், கும்பகோணம் மதரஸா உஸ்தாது 1 வர் முஅத்தின் 1 வர் ஆக எட்டி பேர் இந்த ஒரு விபத்தில் ஷஹீதாகிவிட்டனர், இவர்களுடன் வாகன் ஓட்டியும் பலியாகிவிட்டார்.

அல்லாஹ் இந்த ஷஹீதுகளுக்கு வழங்கும் உயர்ந்த அந்தஸ்தை மேலும் சிறந்த்தாக்குவானாக! இந்த உலகில் கிடைக்காத பேரின்பங்களை அவர்களை அனுபவிக்கச் செய்வானாக! சானவுன் ஜமீலை தருவானாக!  இவர்களை இழந்த சோகத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் நம்மை மீட்பானாக, இவர்களுக்கு சிறந்த மாற்றை அல்லாஹ் வழங்குவானாக! இவர்களது குடும்பத்தாருடைய மனதை அல்லாஹ்தான் தேற்ற முடியும். ரஹ்மான் அந்த தேறுதலையும் ஆறுதலையும் தன்னுடைய குத்ரத்தின் வெளிப்பாடக தந்தருள்வானாக! இவர்களை இழந்த்தால் எந்த சிறு சிக்கலுக்கும் ஆளாகிவிடாதவாறு இந்த இளவல்களின் குடும்பங்களையும் இவர்கள் சார்ந்த நிறுவனங்களையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக! இவர்களது பிள்ளைகளுக்கு அல்லாஹ் சப்ரன் ஜமீலை தருவானாக! அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக! கார் ஓட்டியின் குடுமத்திற்கு அல்லாஹ் ஹிதாயத்தையும் தகுந்த ஆறுதலையும் தந்தருள்வானாக!

அல்லாஹ்வின் கிருபையால் இவர்களுடன் பயணம் செய்த மெளலவி காரி கலீலுர் ரஹ்மான் தாவூதி படுகாயமுற்று மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வருகிறார். இன்னும் நினைவு திரும்ப வில்லை.

இவரது வய்து 35 இவர் பள்ளப்பட்டியில் மக்தப் மதரஸாவில் உஸ்தாதாக இருக்கிறார். தல்ஸமாத்தில் ஈடுபாடு கொண்டவர்.
வெகுளி. பணிவாணவர். சேலத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார்.
பள்ளப்பட்டி செல்லும் வழியில் கரூர் பைபாஸில் சேலத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தை பார்த்தேன், அவர்களுடன் இருந்த மூத்த பெண்மணி கலீல் ஹஜ்ரத்தை தர்ம சிந்தனையாளர் என்று வெகுவாக பாராட்டிக் கொண்டிருந்தார்,
4 குழந்தைகளுக்கு தந்தையான இவரது கடைக்குட்டிக்கு 3 வயது,

அல்லாஹ அவருக்கு பின்விளைவில்லாத நிறைவான ஷிபாவை விரைவாக தந்தருள்வானாக!

இது போன்ற தொரு கூட்டு ஷஹாதத்தை தமிழக் ஆலிம்கள் சந்தித்ததில்லை. அல்லாஹ் இனி இது போன்று அல்ல எத்தகைய விபத்துக்களிலிருந்தும் ஆலிம்களையும் முஸ்லிம் உம்மத்தையும் ச்கல மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!.

ஒருவருடைய இறப்பிற்கு செல்லும் போது அவருடைய குடும்பத்தின் சிரமங்களையும் எதிர்காலத்தையும் எண்ணிப்பார்ர்குமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது,

அந்த வகையில் இந்த ஷஹீதுகளின் நிலை அறிந்து இவர்களது குடும்பத்தின நலனுக்காகவும் மருத்துவ செலவிற்காககவும் மக்களிடமிருந்து நேரடியாக உதவிகளைப் பெற்றுத் விரைவாக தருவதற்கு ஜமாத்துல் உலமா திட்டமிட்டுள்ளது, தனி நபர்களை நேரில் சந்தித்து கேட்பதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதும் ஆகவே இந்த ஷஹீதுகளின் குடும்பத்தினருக்கு உங்களது மனம் திறந்த தாராளமான உதவியை வழங்குங்கள். இப்போது கொண்டு வராதவர்கள் மஃரிபுக்குள் ஜமாத் அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுங்கள். இன்ஷா அல்லாஹ் இந்த தொகை 14 ம் தேதி நடைபெறுகிற மாநில ஜமாத்துல் உலமா செயற்குழுவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது, அதன் பிறகு விரைவாக ஷஹீதுகளின் குடும்பத்தாரிடம் ஒப்ப்டைக்கப்படும்.

உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதோடு ஷஹீதானவர்களுக்காகவும். அவர்களது குடும்பத்தினருக்காகவும். மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிற ஹஜ்ரத் விரைவாக குணம் பெறவும். ஆலிம்கள் தங்களது பணிகளுக்கிடையே இத்தகைய எந்த ஒரு சோதனைக்கு ஆளாகிவிடக் கூடாது என்றும் துஆ செய்யுங்கள்.

அல்லாஹ் போதுமானவன், அவனே சிறந்த பொறுப்பாளி. அவனே சிறந்த உதவியாளன்.

No comments:

Post a Comment